அதிரையில்
நேற்று ஒரு தனியார் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிகளின் காணொளியை
இணையத்தில் கண்டபோது அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம் சினிமா பாடல்களும்,
இசை நடன நிகழ்ச்சிகளும், அழகி போட்டிகளும் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களால்
நடத்தப்படும் பள்ளியில் சீரழிவின் சிகரம் சினிமாவின் ஆதிக்கத்தையும், கேடுகெட்ட நடன
காட்சிகளையும், ஆபசத்தை மட்டுமே மையமாகக் கொண்ட அழகி போட்டியையும் ஆதரித்து இளம் பிஞ்சுகளிடம்
வக்கிர எண்ணத்தை விளைவிக்கும் இந்த அறியாமை போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.
இது
போன்ற விழாக்களில் இனிவரும் காலங்களில் இவ்வாறெல்லாம் நடைபெறாமல் இருக்க சம்பத்தப்பட்ட பள்ளி நிர்வாகம்
கவனம் செலுத்துவார்கள் என்று நம்புகிறோம் அதனையே வழியுறுத்துகிறோம். வளர்ந்து வரும் இந்த மழலையர் பள்ளிக்கூடத்தின் நலனில் அக்கறை கருதியே இந்த பதிவு.
மீண்டும் நினைவூட்டலுக்காக
நான் முன்பு இசை பற்றிய பதிவிலிருந்து முக்கிய பகுதியை மீண்டும் பதிவு செய்கிறேன்.
இசை, பாடல் இவைகள் இரண்டற கலந்த அம்சமாகும். சில இடங்களிலேயே அவை தனித்து நிற்கின்றன. பாடல் இசையின்றிப் பாடப்படுகின்ற
பொழுது அனுமதிக்கின்ற இஸ்லாம், அவை இணைகின்றபோது இரண்டையும் வன்மையாகத் தடை செய்வதை
அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவைக் கொண்டு தெளிவு படுத்துகிறது
நபிமொழி அறிவிப்புகள் பலவற்றின்
மூலமும் இதனை வன்மையான வார்த்தைகளால் தடை செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்:
“விபச்சாரம், பட்டாடை, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை
ஹலாலாகக் கருதக்கூடிய சில கூட்டத்தினர் எனது சமுதாயத்திலே தோன்றுவார்கள்…” என்று நபியவர்கள்
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ மாலிக், ஆதாரம்: புகாரி – 5590)
விபச்சாரம், மது போன்றவை
ஹராம் என்று தெள்ளத் தெளிவாக தெரிந்த நாம், இவைகளை ஹலாலாகக் கருதுவோருடன் இசையைக் ஹலாலாகக்
கருதுபவர்களையும் நபியவர்கள் இணைத்துக் கூறுவதிலிருந்து இசையை அவர்கள் எவ்வளவு மோசமான
ஒன்றாகக் கருதியுள்ளார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
“இரண்டு ஓசைகள் சபிக்கப்பட்டவையாகும். சந்தோசத்தின்
போது கேட்கும் குழல் ஓசை, சோதனையின் போது கேட்கும் ஓலம்.” என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் இப்னு
மாலிக் (ரழி) ஆதாரம்: பஸ்ஸார் – 1:377-795 பார்க்க: தஹ்ரீமு ஆலாத்தித் தர்ப் – 52)
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு
ஹிஜ்ரத் வந்த காலம் முதல் மரணிக்கும் காலம் வரை அவர்களோடே இருந்த அனஸ்(ரழி) அவர்களின்
மூலம் அறிவிக்கப்படும் இந்தச் செய்தி நமக்குச் சொல்லுவது என்னவென்றால், சந்தோசத்தின்
போதுகூட நபியவர்கள் குழல்கள் மூலம் எழுப்பப்படும் ஓசையைத் தடை செய்தது மட்டுமல்லாமல்,
ஓலமிடும் ஓசையையும் தடை செய்துள்ளார்கள். இந்த நபிமொழியின் மூலம் நாம் அறியும் விசயம் என்னவென்றால், Wind pipe (குழல்) வகை சார்ந்த
அனைத்து இசைக் கருவிகளையும் தடை செய்கிறார்கள். பொதுவாக இசைக் கருவிகளைத் தடை செய்தது
மாத்திரமின்றி, ஒரு சில கருவிகளின் பெயர்களைக் குறிப்பிட்டும் தடைசெய்தது, நபியவர்கள்
இசையை எவ்வளவு வெறுக்கிறார்கள் என்பதை எமக்குத் தெளிவாக்குகிறது.
