கற்கள் நிறைந்த பூமியிலே - பசுங்
கற்றா ழைச்செடி வளருதுபார்
பற்கள் விரியச் சிரிப்பதுபோல் - அது
படர்ந்து விரிந்து நிற்குதுபார்!
இறுக்க முள்ள இதயத்தில் - கல்
இருப்ப தாக உவமிப்பார்
மறுக்க முடியா இவ்வுண்மை - சிலர்
மனத்தி லுள்ள இயல்பாகும்.
கல்லும் கற்றா ழைச்செடியும் - கூறும்
கதையைக் கேளீர் பிள்ளைகளே!
மெல்லச் சென்றே அவற்றின்முன் - புல்லை
மேயும் பசுபோல் நிற்பீரே!
‘மலையே எங்கள் பிறப்பிடமாம் - இந்த
மண்ணை நாடி வந்துமலை
தலையில் பெய்த மழைநீரை - நன்கு
தரையில் தேக்க உதவுகிறோம்.
‘கல்லும் கல்லும் மோதுவதால் - தீக்
கங்கு பிறக்கும் அதுபோலே
சொல்லும் சொல்லும் மோதுவதால் - நட்பில்
சோகம் பிறக்கும் என்பார்கள்.’
கல்லின் பேச்சைக் கேட்டவுடன் – பசுங்
கற்றா ழையின் குரல்கேட்டோம்:
“மெல்லக் கேளீர் பிள்ளைகளே! – எம்
மேன்மை உமக்குத் தெரியவரும்
“எமக்காய் ஊற்றும் தண்ணீரை – யாம்
எடுத்துத் தேக்கி உட்கொண்டே
உமக்கே மருந்தாய் மாற்றுகிறோம் – இந்த
உண்மை உமக்குத் தெரியாதோ?”
மலையில் பெய்த பெருமழையே - உரு
மாறி ஆறாய் வருகிறது
தலையில் ஊற்றிய தண்ணீரே - பின்
தருநன் மருந்தாய் ஆகிறது!
படைத்த நாயன் அருளாலே - பல
பயனைத் தந்து பேருலகில்
கிடைக்கும் பெரிய வெகுமதியாம் – இதைக்
கேட்டுப் பெறுவீர் மாந்தர்களே!
அதிரை அஹ்மது


