கு.தொ.: 4
“நம் ஊரிலிருந்து வந்திருக்கிறார்கள். எனக்கு வேண்டியவர். குர் ஆன் தமிழ் தர்ஜமா கொண்டு வந்திருக்கிறார்கள். உங்களிடம் கூட்டி வந்திருக்கிறேன்” என்றேன்.
“உட்காருங்கள். அந்த மாதிரி காப்பியைக் காட்டுங்கள்” என்றேன். கையோடு கொண்டு வந்திருந்த மாதிரியைக் கொடுத்தோம்.
“தலைப்பைப் பார்த்து தர்ஜமா என்று இருக்கிறதே, தர்ஜூமா என்கிறார்களே?!” என்றார்.
“இதுதான் சரியான உச்சரிப்பு” என்று நம் ஊர் ஆள் சொன்னார். பிரித்து ஒரு பார்வை பார்த்து விட்டு,
“அமல்களின் சிறப்பு என்ற புத்தகம் வாங்கி ஹதியா கொடுக்கலாம் என்று இருந்தோம். ஃபாரூக் அண்ணன் ஊர்க்காரர் கொண்டு வந்த்தால் இதையே வாங்கிக் கொள்கிறோம். எத்தனை பிரதிகள் கொண்டு வந்திருக்கிறீர்கள்?” என்றார்.
“முன்னூறு பிரதிகள் கொண்டு வந்திருக்கிறேன். எல்லாம் பினாங்கில் இருக்கிறது” என்றார். அந்த மேனேஜர்,
“என்ன விலை போட்டிருக்கிறது” என்று கேட்டுக் கொண்டே குர்ஆனைத் திறந்து,
“ரூ 120/- போட்டிருக்கிறது” என்றார். குர்ஆன் கொண்டு வந்த ஆசாமி உடனடியாக,
“அடுத்தப் பதிப்பு ரூ 150/-“ என்றார். உடனே அந்த மேனேஜர்,
“இப்பொழுது பிறந்திருக்கும் பிள்ளைக்கு மட்டும் பேர் வைப்போம். பிறக்கப்போற பிள்ளைக்கு பிறந்ததும் பேர் வைக்கலாம்” என்று திருப்பியடித்தார்.
குர் ஆன் கொண்டு வந்தவர் அடுத்த பதிப்பின் விலை சொன்னதும் இவர் ஒரு ‘தில்லு முல்லு’ ஆசாமி என்பதைப் புரிந்து கொண்டேன். இது பிரச்னையில் முடியும் என்ற எண்ணம் என் உள் மனதில் உதித்தது. மேனேஜரிடம், ‘வேண்டாமென்று சொல்லுங்கள்’ என்று கண்ணைக் காட்டினேன். அவர் கவனிக்கவில்லை. குர் ஆனைப் புரட்டிப் பார்ப்பதிலேயே குறியாக இருந்தார்.
“முன்னூறு பிரதிகளையும் எடுத்துக் கொள்கிறோம். என்ன ரேட்டுக்குத் தருகிறீர்கள்” என்று கேட்டார்.
“சிங்கப்பூரில்…..” என்று ஒரு பணக்காரர் பெயரைச் சொல்லி, “அவர் இரண்டு பிரதிகள் வாங்கிக்கொண்டு சிங்கப்பூர் டாலர் 1,500/- கொடுத்தார். கோலாலம்பூரில் (ஒரு தமிழ் முஸ்லீம் பெயரைச் சொல்லி) ஒரு பிரதி எடுத்துக் கொண்டு 2,000/- மலேசிய டாலர் கொடுத்தார்.” என்றார். இதைக் கேட்ட மேனேஜர்,
“அது தர்மம்” என்றார். பாம்புக்குப் பால் வார்த்து விட்டோமோ! நம் மரியாதையும் கப்பல் ஏறப் போகுது! ஊர் மரியாதையும் கப்பல் ஏறப்போகுதென்று எண்ணி எழுந்து கொஞ்சம் தள்ளிப்போய் மேனேஜருக்கு ‘வேண்டாம், திருப்பி அனுப்புங்கள்’ என்று சைகை செய்தேன். அவர் என்னை கவனிக்கவில்லை.
“நாங்கள் டெல்லியிலிருந்து பல லட்ச ரூபாய்க்கு புத்தகங்கள் இறக்குமதி செய்கிறோம். பேங்க் ரேட்படி போட்டு எங்களுக்கு 30-35% கழிவு கொடுக்கிறார்கள். அது அல்லாமல் நாங்கள் டெல்லிக்கு புத்தக கண்காட்சிக்குப் போகும் போது பல செல்வுகளையும் செய்கிறார்கள். அதெல்லாம் பெரிய வியாபாரம். பரவாயில்லை. குர்ஆன் என்பதால் கழிவு எங்களுக்கு வேண்டாம். நாங்கள் வாங்கியும் அல்லாஹ் பேராலே ஹதியாதான் கொடுக்கப் போகிறோம். வித்து ஆதாயம் சம்பாதிக்கவில்லை. ரூபாய்க்கு மலேசியா 9 காசு வீதம் ஒரு புத்தகத்துக்கு வருது. மலேசியா காசு 9.60 போட்டுத் தருகிறேன். விருப்பமிருந்தால் கொடுங்கள். இல்லையென்றால் வேறு தோது பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.
