இன்ஷா அல்லாஹ் மாதங்களில் உயர்ந்த மாதங்களாகிய ரமலான் வருகிற நூறாவது நாளில் வர இருக்கிறது. (பிறை உதிப்பதை பொருத்து ஒரு நாள் முன் பின் ஆகக்கூடும்) பலர் ரமலானில் மட்டும் இபாதத்துகளை அதிகப்படுத்தி மற்ற நாளில் பொடுபோக்காக இருந்து விடுகின்றனர். அவ்வாறில்லாமல் நாளின் ஒவ்வொரு ஓட்டமும் இஸ்லாமிய வழியில் செல்லவேண்டும். நமது ஒவ்வொரு செயலும் மற்றவர்களுக்கு படிப்பினையாக அமையும் படி இருப்பதே நாம் இஸ்லாத்தை எத்தி வைப்பதற்கு சமமாகும். இன்சா அல்லாஹ் குறைந்த பட்சம் இன்றிலிருந்தாவது எல்லா செயலும் முழு நடைமுறையும் குர்'ஆன், நபி வழியில் அமையட்டுமாக! ரமலான் பற்றிய சில ஹதீஸ் தொகுப்பு.
நபி(ஸல்)அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) ரமலான் மாதத்தில் நபி(ஸல்)அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி, வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை)ரமலானின் ஒவ்வொரு இரவும் -ரமலான் முடியும்வரை நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள். என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்.
ரமளான் மாதத்தில் பெருமானார்(ஸல்) அவர்கள் சடைவடையாமல் தர்மம் செய்யக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள் என்பதால் தான் மழைக்காற்றை விட வேகமாக வாரி வழங்குவார்கள் என்ற உதாரணத்தை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறி இருக்கின்றார்கள்.
புனித ரமளான் மாதத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய வழி முறையை நாமும் நம்மால் இயன்றளவு பின் பற்றி தேவையுடையோருக்கு வாரி வழங்க முன் வரவேண்டும்.
அவ்வாறு தேவையுடையோருக்கு வாரி வழங்குவதால் நம்முடையப் பொருளாதாரம் குறைவதில்லை மாறாக அவற்றை அல்லாஹ் பல்கி பெருகச்செய்வதாக கீழ்காணும் திருமறை வசனத்தில் கூறுகின்றான்.
தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம் “ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம் மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும். “ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நுல்: முஸ்லிம் (2119)
கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல் யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (1901), முஸ்லிம் (1393)
சுவர்க்கத்தில் தனி வாசல் நோன்பு நோற்றவர் மறுமை நாளில் தனி வாசல் மூலம் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும் நுழைய முடியாது. “சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121)
அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம் “நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1894)
“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1904)
இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்வுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருளாகும்.
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது இம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும்.
உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.
எனவே வரும் ரமலான் மாதத்தை, நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நற்செயல்களை இப்போதிலிருந்தே செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!
M.H.ஜஹபர் சாதிக்