Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

குஜராத் கலவர வழக்கு ::: நீதிமன்ற தீர்ப்பு ! 1

அதிரைநிருபர் பதிப்பகம் | August 31, 2012 | , , , , ,


அகமதாபாத் (31-08-2012): குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகளில் ஒன்றான நரோடா பாட்டியா  கலவர வழக்கில்  பா.ஜனதா முன்னாள் அமைச்சர்  மாயா கோட்னானிக்கு 28 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பஜ்ரங்தள் அமைப்பின்  தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு சாகும் வரை சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 2002 ம் ஆண்டு குஜராத்தின் பல   இடங்களில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் நடைபெற்ற கலவரங்களில் ஒன்றாக   நரோடா பாட்டியா என்ற இடத்திலும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.இதில் 97  பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், பா.ஜனதா  முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பஜ்ரங்தள தலைவர் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட  32 பேர் குற்றவாளிகள் என்று அறிவித்தது.அதே  சமயம் 29 பேர்களை விடுவித்து  உத்தரவிட்டது.

குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள 32 பேருக்கான தண்டனை தீர்ப்பை  வெள்ளிக்கிழமையன்று வழங்க உள்ளதாக நீதிபதி தெரிவித்திருந்தார். 

அதன்படி இன்று குற்றவாளிகளுக்கான தண்டனை தீர்ப்பை வழங்கிய நீதிபதி, நரேந்திர  மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பா.ஜனதா முன்னாள் அமைச்சர் மாயா  கோட்னானிக்கு ஒட்டு மொத்தமாக 28 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பஜ்ரங்தள்  அமைப்பின் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு சாகும் வரை சிறைத் தண்டனையும் விதித்து  உத்தரவிட்டார்.

இவர்கள் உட்பட மற்ற அனைத்து குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்து  தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதிரைநிருபர் குழு

நன்றி : இணையதகவல்

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 14 5

அதிரைநிருபர் பதிப்பகம் | August 31, 2012 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

முஸ்லிம்களை கண்ணியப்படுத்துதல், அவர்களின் உரிமைகளை வழங்குதல், அவர்கள் மீது கருணை, இரக்கம் கொள்ளுதல் பற்றி...:

நேர்வழி அல்லாஹ்வின் பொறுப்பாகும். கோணல் வழியும் உள்ளது. அவன் நாடியிருந்தால் உங்கள் அனைவருக்கும் நேர் வழி காட்டியிருப்பான். (அல்குர்ஆன்: 16:9)

...“நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். (அல்குர்ஆன்: 5:32)

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை, (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் : 6:32)

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரை அல்லாஹ் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும், தங்கக் காப்புகளும், முத்தும் அவர்களுக்கு அணிவிக்கப்படும், அங்கே அவர்களின் ஆடை பட்டாகும். (அல்குர்ஆன் : 22:30)

'மக்களிடம் ஒருவன் இரக்கம் காட்டவில்லையானால், அவனுக்கு  அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான்'' என நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 227)

'உங்களில் ஒருவர் மக்களுக்கு தொழ வைத்தால்,அவர் (தொழுகையை) எளிதாக்கட்டும்! ஏனெனில் அவர்களில் பலவீனர், நோயாளி, முதியவர் உள்ளனர். உங்களில் ஒருவர் தனித்துத் தொழுதால், தான் விரும்பியபடி தொழுகையை நீட்டிக் கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 228)

''ஒரு முஸ்லிம், மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான். அவர் மற்றவருக்கு அநீதி இழைக்க வேண்டாம். அவரை ஆதரவற்றவராக விட்டு விட வேண்டாம். தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுபவனாக ஒருவன் இருந்தால், அவனது தேவையில் (உதவிட) அல்லாஹ் இருப்பான். ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை (இவ்வுலகில்) ஒருவன் நீக்கி வைத்தால், மறுமையில் பல கஷ்டங்களில், ஒரு கஷ்டத்தை அவனை விட்டும் அல்லாஹ் நீக்கி வைப்பான். ஒரு முஸ்லிமின் குறையை (இவ்வுலகில்) மறைத்தால், மறுமை நாளில், அல்லாஹ் அவனது குறையை மறைப்பான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 233)

'ஒரு முஸ்லிம், மற்றொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார். அவருக்கு இவர் மோசடி செய்யமாட்டார். அவரிடம் இவர் பொய் கூறமாட்டார். அவருக்கு இவர் உதவி செய்வதை விட்டு விட மாட்டார். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இன்னொரு முஸ்லிம் மீது அவரது கண்ணியமும், அவரது சொத்தும், அவரது ரத்தமும் விலக்கப்பட்டதாகும். இறையச்சம் இங்கே (இதயத்தில்) உள்ளது. ஒரு முஸ்லிமான சகோதரரை இழிவாக எண்ணுவதே, மனிதனுக்குத் தீமையால் போதுமானதாகும்'' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 234)

'நீங்கள் பொறாமை கொள்ளாதீர்கள்! (பொருளை வாங்கும் எண்ணமில்லாமல்)  பொருளின் விலையை ஏற்றி விடாதீர்கள். ஒருவர் மீது ஒருவர் கோபப்படாதீர்கள். புறக்கணிக்காதீர்கள், குறை பேசிக் கொள்ளாதீர்கள். உங்களில் ஒருவர், இன்னொருவார் வாங்கும் பொருளை விலை பேச வேண்டாம். நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களாக சகோதரர்களாக ஆகி விடுங்கள். ஒரு முஸ்லிம், மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு இவன் அநீதம் செய்யமாட்டான். அவனை இழிவுபடுத்திடமாட்டான். அவனுக்கு உதவி செய்வதை விட்டு விடமாட்டான். இறையச்சம் இங்கே உள்ளது'' என்று கூறி தன் நெஞ்சை மூன்று முறை சுட்டிக் காட்டிய நபி(ஸல்) அவர்கள், ''ஒருவனின் தீமையை கணக்கிடுவதில் முஸ்லிமான தன் சகோதரனை இழிவுபடுத்துவதும் அமையும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இன்னொரு முஸ்லிம் மீது அவனது ரத்தம், அவனது சொத்து, அவனது கண்ணியம் விலக்கப்பட்டதாகும்'' என்றும்   நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் ( முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 235)

 ''தனக்கு விரும்பியதை தன் சகோதரனுக்கும் விரும்பும் வரை உங்களில் ஒருவர் இறைவிசுவாசியாக ஆக மாட்டார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 236)

