version : 3
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஊடக போதை இதுவரை வெளியான பதிவுகளில் அதிரை சார்ந்த வலைத்ததளங்களில் போலி மற்றும் புனைபெயர்களின் நிலைபாடுகளை விரிவாக அலசினோம். தொடரும் இந்த மூன்றாவது பதிவில் தற்போதைய அரசியல் சூழலில் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களின் முக்கிய பிரச்சினையாக்கப்பட்ட(!?) முல்லை பெரியாறு அணையைத்தான, தமிழக ஊடகங்கள் மனசாட்சியில்லாமல் தங்களின் கல்லாவை நிரப்பும் கண்மூடித்தனமான போக்கை மாற்றம் என்றொரு இணையதளத்தில் வெளிவந்த ஒரு பதிவில் நமது கவனத்தை ஈர்த்த விமர்சனத்தை உங்கள் பார்வைக்கும் தருகிறோம்.
கேடுகெட்ட ஊடங்களுக்கு மனசாட்சியே கிடையாதா?

போதாக்குறைக்கு இருக்கவே இருக்கின்றன தொலைக் காட்சி சேனல்கள். தமிழக மக்களிடையே பெரும் கோபத்தையும், வெறியையும் திட்டமிட்டு பெயரளவில் பிரபல ஊடகங்கள் அனைத்தும் ஒன்றாக இருப்பதுபோல் தங்களுக்குள்ளேயே ஊட்டிக்கொண்டு இருக்கின்றன. இதனைப் பார்க்கிற கேரள மக்களுக்கும் இதே கோபமும் வெறியும் ஒரு சாராரிடம் ஏற்படும். அங்கு இருக்கிற பத்திரிகைகளும் இதே காரியத்தைத்தான் அங்கு செய்கின்றன. இரண்டு மாநிலத்து மக்களும் ஒருவருக்கொருவர் மோதி அடித்துக் கொள்வதில்தான் இந்த ஊடகங்களுக்கு எவ்வளவு சந்தோஷம்? தங்கள் தந்திரங்கள் சரியாக கிளிக் ஆகி, பத்திரிகை விற்பனையும் அமோகமாக நடக்கிறதல்லவா?
கேரளாவில் ஊடகங்களின் மூலம் இதுபோல் ஊட்டப்படும் வெறிக்கு ஆளாகும் அங்குள்ள மக்களை, ‘மலையாளிகளின் அட்டகாசம்’ , ‘மலையாளத் திமிர்’ என்றெல்லாம் இந்த பத்திரிகைகள் அடைமொழிகள் இடுகின்றன. தமிழகத்தில் உள்ளவர்கள் கேரளாக்காரர்களின் கடையை அடித்து நொறுக்கினால் ‘தமிழர்களின் எழுச்சி’ என்றும், வீரம் போலவும் சித்தரிக்கின்றன. இந்த வார்த்தைகள் இனவெறியையும், இனப்பகைமையையும் விதைக்கின்றனவா இல்லையா? இதில் என்ன பெருமைப்படவும், போற்றிக்கொளவும் இருக்கிறது? மக்கள் ஒருவருக்கொருவர் தங்களை அடித்துக் கொள்வதில் என்ன எழுச்சி வேண்டிக் கிடக்கிறது என்பதை போராட்டங்களை முன்னின்று நடத்தி அற்ப லாபமடைய இருக்க்கும் அரசியல் கோமாளிகளுக்கு ஆதரவளிக்கும் பொதுமக்கள் தான் சிந்திக்க வேண்டும்.
இருதரப்பு எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் தமிழகத்திலிருந்து காய்கறி, பால், முட்டை போன்ற உணவுப்பொருட்கள் கேரளம் செல்வது தடைப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படுவது கேரள மக்கள் மட்டுமல்ல. தமிழக விவசாயிகளும் தான் என்பதை மறந்துவிடலாகாது. கேரளம் செல்லும் அனைத்துப் பாதையையும் அடைப்போம் என்றெல்லாம் இங்குள்ள சிலர் கோஷம் எழுப்புவதும் மக்களை உசுப்பிவிடுவதும் எந்த வகையிலும் பிரச்சனை தீர உதவாது என்பதோடு, தமிழக மக்களுக்கும் நலன் பயக்காது என்பது உறுதி.
மக்களை முன்வைத்துத்தான் அணை பாதுகாப்பற்றது எனப் பிரச்சினையை ஒருபக்கம் ஆரம்பித்தார்கள். மக்களை முன்வைத்துத்தான் அணை பாதுகாப்பானது, தண்ணீர் வேண்டும் என்பதில் இன்னொரு பக்கம் உறுதியாய் இருந்தார்கள். மக்களை முன்வைத்துத்தான் இருபக்கமும் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்தன. மக்களை முன்வைத்துத்தான் அரசியல் கணக்குகளும், அரசியல் காழ்ப்புணர்ச்சிகளும் தீர்மானிக்கப்பட்டன. ஆனால் இந்த மொத்த விவகாரத்திலும் இரு மாநிலத்து மக்களுக்கும் என்ன பங்கு இருக்கிறது, தத்தம் தலைவர்கள் சொன்னதைக் கேட்டதைத் தவிர. ஆனால் அந்த மக்கள்தாம் ஒருவருக்கொருவர் இன்று அடித்துக்கொண்டு சாகின்றனர். இது என்ன கொடூரம்?
