நோம்பு முடிந்து சங்கை மிகு ஈகைப் பெருநாள் துவங்கும் விளிம்பில் (அதிரையில்) இருக்கும் நாம், இந்த நோம்பு காலங்களில் இரவு தொழுகைகளிலும் பகல் நேரங்களில் குர்ஆன் ஓதியும் சிறப்புடன் கழித்த அத்தனை அனபர்களுக்கும் அல்லாஹ் வின் அருள் உண்டாவதாக!
இது ஒரு ஃப்ளாஸ்பேக்...: (இரண்டு கண்ணுக்கு நடுவில் வட்டம் வட்டமாக சுழல்வது போன்று கற்பனைகள் வந்தால் அது விளம்பரதாரர் இன்னும் வரவில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்)
35 வருடங்களுக்கு முன் பெருநாட்களில் ஒரு பெருநாளை சுற்றியே எமது நினைவலைகள் பின்னோக்கி செல்கிறது.... ! (ஈஸ்மண்ட் கலரில் தெரியவில்லை என்றால் கலர் பேப்பர் ஒட்டிய பிளாஸ்டிக் கண்ணாடி பெருநாள் அன்று மாலைக் கடைகளில் வாங்கி போட்டுக் கொண்டால் நல்லது).
பெரியவர்களெல்லாம் "பிறையை கண்டாச்சா இல்லையா, அது கண்ட இடம் எந்த இடம்" என்ற கேள்வியோடு மரைக்காப் பள்ளியில் ஒன்று கூடுவர். எங்களைப் போல் உள்ள சிறுவர்களுக்கு ஏக்கமெல்லாம் நாளை வைக்கப் போகும் பெருநாள் ஸ்டால் மற்றும் சர்பத் கடை பற்றிய சிந்தனையே!
வீடு வீடாய்ப்போய் சர்பத் பாட்டிலை கண்டெடுத்து செக்கடிக் குளத்திலே கழுவியெடுத்து நானும் சித்தீக்கும் ஆளுக்கு ஒன்றரை ரூபா முதலில் ஆயத்தப் பணிகளில் ஈடுபடுவோம். சீனியோடு வியாபார யுக்திக்காக சாக்ரீனும் ஜப்ஜா விதையும் பிசின் மற்றும் கலர் பவ்டர் இதுதான் கச்சாப் பொருளாகும். அடுத்து அணிகுண்டு தயார் செய்ய சக்கரையும் பொட்டுக் கடலையும் வாங்கி சக்கரையை பாகாக்கி பொட்டுக் கடலையை அதனுள் இட்டு கிண்டினால் அணிகுண்டு தயார். தினத்தந்தி பேப்பரை சதுரமாய்க் கிழித்து அதை சிறு சிறு அணிகுண்டாக்கி உருட்டி விற்பனைக்கு தயார்படுத்திடுவோம்.
அடுத்து அரை லிட்டர் பால் வாங்கி காய்ச்சி 4- 5 வீடேறி ஒரமோரு வாங்கி வந்து அதை தயிராக்கி எங்க வீட்டு நீச்சோற்றை பிசைந்து வடிகட்டி அத்தோடு நீர் சேர்த்து விட்டால் எங்கள் ஐஸ் மோர் ரெடி. (மோர் தயாரித்த தந்திரத்தை வெளியில் சொல்லக் கூடாதுன்னு சொன்ன சித்தீக் இங்கே மன்னிக்கனும்)
அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்....
தக்பீர் முழக்கம் ஒலிபெருக்கியில் தொடரும் அழகிய ஓசை….
விடிந்தது பொழுது...
பெருநாள் வந்தது…
மரக்கட்டிலை துடைத்தெடுத்து கடை பரத்த தயாராவோம். பாட்டிலில் கலர் கலராய் தண்ணீர் ஊற்றி வரிசையாய் அடுக்கி வைத்து அனிகுண்டும் ஐஸ் மோரும் அத்தோடு கொத்து மாங்காய், கடலை மிட்டாய் வரிசையாய் அடுக்கி வைத்து வியாபாரத்தை ஆரம்பிப்போம் .