'உன் சகோதரன் அநீதம் இழைப்பவனாயினும், அல்லது அநீதம் செய்யப்பட்டவனாக இருந்தாலும் அவனுக்கு நீ உதவி செய் என்று நபி(ஸல்) கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அநீதம் செய்யப்பட்டவனுக்கு நான் உதவி செய்வேன். அநீதம் இழைப்பவனாக இருந்தால் அவனுக்கு எப்படி உதவுவேன்? என்று ஒருவர் கேட்டார். ''அநீதம் செய்வதிலிருந்து அவரை நீக்கு! அதுவே அவருக்கு உதவி செய்வதாகும் என்று  நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி, ).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 237)

'ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள கடமை ஐந்தாகும்:
1) ஸலாமிற்கு பதில் கூறுவது 2) நோயாளியை நலம் விசாரிப்பது 3) ஜனாஸாவில் கலந்து கொள்வது 4) விருந்தை ஏற்பது 5) தும்மியவருக்கு பதில் கூறுவது என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில்:-
ஒரு முஸ்லிமின் கடமை ஆறாகும். அவரை நீ சந்தித்தால் அவருக்கு ஸலாம் கூறு! உன்னை அவர் விருந்துக்கு அழைத்தால் அவருக்கு பதில் கூறு! உன்னிடம் உபதேசம் செய்ய வேண்டினால், அவருக்கு நீ உபதேசம் செய்! தும்மியப்பின் அல்லாஹ்வை புகழ்ந்தால் அவருக்கு நீ பதில் கூறு! அவர் நோயுற்றால் அவரை நலம் விசாரி. அவர் இறந்தால் அவரை பின் தொடர்ந்து செல்! என்று உள்ளது. 
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 238)

''நபி(ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களை எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஏழு விஷயங்களை விட்டும் எங்களை தடுத்தார்கள். 'நோயாளியை நலம் விசாரித்தல், ஜனாஸாவில் கலந்து கொள்ளுதல், தும்மியவருக்கு பதில் கூறுதல், சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்றுதல், அநீதம் செய்யப்பட்டவருக்கு உதவுதல், (விருந்துக்கு) அழைத்தவனுக்கு பதில் கூறுதல், ஸலாமிற்கு பதில் கூறுதல் என, எங்களுக்கு கட்டளையிட்டார்கள்.
தங்க மோதிரங்கள் அணிவது, வெள்ளி பாத்திரத்தில் பருகுவது, பட்டு கலந்த சிவப்பு நிறத் துணி, பட்டு மற்றும் கித்தான் நூலால் உள்ள துணி, பட்டு அணிதல், கெட்டியான பட்டு, குறுக்கிலும், நெடுகிலும் பட்டு நூலால் நெய்யப்பட்ட துணி ஆகியவற்றை விட்டும் எங்களைத் தடுத்தார்கள். (அறிவிப்பவர்: அபூ உமாரா என்ற பாரஉ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 239)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

அலாவுதீன் S.

மாற்றியோசி மானிடா ! 32

அதிரைநிருபர் பதிப்பகம் | August 30, 2012 | , , , , ,

(மாற்றியோசி… மக்களே – 2)


உடை நனையக் கூடாதெனக்
குடை கொணர்வர்
மழை நாட்களில் மாந்தர்!

வாராதென நினைத்த மழை
வந்துவிட்டப் போதினிலே
எடை தாங்கும் நாற்காலி
குடை யாக்கிப் பிடிப்பர்!

மாற்றியோசி...மக்களே:
வாராதென்ப வருதலும்
வருமென்பெ வராதலும்
வாழ்க்கை நாடகத்தில்
வாடிக்கை!

தாராதது கண்டு தளராது
தாங்காது என தேங்காது
தடைகளால் இடறாது
தொடர்!!!

வைத்ததுதானே வாய்த்தது
போனதுதானே பொய்த்தது
இருப்பதுகொண்டு உருப்படு
இல்லாததெதற்கு நல்லார்க்கு?

முகக்கண்ணால் காதல்
அகக்கண்ணால் ஞானம்
இகம் காண நினக்கு
நிசக் கண்ணே நீதம்!
இருப்பது போதாதென மூச்
சிறைப்பது ஏனோ?

மாற்றியோசி...மக்களே:
இல்லாதோரிடம் இல்லாததெல்லாம்
இருக்கிறதே உன்னிடம்!

முடியாத தென் றொன்றுமில்லை
விடியாத கிழக் கெங்குமில்லை
பிரியாத வடக் கயிறுபோலே
பிரிய மேற்  கொள்பிறவியிலே!

மூன்றாவது முயற்சியில்
கிடைத்துவிடும் வெற்றிக்கு
இரண்டுமுறை மட்டுமே
முயல்வது முறையுமல்ல!!!

இம்மையின் இனிமையில்
இச்சைகொண் டலைந்து
இல்லாத இன்பத்தை
இருப்பதாக நினைந்து
சொல்லவேத் தகாத
செயலெல்லாம் செய்யாது...

மாற்றியோசி...மக்களே:
பொய்மையை வீழ்த்தி
வாய்மை வெல்லு மந்த
மறுமையை நினை - அதன்
மகிமையே நிலை!!!

கரையைத் தொடும்வரைதான்
கடல்
தரையைத் தொடும்வரைதான்
மழை
அலையையும் நதியையும் நினை
அலைபாயும் மனத்திற் கது அணை

உயிரோட்டம் உளவரைதான்
வாழ்க்கை
உடல் ஊன்றி நிற்கும்வரைதான்
பயணம்
உயிர்காற்று ஓய்ந்து
உடல்கூடு வீழ்ந்துவிட்டால்
உனக்கே சொந்தமல்ல நீ

மாற்றியோசி...மக்களே:
உள்ளவரை உலகு - உயி
ருள்ளவரை உதவு
நல்லவரை நம்பியே
நகர்கின்றன நாட்கள்!!!

சபீர் அபுசாருக்

அதிரை மழையே அமீரகம் வருவாயா !? 11

அதிரைநிருபர் பதிப்பகம் | August 30, 2012 | , , , ,


அதிரையை ஆராதித்த மழை, அட! மழையே என்று அமீரக சூட்டில் இருந்து கொண்டு அன்னாந்து பார்க்கும் அதிரையர்கள், வாராதோ இம்மழை என்று ஏங்க வைத்திருக்கிறது நேற்று (29-08-2012) மாலை 07:40க்கு ஆரம்பித்தை அழகு மழை அதிரையை குளிர வைக்க பெய்த மழை தொடர்ந்து ஒரு மணிநேரத்திற்கு மேலாக பெய்திருக்கிறது.

இறைவனின் அருட்கொடை, இல்லங்கள் இருக்கும் தெருக்களில் இதமான குளிரூட்டியிருக்கிறது.