வந்தவரோ 300 குர்ஆனை மலேசியா ரிங்கிட் 1,500/2,000 த்துக்கு விற்று நடுவிக்காடு, மங்கனங்காடு, மழவேனிற்காடு, முடுக்குக்காடு, மரவக்காடு தொக்காளிக்காடு போன்ற காடுகளையெல்லாம் ஒரே வளையா வளைச்சுப்போடலாம் என்று திட்டம் போட்டு விட்டார். முன்னூறு பிரதிகளை வாங்கி ஹதியாக் கொடுக்க்கூடிய ஆளாக இருந்தால் அவன் ஒரு ஏமாளியாக இருப்பான் என்றே நினைத்து விட்டார். ‘பொன் முட்டை இடும் வாத்தின் கழுத்தை அறுத்தால் எல்லா முட்டையையும் ஒரே தடவை எடுத்த் விட்டால் ஒரே நாளில் பணக்க்காரனாகலாம்’ என்ற ஐடியா அவருக்கு வந்து விட்டது. அந்த அளவுக்கு உள்ள பைத்தியகாரன் அங்கே இல்லை என்பதை இந்த அசாமி உணரவில்லை.
பார்த்தார், யோசித்தார். ‘ஏண்டா இவரை இங்கே கொண்டு வந்தோம்’ என்றாகிவிட்டது. இதில் வேறு பிரச்னை எழும் என்று என் உள் மனம் என்னை உறுத்தியது. ஒரேயடியாக தட்டிக் கழித்து விட்டால் நல்லதென்றே பட்டது! மேனேஜரிடம் மீண்டும் கண் ஜாடை செய்தேன், அவர் புரிந்து கொள்ளவில்லை. குர்ஆன் கொண்டு வந்த ஆசாமி,
“சரி, கணக்குப் பார்த்து பணம் தாருங்கள். பினாங்கிலிருந்து பிரதிகளை அனுப்பி வைக்கிறேன்” என்றார்.
“பிரதிகள் வந்ததும் கணக்குப் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்” என்றார் மேனேஜர்.
“அட்வான்ஸாவது கொடுங்கள்” என்றார்.
“அதெல்லாம் எங்கள் ஸிஸ்டத்தில் இல்லை. நாங்கள் இந்தியாவிலிருந்து வாங்கும் புத்தகங்களுக்கு புத்தக்கங்கள் பெற்றுக்கொண்ட தேதியிலிருந்து 90 நாட்கள் சென்றுதான் பணம் கொடுப்போம்” என்று ஒரே பேச்சாகச் சொன்ன மேனேஜர், “ பினாங்கிலிருந்து அனுப்பும் லாரி சார்ஜைக் கழித்து பாக்கியை ரொக்கமாக வாங்கிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் பேச்சு இல்லை. உங்கள் விருப்பம் எதுவோ அதுபடி செய்து கொள்ளுங்கள்” என்றார்.
குர்ஆன் கொண்டு வந்த ஆசாமியின் தந்திரங்கள் ஏதும் பலிக்கவில்லை. ஹதியா கொடுக்கும் குர்ஆனைக்கூட அங்குள்ளவர்களுக்கு படிக்க நேரமில்லை. ‘காசு காசு’ என்பதே ஒவ்வொருவரின் வேதமாக இருக்கிறது. தமிழ் முஸ்லீம்கள் குர்ஆன் வாங்கி ஓதுவதும் படிப்பதும் யார்? அதெல்லாம் இமாம்களின் வேலை என்று ஒதுங்கி விடுகிறார்கள். குர்ஆன் கொண்டு வந்த முதலைக்கு ஆசையைத் தூண்டியது எது என்றால் அந்தக் கடை மேனேஜர் தவறுதலாக ஒரு டிப்ஸ் கொடுத்து விட்டார். அது “நாங்கள் ‘அமல்களின் சிறப்பு’ என்ற புத்த்கத்தை வாங்கி ஹதியா கொடுக்கலாம் என்றிருந்தோம் என்பதே. முன்னூறு நானூறு பிரதிகளை வாங்கி ஹதியா கொடுப்பவர்களாக இருந்தால் பெரிய கையாகவும் அதே சமயம் இஸ்லாம் மார்க்கம் என்றால் அள்ளிக் கொடுக்கும் ஏமாளி பண முதலையாகவும் இருப்பார்கள் இதை பயன் படுத்தி ஊரில் தோட்டந்துரவுகளை வாங்கி போட்டு கால் மேல் கால் போட்டு உண்ணலாம்,. காரில் ஊர் சுற்றலாம் என்ற எண்ணம் தோன்றி இருக்க வேண்டும். அதனால் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
