அல்லாஹ்வின் திருப்பெயரால்....
தலைப்பைப் பார்த்தவுடன் இது வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே என்று யாரும் எண்ண வேண்டாம். இந்த பதிவின் சாயல் தனி நபரையோ அல்லது இயக்கத்தையோ சாடுவதாக தயைகூர்ந்து எண்ண வேண்டாம் என்று முன்னுரைக்கிறேன் !
அல்குர்ஆனில் உள்ள 109 வது அத்தியாயம் சூரத்துல் காஃபிரூன், 6 வசனங்களுடன் ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்ட அல்லாஹ் ரப்புல் ஆலமீனின் அற்புத வார்த்தைகள். இந்த அத்தியாயத்தில் வரும் 6 வது அரபு வசனமே லகும் தீனுக்கும் வலியதீன் (لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ), இதன் அர்த்தம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”
சமூக நல்லிணக்கம் பேணுகிறோம் என்ற எண்ணத்தில் மேல் சொன்ன இறை வசனத்தைச் சுட்டிக்காட்டி. நமக்கு பிரச்சினை வேண்டாம், எங்கள் மார்க்கம் சொல்லிவிட்டது “லகும் தீனுக்கும் வலியதீன்” (உங்களுக்கு உங்களுடைய மார்க்கம், எனக்கு என்னுடைய மார்க்கம்). நீங்கள் உங்கள் மதத்தின்படி உங்கள் வணக்கத்தைச் செய்யுங்கள், நான் என் மார்க்கப்படி என்னுடைய வணக்கத்தைச் செய்கிறேன் என்று அவ்வப்போது பொதுவாக முஸ்லீம்களால் பொது தளங்களிலும், பொது மேடைகளிலும் சொல்லப்பட்டு வருவதை அறிவோம்.
முதலில் இந்த இறைவசனம் எங்கு? எப்போது? எந்த சூழலில் இறங்கியது இந்த வசனத்தின் பின்னணி என்ன? என்பதை நாம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு அல்குர்ஆன் வசனத்தையும் நாம் எங்கு? எதற்குப் பயன்படுத்துகிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். தவறாக இறைவசனங்களை சம்பந்தமில்லாத சூழலில் பயன்படுத்தி அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகக்கூடாது என்பதில் நாம் அனைவரும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சூரத்துல் காஃபிரூன் அத்தியாயம் மாக்காவில் அல்லாஹ்வின் தூதர், நம் உயிரினும் மேலான உத்தம நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வானவர் ஜிப்ரயீல் மூலம் அருளப்பட்டது.
குரைஷி கோத்திரத்தின் வாரிசு, அல் அமீன் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட முஹம்மது நபி ஸல் அவர்கள் தங்களின் ஏகத்துவ அழைப்புப்பணியைத் தங்கள் குரைஷி கோத்திர மக்களிடம் எடுத்துவைத்த காலத்தில், நபி ஸல் அவர்களுக்கு பலவிதமான பொருளாதார மற்றும் திருமண ஆசைகள் காட்டி, நபி(ஸல்) அவர்களை ஏகத்துவப் பணியை முடக்கத் திட்டம் தீட்டிப் பார்த்தார்கள் அந்த குரைஷித் தலைவர்கள்.
இதோ முதல் திட்டம் “உங்களை இந்த மக்கா மாநகரின் முதல் தர செல்வந்தராக ஆக்குகிறோம், நீங்கள் விரும்பும் பெண்களை திருமணம் செய்துக்கொள்ளுங்கள், நீங்கள் சொல்லும் அனைத்தையும் கேட்கிறோம், என்று இது போன்ற ஆசை வார்த்தைகள் சொல்லி ஆனால் எங்கள் தெய்வங்களை (லாத்து, உஸ்ஸா போன்றவைகளை) மட்டும் தவறாக சொல்ல வேண்டாம்”. என்று இறைத்தூதர் முஹம்மது நபி ஸல் அவர்களை மடக்கி பேரம் பேசினார்கள் ஏகத்துவ வாடையை வெறுத்த அன்றைய குரைஷி கோமாளிகள்.”
முதல் திட்டம் வேண்டாம் என்றால், இதோ இரண்டாவது சமாதானத் திட்டம். “முஹம்மதே நீர் ஒராண்டு எங்கள் தெய்வங்களான லாத்து உஸ்ஸாவை வணங்கும், அது போன்று நாங்களும் அடுத்த வருடம் நீர் அந்த ஓரிறை கொள்கையை நாங்கள் வணங்குகிறோம் என்ன சம்மதமா?” என்ற வடிகட்டிய இணை வைப்பு சமாதானத் திட்டத்தை எடுத்து வைத்தனர். ஏகத்துவக் கொள்கையில் ஒரு துளிகூட சமரசம் செய்யாத நம் மூன்னோடி நபி இபுறாஹீம் (அலை) அவர்களின் வம்சத்தில் வந்தவர்கள் அல்லவா நம் தங்கத் தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். மக்காவில் ஏகத்துவப் பிரச்சாரத்தை எடுத்துச்சொன்ன ஒரே காரணத்திற்காக வாழ்வா? சாவா? என்ற போராட்டத்துக்கு மத்தியில் பல இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருந்த அந்த இக்கட்டான காலகட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் “குரைஷி உறவுகளே கொஞ்சம் பொறுங்கள் என்னுடைய இறைவன் இதற்கு என்ன சொல்லுகிறான் என்ற பிறகு என் முடிவை சொல்லுகிறேன்” என்றார்கள்.
குரைஷி தலைவர்கள் முஹம்மது ஸல் அவர்களை தங்களின் சூழ்ச்சி வலைக்குள் சிக்க வைக்க முயற்சித்த இந்த வேளையில் தான் சூரத்துல் காஃபிரூன் முழு அத்தியாயமும் மற்றும் சூரத்துல் ஜுமர் அத்தியாயத்தின் 64-வது வசனம் என்ற இறைவசனம் இறங்கியது.
சூரத்துல் காஃபிரூன் அத்தியாத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
“(நபியே!) நீர் சொல்வீராக: காஃபிர்களே!
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”
(அல்குர்ஆன் 109: 1-6)
மேலும் சூரத்துல் ஜுமார் அத்தியாத்தின் 64 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
“அறிவிலிகளே! நான் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்க வேண்டுமென்று என்னை நீங்கள் ஏவுகிறீர்களா?” என்று (நபியே!) நீர் கூறுவீராக.”
(அல்குர்ஆன் 39:64)
இந்த வசனங்கள் இறங்கிய பின்பு, குரைஷி தலைவர்களைப் பார்த்து முஹம்மது நபி ஸல் அவர்கள் “என் இறைவனின் கட்டளை வந்துவிட்ட பின்பு நான் உங்களோடு சமாதானம் செய்ய முடியாது” என்று சொல்லிய பின்பும்கூட, அவமானப்பட்டு, கேவலப்பட்ட குரைஷிகள் மேலும் ஒரு சமாதான திட்டத்தை வைக்கிறார்கள். “முஹம்மதே, எங்கள் தெய்வங்களின் சிலையை மட்டும் முத்தமிடும் அது போதும், நாங்கள் நீர் சொல்லும் இறைவனை வணங்குகிறோம்” என்று புதிய திட்டத்தை திணிக்கப் பார்த்தார்கள். இந்த தருணத்தில் தான் அல்லாஹ் சூரத்துல் ஜுமார் அத்தியாயம் முழுவதையும் இறைத்தூதருக்கு இறக்கி எச்சரிக்கையும் கொடுக்கிறான்.
அல்லாஹ் கூறுகிறான் அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், “நீவிர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்” (என்பதுவேயாகும்). (அல் குர் ஆன் 39:65)
கருத்துச் சுதந்திரமில்லாத ஒரு காலகட்டம், ஆதிக்க வர்க்கத்தின் அடக்குமுறை, பரம்பரை பரம்பரையாக சண்டைக்காரர்களாக வாழ்ந்த சமூகத்துக்கு மத்தியில் நபி(ஸல்) அவர்களின் குணநலங்களை ஏற்ற சமூகம் நம் தங்கத்தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் கொடுக்கள் வாங்கள் பிரச்சினை இல்லை, பங்காளி பிரச்சினை இல்லை, மாமன் மச்சான் பிரச்சினை இல்லை, சொத்துப் பாங்கீட்டு பிரச்சினை இல்லை, நில அபகரிப்புப் பிரச்சினை இல்லை ஆனால் அல்லாஹ் ஒருவனே அவனை மட்டுமே நீங்கள் வணங்க வேண்டும், அல்லாஹ்வுக்கு இணை துணை ஏதும் இல்லை என்று பிரச்சாரம் செய்ததை பொறுக்காத குரைஷி காபிர்கள். தங்களால் முடிந்த அனைத்து இணைவைப்பு சமாதான முயற்சிகளையும் கையாண்டார்கள். ஆனால் அல்லாஹ் தன் வஹியின் மூலம் நபி முஹம்மது ஸல் அவர்களுக்கு அறிவுரையும், ஆலோசனையும், எச்சரிக்கையும் செய்து இறை நிராகரிப்பாளர்களோடு ஓரிறை கொள்கை விசயத்தில் எந்த ஒரு சமாதானமும் செய்யக்கூடாது என்று கட்டளையிட்டான். அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்த கட்டத்திலும் மாறு செய்யாத உத்தம நபி (ஸல்) அவர்கள். அன்றிலிருந்து தான் மரணிக்கும் வரை இறை நிராகரிப்பாளர்களுடன் ஓரிறைக் கொள்கை விசயத்தில் எந்த ஒரு சமாதானமும் செய்யவில்லை.
சூரத்துல் காஃபிரூன் இறங்கிய வரலாற்றில் நமக்கு நிறைய படிப்பினை உள்ளது.
- அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் காரியங்களில் ஓரிறை கொள்கையை அடகுவைத்து எந்த ஒரு சமரசம் செய்வது கூடாது. இது தர்கா வழிபாடாக இருந்தாலும் சரி, பிறமத வழிபாடுகளாக இருந்தாலும் சரி.
- சுற்றுலா என்ற பெயரில் இறைவனுக்கு இணைவைக்கும் இடங்களுக்கு, குறிப்பாக தர்கா, கோவில், சர்ச் போன்றவைகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். அவ்விடங்களுக்கு செல்வதன் மூலம் அவைகளை நாம் அங்கீகரித்த நிலைக்கு செல்ல நேரிடும்.
- பிறமதத்தவர் அவர்கள் போலிக்கடவுள் நம்புகிறவர்களுக்கு பூஜை செய்யும் விழாக்களை தவிர்க்க வேண்டும்.
- எம்மதமும் சம்மதம் என்ற பெயரில் அல்லாஹ்வுக்கு இணையான போலிக்கடவுள்களை புகழும் விழாக்களை தவிர்க்க வேண்டும்.
- பிறமத நண்பர்களின் திருமணங்களில் இணைவைப்பை மையப்படுத்தி நடைபெறும் பூஜைகள் போன்ற நிகழ்வுகளில் அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- மனிதாபிமானம் என்ற பெயரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலைகள், விக்கிரகங்களைக் கொண்ட இணை வைப்பு வழிபாட்டுத் தளங்களை சுத்தம் செய்வது போன்ற காரியங்கள், மக்களின் திருப்தியை பெற்றுத்தருமே தவிர, நம்மை படைத்த ரப்புல் ஆலமீனிடம் திருப்தியை பெற்றுத்தருமா? என்ற பாரதூர கேள்விக்கு நம்மிடம் பதில் உள்ளதா என்பதை நாம் சித்திக்க வேண்டும்.
அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் நிகழ்வுகளுக்கு அங்கீகாரம் வேண்டி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நம்மீது திணிக்கப்படும்போது, அவைகள் தவறு என்று நாம் சுட்டிக்காட்ட வேண்டும், நமக்கு அது சாத்தியமில்லை, இணைவைப்பு காரியங்கள் நம்மீது திணிக்கப்படுகிறது என்ற நிலை வேறு வழியே இல்லை என்று வரும் போது, நம் ஈமானை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக “லக்கும் தீனுக்கும் வலியதீன்” என்ற நிலைக்கு நாம் வந்தால் மட்டுமே சூரத்துல் காஃபிரூன் வசனத்தை நாம் உணர்ந்தவர்களாக முடியும்.
இதல்லாமல், மார்க்க விசயத்தில் நம் சகோதரர்களுக்கு இடையில் ஏற்படும் கருத்துரையாடலிலும், அறியாமல் தவறுகள் செய்யும் நம் முஸ்லீம்களிடமும் சகோதரர்களிடமும் சும்மா சகட்டு மேனிக்கு தன்னுடைய புரிதல் மட்டும் தான் சரி என்ற தோரணையில் “லக்கும் தீனுக்கு வலியதீன்” என்று சொல்லுவது வாடிக்கையாக உள்ளது. இது தவறு என்பதை சூரத்துல் காஃபிரூன் இறங்கிய வரலாற்றை வாசித்தால் விளங்கும். உலக மக்களுக்கு முன்னுதாரணமான உத்தம நபி முஹம்மது (ஸல்) அவர்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், “லகும் தீனுக்கும் வலியதீன்” என்று சொல்லி தவறிழைத்தவர்கள் அல்லர், அநியாக்காரர்களிடம் சொல்லி நழுவவில்லை. கண்ணியத்தோடு தவறுகளைச் சுட்டிக்காட்டினார்களே தவிர, அவர்களிடம் ஓரிறைக் கொள்கை விசயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்யவில்லை.
நம்முடைய ஓரிறைக் கொள்கைக்கு வேட்டு வைக்கும் விதமாக நம்மீது திணித்து, இணை வைப்பிற்கு ஒத்துப்போக வைக்கும் நிலை வரும் போது. பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு “லக்கும் தீனுக்கும் வலியதீன்” என்ற வார்த்தையை சொல்லி ஒதுங்கிக்கொள்ளலாமே தவிர. சும்மா சகட்டு மேனிக்கு “லக்கும் தீனுக்கு வலியத்தீன்” என்று சொல்லி நழுவிக் கொள்வது சரியான அனுகுமுறையாகாது. அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
“விநாயகர் ஊர்வலம் அமைதியாக நிறைவுற்றது”
“கந்தூரி திருவிழா படுவிமர்சியாக நடைபெற்றது”
“ஹிந்துக்கள் சார்பில் வைகாசி திருவிழா!”
என்று தலைப்பிட்டு செய்திகளாக சமூக வலைத்தளங்களில் பதிவிடும் முஸ்லீம் ஊடகவியளாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் அறியாமை பற்றியும், நீ காஃபிர், நீ முஷ்ரிக், நான் ஒரிஜினல் முஸ்லீம், அவன் பெயர் தாங்கி முஸ்லீம் என்று ஆன்லைன் ஃபத்வா கொடுக்கும் வழிகேட்டுக் கொள்கையாளர்கள் பற்றியும் “லக்கும் தீனுக்கும் வலியதீன்” என்ற தலைப்பில் எதிர்வரும் பதிவுகளில் மேலும் நிறைய அலசலாம். இன்ஷா அல்லாஹ்.
தாஜுதீன்