“மது, சூதாட்டம், மேளக் கருவிகளை அல்லாஹ் எனக்குத்
தடை செய்துவிட்டான். போதை ஏற்படுத்தும் அனைத்தும் ஹராமாகும்.” என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்
(ரழி), ஆதாரம்: அபூதாவூத்-3696, பைஹகீ-10-221)
பொதுவாக இசைக் கருவிகளைத்
தடை செய்தது போன்று, இந்த அறிவிப்பில் மேளம் போன்ற அனைத்துக் கருவிகளையும் அல்லாஹ் தன்மீது ஹராமாக்கியதாகக்
கூறுகிறார்கள். அல்லாஹ் எனக்குத் தடை செய்துள்ளான் என்று சொல்லுமளவுக்கு, இசைக் கருவிகளின்
தரம் இஸ்லாத்தின் பார்வையில் தாழ்ந்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாக அறிவைத் தேடும்
மக்களுக்கு நிச்சயம் புரியும்.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒரு ஆட்டிடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள்
தம் இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு, அந்தப் பாதையை விட்டுவிட்டு (வேறொரு பாதையின்
பக்கம்) வாகனத்தைத் திருப்பினார்கள். அவர்கள், ”(அந்தச் சப்தம்) உனக்குக் கேட்கிறதா?”
என்று வினவினார்கள். அதற்கு நான், ”ஆம்” என்றேன். அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு,
”எனக்குக் கேட்கவில்லை” என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு
மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள். ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
ஒரு ஆட்டிடையனின் குழலோசையைக் கேட்டபோது, அவர்கள் இதைப் போன்று செய்ததை நான் பார்த்தேன்”
என்றும் கூறினார்கள். (நூல்: அஹ்மத் – 4307)
குழலோசையை அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
’புஆஸ்’ எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச்
சிறுமிகள் என்னருகில் பாடிக்கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள்
என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். உடனே அபூபக்ர்
(ரலி) அவர்கள், ”இறைத் தூதரின் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?” என்று (கடிந்து)
பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள், ”(அவ்விருவரையும் விட்டுவிடுங்கள்) அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும்
பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்” என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம் –
1619)
மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி)
அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் அந்தச்
சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என வந்துள்ளது.
”ஷைத்தானின் இசைக் கருவிகளா?”
என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அக்கருத்தை மறுக்கவில்லை.
மாறாக, இன்றைக்குப் பெருநாளாக இருப்பதால், இன்றைக்கு மட்டும் விட்டுவிடுங்கள் என விதிவிலக்குத்
தருகிறார்கள். இசைக் கருவிகள் ஷைத்தானுடையன என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியது தவறு
என்றிருந்தால், ”நீர் சொல்வது தவறு; இசைக் கருவிகள் அனுமதியளிக்கப்பட்டவை தாம்” என்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறியிருப்பார்கள்.
இன்றைக்கு மட்டும் விட்டுவிடு
என்று அவர்கள் கூறுவதிலிருந்து மற்ற நாட்களில் இசைப்பது கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
எனவே இந்த ஹதீஸும் இசையைக் கேட்பது கூடாது என்பதற்கு ஆதாரமாக உள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: ”அல்லாஹ் உங்களுக்கு மதுவையும் சூதாட்டத்தையும் மத்தளத்தையும் தடை செய்துள்ளான்.
போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டவையாகும்.” (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்
(ரழி), ஆதாரம்: அஹ்மத்: 2494)
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின்
இந்த ஹதீஸில், இசைக் கருவிகளுள் ஒன்றான மத்தளத்தையும் தடை செய்துவிட்டு, போதையூட்டக்கூடிய
அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன என்று, இசைகருவியைப் போதையூட்டும் பொருளாகச் சொல்லப்பட்டுள்ளதை
அறிய முடிகிறது. இப்படி இசைக்குத் தடை விதிக்கப்பட்ட ஏராளமான ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டிக்கொண்டே
போகலாம். அறிவிப்பாளர் வரிசையில் குறைபாடுள்ள ஹதீஸ்களைக் கணக்கில் எடுத்தால், இசைக்கு
எதிராக 80க்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் உள்ளன என்பதைத் தகவலுக்காக இங்குப் பதிவு செய்கிறேன்.
மேற்கூறப்பட்ட அனைத்து ஆதாரங்களும்
இசைக் கருவிகளை முழுமையான வடிவிலே தடை செய்வதை அறிவுள்ளவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.
நபிகளாருடைய காலத்தில் காணப்பட்ட
எத்தனையோ கருவிகள் இன்று பல வடிவம் பெற்று வளர்ச்சி அடைந்து, ஒரு கலையம்சமாக மாறிவிட்டன.