இஸ்லாம் இப்படிச் சொல்லவில்லை. மனித இனத்துக்கு நல்வழி காட்டவே அல்லாஹ் குர் ஆன் என்ற வேதத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளினான். இது மனித இனத்திற்கு நேர் வழி காட்டும் திருமறை என்று சொன்னானே தவிர இதை விற்று பெரும் பணத்தைத் தேடிக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. பணக்காரர் ஆவதற்கு வேறு நல்ல நல்ல புத்தகங்கள் மனிதன் எழுதி இருக்கிறான். அதில் ஒன்று ‘Think and Grow Rich’ by Nepoleon Hill என்பதும் சிறந்த ஒன்று. அதிலும் சிந்தித்து செயல்பட்டு நேர்வழியில் பொருளீட்டி பணக்காரன் ஆகு என்றும் தேடிய பணத்தை ஏழை எளியோருக்கு உதவி செய் என்றும் அதை முதலீடாகக் கொண்டு பெரும் பெரும் தொழிற்சாலைகளை நிறுவி பலருக்கு வேலை கொடு என்றும்தான் சொல்லப் படுகிறது. அது மனிதனால் எழுதப்பட்ட புத்தகம். அதன் விலையோ எழுதியவருக்கு சிறு ராயல்டி, பதிப்பாளருக்கு காகித விலை, அச்சுக்கூலி சில்லறை விற்பனையாளருக்குக் கமிஷன் என்ற கணக்கிலேயே ஒரு சாதாரண தொழிலாளியும் ஒரு வேலை சாப்பட்டுச் செலவுக்கு செய்யும் செலவைவிட மிகக்குறைவாகவே இருக்கும். அந்தப் புத்தகம் படித்து அதன் வழி எத்தனையோ பேர் அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் கோடீஸ்வரர் ஆகி இருக்கிறார்கள். அந்தப் புத்தகத்தில் விற்கும் விலையை அச்சிட்டு வெளியிடுகிறார்கள். திருமறையோ how to become rich பாலிஸையையோ ‘A short cut way to become rich’, ‘A way to become rich quickly’ என்னும் வழிமுறைகளைச் சொல்ல அருளப்படவில்லை.
மனித இனம் ஒழுக்க நெறியுடன் வாழ, மனித இனத்திற்கு நேர்வழி காட்ட அல்லாஹ்வால் அருளப்பட்ட புனித வேதம். புனித வேதம்-பணம் சம்பாதிக்க அருளப்பட்ட வேதமல்ல. அல்லாஹ்வின் பேரருளை பெற மனித இனத்திற்கு தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வழியாக அருளப்பட்டது என்பதை முஸ்லீம்கள் எல்லோரும் உணர வேண்டும்.
ஆக, ஒரு வழியாக ஒரு புக் 9-60 மலேசிய ரிங்கிட் விலை பேசி முடித்தாகி விட்டது. பினாங்கில் இருக்கும் குர் ஆன் பிரதிகள் வந்ததும் ட்ரான்ஸ்போர்ட் சார்ஜ் போக மீதி தொகையை உடனடியாக கொடுப்பதென்ற Gentleman Agreement செய்தாகி விட்டது. இரவு 7-30 மணியளவில அங்கிருந்த உணவு கடை ஒன்றில் இருவரும் சாப்பிட்டு விட்டு நேராக பார்க்கிங்கில் போட்ட வேனை எடுத்து கொண்டு அவரை அவர் தங்கும் இடத்தில் விட்டு விட்டு என் இடத்திற்கு வந்து விட்டேன்.
இரண்டுமூன்று நாட்கள் ஆனது. குர்ஆன் வரவில்லை. ஒருநாள் என் கடைக்கு குர்ஆன் பேர்வழி வந்தார்.,
“குர் ஆனை கஸ்டம்ஸில் வெளியுறவு அமைச்சைச் சார்ந்த புத்தக தணிக்கை இலாக்காவின் மத சம்பந்தப்பட்ட பிரிவு தடுத்து விட்டது.” என்றார்.
அதை அவர்கள் வெளியிட மறுக்கிறார்கள் என்று சொன்னார். “என்ன காரணம்?” என்றேன். அவருக்கு விளக்கமாகச் சொல்லத் தெரியவில்லை. நானும் அவரும் புத்தகக் கடை மேனேஜரிடம் சென்றோம். விபரத்தைச் சொன்னோம். அவர்கள் வெளி நாட்டிலிருந்து புத்தகம் இறக்குமதி செய்வதில் அங்குள்ள அதிகாரிகள் நல்ல பழக்கம். அந்த புத்தக கம்பெனிக்காரர்கள் மீதும் அந்த இலாகாவில் நல்ல பெயர். அரசுக்கு எதிரான புத்தகங்கள் இறக்குமதி செய்து எந்த கெட்ட பெயரும் அந்தக் கம்பெனிக்கு இல்லை. அந்த இலாக்காக்காரர்க்ளும் அடிக்கடி அங்கே வந்த தடை செய்யப்பட்ட புத்தகங்களின் பெயரையும் சில சமயம் பட்டியலையும் கொடுப்பார்கள். சில நேரங்களில் தடை செய்யப்பட்ட புத்தகங்களின் பட்டியல்கள் பத்திரிகைகளில் வரும். ஆரசியல் கோட்பாடு குறிப்பாக கம்யூனிசம், அடுத்து இஸ்லாம் சம்பந்தமான எதிர்மறையான கருத்து போதிக்கும் புத்தகங்கள், அடுத்து ஆபாச புத்தகம். இவை தடை செய்யப்பட்டவை.
