"பாலைவனத்தில் ஒரு சோலைவனம்”
(A DESERT SAFARI memories)
சோலையென ஏதுமின்றி
பாலைவனம் படுத்திருக்க
சேலையென செம்மணலை
மேலேயது போர்த்தி யிருந்தது!
நாலு சக்கர உந்தலிலே
நகர்ந்தன ஊர்திகள்
நாட்ப்பட்ட கனவோடு
நாங்களும் ஊர்தியுள்ளே!
நீர்கிழிக்கும் விசைப்படகாய்
மணல் விலக்கிய வாகனம்
வளைந்து நெளிந்த ஓட்டத்தில்
மணல் பொழிந்தது மழையெனவே!
மணல் முகட்டு உச்சியிலே
தலைகீழாய் வீழ்வதுபோல்
திகிலடித்தது நெஞ்சுக்குள்ளே!
பைத்தியம் பிடித்ததுபோல்
பாம்பெனவே நெளிந்தபோது
குடல்புறட்டி குமட்டினாலும்
குதூகலம்தான் ஊர்திக்குள்ளே!
பாலைவனப் பயணம்
பரவசமாய் முடிய
இளைப்பாறும் கூடாரத்தில்
மெல்லச் சிவந்தது கீழ்வாணம்!
ஒட்டக ஏற்றமும்
மகிழ்ச்சியில் திளைக்க
பாலை பசுமையானது!
அரிக்கேன் விளக்குகளால்
அலங்கரித்த அரங்கமும்
அதைச் சுற்றியமைந்த
அரேபிய இருக்கைகளும்!
பிரமிடு நாட்டுக்காரனின்
பிரமிப்பூட்டும் நடனமும்
உணவும் உற்சாகமுமாய்
உலகம் வித்தியாசப்பட்டது!
உடலை உதிர்த்துப் போட்டதுபோல்
அங்கங்கள் வலித்தாலும்
உள்ளமெல்லாம் இனித்தது அந்த
பாலைவனப் பயணத்தில்!
-சபீர்
Sabeer abuShahruk,