அப்போதெல்லாம் பணக்கார வீட்டுப் பையன் (!!?) வந்துதான் முதல் போணியை ஆரம்பிப்பான்.
“காக்கா ஒரு சர்பத் ரெண்டு கடலை மிட்டாய்.”
புத்தம் புது ரென்டு ரூபா நோட்டை நீட்ட “சில்லரை இல்லையடா!!” என்று சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டு.
“அப்புறம் வா” என்று அனுப்பி வைப்போம்.
அடுத்த கஸ்டமர் எல்லாமே சிறுசுங்க தானே வந்து நின்று அனிகுண்டு ரெண்டு பேட்பான். 3 பத்து பைசா என்று 3 கொடுத்திடவே !!! வியாராபரம் சூடு பிடிக்கும். வாங்கிய அனிகுண்டை பிரிப்பதற்குள் எங்க கஸ்டமருங்க படும் திண்டாட்டம் தான் (ஹைலெட்டே !). தினத்தந்தி பேப்பரோடு அனிக்குண்டும் ஐக்கியமாகிவிட பாதி பேப்பர் பிரித்தெடுக்க, மீதி அதோடு ஒட்டியிருக்க கொடுத்த காசு வீணாப் போகுதுன்னு அப்படியே சாப்பிடுவர் எங்கள் வாடிக்கையாளர்கள்.?!?! (அப்போவெல்லாம் கன்ஸூமர் கோர்ட் எல்லாம் இல்லேய்ய்ய்ங்கோ)
முதல் போனி கஸ்டமரான பனக்கார வீட்டுப் பையன் வந்துவிட...
“காக்கா மீதி காசு???” என்று கேட்டு நிப்பான்.
“தம்பி சில்லரை இன்னும் சேரவில்லை” என்று சொல்லி மீண்டும் ரெண்டு க்ளாஸ் சர்பத் கொடுக்கப்படும்!!!
மணி 10 வெயிலும் சூடு பிடிக்க ஐஸ் மோர் விற்பனையும் சூடு பிடிக்கும் 12 மணிக்கெல்லாம் விற்று தீரும். மறுபடியும் தயார் செய்ய வீடு தேடி ஓடிடுவோம் நீச்சோரு பானையை நோக்கி!!! "இப்பத்தான் கொறத்தி வந்து வாங்கிப் போனாள்" என்று உம்மா சொல்ல உடனே உதயமாகும் அடுத்த யோசனை. நடுத்தெரு வெலக்காரியிடம் மோர் வாங்கி தண்ணீர் விட்டு இரட்டிப்பாய் மாற்றிவிட்டு விற்று பெருமிதம் கொள்வோம்.
அட ! வந்து விட்டான் நம்ம முதல் கஸ்டமர் பையன் மீதி காசு கேட்பதற்காகவே…
“நீ இன்னும் மோரே குடிக்கலையே இந்தா மோர்” என்று ரெண்டு க்ளாஸ் ஊற்றி அதீத சந்தோஷத்தோடு எங்களால் அவனுக்கு கொடுக்கப்பட முறைத்து விட்டு குடித்திடுவான்.
மறுபடியும் மீதி கேட்கையிலே...
"அப்புறம் வா"யென்று சொன்னால்..
"உம்மா திட்டுது" என்பான்.
"கவலைப்படாதே உம்மாவுக்கு ரெண்டு க்ளாஸ் சர்பத் பார்சல்" என்று (பார்சல்….) போடப்படும்.
“போங்கடா (….........)களா” என்று சொல்லி திட்டிவிட்டு ஓடியே போய் விடுவான்.
கம்பெனிக்கு(!!!) மிச்ச காசு உபரி(யாக) லாபம் !.
எங்களுக்கு போட்டியாளர்களே டாட்டாவும் பிர்லாவும் தான். அம்பானியெல்லாம் அதற்கு அப்புறம் தான்.
மு.செ.மு. சபீர் அகமது (திருப்பூர்)