புத்தகக் கம்பெனி மேனேஜர் அந்த இலாக்காவுக்கு டெலிபோன் போட்டு விஷயத்தைச் சொன்னார். “நாளை அவரை ஆஃபீசுக்கு வரும்படி சொன்னார். மறுநாள் மேனேஜர் அங்கே சென்று விபரம் கேட்டார். அவர்கள் சொன்னது அரபு மொழி எழுத்தில் இரண்டு மூன்று வகை உண்டாம். 1) இந்தக் குர்ஆனில் மலேசியாவில் அங்கீகரிக்கப்பட்ட எழுத்து இல்லையாம். 2) இந்த குர்ஆன் பலதடவைக்கு மேல் அச்சிட்டதால் சில அரபு எழுத்துகளும் சேர், ஸபர் போன்ற குறியீடுகளும் தேய்ந்து போய் இருப்பதால் அர்த்தம் மாறுபடுகிறது என்றும் அதனால் அதை வெளியிட தடை போடும் நிலை இருக்கிறது.” என்றார்கள். எங்களுக்கும் இதை தடை செய்ய வருத்தமாக இருக்கிறது. வேண்டுமென்றே செய்த தவறு அல்ல. இயற்கையாக உண்டானது. இதற்கு ஏதாவது ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணங்களை இன்னும் இரண்டு வாரத்தில் எழுத்து மூலம் கொடுத்தால் வெளியாக்கும் உத்தரவை தருகிறோம் இல்லை என்றால் எல்லாமே கடலில் கொண்டு போய் கொட்டி விடுவோம்” என்றார்களாம். மறுநாள் போனபோது சொன்னார்.
குர்ஆன் வெளியாக என்ன வழி? ஒரு குர்ஆனுக்கு மலேசியா டாலர் 2,000 கேட்ட quick rich அல்லது குறுக்கு வழி பணக்காரனாக விரும்பிய பேராசை பேர்வழிக்கு அல்லாஹ்வின் சோதனை!
குறுக்கு வழிக்காரரின் முகம் வெளிறிவிட்டது. ஆனால், இது குறுக்கு வழிக்காரருக்கு முன்னமேயே தெரியும். அதைக் காட்டிக் கொள்ளாமல் குர்ஆனுக்கு உள்ள பணத்தை முன் கூட்டியே வாங்கி விட்டால்...! என்ற எண்ணம்.
என்னிடம் அவர் சொன்னது குர்ஆன் பினாங்கில் ஒரு பிரபல்யமான தமிழ் முஸ்லீம் கம்பெனியின் குடோவ்னில் இருப்பதாகவே பேசினார். தில்லு முல்லுத் தனம். அதுவும் குர்ஆனில்.
இரண்டு நாள் கழித்து குர்ஆனை வெளியாக்கும் வழி கண்டாச்சு. “இந்திய தமிழ் முஸ்லீம்கள் இந்த அரபு எழுத்திலேயே படித்துப் பழக்கம். தமிழ் முஸ்லீம்களுக்கு மட்டும் விலையில்லாமல் ஹதியாகாவாகக் கொடுப்பது. தமிழ் முஸ்லீம்கள் ஏற்கனவே அரபு வாசகத்தை ஏற்கனவே ஓத தெரிந்தவர்கள். ஆனால், தமிழில் அதற்கு தெளிவான விளக்கம் தெரியாதவர்கள். இன்னும் பலர் அரபு மொழியில் ஓத தெரியாதவர்கள். ஒரு சில சூராக்கள் மட்டும் வாய்வழி மனப்பாடம் செய்து ஓதுபவர்கள். எனவே அரபு மொழி முக்கியமில்லை. குர்ஆனின் வாசகத்தைத் தமிழில் கொடுப்பதே இதன் முக்கிய நோக்கம். அதுவும் தமிழ் முஸ்லீம்களுக்கு மட்டும் இனாமாகக் கொடுப்பதால் சிறிய எண்ணிக்கையிலான பிரதிகளே வெளியாகும்” என்ற காரணத்தை அந்த இலாக்காவின் தமிழ் பகுதியைச் சேர்ந்த ஓர் இஸ்லாமியர், “இந்தக் காரணத்தை எழுதிக் கொடுங்கள். பிரதிகளை வெளியாக்க என்னையும் கலந்து கொள்வார்கள். நான் ஒப்புதல் கொடுக்கிறேன்” என்றாராம்.
