சகோதரர் யாசிர் எழுதி அண்மையில் அதிரை நிருபரில் வெளிவந்த "லூவாக் காப்பி" கட்டுரையை படிச்சதும் ஏஹப்பட்ட சந்தேகம் வர ஆரம்பிச்சிடிச்சி. அதுனாலெ ஒரு சின்ன கட்டுரையெ எழுதி இங்கெ கொளுத்தி போட்டாச்சு. அப்புறெமென்னா படிக்க வேண்டியது தானே....
லூவாக் காப்பி (அதான் லுவாக் என்னும் மரநாய் முன்னாடி திண்டு பின்னாடி போட்ட காப்பிக்கொட்டையிலிருந்து செய்யப்படும் விலையுயர்ந்த காப்பி) போல் நம் நாட்டில் உற்பத்தியாகி சந்தையில் விற்கப்படும் எண்ணற்ற பல பொருட்களின் மூலப்பொருட்கள் எவ்வாறு வருகின்றன என்ற பல சந்தேகங்களுக்கு சில உதாரணங்களுடன் கீழே உங்களின் சிந்தனை சிரிப்பிற்காகவும், யூகத்திற்காகவும் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் பொருட்கள் உங்களுக்கு ஞாபகம் இருந்து இங்கு விடுபட்டிருந்தால் அதை மறக்காமல் பின்னூட்டம் மூலம் தொடருங்கள்.
"புலிமார்க் சீயக்காய் தூள்" எப்படி செய்வார்கள் என்றால் சில புலிகளை பிடித்து கூண்டுக்குள் அடைத்து அதற்கு வேறெதுவும் திண்ண கொடுக்காமல் அது கடும்பசியில் இருக்கும் சமயம் சீயக்காயை கொடுத்து திண்ண வைத்து பிறகு அது போடும் விட்டையில் வரும் சீயக்காயை எடுத்து சுத்தம் செய்து அரைத்து தரப்படும் தூளாக இருக்குமோ? "புலி பசித்தாலும் புல்லைத்திண்ணாது" என்பார்கள் (ஆனால் எங்கள் விளம்பரப்புலி எதைப்போட்டாலும் திண்ணுமுள்ளெ..)
"மீசைக்கார தைலம்" எப்படி செய்கிறார்கள் என்றால் இரண்டு பேர் சேர்ந்து நீண்ட மீசையைக்கொண்ட மீசைக்காரரின் மீசையை பிடித்து முறுக்கி அதன் வலி தாங்காமல் வேதனையால் அவர் இடும் கண்ணீரிலிருந்து (கண்ணூரு தண்ணி) செய்வார்களோ என்னவோ? யாருக்கு தெரியும்?
"கோடாலி சோப்பு தைலம்" எப்படி செய்கிறார்கள் என்றால் மரம் வெட்டிய கோடாலியை நன்கு சோப்பு போட்டு கழுவும் பொழுது வரும் நுரையிலிருந்து செய்வார்களோ?
"பச்சைக்கிளி தைலம்" எப்படி செய்கிறார்கள் என்றால் கொஞ்சம் பச்சைக்கிளிகளை பிடித்து அறுத்து வெயிலில் காய வைத்து பிறகு அதை அடுப்பில் சூடுகாட்டும் சமயம் வரும் எண்ணெயிலிருந்து செய்வார்களோ?
"மான் மார்க் குடை" எப்படி செய்கிறார்கள் என்றால் மான்களை பிடித்து அதன் கொம்புகளை உடைத்து அதை மான்மார்க் குடைகளின் கைப்பிடிகளுக்கு வைப்பார்களோ?
"பொன்வண்டு சோப்பு" வயல்வெளியில் பறந்து மேயும் பொன்வண்டுகளை பிடித்து அதன் முட்டையிலிருந்து வரும் ஒரு விதமான திரவத்திலிருந்து தயாரிப்பார்களோ?
"டார்ட்டாய்ஸ் கொசுவர்த்தி" ஆமை போடும் சாணிப்பியை எடுத்து நன்கு வெயிலில் காய வைத்து பிறகு பொடியாக்கி அதை எந்திரத்தில் போட்டு முறுக்கு போன்று திரித்து எடுக்கிறார்களோ என்னவோ?
"உடும்புத்தைலம்" நெசமா உடும்பிலிருந்து தான் எடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

"டைகர் பாம்" புலிகள் போடும் பாம்களை(கெட்ட காற்று) அப்படியே பிடித்து அதனை ஆராய்ச்சி கூடத்தில் வேதியியல் மாற்றத்திற்கு மாற்றி அதன் மூலம் செய்கிறார்களோ?
"குதிரை மார்க் லுங்கி" குதிரையின் நீண்ட வால் முடியை நறுக்கி அதை இயந்திரத்தில் பிண்ணி லுங்கியாக நெய்து விற்கிறார்களோ? அப்போ "சங்கு மார்க் லுங்கி" என்று யாரோ கேட்பது போல் தெரிகிறது. கடல் சங்கை எடுத்து நல்லா பொடியாக்கி அதுக்கப்புறம் எழுத வரமாட்டிக்கிது......சங்கு தான் போங்க...
"முதலை மார்க் பனியன், ஜட்டிகள்" செத்துப்போன முதலைகளை சேகரித்து நன்கு வெயிலில் காய வைத்து அதை நார்,நாராக கிழித்து அந்த நாரிலிருந்து செய்யப்படுவதாக சொல்லாமல் சொல்லப்படுகிறது.
பக்கத்துலெ இருக்கும் முதுமலைக்காட்டிற்கே போக முடியவில்லை. அமெரிக்காவின் அமேஜான் காட்டில் விளையும் அரிய வகை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மருத்துவ குணம் வாய்ந்த எண்ணெய் என்று கூறி நம்மூர் டி.வி. விளம்பரத்தில் ஒரு எண்ணெய் விற்கப்படுகிறது என்றால் நம்மக்களின் யோசிக்காத தன்மையை எப்படியெல்லாம் விளம்பர உலகம் பயன்படுத்தி தன் சந்தை பொருட்களை விற்பனை செய்ய பல யுக்திகளை கையாளுகின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். "கேக்குறவன் கேனையனா இருந்தா எறும்பு கூட ஏரோப்ளேன் ஓட்டுமாம்" என்ற கிராஃபிக்ஸ் கலந்த பழமொழி தான் இங்கு ஞாபகத்து வருது.
இதுக்கு மேலே எழுதுனா நீங்க படிக்க மாட்டியெ...சடப்பா வந்துடும்..அதுனாலெ இத்தோடு விட்டுர்ரேன்....
படிப்பவர்களின் பின்னூட்டம் மூலம் இங்கு மேலும் பல பொருட்கள் விளம்பர சந்தைக்கு வர இருக்கின்றன என்ற எதிர்பார்ப்புடன் என் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
இன்ஷா அல்லாஹ் இன்னொரு கட்டுரையில் சந்திப்போம்.
- மு.செ.மு. நெய்னா முஹம்மது.