இரண்டு பக்கமும் அமைதி வேண்டி, மக்களின் நல்லிணக்கம் வேண்டி குரல்கள் எழுகின்றன. அவைகள் இந்தப் பத்திரிகைகளால் கண்டு கொள்ளப்படுவதில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும், அதுவரை இருபக்கமும் பொறுமையாய் இருக்க வேண்டும் என சுமூகத் தீர்வுக்கு பேசும் சக்திகள் இந்த பத்திரிக்கைகளால் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.
மத்திய மாநில அரசின் மோசமானக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு வீடிழந்து, மண்ணிழந்து, வாழ்க்கையிழந்து நடுத்தெருவில் வீசியெறியப்பட்ட மக்கள் தேசமெங்கும் நிறைந்து கிடக்கின்றனர். அவர்களிடம் உருக்கமானப் பேட்டிகளை வாங்கி வெளியிடுவார்களா? தங்கள் ஆதிக்கத்துக்கும் அதிகார வர்க்கத்துக்கும் எதிரான சிறு கல்லையும் எடுத்துப் போடாத இந்த பத்திரிகைகள் மக்களின் மீது பாறாங்கல்லைத் தூக்கிப் போட கொஞ்சமும் யோசிப்பதில்லை. தங்களுக்கு கல்லா கட்டினால் சரி.
மாநில அரசாங்கங்களும், மத்திய அரசும், நீதிமன்றமும் மக்கள் நலன் கருதி நிச்சயம் பாகுபாடு இல்லாமல் நல்ல தீர்வு வரும் என்பது இரு மாநிலத்தின் பொதுவான மக்கள் அனைவரின் நம்பிக்கை.
தமிழகத்தில் பரபரப்புக்காக விற்பனையே குறிக்கோளாக கொண்ட ஊடகங்களில் மனசாட்சி ஊனமுடன் இருப்பதே காரணம், இவ்வகையான ஊடக போதை உவகைக்கு அடிமையாகி ஊக்கமளிக்கும் தமிழ்(!!!) மக்களே உங்களுக்குமா மனசாட்சி என்பது இல்லை ?
வேதனையான விடயம் என்னவென்றால் இந்த கேடுகெட்ட ஊடகங்களின் நாடகத்தில் தாங்களும் கதாபாத்திரம் ஏற்று பங்குபெற வேண்டும் என்ற வேடதாரிகளின் போராட்டத்தில் தங்களையும் இணைத்து அற்ப அரசியல் இலாபத்திற்காக இனவெறியூட்டி கரிசனம் காட்டி வேடிக்கை வேசம் போட்டு வருகிறார்கள் நம் இஸ்லாமிய இயக்கங்களும். முல்லை பெரியார் அணை போராட்டத்தினால் இன்று அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது பெரும்பாலான வியாபாரிகள் முஸ்லீம்களும், ஏழை விவசாயிகளும் என்பதை ஏனோ இந்த இயக்க சகோதரர்களுக்கு சிந்தையில் எட்டவில்லை என்பது வேதனையே.
மொழியை முன்னிறுத்தி போராட்டம், இனத்தின் பெயரால் போராட்டம், ஊழலுக்கு எதிரான போராட்டம், பக்கத்து மாநிலங்களுக்கு எதிரான போராட்டம் என்றாலும் அதன் பின்னனிக்கு பணமுதலைகளின் ஆளுமை வெறியும் அடுத்தவனை அழிக்கும் குரூரம்தான் எங்கோ ஒரு மூலையில் இருந்து கிளம்பியதே. நியாவான்களை ஓரங்கட்டவும், அவர்களின் வியாபார ஸ்தலங்களை முடக்கவும்தான் இப்படியான போராட்டங்களுக்கு பொருளுதவி செய்து வரும் பணமுதலைகளின் சதியே. இதனால் பாதிக்கப்படுவது சாமானியமும் அன்றாடம் பொளப்பு நடத்தும் சிறு வியாபாரிகளுமே. இவ்வகையான போராட்டத்திற்கு ஊக்கம் எங்கிருந்து வருகிறது ஏன் அவர்கள் அள்ளிக் கொடுக்கிறார்கள் என்பதை அறிந்திராத அப்பாவிகள் நமக்காத்தான் போராடுகிறார்கள் என்று தினசரி பத்திரிகையில் முகத்தை புதைக்கிறான், விழித்தது முதல் உறங்கும் வரை செய்திச் சேனல்கள்களில் மூழ்கிப் போகிறான் தன்னைப் பற்றியும் தான் சார்ந்திருக்கும் நாட்டின் இறையான்மையையும் மறக்கடிக்கப்பட்டவனாக.
அராஜகங்களையும் வன்முறைகளையும் அரங்கேற்றிவிட்டு மக்களிடம் உணர்வு போராட்டம் என்ற போர்வையில் கண்ணாம்பூச்சி விளையாட்டு விளையாடி வரும் தரம் கெட்ட அரசியல்வாதிகளும், மற்றும் இது போன்றவைகளை ஊக்கப்படுத்தும் அனைத்து ஊடகங்களும் தமிழக நன்னோக்கு கொண்ட மக்களால் கண்டிக்கப்பட வேண்டியவைகளே.. !
இந்திய ஒருமைப்பாடு எங்கே??????
நன்றி: (எடுத்தாய்ந்த கருத்துக்களுக்கு) மாற்றம் இணையதளம்.
- அதிரைநிருபர் குழு