அதன்படியே அந்த கம்பெனிக்காரர்கள் கடிதம் எழுதிக் கொடுத்தார்கள். இதில் நாலைந்து நாட்கள் ஆகிவிட்டது. கோலாலம்பூரிலிருந்து வெளியாக்கும் உத்தரவு பின்ங்கு போய் சேர வேண்டும். அதன் பின்பே குர் ஆன் வெளியாகும். ஒரு கண்டிஷன். இந்தக் குர்ஆன் தமிழ் முஸ்லிம்களுக்கும் மட்டுமே இனாமாகக் கொடுக்க வேண்டும் “இந்த குர்ஆன் இனாமாக கொடுக்கப்படுகிறது” என்ற ரப்பர் ஸ்டாம்ப் அடித்தே வழங்க வேண்டும் என்ற உத்தரவின் பேரில் குர்ஆன் வெளியாக்க அனுமதி கிடைத்தது.
ஏறத்தாழ மூன்று நான்கு தடவை என் வேலையைப் போட்டுவிட்டு கூட்டிப்போய் பெட்ரோல் செலவு, பார்க்கிங்க் செலவு எல்லாம் செய்தும் ஏதும் நான் கமிஷனோ வேறு எதுவுமோ எதிர் பார்க்கவில்லை. அல்லாஹ்வுக்காக நான் அதையெல்லாம் எண்ணவில்லை. யாருக்கு எந்த உதவி செய்தாலும் எதையும் எதிர்பார்க்கும் எண்ணம் எனக்கு இல்லை.
ஒரு நாள் அவர் என் கடைக்கு வந்தபோது புத்தக வெளியீடு சம்பந்தமாகப் பேசினோம். அப்பொழுது நான் சொன்னேன்,“நான் சிறுவர்கள் கதை புத்தகம் 4 கலரில் வெளியிடுகிறேன். தமிழ் நாட்டில் நல்ல ஓவியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாரையாவது என்னிடம் அரிமுகப்படுத்தி விடுங்கள். அவர்களிடம் பேசி கதையைக் கம்ப்யூட்டரில் அனுப்பி அதற்கு ஏற்ற ஓவியங்கள் தீட்டிக் கொடுத்தால் அதற்குரிய சார்ஜைப் பேசி கொடுத்து விடலாம். என்னுடைய அட்ரசைத் தருகிறேன். என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்ல முடியுமா?” என்றேன்.
“செய்யலாம். அதற்கு எனக்கு ஒரு கமிஷனை நீங்கள் பேசி கொடுக்கனுமே!” என்றார்.
அதைக் கேட்ட நான் திடுக்கிட்டேன். உண்ட தட்டையிலேயே…. ஆள்! என்று தீர்மாணித்தேன். மீண்டும் தொடர்ந்தார்,
“அந்தக் கதையை என்னிடம் கொடுங்கள். நான் ப்ரிண்ட் செய்து அனுப்புகிறேன்” என்றார்.
“இது நாலு கலர் படம் போட்ட புக்குகள். அந்தக் குவாலிட்டியில் இந்தியாவில் செய்ய மிஷின் கிடையாது. வெறும் சினிமா நோட்டீஸ் மட்டும் அடிக்கும் மிஷின் மட்டுமே மண்ணடியில் ‘போட்டு சக்குசக்குன்னு’ அடிச்சுத் தள்ளிட்டு காசைக் கொடு என்பீர்கள். பத்தாம் பக்கம் இருக்கும் அடுத்தது 16 பக்கம் வரும். வேண்டாம் என்று கழட்டி விட்டேன், ‘ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே’ பாட்டு ஞாபகம் வந்தது. அடுத்த நாள் வந்தார்.
“நான் சிங்கப்பூர் போகிறேன். மூன்று நான்கு நாள் கழித்து வருவேன். புக் வந்து விட்டால் பணம் வாங்கி வையுங்கள்” என்றார்.
“உங்களுக்கு எந்த விசா தந்தார்கள்?” என்றேன்.
“விசிட்டிங் விசா தந்தார்கள்” என்றார்.
“நீங்கள் சிங்கப்பூர் போனால் திரும்பி மலேசியா வர முடியாது. ஒரு முறை வந்து விட்டு வெளியானால் அந்த விசா ஆட்டோமாட்டிக்கா கேன்ஸல் ஆகிவிடும். புத்தகம் வந்ததும் பணத்தை வாங்கிக் கொண்டு போங்கள்” என்றேன். அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?
“அது உன்னைப் போல கேனப்பயலுகளிடம்தான் அப்படிச் சொல்வார்கள். நாங்கள் எல்லாம் மண்ணடியில் பேர் போட்டவர்கள். மண்ணடி மண்ணை பொன் என்று சொல்லி விற்று காசு பண்ற ஆசாமிகள் நாங்கள்” என்றார்.
எனக்கு அவர் 10 வயது இளையவர். சரியான நல்ல பாம்புக்கு பால் வார்த்தோம் என்று என்னையே நான் நொந்து கொண்டேன். எனக்கு பத்து வயது இளையவன் என்னை நீ நான் என்று மரியாதை இல்லாமல் பேசுகிறானே என்று எனக்குக் கோபம் வந்தது. இந்த மாதிரியான ஆசாமிகளிடம் என் குணமே வேறு. வேறு மாதிரியாக நடந்து விடும். நான் முதன் முதலில் மலேயா புறப்படும்போது சொல்லிய வாசகம் நினைவு வந்தது. “உனக்குக் கோபம் வந்தால் திடுதிப்பென்று அரிவாள், கத்தி, கம்பு என்று எடுக்கிற ஆளு நீ. வீட்டில் எத்தனை பீங்கான் தட்டையெல்லாம் உடைத்திருக்கிறாய். அங்கே போய் அப்படியெல்லாம் நடந்து கொள்ளாதே” என்று அழுதுகொண்டு சொன்ன சொல் ஞாபகம் வந்தது! என்னையே நான் சமாளித்துக் கொண்டேன்.