மழையே மழையே 
அசையாமல் நில்லு

மதி மயக்கும்
மாலைநேர மழையே
உன்னை படமெடுத்து
ஊராருக்கு காட்டத்தான்

அமீரகம் வருவாயா ?
அடிக்கடி மின்சாரம்
அனையாமல் அரவணைப்போம் ! :)

அதிரை மழையை படமெடுக்க மின்னல் உதவியது பளிச்சென்று, கிளிக்கென்று சொடுக்கியது விரல்கள்.



இரவு எட்டு மணிவாக்கில் மின்னல் கொடுத்த வெளிச்சம் அதிகாலை எட்டு மணிபோன்ற தோற்றம்.


அமைதியோடு அழகையும் ஆளுமை செய்வதிலும் அலாதி இன்பமே !

அதிரைநிருபர் குழு

மனு நீதி மனித குலத்துக்கு நீதியா? அலசல் தொடர் - 10 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2012 | , ,

அலசல் தொடர் : பத்து.
இந்த தொடரில் இந்த வாரம் அரசர்கள் வாரம்.
முறை செய்து காப்பாற்றும் மன்னர்கள் மக்களை எப்படி நடத்த வேண்டுமென்று மனுநீதி வரையறுக்கின்றது என்பதை அலசும் முன்பு சற்று நினைவுபடுத்திக் கொள்ளவேண்டியது - மனுநீதி வரையறுக்கும் நான்கு வகை இனத்தில் ஷத்திரிய இனத்தில் பிறந்தவர்தான் அரசராக வரவேண்டுமென்பதாகும். இவைகள் மனு நீதியின் ஏழாம் மற்றும் எட்டாம் அத்தியாயங்களில்  சொல்லப்படுகின்றன.

2. A Kshatriya, who has received according to the rule the sacrament prescribed by the Veda must duly protect this whole world.

நாம் இதுவரை பார்த்ததுபோல் மனித இனத்தை பாகுபாடுபடுத்துபவர்களின்  ஒட்டுமொத்த பிரதிநிதியாக விளங்கும் மனு சாத்திரம் அரச பதவி போன்ற உயர் பதவிகள் வகிப்போர் ,  ஆள்வோர் கைக்கொள்ளவேண்டிய வழிமுறைகளை வகை கெட்ட வகைகளில் வரையறுப்பது இந்த நாட்டை பிடித்த துரதிஷ்டம். உலகின் பல்வேறு நாடுகள் தனது அரசியல் அமைப்பு சட்டத்தை, தனது மக்களை பாகுபடுத்தாமல் சமத்துவ முறையில் வைத்திருக்கின்றன. சில நாடுகள் அயல் நாடுகளில் இருந்து நெடுங்காலம் முன்பு வந்து தங்கள் நாட்டுக்கு புலம் பெயர்ந்தோருக்கும்  குடியுரிமை வழங்கி சம உரிமையும்  கொடுக்கின்றன. ஆனால் மனு நீதிக்கு இதெல்லாம் தலை பொறுக்காதே. இந்த மண்ணில் பிறந்தவர்களுக்குள்ளேயே பேதம் கற்ப்பிப்பதற்கு கச்சை கட்டுகிறதே.

ஒரு அரசு அலுவலகத்தில் அல்லது ஏதோ ஒரு தனிப்பட்ட துறையில் தனிப்பட்டவர்களால் பாகுபாடுகள் கட்டப்படுமென்றால் அந்தச் செயலை ஓரளவு நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஆளும் சட்டத்திலேயே பாகுபாடு வைத்து ஒரு சட்டம் இருந்தால் அதை தீவைத்து கொளுத்தவே வேண்டும். இப்படிக் கொளுத்தப்பட முழுத்தகுதி படைத்தது மனுநீதி சட்டம்.

அரசர் என்பவர்  சாதி இனப்பாகுபாடுகளை தூக்கி நிலை நிறுத்தி காப்பாற்றுவராக இருக்க வேண்டும் என்று மனு கூறுகிறது.  இது  அரசர்களாக ஆட்சி செய்பவர்களுடைய முதலாவது தகுதியாகும்.  ஒரு அரசரின் தலையாய  கடமை தனது குடிமக்களை காப்பதோ, நாட்டை நல்லபடி ஆட்சி செய்வதோ, வளப்படுத்துவதோ, முன்னேற்றுவதோ , அல்ல. மாறாக சாதி என்கிற நரகலை அந்த அரசர் அல்லது அரசு  தனது தலையில் தூக்கி வைத்துக்கொள்ள வேண்டுமென்கிறது. அத்துடன் அந்தந்த சாதி மற்றும் இனத்துக்குத் தகுந்த பாகுபாடான பொறுப்புகளை தனது மக்களுக்குத் தரவேண்டும் என்பதும் மனு தரும் விதி. பார்த்தீர்களா? இது விளங்குமா? இதைத்தான் இப்படி சொல்கிறது

35. The king has been created to be the protector of the castes (varnas) and orders who, all according to their rank, discharge their several duties.

மேலும் அரசர்களின் தகுதிகளை பட்டியல் இடும்போது எதிரிகளுக்கு பணியக்கூடாது, புறமுதுகிடக்கூடாது என்பவனற்றோடு பிராமணர்களை மதிப்புமிக்க இடத்தில் வைத்து தேனும் திணை மாவும் தரத் தயங்கக்கூடாது என்பதே கூடுதல் தகுதியாகும். இதோ

87-88. A king who, while he protects his people, is defied by foes, be they equal in strength, or stronger, or weaker, must not shrink from battle, remembering the duty of Kshatriyas: Not to turn back in battle, to protect the people, to honor the Brahmins, are the best means for a king to secure happiness.

ஒரு அரசர் மற்றொரு நாட்டுடன் போர்செய்து வெற்றி பெற்றால் தனது கடவுளை வணங்குவதோடு மட்டுமின்றி தனது நாட்டின் பிராமணர்களை கவுரவப்படுத்த வேண்டும்; அவர்களுக்கு நிறைய சலுகைகள் வழங்க வேண்டும். மற்றவர்கள் எல்லாம் வாயில் விரலை வைத்து சூப்பிக்கொண்டு இருக்க வேண்டும். மரம வைத்து தண்ணீர் ஊற்றுபவன் ஒருத்தன் அதன் பலனை அனுபவிப்பவன் இன்னொருத்தன். அந்த இன்னொருத்தன் எவனுமல்ல பிராமணனே. அவனவன் உயிரை பணயம் வைத்து சண்டை போடுவானாம் அதில் வெற்றியும்  பெறுவானாம். ஆனால் பிராமணனை கவுரவப்படுத்த வேண்டுமாம். இதோ !

201. When he has gained victory, let him duly worship the gods and honor righteous Brahmins; let him grant exemptions; and let him cause promises of safety to be proclaimed [to his opponents].