ஹதீஸ்களிலே இடம்பெறும் வார்த்தைகள் நபிகளாருடைய காலத்திலே காணப்பட்ட கருவிகளைக் குறித்துப் பேசினாலும்,
அதே இசையை ஏற்படுத்தக் கூடிய ஏராளமான கருவிகள் இன்று உபயோகத்தில் உள்ளன. அதே நேரம்,
இசைக் கருவிகள் என்றுள்ள எல்லாமே அடங்கும் வண்ணம் இடம்பெற்றுள்ள வார்த்தை இவையனைத்தையும்
முழுமையாகத் தடை செய்கின்றது என்பதை மேல் சொன்ன ஹதீஸ்களின் அரபி மூல வார்த்தைகளை வைத்துப்
புரிந்துகொள்ளலாம். பின் வருபவை அவ்வார்த்தைகள்:
01-معازف அனைத்து இசைக் கருவிகளையும்
இது குறிக்கும்.
02-الكوبة-الطبل பறை, பேரிகை, மத்தளம், தவுல்,
தப்பட்டை போன்ற (Drum) வகைகளை இது குறிக்கும்.
03-ارمزم புல்லாங்குழல் போன்ற காற்று
வாத்தியங்கள் (Wind Pipe) வகை சார்ந்த அனைத்தையும் இது குறிக்கும்.
04-القنين வீணை போன்ற நரம்பு வாத்தியங்கள்
(Daff) அனைத்தையும் இது குறிக்கிறது.
மேல் சொன்ன குர்ஆன் வசனத்தின்
மூலமும் பின் சுட்டிக்காட்டப்பட்ட ஹதீஸ்களில் குறிப்பிட்டுள்ள இசைக் கருவிகளின் பெயர்களை
வைத்து அனைத்து விதமான இசைக் கருவிகளும் எல்லா நாட்களிலும் வெறுக்கப்பட வேண்டியவையே
என்பதையே அறிவுள்ள அனைவரும் புரிந்துகொள்வார்கள்.
நாம் மேலே குறிப்பிட்டுள்ள
ஹதீஸை (முஸ்லிம் – 1619) இசைக்கு ஆதாரமாக ஒரு சிலர் எடுத்துக்காட்டுவார்கள். சிறுமிகள் பெண்கள்
பாடிக்கொண்டு தப்ஸ் அடித்துகொண்டிருந்தார்கள்; அபூபக்ர் மட்டுமே அதற்கு எதிர்ப்புத்
தெரிவித்தார்; நபிகளார் அதனைத் தடுக்கவில்லை; மாறாக, ”அவர்களை விட்டுவிடுங்கள்” என்று
கூறினார்கள்; இங்கு அபூபக்ருடையை செயலை
நாம் எடுப்பதா? நபிகளாருடைய செயலை எடுப்பதா? என்ற நியாமான கேள்வியை வைத்து, இசையை நபிகளார்
தடை செய்யவில்லை என்று வாதிடுபவர்களின் வாதத்தின் அடிப்படையில் பார்த்தால், பெருநாள்
தினத்தில் மட்டும் சிறுமியர் அல்லது பெண்கள் மட்டுமே அத்துஃப் (الدف) என அழைக்கப்படும் ஒரு
பக்கம் தோலால் மூடப்பட்ட கருவியை உபயோகிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்று புரிந்துகொள்வதுதானே
அறிவுடமை. இதுவல்லாமல் ஒவ்வொரு நாளும் இசைக் கருவிகளின் தாக்கமுடைய பாடல் ஓசையைக் கேட்பதற்கோ
இசைப்பதற்கோ இஸ்லாத்தில் அனுமதியில்லை என்பதை அறிவுள்ள முஸ்லிம் ஒவ்வொருவருக்கும் புரிந்திருக்கும்.
ஹிஜ்ரி 4ம் நூற்றாண்டில்
வாழ்ந்த இமாம் இப்னு ஹஸ்ம் (லாஹிரிய்யா மத்ஹப்வாதி), இமாம் கஸ்ஸாலீ, தற்காலத்தில் வாழும்
அறிஞர் யூசுஃப் கர்ளாவீ, இன்னும் சிலர் இசையைக் கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம்தான்
என்று தங்களுடை புத்தகங்களில் எழுதிவைத்ததன் மூலம், இவற்றைப் படித்தவர்கள், மற்றும்
இவர்களைப் பின்பற்றுபவர்கள் இஸ்லாத்தில் இசைக்குத் தடையில்லை என்று ஒரு சில வாதங்களை
எடுத்துவைக்கிறார்கள். இது போன்ற மார்க்க அறிஞர்களையும் சூஃபியாக்களையும் பின்பற்றும்
கூட்டமே இசைக் கருவிகளை ஹலாலாக்கி வழிகேட்டின் உச்ச நிலைக்குச் சென்றுள்ளார்கள்.