“அப்படியா! Thank you brother! சென்று வாருங்கள். உங்களுக்கு மாலை போட்டு வரவேற்கிறேன்” என்றேன்.
போய் விட்டார். இதற்கிடையில் நான் கம்பெனி மேனேஜரிடம் விஷயத்தைச் சொல்லி,
“குர்ஆனுக்கு வெளியுறவுத் துறைக்குக் கொடுத்த கடிதத்தை வாபஸ் வாங்குங்கள். குர்ஆனை வெளியிடுவது அவர்கள் சொந்த முடிவாக இருக்கட்டும்” என்றேன். அவர்,
“வேண்டாம் ஃபாரூக். குர்ஆன் விஷயம். அந்த நாய் அப்படிச் செய்தது என்று நாமும் அப்படி நடக்க வேண்டாம்” என்றார்.
நாலைந்து நாள் வரை குர்ஆன் வரவில்லை. இதற்கிடையில் அவர் போன நாளாம் நாள் அந்தக் கம்பெனி மேனேஜர் ஜெர்மனியில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு புறப்பட்டுப் போய் விட்டார். திரும்பி வர 10-12 நாட்கள் ஆகும் ஒரு நாள் காலை 8:45 மணியளவில் என் டெலிபோன் மணியடித்தது. எடுத்தேன். ஒரே சப்தம்… இரைச்சல்,”
“ஹலோ” என்றேன்
“நான் தான்….. (குர் ஆன் பேர்வழி) காக்கா, மலேசியா ஏர்ப்போர்ட்டிலிருந்து பேசுகிறேன்” என்றார்.
“பேசுங்கள்” என்று கிண்டலடித்தேன்.
“என்னை வெளியே விட மாட்டார்களாம். ஒரு முறை போனால் விசா காலாவதியாச்சு” என்று சொல்கிறார்கள் காக்கா” என்றார்
“அப்படியெல்லாம் என்னைப் போல இளிச்ச வாயனிடம்தானே சொல்வார்கள்! நீதான் மண்ணடி மண்ணை பொன் என்று விற்கிறா ஆளாச்சே! அதை இமிகிரேஷின்காரனிடம் சொல்லுடா!” என்று டெலிபோனை வைத்து விட்டேன்.
திரும்பவும் மணியடித்த்து. எடுத்தேன்.
“காக்கா, ரொம்ப கோபப்படுறியளே? குர் ஆன் வந்து விட்டதா?” என்றார்.
“வரவில்லை. மேனேஜர் வெளிநாடு போய்விட்டார். வர 15 நாட்கள் ஆகும். குர்ஆன் கையில் கிடைத்தால்தான் பணம் கிடைக்கும்” என்றேன்.
“ஏன் குர்ஆன் இன்னும் வரவில்லை?” என்றார்.
“அதை பினாங்கில் உன் ஆளிடம் கேள்” என்றேன்.
“நான் இங்கிருந்தே ஊர் போறேன். ஊர் போய் டெலிபோன் போடுகிறேன்” என்று வைத்து விட்டார்.
ஊர் போய் மூன்று நான்கு நாள் கழித்து போன் செய்தார்.
“குர்ஆன் வந்து விட்டதா?” என்றார்.
“குர்ஆன் வந்து விட்டது. அதற்குரிய பணம் வவுச்சரும் கொடுத்து விட்டார்கள். லாரி கூலி போக பாக்கி வெள்ளி இவ்வளவு தந்தார்கள்”என்றேன்.
“”அதில் இவருக்கு இத்தனை வெள்ளி, அவருக்கு இத்தனை வெள்ளி கொடுங்கள். பினாங்கில் (ஒரு நபருடைய பெயரைச் சொல்லி) அவருக்கு இவ்வளவு கொடுங்கள். பாக்கி தொகைக்கு பேங்க் போய் ட்ராஃப்ட் எடுத்து அதை கவரில் வைத்து அத்துடன் வவுச்சரையும் வைத்து என் அட்ரஸ் தருகிறேன். எழுதி தபால் ஆபீஸ் போய் என் பெயரில் ரிஜிஸடர் செய்து விடுங்கள்” என்றார்.