அதுமட்டுமல்ல நீதிக்குழு என்கிற கட்டுச்சோறு கட்டினால் அதில் கட்டாயம் ஒரு பிராமணப்பூனையும் அல்லது ஒரு பெருச்சாளியையும் வைத்துக் கட்டவேண்டும் என்கிறது மனுவின்  சட்டம். வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் குழு அமைத்தால் அதில் கண்டிப்பாக பிராமணர்கள் இடம் பெற்று இருக்க வேண்டுமாம். எந்த சூழ்நிலையிலும் ஒரு தாழ்த்தப்பட்டவன் நீதிபதிகளுள் ஒருவனாக ஆகமுடியாது.

A king, desirous of investigating law cases, must enter his court of justice, preserving a dignified demeanor, together with Brahmins and with experienced councilors.

அரசர்கள் நீதி வழங்குவதிலும் , தண்டனை தருவதிலும் நடந்து கொள்ளவேண்டிய முறைகள் மனு நீதியால் வரையறுக்கப்படுபவை அப்பட்டமான பாகுபாடுகள். மாமியார் ஆக்கினால் மட்டன் கறி; மருமகள் ஆக்கினால் மீன் கறி. ( மண்சட்டி பொன் சட்டியையே எவ்வளவு நாள் சொல்வது) என்று ஒரே வகையான குற்றத்துக்கு இனத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கச் சொல்கிறது மனு நீதி.  இவைகளைப் படிக்கும் ரோஷமுள்ள எவருக்கும் இரத்தம் கொதிக்க ஆரம்பித்துவிடும்.

ஒரு குழப்பமான வழக்கு அரசரின் முன்  வந்தால் அதில் மாறுபாடுகளான சாட்சிகள் இருக்குமானால் ஒரு பிராமணன் சொல்வதையே உண்மை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பிராமணன் மட்டுமே மனிதருக்குப் பிறந்தவன் மற்றவர்கள் மாட்டுக்குப் பிறந்தவர்கள் இல்லையா?

 Upon hearing contradictory testimony from witnesses, the king is advised at Manu 8.73 to rely on what the majority of witnesses say, or else the testimony of witnesses of superior qualities; if discrepancy persists, the testimony of Brahmins is to be relied upon.[

 ஒரு தாழ்ந்த சாதிக்காரன் மற்ற மூன்று உயர் சாதிக்காரர்களை தூஷனையாக அவமானித்துப் பேசினால் அந்த தாழ்ந்த சாதிக்காரனது உதடுகளை  வெட்டிவிட அரசு  உத்தரவிடவேண்டும்.

279. With whatever lip a man of a low caste does hurt to a man of the three highest castes, even that lip shall be cut off.

ஒரு உயர்ந்த சாதிக்காரனோடு அதே இடத்தில் ஒரு தாழ்ந்த சாதிக்காரன் உட்கார முயற்சித்தால் தாழ்ந்த சாதிக்காரனுக்கு இடுப்பில் சூடு போடவேண்டும் அல்லது அவன் உட்காரப்பயன்படுத்தும் உடலின் உறுப்பை ( இடக்கரடக்கல்) வெட்டிவிட வேண்டும்.

281. A low-caste man who tries to place himself on the same seat with a man of a high caste shall be branded on his hip and be banished, or the king shall cause his buttock to be gashed.

அடங்கா கோபத்துடன் உயர் சாதியினர் மேல் காரி உமிழும் ஒருவனின் இரு உதடுகளும் வெட்டப்படவேண்டும்; சிறு நீர் கழித்தால் ஆண் குறி வெட்டப்படவேண்டும்; உடலில் இருந்து துர்நாற்றம் வீசும் காற்றை ( இதற்குமேல் நாகரிகமாக எனக்கு மொழி பெயர்க்க தெரியவில்ல – அது அப்படி நாறுகிறது) அவன் மேல்  விட்டால் விட்டவனின் மலம கழிக்கும் மூலத்தை வெட்ட வேண்டும்.

282. If out of arrogance he spits on a superior, the king shall cause both his lips to be cut off; if he urinates on him, the penis; if he breaks wind against him, the anus.

ஒரு பிராமணருக்கு சொந்தமான அல்லது அவனது பாதுகாப்பில் இருக்கும் தானமாக வழங்கப்பட்ட பசுவை திருடும் தாழ்த்தப்பட்டவனின் இரண்டு கால்களின் பாதங்களும் அரைவாசி வெட்டப்படவேண்டும்.

325.  For stealing cows belonging to Brahmins, piercing the nostrils of a barren cow, and for stealing other cattle belonging to Brahmins, the offender shall forthwith lose half his feet.

பிற பெண்களை பிராமணர் மட்டும் தொட்டுக்கலாம்; பட்டுக்கலாம்; இட்டுக்கலாம்; எடுத்துக்கலாம். மற்றவர்கள் தொட்டாலும், பட்டாலும், இட்டாலும், எடுத்தாலும் மரண தண்டனை அரசால் வழங்கப்படவேண்டும்.

359. A man who is not a Brahmin ought to suffer death for adultery (samgrahana; for the wives of all the four castes must always be carefully guarded.

கீழே உள்ள 361, 362  ஆகிய இரண்டு மனுவின் சரத்துக்களை மொழி பெயர்க்க எனக்கு உள்ளம் கூசுகிறது . தெரிந்தவர்கள் படித்துக்கொள்ளுங்கள் அல்லது வேறு யாரிடமாவது கேட்டுக்கொள்ளுங்கள். காரணம் கட்டிய மனைவியை அடுத்தவருக்கு தானே அனுப்பிக்கொடுப்பதற்கான மனு நீதி தரும் அனுமதி அது.
.
361. Let no man converse with the wives of others after he has been forbidden to do so; but he who converses with them in spite of a prohibition shall be fined one suvarna.

362. This rule does not apply to the wives of actors and singers, nor of those who live on the intrigues of their own wives; for such men send their wives to others or, concealing themselves, allow them to hold criminal intercourse.

இதற்குமேல் சொல்ல வேறு என்ன இருக்கிறது? இந்த பாவிகள் படைத்துவைத்த  சாத்திரங்கள் பற்றி?
374  முதல் 379 வரை குறிப்பிட்டுள்ள அரசரும் நீதித்துறையும்  கடைப்பிடிக்கவேண்டுமென்ற வரைமுறைகளை ஏற்கனவே வேறு சில அத்தியாங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். அது ஒன்றுமில்லை.  நொங்கு திருடியவன்  ஓடிவிட்டான்  நோண்டித்தின்றவன் மாட்டிக்கிட்டான் என்பதே. அதாவது உயர் சாதிப் பெண்ணுடன் உறவு கொள்ளும் தாழ்ந்த சாதி ஆண்மகனின் தலை கொய்யப்படவேண்டும் ஆனால் ஒரு தாழ்ந்த சாதி பெண்ணுடன் பலவந்தமாக உறவுகொள்ளும் உயர் சாதி ஆண்களுக்கு பணம் அபராதம் – அதுவும் குலத்துக்கு ஏற்றபடி விதித்தால் போதும் என்பதே.

