மனிதம் மருவி மிருகமாய் மாறிக்கொன்டிருக்கிறதோ என்று ஐயம் மேலிட ஆரம்பித்திருக்கிறது!
எங்கு பார்த்தாலும் தொடர் கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள், குண்டு வெடிப்பு, ஆள் கடத்தல் என மனிதம் அழிவை நோக்கி வேகமாய் நகர்ந்து கொன்டிருக்க இயல்பான நடைமுறைச் சம்பவங்களெல்லாம் இயற்கைக்கு முரனாய், நேருக்கு மாறாய் நிகழ்ந்து கொன்டிருக்கிறது.
குறிப்பாக பெண்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் கட்டுப்பாடின்றி அதிகரித்துக் கொன்டிருக்கிறது.
‘ஓடும் பேருந்தில் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்ட கல்லூரி மாணவி’
"குழந்தையை மருத்துவனையில் அனுமதித்த தாய் துப்புறவு தொழிலாளர்களால் கழிவறையில் கத்தி முனையில் வன்புணர்வு"
"கணவனை அடித்து உதைத்துக் கட்டிவைத்து அவன் கண் முன்னே மனைவியை கற்பழித்து அந்த மருத்துவமனை வெளியே நின்றுகொன்டிருந்த கும்பல்"
"பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பள்ளி மாணவியை ஒரு கும்பலால் கடத்தி வன்புணர்வு. அதே மாணவி முன்னொறு முறையும் இதே போலவே கடத்தப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்டாள்"
"எல்லாவற்றிற்கும் மேலாக தந்தையும், தாய் மாமனும், சகோதரனும் தன்னைச் சீரழித்ததால் தற்கொலைச் செய்து கொன்ட இளம் பெண். நம் ஈனச் செயலால் ஓர் உயிர் போய்விட்டதே என்ற குற்ற உணர்வே இல்லாமல் அவளின் தங்கையோடும் தொடர்ந்தது அரக்கர்களின் அட்டூழியம்!?"
"மகளைச் சீரழித்த தந்தை!? தன் கள்ளக் காதனோடு உறவுகொள்ள வற்புறுத்திய தாய்!? தற்கொலைக்காக இளம் பெண் ஆற்றில் குதித்த அவலம்..."
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மேலை நாட்டுத் தந்தை தன் மகளை பல ஆண்டுகள் அடைத்து வைத்து வன்புணர்ந்து, குழந்தைகளும் பெற்றததாகவும் தப்பி வந்த பெண் காவல் நிலையத்தில் புகார் செய்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. எங்கோ நடந்தாக கேள்விப்பட சம்பவங்கள் நம் நாட்டிலும் நடந்திருப்பது வேதனையே.
எங்கே போய்க் கொண்டிருக்கிறது கலாச்சாரத்திற்கும், பன்பாட்டிற்கும் பெயர் பெற்ற நம் தாய்த்திரு நாடு!
பாதுகாப்பு வேண்டி காவல் நிலையம் சென்றால் அங்கே களவாடப்படுகிறது கற்பு.
கல்வி கற்க பள்ளிக்கூடம் சென்றால் அங்கே காமத்துப்பால் கற்பிக்கும் ஆசிரியர்கள்.
இப்படியாக தொடர்ந்துகொன்டே போகும் குற்றங்களுக்கும், குற்றவாளிகளுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைத்தபாடில்லை.
நம் காவல் துறையும் நீதி மன்றங்களும் உட்சகட்டமாய் சாதித்தது, அப்பாவி இளைஞர்களை குறிப்பாக இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தளம் முழுதும் பரபரப்புச் செய்தியோடு கைது செய்து பத்துப் பதினைந்து ஆண்டுகள் சிறை வாழ்க்கைக்குப் பின் நிரபராதிகள் என இரகசியமாய் விடுதலை செய்ததே.
அரச பயங்கரவாதத்திற்கும், ஊடக விபச்சாரத்திற்கும் தீர்வில்லை. பாதிக்கப்பட்டு சிறைக் கம்பிக்கிடையே சீரழிந்த இளமைக்கும் இலவசமாய்ப் பெற்ற தீவிரவாதப் பட்டத்திற்கும் பரிகரம் ஏதுமில்லை.
"இந்தியாவில் 40 நிமிடத்துக்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறாள். இதில் பெரும்பாலான சம்பவங்கள் குறித்து காவல்துறையிடம் புகார் செய்யப்படுவதே இல்லை" என ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி புரோமிளா சங்கர் தெரிவித்துள்ளார்.
இச்செய்தியை வசிப்பவர்கள் அனைவரும் அதிர்ந்தே போவார்கள் நம் நாட்டின் நிலையை எண்ணி.
ஆள்வோரும், அரசு அதிகாரிகளும் முக்கியக் குற்வாளிகள் பட்டியலில் முதலிடம் இடம்பிடித்திருக்க பின் யார்தான் இப்பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் கொண்டு வருவது. கடும் தண்டனைச் சட்டங்கள் கொன்டுவரப்பட்டால் முதலில் நம் தலைதான் உருளும் என்ற நிலையில் ஆட்சியாளர்கள் அரசியல் வாதிகள் அரசு அலுவர்களும் இருக்க உரிய சட்டத் திருத்தங்கள் ஏற்படுவது குதிரைக் கொம்பே!
என்னதான் இவற்றுக்குத் தீர்வு?
அபு ஈசா