எனக்குக் கடுப்பு ஏறியது,
“நீ கொடுக்க வேண்டிய நபர்களுக்கு அவர்கள் இடத்துக்குப் போய் உன் கடனைக் கொடுக்க வேண்டும். பேங்குக்குப் போய் டிரஃப்ட் எடுக்க வேண்டும். தபால் ஆபீஸ் போய் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்ய எவனாவது இளிச்ச வாயன் இருந்தால் அவனைப் பார். உன் வீட்டு எடுபிடி என்று நினைத்தாயா? கொஞ்சம் இரக்கப்பட்டு இடம் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவாய். இந்த வேலைகளுக்கு எல்லாம் எவனாவது கேனையன் இருப்பான் அவனைப் பார். பணம் வேனும் என்றால் எவனாவது ஒருத்தனை அனுப்பி முழுப் பணத்தையும் வாங்கிப் போகச் சொல். இந்த ‘மண்ணடித் தந்திரங்கள்’ எல்லாம் இங்கே விலை போகாது. போனால் போகிறது என்று மனிதாபமான முறையில் உதவி செய்தால் மண்டையில் ஏறி மொட்டையடிக்கும் ஆள் என்பதைப் புரிந்து கொண்டேன்.” என்று சொல்லி போனை கட் செய்தேன்.
அடுத்த நாள் டெலிபோன் வந்தது. ஒரு நபரின் பெயரைச் சொல்லி,
“அவரிடம் பணத்தைக் கொடுத்து விடுங்கள். ரொம்ப கோபப் படுகிறீர்களே, காக்கா!” என்றார்
“ஆமாம். கோபப்படாமல் இருந்தால் ஒண்ட வந்த பிசாசு ஊர் பிசாசை விரட்டும் என்பார்களே, தெரியுமா? உனக்கு இவ்வளவு உதவி செய்த என்னிடம் கமிஷன் கேட்டாய் அல்லவா? உன் போன்ற நன்றி கெட்டவர்கள் எல்லாம் அல்லாஹ் குர் ஆனை தொடவே கூடாது. நீ எல்லாம் அதைப் பணம் சம்பாதிக்கும் கருவியாகப் பயன் படுத்துவதனால்தான் இஸ்லாமியர்களுக்கு உலக அளவில் சோதனைகள் ஏற்படுகிறது.” என்று சொல்லி போனை வைத்து விட்டேன்.
பணம் வாங்க வந்தவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்து விட்டேன். அதோடு காலை சுற்றிய நாகப் பாம்பு போய் விட்டது என்று எண்ணி இருந்தேன்.
அடுத்து ஒரு வாரம் கழித்து மீண்டும் போன் மணி அடித்தது. எடுத்த்தும்,
“காக்கா, நான் தான் பேசுகிறேன். குர் ஆன் கொண்டு வந்ததில் கணக்குப் பார்த்தால் எனக்கு நட்டம் எற்பட்டு விட்டது. அந்தக் கடைக்காரரிடம் சொல்லி இன்னும் கொஞ்சம் பணம் வாங்கிக் கொடுங்கள்” என்றார்.
“பேசியபடிதான் பணம் கொடுத்து விட்டார்களே? அதற்குமேல் எப்படி பணம் கேட்பது?” என்றேன்.
“நான் அங்கே ரொம்ப நாள் தங்கியதில் செலவு அதிகமாகிவிட்டது. அவர்களிடம் நீங்கள் சொல்லுங்கள்” என்றார்.
“நான் சொல்ல முடியாது. பேசியபடி பணம் கொடுத்து விட்டார்கள்” என்றேன்.
“அவர்கள் பணம் கொடுக்க சுனங்கி விட்டதால் நான் தங்கியதில் செலவு அதிகமாச்சே.?” என்றார்
“குர்ஆன் வந்து சேரவிவில்லை. சாமான் வராமல் விலை பேசியதும் பணத்தை இந்தா வாங்கிக்கொண்டு ஊர் போ என்று சொல்லும் முட்டாள்கள் இங்கு இல்லை. அவர்கள் முயற்சிக்கா விட்டால் அவ்வளவு குர்ஆனையும் அரசாங்கம் கடலில் கொட்டி விடும். குர்ஆனை காசுக்கு விற்று பணம் சம்பாதித்து தோட்டம் தொறவு வாங்க அவர்கள் உன்னிடம் குர்ஆன் வாங்கவில்லை. அதையெல்லாம் அல்லாஹ்வின் பேரால் இனாம் கொடுக்கவே அதை வாங்கினார்கள். காசு ஆசையால் ஷெய்த்தான் வேலையெல்லாம் செய்யாதே” என்றேன்
“அப்படியென்றால் நான் நேரடியாக அவரிடம் பேசுகிறேன்” என்றார்.
நான் அந்தக் கம்பெனி மேனேஜருக்கு டெலிபோன் போட்டு விஷயத்தைச் சொன்னேன்.
“அப்படியா? அவன் முகத்தில் வைத்திருந்த தாடியையும் உங்களூர் ஆள் என்று நீங்கள் கூட்டி வந்ததாலும்தான் நான் குர்ஆனை வாங்கினேன். ஷைத்தான் வேதம் ஓதுகிறது” என்று சொல்லிவிட்டு,
“உங்கள் ஊரில் ஷெய்த்தான்கள் அதிகம் இருக்கும்போல் தெரிகிறது!” என்றார்.