374. A Shudra who has intercourse with a woman of a twice-born caste (varna), guarded or unguarded, shall be punished in the following manner: if she was unguarded, he loses the offending part and all his property; if she was guarded, everything even his life.

375. For intercourse with a guarded Brahmin, a Vaisya shall forfeit all his property after imprisonment for a year; a Kshatriya shall be fined one thousand panas and be shaved with the urine of an ass.
376. If a Vaisya or a Kshatriya has connection with an unguarded Brahmin, let the king fine the Vaisya five hundred panas and the Kshatriya one thousand.

377. But even these two, if they offend with a Brahmini not only guarded but the wife of an eminent man, shall be punished like a Shudra or be burnt in a fire of dry grass

378. A Brahmin who carnally knows a guarded Brahmini against her will shall be fined one thousand panas; but he shall be made to pay five hundred if he had connection with a willing one.

379. Tonsure of the head is ordained for a Brahmin instead of capital punishment; but men of other castes shall suffer capital punishment.

இறுதியாக கீழ்க்கண்ட இரண்டு மனுநீதியின் ஷரத்துக்களை சொல்லிவிட்டு குளிக்கப் போகிறேன். இவைகளை தொட்ட நாற்றம் நீங்க இருமுறை சோப்புப் போட்டு குளிக்கப் போகிறேன்.

அரசர்கள் ஒரு காலமும் பிராமணர்களை அவர்கள் எந்த குற்றம் செய்து இருந்தாலும் கொலை தண்டனைக்கு உட்படுத்தக் கூடாது. அவ்விதம் கொடும குற்றம் செய்த பிராமணர்களை குற்றத்திலிருந்து விடுவித்து ,அவரது சொத்துக்களை திருப்பிக்கொடுத்து , உடம்பில் எவ்வித கீறல் காயம் இல்லாமல் (பல்லக்கில் ஏற்றியா)  அனுப்பி வைக்க வேண்டும். இந்த உலகில் பிராமணர்களை கொலை தண்டனை விதித்து தண்டிப்பதை விட பெரிய குற்றம் எதுவுமில்லை.  ஒரு அரசர், ஒரு பிராமணரை கொல்வதாக மனத்தால் கூட  நினைக்க கூடாது.
 
380. Let the king never slay a Brahmin, though the Brahmin has committed all possible crimes; let the king banish such an offender, leaving all his property to him and his body unhurt.

381. No greater crime is known on earth than slaying a Brahmin; a king, therefore, must not even conceive in his mind the thought of killing a Brahmin.

இதுதான் மனுநீதி. இதற்குத்தான் பரிவட்டம் கட்டி,  ஆலவட்டம் சுற்றி, பன்னீர் தெளித்து , போற்றி பாடிக்கொண்டிருக்கின்றனர் புத்தியற்றோர். டாக்டர் அம்பேத்காரால்  தீமூட்டி எரிக்கப்பட்ட  மனு நீதி , பெரியாரால் காரித்துப்பப்பட்ட மனு நீதி  இன்றும் வழிபாட்டுத்தலங்களில் விளங்காத மொழிகளில் முழங்கப்படுகிறது. அவைகள் தம்மை இழிவு படுத்தும் வாசகங்கள் என்று கூட அறியாத வகையற்றோர், கை கட்டி வாய்பொத்தி , காதால் கேட்டு, காசுகளும் போட்டு காலம் கடத்தி வருகின்றனர். இவைகளை எடுத்துச் சொல்லும் இயக்கம் இன்னும் தேவை- இந்த வகையற்றோரை நல்ல வழிகாட்டி அழைத்துவர உழைப்புத்தேவை உடனே.

இன்னும் நிறுத்தவில்லை நான்...
இபுராஹீம் அன்சாரி

நலமில்லா நவீனமும்..
உழைப்பில்லா உடல்களும்!!
14

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2012 | , , ,

(*) மின்னிலே சுழன்றிடும்
மிக்ஸியின் ஆட்சியில்
மண்ணிலே புதைந்தன
அம்மியும் குளவியும்..

(*) அறவை மில்களின்
ஆற்றலின் உதவியால்
உரலும் உலக்கையும்
உதவாக் கரைகளாம்..

(*) ஆயத்த மாவினில்
ஆப்பமும் தோசையும்..
ஆட்டு கல்லுக்கு
அலுவலும் இல்லையாம்..

(*) குடங்கள் சுமந்து
கொண்டு வந்திட்டார்
குடிநீர் ஒருகாலம்!!
குழாய்கள் இப்போது.

(*) அறிவீர் ஓருண்மை..
ஆதியில் சொன்ன
கருவிகள் மாறின
கடைசியில் பலனென்ன?

(*) மறைந்த அம்மியில்
கரங்களின் வலிமையும்
உரலின் மறைவினில்
உரமான தேகமும்

(*) குடைகல்லின் மறைதலில்
விரல்களின் வீரியம்
குடங்களின் மறைதலில்
கொடியிடை மேனியும்

(*) கூடவே மறைந்ததை
குறையல்ல! வரமென்றோம்
மாடர்ன் உலகுக்கு
மாறுதல் பலமென்றோம்..

(*) அறிவியல் வளர்ச்சியில்
யாவுமே நடந்திடும்
துரிதமாய்..அங்ஙணம்
மரணமும் வரின்?

(*) குறைவாய் உழைப்பும்
கூடுதல் உணவும்
நிறைவாய் சேர்க்கும்
நீள்பிணி நம்மில்..

(*) உண்ணுதலொத்த உடலுழைப்பும்
உழைப்பிற்கேற்ற உணவுகளுமே
முன்னவர் சொல்லிய
முறை ஆகும்..

(*) விகிதம் மாறா
விதம், உடல்பேணிடும்
சகிதம்வாழ, நம் அகவை
சதமென்றாதல் சாத்தியமே!! (இன்ஷா அல்லாஹ்)

~அதிரை என்.ஷஃபாத்

மூன்றாம் ஆண்டிலும் தொடர்கிறது...
அல்ஹம்துலில்லாஹ்!
23

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2012 | , , , ,


அதிரைநிருபர் இரண்டு ஆண்டுகளைக் கடந்து சாதித்தது ஏராளம், அதனை நேசிப்பவர்களின் எண்ணிக்கையோ க்ச்க்ம் !