இஸ்லாமியப் புத்தகங்கள்
எழுதுபவர்கள் எல்லாம் முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் என்று சொல்லுவது அறிவுடைமையாகாது,
இஸ்லாமியப் பார்வையில் உண்மையான அறிஞர் தன்னுடைய மனோ இச்சைக்கு இடமளிக்காமல், குர்ஆன்
மற்றும் நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரம் இவைகளில் ஆதரப் பூர்வமானவைகளின் அடிப்படையில்
ஆய்வு செய்து, இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் மாறு செய்யாத கருத்துகளைத் தெரிவித்தால்
மட்டுமே அவர்களை அறிஞர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியுமே தவிர, சொந்தக் கருத்துகளை மார்க்கம்
என்று சொல்லும் வேறு எவனையும் மார்க்க அறிஞராக எந்த ஒரு அறிவுடைய முஸ்லிமும் ஏற்றுக்கொள்ள
மாட்டான் என்பதுதான் எதார்த்தமான உண்மை.
ஒரே ஒரு தகவலைச் சொல்லிக்கொள்ள
விரும்புகிறோன். தியாகங்கள் பல செய்து வளர்ந்த நம்முடைய மார்க்கத்திற்காக நாம் என்ன
செய்கிறோம் என்று சித்தித்துப் பார்க்க வேண்டும். கடந்த 30 வருடங்களுக்கு முன்புவரை
நம்முடைய பல சொந்தங்கள் திருக்குர்ஆனின் அர்த்தங்கள் தெரியாமலே இவ்வுலகைவிட்டுப் பிரிந்துவிட்டார்கள்.
நாம் இருக்கும் இக்காலம் அறிவுப் பொக்கிஷங்கள் நிறைந்த காலம். இக்காலத்தில் நம்முடைய
அறிவைப் பயன்படுத்தி, தியாகத்தால் வளர்ந்த இந்த மார்க்கத்தைப் பாதுகாப்பதோடு, இதைப்
பிற சமூகத்திற்கு எத்திவைக்கும் வேலை செய்யத் தவறுகிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க்க்
கடமைப் பட்டிருக்கிறோம். இறைவன் நமக்குத் தந்துள்ள இந்தப் பொன்னான நேரத்தை நபிகளார்
வெறுத்த அனைத்து இசைக் கருவிகளின் ஓசையிலிருந்தும் விடுபட்டு, நம்முடைய அறிவைக் கொண்டு
இந்த்த் தூய மார்க்கத்தை அறியாத மக்களுக்கு எத்திவைக்க ஒவ்வொருவரும் இன்று முதல் முயற்சிக்கலாமே.
சைத்தானின் சூழ்ச்சியால்
வந்த இசை என்ற ஒன்றுக்கு இன்று ஒவ்வொரு மனிதனும் அடிமையாகியுள்ளான் என்பதை நான் இங்கு
சொல்லித் தெரியவேண்டியதில்லை. இசைக் கருவிகளை நாம் வெறுத்தால், தொடர்ந்து சினிமாப்
பாடல்கள், நம் மொழி சினிமா, பிற மொழி சினிமா, சின்னத்திரை, நாடகங்கள் என்று வீணானவற்றிலிருந்து விடுபடுவோம்;
நேர்வழி பெறுவோம். இன்ஷா அல்லாஹ்.
எனவே அல்லாஹ்வுடையவும் அவன்
தூதருடையவும் எச்சரிக்கைகளைத் தெளிவாக அறிந்த பின், இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில்
அறிந்து பின்பற்ற விரும்பும் ஒவ்வொருவரும் இசை கலந்த அனைத்து அம்சங்களையும் வெறுத்துத்
தவிர்த்து, அல்லாஹ்விடத்திலே கூலியைப் பெற்றவர்களாக மாறுவோமாக.
இசைக் கருவிகளும் அதனைச்
சார்ந்துள்ள பாடல்களும் வெறுக்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பதை இதைப் படிக்கும் அன்பு
நேசங்களான நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
சின்னஞ் சிறுசுகள் தானே என்று சினிமா பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சியை ஆதரிக்க முடியாது. இது போன்ற நிகழ்வுகளை நம் சமுதாயத்தின் அங்கமாக இருக்கும் அதிரை ஊடகங்கள் அவசியம் தவிர்க்க வேண்டும்.
எவ்வளவோ
அறிவு சார்ந்த போட்டிகள் அந்த பள்ளி ஆண்டு விழாவில் நடந்திருக்கலாம், ஆனால் இறைதூதரால்
தடை விதிக்கப்பட்ட இசைக்கு, முஸ்லீமகளால் நடத்தப்படும் பள்ளிகளில் முக்கியத்துவம் கொடுப்பதை
எவ்வகையில் அனுமதிக்க முடியாது.
இது
போன்ற தவறை மற்ற பள்ளிகளும் செய்வதை தடுக்கவே இந்த பதிவு.
M.தாஜுதீன்
தொடர்புடைய பதிவுகள்: http://adirainirubar.blogspot.in/2012/07/blog-post.html