கொஞ்ச நேரம் கழித்து அந்த்க் கடை மேனேஜர் எனக்கு மீண்டும் போன் போட்டார்.
“பணம் கேட்டார். பணம் இல்லை. கொடுத்த பணத்தை திரும்ப கொடுத்து விட்டு குர்ஆனை எடுத்துக் கொள் என்றேன். விலை பேசி முடித்து ஒப்பந்தம் செய்துவிட்டு பிறகு கூட கொடு குறையக் கொடு என்று கேட்கிறாயே அப்படியெல்லாம் நீ கொண்டு வந்த குர்ஆனில் இருக்கிறதா?. உனக்கெல்லாம் ஒரு தாடி! ஒரு தொப்பி! மகா மட்டரகமான பேர்வழியாக இருக்கிறாயே” என்று திட்டி டெலிபோனை வைத்து விட்டேன்” என்று சொன்னார்.
“மீண்டும் டெலிபோன் போட்டு அதே பல்லவியைப் பாடினார். ஒரு வாரம் டயம் தர்றேன். நான் கொடுத்த பணத்தை கொடுத்து விட்டு குர்ஆனை எடுத்துக் கொள். இல்லை என்றால் நீ இங்கே வா. குர்ஆனை தருகிறேன். நான் கொடுத்த பணம் அல்லாஹ் பேராலே உனக்கு கொடுத்த தர்மமாக இருக்கட்டும் என்று சொன்னேன் என்றும், உழைத்துப் பணம் சம்பாதிக்க வழியைப் பார். தில்லுமுல்லுத்தனம் செய்யாதே” என்று சொன்னதாகச் சொன்னார்.
‘இனிமேல் டெலிபோன் போடாதே. போட்டால் நான் வேறு விதமாகப் போக வேண்டி வரும்” என்று எச்சரித்ததாகச் சொன்னர். அதோடு டெலிபோன் வருவது நின்று விட்டது.
நான் படித்த புத்தி, பாம்பென்று நினைத்து அடிப்பதா? பழுதை என்று நினைத்து மிதிப்பதா? என்று ஒரு தமிழ் சொல்லடை உண்டு. (இதன் பொருள்: பழுதை என்பது வைக்கோல் பிரி). இரவு வேளைகளில் வயல்களின் வழி பாதையில் போகும்போது அங்கே பாம்பும் சுருண்டு கிடக்கும். வைக்கோல் பிரியும் சுருண்டு கிடக்கும். மங்கிய நிலவொளியில் பார்க்கும்போது அது பாம்பாகவும் தெரியும் வைக்கோல் பிரியாகவும் தெரியும். வைக்கோல் பிரியா பாம்பா? வைக்கோல் பிரி என்று எண்ணி பாம்பின் மீதுகால் வைத்தால் என்ன ஆகுமென்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஆட்டுத்தோல் போத்திய நரி மந்தையில் புகுந்து ஆடுகளைத் தின்று ரத்தம் குடித்ததைப்போல் இஸ்லாத்தின் தோல் போத்திய நரிகள் நிறையவே குர் ஆனின் போதனை கூறியும் நபிகள நாயகம்(ஸல்) அவர்கள் கூறிய பொன் மொழிகளை (ஹதீஸ்களை) கூறியும் தங்கள் பொருளாதாரத்தை வளப்படுத்திக் கொள்கின்றன. அல்லாஹ் குர்ஆனை அருளியது அதை ஒன்றுக்கு நூறாக விற்று மனிதன் காசு பார்க்க அல்ல. ரசூலுல்லாஹ்(ஸல்) நல்லுபதேசம் செய்த ஹதீஸ்களைச் சொன்னது புத்தகமாக்கி ஒன்றுக்கு நூறாக விற்று காசு பார்க்க் அல்ல. அவை இரண்டும் நமக்கு வந்தது மனிதன் நல் வழியில் சென்று நல்வாழ்வை பெற்று நல்லதைச் செய்து மனித இனம் திருந்தி அல்லாஹ்வின் நல் அடியாராகவே. குர் ஆனில் think and grow தத்துவங்கள் சொல்லப்பட் வில்லை. Think and grow rich புத்தகத்திலும் குறுக்கு வழியில் சீக்கிரமே பணக்காரனாகும் தத்துவமும் சொல்லப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
குர்ஆனில் சொல்லப்பட்டதெல்லாம் நேரிய வழியில் நட; அல்லாஹ் ஒருவன் என்று நம்பு அவனையே வணங்கு; நேரிய வழியில் பொருளீட்டி வாழ்க்கை நடத்து தான தர்மங்களைச் செய் போன்றவையே.
அல்லாஹ்வும் இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் குர்ஆனும் ஹதீஸூம் மனிதனுக்கு நேர் வழி காட்ட அல்லாஹ்வால் அனுப்பப்பட்டவையே. அவை மனிதனுக்கு quick rich method டை கூற அல்லாஹ்வால் அனுப்பப்ப்படவில்லை என்பதை மீண்டும் நினைவு படுத்தி நிறைவு செய்கிறேன், அஸ்ஸலாம் அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!
S.முஹம்மது ஃபாரூக்