Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label aknk. Show all posts
Showing posts with label aknk. Show all posts

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் - தொடர் - 12 12

அதிரைநிருபர் பதிப்பகம் | June 19, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

உத்தம நபியின் உன்னத தோழர்கள், நம்முடைய ஆருயிர் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மேல் கொண்ட பாசத்தால் அவர்கள் தம்மைவிட்டு பிரியப்போகிறார்களே என்று நினைத்து அழுத சம்பவத்தையும், நாளை மறுமையில் அவர்களோடு ஒன்றாக இருக்க முடியுமா என்று கண்ணீர் வடித்த சம்பவத்தையும் நாம் சென்ற பதிவில் பார்த்தோம். இந்த வார பதிவில் இன்ஷா அல்லாஹ். நபி (ஸல்) அவர்களுடைய மரண நேரத்தில் நடைபெற்ற ஒருசில நெகிழ்ச்சியான சம்பவங்களை இங்கு தொகுத்தளிக்கிறேன்.

கடந்த பதிவுகளில் நபி(ஸல்) அவர்கள் தம்மை விட்டு பிரியப் போகிறார்கள் என்பதை நினைத்து அபூபக்கர்(ரலி) முஆத் இப்னு ஜபல்(ரலி) அழுதார்கள் என்பதை பார்த்தோம். முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களுக்கு நிகழ்த்திய உபதேசத்தில்தான் நபி(ஸல்) அவர்களுடைய மரண முன்னறிவிப்பு செய்தியை தெளிவாக சொன்னார்கள் என்பதை நாம் அறிந்தோம்.

பின்வரும் வசனம் நபி(ஸல்) அவர்களுக்கு இறுதியாக அல்லாஹ்விடமிருந்து அனுப்பப்பட்டது, இதன் பிறகு வேறு எந்த வசனமும் இறக்கப்படவில்லை என்று ஹதீஸ் தொகுப்புகளில் நாம் பார்க்கிறோம் என்பதை தகவலுக்காக பதிவு செய்கிறேன்.

தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டெடுக்கப்படுவீர்கள்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா. திருக்குர்ஆன்(2:281)

நபி(ஸல்) அவர்களுக்கு கடுமையான நோய் ஏற்பட்டு கடும் தலைவலியுடன் காய்ச்சல் ஏற்பட்டது, அப்போது தம்முடைய மனைவி மைமூனா(ரலி) அவர்கள் இல்லத்தில் இருந்தார்கள். அங்கிருக்கும் போது நபி(ஸல்) அவர்கள் “நாளை நான் எங்கே இருப்பேன், நாளை நான் எங்கே இருப்பேன்” என்று வினவினார்கள். தம்முடைய நோயின் கடுமையின் காரணமாக நான் ஆயிசா(ரலி) அவர்கள் இல்லத்தில் இருக்க விரும்பிய உலக மாந்தருக்கெல்லாம் முன்மாதிரியான கண்மணி நபி(ஸல்) அவர்கள் “நீங்கள் அனைவரும் அனுமதி தாருங்கள்” என்று தம்முடைய அருமை மனைவிமார்களிடம் அனுமதி பெற்று அன்னை ஆயிசா(ரலி) அவர்களின் இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள் பொறுமையாளர்களின் தலைவர் நபி(ஸல்) அவர்கள்.

நபி(ஸல்) அவர்களை தம்முடைய அருமை மனைவி ஆயிசா (ரலி) அவர்கள் வீட்டிற்கு அலி(ரலி) அவர்களும் பழ்ளு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் தூக்கிக்கொண்டு சென்றார்கள், நபி(ஸல்) அவர்களுடைய பாதம் கீழே சீய்த்து சென்ற பாதையில் கோடு விழும் அளவிற்கு நடக்க முடியாமல் சென்றார்கள். இதனை அப்போது கண்ட ஸஹாபாக்கள் “என்ன ஆயிற்று நம்முடைய இறைத்தூதருக்கு” என்று அழும் அளவிற்கு கவலையுற்றார்கள். காரணம் மனித இனத்தின் முன்மாதிரி, அகிலத்தின் அருட்கொடை, ஒரு சாம்ராஜ்யத்தின் ஜனாதிபதி, இஸ்லாமிய போர்படைத் தலைவர், பொருளாதார மாமேதை, கண்ணியமான குடும்பத் தலைவர், அவர்களுடைய பிள்ளைகளுக்கு தலைசிறந்த தந்தை, அவர்களுடைய பேரக்குழந்தைகளுக்கு பாசம் நிறைந்த அப்பா, அவரோடு வாழ்ந்த அனைவருக்கும் நேசம்நிறைந்த தோழர், குழந்தகள் மேல் பாசம் கொண்ட மணிதருள் மாணிக்கம், முஸ்லீமல்லாதோராலும் உண்மையாளர் என்று போற்றப்பட்டவர், மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத்து செய்த மாபெரும் தியாகி, அல்லாஹ்வுடையை வஹிக்காக ஹிரா குகைக்கு ஏறிவந்த திடகாத்திர உள்ளம் கொண்டவர், இறக்க குணம் கொண்டவர், எழைகளுக்கு உதவுபவர், அடிமைத்தனத்தை வேரோடு வெட்டி சாய்த்த மாபெறும் புரட்சியாளர், அல்லாஹ்வின் தூதர், நம்முடைய நபி அவர்கள் நடக்க முடியாமல் கால் சீய்க்க தன் தோழர்களால் தூக்கி செல்லப்பட்ட நிலையை நேரில்காணாத நமக்கே இதை வாசிக்கும் போது தொண்டை அடைக்கிறதே, இதனை நேரில் பார்த்த அந்த மக்கள் எப்படி எல்லாம் கவலையுற்றிருப்பார்கள் என்று எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.

ஆயிசா (ரலி) அவர்கள் வீட்டில் தான் மரணிக்கும் கடைசி நிமிடங்கள் வரை வாய்ப்பு கிடைக்கும் போது மக்களுக்கு உபதேசம் செய்துக்கொண்டே இருந்தார்கள். அதே நிலையில் தன்னுடைய நோயினால் ஏற்பட்ட வேதனையில் மிகவும் சிரமப்பட்டார்கள் என்பதையும் ஹதீஸ் தொகுப்புகளில் காணமுடிகிறது.

இப்படி நோயினால் எண்ணிலடங்கா சிரமப்பட்டு மக்களுக்கு இறுதி உபதேசம் செய்துக்கொண்டிருந்த வேலையில் ஒரு அறிவிப்பு செய்தார்கள் கருணையின் சிகரம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் “என்னிடம் பழிதீர்க்க யாராவது உள்ளனரா? நான் உங்கள் யாருக்காவது தீங்கிழைத்திருந்தால் அதற்கு பகரமாக என்னை நீங்கள் பழி தீர்த்துக் கொள்ளலாம்.” என்று சொன்னவுடன் ஒரு நபி தோழர் எழுந்து “யா ரசூலுல்லாஹ் ஒரு போரின் அணிவகுப்பில் இருக்கும் போது நீங்கள் என்னை இப்படி முதுகில் கம்பால் தட்டினீர்கள் எனக்கு காயம் ஏற்பட்டது, நான் உங்களை பழி தீர்க்க வேண்டும்” என்று சொன்னார். இதனை செவியுற்ற கூடியிருந்த ஸஹாபாக்கள் அனைவருக்கு கோபம் ஏற்பட்டது, ஆனால் மனிதர்களின் புனிதர், பண்பாளர்களுக்கெல்லாம் பண்பாளர், அருமை நாயகம்(ஸல்) அவர்கள் தன்னுடைய ஆடையை விளக்கி “நீங்கள் பழிதீர்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்” உடனே அந்த தோழர் நபி(ஸல்) அவர்களின் மேனியில் முத்தமிட்டு அழ ஆரம்பித்துவிட்டார்கள். அப்போது அந்த நபி தோழர் சொன்னார் “நபி(ஸல்) அவர்களை பழிதீர்க்கும் எண்ணம் எனக்கில்லை, கடைசியாக நபி(ஸல்) அவர்களை கட்டியணைக்க எனக்கு ஓரு வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக நான் இப்படி செய்தேன்” என்று சொல்லி அழுதார் அந்த ஸஹாபி என்று நாம் ஹதீஸ் தொகுப்புகளில் பார்க்கிறோம்.

இவைகளை வாசிக்கும் போது நம்முடைய கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்களோடு வாழ்ந்த அந்த மக்கள் எப்படி எல்லாம் துடியாய் துடித்திருப்பார்கள் என்பதை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.

கடைசியாக வியாழக்கிழமை இரவு இஷா தொழுகையில் நபி(ஸல்) அவர்களை இறுதியாக சஹாபாக்கள் மஸ்ஜுந் நபவியில் பார்த்தார்கள், அதன் பிறகு வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நபி(ஸல்) அவர்கள் வெளியில் வரவில்லை, தம்முடைய ஆருயிர் தோழர் நபி(ஸல்) என்ன ஆயிற்று என்று அன்சாரி தோழர்களும், முஹாஜிர் தோழர்களும், திண்ணைத் தோழர்களும் அழுதுகொண்டே மஸ்ஜுது நபவியில் நல்ல செய்தி கிடைக்காதா என்று காத்துக் கொண்டிருந்தார்கள். அந்த ஞாயிற்றுக்கிழமை அலி(ரலி) அவர்களும் அப்பாஸ்(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களை பார்த்துவிட்டு வந்தார்கள். அவர்கள் இருவரிடமும் வெளியில் ஆவலுடன் காத்திருந்த தோழர்கள் நபி(ஸல்) அவர்களுடைய உடல் நலன் குறித்து விசாரித்து கொஞ்சம் ஆறுதல் அடைந்தார்கள். 

அப்போது தன்னுடைய பாசம் நிறைந்த தந்தை நபி(ஸல்) அவர்களைப் பார்க்க அருமை மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்தார்கள், நபி(ஸல்) அவர்களைக் கண்டவுடன் “என் தந்தைக்கு ஏற்பட்ட கஷ்டமே” என்று அழுதவர்களாக கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “இந்த நாளுக்கு பிறகு உன் தந்தைக்கு இனி வேதனை கிடையாது மகளே” என்று மரண படுக்கையில் இருக்கும்போதே தன்னுடைய மகளுக்கு ஆறுதல் கூறினார்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்கள். 

மீண்டும் ஃபாத்திமா (ரலி) அவர்களை அழைத்து, தனக்கு மரணம் ஏற்படப்போகிறது என்று சொன்னார்கள் ரஹ்மதுல் ஆலமீன், அப்போது ஃபாத்திமா(ரலி) அழ ஆரம்பித்தார்கள், மீண்டும் ஃபாத்திமா(ரலி) அவர்களை அழைத்து “ மகளே மரணத்திற்குப் பிறகு நீதான் என்னை முதலில் சந்திப்பாய், நீ தான் சொர்க்கத்தில் பெண்களுக்கு தலைவி” என்றார்கள் உடனே ஃபாத்திமா அவர்கள் சிரித்தார்கள் என்று புகாரி போன்ற ஹதீஸ் தொகுப்புகளில் பார்க்கிறோம்.

அதே சமயத்தில் நபி(ஸல்) அவர்கள் தன்னிடம் இருந்த தினார்களை தர்மம் செய்தார்கள், மறுநாள் மரணிக்கப் போகிறார்கள், அன்றிரவு வீட்டில் விளக்கு அணைந்துவிட்டது, அருகில் உள்ள வீட்டில் எண்ணெய் வாங்கி விளக்கை ஏற்றினார்கள் ஆயிசா(ரலி) என்று ஹதீஸ் தொகுப்புகளில் பார்க்கிறோம். ஒரு தலைவர் எப்படி எல்லாம் எளிமையாக வாழ்ந்து மரணிக்க வேண்டும் என்பதற்கு உலகில் நபி(ஸல்) அவர்களுக்கு நிகராக முன்னுதாரணமாக வேறு எவரையும் காட்ட முடியாது.

திங்கள்கிழமை ஃபஜர் தொழுகைக்கு பிறகு நபி(ஸல்) மிகவும் சிரமப்பட்டு தான் இருக்கும் மஸ்ஜித் நபவியில் இருக்கும் தன்னுடைய வீட்டில் திரையை அகற்றி, தன்னுடைய அருமை தோழர்களைப் பார்த்து இறுதியாக புன்னகைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் புன்னகையைப் பார்த்த ஸஹாபாக்கள் அனைவருக்கும் ஆறுதலாக இருந்தது.

திங்கள் கிழமை லுஹருக்கு முன்பு நபி(ஸல்) அவர்கள் அன்னை ஆயிசா அவர்கள் மேல் சாய்ந்த நிலையில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி துஆ செய்து, திருக்குர்ஆன் வசனம் ஒன்றை ஓதி, “அல்லாஹ்வே என்னை மன்னிப்பாயாக, என் மீது கருணை காட்டுவாயாக, உயர்ந்த நண்பனுடன் என்னை சேர்த்து வைப்பாயாக, அல்லாஹ்வே உயர்ந்த நண்பனே” என்று கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை கூறி தன்னுடைய 63-வது வயதில், ஹிஜ்ரி 11 வருடம் ரபியுல் அவ்வல் மாதம் இவ்வுலகை விட்டு பிரிந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு நபிதோழர்களின் நிலை பற்றி சுறுக்கமாக அடுத்த பதிவில் பார்க்கலாம்.

நபி(ஸல்) அவர்களுடையை இறுதி நாட்களில் நிகழ்ந்த சம்பவங்களிலிருந்து நமக்கு நிறைய படிப்பினைகள் உள்ளது.

நபி(ஸல்) அவர்களுக்கு நோய் ஏற்பட்டதால் அவர்களை காண முடியவில்லையே, அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று எண்ணி அழுதார்கள் அந்த தோழர்கள், நம்மை விட்டு அல்லாஹ்வின் தூதர் பிரியப்போகிறார்களே என்று நினைத்து அழுதுள்ளார்கள் அந்த தோழர்கள். வஹி வருவது நின்று விடுமே என்று நினைத்து அழுதுள்ளார்கள். தூதர் அழுதால் அந்த மக்கள் அழுதார்கள், தூதருக்கு ஒரு கஷ்டம் என்றால் அந்த மக்கள் அழுதுள்ளார்கள்.

