
கடந்து போகட்டும் - குறுகிக்
கைகட்டும் கோலங்கள்
கலைந்து போகட்டும்
கண்கட்டும் வித்தைகளைக்
களைந் தெடுக்கவே - கல்வி
கலைகற்று உலகில்
கிளர்ந்து எழட்டும்
கல்லாதோர் கூடி
கைப்பற்றிய நாட்டில் - நன்கு
கற்றுத் தேர்ந்தோர்
கைகள் உயரட்டும்
அளவுகள் விளங்காத
அறியாமை யாலேயே - காணி
களவுகள் போனது
கவனத்தில் இருக்கட்டும்
சட்டதிட்டம் எதிலும்
பட்டம் பெறாததால்- இன்று
கிட்டத்தட்ட சமூகம்
கெட்டதுவும் போதும்
பாமர சனமென
பாராமுகம் காட்டும் - நம்
பாராளு மன்றத்தினருக்குப்
பயந்ததுவும் போதும்
அறிவினில் சிறக்கவும்
அறிவியல் விளங்கவும் - நாம்
கல்வியின் மூலம்தான்
களம் காண வேண்டும்
வாசிக்கக் கற்பதுவே
வசிப்பதின் அர்த்தம் - இதை
வசியச் செய்வினைபோல்
வாழ்வினில் காண்போம்
கொடுக்கக் கொடுக்க
குறையாச் செல்வம் - கல்வி
எடுக்க எடுக்க
என்றும் நிலைக்கும்
பிச்சை எடுத்தேனும்
பயிலச் சொல்வர் - மூச்சை
விட்டுக் கொடுத்தேனும்
கற்கை நன்றே!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்