(*)
உணவும் மருந்தென்று
உட்கொள்ளும் நிலை மாறி-பூச்சி
மருந்து தாக்கிய

விருந்துண்ணும் உலகமிது !
(*)
உழுது களைபறித்து தன்
உணவை தான் விளைத்து
பழுது பாழாகா பதத்தில்
பயிர் செய்து,முற்றி அதை பறித்து
முழுதாய் பயன்கண்டு வாழ்ந்தார்.
முழுநூறு ஆயுளுக்கு.
(*)
உழைத்து அவர் இழக்கும்

ஊட்டம் அத்தனைக்கும்
இழந்த திடம் தன்னை
ஈட்டும் உணவு அது.
பிழைப்பும், உடல் பேணும்
பக்குவமும் இருந்ததனால்
நிலைத்த உடல் திறனில்
நீளப் பெறுவர் தம் ஆயுள்.
(*)
இழையும் உரல் பிடித்து
இழுத்து அரைத்திடுவார்.
குழைய வழித்தெடுப்பார்
அம்மியில் அத்தனையும்.
வளைந்த தம் இடையில்

வாகாய் குடம் சுமப்பார்
பழைய உழைப்பில்லா காரணமே
பெண்டிரின் நோய்கட்கு பிரதானம்.
(*)
ஆளுக்கொரு வைத்தியம்
அத்துப்படி என்றிருந்த
ஆண்டுகள் மாறியதால்,
நாளுக்கொரு நோயும் நம்மை
நலிவடைய செய்திடுதே..
(*)
பாலுக்கு அழுகிறதா? பகீரென்னும்
பயத்தாலே அழுகிறதா?- இல்லை

போலிக்கு அழுகிறதா? செல்ல
குழந்தை கண்ணில்நீர் குற்றாலமாய்
பொள பொளவென விழுகிறதா?
(*)
நல்லாவே தெரிந்திருக்கும்
நம் வீட்டு பெண்டிற்கு...
எல்லாமும் ஒருகாலம்.
அப்படி ஓர் நிலையின்று
இல்லாது போனதுவே..
இல்லாளும் மருத்துவத்தின் முன்னறிவு
இல்லாளாய் இருக்கின்றாள்.
(*)
கதகதப்பான துணிகொண்டு
கச்சிதமாய்ச் செய்யும்
காலுக்கு வைத்தியமும்
கை வைத்தியமே.
வெது வெதுப்பாய்த் தெரியும்-பின்
வேதனையும் குறைந்திடுமே..
புது புது வைத்தியத்திலும் கிட்டா
புத்துணர்வு கிடைத்திடுமே..
(*)
அறிவியலின் வளர்ச்சியிலே
ஆயிரம் கிடைத்திருந்தும்
செறிவான சிலவற்றை
சத்தியமாய் இழந்திட்டோம்.
அறிவோமா? அப்படிஓர்
பேரிழப்பே, அடுத்த தலைமுறைக்கு
அறிவிக்காமல் போய்விட்டோம்
கைமருந்து கலைதன்னை....
- அதிரை N.சஃபாத்