நாம் இது போன்ற நெகிழ்வூட்டும் சம்வங்களை அடிக்கடி வாசித்து அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்களும் நோயினால் அவதியுற்றார்கள், அல்லாஹ் நம்மை எந்த சிரமும் இல்லாமல் வைத்திருக்கிறானே என்று நினைத்து அழ வேண்டும். நபி(ஸல்) அவர்கள் தம்முடைய உம்மத்தான நமக்காக செய்த தியாகங்களை நினைத்து அழ வேண்டும்.

நமக்கு காய்ச்சலோ தலைவலியோ வந்து சிரமம் ஏற்பட்டால், இது போன்ற சூழல்களை தன்னுடைய இறுதி நாட்களில் சந்தித்த நம்முடைய நபி(ஸல்) எப்படி கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று நினைத்து அழுது நம்மை சமாதானப்படுத்த வேண்டும்.

அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்காகவும் அவர்களின் குடும்பத்தவர்களுக்காகவும், நபிதோழர்கள் அனைவருக்காகவும் அல்லாஹ்விடம் அழுது ஒரு நாளாவது துஆ செய்திருபோமா?, ஒவ்வொரு நாளும் நாம் துஆ செய்ய வேண்டும். அவர்கள் அனைவரும் இஸ்லாத்திற்காக செய்த தியாயங்களை நினைத்து அழுது அவர்களுக்காக துஆ செய்ய வேண்டும், அவர்கள் அனைவரோடும் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சொர்க்கத்தில் நாம் அனைவரும் இருக்க துஆ செய்வோமாக.

இந்த வார உறுதி மொழி:

மரணத்தருவாயில் இருக்கும் போது அண்ணல் நபி(ஸல்) அவர்கள் “நான் யாருக்காவது தீங்கிழைத்திருந்தால் என்னை பழி தீர்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்களே அது போல், நாம் யாருக்காவது தீங்கிழைத்திருந்தால் அவரிடம் சென்று பழிதீர்த்துக்கொள்ள வேண்டுகோள் வைப்போமாக, அல்லது குறைந்தபட்சம் மன்னிப்பாவது கோருவோமாக. நம்மிடம் யாரும் மன்னிப்பு கேட்டால் வரட்டு பிடிவாதம் பிடிக்காமல் பெருமனதுடன் மன்னிப்போமாக.

இன்ஷா அல்லாஹ் இன்னும் இரண்டு வாரத்தில் இந்த தொடர் பதிவு நிறைவுபெறும்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
தாஜுதீன்

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் - தொடர் - 11 16

அதிரைநிருபர் பதிப்பகம் | June 12, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்

கடந்த வாரம் ரஹ்மத்துல் ஆலமீன் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மேல் எந்த அளவுக்கு சத்திய சஹாபாக்கள் பாசம் வைத்திருந்தார்கள் என்பதை முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம், ஏராளமானவர்களைச் சென்றடைந்த அந்த அத்தியாயத்தின் தொடர்ச்சியை மேலும் சில முத்தாய்ப்பான வரலாற்று சம்பவங்கள் இந்த பதிவில் நாம் காணலாம்.

அல்லாஹ்வின் தூதர் எம்பெருமானார் நபி(ஸல்) அவர்களிடம் ஓரு வழக்கம் இருந்து வந்தது, அறியாமைக் காலத்தில் இருக்கும் மக்களிடையே ஏகத்துவத்தை எத்தி ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தம்முடை நம்பிக்கைக்குரிய அருமை தோழர்களைத் தாயிக்களாக மார்க்க பிரச்சாரம் செய்ய அனுப்பி வைப்பார்கள் அகிலத்தின் அருட்கொடை நபி(ஸல்) அவர்கள். ஒரு தடவை எமன் நாட்டுக்குத் தூதுவராக அண்ணல் நபி(ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல்(ரலி) அவர்களை நியமித்தார்கள்.

எமன் நாட்டு தூதுவராக நியமிக்கப்பட்ட முஆத் பின் ஜபல் அவர்களை ஒட்டகத்தில் அமர வைத்து போர்ப்படை தளபதிகளுக்கு முன்மாதிரி தளபதி, தாயிக்களுக்கு எல்லாம் முன்மாதிரி தாயி, அகிலத்தின் அருட்கொடை, ஒட்டுமொத்த மனித சமூதயாத்திற்கும் எடுத்துக்காட்டான மாமனிதர் நம்முடைய நபி(ஸல்) அவர்கள் மதீனாவின் எல்லை துல்ஹுலைபா வரை நடந்து தம்முடைய தூதுவரை வழியனுப்ப வந்தார்கள். ஒட்டகத்தில் அமர்ந்து வந்த முஆத் பின் ஜபல்(ரலி) அவர்களால் நபி(ஸல்) அவர்கள் நடந்து வருவதைக் கண்டு தாங்க முடியவில்லை.

“யா ரசூலுல்லாஹ் நான் நடந்து வருகிறேன், நீங்கள் அமருங்கள்” என்று கேட்டார்கள்.

அதற்கு கருணையின் சிகரம் உச்சநிலை இரக்கத்தின் தலைவர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் “வேண்டாம் முஆதே நீங்கள் அமர்ந்து வாருங்கள்” என்று பாசத்தோடு கூறினார்கள்.

மேலும் நபி(ஸல்) முஆத் பின் ஜபல்(ரலி) அவர்களுக்கு உபதேசம் செய்துகொண்டே வந்தார்கள். முஆதே “நான் உங்களை எமன் நாட்டுக்கு தூதுவராக அனுப்புகிறேன், அந்த மக்களுக்கு மார்க்கத்தை நலினமாக எடுத்துச் சொல்லுங்கள், ஏகத்துவத்தின் பக்கம் அந்த மக்களை அழையுங்கள், அநியாயம் செய்வதிலிருந்து அந்த மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்” என்று மார்க்க நெறிமுறைகளை எடுத்துச் சொல்லிவிட்டு மதீனாவின் எல்லை வந்தவுடன், இறுதி இறைதூதர் நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) அவர்களைப் பார்த்துச் சொன்னார்கள் “எமனிலிருந்து நீங்கள் திரும்பி வரும் போது நான் இருக்க மாட்டேன்,” இதை கேட்ட முஆத்(ரலி) அவர்களுக்கு தாங்க முடியவில்லை “நீங்கள் என்னுடைய மண்ணறையையோ அல்லது என்னுடை பள்ளியையோதான் காண்பீர்கள், ஒன்றைத் தெரிந்துக்கொள்ளுங்கள் முஆதே, என்னுடைய குடும்பத்தார்கள் நினைக்கிறார்கள், என்னிடத்தில் அவர்களுக்கு அதிக உரிமை உண்டு என்று. ஆனால் என்னிடம் அதிகம் உரிமை உள்ளவர்கள் யார் தெரியுமா? இறையச்சமுடைய மக்கள், அவர்கள் யாராக இருந்தாலும் எங்கிருந்தாலும்” என்று கூறி மதினாவை நோக்கி திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தன்னுடையை கண்பார்வையிலிருந்து மறையும் வரை

முஆத் பின் ஜபல்(ரலி) அவர்கள் தேம்பிதேம்பி அழுதார்கள். இந்த சம்பவங்களின் வரலாற்றுச் சான்றுகள் புகாரி போன்ற இதர ஹதீஸ் தொகுப்புகளில் நாம் காண முடிகிறது.

முத்தாய்ப்பான இறுதி உபதேசம் செய்த நம்முடைய பாசமிகு தலைவர், நம்முடைய ஆருயிர் தோழர், மார்க்க கல்வி கற்றுத் தந்த நேசம் நிறைந்த ஆசான், இறையச்சமுடைய மக்களுக்கு மட்டும் அதிக உரிமை கொடுக்கும் நம்முடைய இறைத்தூதர் நம்மைவிட்டு பிரியப்போகிறார்களே என்று நினைத்து அழுதுள்ளார்கள் முஆத் பின் ஜபல்(ரலி) அவர்கள் என்பதை மேல் சொன்ன வரலாற்று சம்பவத்தின் மூலம் நாம் அறியலாம்.

ஒரு நாள் ஷஃபான்(ரலி) அவர்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்களுடைய சபைக்கு அழுதுக்கொண்டே வந்தார்கள். பாசத்தின் தந்தை அருமை நபி(ஸல்) அவர்கள் “என்ன ஆனது ஷஃபானே, முகமெல்லாம் வாடியுள்ளதே?” என்று வினவினார்கள்.

அதற்கு ஷஃபான்(ரலி) அவர்கள் “யா ரசூலுல்லாஹ், நான் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிந்தேன், அப்போது எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது”

நபி(ஸல்) அவர்கள் “என்ன சந்தேகம் சொல்லுங்கள்” என்று கேட்டார்கள்.

அதற்கு ஷஃபான்(ரலி) அவர்கள் “மக்காவில் உங்களை  வந்து சந்தித்து பேச வேண்டுமானால், உங்களோடு சேர்ந்து சிரிக்க வேண்டுமானால், தோளோடு தோள் சேர்ந்து உரையாடவேண்டுமானல் உடனே வந்து சந்தித்துவிடுகிறோம், ஆனால் மறுமையில் இது போன்று ஒன்றாக இருக்க முடியுமா என்று நினைத்து அழுகிறேன் யா ரசூல்லுல்லாஹ், எனக்கு முன்னால் நீங்களும், உங்களுக்கு முன்னால் நானோ மரணித்தால் மறுமையில் சொர்கத்தில் உங்களை எங்கு வந்து தேடுவது யா ரசூலுல்லாஹ், அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னித்து எங்களை சொர்கத்தில் போட்டால், நீங்கள் எல்லாம் நபிமார்கள் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பீர்கள், நாங்கள் எல்லாம் சாதாரண அடியார்கள், சொர்கத்தில் உங்களைப் பார்க்க முடியாதே, அதை நினைத்து கவலையுற்றேன் யா ரசூலுல்லாஹ்”  என்று ஷஃபான்(ரலி) அவர்கள் அழுதுகொண்டே கூறினார்கள். உடன் அல்லாஹ்விடம் இருந்து பின் வரும் ஆயத்து வந்தது.

யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். குர் ஆன் 4:69.

இந்த வசனத்தை நபி(ஸல்) ஓதிக்காட்டிய பிறகு தான் ஷஃபான்(ரலி) அவர்கள் தன்னுடைய அழுகையை நிறுத்தினார்கள் என்று ஹதீஸ் தொகுப்புகளில் பார்க்கிறோம்.

உத்தம நபி(ஸல்) அவர்கள் தன்னோடு வாழ்ந்த மக்களோடு நேசம் வைத்திருந்தார்கள், அதுபோல் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மேல் வைத்த பாசத்தால், மறுமையில் அவர்களோடு இருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டுமே என்று ஏக்கத்தில் சத்திய சஹாபாக்கள் அழுதுள்ளார்கள் என்பதை மேல் சொன்ன சம்பவத்தின் மூலம் நாம் அறிய முடிகிறது.

இப்போது நம் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் மறுமையில் அகிலத்தின் அருட்கொடை, மனித இனத்தின் முன் மாதிரி, நம்முடைய இஸ்லாத்தின் படைத்தளபதி முஹம்மது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் சுவர்கத்தில் ஒன்றாக இருக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்குமா என்று நினைத்து ஒரு நாளாவது அழுதிருக்கிறோமா?

இஸ்லாத்தில் இல்லாத நபி பிறந்த நாள் கொண்டாட்டம் கொண்டாடுகிறோமே, நபி(ஸல்) சுஹதாக்கள், சாலிஹீன்களோடு நாளை சுவர்கத்தில் இருக்க அல்லாஹ்விடன் அழுது பிரார்த்தனை செய்திருப்போமா?

போலியான கற்பனை கதாப்பாத்திரங்களின் காட்சிகளை பார்த்து அழும் இனிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே..!

நாம் அழ வேண்டும்
அர்த்தத்தோடு அழவேண்டும்….

இந்த வார உறுதி மொழி:

ஒவ்வொரு வினாடியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு, கீழ்படிந்து, நாளை மறுமையில் சுவர்கத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் நபிமார்கள், சுஹதாக்கள், சாலீஹீன்கள், நல்லடியார்களோடு இருக்க முயற்சிப்போம், அதற்காக து செய்வோம்

அல்லாஹ், நாளை மறுமையில் நம் அனைவரையும் சொர்கத்தில் நபி(ஸல்) அவர்களோடு ஒன்றாக இருக்கும் அந்த பாக்கியத்தை அவனுடைய மாபெரும் கிருபையால் தந்தருள்வானாக.
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
M தாஜுதீன்

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் - தொடர் - 10 18

அதிரைநிருபர் பதிப்பகம் | June 05, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

சென்ற வாரம் நபி(ஸல்) அவர்கள் இந்த உம்மத்தின் மேல் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தார்கள். நமக்காக பலமுறை கண்ணீர் சிந்தியுள்ளார்கள் என்பதைப் பார்த்தோம். இதைப்போல் அண்ணல் நபி(ஸல்) அவர்களோடு வாழ்ந்த மக்கள் அவர்கள் மேல் எவ்வளவு பாசத்துடன், பிரியமாக இருந்துள்ளார்கள் என்பதை இந்த வாரப் பதிவிலும் தொடர்ந்து அடுத்த பதிவிலும் பார்க்கலாம்.

மக்காவிலிருந்து மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்யும் போது நடந்த சம்பவம். நபி(ஸல்) அவர்களைக் கொலை செய்தாலோ, அவர்களின் தலையைக் கொண்டு வந்தாலோ தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று கொடூர குரைஷிக் கூட்டம் திட்டம் தீட்டியிருந்தது. மக்காவின் ஒரு பகுதியில் குகையில் மூன்று நாட்கள் தங்கி, பின்னர் பயணத்திற்குரிய ஏற்பாடுகள் எல்லாம் செய்து, முன்னால் செல்லும் ஒட்டகத்தில் நபி(ஸல்) அவர்களும் பின்னால் செல்லும் ஒட்டகத்தில் அபூபக்கர் (ரலி) அவர்களும் பயணம் செய்தார்கள். அபூபக்கர்(ரலி) அவர்களுக்கு ஒரே பதற்றம், முன்னும் பின்னும் கவனமாகப் பார்த்த வண்ணம் நபி(ஸல்) அவர்களைப் பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள்.

அப்போது வழியில் அம்பெய்வதிலும், வேகமாகக் குதிரை ஓட்டுவதிலும் திறன் படைத்த சுராக்கா என்ற ஒருவர் நபி(ஸல்) அவர்களையும், அபூபக்கர்(ரலி) அவர்களையும் பார்த்து விட்டார், சுராக்காவை கண்ட அபூபக்கருக்கு(ரலி) மேலும் பதற்றம் அதிகரித்தது. அவர்களால் தாங்க முடியவில்லை. உடனே “யா ரசூலுல்லாஹ் நம் பின்னால் சுராக்கா வருகிறார், நம்மை அடையாளம் கண்டு கொண்டார், அவர் நம்மை எதிரிகளிடத்தில் காட்டிக் கொடுத்துவிடக் கூடும், அவனால் நம் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் யா ரசூலுல்லாஹ்,” அபூபக்கரின்(ரலி) பேச்சைக் காதில் வாங்கிக் கொண்டே இறைவசனங்களை ஓதிக்கொண்டே சென்றார்கள் நபியவர்கள். சுராக்கா மிக அருகில் நெருங்கியவுடன் மீண்டும் அபூபக்கர்(ரலி) அவர்கள் அழுதவர்களாக, “யா ரசூலுல்லாஹ்… சுராக்கா நெருங்கிவிட்டார் யா ரசூலுல்லாஹ்… நபி(ஸல்) அவர்கள் “என்ன அபூபக்கரே ஏன் பதற்றப்படுகிறீர்கள்?” என்று வினவினார்கள், அதற்கு அபூபக்கர்(ரலி) அவர்கள் “இந்த அபூபக்கராகிய நான் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு சொல்லுகிறேன், நான் என்னை நினைத்துக் கவலைப் படவில்லை, அவனால் உங்களுக்கு ஏதவது நடந்து விடுமோ என்று அழுகிறேன் யா ரசூலுல்லாஹ்” என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கூறிய வாசகம் “ அபூபக்கரே நாம் இருவர் மட்டும் இருக்கிறோம் என்று எண்ண வேண்டாம் நம்மோடு அல்லாஹ்வும் இருக்கிறான் என்பது உமக்கு தெரியாதா?” என்று அபூபக்கரிடம்(ரலி) வினவி பின்பு, கையை உயர்த்தி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். உடனே சுராக்காவின் குதிரை கீழே சாய்ந்தது, அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சுராக்காவின் சூழ்ச்சியிலிருந்து நபி(ஸல்) அவர்களும், அபூபக்கர் (ரலி) அவர்களும் தப்பித்தார்கள் என்று புகாரி போன்ற பல ஹதீஸ் தொகுப்புகளில் நாம் காணலாம்.

மேல் சொன்ன சம்பவத்தில் நாம் கவனிக்கப்பட வேண்டியவை என்னவென்றால், தனக்கு ஆபத்து என்பதை நினைத்து கவலைப்படவில்லை, ஆனால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது என்று நினைத்து அழுதுள்ளார்கள் அபூபக்கர்(ரலி) அவர்கள் என்பதை அறியலாம்.

நபி(ஸல்) அவர்களைக் கொலை செய்தாலோ, அவர்களின் தலையைக் கொண்டு வந்தாலோ தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று கொடூர குரைஷி கூட்டம் திட்டம் தீட்டியிருந்தது.

இந்த உலகத்தில் மக்களுக்கு உபதேசம் செய்ய அல்லாஹ்வுக்கு பிறகு தகுதியானவர்கள் நபிமார்கள், நல்லுபதேசத்தின் சிகரம் நம்முடைய நபி(ஸல்) அவர்கள் ஒருநாள தம் தோழர்களுக்கு மார்க்க சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்கள், அப்போது நபி(ஸல்) அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்.

“அல்லாஹுத்தாலா, ஒரு அடியானிடத்தில் இரண்டைக் கொடுத்து அதில் எது வேண்டும் என்று கேட்டான், அந்த அடியார் அதில் ஒன்றைத் தேர்வு செய்து கொண்டார்”. 

அல்லாஹ் கேட்ட அந்த இரண்டு என்ன என்பதையும் நபி(ஸல்) பிறகு கூறினார்கள். “ அந்த அடியாரிடத்தில். இந்த உலகத்தில் உள்ள ஆட்சி அதிகாரம் வேண்டுமா? அல்லது அல்லாஹ்விடத்தில் உள்ள விலை மதிக்க முடியாத பொக்கிஷம் வேண்டுமா? என்று அல்லாஹ் கேட்டான், அதற்கு அந்த அடியார் அல்லாஹ்விடத்தில் உள்ள அந்த பொக்கிஷத்தை தேர்வு செய்து கொண்டார்.”

இதுதான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை கேட்ட அபூபக்கர் (ரலி) அவர்கள் சத்தம் போட்டு அந்த சபையில் அழ ஆரம்பித்தார்கள். உடனே சபையில் எழுந்து நின்று நபி(ஸல்) அவர்களைப் பார்த்து “ யா ரசூலுல்லாஹ் என்னுடைய தாயும், தந்தையும், என்னுடை மக்கள், என்னுடைய சொத்துகள் அனைத்தையும் தருகிறேன், எங்களை விட்டு நீங்கள் பிரிந்துவிடாதீர்கள் யா ரசூலுல்லாஹ்” என்று அழுது கொண்டே சொன்னார்கள். அந்த சபையில் இருந்த சஹாபாக்கள் எல்லோரும் இந்த மூத்த சஹாபிக்கு என்ன ஆனது. அப்படி என்ன அழும்படி நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று சபையில் உள்ள எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

அபூபக்கர்(ரலி) அவர்கள் ஏன் அழுதார்கள் என்று நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். தாம் இவ்வுலகை விட்டுப் பிரியப்போகும் சூசகமான செய்தியை நம்முடைய மூத்த தோழர் புரிந்துவிட்டு அழுகிறார் என்பது நபி(ஸல்) அவர்களுக்கு புரிந்துவிட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். "அபூ பக்கரே! அழ வேண்டாம்! நட்பின் மூலமும் செல்வத்தின் மூலமும் மனிதர்களிலேயே எனக்குப் பேருதவியாக இருந்தவர் அபூபக்ரு தான். என் உம்மத்தில் யாரையேனும் நான் உற்ற நண்பராக ஏற்றுக் கொள்வதென்றால் அபூபக்ரையே ஏற்றிருப்பேன். என்றாலும் இஸ்லாம் என்ற அடிப்படையிலான சகோதரத்துவமும் நேசமும்தான் (இஸ்லாத்தில்) உண்டு. பள்ளியில் (என் இல்லத்திற்கு வருவதற்காக) உள்ள அபூபக்கரின் வாசல் தவிர ஏனைய வாசல்கள் அடைக்கப்பட வேண்டும்." என்று அபூபக்கருக்கு ஆறுதல் கூறினார்கள் என்பதை புகாரி போன்ற ஹதீஸ் தொகுப்புகளில் காணலாம்.

மேற்சொன்ன இரண்டு சம்பவங்களின் மூலம் ஏன் அபூபக்கர்(ரலி) அழுதார்கள் என்பதை இங்கு நாம் சிந்திக்க வேண்டும்.

சிறுவயதிலிருந்தே நம்முடைய தோழராக இருந்தவர்கள், நம்முடைய ஆருயிர் தோழர், நம்முடைய மருமகன், உலகில் எல்லா அந்தஸ்துகளையும் பெற்ற ஓர் உத்தமராக வாழ்ந்து வரும் நம்முடைய உடன் பிறவா சகோதரர், நம்முடைய மருமகன், நம் மேல் பாசம், நேசம், பிரியம் கொண்ட அல்லாஹ்வின் தூதரர் நம்மை விட்டு பிரியப் போகிறார்களே என்று நினைத்து அபூபக்கர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் சொன்ன அந்த வாசகத்தைக் கேட்டு அழுதார்கள் என்றால், நபி(ஸல்) அவர்கள் மேல் எந்த அளவுக்கு அபூபக்கர்(ரலி) அவர்கள் பாசம் வைத்துள்ளார்கள் என்பதை நாம் உணரலாம்.

இது போன்ற சம்பவங்களைப் படித்து அந்த சத்திய சஹாப்பாக்கள் நம்முடைய உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்களின் மேல் பாசம் வைத்ததைப் போல் நாமும் பாசம் வைக்க தவறிவிட்டோமே என்று என்றைக்காவது அழுதிருக்கிறோமா?

அபூபக்கர்(ரலி) உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி), ஆயிசா(ரலி), ஹதீஜா(ரலி), பிலால்(ரலி) போன்ற சஹாபாக்களுக்கு நபி(ஸல்) அவர்களோடு ஒன்றாக இருந்து வாழ்ந்தார்களே, அந்த பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லையே என்று என்றைக்காவது நினைத்து அழுதிருக்கிறோமா?

ஹிஜ்ரத் சம்பவங்களை ஏதோ சாதாரண சம்பவங்களைப் போன்று பயான்களில் கேட்கிறோம், ஹதீஸ் தொகுப்புகளில் வாசிக்கிறோம், 3 கிலோமீட்டர் தூரமுள்ள ஒர் இடத்துக்கு அவசரமாகச் சென்று வரவேண்டும், வாகனப் போக்குவரத்து இல்லை, கால் நடையாக நடந்து சென்றடைய வேண்டிய இடத்தை அடைகிறோம். கொஞ்சம் நமக்கு கலைப்பு ஏற்பட்டு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும், நம்முடைய தூதரர், அருமை சத்திய சஹாபாக்கள் பல நூறு கிலோமிட்டர் தூரங்களை கால் நடையாகக் கடந்து ஹிஜ்ரத்து செய்து இந்த இஸ்லாத்தை நமக்கு எடுத்துரைத்துள்ளார்களே என்று என்றைக்காவது நினைத்து அந்த கண்ணியமிக்கவர்களுக்காக கண்ணீர் சிந்தி துஆ செய்திருப்போமா?

கண்ணீர் சிந்தவேண்டும்...
அர்த்தத்தோடு  சிந்தவேண்டும்...

இந்த வார உறுதி மொழி:

இந்த இஸ்லாத்தை நம் அனைவருக்கும் எத்திவைத்த அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்காகவும், அனைத்து சத்திய சஹாபாக்களுக்கும், அவர்களைத் தொடர்ந்து இஸ்லாத்தை நம்மிடம் கொண்டுவந்த அத்தனை நல்லவர்களுகாகவும் நாம் ஒவ்வொரு நாளும் நம்முடைய ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பு அல்லாஹ்விடம் கையேந்தி து ஆ செய்வோமாக.

தொடரும் இன்ஷா அல்லாஹ்.
M தாஜுதீன்

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும்...! - தொடர் - 9 12

அதிரைநிருபர் பதிப்பகம் | May 29, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..


அறிவிப்பு : வியாழன் தோறும் வெளியாகி வந்த இந்த தொடர், இனி புதன் கிழமை தோறும் வெளிவரும் இன்ஷா அல்லாஹ் !

சென்ற வாரம் நபி(ஸல்) அவர்கள் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள், குறிப்பாக பசியின் வேதனையிலும் கூட அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அழுதார்கள் என்பதையும், அவர்களும் அவர்களோடு வாழ்ந்த தோழர்களும் எவ்வளவு எளிமையான வாழ்வு வாழ்ந்துள்ளார்கள் என்பதையும் இரண்டு சம்பவங்களின் மூலம் அறிந்தோம். இந்த வாரம் நபி(ஸல்) அவர்கள் தம்முடைய உம்மத்தாகிய நம்மேல் எவ்வளவு அக்கறை வைத்து அழுதுள்ளார்கள் என்பதைப் பார்க்கலாம்.

அகிலத்தின் அருட்கொடையாம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை என்னுடைய சமுதாயம் என்னுடைய சமுதாயம் என்று சுஜூதில் விழுந்து அழுதுகொண்டே இருந்தார்கள்.

(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர்; அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீதான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்” (என்றும் கூறுவார்). குர்ஆன் (5:118)

மேலே குறிப்பிட்ட இறைவசனம், ஈசா(அலை) அவர்கள் அல்லாஹ்விடம் முறையிட்ட சம்பவம். ஈசாவே நீதான் உன் தாயையும் வணங்க கட்டளை பிறப்பித்தாயா? என்று அல்லாஹ் கேட்பான், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து (பார்க்க: திருக்குர்ஆன் 5:116 மற்றும் 5:117) மேல் சொன்ன பிரார்த்தனையை (5:118) செய்தார்கள். இந்த இறைவசனத்தை ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் இஷா தொழுகைக்குப் பிறகு ஆரம்பித்து தஹஜ்ஜத்து தொழுகை வரை சுஜூதில் விழுந்து அழது கொண்டே இருந்தார்கள். அப்போது அல்லாஹு தன்னுடைய வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அழைத்து அந்த முஹம்மதுக்கு என்ன ஆயிற்று ஏன் இவர் இப்படி அழுகிறார்கள் என்று கேட்டு வரும்படி கட்டளையிடுகிறான்.

ஜிப்ரீல் நபி(ஸல்) அவர்களிடம் வந்து கேட்கிறார்கள், “என்ன உங்கள் பிரச்சினை?” நபி(ஸல்) அவர்கள் அழுதுகொண்டே “எனது உம்மத், எனது உம்மத், மறுமையில் எனது சமுதாயத்தின் நிலை என்ன என்பது எனக்கு தெரிந்தாக வேண்டும்” என்று ஜிப்ரிலிடம் கேட்டார்கள். உடனே ஜிப்ரீல் அல்லாஹ்விடம் இந்த செய்தியைச் சொல்ல, அல்லாஹ்  'ஓ ஜிப்ரீல்...! முஹம்மதிடம் சென்று இவ்வாறு கூறுங்கள். உமது உம்மத்தின் விஷயத்தில் நீர் திருப்தியுறும் வண்ணம் அல்லாஹ் நடந்து கொள்வான். நீர் கவலையடையும் வண்ணம் ஒருபோதும் நடக்க மாட்டான்' என்று ஜிப்ரீல் (அலை)கூறிய பிறகே நபி(ஸல்) அவர்கள் தம்முடைய அழுகையை நிறுத்தினார்கள் என்று நாம் ஹதீஸ்களில் (முஸ்லீம்) பார்க்கிறோம்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய சமுதாயமான இந்த உம்மத் மீது எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கின்றார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்த சமுதாயத்திற்கு அல்லாஹ் வேதனைகளைத் தந்து விடுவானோ என்ற அச்சம், மற்ற சமுதாயங்களை அழித்தது போன்று இந்த சமுதாயத்தையும் அழித்து விடுவானோ என்ற பயம், என் இறைவா....! எனது சமூகத்திற்கு நீ கருணை புரிவாயாக என்ற பரிவு ஆகிய அனைத்தும், 'என் உம்மத்....! என் உம்மத்....! என்ற பெருமானாரின் அழுகை நமக்கு உணர்த்துகின்றது.

அந்த ஆருயிர் நபி (ஸல்) அவர்கள் நிச்சயமாக நம்மீது அளப்பரிய அன்பு கொண்டவர்களாகவே இருந்தார்கள். ஆகவேதான் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். '(பாருங்கள்!) உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்களுடைய வெற்றியில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்கள் மீது அதிகப்பரிவும், கருணையும் உடையவராகவும் இருக்கின்றார்'. (9:128).

மற்றொரு நாள் உஹத்தில் மரணமடைந்த ஷஹீத்களுக்கு பிரார்த்தனை செய்ய சென்ற போது கட்டுப்படுத்த முடியாமல் அழுகின்றார்கள் பெருமானார் (ஸல்). 'இறைத்தூதரே! ஏன் அழுகின்றீர்கள்?' என்று தோழர்கள் கேட்க, 'எனது சகோதரர்களை நினைத்து அழுகிறேன்' என்று கூறினார்கள். 'நாங்கள் தங்களது சகோதரர்கள் இல்லையா...?' என்று தோழர்கள் கேட்கவும், 'இல்லை, நீங்கள் எனது தோழர்கள். எனது சகோதரர்கள் எனக்குப் பின்னால் வருபவர்கள். என்னைப் பார்க்காமலேயே என் மீது ஈமான் கொண்டவர்கள்' என்று கூறி அழுதுள்ளார்கள் என்பதை அஹமது என்ற ஹதீஸ் தொகுப்பில் பார்க்கலாம். அந்த இரக்கத்தின் சிகரம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தன்னோடு வாழ்ந்த மக்களை தோழர்கள் என்றும், தன்னை காணாத நம்மை சகோதரர்கள் என்றும் சொல்லி நமக்காக அழுதுள்ளார்கள். 

பத்ரு யுத்தம் பற்றி நாம் அனைவரும் தெரிந்திருந்தாலும் ஒவ்வொரு முஸ்லீமும் பத்ரு போரின் நிகழ்வுகள் அனைத்தையும் ஞாபகப்படுத்துவதன் மூலம் நம்முடைய தக்வாவை நிச்சயம் அதிகரிக்கும். எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் காலத்தில் தாமே சென்று செய்த யுத்தங்களில் மிக முக்கியமானது பத்ரு யுத்தமாகும். இதுவே இஸ்லாத்தின் வெற்றிக்கும் ,இஸ்லாம் அழிக்கப்படாமல் பரவுவதற்கும், முன்னேற்றத்திற்கும் மக்களின் ஊக்கத்திற்கும் வீரத்திற்கும் வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பத்ருப் போர் நடைபெறப்போகும் அந்த இரவு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் அழுது துஆ செய்தார்கள். யா அல்லாஹ் இந்த போரில் நாங்கள் தோற்றால் உன்னை இந்த பூமியில் வணங்க ஆள் இருக்காது, ஆகவே எங்களுக்கு வெற்றியைத் தருவாயாக என்று தன்னுடைய மேல் ஆடை கீழே விழுவது கூட தெரியாமல் அழுது அழுது துஆ செய்தார்கள். பின்னர் அபூபக்கர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் “அல்லாஹ் நம்மை கைவிட மாட்டான் யா ரசூலுல்லாஹ் உங்கள் அழுகையை நிறுத்துங்கள்” என்று ஆறுதல் கூறினார்கள் அல்லாஹ் நபி(ஸல்) அவர்களின் பிரார்த்தனையை ஏற்று வாக்குறுதி கொடுத்து மிகப்பெரிய வெற்றியையும் பத்ரில் தந்தான் என்ற வரலாற்று செய்தியை புகாரியில் நாம் காணலாம்.

அந்த பத்ருக்களத்தில் நபி(ஸல்) அவர்கள் அழுது அழுது செய்த பிரார்த்தனையால் இன்று இறைவனை மட்டுமே வணங்கும் கண்ணியமான மக்களாக வாழ்ந்துவருகிறோம் என்பதை நாம் உணரலாம்.

தம்மோடு வாழ்ந்த மக்களை நேசித்துள்ளார்கள், அவர்களின்  இறந்த பின்பு அவர்களின் மைய்யவாடிக்கெல்லாம் சென்று பிரார்த்தனை செய்தார்கள், தன்னை பார்க்காத மக்களை இறக்கத்துடன் சகோதர பாசத்துடன் நேசித்துள்ளார்கள், தம்முடைய அனைத்து உம்மத்துகளையும் நேசித்து மறுமையின் வேதனையிலிருந்து அனைவரையும் காக்க, அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்து அழுதிருக்கிறார்கள் என்பதை இது போல் பல ஹதீஸ்களின் மூலம் அறியலாம்.

இது போன்று ஓராயிரம் நிகழ்வுகளைக் கூறிக்கொண்டே செல்லலாம். அத்தனையும் அந்த உத்தம நபி முஹம்மது (ஸல்) அவர்கள் நம் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடுகளே....! அந்த அன்பின் உச்சநிலை தான் மேலே கூறப்பட்ட அண்ணலாரின் அழுகையும், என் உம்மத்...என் உம்மத்...என்ற இறைஞ்சுதலும்.

நம்மீது அளவிலா பாசம் வைத்த அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்காக நாம் என்ன கைமாறு செய்யப் போகிறோம்?

24 மணிநேரம் இருக்கும் ஒரு நாளில் 1 நிமிடமாவது அண்ணல் நபி(ஸல்) அவர்கள், அவர்களின் உம்மத்தான நம்மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்பதை நினைத்து அழுதிருக்கிறோமா அவர்களுக்காக தொழுகையில் கேட்கும் துஆ தவிர்த்து, பிற நேரங்களில் பிரார்த்தனை செய்திருக்கிறோமா?

அண்ணல் எங்கள் ஆருயிர் நபி(ஸல்) அவர்கள், அனைத்துத் துறைகளிலும் அவர்களே எங்களுக்கு முன்மாதிரி என்று வாய் வார்த்தைகளால் மட்டும் கூறி, அரசியல் வியாபாரம், கொடுக்கல் வாங்கல் என இன்னபிற துறைகளில் வேறு யாரையோ பின்பற்றுகிறோமே... அவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு இதுதானா...?

உறுதி மொழி:

நம்மீது இரக்கம் கொண்ட அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்களை வெறும் வாயளலவில் நேசிக்காமல், மனதார நேசிப்போம். அவர்கள் இஸ்லாத்திற்காக செய்த தியாகங்களை நினைத்து கண்ணீர் சிந்துவோம். அவர்கள் காட்டித் தந்த வழியை மட்டுமே பின்பற்றுவோம். அவர்களுக்காக ஐவேளையை தொழுகைக்கான பாங்குக்கு பிறகு வசீலா என்ற உயர்ந்த அந்தஸ்தை எங்கள் தலைவர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கு என்ற பாங்கு துஆவை ஓதுவோம்.
தொடரும் இன்ஷா அல்லாஹ் !
M.தாஜுதீன்

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் - தொடர் - 6 8

அதிரைநிருபர் பதிப்பகம் | May 09, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

திருக்குர்ஆனோடு சத்திய சஹாபாக்களில் சிலர் எப்படி தங்களை மிக நெருக்கமாக்கி கொண்டார்கள் என்று இதற்கு முந்தைய பதிவில் பார்த்தோம். இந்த தொடரில் நபி(ஸல்) அவர்கள் தங்களுக்கு கஷ்டங்கள் ஏற்பட்டிருக்கும் போது அழுதுள்ளார்கள், இதோ ஒரு சில சந்தர்பங்கள் நாம் படிப்பினை பெறுவதற்காக.

சோதனைகள் மற்றும் மனநெருக்கடி ஏற்படும் சந்தர்ப்பத்தில் ஒருவர் அழுதார் என்றால் அவருடைய மனப்பாரம் குறைகிறது என்பது நம் எல்லோராலும், ஏற்றுக் கொள்ளப்பட்ட நிதர்சனம். போர்முனையின் பேரணியில் புன்னகை மன்னர்! வீரத்தின் விளைநிலம் வேந்தர்! நபி (ஸல்) அவர்களும் தனக்கு சோதனைகள் மற்றும் மனநெருக்கடி ஏற்படும் போது அழுதுள்ளார்கள் என்பதை நாம் பல ஹதீஸ் தொகுப்புகளில் காண முடிகிறது.

நபி(ஸல்) அவர்களுக்கு ஆண் வாரிசே இல்லை என்று எல்லோரும் ஏளனமாக பேசிய ஓர் காலகட்டத்தில் அல்லாஹ் அவர்களுக்கு ஒரு மகனை கொடுத்தான், அவர்களின் அருமை மகனுக்கு இபுறாஹீம்(ரலி) என்று  ஏகத்துவ கொள்கையின் தந்தை அவர்களின் அழகிய பெயரை சூட்டியிருந்தார்கள். 

அனஸ்(ரலி) அறிவித்தார்கள். 

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (அவர்களின் மகன் இப்ராஹீம் வளர்ந்து வந்த) அபூ ஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவராவார். நபி(ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி(ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக்கண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! தாங்களா (அழுகிறீர்கள்)?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவ்ஃபின் மகனே! நிச்சயமாக இது கருணையாகும்" என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்து அழுதார்கள். பிறகு, 'கண்கள் நீரைச் சொரிகின்றன் உள்ளம் வாடிக் கொண்டிருக்கிறது; எனினும், இறைவன் விரும்பாத எந்த வார்த்தையையும் நாங்கள் கூற மாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உன்னுடைய பிரிவால் அதிகக் கவலைப்படுகிறோம்" என்றார்கள். புகாரி 1303.  Volume :2 Book :23

உசாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்கள். 

நபி(ஸல்) அவர்களின் ஒரு புதல்வியாரின் மகன், இறக்கும் தருவாயில் இருந்தார். எனவே, நபி(ஸல்) அவர்கள் தம்மிடம் வந்து சேரும்படி அந்தப் புதல்வியார் சொல்லி அனுப்பினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் எடுத்துக் கொண்டதும் கொடுத்ததும் அவனுக்கே உரியதாகும். ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, பொறுமையைக் கைக்கொள்வீராக நன்மையை எதிர்பார்ப்பீராக' என்று சொல்லியனுப்பினார்கள். (மீண்டும்) அவர் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் (கட்டாயம் தம்மிடம் வர வேண்டுமெனக்) கூறியனுப்பினார். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் புதல்வியின் வீட்டுக்குச் செல்ல) எழுந்தார்கள். நானும், முஆத் இப்னு ஜபர்(ரலி), உபை இப்னு கஅப்(ரலி), உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) ஆகியோரும் அவர்களுடன் எழுந்தோம். நாங்கள் (வீட்டுக்குள்) நுழைந்தவுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அந்தச் சிறுவரைக் கொடுத்தார்கள். அந்தச் சிறுவரின் மூச்சு (சுவாசிக்க முடியாமல்) நெஞ்சுக்குள் திணறிக் கொண்டிருந்தது. 

அது தோல் துருத்தியைப் போன்று (ஏறி இறங்கிக் கொண்டு) இருந்தது என்று அறிவிப்பாளர் கூறினார்கள் என நான் (அபூ உஸ்மான் அந்நஹ்தீ) எண்ணுகிறேன். 

(இதைக் கண்ணுற்ற) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழுதார்கள். அப்போது (அங்கிருந்த) ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்கள், '(இறைத்தூதர் அவர்களே!) நீங்கள் அழுகின்றீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்' என்றார்கள். புகாரி: 7448. Volume :7 Book :97

ஆண் பிள்ளையானாலும் பெண் பிள்ளைகளானாலும் சிறுபிள்ளைகள் என்றாலே ஏந்தல் நபி(ஸல்) அவர்களுக்கு அவ்வளவு பிரியம் என்பதை பல ஹதீஸ்களில் படித்திருக்கிறோம். (நபிமணியும் நகைச்சுவையும் என்ற தொடரில் சகோதரர் இக்பால் M ஸாலிஹ் அவர்கள் எழுதிய இந்த பதிவை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள் http://adirainirubar.blogspot.in/2013/03/blog-post_14.html நபி(ஸல்) அவர்கள் சிறு பிள்ளைகள் மேல் எவ்வளவு பாசம் வைத்துள்ளார்கள் என்று). 

மேற் சொன்ன இரண்டு சம்பவங்களில் பாசத்திற்குறிய அருமை மகனார் இபுறாஹீம்(ரலி) அவர்களின் மரணத் தருவாயில், நபி(ஸல்) அவர்களுக்கு கடுமையான கவலை ஏற்படுகிறது. தன்னுடைய பாசத்திற்குரிய மகன், ஒரே ஒரு ஆண் குழந்தை, அன்போடு நேசம் காட்டி வளர்த்து வந்த தன்னுடைய அருமை மகனார் இறந்த போதும், தம்முடைய புதல்வியின் மகன் ஒருவர் இறந்தபோதும் நபி(ஸல்) அவர்களின் மனதிற்கு மிகப்பெரும் பாரம் ஏற்பட்டு அல்லாஹ்வுடைய இந்த நாட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தும்கூட நபி(ஸல்) அவர்கள் அழுதுள்ளார்கள் என்று அறிய முடிகிறது. அழுத நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய “குழந்தை மீது தான் வைத்திருந்த பாசம் என்னை அழ வைக்கிறது” என்று கூறிய நபி(ஸல்) அவர்கள் என்னதான் கஷ்டங்கள் ஏற்பட்டாலும் “நாங்கள் அல்லாஹ்வுக்கு விரும்பாத வார்த்தைகள் பேசமட்டோம்”, மேலும் 'அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்'  என்றும் கூறினார்கள் என்பதையும் அறிய முடிகிறது.

அழுவதை அனுமதித்துள்ள நபி(ஸல்) அவர்கள், இன்னும் பிற ஹதீஸ் தொகுப்புகளில் வாய்விட்டு அழுவதையும், ஓலமிடுவதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்பதை காணலாம்.

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள். 

ஸஅத் இப்னு உபாதா(ரலி) நோயுற்றபோது நபி(ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஆகியோரோடு நோய் விசாரிக்கச் சென்றார்கள். வீட்டில் நுழைந்தபோது (ஸஅத் இப்னு உபாதாவின்) குடும்பத்தினர் அவரைச் சூழ்ந்திருப்பதைக் கண்டதும், 'என்ன? இறந்துவிட்டாரா?' எனக் கேட்டார்கள். 'இல்லை; இறைத்தூதர் அவர்களே!' என்றனர். நபி(ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்களின் அழுகையைக் கண்ட மக்களும் அழத் தொடங்கினர். பின் நபி(ஸல்) அவர்கள், '(மக்களே!) நீங்கள் (செவி சாய்த்துக்) கேட்க மாட்டீர்களா? நிச்சயமாகக் கண்கள் அழுவதாலும் உள்ளம் கவலை கொள்வதாலும் அல்லாஹ் தண்டிப்பதில்லை - பின்பு, தம் நாவின் பால் சைகை செய்து எனினும் இதன் காரணமாகத்தான் தண்டனையோ அருளோ வழங்குகிறான். நிச்சயமாகக் குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மய்யித் வேதனை செய்யப்படுகிறது" என்று கூறினார்கள். 

ஒப்பாரி வைப்பவர்களை உமர்(ரலி) கண்டால் கம்பினால் அடிப்பார்; கல்லெறிவார். இன்னும் மண்வாரி வீசவும் செய்வார்.  புகாரி: 1304 Volume :2 Book :23

ஓப்பாரி வைப்பதை நபி(ஸல்) வன்மையாக கண்டித்துள்ளார்கள், நபித்தோழர் உமர்(ரலி) அவர்களும் ஒப்பாரி வைப்பவர்களிடம் கடினமாக நடந்துள்ளர்கள். மேலும் ஒருவர் இறந்துவிட்டால் ஒப்பாரி வைத்து ஓலமிடுவது இறந்த மய்யித்துக்கு நாம் செய்யும் துரோகம் என்பதை மேலே குறிப்பிட்ட ஹதீஸீன் மூலம் அறியலாம்.

நம்முடைய அழுகைகள் எப்படி உள்ளன என்பதை மேற்சொன்ன வரலாற்று சம்பவங்களின் மூலம் சீர்த்துக்கி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நம் வீடுகளில் எத்தனையோ இறப்புகளை சந்தித்திருப்போம், நாம் நபி(ஸல்) அவர்கள் அழுதது போல் அழுதிருக்கிறோமா? 

அழுவதாக இருந்தாலும் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் அழுவோம்.

இந்த வார உறுதி மொழி:

என்ன கஷ்டமோ, சோதனையோ, இது அல்லாஹ்வுடைய நாட்டம் என்று எண்ணி, எங்கள் தூதர் காட்டித் தந்த வழியில் மட்டுமே அழுது கண்ணீர் சிந்துவோம்,

'யா அல்லாஹ் எங்கள் மீது நீ இரக்கம் காட்டுவாயாக. உனக்காக மட்டுமே அஞ்சி அழும் நன்மக்களாக எங்களை ஆக்குவாயாக.

M தாஜுதீன்

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் - தொடர் - 5 9

அதிரைநிருபர் பதிப்பகம் | May 02, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

சென்ற வாரத் தொடரில் நபி(ஸல்) அவர்களின் வாழ்நாட்களில் பேருதவியாக இருந்த அபூதாலிப், அவர்கள் மரணிக்கும் நிலையில் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்ற கலிமாவை சொல்ல மறுத்தார். இதற்காக நபி(ஸல்) அவர்கள் அழுதார்கள். இணை வைப்பாளர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்பதை அல்லாஹ் அல்குர்ஆன் (9:113) வசனத்தின் மூலம் உறுதி செய்தான் என்பதுடன் சேர்த்து அழுத்தமான மற்றொரு வரலாற்று சம்வத்தையும் பார்த்தோம்.

குர்ஆனை ஒரு மனிதன் ஓதாவிட்டால் அவன் வாழ்வில் ஏற்படுகிற இழப்பு மிகப்பெரியது. இந்த இழப்புக்கு சொந்தக்காரர்களாக நாம் இருந்தால் இனியாவது நாம் நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும். 

நபி(ஸல்) அவர்கள் இறுதியாக தொழுகையில் ஓதிய அத்தியாத்தை நினைத்து அழுதுள்ளார்கள் அவர்களோடு வாழ்ந்த சத்திய சஹாபாக்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்.

நான் 'வல்முர்ஸலாதி உர்பன்' என்ற அத்தியாயத்தை ஓதும்போது அதனைச் செவியுற்ற (என் தாயார்) உம்முல் ஃபழ்லு(ரலி), 'அருமை மகனே! அல்லாஹ்வின் மீது ஆணையாக, மக்ரிப் தொழுகையில் நபி(ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தை ஓதியதுதான் நான் அவர்களிடமிருந்து கடைசியாக செவியுற்றதாகும். நீ அதை ஓதியதன் மூலம் எனக்கு நினைவுபடுத்திவிட்டாய்' என்று கூறினார். புகாரி 763, volume 1 book 10.

மற்றுமொரு வரலாற்று தொகுப்பில், இப்னு அப்பாஸ் அவர்கள் அறிவிக்கிறார்கள் நான் வல்முர்ஸலாதி உர்பன் என்ற அத்தியாத்தை ஓதும்போது என்னுடைய தாய் உம்முல் ஃபழ்லு(ரழி) அவர்கள் அழுதுவிட்டார்கள், ஏன் தாயே அழுகிறீர்கள் என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன்பு இறுதியாக அவர்கள் ஒரு மகரிப் தொழுகையில் ஓதியது அந்த வசனம், நீங்கள் அந்த வசனத்தை ஓதியவுடன் எனக்கு அந்த சம்வத்தை நீ ஞாபகத்திற்கு வந்துவிட்டது, அதை நினைத்து அழுகிறேன் அருமை மகனே என்று கூறினார்கள் என்பதை நாம் அறிய முடிகிறது. நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் என்ன திருக்குர்ஆன் வசனங்கள் ஓதினார்கள் என்பதை நினைவில் வைத்திருந்தார்கள் அந்த உத்தம நபியின் உன்னத சஹாபி பெண்கள் என்பதை எண்ணும் போது திருக்குர்ஆனோடு எந்த அளவுக்கு நெருக்கமாக இருந்துள்ளார்கள் என்பதை நாம் உணரலாம்.

நபி(ஸல்) அவர்களுடைய சபையில் வஹி எழுதுவதற்காக உள்ள தோழர்களில் உபை இப்னு கஃஅப் என்கிற நபி தோழர் மிகவும் முக்கியமானவர். பின்வரும் சம்பவத்தைப் படித்துப் பாருங்கள் இவ்வுலகில் யாருக்கும் கிடைக்காத பாக்கியத்தை அல்லாஹ் அந்த நபித் தோழருக்கு கொடுத்துள்ளான்.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்கள், நபி(ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம், 'உங்களுக்கு 'லம் யகுனில்லஃதீன கஃபரூ' எனும் (98 வது) அத்தியாயத்தை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான்' என்று கூறினார்கள். உபை இப்னு கஃஅப்(ரலி), 'அல்லாஹ் என் பெயரைச் குறிப்பிட்டா (அப்படிச்) சொன்னான்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்று பதிலளிக்க, (ஆனந்த மிகுதியால்) அப்போது உபை இப்னு கஃஅப்(ரலி)அழுதார்கள். புகாரி: 4959 - Volume :5 Book :65

நபி(ஸல்) அவர்களுடைய சபையில் அவர்கள் முன்னால், திருக்குர் ஆனை ஓதுவதே மிகப்பெரிய பாக்கியம், அதைவிட மிகப்பெரிய பாக்கியம், இதற்கும் மேலாக அல்லாஹ், குறிப்பிட்ட என் பெயரை சொல்லி ஓத கட்டளையிடுகிறான்  என்பதை கேட்டு உத்தம நபியின் உன்னத தோழர் உபை இப்னு கஃஅப் (ரழி) அவர்கள் தேம்பி தேம்பி ஆனந்தத்தில் அழுதுள்ளார்கள் என்றால், திருக்குர்ஆனோடு அந்த மக்களுக்கு இருந்த தொடர்பு எவ்வளவு நெருக்கமானது என்பதை நாம் உணரலாம்.

நபி(ஸல்) அவர்கள் தம்முடைய இறுதி காலங்களில் கடும் நோயினால் அவதியுற்றார்கள், தொழுகைக்குக்கூட செல்ல முடியாத நிலை, இஷா தொழுகை நேரம் நம்மால் எழுந்து செல்ல முடியவில்லை, நின்றால் மயக்கம் வந்துவிடுகிற நிலைமை அவர்களுக்கு. உடனே தம் அருமை மனைவி ஆயிசா அவர்களை அழைத்து உன் தந்தை அபூபக்கரை இமாமாக நின்று தொழ வைக்கச் சொல் என்றார்கள். 

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள் : நபி(ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் நோய்வாய்ப் பட்டிருந்தபோது பிலால்(ரலி) வந்து தொழுகை பற்றி அவர்களிடம் அறிவித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அபூ பக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்" என்றார்கள். அதற்கு நான் அவர் இளகிய மனம் படைத்தவர். உங்கள் இடத்தில் அவர் நின்றால அழுதுவிடுவார். அவரால் ஓத இயலாது என்று கூறினேன். 'அபூ பக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்" என்று மீண்டும் கூறினார்கள். நானும் முன் போன்றே கூறினேன். நானும் முன் போன்றே கூறினேன். மூன்றாவது அல்லது நான்காவது முறை 'நீங்கள் யூஸுஃப் நபியின்தோழியராக இருக்கிறீர்கள். அபூ பக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்" என்றனர். (அதன்பின்னர்) அபூ பக்ர் தொழுகை நடத்தினார். நபி(ஸல்) அவர்கள் கால்கள் தரையில் இழுபடுமாறு இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியவகளாக (பள்ளிக்குச்) சென்றனர். அவர்களைக் கண்ட அபூ பக்ர்(ரலி) பின்வாங்க முயன்றார்கள். தொழுகையை நடத்துமாறு அவருக்கு நபி(ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள். அபூ பக்ர்(ரலி)யின் வலப்புறமாக நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்தனர். நபி(ஸல்) அவர்கள் கூறும் தக்பீரை அபூ பக்ர்(ரலி) மற்றவர்களுக்குக் கேட்கச் செய்தார்கள்.  - புகாரி 712 Volume :1 Book :10

இங்கு நாம் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், அல்லாஹ்வுடைய ரசூல் நின்ற முசல்லாவில், அவர்கள் உயிரோடு இருக்கும் போது, பல கோடி நன்மைகள் பெற்று தரும் அந்த இமாமத்து செய்யும் பொறுப்புடன் மக்களுக்கு தொழுகை நடத்தும் ஒரு வாய்ப்பு தன்னுடைய தந்தை அபூபக்கர்(ரழி) அவர்களுக்கு கிடைத்திருக்கும் அந்த சந்தோசமான தருணத்தில், திருக்குர்ஆன் வசனங்களை ஓதினால் அழுதுவிடுவார்கள் யா ரசூலுல்லாஹ் என்று தன் தந்தை திருக்குர்ஆனோடு எப்படி தொடர்புடையவர்கள் என்று அபூபக்கர்(ரழி) அவர்களுக்கு நற்சான்றிதழ் அன்னை ஆயிசா(ரழி) அவர்களால் வழங்கப்பட்டுள்ளது என்பதை இந்த ஹதீஸின் மூலம் நாம் காணலாம்.

மேலே சொல்லப்பட்ட மூன்று சம்பவங்களிலிருந்து நாம் பெரும் படிப்பினைகள் ஏராளம்.

நம்மில் எத்தனை பேர் எனக்கு திருக்குர்ஆன் ஓதத்தெரியவில்லையே என்று அழுதிருக்கிறோம்?

என் தாய், தந்தை, பிள்ளைகள், மனைவி, சகோதரர்கள், சகோதரிகள், சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரில் பலருக்கு திருக்குர்ஆன் ஓதத் தெரிந்தும் ஓதுவதில்லையே அல்லது ஓதத்தெரியவில்லை என்று என்றைக்காவது வருத்தப்பட்டதுண்டா? அழுததுண்டா?

என் தாய், தந்தை, பிள்ளைகள், மனைவி, சகோதர்கள், சகோதரிகள், சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் திருக்குர்ஆனை ஓதினால் அழுவார்கள் என்று என்றைக்காவது அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை எதிர்பார்த்து இருந்திருக்கிறோமா?

திருக்குர்ஆனோடு நம்முடைய தொடர்பு எப்படி உள்ளது என்பதை என்றைக்காவது, இது போன்ற கண்ணீர் சம்வங்களை வைத்து ஒப்பீடு செய்திருக்கிறோமா?

வல் முர்ஸலாதி உர்பன் என்ற அத்தியாயம் ஓதக்கேட்டால், நபி(ஸல்) அவர்கள் இறுதியாக ஓதிய அத்தியாம் என்ற நினைப்பு நமக்கு வரவேண்டும்.

அல்லாஹ் தான் விரும்பிய நபித்தோழர் உபை இப்னு கஃஅப்(ரழி) அவர்களின் பெயரைச் சொல்லி 'லம் யகுனில்லஃதீன கஃபரூ' எனும் (98 வது) அத்தியாயத்தை ஓதச்சொல்லி நபியவர்களுக்கு கட்டளையிட்டானே, அது போல் ஸாலிஹீன்களாக,முத்தகீன்களாக வாழ்ந்தால் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களாக இருக்கலாமே என்று நினைத்து நாம் கண்ணீர் சிந்த வேண்டும்.

இந்த வார உறுதி மொழி:

திருக்குர்ஆனோடு நம்முடைய தொடர்பை நெருக்கமாக்கிக் கொள்ள வேண்டும். திருகுர்ஆனில் ஒரு பக்கமாவது பொருளுணர்ந்து அதன் வரலாற்று சம்வங்களுடன் படித்து, அவைகளை விளங்கி அல்லாஹ்வின் சக்தி, ஆற்றல், எச்சரிக்கை, கருணை இவைகளை எண்ணி ஒவ்வொரு நாளும் அவனின் பொருத்தத்தை மட்டுமே நாடி அழும் நன்மக்களாக நம்மை நாமே மாற்றிக்கொள்ள வேண்டும் இன்ஷா அல்லாஹ். இதற்கு அல்லாஹ் நம் எல்லோருக்கும் உதவி புரிவானாக.

M தாஜுதீன்

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் - தொடர் - 4 9

அதிரைநிருபர் பதிப்பகம் | April 25, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அல்லாஹ்வுக்கே எல்லா புகழும், சென்ற பதிவில் சகோதரர் தஸ்தகீர் (crown) சொனதுபோல் இந்தத் தொடர் நம் மனதில் உள்ள அழுக்கை நீக்கும் என்று நம்பலாம்.

அல்லாஹ்வுக்காவும், அவனின் தூதர்  முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்காகவும் கண்ணீர் சிந்திய மக்களின் வரலாறுகளை அதிகமதிகம் படித்து நாமெல்லாம் படிப்பினை பெற வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் தம் சிறு வயதில் தன் தந்தையை இழந்து, பிறகு தன் தாயையும் இழந்து, அனாதையாகி யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்பதற்காக ஆடு மேய்த்து, குரைசிகளிடம் காய்ந்த பேரித்தம்பழங்களுக்காக(உணவுக்காக) வேலைபார்த்து அப்துல் முத்தலீப் அவர்களுடன் 8 வயதில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அப்துல் முத்தலீப் அவர்களையும் இழந்து.  அந்த 8 வயது காலகட்டத்திலிருந்து அபூதாலிப் அவர்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் நபி(ஸல்) அவர்கள்.

தன்னுடைய பெரிய தந்தை அபூதாலிபுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அபூதாலிப் எல்லா உபகாரமும் நபி(ஸல்) அவர்களுக்கு செய்தார், நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும் போது எல்லாவிதமான உதவிகளும் செய்தார். ஆனால் தன்னுடைய மரண நேரத்தில் இஸ்லாத்தை தழுவாமல் இறந்துவிட்டார்.

அபூதாலிப் வாழ்நாளில் நபி(ஸல்) அவர்களுக்கு செய்த உபகாரம் நபி அவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. கலிமா சொல்லாமல் மரணிக்கப்போகிறாறே தன்னுடைய பெரிய தந்தை. லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையை மட்டும் சொன்னால் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காக மன்றாடுவேனே என் பெரிய தந்தையே என்று அழுது அழுது கெஞ்சிக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள் நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய பெரிய தந்தை அபூதாலிபின் மரண நேரத்தில்.

அந்த நேரத்தில் அல்லாஹ் பின் வரும் இறைவசனம் அல்லாஹ்விடமிருந்து இறங்கும் அளவுக்கு நபி(ஸல்) அவர்கள் அழுதார்கள் என்று (புகாரி 1360) ஹதீஸ் தொகுப்புகளில் காண்கிறோம்.

 مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَن يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَىٰ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ

முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல. அல் குர் ஆன் (9:113)

கலிமா சொல்லாமல் ஒருவர் மரணித்தால், அவர் எங்கு செல்வார் என்பதை அல்லாஹ் தன் தூதர்களுக்கு விளக்கியிருந்தான், அந்த கொடிய நிலை தன்னை வளர்த்து, பாசம் காட்டி, வாழ்வில் பேருதவியாக இருந்த தன்னுடைய பெரிய தந்தைக்கு வரப்போகிறதே என்று நினைத்து நினைத்து நபி(ஸல்) அவர்கள் அழுதுள்ளார்கள் என்பதை நாம் வரலாறுகளில் காணமுடிகிறது.

இது போல் மற்றுமொரு உருக்கமான சம்பவம் நம் இஸ்லாமிய வரலாற்றில் முத்திரை பதித்தவை.

மக்கா வெற்றிக்கு பிறகு நபித்தோழர்கள் ஆனந்தக் கண்ணீருடன் உற்சாகமாக இருந்த காலகட்டத்தில், நபி(ஸல்) அவர்களின் சபைக்கு வயது முதிர்ந்த ஒரு பெரியவரை இருவர் அழைத்து வருகிறார்கள். “யார் அந்த பெரியவர்?" என்று நபி(ஸல்) அவர்க கேட்டார்கள், அவர் அபூபக்கர்(ரலி) அவர்களின் தகப்பனார் என்று கூறப்பட்டது.

நம்முடைய நபி(ஸல்) அவர்கள் பண்பை பாருங்கள், அபூபக்கர் தன்னுடைய பாசமான மாமனார் அல்லவா, தன்னுடைய மூத்த தோழர் அல்லவா. அந்த முதியவர் அபூபக்கர்(ரலி) அவர்களின் தந்தையாவார்.

“இந்த வயது முதிர்ந்த முதியவரை இவ்வளவு சிரமப்பட்டு இங்கு ஏன் கொண்டுவந்தீர்கள், சொல்லியனுப்பிருந்தால் நான் அவர் இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்திருப்பேனே” என்று அபூபக்கர்(ரலி) அவர்களிடம் அன்பாக வினவினார்கள். 

“யா ரசூலுல்லாஹ் எனது தந்தைக்கு இஸ்லாத்தை சொல்லிக்கொடுங்கள்” என்று அபூபக்கர்(ரலி) சொன்னார்கள்.

உடனே நபி(ஸல்) அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களின் தந்தைக்கு இஸ்லாத்தை சொல்லிக்கொடுக்க, அவரும் இஸ்லாத்தை ஏற்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்து, நபி(ஸல்) அவர்களுடைய கையை நீட்ட சொல்லி தன்னுடைய கையை நபியவர்களின் கையின் மேல் வைத்தார்.

உடனே அபூபக்கர்(ரலி) அவர்கள் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தார்கள். “தந்தை இஸ்லாத்தை தழுவிய இந்த சந்தோசமான தருணத்தில் ஏன் அபூபக்கர்(ரலி) அவர்கள் அழுகிறார்கள்” என்று அருகில் இருந்த தோழர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. 

அப்போது அபூபக்கர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களை பார்த்து “ யா ரஸூலுல்லாஹ் நான் ஏன் அழுகிறேன் தெரியுமா? உங்களுடைய கைக்கு மேல் இப்போது என்னுடைய தந்தையுடைய கை இருக்கிறது இஸ்லாத்தை தழுவுவதற்காக, ஆனால் உங்களுடைய கைக்கு மேல் உங்களை வளர்த்து ஆளாக்கி, வாழ்நாட்களில் எல்லா வகையான உதவிகள் செய்த உங்கள் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களுடைய கை இருந்து, அதை பார்த்து உங்கள் கண்களில் ஆனந்த கண்ணீர் வருமே அதை பார்க்கிற வாய்ப்பு எனக்கு இல்லாமல் போயிவிட்டதை நினைத்து அழுகிறேன் யா ரஸூலுல்லாஹ், என்னுடைய தந்தை இஸ்லாத்தை தழுவுவதை காட்டிலும் உங்களுடைய பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் இஸ்லாத்தை தழுவியிருக்க வேண்டும் யா ரஸூலுல்லாஹ்” என்று சொன்னார்கள் அபூபக்கர்(ரழி) அவர்கள்.

நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் இஸ்லாத்தை தழுவியிருக்க வேண்டுமே என்று அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களும் அழுதிருக்கிறார்கள், ஆனால் எவ்வளவு தான் இஸ்லாத்திற்காக என்னற்ற உதவிகள் பல செய்தாலும் அல்லாஹ் இணைவைப்புடன் யார் மரணித்தாலும் அவர்களுக்கு நிரந்தர நரகம், அவர்களுக்காக நாம் பாவமன்னிப்பு கேட்பதை அல்லாஹ் தடுத்துள்ளான்.

மேல் சொன்ன வரலாற்று சம்பவங்களிலிருந்து நாம் படிப்பினைபெற வேண்டியது என்னவென்றால், அல்லாஹ் தான் மன்னிக்க மாட்டேன் என்று சொல்லும் பாவம், நபி(ஸல்) அவர்களாலேயே அவர்களை வளர்த்து ஆளாக்கி இஸ்லாத்திற்காகவும், நபி(ஸல்) அவர்களின் ஏகத்துவ பிரச்சாரத்திற்காகவும் எண்ணிலடங்கா உதவிகள் செய்த தன்னுடைய பெரிய தந்தை அபூதாலிப் அவர்களுக்கு மன்னிப்பு வாங்கி கொடுக்க முடியவில்லை என்ற நிலைக்கான காரணம் அல்லாஹ்வுக்கு அபூதாலிப் அவர்கள் இணைவைத்தது மட்டுமே.

நம்முடைய சொந்தங்கள் எத்தனையோ பேர் உயிரோடு இருக்கும்போது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றார்களே, அவர்களை அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் காரியங்களில் இருந்து மீட்டெடுப்பதற்காக என்றைக்காவது நாம் அல்லாஹ்விடம் அழுது துஆ செய்திருக்கிறோமா? 

இணைவைப்பில் ஈடுபடும், பெற்றோர்கள், பிள்ளைகள், சொந்தங்கள், நண்பர்களை அக்காரியங்களிலிருந்து விடுபட வைக்கும் வேலைகளை கவலையுடன் நாம் செய்திருக்கிறோமா? அதற்காக அல்லாஹ்விடம் இறைஞ்சி அழுதிருக்கிறோமா? 

நம்மோடு பாசமாக இருக்கும் சொந்தங்கள் அல்லாஹ் மன்னிக்கவே மாட்டேன் என்று சொல்லும் இணைவைப்பு பாவத்துடன் மரணித்தால் அவர்களுக்காக நாம் என்ன துஆ செய்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படாது என்பதற்கு மேல் சொன்ன குர் ஆன் வசனம் (9:113) சாட்சியாக உள்ளதே அதை நினைத்து அழுதிருக்கிறோமா?

நம்முடைய தாய், தந்தை, மனைவி, கணவர், பிள்ளைகள், சகோதர சகோதரிகள், சொந்தங்கள், நண்பர்கள் தொழாவிட்டால் அழுதிருக்கிறோமா?

நம்முடைய தாய், தந்தை, மனைவி, கணவர், பிள்ளைகள், சகோதர சகோதரிகள், சொந்தங்கள், நண்பர்கள் இணை வைப்போடு மரணித்தால், நரகத்தின் அடித்தட்டிற்கு தள்ளப்படுவார்களே என்று நினைத்து அழுதிருக்கிறோமா?

இந்த வார உறுதி மொழி:

இணைவைப்பு மவ்லிது மஜ்லிஸ் மற்றும் தர்கா போன்ற இடங்களுக்கு செல்லும் நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு நளினமான முறையில் இணைவைப்பினால் ஏற்படும் தீமையை எடுத்துரைப்போம், அவர்களை இணைவைப்பு காரியங்களிலிருந்து மீட்டெடுப்போம். இது நம் எல்லோருக்கும் இறைவனால் விதிக்கப்பட்ட கட்டளை.

வல்ல அல்லாஹ் அதற்காக நம் எல்லோருக்கும் துனை புரிவானாக.

M. தாஜுதீன்

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் - தொடர் - 3 11

அதிரைநிருபர் பதிப்பகம் | April 18, 2013 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அல்லாஹ்வுக்கே எல்லா புகழும், இதற்கு முந்தைய பதிவில் சகோதரர் இப்னு அப்துல் வாஹித் அவர்கள் பதிந்த கருத்தை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

“இது மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் என்றாலும் அது மிகையே”.

நிச்சயமாக அன்றைய நிகழ்வுகளோடு இன்றைய காலகட்டத்தின் நிகழ்வுகளையும் ஒப்பீடு செய்வது இயலாத ஒன்று என்றாலும், நாம் அனைவரும் படிப்பினை பெருவதற்கு மட்டுமே இத்தொடரில் முடிந்தவரை நன்கு அறியப்பட்ட சம்பவங்களை ஹதீஸ்களிலிருந்து தொகுத்தளிக்க முயற்சிக்கிறேன். இன்ஷா அல்லாஹ்.
இரண்டு வரலாற்று சம்பவங்களை ஹதீஸ் தொகுப்புகளிலிருந்து படிக்கும்போதும், மார்க்க சொற்பொழிவுகளில் கேட்கும் போதும் நிச்சயம் நம்முடைய உள்ளமும் உருகும். இதோ அந்த சம்பவங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்புக்குப் பின் அபூபக்கர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் ‘நம்மை உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்து வந்ததைப் போன்று நாமும் சந்தித்து வருவோம்’ என்று கூறினார்கள். அவ்வாரே உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் நாம் சென்ற போது அவர்கள் அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும் ‘ஏன் அழுகின்றீர்கள்? (நம்மிடம் இருப்பதைவிட) அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்கு சிறந்ததாயிற்றே’ என்று கேட்டார்கள்.

அதற்கு உம்மு அய்மன் (ரலி) அவர்கள் ‘ அல்லாஹ்விடம் இருப்பதே அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்கு சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழவில்லை. மாறாக (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்போடு) வானிலிருந்து இறைச் செய்தி (வஹி) வருவது நின்று விட்டதே! (அதற்காகத் தான் அழுகின்றேன்)’ என்று கூறி அவர்கள் இருவரையும் அழச் செய்துவிட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவருமே அழலாயினர். (அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்., நூல் : (முஸ்லிம் – 4839)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) மறைந்தவுடன் அவர்கள் மூலம் இறங்கி வந்த வேத வசனங்களும் முடிவுக்கு வந்துவிட்டனவே என்று வருந்தியிருக்கிறார்கள் உம்மு அய்மன் (ரலி) அவர்கள். குர்ஆனின் வசனங்கள் அவர்களுக்கு இறைவனுடனான உரையாடலாகவே இருந்திருக்கிறது. இதைக் கேட்டதும் அபூபக்ரும்(ரலி) உமரும்(ரலி) விம்மி அழ ஆரம்பித்து விட்டார்கள். குர்ஆனுடன் அந்த அளவிற்குப் பின்னிப் பிணைந்து இருந்த இதயங்கள் அவை.

உலக மக்களுக்கு முன்மாதிரி என்று அல்லாஹ் தன் இறைமறையில் கூறிய நம் உயிriனும் மேலான நபி (ஸல்) அவர்களை வளர்த்த தாய் உம்மு அய்மன்(ரலி) அவர்கள், வஹி இறங்குவது நின்று விட்டதே என்று அழுதுள்ளார்கள். அந்த மக்களுக்கும் இறைவசனத்திற்கும் இருந்த உயிரோட்டமான தொடர்பையும், ஆர்வத்தையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். என்றைக்காவது ஏதாவது ஒரு இறைவசனத்தை நினைத்து ஒரு துளி கண்ணிர் வடித்து அழுதிருக்கிறோமா? வாரம் ஒரு முறை அல்லது என்றாவது ஒரு முறை வீட்டில் யாசீன் சூராவை மாத்திரம் ஓதி, குர்ஆனுக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்புள்ளது எனக் கருதும் பெண்களுக்கு அகிலத்தின் அருட்கொடையான அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வளர்ப்புத் தாய் உம்மு அய்மன் (ரலி) அவர்களின் இந்த அழுகையில் மிகப் பெரும் படிப்பினையிருக்கின்றது.

வஹி நின்று விட்டதே என்று அழுத நபி தோழர் ஒருவர் உள்ளார், அவர் தான் அமீருல் முஃமினீன் அன்போடு முதன் முதலில் மக்களால் அழைக்கப்பட்டவர், அல்லாஹ் இவரின் நாவிலிருந்து பேசுகிறான் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்களால் பாராட்டி சீராட்டி சொல்லப்பட்ட தோழர் உமர் (ரலி) அவர்கள். இதோ அந்த வரலாற்று சம்பவம்.

அரஃபா தினத்தில் நபி (ஸல்) அவர்கள் சத்திய சஹாப்பாக்களுக்கு மத்தியில் வரலாற்று சிறப்பு மிக்க இறுதி பேருரை நிகழ்த்தினார்கள். அவர்களின் உரையில் பின் வரும் இறைவசனத்தைச் சுட்டிக்காtடினார்கள்.

"இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்" (குர் ஆன் 5:3)

இந்த வசனத்தைக் கேட்ட அனைத்து சஹாப்பாக்களும் கட்டி அனைத்து சந்தோசத்தில் ஒருவருக்கு ஒருவர் தங்களின் சந்தோசங்களை பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் உமர் (ரலி) அவர்கள் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்கள். உடன் இருந்த சில சஹாபாக்கள் உமர் (ரலி) அவர்களிடம் இஸ்லாத்தை அல்லாஹ் பரிபூரணமாக்கிவிட்டான் என்ற சந்தோசமான இந்த தருணத்தில் ஏன் உமரே அழுகிறீர்கள் என்று கேட்டதற்கு. அதற்கு உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ் என்ன சொல்லி இருக்கிறான் தெரியுமா? இன்று முதல் இஸ்லாத்தை பரிபூரணமாக்கி விட்டேன் என்று சொல்லுகிறான், இஸ்லாம் பரிபூரணமாகி விட்டதால் இனி வஹி வருமா? அதை நினைத்து அழுகிறேன் என்று சொல்லியவாறே உத்தம நபியின் உன்னத தோழர்  உமர் (ரலி) அழுதார்கள் என்று ஹதீஸ் தொகுப்புகளில் காண முடிகிறது.

உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் அமீருல் முஃமீனான அவர்கள் முன்னால் கேள்வி கேட்கக் கூட மக்கள் பயப்படுவார்கள், அந்த அளவுக்கு கடினமானவர்கள் உமர் (ரலி) அவர்கள். அல்லாஹ்வின் அந்த வசனத்தைச் செவியுற்று அழுதிருக்கிறார்கள் என்பதை மேலே குறிப்பிட்ட சம்பவங்களிலிருந்து நம்மால் அறியமுடிகிறது., திருக்குர்ஆன் வசனங்கள் எவ்வளவு கடின உள்ளமுடையவர்களையும் உருகச் செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

அல்லாஹ்வுடனான தங்களுடைய தொடர்பை இவ்விரு சம்பவங்களின் மூலம் அந்த தோழர்கள் வெளிப்படுத்தினார்கள் என்பதை நாம் அறியலாம்.

பிற்காலத்தில் நபி  (ஸல்)  அவர்களின் வளர்ப்புத் தாய், தாயிக்கு பின் தாய் உம்மு அய்மன் (ரலி) அவர்கள் உமர் (ரலி) கொல்லப்பட்ட செய்தி அறிந்து அழுதிருக்கிறார். அதைப்பற்றி அவரிடம் மக்கள் விசாரிக்க, “இன்று இஸ்லாம் பலவீனம் அடைந்துவிட்டது,” என்றார்கள் உம்மு அய்மன் (ரலி) அவர்கள் என்பதையும் ஹதீஸ் தொகுப்புகளில் காணமுடிகிறது.

அல்லாஹ்வின் வஹியான திருக்குர்ஆனை நாள் கணக்கில், வாரக் கணக்கில், மாதக் கணக்கில், வருடக்கணக்கில் ஓதாமல் ஏன் திருக்குர்ஆனை ஓதத்தெரியாமலே இருக்கிறோமே என்று எண்ணி என்றைக்காவது அழுதிருக்கிறோமா?

திருக்குர்ஆன் ஓதத் தெரியவில்லை என்றால் நம்முடைய தொழுகையை நிறைவான தொழுகையாகுமா?

சத்திய சஹாப்பாக்களின் கண்ணீர் வஹீ வருவது நின்று விட்டதே என்ற கவலையில் இருந்தது, ஆனால் இன்று நம்முடைய கண்ணீர்? படிப்பினை பெருவோம், சிந்திப்போம்..

இன்றைய உறுதி மொழி:

நாம் குர்ஆனின் ஒரு பக்கமாவது பொருளுணர்ந்து படித்து, அவைகளை விளங்கி அல்லாஹ்வின் சக்தி, ஆற்றல், எச்சரிக்கை, கருணை இவைகளை எண்ணி ஒவ்வொரு நாளும் அவனின் பொருத்தத்தை மட்டுமே நாடி அழும் நன்மக்களாக நம்மை நாமே மாற்றிக்கொள்ள வேண்டும் இன்ஷா அல்லாஹ். இதற்கு அல்லாஹ் நம் எல்லோருக்கும் உதவி புரிவானாக.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...
M தாஜுதீன்

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் - தொடர் - 2 17

அதிரைநிருபர் பதிப்பகம் | April 11, 2013 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அல்லாஹ்வுக்கே எல்லா புகழும், இந்த தொடரின் அறிமுக பதிவை வாசித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டதோடு அல்லாமல் தொடரை சிறப்புடன் கொண்டு செல்ல துஆச் செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

எடுத்துக் கொண்ட கருவுக்கு நல்லதொரு வரவேற்பு மாஷா அல்லாஹ் ! இதுவும் அல்லாஹ்வின் நாட்டமே. எடுத்திருக்கும் பொறுப்பை முடிந்தவரை நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் எழுத்தாக இருக்க அல்லாஹ் நல்லருள் புரிவானாக!

முந்தைய பதிவில், இறைவசனத்தை செவியுற்றால் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களான நபிமார்கள், ஸாலிஹீன்கள், முத்தக்கீன்கள் அவ்வசனத்தின் தாக்கத்தால் சுஜூதில் விழுந்து அழுவார்கள் என்று விவரித்தோம்.

நபி(ஸல்) அவர்களும் பல சந்தர்ப்பங்களில் திருக்குர் ஆன் வசனங்களை ஓத கேட்டு அழுதுள்ளார்கள் என்பதை வரலாற்றில் அதிகமதிகம் காணமுடிகிறது.

இதோ ஒரு சில உதாரணங்கள்.

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள். 

நான், “தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?” என்று கேட்டேன். 

அதற்கு அவர்கள், “ஏனெனில், நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்” என்று சொன்னார்கள். 

ஆகவே, நான் அவர்களுக்கு “அந்நிஸா‘ அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன்.  “ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?” எனும் (4:41ஆவது) வசனத்தை நான் அடைந்தபோது, நபி (ஸல்) அவர்கள், “நிறுத்துங்கள்” என்று சொன்னார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீர் சொரிந்துகொண்டிருந்தன.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள். நூல் : புகாரி 4582

ஏன் நபி(ஸல்) அவர்கள் அழுதார்கள்? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

தன் சமுதாயத்திற்கு எதிராக மறுமை நாளில் தன்னையே அல்லாஹ் சாட்சியாளனாக்குவான் என்ற திருமறையின் வசனத்தைக் கேட்டதும் நபியவர்கள் அழத் தொடங்கி விட்டார்கள். தான் வழிகாட்டிச் செல்லும் தனது சமூகம் தனது வழிகாட்டலை பின்பற்றாத காரணத்தினால் நாளை மறுமையில் நஷ்டவாளிகளாக நிறுத்தப்படுவார்கள் என்பதை நினைத்தே நபியவர்கள் அழுதிருக்கின்றார்கள்.  அல்லாஹ்வால் சொர்க்கம் வாக்களிக்கப்பட்டவர், தனது உம்மத்துகளையும் சொர்கத்திற்கு சிபாரிசு செய்ய தகுதியானவர், அல்லாஹ்விடம் தம் சமுதாயத்திற்காக வாதாடவும் தகுதி படைத்த அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களே திருக்குர்ஆனுடைய வசனத்தை ஓதக் கேட்டு அழுதுள்ளார்கள் என்றிருக்கும் போது நாம் என்றைக்காவது ஒரு திருக்குர்ஆன் வசனத்தை ஓதி பொருளுணர்ந்து அழுதிருக்கிறோமா?

நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆன் வசனம் இறங்கியபோது அவர்களை குறித்தும், அவர்களின் சமூதாயத்தை குறித்தும், மறுமை, நரகத்தை குறித்தும் அல்லாஹ் சொல்லும் போதும் அவர்களால் தாங்க முடியாமல் பல சந்தர்ப்பங்களில் அழுதிருக்கிறார்கள். 

பல மார்க்க சொற்பொழிவுகளில் நாம் செவியுற்றிருக்கிறோம், அல்லாஹ் நம்மை மறுமையில் எல்லோருடைய முன்னிலையில் விசாரிப்பான், கபுருடைய வேதனை உள்ளது, நரகத்தின் கொடூரம் இவைகளை பற்றி எல்லாம் பல ஹதீஸ்கள், குர்ஆன் வசனங்களை ஓதக் கேட்டிருப்போம். ஆனால் இவைகளை எண்ணி என்றைக்காவது அழுதிருக்கிறோமா? 

சொர்க்கத்தில் நேரடியாக பிரவேசிக்க இருக்கும் நபி (ஸல்) அவர்களே பல சந்தர்ப்பங்களில் அழுதிருக்கும் போது, அவர்கள் வழியை பின்பற்றும் நாம் அல்லாஹ்வின் திருவசனங்களை பொருளுணர்ந்து ஓதும் போதும், செவியுறும் போதும் அவனுக்காக நாம் அழனும், அழவேண்டும் இறைப் பொருத்தத்தை நாடியே.

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன். (குர் ஆன் 2:228)

இந்த வசனத்தை வாசித்தால் நமக்கு ஏதாவது அழுகை வருகிறதா? ஆனால் இந்த வசனம் இறங்கியவுடன் உமர் (ரழி) அவர்கள் மகனார் இப்னு உமர்(ரழி) இந்த வசனம் இறங்கியவுடன் செவியுற்று அழுதுள்ளார்கள் என்பதை வரலாறுகளில் நாம் காண்கிறோம்.

இந்த இறைவசனத்தை உன்னிப்பாக கவனித்தால் நமக்கு புரியும். நம் உள்ளங்களில் உள்ளதை சீர்தூக்கி பார்க்க இந்த ஒரு வசனம் நம்மை அச்சமூட்டி எச்சரிக்கிறது. உள்ளங்களில் உள்ளதை வெளிப்படுத்தினாலும், அல்லது அவைகளை மறைத்தாலும் அதற்காக அல்லாஹ் நம்மிடம் கேள்வி கேட்பான். 

நாம் எவ்வளவு தீய எண்ணங்களை நம் உள்ளங்களில் போட்டு வைத்துள்ளோம், தனி மனிதர்களை பற்றிய தவறான எண்ணம், மார்க்க விசயத்தில் பல உள்நோக்கத்துடன் பிறரை வேண்டும் என்றே பொதுவில் வம்புக்கு இழுப்பது என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இது போன்ற வசனங்களை படிக்கும் போது நம் உள்ளம் உருக வேண்டும், நம்முடையை உள்ளத்தில் உறைந்து கிடைக்கும் பாவ செயல்களை எண்ணி அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோர வேண்டும்.

“இன்றைக்கு ஜும்மா பயான் கேட்டியா?” என்று நம்மவர்களிடம் கேட்டால், பதில் இப்படி வரும்.

“என்னப்பா, இன்றைக்கு பயான் செய்தவர் ஒரே அரைச்ச மாவையே அரைக்கிறாரு, ஒரே பழைய ஹதீஸ், அடிக்கடி கேட்ட குர் ஆன் வசனங்கள் புதிதாக எதுவுமே சொல்லவில்லை.” என்று சலித்துக் கொள்பவர்கள் நம்மில் உள்ளனர் தவிர, ஜும்மாவில் கூறப்பட்ட இறைவசனங்கள் பற்றியோ, பயானில் சொல்லப்பட்ட அல்லாஹ்வின் எச்சரிக்கைகள் குறித்தோ என்றைக்காவது சிந்தித்து இருக்கிறோமா? அச்சப்பட்டிருக்கிறோமா? அழுதிருக்கிறோமா?

அல்லாஹ்வின் திருவசனங்களும், ஹதீஸ்கள் அனைத்தும் பழையது என்று சொல்லி அலுத்துக்கொள்வதற்காக அல்ல. அவைகள் இன்றல்ல என்றுமே புதியது. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்றது. ஒவ்வொரு இறைவசனத்தையும் அர்த்தத்துடன், வரலாற்று சான்றுகளுடன் புரிந்து அல்லாஹ்வின் மீது அச்சத்துடன் ஓத ஆரம்பித்தால், அல்லாஹ்வின் சிறப்புகள், தன்மைகளை எண்ணி எண்ணி அழும் போது, அவைகள் என்றுமே புதியதாகவே இருக்கும்.

இன்று முதல், நாம் குர்ஆனின் ஒரு பக்கமாவது புரட்டி பொருளுணர்ந்து படித்து, அவைகளை விளங்கி அல்லாஹ்வின் சக்தி, ஆற்றல், எச்சரிக்கை, கருணை இவைகளை எண்ணி ஒவ்வொரு நாளும் அவனின் பொருத்தத்தை மட்டுமே நாடி அழும் நன்மக்களாக நம்மை நாமே மாற்றிக்கொள்ள வேண்டும் இன்ஷா அல்லாஹ். இதற்கு அல்லாஹ் நம் எல்லோருக்கும் உதவி புரிவானாக.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...
M தாஜுதீன்

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் ! [புதிய தொடர்] 17

அதிரைநிருபர் பதிப்பகம் | April 04, 2013 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அன்பான சகோதர சகோதரிகளே, கடந்த 27 வாரங்களாக ‘நபிமணியும் நகைச்சுவையும்’ என்ற மிக அற்புதமான தொடரை எங்கள் பிரியத்துக்குரிய இக்பால் M. ஸாலிஹ் காக்கா அவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் சிறப்புடன் எழுதி நிறைவு செய்துள்ளார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

நான் இந்தப் பதிவை ஒரு தொடராக எழுதுவதற்கு இக்பால் காக்காவின் நபிமணியும் நகைச்சுவையும் ஓர் உந்துதல் என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்கிறேன். நபிகளாருக்கும், அவர்களைத் தங்கள் உயிருக்கும் மேலாக மதித்து வாழ்ந்த சஹாபாக்களுக்கும் இடையே நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளுக்கு மத்தியில் நிறைய நெகிழ்வூட்டும் சம்பவங்களை இக்பால் காக்கா ஆங்காங்கே சுட்டிக்காட்டியிருந்தார்கள். அவைகளைப் படிக்கும் போது கண்களில் கண்ணீர் வந்தது. நான் அடிக்கடி விரும்பிக் கேட்கும் மார்க்க சொற்பொழிவுகள் இரண்டு, அது நபிகளாரை(ஸல்) அழ வைத்த நிகழ்வுகளும், சத்திய சஹாபாக்கள் அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டுமே நாடி அழுத நெகிழ்வூட்டும் நிகழ்வுகள் பற்றியவைகளாகும்.

இந்தச் சிறு தொடர் தொகுப்பு, மார்க்க சொற்பொழிகளில் அவ்வப்போது நான் செவியுற்றவைகளை வைத்தே எழுதுகிறேன். இதில் பகிர்ந்தளிக்கப்படும் தகவல்களுக்கு தேவையான மூலங்களை தொகுக்கும் அளவுக்கு நான் ஓரு தேர்ந்த மார்க்க ஆய்வாளன் அல்ல. பணிச்சுமைகளுக்கு மத்தில் இப்படி ஒரு பதிவைத் தொகுத்து வருகிறேன். நான் செவியுற்ற மார்க்க சொற்பொழிவுகளில் ஸஹீஹான ஹதீஸ்கள் மற்றும் சஹாப்பாக்களின் வரலாற்று தொகுப்புகளிலிருந்து பேசப்பட்டவைகள் என்ற நம்பிக்கையுடன் உறுதியாக சொல்ல முடியும். இங்கு குறிப்பிடும் தகவல்களில் தவறு இருப்பின் தயைகூர்ந்து அதற்கான ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுங்கள். நிச்சயம் திருத்தம் செய்கிறேன். இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ் தனது திருமறை குர்ஆனில் நிறைய இடங்களில் “மக்கள் அழுவார்கள்” என்று சொல்கிறான். வரலாறுகளில் முஹம்மது நபி(ஸல்) அவர்களும், நபிமார்களும், சத்திய சஹாப்பாக்களும் தங்களுடைய தாடி நனையும் வரைக்கும் பல சந்தர்ப்பத்தில் அழுதிருக்கிறார்கள் என்று வாசித்திருக்கிறோம் மார்க்க சொற்பொழிவுகளில் கேட்டிருக்கிறோம். 

நாம் நம்முடைய வாழ்நாட்களில் பல சந்தர்பங்களில் அழுதிருக்கிறோம், அழுகிறோம், கண்ணீர் வடிக்கிக்கிறோம். அழவைக்கும் அளவுக்கு நம் உள்ளத்தில் தாக்கம் ஏற்பட்டால்தான், நம் கண்களிலிருந்து கண்ணீர் வரும். இதை எழுதும் நானாக இருந்தாலும், இதை படிக்கும் நீங்களாக இருந்தாலும் நம் வாழ்க்கையில் நிறைய கண்ணீர் சிந்தியிருக்கிறோம். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. 

துன்பங்கள் ஏற்படும்போது அழுவதுண்டு, நோய் ஏற்படும் போது அழுவதுண்டு, பெண் குமருகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து அழுவதுண்டு, குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் போது நம்முடைய மக்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று எண்ணி அழுவதுண்டு, நண்பர்கள் வாழ்வில் நொடிந்து போனால் அவர்களுக்காக அழுவதுண்டு. ஆனால் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் பல சந்தர்பத்தில் அழுதிருக்கிறார்கள், அவர்களோடு வாழ்ந்து மறைந்த சஹாபாக்களும் அழுதிருக்கிறார்கள். அவர்களின் அழுகை பற்றிய தொகுப்புகளே இந்த தொடர் பதிவு.

அல்லாஹ் தன்னுடைய இறைமறையில் கூறுகிறான்.

(நபியே!) “அதனை நீங்கள் நம்புங்கள், அல்லது நம்பாதிருங்கள்; (அதனால் நமக்கு கூடுதல், குறைவு எதுவுமில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னர் எவர் (வேத) ஞானம் கொடுக்கப்பட்டிருந்தார்களோ, அவர்களிடம் அது (குர்ஆன்) ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் ஸுஜூது செய்தவர்களாக முகங்களின் மீது (பணிந்து) விழுவார்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.

அன்றியும், “எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன்; எங்களுடைய இறைவனின் வாக்குறுதி நிறைவேறி விட்டது” என்றும் அவர்கள் கூறுவார்கள்.

இன்னும் அவர்கள் அழுதவர்களாக முகங்கள் குப்புற விழுவார்கள்; இன்னும் அவர்களுடைய உள்ளச்சத்தையும் (அது) அதிகப்படுத்தும். குர் ஆன் (17:107, 108, 109)

அல்லாஹ் இங்கு அழுகை பற்றிய சம்பவத்தை எடுத்துக் கூறுகிறான். அல்லாஹ்வுடைய வேத வசனங்கள் ஓதப்பட்டால், அவற்றை செவியுறுகிறவர்கள் அந்த வசனங்களின் கனப்பரிமானத்தை எண்ணி சுஜூதில் விழுந்து அழுவார்கள் என்று கூறுகிறான். தமிழில் மொழிப்பெயர்ப்புடன் வெளிவராதா என்று ஏங்கிக்கொண்டிருந்த நம் சமூகத்துக்கு, பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்து விட்டது அல்லாஹ்வின் திருக்குர்ஆன். என்றைக்காவது தமிழில் திருக்குர்ஆனை அதன் அர்த்தம் பொதிந்த வசனங்களை படித்துவிட்டு நாம் சுஜூதில் விழுந்து அழுதிருக்கிறோமா?

மேற்சொன்ன இறைவசனத்தைத் தனக்கு நெருக்கமானவர்களுக்கும், முத்தக்கீன்கள், ஸாலிஹீன்கள் மற்றும் நபிமார்களின் பண்பாக அல்லாஹ் சுட்டிக்காட்டுகிறான், இறைவசனங்கள் அவர்களுக்கு நினைவூட்டப்பட்டால் அழுது சுஜூதில்  விழுவார்கள் என்று அல்லாஹ் தன்னுடைய அருள்மறையாம் திருக்குர்ஆனில் சொல்லுகிறான்.

மக்காவிலும் இன்னும் பிற பள்ளிகளில் தொழுகையில் இமாம் ஓதும்போது அழுவார், ஏன் அழுகிறார்? குர்ஆன் வசனங்களை அர்த்தத்துடன் விளங்கி ஓதும் போது பயத்தில் ஏற்படும் அழுகை அந்த அழுகை. குர்ஆனை நாம் திறந்து ஓத ஆரம்பித்தவுடன் நாமும் அழவேண்டும், அதற்கான சந்தர்பத்தை உருவாக்க வேண்டும். அதற்கு நாம் குர் ஆனை பொருள் உணர்ந்து விளங்கி ஓதவேண்டும் அப்போது தான் இறைவசனங்களில் சொல்லப்பட்டுள்ளவைகளை எண்ணி பயத்தில் அழுகை வரும். ஆனால் நமக்கு குர்ஆனை திறந்தவுடன் நம்மில் பலருக்கு தூக்கம் மட்டும் உடனே வந்துவிடுறது என்பது ஒரு வேதனையான அன்றாட நிகழ்வு. நவுதுபில்லாஹ்!.

திருக்குர்ஆன் ஒரு நாவலோ, கதை புத்தகமோ, கவிதை தொகுப்போ, பாடல் இசை புத்தகமோ, கார்ட்டூன் கதை தொகுப்போ அல்ல. திருக்குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தைகள். நம்மை படைத்த ரப்புல் ஆலமீன் நம்மிடையே பேசுகிறான் என்ற தூய எண்ணத்துடன் திருக்குர்ஆனை பொருள் உணர்ந்து ஓத ஆரம்பித்தாலே நம் உள்ளத்தில் பயம் எழும், எழுவேண்டும். இன்ஷா அல்லாஹ்.. 

மேலும் அல்லாஹ் கூறுகிறான்.. (நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோமானால், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்; மேலும், மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம். குர் ஆன் (59:21) 

மலைகளை தகர்த்தெரியும் சக்தி குர்ஆன் வசனங்களுக்கு இருக்கிறது என்றால், அப்படி அதில் என்னதான் உள்ளது என்பதை பொருள் உணர்ந்து படித்தால் தானே அல்லாஹ்வின் வார்த்தையை நம்மால் உணர முடியும்.

சைத்தான் அல்லாஹ்வின் திருவேதத்தை நாம் ஓதுவதை விரும்பாதவன். நம்முடைய சிந்தனைகளுக்கு பல முட்டுக்கட்டை போட்டு நாம் குர்ஆன் ஓதுவதை தடுக்க பல வழிகளை கையால்வான். ஆனால், நாம் குர்ஆன் ஓதுவதற்கு முன்பு நம்மை தயார்படுத்த வேண்டும், முதலில் உளு செய்து, அல்லாஹ் நம்மிடம் போசப்போகிறான் என்ற தூய எண்ணத்துடன் குர்ஆனின் பக்கங்களை புரட்ட ஆரம்பித்தால், சைத்தான் தூர ஓடிவிடுவான். இதே திருக்குர்ஆன் தான் ஒரு காட்டுமிராண்டி சமுதாயத்தை, சாந்தமான அல்லாஹ்வின் நல்லடியார்களாக மாற்றியது. காரணம் என்ன? அம்மக்கள் திருக்குர்ஆனை செவியுற்றால் அச்சத்தால் அழுவார்கள் என்பதை பல வரலாற்று சம்வங்களில் காணமுடிகிறது. 
  • ஒரு நாளைக்கு எத்தனை முறை திருக்குர்ஆனை ஓதியுள்ளோம்? 
  • எத்தனை முறை பொருள் உணர்ந்து ஓதியுள்ளோம்? 
  • எத்தனை முறை பொருள் உணர்ந்து ஓதி அச்சம் ஏற்பட்டு அழுதுள்ளோம்?
  • எத்தனை முறை இறை வசனத்தினால் ஏற்பட்ட அச்சத்தில் சுஜூதில் விழுந்து அழுதிருக்கிறோம்?

ஆனால் இன்று, நம்முடைய நிலை….

சினிமா கற்பனை காட்சிகளுக்காகவும், தொலைக்காட்சி சீரியல் கற்பனை கதைகளுக்காகவும் எத்தனை முறை ஒவ்வொரு நாளும் விம்மியிருப்போம். கிரிக்கெட் போன்ற விளையாட்டில் நாம் விரும்பும் விளையாட்டு  வீரன் நான்றாக விளையாடினால் ஆனந்தத்தில் கண்ணீர், சரியாக விளையாடாவிட்டால் கவலையில் வருத்ததுடன் கண்ணீர் விட்டிருப்போம். சைத்தானின் கருவிகளிலிருந்து உருவாகும் இசையை மூலதனமாக கொண்டு நடத்தப்படும் சூப்பர் சிங்கர், மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளில் தனக்கு பிடித்தவர் போட்டியில் வென்றால் ஆனந்த கண்ணீரும், தோற்றால் வருத்தமான கண்ணீரும் விட்டவர்கள் நம்மில் பலர் இருக்கிறோமா இல்லையா என்பதை இங்கு கொஞ்சம் சிந்தனை செய்து பாருங்கள்..

சித்திப்போமாக.. திருக்குர்ஆனை பொருள் உணர்ந்து படிப்போமாக, அவ்வாறு படிக்கும் போது அல்லாஹ்வின் அச்சத்தால் அழுது அவனுடைய சிஃபாத்துக்களை எண்ணி எண்ணி, அவனை நினைவு கூர்ந்து, அவனுக்கு நன்றி செலுத்துவோமாக.

இன்ஷா அல்லாஹ் வரும் பதிவுகளில், அல்லாஹ்வுக்காக மட்டுமே சிந்தப்படும் துளிகள் மிகச்சிறந்தது எது என்பது பற்றியும், நபி (ஸல்) அவர்கள் எந்த சந்தர்பங்களில் அழுதார்கள், நபிமார்கள் எந்த சந்தர்பங்களில் அழுதார்கள், நபிதோழர்கள் எந்த சந்தர்பங்களில் அழுதார்கள் என்பதை ஒவ்வொரு தொகுப்புகளாக இன்ஷா அல்லாஹ் பார்க்கலாம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்
M.தாஜுதீன்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு