நான் மலர்ந்து வளர்ந்த மண்
என் அன்பிற்கினிய அதிரைநிருபர் குழுமத்திற்கும், அதன் தூண்களாய் இருக்கும் வாசக அன்பர்களுக்கும், சகோதர, சகோதரிகளுக்கும், நண்பர்கள், உறவினர்கள் என் மண்ணின் எல்லா மைந்தர்களுக்கும் என் இனிய உளம்கனிந்த ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்களும், ஈருலக எல்லாப்பாக்கியங்கலும் குறைவின்றி ஏக இறைவனிடமிருந்து அவன் அருள்மழையில் பெறச்செய்ய அவனிடமே உள்ளம் உருகி பிரார்த்திக்கின்றேன்.
நல்லோரும் பெரியோரும்
நிரப்பமாய் இருக்கும் மண்
கடல்கரை கொண்ட மண்
தென்னைகள் தலைவிரித்தாடி
கல்விக்கண் திறக்க பல கோடி
கொடுத்துவந்த கொடைவள்ளல்
மலர்ந்து வாழ்ந்து மறைந்த மண்
பள்ளிகள் பலபெற்று பாங்கினொலி
பரவக்கேட்டு படைத்தவனை தொழ
பரவசமாய் பள்ளி செல்லும் பலர்
பேரானந்தம் அடைந்து கொள்வர்
சொந்தபந்த உறவு முறை கூறி
சகலமானவரையும் வளைத்துபோட்டு
வாழ்வியலின் இலக்கணம் கண்டு
வாழவந்தோரையும் வாரியணைக்கும் மண்
திருமண பந்த உறவு முறிவு கூட
மரண வேளையில் ஒன்றோடொன்று கூடும்
தியாகம் பலசெய்தேனும் தாய்த்திருநாட்டிற்கு
நலவுகள் பல கோடி தேடித்தரும் மண்
கடல் ஒட்டிய கரை ஓரம்
அலயாத்திக்காடு அழகாய்த்தெரியும்
ஊரின் நடுவே உயரமாய்
தக்வாப்பள்ளி மினாராவும் இருக்கும்
மாலை நேர மாசற்ற தென்றல்
மண்ணின் மைந்தர்களை மயக்கும்
பகல் பொழுதில் உண்ட உணவு
இரவுவரை கொடுக்கும் நல்ல கிரக்கம்
வானில் அசைந்தாடும் வண்ணப்பட்டம்
நம் சிறுவர்களின் எண்ணத்தின் ஓட்டம்
நல்லதை நாடும் பெரியவர் கூட்டம்
தெருதோறும் நிரப்பமாய் இருக்கும்
பல குறைகள் கண்டபொழுதிலும்
நிறைகள் பல உண்டெனக்கொள்ளும்
நம்மூர், நம்மூர் தான் என வாய்
புகழ்ந்து வாழ்த்தி உள்ளம் குளிரும்
தோப்புகள் இல்லங்களாகிப்போனாலும்
எங்கள் எண்ணங்கள் உயர்ந்தே நிற்கும்
காசு பணம் கையில் வந்து போனாலும்
மரணத்தின் நினைவில் மக்கள் வாழும்
மாசற்ற உள்ளமும் மாண்புமிகு பண்புகளும்
நேசமற்ற எவரையும் கூட நெருங்கவைக்கும்
அருகில் அமரவைத்து நல்லவிருந்து படைக்கும்
பிரதிபலனேதுமின்றி பெருமிதம் அடைந்துகொள்ளும்
வெண்முகிலையே (துப்பட்டி) தன்மேனியில் சுற்றி
வேண்டாத பார்வைக்கு நல்ல வேலியமைத்து
வெட்கமுடம் எம் பெண்டிரும் வீதியில் செல்வர்
வீட்டினரின் நல்வாழ்வுக்கு இறைவனை வேண்டிநிற்பர்
காலங்கள் பல ஓடிப்போனாலும் நாம்
உலகின் எந்த மூலையில் ஆனாலும்
நான் பிறந்த மண்ணே எனக்கு
நல்லதோர் பிருந்தாவனம்
ஆயிரம் பல தொல்லைகள் எமக்கு
விசமிகள் வழியே வந்து போனாலும்
அதை எல்லாம் மறந்து படைத்தவனிடமே
கை ஏந்தி போரின்றி வெற்றிக்கொள்ளும்
அன்பான பெரியவர் பலர் எமக்கு
அன்றாடம் சொன்ன அறிவுரை பல
அகிலத்தின் எந்த மூலைக்கு சென்றாலும்
அமைதியாய் எம்மை ஆட்சி செய்யவைக்கும்
ஊரைப்பற்றி ஆயிரமே இங்கு அளந்தாலும்
அது அமைதியாய் தான் என்றும் இருக்கும்
காலச்சூழ்நிலையில் நாம் தான் அதை
கண்டும் காணாதது போல் ஆகிப்போனோம்
நாகரிக முன்னேற்றத்தில் இன்று
கிராமம்கூட மிளிர்ந்துவரும் வேளையில்
நான் பிறந்த மண்ணை இப்படி வறிய
கோலத்தில் அழுக்கும் குப்பையுமாய் காண
உள்ளம் கனக்கிறது மொளனமாய் ஓலமிட்டுஅழுகிறது
சுட்டெரிக்கும் பாலைவனத்தில் வாழ்ந்தாலும்
குளிரூட்டும் சோலைவனத்தில் இருந்தாலும்
உள்ளத்திற்கு பால்வார்க்கும் என் மண்ணை
என்னால் மட்டுமல்ல எவரால் தான் எளிதில்
மறந்து இருந்து விட முடியும்?
என் அன்பிற்கினிய அதிரைநிருபர் குழுமத்திற்கும், அதன் தூண்களாய் இருக்கும் வாசக அன்பர்களுக்கும், சகோதர, சகோதரிகளுக்கும், நண்பர்கள், உறவினர்கள் என் மண்ணின் எல்லா மைந்தர்களுக்கும் என் இனிய உளம்கனிந்த ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்களும், ஈருலக எல்லாப்பாக்கியங்கலும் குறைவின்றி ஏக இறைவனிடமிருந்து அவன் அருள்மழையில் பெறச்செய்ய அவனிடமே உள்ளம் உருகி பிரார்த்திக்கின்றேன்.
ஈத் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
அன்பில் அடைக்கலமாகும்....
- மு.செ.மு. நெய்னா முஹம்மது.