Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label வட்டி. Show all posts
Showing posts with label வட்டி. Show all posts

கடன் வாங்கலாம் வாங்க.... 0

அதிரைநிருபர் பதிப்பகம் | November 14, 2014 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! இதுவரை கடன் கொடுக்கல் வாங்கல், வருமானத்திட்டம், சேமிப்பு  வரை அனைத்தையும் பார்த்தோம். இனி நமக்கு நாமே என்ற திட்டத்தில் வட்டியில்லா கடன் திட்டத்தைப்பற்றி பார்ப்போம்.

வட்டியில்லா கடன் திட்டம்:

சீட்டு நடத்துவது போல்தான் இந்த திட்டம், எப்படி நடத்துவது ஏலச்சீட்டு நடத்துவதை பற்றி முன்பு ஒரு தொடரில் கூறியிருந்தேன். ஏலச்சீட்டு (ஏலச்சீட்டு வட்டியின் அடிப்படையில் உள்ளது) போல் இது கிடையாது. இந்த திட்டத்தில் குறைந்தது 10 பேர் வரை (அதிகமாகவும்) சேர்க்கலாம். குறைந்தது ஒரு நபருக்கு 3000ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். மொத்தம் 30ஆயிரம் வருகிறது. முதல் மாதத்தில் அனைவரின் பெயரையும் ஒவ்வொரு சீட்டில் எழுதி குலுக்கி ஒவ்வொன்றாக எடுத்து உதாரணத்திற்கு ஏப்ரல் மாதத்தில் ஒருவர் பெயர், மே மாதத்தில் ஒருவர் பெயர் என்று சீட்டை ஆரம்பிக்கும் தினத்திலேயே குறித்து வைத்துக்கொண்டு மாதாமாதம் யார் பெயர் குறித்து வைத்திருக்கிறீர்களோ  அதன்படி கொடுத்துவிடலாம். மாதா மாதம் பெயர் குலுக்கல் தேவையில்லை. முதல் மாதத்திலேயே பெயர் சீட்டை குலுக்கி வரிசைப்படி எடுத்து எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். (இதில் சீட்டை நடத்துபவரும் ஒரு உறுப்பினர். சீட்டை நடத்துபவர்  முதல் சீட்டை எடுத்துக்கொள்ளலாம், விட்டும் கொடுக்கலாம்).


இந்த முறையில் நடத்தும்பொழுது நடத்துபவரும், உறுப்பினர்களும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும். இருவரும் ஏமாற்றுப்பேர்வழிகளாக இருக்கக் கூடாது. இது கடன் வாங்குவதுபோல்தான். வட்டி என்ற பேச்சுக்கே இந்த திட்டத்தில் இடமில்லை.

வளைகுடா சகோதரர்கள் தங்கள் ரூமில் உள்ளவர்கள் தெரிந்தவர்கள் என்று சேர்த்து 500திர்ஹம் முதல் 1000திர்ஹம் வரை இதுபோல் சீட்டு சேர்த்து நடத்தலாம். இதன்மூலம் நமது தேவைகள் நிறைவேறும். இங்கு யாரிடமும் கடன் வாங்க வேண்டியதில்லை. 10பேரின் பணம் சுழற்சி முறையில் அவர் அவர் பணம் அவர்களுக்கே போய்ச்சேர்கிறது. குறைந்த கால அளவு 6 மாதம் அல்லது 12 மாதம் வைத்து நடத்தலாம். இதற்கு மேல் நீடிப்பது நல்லதில்லை. நடத்துபவரும், உறுப்பினர்களும் நம்பிக்கையானவர்களாக இருக்கவேண்டும். வல்ல அல்லாஹ்வை நம்பி இதனை செயல்படுத்தி பாருங்கள். அவசரத்தேவைகளுக்கு கடன் வாங்காமல் சமாளிக்கலாம்.

பைத்துல்மால்:

பைத்துல்மால்கள் மூலம் செல்வந்தர்களின் உதவியுடன் கஷ்டப்படும் நம் சமுதாயத்தவர்களுக்கு நம்பிக்கையின் அடிப்படையில் பொருள்கள் வாங்கிக் கொண்டும், பொருள்கள் எதுவும் இல்லாதவர்களுக்கு சாட்சிகள் வைத்துக்கொண்டும் கடன்கள் வழங்கலாம். நிறைய ஊர்களில் இத்திட்டம் நடந்து வருகிறது. இருந்தாலும் இன்னும் எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை. முழுக்க முழுக்க பைத்துல்மால்கள் செயல்படும் நேரத்தில் பிறமதக்காரர்களின் வட்டிக்கடைகள் முஸ்லிம்கள் பகுதியை விட்டு வெளியேறும்.

பொருளாதார சுனாமி

தற்பொழுது ஜப்பானில் சுனாமியும், நில நடுக்கமும் வந்து பலவிதமான இழப்புகளை ஏற்படுத்தியது. (வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அவனின் கோபத்தால் உருவாகும் அனைத்துவிதமான ஆபத்துகளிலிருந்து நம் அனைவரையும் பாதுகாக்க தினமும் துஆச் செய்து வருவோம்). கடந்த வருடங்களில் ஒரு பொருளாதார சுனாமி வந்து உலகையே குலுக்கி எடுத்ததை மறந்து இருக்க மாட்டீர்கள். இதில் நமக்கும் படிப்பினைகள் இருக்கிறது. பல பேர் வேலை இழந்தனர். ஐடி துறையும், ரியல் எஸ்டேட்  என்ற துறையும் மேலோங்கி இருந்தது. இந்த துறையில் உள்ளவர்கள் வானத்திற்கும்  பூமிற்கும் குதித்து கொண்டு இருந்தார்கள்.

வல்ல அல்லாஹ் அனுப்பி வைத்த இந்த பொருளாதார சுனாமி பல பேர்களை தெருவுக்கு அனுப்பி பல சோதனைகளை ஏற்படுத்தியது. மன்னர்கள் கண்ட கனவு கனவாகவே போய்விட்டது. இதில் பெரிய பெரிய பண முதலைகளின் பேராசையினால்  மக்களையும் பேராசைப்பட வைத்து, அமெரிக்க மக்களில் பல பேரை தெருவுக்கு கொண்டு வந்து சேர்த்தது, பல வங்கிகளும் திவாலாகியது. வளைகுடா நாடுகளில் நிறைய பேருக்கு வேலைகள் பறிபோனது.

பொருளாதார சுனாமி வந்த நேரத்தில் ஒருவரின் பேட்டியை படித்தேன்: அவர் சொன்னது நான் வேலை இழந்து விட்டேன் என்னுடைய கவலையெல்லாம் இதுநாள்வரை மிக ஆடம்பரமாக என் பிள்ளைகளுக்கு பிட்சா போன்ற உணவுகளை வாங்கி கொடுத்தேன். இனி அவர்களுக்கு ரசம் சோறு கொடுக்க கூடிய நிலைக்கு வந்து விட்டேன் என்பதை நினைக்கும்பொழுது கண்ணீர் வடிக்கிறேன் என்றார். (ரசம் சோறு அவருக்கு கேவலமாக தெரிகிறது - இது கூட இல்லாமல் உலகில் நிறைய பேர் பட்டினி கிடக்கிறார்கள் என்பது தெரியவில்லை இந்த நவீன மனிதருக்கு).

வட்டியின் அடிப்படையில் கொண்ட பேராசை வியாபாரங்கள், எந்த தொழிலையும் வட்டியின் அடிப்படையில் தொடங்குவது, பங்கு சந்தை என்ற பெயரில் வெளிப்படையாக நடக்கும் மிகப்பெரிய சூதாட்டங்கள், எந்த தகுதியும், திருப்பி அடைக்க வழியும் இல்லாதவர்களுக்கு வங்கிகள் கடன்கள் கொடுத்தது, தன் நலம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு அப்பாவி மக்களின் செல்வங்களை சுரண்டி வாழும் கூட்டங்கள், இன்னும் இது போன்ற பல காரணங்களால் பொருளாதார சுனாமி மூலம் மக்களுக்கு சோதனைகள் வந்து சேர்ந்தது. ஏன் நல்லவர்களுக்கு வேலை போக வேண்டும் என்று நினைக்கலாம். நல்லவர்கள், தீயவர்கள் என்று எல்லோருக்கும் குறிப்பிட்ட காலம் நலம், குறிப்பிட்ட காலம் சோதனை என்று வல்ல அல்லாஹ்விடமிருந்து மாறி மாறி வந்து கொண்டே இருக்கும் நாம் உயிருடன் இருக்கும்வரை.

இந்தியாவில் உள்ள வங்கிகளும், வளைகுடாவில் உள்ள ஷரியத்தை கடைபிடித்த வங்கிகளும் தப்பித்துக்கொண்டன. இந்தியா பாதிப்படையாமல் இருந்தது பற்றி ஆய்வாளர்கள் கூறும்பொழுது இந்தியர்களின் சேமிக்கும் பழக்கமே காரணம் என்றார்கள். ஷரியத் வங்கிகள் திவாலாகமல் இருப்பதை பார்த்த மேலை நாட்டு வங்கிகள். தற்பொழுது ஷரியத்படி செயல்படுத்த முயற்சிகள் செய்து சில வங்கிகளும் செயல்பட்டு வருகிறது.

இந்த பொருளாதார நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு 50பேர் இருந்த கம்பெனியில் 25பேரை ஊருக்கு கேன்சலில் அனுப்பி விட்டு 50பேர் வேலையையும் 25பேர் தலையில் வைத்துவிட்டார்கள். நாமும் வேறு வழி இல்லாமல் வேலையில் தொடர்ந்து இருந்து வருகிறோம். கடலில் ஏற்பட்ட சுனாமி கடலோரத்தில் இருந்த நாடுகளில் நடந்த அநாச்சாரங்களை ஒட்டு மொத்தமாக துடைத்தெறிந்து விட்டுச் சென்றது. பொருளாதார சுனாமியும் பல படிப்பினைகளை விட்டுச்சென்றுள்ளது. நாம் நடந்து முடிந்த பொருளாதார சுனாமியால் பாடம் படித்தோமா?

இல்லை நாம் பாடம் படிக்கவில்லை. வட்டியின் அடிப்படையில் உள்ள எந்தவொரு வியாபாரமும், கொடுக்கல் வாங்கலும் வல்ல
அல்லாஹ்வின் பார்வையில் தண்டனைக்குரியதே. நாம் இந்த வட்டி என்ற கொடும் நெருப்பில் இருந்து தவிர்ந்து வாழ முயற்சி செய்தோமா? இல்லை. . . இல்லை. . . இல்லை . . . என்றுதான் கூறமுடியும்.

நாம் என்ன செய்கிறோம்:

வீடு கட்டுவதற்கு, கடைகள் கட்டுவதற்கு, வீடு கட்டி வாடகைக்கு விடுவதற்கு என்று   தைரியமாக வங்கியில் கடன் வாங்குகிறோம். நகைகளை கொண்டுபோய் வங்கியில் வைக்கிறோம். கடன் அட்டையில் கடன் வாங்குகிறோம். ஏன் இவ்வாறு மீண்டும் மீண்டும் வங்கியில் வட்டிக்கு பணம் வாங்குகிறீர்கள் என்று கேட்டால், தவிர்ந்து வாழ முடியவில்லை என்ற பதில்தான்  நம்மவர்களிடம் இருந்து வருகிறது.

ஒரு சகோதரர் இன்ஷூரன்ஸில் கடன் வாங்க முயற்சி செய்தார். இவர் ஏழை இல்லை வசதிகள் இருக்கிறது. வாடகைக்கு விடுவதற்கு வீடு கட்ட வேண்டுமாம். என்னிடம் கடன் பத்திரத்தை கொடுத்து சாட்சி கையெழுத்து போடுங்கள் என்றார். நான் அவரிடம் சொன்னது: நான் வாழ்நாள் இன்ஷூரன்ஸ் செய்திருந்தேன், உயிருக்கு அல்லாஹ்தான் பொறுப்பு இன்ஷூரன்ஸ் பொறுப்பாகாது. மேலும் இன்ஷூரன்ஸ் சில தவிர்க்க முடியாத காரணங்களுக்குத்தவிர ஹராம் என்று அறிந்த பிறகு அதிலிருந்து விலகி கொண்டேன், அதனால் உங்களுக்கு சாட்சி கையெழுத்து போட்டு வட்டிக்கு துணை செய்ய முடியாது என்று சொல்லி விட்டேன். அவருக்கு என்மேல் வருத்தம். அவர் என்னிடம் சொன்னது ஆச்சிரியப்பட வைத்தது. என்ன பாய் செய்வது ஷைத்தான் வலையிலிருந்து மீள முடியவில்லை என்று சொன்னார். என்னமோ ஷைத்தான் நீ வட்டிக்கு கடன் வாங்கவில்லை என்றால் உன்னை வாழவிடமாட்டேன் என்று அவரை மிரட்டி விட்டு போனான் என்பது போல் உள்ளது அவர் வார்த்தை.

சகோதர சகோதரிகளே! வட்டிக்கு கடன் வாங்கி வீடு கட்டுவதிலிருந்தும், கடன் அட்டையில் வட்டிக்கு கடன் வாங்குவதிருந்தும், நகைகளை கொண்டு போய் வட்டிக்கு அடகு வைப்பதிலிருந்தும் இன்னும் எத்தனை வகையான காரியங்களுக்கு வட்டிக்கு வாங்க நினைக்கிறோமோ அவை அனைத்திலிருந்தும் விலகி வாழ்வதோடு, உண்மையான இறை நம்பிக்கையாளர்களாக வாழ்வதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்து வாழ்ந்து வல்ல அல்லாஹ்வின் பொருத்தத்தை நாம் அனைவரும் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யவேண்டும்.

இன்றைய செல்வந்தர்களின் நிலை:

நம் சமுதாயத்தில் செல்வம் அதிகமாக உள்ளவர்கள், அவர்கள்  தெருவில் உள்ளவர்களின் கஷ்டங்களையும், உறவினர்களின் கஷ்டங்களையும் கண்டு கொள்வதில்லை, முன்பெல்லாம் 10,20 லட்சங்களில் வீடுகள் கட்டினார்கள். செல்வங்கள் அதிகமான இன்றைய நிலையில் 50 லட்சம், 80 லட்சம், கோடி என்ற செலவில் வீடுகள் கட்டப்படுகிறது.

ஏழைகள் நிறைந்த, கல்வி கற்பதற்கு வசதியில்லாத, பெண்களுக்கு திருமண வயது கடந்தும் விலை கொடுத்து மணமகனை விலைக்கு வாங்க பணமில்லாமல் தவிக்கும் முஸ்லிம் சமுதாயத்தில் நாமும் ஒரு முஸ்லிம் அல்லவா என்ற சிறு மன உறுத்தல் கூட இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் இன்றைய செல்வந்தர்கள்.

தம் முயற்சியால் வந்த செல்வம் தனக்கு மட்டும்தான் என்று ஆடம்பரமாக வீண் விரயம் செய்தும்,  செல்வம் வரும்பொழுது தலைகால் புரியாமல் நடந்து கொள்கிறார்கள். செல்வம் நிலையானது அல்ல நம்மை சுற்றி உள்ள மனிதர்கள்தான் நிரந்தரமானவர்கள். அவர்களுக்கு நம் சக்திக்கு உட்பட்டு உதவிகள் செய்து வாழ்வதுதான் நன்மைகளை பெற்றுத்தரும் சிறந்த வாழ்க்கை. நமக்கு செல்வம் இல்லாதபொழுதும், நம்மை செல்வம் வந்து சேரும்பொழுதும் நம்முடைய நடவடிக்கை ஒரே மாதிரி இருக்க வேண்டும். செல்வம் சுகமானதுதான், நன்மையானதுதான், ஆனால் அதோடு சோதனைகளும் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. (வல்ல அல்லாஹ் நமக்கு தாராளமாக செல்வத்தை தரும்பொழுது நமது தேவைகளுக்குப்போக வீண் விரயம் செய்யாமல் நாமும் தாராளமாக கஷ்டப்படும் ஏழைகளுக்கு கடனாக, தருமமாக (ஸதக்கா) கொடுக்க வேண்டும்).

கீழ்க்கண்ட நபிமொழிகள், நமது வாழ்வின் நிலை, செல்வத்தின் நிலை இரண்டையும் தெளிவாக விளக்குகிறது:

''ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு. என் சமுதாயத்திற்குச் சோதனை, செல்வம்(பெருகுவது)தான் என்று நபி(ஸல்)அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். '' (அறிவிப்பவர்: கஹ்பு இப்னு இயாழ்(ரலி). (நூல்: திர்மிதீ)

''இந்த (அவசியத்) தேவைகளைத் தவிர வேறு எதிலும் எந்த உரிமையும் ஆதமின் மகனுக்கு இல்லை. (அவை) அவன் குடியிருக்கும் வீடு, தன் மறைவுப்பகுதிகளை மறைக்கப்பயன்படும் ஆடை, கெட்டியான ரொட்டி(உணவு), மற்றும் தண்ணீர் (இவைதான் உரிமையாகும்) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' (அறிவிப்பவர்: அபூஅம்ரு என்ற உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) நூல்: திர்மிதீ).

''நபி(ஸல்) அவர்கள் என் தோள் பட்டையைப் பிடித்துக் கொண்டு,  ''ஒரு பயணியாகவோ அல்லது பாதையைக் கடந்து செல்பவராகவோ நீர் இந்த உலகில் இருந்து கொள்'' என்று கூறினார்கள். ''நீர் மாலை நேரத்தில் இருந்தால் காலை நேரத்தை எதிர் பார்க்காதே! நீ காலை நேரத்தில் இருந்தால் மாலை நேரத்தை எதிர் பார்க்காதே! உன் நோய் (நிலையை கருத்தில்) கொண்டு, உன் உடல் நிலையையும், நீ இறப்பதை (கருத்தில்) கொண்டு உன் உயிர் வாழும் காலத்தையும் பயன்படுத்திக் கொள்வீராக! என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள்.'' (அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி) நூல்: (புகாரி)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 471))

''நபி(ஸல்) அவர்கள் ஓர் ஓலைப்பாயின் மீது படுத்து உறங்கினார்கள். அவர்களின் விலாப்புறத்தில் அதன் தடயம் ஏற்பட்டது. 'இறைத்தூதர் அவர்களே! உங்களுக்காக நாங்கள் ஒரு மெத்தையை ஏற்படுத்தித் தரலாமா?' என்று கேட்டோம். ''எனக்கும் இந்த உலகத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ஒரு பயணி ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து, பின்பு ஓய்வெடுத்து, அதை விட்டும் செல்வான் அல்லவா! அது போன்றே தவிர நான் இவ்வுலகில் இல்லை'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர் : அப்துல்லா இப்னு மஸ்ஊத் (ரலி)  நூல்: (திர்மிதீ),(ரியாளுஸ்ஸாலிஹீன்: 486) )

''பணக்காரர்களைவிட  ஐநூறு வருடங்களுக்கு முன் ஏழைகள் சொர்க்கத்தில் நுழைவார்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்:திர்மிதீ)   (ரியாளுஸ்ஸாலிஹீன்: 487)

"ஆதமின் மகனே! உன் தேவை போக நீ செலவு செய்வது உனக்கு சிறந்ததாகும். அதை நீ செலவு செய்யாமல் இருப்பது உனக்கு தீங்காகும். தேவையானவற்றை வைத்துக் கொள்வதற்காக நீ பழித்துரைக்கப்பட மாட்டாய். உன் நிர்வாகத்தின் கீழ் இருப்போருக்கு  (நீ உதவி செய்து) செலவைத் துவக்குவாயாக! என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி) நூல்:(திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 510)

இந்த நபிமொழிகளை நன்றாக மனதில் பதிய வைத்து நமது செல்வத்தின் நிலையையும், வாழ்வின் நிலையையும் சரி செய்து மறுமையில் வெற்றி அடைய முயற்சிகள் செய்யவேண்டும். வல்ல அல்லாஹ் நமக்கு எல்லா காரியங்களிலும் நன்மையை தந்து ஹலால், ஹராமை பேணி நடக்கும் நன்மக்களாக நாம் வாழ்வதற்கு நல்லருள் புரியட்டும்.

அலாவுதீன். S.

அதிரைநிருபரில் இதுவரை பதிக்கப்பட்ட ஏராளமான தொடர்களில் ஒன்றான 'கடன் வாங்கலாம் வாங்க' தொடரின் இந்த அத்தியாயம் மிக அதிகமாக வாசிக்கப்பட்டது மட்டுமல்ல பகிரப்பட்டதுமாகும்.

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் - தொடர்- 22 33

அதிரைநிருபர் பதிப்பகம் | July 06, 2013 | , , ,


தொடர் : இருபத்தி இரண்டு

இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள் ( வட்டி தவிர்த்த  வாழ்வு)

கடந்த அத்தியாயத்தில் வட்டியின் கொடுமைகளை வரிசைப் படுத்திக் காட்டினோம். இஸ்லாமியப் பொருளாதாரத்தில் வட்டிக்கு எந்த வகையிலும் இடமில்லை என்பதை இறைமொழிகளாலும் நபியின் வழிகளாலும் இனி வரையறுத்துக் காட்டுவோம்.          இவ்வளவு தூரம் இறைவன் எச்சரிக்கை செய்த ஒரு பெரும்பாவம் உலகமெங்கும் பொதுப் பொருளாதாரத்தை ஆக்ரமித்து இருப்பது அழிவின் விளிம்புக்கு உலகம் சென்று கொண்டிருப்பதன் அடையாளமே.  

மிகவும் வேதனையான ஒரு செய்தியை வேறு வழி இல்லாமல் குறிப்பிட வேண்டி இருக்கிறது. சில  புகழ் பெற்ற இஸ்லாமியர்களால் நடத்தப் படும்  வணிக நிறுவனங்கள் கூட மாதாமாதம்  ஒரு குறிப்பிட்ட தொகையை தருவதாக வாக்களித்து நமது சமுதாய மக்களிடம் பணம் வசூல் செய்து  அதை அவர்கள் உடைய வியாபாரங்களில்  போட்டுப் புரட்டி இலாபம் சம்பாதிக்கிறார்கள். பணம் கொடுத்தவர்களோ  மாதம் தவறாமல் அவர்களிடமிருந்து  வரும் வட்டிப்பணத்தில் குடும்பம் நடத்துகிறார்கள். இவர்களிடம் இப்படி வட்டிப்பணத்தில் சாப்பிடுகிறீர்களே இது பாவம் இல்லையா? என்று நாம் கேட்போமேயானால், ‘நாங்கள் செய்த எங்களுடைய முதலீட்டுக்குக் கிடைக்கும் லாபத்தைத் தான் சாப்பிடுகின்றோம்’ என்று கூறி வட்டியையும், வியாபாரத்தையும் ஒன்றாக ஆக்கிவிட்டு,  பாங்கு சொல்லவும் தொப்பியை துடைத்துப் போட்டுக்கொண்டு தொழவும்  போய்விடுகிறார்கள். இந்தக் காட்சியை நான் வெட்கத்தைவிட்டுப் பகிர்கிறேன்.  வட்டி வாங்குவது பெரும் பாவம் என்றால் இவ்வாறு அவர்கள் அவ்வாறு கூறியது அதைவிட மிகப்பெரும் பாவமாகும். இப்படி வட்டியாக தருவதற்கு பதிலாக   இவ்விதம் பணம் தருபவர்களை பங்குதார்களாக சேர்த்து இலாபப் பங்காக கொடுக்க வழிவகுக்கும் வழியை இருதாராரும் சிந்திக்கலாம்.  வட்டி,  செல்வத்தின் மீது சேற்றை வாரிப் பூசுகிறது – தர்மமும் ஜகாத்தும் செல்வத்தை தூய்மைப் படுத்துகின்றன. 

வட்டி, வியாபாரத்தைப் போன்றதே என்று கூறுபவர்களை அல்லாஹ் கடுமையாக திருமறையிலே இவ்வாறு எச்சரிக்கின்றான்.

“யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய்) எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், ‘நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான் ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்” (அல்குர்ஆன் 2:275)

அல்லாஹ் தன் திருமறையிலே இன்னும்  கூறுகிறான்.

“அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.” (அல்குர்ஆன் 2:276)

இறைவனுடைய பரக்கத் கிடைக்காத மலையளவு பொற்குவியலே இருந்தும் என்ன பயன்? வட்டியின் மூலம் பார்ப்பதற்கு செல்வங்களும் சொத்துக்களும்   அதிகரிப்பது போலத் தோன்றினாலும் முடிவில் மிகக்குறைந்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். அல்லாஹ்வின் பரக்கத்தையுடைய செல்வம் சிறிதளவு இருந்தாலும் அதன் மூலம் அபிவிருத்தியும் நிறையப்  பலன்களும் மன நிம்மதியும்  கிடைக்கும். 

நபி (ஸல்) அவர்கள் வட்டி தொடர்பான கொடுக்கல் வாங்கலில் தொடர்புடைய  அத்தனை பேர்களையும் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள். குற்றம் புரிபவரும் குற்றத்துக்கு உடந்தையாக இருந்தோரும் எச்சரிக்கப் படுகிறார்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடுவோரும் பிராமிசரி நோட்டுக்களில் சாட்சிக் கையெழுத்துப் போடுவோரும் யோசிக்க வேண்டிய விஷயம். 

“வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியோரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” என்பதை அறிவிப்பவர்  ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.

வட்டி வாங்குவதை ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாக கூறிய நபி (ஸல்) அவர்கள் வட்டியின் தீமைகளைப் பற்றி விளக்கிக் கூறும்போது,

“வட்டியின் மூலம் கிடைத்த ஒரு திர்ஹம் முப்பத்தி ஆறு விபச்சாரத்தை விட அல்லாஹ்விடம் மிகக் கொடுமையானது என்றும், ஒருவனுடைய மாமிசம், (அல்லாஹ்வால்) தடுக்கப்பட்ட ஒன்றின் (வட்டியின்) மூலம் வளர்ச்சியடைந்தால் அதற்கு நரகமே மிக ஏற்றதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : தப்ரானி

அல்லாஹ் அச்சுறுத்துகிறான் ,

“ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்” (அல்குர்ஆன் 3:130)

“(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்” (அல்குர்ஆன் 30:39)

“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்” (அல்குர்ஆன் 2:278)

“இறைவனின் வட்டியைப் பற்றிய தெளிவான “யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள்” (அல்குர்ஆன் 2:275)

என்ற இறைவனின் வசனத்தை  பற்றி நாம் அனைவரும் கண்ணை மூடி  சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

நமது பக்கத்து வீட்டுக்காரன் , அடுத்த தெருக்காரன், ஒரே ஊரில் வாழும் பிற இனத்தார் மற்றும்  சமயத்தார் ஆகியோர் நம்முடன் கருத்து மாறுபாடுபட்டு ஏதேனும் சண்டை வம்பு பிணக்கு ஏற்பட்டாலே நம்மால் தாங்க முடியவில்லை. நமது உடன் பிறப்புகளுடன் கூட நமக்கு ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க  முடியவில்லை. ஆனால் வட்டி வாங்குவோர் மீது இறைவன் அறிவிக்கும் போர்ப் பிரகடனத்தை நம்மால் தாங்க முடியுமா   என்பதை எண்ணிப் பார்த்தால் இதயம் நடுங்குகிறது. இதோ அந்த போர்ப்பிரகடனம் திருமறையின் வார்த்தைகளில் ,  

“இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது. நீங்கள் தவ்பா (இப்பாவத்திலிருந்து) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல்-முதல் உங்களுக்குண்டு. (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள்- நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:279)

இன்னும் நபி மொழியில், 

இறைவன்  நான்கு பேர்களை  சுவர்க்கத்திற்கோ  அல்லது  அதனுடைய  சுகத்தை  அனுபவிப்பதற்கோ விட மாட்டான். அவர்கள்

1. மது குடிப்பதை பழக்கமாகக்  கொண்டவர்கள்.
2. வட்டி வாங்கித் தின்றவர்கள்.
3. அநாதைகளின் சொத்தை அநியாயமாக அபகரித்தவர்கள்.
4. பெற்றோரைத் துன்புறுத்தியவர்கள்.

(அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: ஹாக்கிம்)

வட்டி பற்றிய இழிமொழி  நபி மொழியின் கடுமையான வார்த்தைகளால் சொல்லப்பட்டதை இதைவிட நாம் எடுத்துக் காட்ட முடியாது. அது, வட்டிக்கு 73 வாயில்கள் உள்ளன. அதில் மிக எளிதானது ஒருவன்தனது தாயுடன் திருமணம் செய்து கொள்வதைப் போன்றதாகும். வட்டியிலேயே மிகக் கொடிய வட்டி முஸ்லிமின் உடமையைப் பறிப்பதாகும். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத், அபூஹுரைரா, ஸயீத்(ரலி) நூல்: இப்னுமாஜா, அபூதாவூத்)

நபி (ஸல்) அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் பர்னீ வகையைச் சார்ந்த பேரீச்சம் பழத்தை கொண்டு வந்தனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இது உமக்கு எங்கிருந்து கிடைத்தது? என்று வினவினர். அதற்கு அவர்கள் என்னிடம் தரத்தில் குறைந்த பேரிச்சம் பழம் இருந்தது. அதில் நான் இரண்டு மரக்கால் கொடுத்துவிட்டு அதற்கு பகரமாக ஒரு மரக்கால் பர்னீ பேரிச்சம்பழம் வாங்கினேன் என்றார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் ஆ! இது வெளிப்படையான வட்டி முழுக்க முழுக்க வட்டி, இவ்வாறு செய்யாதீர், இவ்வாறு நீர் செய்ய நாடினால் முதலில் உமது பேரிச்சம் பழத்தை விற்றுவிட்டு பின்னர் இதனை வாங்கிக் கொள்வீராக! என்று கூறினார்கள். (அபூ ஸயீது  நூல்: புகாரி, முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்)

இக்காலத்தில் நம் கண்முன்னே நடப்பதையும் இனி நடக்க இருப்பதையும் இப்படி ஒரு ஹதீஸ் சுட்டிக் காட்டுகிறது. 

“மக்கள் மீது நிச்சயமாக ஒரு காலம் வரும். அக்காலத்தில் வட்டி உண்பவனைத் தவிர வேறெவரும் இருக்கமாட்டார்கள். அவ்விதம் வட்டி உண்ணாதிருப்பவர்மீது வட்டி உண்பவரின் மூச்சாவது படும்”  என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: அபூதாவூத், நஸயீ 

இத்தகையோரின்  மூச்சுக் காற்றுகள் அரபு நாடுகளிலும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் இன்னும் நாம் பொருளீட்டும் இடங்களிலும் நிச்சயமாக  நம் மீது பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன என்பதை யாரும் மறுக்க இயலாது. 

நாடுகளின் அரசியல் பொருளாதாரத்தின் அண்மைக்கால வரலாறு தனி நபர்கள் மற்றும் அரசாங்கங்களின் நிலையை  வட்டியின் அடிப்படையிலான கொடுக்கல் வாங்கல் மூலம் எப்படிப் புரட்டிப் போட்டு மீளமுடியாமல் தத்தளிக்கின்றன என்பதை உணரலாம்.  எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். திவால், நஷ்டம், சந்தையில் தேக்கநிலை, கடனை நிறைவேற்ற முடியாமை, பொருளாதார நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டத்தின் சதவிகிதம் அதிகரிப்பு, பல நிறுவனங்கள், கம்பெனிகள் இழுத்து மூடப்படுதல் ஆகியவை இவற்றுள் அடங்கும். வட்டி பணக்காரன், ஏழை என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் அனைத்துச் சூழ்நிலையிலும் ஹராமாகும். எத்தனையோ பணக்காரர்கள் வட்டியின் காரணத்தினால் அனைத்தையும் இழந்து -ஓட்டாண்டி- பரதேசி- ஆயினர். நம் முன்னே நடைபெறும் எத்தனையோ நிகழ்ச்சிகள் இதற்கு சாட்சிகளாக உள்ளன. வட்டியால் வாழ்விழந்தவர்களின் அலங்கோல நிலையைக் காண விரும்புபவர்கள் துபாய் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டுக்கு எதிரே நிறுத்திய வண்ணம் விடப்பட்டுக் கிடக்கும் கார்களின் அலங்கோலத்தைப் பாருங்கள். வட்டி கட்ட முடியாமல் போட்டது போட்டாற்போல் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஊரைக் காலி பண்ணிக் கொண்டு ஓடிய பலரின் வாழ்வை அந்தக் காட்சி பறைசாற்றும் வட்டி கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டவர்களை அல்லாஹ் எத்தகைய போர் அறிவிப்பைக் கொண்டு எச்சரிக்கை செய்துள்ளானோ அந்த எச்சரிக்கையும் மீறி நடந்த  மனித சமுதாயத்தின் மீது அல்லாஹ் இறக்கிய  ரத கஜ துரக பதாதிகள் எனப்படும் தேர், யானை, குதிரை , காலாட்படை ஆகியவற்றின்  வடிவங்களாகக் கூட இன்று உலகில் காணப்படும் பொருளாதார முடக்கம் இருக்கலாம். 

இதனால்தான்  உலகப் பொருளாதாரம் இன்று எழமுடியாமல்  வீழ்ந்து கிடக்கிறது.  வட்டியின்  அடிப்படையில் கடன் சார்ந்த பொருளாதாரத்தில் என்றும் பொருளாதார உயர்வு இருக்காது. வளர்ச்சிபோல் காட்சியளித்து, நாளடைவில் நசிந்து விடும். உளபோல் இல்லாகித்  தோன்றக் கெடும் என்று திருவள்ளுவர் அளவறிந்து வாழாதான் வாழ்க்கையைக் குறிப்பிடுகிறார் அப்படி வட்டியுடன் உலாப்  போகும் வக்கற்ற பொருளாதார அமைப்பும் உள  போல்   இல்லாகித் தோன்றக்கெடுமேன்று அறுதியிட்டு உரைக்கலாம். உலகம் முழுதுக்கும் இஸ்லாமியப் பொருளாதாரமே மாற்று மருந்து என்பதை உலகம் உணரத் தொடங்கிவிட்டது. வட்டியின்  விஷம் பாய்ந்த உலகப் பொருளாதாரம் தன் விஷத்தை இறக்கிக் கொள்ள இஸ்லாம் காட்டும் பொருளாதாரமே ஏற்ற முறை என்பதை அறிவிக்கத்தொடங்கி இருக்கிறார்கள். அதன் தொடக்கமே வட்டியில்லா வங்கி முறை. 

இஸ்லாம் கூறும் வட்டியில்லா வங்கி முறைகளை இனித்  தொடர்ந்து காணலாம் இன்ஷா அல்லாஹ். 
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இபுராஹீம் அன்சாரி

கடன் வாங்கலாம் வாங்க - 2 5

தாஜுதீன் (THAJUDEEN ) | October 07, 2010 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! ( அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    - இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

முதல் பாகத்தை படிக்காதவர்கள் படித்து விட்டு இந்த 2ம்தொடரை படிக்கவும். இரண்டாவது தொடர், வாசகர்களாகிய உங்களை சந்திக்க வந்து விட்டது. இனி தொடருவோம் வாருங்கள்:

வங்கி கடனும் மனிதர்களின் ஆசைகளும்

  நமது நாட்டு வங்கிகளும் தனியார் நிறுவனங்களும் கவர்ச்சிகரகமான விளம்பரங்களை கொடுத்து மக்களை மயக்கி வீட்டு கடன் தருகிறார்கள். பணம் கட்ட தவறினால் வட்டி கூடும் பிறகு வீட்டையே இழக்க நேரிடும்.

கார் கடன் - கார் நமக்கு வந்து  விடுகிறது பணம் கட்ட தாமதமானால்  காரும் பறிமுதல் செய்யப்படும்.


நகை கடன் தருகிறார்கள். நகையை குறிப்பிட்ட தவனைக்குள் மீட்க முடியாவிட்டால் நகையும் ஏலம்(பறி) போகும் அபாயம்.

இப்படி பல பெயர்களில் நூதனமான கடன் திட்டங்களை வங்கிகளும், தனியார் நிறுவனங்களும் கடன் வாங்கலையா? கடன் என்று (தள்ளுவண்டியில் காய்கறி விற்பவர் போல) தொடர்ந்து அறிவித்து (அலறி)க் கொண்டு இருக்கிறது. நாம் வாங்கும் கடன்கள் அனைத்தும் நம்மை வட்டி என்ற படுகுழியில் தள்ளி விடுகிறது. படுகுழியில் விழுந்தாலும் தட்டு தடுமாறி எழுந்து விடலாம். ஆனால் வட்டி என்னும் பாதாளத்தில் தவறி விழுந்தால் மீள்வது சிரமமே. கடன் கொடுக்கும் வங்கிகள், நிறுவனங்களின் சட்டதிட்டங்களின் படிவங்களை படிப்பதற்கு நம் கையில் ஒரு பூதக்கண்ணாடி இருக்க வேண்டும். கடன் கொடுக்கும் வங்கிகளின் இரட்டை நிலைப்பாடு கோடீஸ்வரனுக்கும் - சாமான்யனுக்கும் வித்தியாசப்படும். நம்மை கடனாளியாக்க துணைபுரியும் சாதனங்களில் தொலைக்காட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு விளம்பரத்தை திருப்பி திருப்பி பார்க்கும்பொழுது அந்தப்பொருளை வாங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு நம்மை வலுக்கட்டாயமாக தள்ளிவிடுகிறது. (பயனுள்ள பொருட்கள் வாங்குவதில் பிரச்சனையில்லை) தேவையில்லாவிட்டாலும் கௌரவத்திற்காக கடன் வாங்கி தேவையற்ற பொருட்களை வாங்கி குவிப்பதில் நமக்கு ஒரு சந்தோஷம்.


கடன் அட்டை (Credit Card)
  
    கடன் அட்டை வைத்திருப்பது கௌரவம் என்ற நிலைக்கு மனிதர்களை ஆளாக்கி விட்டது இந்த நவீன உலகம். வங்கிகளில் பணிபுரிபவர்கள் கேன்வாஸ் செய்கிறோம் என்ற பெயரில் உங்களுடைய சம்பளத்தை எங்கள் பேங்கில் டிரான்ஸ்பர் செய்யாமலேயே நாங்கள் கடன் தருகிறோம். (அதாவது உங்களை கடன்காரனாக்கி வட்டி என்ற கடலில் மூழ்கடித்து விடுவோம்) சம்பள சர்டிபிகேட் கொடுத்தால் போதும் என்று அவர்களின் விளக்கப்படிவத்தை தந்து விட்டு செல்கிறார்கள்.

முன்பெல்லாம் (கடந்த காலங்களில்) மனிதர்களின் மணிப்பர்சுகளில் பணமும் விசிட்டிங்கார்டுகளும் இருப்பதை பார்க்கலாம். ஆனால் இன்றோ கடன் அட்டை (Credit Card) வைத்திருப்பதுதான் கௌரவம் என்ற கலாச்சாரம் தற்பொழுது மக்களிடம் பரவி விட்டதால் அதிலும் பல வங்கிகளின் கடன் அட்டைகள் கலர் கலராக மணிப்பர்சுகளில். இப்பொழுதெல்லாம் பணம் வைத்திருப்பதையே கௌரவ குறைச்சலாக நினைக்கும் மக்கள் உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள். கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வணிக நிறுவனங்கள் வழங்கும் சலுகை திட்டங்களோ கார்டை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்பது போல் இருக்கும்.

கடன் வாங்கக்கூடாது என்று உறுதியாக வாழும் மனிதர்களையும் வங்கியில் பணிபுரியும் கடன் அட்டை பிரிவு விற்பனை பிரதிநிதிகள் சந்தித்து கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி கடன் (பிறகு வட்டி) என்னும் வலையில் விழ வைத்து விடுகிறார்கள். கடன் அட்டையால் நமக்கு நன்மைகள் 5% அல்லது 10% இருக்கலாம் ஆனால் தீமைதான் அதிகமாக ஏற்படுகிறது. அது என்ன தீமை? நாம் கடைகளுக்கு சென்றால் பொருள்களை பார்த்து பார்த்து வாங்குவோம். அதிகமாக எடுத்து விட்டாலும் மணிப்பர்சில் இருக்கும் பணத்திற்குள் பொருள்களை எடுத்துக்கொண்டு மீதியை திருப்பி கொடுத்து விடுவோம். ஆனால் கடன் அட்டை கையில் இருக்கும்பொழுது நம்மிடம் கட்டுப்பாடு இருக்காது. தேவைக்கு மீறி பொருள் வாங்கும் பொழுது குறிப்பிட்ட நேரத்தில் பணம் வங்கியில் செலுத்தப்படாத காரணத்தால் வட்டி நீளும் எதுவரை? வக்கீல் நோட்டீஸ் வரை....

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
    
முந்தைய பின்னூட்டங்கள்

8 - பின்னூட்டம்:




அபுஇபுறாஹிம் on Wednesday, October 06, 2010 11:57:00 PM said...



இங்கே (UAEல்)ஹெல்த் இன்சூரன்ஸ் கார்டுக்கு பக்கத்தில், கிரடிட் கார்டுகள்.. இரண்டுமே சுரண்டல்தான் healthஐயும் wealthஐயும் !எடுப்பவனுக்கு ஏலம் இழப்பவனுக்கு பறி... அருமை ! தொடருங்கள்

 Dawood on Thursday, October 07, 2010 9:14:00 AM said...
The GIANT corporation wants to convert India from "Savings" Economy into a "Spending" economy. US all these years was booming on spending economy that was the fundamental reason for this recession. The economy was build on a shaky foundation. I'm afraid India will one day collapse too.

alavud38 on Thursday, October 07, 2010 9:32:00 AM said...
சகோதரர் அபுஇபுறாஹிமிற்கு: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) கருத்திற்கு நன்றி ! //// இரண்டுமே சுரண்டல்தான்/// என் அனுபவம் ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றியது: டமான் என்னும் பகல் கொள்ளைகாரனிடம் கார்டு வாங்கியிருந்தேன்(600திர்ஹம்)உபயோகப்படுத்தவே இல்லை. நண்பர் என்ன கார்டு அப்படியே புதியதாக இருக்கிறது. உடல்நலமில்லாதபொழுது கார்டை பயன்படுத்து என்றார். நானும் ஜூரம் வந்தபொழுது பயன்படுத்தினேன்(ஒரு தடவைதான்) வயிற்றுப்பக்கம் வலி வருகிறது ஹெரனியா வலியாக இருக்குமோ என்ற சந்தேகம்(தவளை தன் வாயால் கெடும் என்பார்கள்) டாக்டரிடம் சொல்ல அவர் மெடிக்கல் வரலாறு என்ற படிவத்தில் நிறைய எழுதி டமானுக்கு அனுப்பி விட்டார் என்பது பிறகுதான் தெரியவந்தது (மீண்டும் புதுப்பிக்கும்பொழுது) விஸா புதுப்பிக்க கார்டு வேண்டும். டமானில் கேட்டால் 7500திர்ஹம் கட்ட வேண்டும் என்று எங்கள் டாக்டர் குழு பரிந்துரை செய்கிறது -- இது என்ன பகல் கொள்ளையாக இருக்கிறது, எதற்கு இவ்வளவு தொகை என்றால் உங்களுக்கு ஹெரனியா இருப்பதாக கணணியில் பதிவாகி உள்ளது. எனக்கு அதெல்லாம் இல்லை என்றேன் - அதற்கு மருத்துவ அறிக்கையில் இல்லை என்று கொண்டு வாருங்கள் பார்க்கலாம் என்றார்கள். சரி மருத்துவ சோதனைக்கு தனியாரிடம் போய் கேட்டால் 1000திர்ஹத்திற்கு மேல் ஆகும் என்று சொல்லிவிட்டார்கள். விஸா புதுப்பிக்க வேண்டும் அதனால் சலாமா என்ற இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 4ஆயிரம் கொடுத்து கார்டு வாங்கும்படி ஆகிவிட்டது. பின் இந்த கார்டை பயன்படுத்தவே இல்லை. கம்பெனி மீண்டும் டமானில்தான் கார்டு எடுக்க வேண்டும் என்றது. PRO எவ்வளவு பணம் கொடுத்தான் என்பது தெரியவில்லை. இதன் பிறகு டாக்டரிடம் சென்றால் கார்டு இல்லை என்று சொல்லி விடுவேன். ஊரிலும் கலைஞரின் காப்பீட்டு திட்டமும் ஒரு பகல் கொள்ளைதான். -அலாவுதீன்—

sabeer on Thursday, October 07, 2010 10:04:00 AM said...
சகோ. அலாவுதீன், தற்கால தனி மனித பொருளாதாரச் சீரழிவுக்கு வழி வகுக்கும் தலையாய கவர்ச்சியான கடன் அட்டைகளைப் பற்றிச் சுருங்கச் சொல்லாமல் மிகவும் தெளிவாக விளக்கவும்.என்றுமே கடன் அட்டை பயன் படுத்தியதில்லை என்ற நிலையில் சொல்கிறேன்; பயன் படுத்தியவர்கள் சொன்ன சோகக் கதைகள் ஏராளம்.

தொடரின் இப்பகுதியை சற்று நெடிதாக விளக்கவேண்டும் என்றும், நண்மை(?) தீமைகளை அனுபவம் மற்றும் அநுமானங்கள் மூலம் அனைவரும் அலசவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்


bro. Dawood,
Thanks for alarming us. pls give us few notes explaining how to survive from the predicted economic collapse. Thanks.


தாஜுதீன் on Thursday, October 07, 2010 10:04:00 AM said...
//கடன் அட்டையால் நமக்கு நன்மைகள் 5% அல்லது 10% இருக்கலாம் ஆனால் தீமைதான் அதிகமாக ஏற்படுகிறது.//
எதுவாக இருந்தாலும் அதில் ஒரு துளி தீமை இருக்கும் என்று வருமானால் அவைகளைவிட்டு தூரத்தில் இருப்பது தான் சிறந்தது. நல்ல தொடர் ஆக்கம், தொடருங்கள் அன்பு சகோதரர் அலாவுதீன்.


 alavud38 on Thursday, October 07, 2010 12:22:00 PM said...
சகோ. சபீர், அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) கருத்திற்கு நன்றி!

/// கடன் அட்டைகளைப் பற்றிச் சுருங்கச் சொல்லாமல் மிகவும் தெளிவாக விளக்கவும்./// இன்ஷாஅல்லாஹ் 3ஆம் தொடரில் என்னால் முடிந்த அளவுக்கு விரிவாக சொல்கிறேன்.


alavud38 on Thursday, October 07, 2010 12:38:00 PM said...
சகோ.தாஜூதீன், அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) கருத்திற்கு நன்றி!///ஒரு துளி தீமை இருக்கும் என்று வருமானால் அவைகளைவிட்டு தூரத்தில் இருப்பது தான் சிறந்தது.///
உலக காரியங்களில் தீமை மட்டுமே உள்ள காரியங்கள் தவிர மற்ற எல்லாவற்றிலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கிறது. மனித மனம் எப்பொழுதும் நிலையற்ற தன்மையாய் இருக்கும். நேராக அறிவுரை சொல்வதை அப்படியே உள்வாங்கிக்கொள்ளாது. எந்த ஒரு செயலையும உடனடியாக விட்டு விடு என்று சொன்னாலும் உடனே விடாது. பலவகைகளிலும் நன்மை என்ன தீமை என்ன என்று விரிவாக சொல்லி புரிய வைத்து இந்த தீமையிலிருந்து சகோதரர்களை வெளி கொண்டு வர வேண்டும். வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.


Yasir on Thursday, October 07, 2010 2:57:00 PM said...
//ஆனால் கடன் அட்டை கையில் இருக்கும்பொழுது நம்மிடம் கட்டுப்பாடு இருக்காது//நிதர்சனமான உண்மை..கட்டுப்பாடு உள்ளவர்களையும் கலைத்துவிடும் ஆற்றல் பெற்றது இந்த (c)red(it) card...













உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு