பிஸ்மில்லாஹ்...
சென்னையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக ஊர் சென்றபோது; ஒரு நல்ல செய்தியைக் கேட்கவும், காணவும் நேர்ந்தது. அதைப் பற்றி உங்களிடையே பகிர்ந்து கொள்ளவும் மேலும், அவ்வழியில் முஸ்லீம்களாகிய நாம் இன்னும் பல பயன்கள் பெரும் வகையில் - முன்னேற்றப் படுத்திக் கொள்ளலாம் என்ற யோசனையை முன் வைக்கவுமே இந்த அனுபவ பதிவு !
சென்னைக்கு உள்ளேயும் சரி, நாம் பயணிக்கும் திருச்சி வரியிலான மேம்படுத்தப்பட்ட நெடுஞ்சாலைகளாகட்டும், ஒவ்வொரு ஊரின் வலது அல்லது இடது பக்கமாக சிறியதும் / நடுத்தரதுமான ஏதேனும் ஒரு பள்ளிவாசல் காணக் கூடியதாக இருக்கிறது. அந்தக் காட்சிகள் நம் கண்களுக்கு குளிர்ச்சியை தந்து மனதுக்கு இன்பமாக இருக்கிறது.
பல பள்ளி வாசல்களின் அருகில் மரக்கறி உணவு ரெஸ்டரண்டுகள் அமைந்து இருப்பதால், வக்து நேரத்தில் (பயணிகளுக்கு ஜம்மு / கஸ்ரு சலுகையுண்டு) தொழுதுவிட்டு அருகில் உள்ள உணவகத்தில் உணவருந்தி விட்டு மீண்டும் பயணம் செய்ய இதமகாவும், வசதியாகவும் இருக்கிறது அப்படிப்பட்ட பள்ளியைத்தான் புகைப்படத்தில் காண்கிறீர்கள்.
இது திண்டிவனம் நுழைந்தவுடன் இருக்கிறது பள்ளியின் பெயர் சல்மான் ஜும்மா பள்ளி, இதன் அருகிலேயே ஒரு மரக்கறி உணவகம் இருக்கிறது. இந்தப் பள்ளியில், பெண்கள் தொழவும் தனி இடவசதியுண்டு.
மேலும் பள்ளிவாசளின் இமாம் கூறியது “இந்த பள்ளிவாசலுக்கு சலவைக்கல், ஒலிபெருக்கி கருவிகள், பள்ளிவாசலின் பெயர் பலகை என்று இவை அனைத்தையும் தன்னார்வத்துடன் செய்து கொடுத்தது அதிராம்பட்டினத்தைச் சார்ந்த மூன்று சகோதரர்கள்தான்” என்றார். நம்மூர் மக்களின் நல்ல எண்ணங்களை அறிந்து மனம் மகிழ்வடைந்தது அல்ஹம்துலில்லாஹ் !
வரும் வழியில் white mosque ”வெள்ளை மஸ்ஜித்” என்ற பெயரில் அழகான ஒரு பள்ளி தென்பட்டது, கடந்து வந்த ஊர் பெயர் அறிய முடியவில்லை.
சில பள்ளி வாசல்களில் பெண்களுக்கு என தனியிட வசதி இல்லை, மேலும் சில பள்ளிகளில் பெண்கள் தொழும் இடம் பள்ளிவாசலை விட்டு ஒதுங்கி உள்ளதால், பெண்கள் தனியே சென்று தொழ தயங்குகிறார்கள். அவற்றையெல்லாம், சரி செய்து பெண் பயணிகளுக்கும் இயற்கை உபாதைகளை நிறைவு செய்து கொள்ளவும் தொழவும் வாய்ப்புகளை பரவலாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
ஆனாலும், மேற்சுட்டிய நிறைகளில் சில குறைகளை களைய இலட்சங்கள் செலவாகும், அந்தந்த ஊர் பள்ளிவாசல்கள் அமைந்திருக்கும் மக்கள் வசதி படைத்தவர்களல்லர். மேலும் அவ்வாறான வழித்தடங்களில் பயணங்களில் ஈடுபடும் இஸ்லாமிய அன்பர்கள் ஒன்றினைந்தோ / தனித்தோ சென்னை வரை செல்லும் வழித்தடங்களில் இருக்கும் பள்ளிவாசல்களை புணரமைப்பு செய்ய முன் வந்தால் இறைவனின் நற்கூலி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை இன்ஷா அல்லாஹ் !
இன்னும்...
வழித்தடங்களில் அமைந்திருக்கும் பள்ளிவாசல்கள் ஒவ்வொன்றிற்கு அருகிலும் அதிரையின் ஐந்து கறி சோறும், கீழக்கரை கோழி குறுமாவும், காயல்பட்டினத்து நெய்நோறும் கிடைத்தால் இன்னும் சுகமாக இருக்கும் அல்லவா !?
உணவுவிடுதி தொழிலில் ஆர்வம் உள்ளவர்களும் சிந்திக்கலாமே...
தீனுக்கு அருகில் ’த்தீனும்’ கிடைக்க !
அ.ர.அ.ல.




