
இருந்தது
என்றாலும்
துரத்திப்பிடிக்கும் தூரம் செல்லும்வரை
விட்டுப்பிடித்தே
வாழ்ந்து பழகுகிறோம்
சுட்டுவிடும் என்றறிந்திருந்தும்
கட்டுப்படுத்திக் கொள்ளாமலே
தொட்டுவிட்டுப்
பின்
பட்டுத் தெளிகிறோம்
கற்றறிந்தோ பட்டறிந்தோ
பெற்றுவந்த புத்தியெல்லாம்
இற்றுப்போக இருந்துவிட்டு
மற்றொரு நாளையும்
வெற்றொரு நாளாக்குகிறோம்
முந்திச்செல்லும் முயற்சியைச்
சிந்தித்தும் பாராமல்
உந்தித் தள்ளுவார் எதிர்நோக்கி
பிந்தியே நிற்கிறோம்
கவனத்தில் கொள்க:
காற்றையும் கனவுகளையும் தவிர
கைப்பிடியளவு மண்ணோ
கவளம் உணவோ
கையுழைப்பின்றி கிடைக்காது
நகர்ந்து செல்லாவிடில்
நதியோ மனிதனோ
தேங்கியோ தூங்கியோ
தகர்ந்து போய்விடுவது சத்தியம்
சோம்பிய உடலும் சுருங்கிய எண்ணமும்
சோலியின்றி கிடந்தால்
நோய்ச் சேரும், நேர்ப்படாது
வாய்ச் சோறும் வசப்படாது
முயல்பவன் தன்னின்
செயல்களுக்கு மட்டுமே
இலக்கை நோக்கி
இழுத்துச் செல்லும் பலமுண்டு
முடங்கிக் காத்திருப்பவன்
முயற்சி யின்மையால்
முவ்வெட்டு ஆண்டுகளுக்குள்
முதுமை எய்திடுவான்
யாக்கையின் வேட்கையில்
வாழ்க்கையைத் தொலைத்தால்
மேற்கையும் கிழக்கையும்
மிஞ்சிய திசைகளையும்
மின்னலற்ற இருளே நிறைக்கும்
செய்ய ஒன்றும் இல்லையெனில்
சிந்திக்க நிறைய உண்டு;
சிந்திக்கக்கூடச் சோம்பலா?
செவிவழிச் செய்திகளில்
சம்பாத்திய வழிகள் கேள்
எழுந்து பார்
எட்டிவிடலாம்
நடந்து பார்
அடைந்து விடலாம்
விதைத்துப் பார்
விளையும்
நகர்த்திப் பார்
நகரும்
தொடு...
துலங்கும் !
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்