அதிரை வலைத் தளங்களில் முன்னணெயிலும் குறிப்பிடத்தக்க நிலையிலும் முன்னெடுத்துச் செல்வதை நற்பண்புகள் நிறைந்த அதிரை மற்றும் அனைத்து சமுதாய சகோதரர்களும் நன்கறிவர். எல்லாப் புகழும் இறைவனுக்கே !

துவங்கி இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன....

கற்றதோ….!

இருபது வருடங்களுக்கான அனுபவங்கள்...

இரண்டு தலைமுறைகளல்ல மூன்று தலைமுறை பதிவர்களின் வட்டம் !

இருபாலரின் இதயங்களில் இடம்பிடித்துக் கொண்ட தனித்துவம் !

அதிரைநிருபரில் சிறப்பம்சமாகத் திகழ்வது இணைய வாசகர்கள் மீதான முழுநம்பிக்கை. அதனால்தான் ஒவ்வொரு பதிவின் கருத்துப் பெட்டிகளும் எப்போதும் திறந்தே இருக்கும், அன்பு நேசங்க்ளின் திறந்த மனத்தோடு வெளிப்படையாக, தனிமனித சாடல் இல்லாத, இறைவனுக்கு அஞ்சிய கருத்துக்களைப் பதிவதற்கு ஏதுவாக இருப்பதே சிறப்பம்சம்.

பதிவுகளையும் பதிவர்களையும் பாராட்டும் நோக்கமும், அவர்களின் எழுத்தாற்றலை ஊக்குவிப்பதிலும், அதிரை மற்றும் இஸ்லாமிய சமூகத்திற்கு எதிரான சீர்கேடுகளைச் சுட்டிக் காட்டுவதிலும் மும்முரம் காட்டி வருவதோடு. அடுத்தவர்களின் தனித் தன்மைக்கு எவ்விதத்திலும் பங்கமில்லாத ஊடக தர்மத்தைப் பேணுவதில் என்றுமே கவனமாக இருப்பதில் அதிரைநிருபர் குழு தனித்துவமானது.

கட்டுரைகள், பொதுசார்பு பதிவுகள், கவிதைகள், மார்க்க பதிவுகள், கல்வி சார்ந்த பதிவுகள், புதுமைசார்ந்த பதிவுகள், வணிகசார்பு பதிவுகள், வாழ்வியல் ஆய்வுகள், தனித்தன்மை மேம்பாடு, நெறியாளர் பக்கம், இப்படியாக பல்வேறு பிரிவுகளாக பதிவுகளைத் தினமும் ஒன்று அல்லது அதற்கு மேலாக தொடர்களாகவும், குறுந்தொடர்களாகவும் பதிந்து வருகிறது.

தனி மின்னஞ்சல்களில் வந்து குவியும் கருத்துகளையும், வாசகர்களின் ஆலோசனைகள், அறிவுரைகள், பரிந்துரைகள், கண்டனங்கள், விமர்சனங்கள் இவைகள் அனைத்தும் அதிரைநிருபரை பண்படுத்த பயன்படும் படிக்கட்டுகளே, அவற்றில் எதனையும் புறந்தள்ளியதே இல்லை. இவ்வாறு எங்களுக்கு பதிவுகளில் கருத்துக்களாகவும், வயது பேதமின்றி தனி மின்னஞ்சல் வழியாக தொடர்ந்து கருத்துகளைப் பரிமாறும் உங்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.

அதிரைநிருபரில் பதிவாகும் தொடர் பதிவுகள், சிறப்பு பதிவுகள், வழமையான வாழ்வியல் பதிவுகள் யாவும் பிற இணையதளங்களில், வலைப்பூக்களில் எங்கள் அனுமதியுடனும், சில அனுமதியின்றியும் பகிர்ந்து வருவதை இணைய தேடலில் இருப்பவர்கள் அனைவரும் அறிவர்.

தொலைக்காட்சி ஊடகங்களின் கவனமும் அதிரைநிருபர் பக்கம் திரும்பியிருக்கிறது, புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்தும் மாணவர்களின் விவாதங்களில் அதிரைநிருபரில் வெளிவரும் "படிக்கட்டுகள்" பதிவு கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. மற்றொரு பிரபலமான "விஜய்" தொலைகாட்சியில் விவாதங்கள் பகுதியில் "ரியல் எஸ்டேட் சிந்திப்போம் - குறுந்தொடர்" பற்றிய விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வந்ததும் சான்றுகளே அதிரைநிருபர் வலைத்தளம் விரிந்த இணைய வலையில் பரந்து இருப்பதற்கு.

அதிரை வலைத்தளங்கள் என்றில்லாமல், இலவச வலைப்பூக்களில் எத்தனையோ அற்புதமான வலைப்பூக்கள், இணையதளங்கள் இருந்தாலும் வலைத்தளங்களுக்கான ஊடக தர்மம் மீறல் இன்றி தனிமனித தனித்தமை போற்றி, கருத்து திணிப்பின்றி, சுதந்திரமாக எடுத்துவைத்து ஒரு வெற்றிப் பாதையை அமைத்துக் காட்டியதை யாவரும் அறிவர் அல்ஹம்துலில்லாஹ் !

இயக்க செய்திகளோ, அரசியல் கட்சி ஆதரவு நாடும் தகவல்களோ பதிவதில்லை என்ற நிலைபாடு நடுநிலையென்ற சொல்லுக்கு இலக்கணமல்ல. நடுநிலமை என்பது எந்த ஒரு விடயமும், காரியங்களும் நிறைவுக்கு வரும்போது அங்கே தெரியும் அந்த நடுநிலமை எந்தப்பக்கம் சாய்ந்திருக்கிறது. அதுவே ஊடக தர்மம் கற்றுக் கொடுத்த உண்மைநிலை அறிந்து அதன் பக்கம் சார்ந்திருப்பதே.

ஊடக வரலாற்றில் அதனை ஆளுமை செய்பவர்களை விட அதனை நேசிக்கும் வாசர்கள்தான் அறிவில் சிறந்தவர்கள் என்பதை ஒவ்வோர் ஊடகவியலாளரும் உணந்திருக்க வேண்டும் அதனை அதிரை நிருபர் நன்றாக அறிந்தும் அதன்படியே செயல்பட்டும் வருகிறது.

இந்த பதிவை எழுதத் தூண்டிய அதிரைநிருபர் வாசகர்களின் பதிவுகளில் பதியும் மற்றும் மின்னஞ்சல் வழி தனி-கருத்துக்களே என்றால் அது மிகையாகாது.

அதிரைநிருபர் குழு

கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 27

தொடர் நிறைவுறுகிறது

17

அதிரைநிருபர் பதிப்பகம் | August 28, 2012 | , ,

இறையருட்கவிமணி அவர்கள் தமது கவிதைத் திறனால் ஏற்படுத்திய சிந்தனைப் புரட்சிகள் ஏராளம்.  மழலைச் செல்வங்களுக்கான குழந்தைப் பாடல்களானாலும் சரி, கவியரங்கப் பாக்களாயினும் சரி, அவற்றினூடே இழைந்தோடும் கருத்துக் கருவூலங்கள் அன்னார் செய்த சிந்தனைப் புரட்சிகளுக்கான சான்றுகளாகத் திகழ்கின்றன.

கல்வியாளர்களும் அறிஞர்களும் சமுதாயத்திற்காக ஆற்ற வேண்டிய பணிகளைப் பட்டியலிட விழந்த கவிமணியவர்கள், அறிஞர்கள் தாம் கற்ற கல்வியைச் சமுதாயத்திற்குப் பயன்படும் விதத்தில், ஆழிய அறிவுக் கருவூலங்களையும் இறையருள் இலக்கியங்களையும் தமிழ் மொழியில் வார்த்தெடுத்துக் கொடுக்க வேண்டிய தேவையைக் கீழ்க்காணும் கவியடிகளில் பாடுகின்றார்:

          “வான்போற்றும் கருத்துகளை வடித்தெடுத்துக் கொடுப்பதுதான்
           தீன்போற்றும் நமக்கெல்லாம் திகழ்கின்ற பணியாகும்
           அறிவுப் பசிஎடுத்தே அலமந்து நிற்போர்க்குச்
           செறிவு மிகைத்திருக்கும் சீர்மறையின் கருத்துகளைச்
           சேர்த்தெடுத்துக் கொடுத்திடுவோம்; செந்தமிழின் சுவைசேர்த்துப்
           பார்த்தெடுத்து வழங்கிடுவோம்; பாருலகில் ஓங்கிடுவோம்!”

இல்லாவிட்டால், ‘கற்றதனால் ஆய பயனென்?’ என்று கேட்பது போல் தோன்றுகின்றதல்லவா?

கற்றோர் செய்ய வேண்டிய அப்பணியை இன்னும் அழகாகப் பாடுவதைக் கேளுங்கள்:

                   “கண்ணைக் கவர்கின்ற கண்ணாடிக் கிண்ணத்தில்
                   வண்ணப் பழச்சாற்றை வார்த்துக் கொடுப்பதுபோல்
                   காதைப் பிடித்திழுக்கும் காந்தத் தமிழ்நடையில்
                   ஓதப் படைத்திடுவோம் ஓங்கும் நெறிக்கருத்தை!”

‘காதைப் பிடித்திழுக்கும் காந்தத் தமிழ் நடையில்’ எழுதுவது எல்லாராலும் சாலுமோ?  அறிவுப் பெருக்கமும் சிந்தனைச் சீர்மையும் உள்ளவர்களால்தான் இயலும்.  அத்தகைய முன்னேற்றத்தைத்தான் அறிஞர்களிடம் எதிர்பார்க்கின்றார் ‘இறையருட்கவிமணி’.

வையகத்தைக் கவிஞன் நோக்குவதற்கும் பிறர் நோக்குவதற்கும் பெருத்த வேறுபாடுண்டு.  நிறைகளைப் போற்றும் அதே வேளை, குறைகளைச் சாடும் உணர்ச்சி மிக்க மனப்பாங்கு கவிஞர்களிடம் காணப்படும் ஒன்றாகும்.

                             “பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப்
                                 பாலித் திடவேணும்” என்று பாரதி பாடினான் அல்லவா?

இதுதான் கவிஞன் காணும் வையகப் பரிவு.  அதே பாரதி, “தனியொருவனுக்கு உணவில்லையெனில், ஜகத்தினை அழித்திடுவோம்!” என்றும் சீற்றம் கொண்டு சீறிப் பாய்ந்தான்.  சமூகத்தில் குற்றம் காணின், கொதித்தெழுவான் கவிஞன்.  இது போன்று கொதித்தெழுகின்றார் நம் கவிஞர்:

                   “அறந்தேயும் தீச்செயலும் அடுத்தாரைக் கெடுப்பதுவும்
                   புறம்பேசும் தீக்குணமும் பொய்புரட்டும் வஞ்சனையும்
                   குணமொன்றும் நாடாமல் குழிபறிக்கும் குறுமனமும்
                   பணமொன்றே குறியாகும் பண்பில்லா உளப்பாங்கும்
                   உள்ளத்தில் பிறக்காமல் உதட்டளவில் உறைகின்ற
                   கள்ளத்தின் பொய்நகையும் கழுத்தறுக்கும் கொடுமைகளும்
                   மெய்யோட்டும் பையூட்டும் மேதினியைப் பாழாக்கும்
                   கையூட்டும் களியாட்டும் கள்ளூட்டும் பேயாட்டும் .....”

என்றெல்லாம் பாடிச் சாடிவிட்டு,

                   “மனிதகுல வரலாற்றின் மாண்பனைத்தும் போக்கிவிடும்
                   புனிதநபி நெறியினிலே புழுதியினைச் சேர்த்துவிடும்”

என்று பாடி எச்சரிக்கை செய்கின்றார்.   நேர்வழிக்கு ஒரே வழி,

                   “உளம்வாழும் நிலைகாண உயர்மறையின் நெறிசெல்வோம்!”

என்று முடிவுரை பாடுகின்றார் நம் முதுபெரும் கவிஞர். 

கல்வி கற்றல் என்ற பெயரில், மேலை நாட்டு மேதைகள், கீழை நாட்டுக் கெழுதகையோர் பற்றியெல்லாம் படிக்கின்றோம்.  ஆனால், எவருடைய வாழ்க்கை நமது முன்மாதிரியாக இருக்கவேண்டுமோ, அந்த அருள் தூதரின் வாழ்க்கையினைப் படிப்பதில்லை என்று இடித்துரைக்கும் முகமாக,

                   “அறிவுலகப் பேரொளியை அனைத்துலகப் பெருமகரை
                   முறையுடனே நாமறியோம்; முகவரியும் நாமறியோம்.
                   ஆப்பிள் திராட்சையுடன் ஆரஞ்சுப் பழமிருக்கத்
                   தோப்பில் மாங்காயைத் துழாவிக் கடிப்பதுபோல்,
                   குற்றாலத் தருவியிலே குளிக்காமல் பக்கத்துக்
                   கற்றாழைக் குட்டையினைக் கலக்கிப் புரளுதல்போல்
                   விண்கவரும் விரிநூல்கள் வீட்டின் அகத்திருக்கக்
                   கண்கவரும் நூல்படித்துக் கால்வழுக்கிக் கிடக்கின்றோம்!”

அருமை!  எத்துணை அழகிய உவமையுடன் கூடிய உணர்வூட்டல்?!

                   “வணக்கமிலாப் பள்ளிகளும் வாஞ்சையிலா மன்றுகளும்
                   இணக்கமிலா இல்லறமும் இறக்கமிலா நெஞ்சுகளும்
                   உறுதியிலா அறிஞர்களும் ஒழுக்கமிலா இளைஞர்களும்
                   நாணமிலா அரிவையரும் நலன்காணாத் தலைவர்களும்
                   நம்மிடையே பெருகிவிட்டார்; நாடகமே ஆடுகின்றார்!”

குற்றம் களையும் பணியில் கூடி நிற்குமாறு தம்மைப் போன்ற தரமான கவிஞர்களை அறைகூவல் விடுத்து அழைக்கின்றார் அருட்கவிஞர்:

                   “வணிகத்தில் கலப்படமும் வாழ்க்கையிலே பெறுகின்ற
                   அணிசிதைக்கும் சூதுமது ஆகாத கொலைகளவும்
                   வஞ்சனைகள் பொய்புரட்டு வன்முறைகள் தீச்செயல்கள்
                   மிஞ்சிவரும் உலகுக்கு மெய்விளக்காம் கவிதேவை.
                   பணமென்றால் வாய்பிளக்கும் பிணமாக மாறாதீர்!
                   செல்வர்க்கே அடிவருடும் சிறுமையிலே சிக்காதீர்!
                   அனல்கக்கும் கவிதைகளால் அநீதியினைச் சுட்டெரிப்பீர்!
                   புனல்வார்க்கும் கவிதைகளால் புனிதத்தை வளர்த்திடுவீர்!
                   அறவாழ்வு தழைப்பதற்காம் அரும்பணிகள் புரிந்திடுவீர்!”

இவ்வாறு, சீர்திருத்தக்காரர்களாகக் கவிஞர்கள் ஆகும்போது எவர்தான் கவிதைகளை வெறுப்பார்?

                   “கலைகளுக்கே அரசியெனக் கவினடையும் கவிதைகளில்
                   பலவகைகள் பகர்ந்திடுவார் பாருலகின் ஆய்வாளர்
                   உள்ளத்தில் கருவெடுத்தும் உணர்ச்சியிலே ஊற்றெடுத்தும்
                   தெள்ளமுதச் சொற்களிலே தெவிட்டாத உருவெடுத்தும்
                   பள்ளத்துள் பாய்கின்ற வெள்ளமென வெளியாகிக்
                   கள்ளமிலாக் காதுகளைக் கவ்விப் பிடித்திழுத்து
                   நெஞ்சத்தில் விளையாடி நாளெல்லாம் நம்முடனே
                   கொஞ்சுகின்ற குழவிகளே குடியுயர்த்தும் கவிதைகளாம்.

மாசற்ற மனித வாழ்க்கைக்காகக் கவிதைகளின் தேவையை – இஸ்லாம் வகுத்த இனிய நெறியில் இயங்கவேண்டிய கவிதைகளின் தேவையை – மேற்காணும் இறையருள் கவி மணிகளால் நாம் உணரலாம்.

كلام فحسنه حسن وقبيحه قبيح

(நற்கருத்துள்ளவை நல்ல கவிதைகளாகும்;  மோசமான கருத்துள்ளவை மோசமான கவிதைகளாகும்.)

என்று இஸ்லாம் கூறும் இலக்கணத்தில் இணைவோம்!  நம் மறுமை இலக்கினை அடைவோம்!.


(சான்றுகள் கணக்கின்றி உள.  விரிவஞ்சி, இத்துடன் நிறைவாக்குகின்றேன்.) 




முடிவுரை

இக்கவிதை இலக்கிய மரபு மேலும் தொடரவேண்டும்.  இந்த ஆய்வுத் தொடரில் நான் குறிப்பிட்டதற்கொப்ப, கவிதை என்பது மானிட இயல்புத் தன்மையுடன் பின்னிப் பிணைந்ததாகும்.  மனிதனை மனிதனாக வாழ வழி வகுப்பது;  வாழ்வின் உண்மை நிலைகளை உணர்த்துவது;  காலத்தால் கறை படாத கருத்துகளைத் தன்னகத்தே கொண்டது;  கற்பனை அழகை விரும்பும் மனித இயல்புக்குக் கருத்துணர்வைத் தர வல்லது;  உண்மையும் அழகுணர்ச்சியும் நிறைந்த சொல் வளத்தால் வாழ்வைச் சொல்லோவியமாகத் தீட்டிக் காட்ட வல்லது;  மனித வாழ்வின் ஆன்மிக இயல்பை உணர்த்த வல்லது;  அதனை ஆர்வத்துடன் படிக்கும் / பாடும் மனிதனுக்குப் புதிய வாழ்வையும் புத்துணர்வையும் கொடுப்பது.

இந்த ஆய்வின் தொடக்கத்தில் மேற்கோள் காட்டிய இறைமறை குர்ஆன் வசனத்தில், இஸ்லாமிய அழைப்புப் பணி செய்ய ‘ஹிக்மத்’ (நுண்ணறிவு) எனும் சொல் இடம்பெற்றிருப்பதாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவிதையைப் புகழ்ந்துரைத்தபோது ‘ஹிக்மத்’ எனும் அதே சொல்லைப் பயன்படுத்தியிருப்பதாலும், “கவிதை என்பது பொய்யால் நிறைந்தது; கவிஞன் பொய்யுரைப்பவன்” என்றெல்லாம் கருத்துக் கொள்ளாமல், கவிதைகள் மூலமும் உண்மைகளை உணர்த்தலாம்;  மனித நேயத்தை மலரச் செய்யலாம்;  மார்க்கத்தை எடுத்துரைக்கலாம் என்றே நம்பவேண்டும்.

இஸ்லாம் என்பது குர்ஆனும் நபிவழியும், அப்பழுக்கில்லாமல் இவ்விரண்டின் அடியொட்டி வாழ்ந்த முன்னோரின் வாழ்க்கை முன்மாதிரிகளும் மட்டுமே.  இந்த அளவுகோள் (yardstick) கொண்டுதான் எதையும் – அது இலக்கியமாகட்டும், இசையாகட்டும், எதுவுமாகட்டும் – வரையறை செய்யவேண்டும்.  இந்த இலக்கணத்தில் அனைத்தும் அடங்கிவிட்டன.

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கு என்பதுவே எமது அழைப்பியல் நெறியின் துவக்கமும் முடிவுமாகும்!

இத்தனை நாட்கள் என்னுடன் பொறுமை காத்த அனைவருக்கும் நன்றி.
     
அதிரை அஹமது
adiraiahmed@gmail.com


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு