"ஹெல்ப்..."
"ஈஸ் எனிபடி அவுட் தேர்...?"
நான்காவது தடவையாகக் கத்திக் கத்திக் கூப்பிட்டும் ஒரு பதிலும் வராததால் லேசாக பயம் தொற்றிக் கொண்டது. கூவிக் கூப்பிட்டாலும் எதிரொலி கேட்குமளவிற்குப் போதுமான இடைவெளி சுவர்களுக்கிடையே இல்லாததால் சுரத்து இல்லாத ஓர் அபயக் குரலாக நமத்துப்போய் ஒலித்தது என் குரல்.
என்னை மெல்ல மெல்ல அச்சம் சூழ்ந்து கொள்ளத் துவங்கியது. செய்வதறியாது தவித்த என்னை உலுக்கியெடுத்தது என்னைச் சுற்றி நிலவியத் தனிமையும் மயான அமைதியும். முகத்தில் பீதி பரவ கவலையுறலானேன். எதிர்மறை எண்ணங்கள் ஆட்கொள்ளத் துவங்க, வாழ்க்கை இத்துடன் முடிந்தது என்று உள்மனம் ஓயாது ஒலித்துக் கொண்டிருந்தது. உதவி கிடைக்கும் என்கிற உத்தரவாதம் சற்றும் இல்லாத சூழ்நிலையில் வசமாக மாட்டிக்கொண்டது புரிந்தது.
சம்பவம் நடந்தது இரண்டாயிரத்து ஆறில். அப்போது நான் ஒரு ஸ்டூடியோ ஃப்ளாட் என்றழைக்கப்படும் ஒற்றையறைக் குடியிருப்பில் முதல் தளத்தில் தனியாக வசித்து வந்தேன். ஜீகோ ரவுண்டபவ்ட் என்னும் பரிச்சயமான இடத்தில் ஷார்ஜாவின் தொழில்நகரப் பகுதியில் இருக்கிறது நான் வேலை செய்யும் நிறுவனமும் அதையொட்டி அமைந்துள்ள குடியிருப்பும். போக்குவரத்துக்காக கணிசமான தொகையும் நேரமும் செலவு செய்யும் அமீரக நடைமுறைக்கு மாற்றமாக நான் வேலை முடிந்த மூன்றாவது நிமிடத்தில் வீட்டுக்குப்போய் விடுவேன்.
அப்படித்தான் அன்றைக்கும் வேலை முடிந்தவுடன் மாலை 06:00 மணிக்கு வீட்டுக்குப்போய் வாயிற்கதவைத் திறந்து உள்ளே போனதும் சாவிகொண்டு கதவை பூட்டிவிட்டு, அனிச்சையாகவே தொலைக்காட்சிப் பெட்டிக்கு உயிர் கொடுத்து விட்டு உடை மாற்றிக் கொண்டேன். குளியலறைக்குச் சென்று கைகால் முகம் கழுவி கொஞ்சம் புத்துணர்வு பெறலாம் என்று குளியலறைக் கதவைத் திறந்து…உள்ளே போய்… கதவைச் சாத்த… சாத்தும் போது கதவின் பூட்டுக்குள் இருந்து ஏதோ உதிரிபாகங்கள் கழன்று உள்ளுக்குள்ளேயே விழுவது போல் சப்தம் கேட்க…’நாம்தான் பூட்டவில்லையே, சாத்தித்தானே வைத்திருக்கிறோம்’ என்று அலட்சியமாக விட்டுவிட்டு முகம் கழுவத் தொடங்கினேன்.
திறந்தவெளியில் கனரக எந்திரங்களோடான என் பணியில் சூடும் தூசும் அன்றாட வாழ்க்கையில் நான் அனுபவிக்கும் அம்சங்கள், ஆதலால் தொழுகை நேரங்களில் ஒலூச் செய்வதும் வீட்டுக்கு வந்ததும் குளிர்ந்த நீரில் கைகால் முகம் கழுவுவதும் எனக்கு மிகுந்த ஆறுதலையும் புத்துணர்வையும் கொடுக்கும். ஆனால், அன்று அந்தப் புத்துணர்வு சற்று நேரம்கூட நீடிக்கவில்லை.
குளியலறையை விட்டு வெளியே வருவதற்காக நீர் சொட்டச்சொட்டக் கதவின் கைப்பிடியை அலட்சியமாகத் திருக அது எந்த உட்பிடிப்போ எதிர்விசையோ காட்டாமல் இலகுவாகத் திருகியது, ஆனால்… கதவு திறக்கவில்லை. மீண்டும் மீண்டும் திருகத்திருக ஒன்றுமே நகரும் அல்லது திறக்கும் சப்தம் கேட்காததால் சற்று நிதானித்து மெல்லமெல்ல பல கோணங்களிலும் கைப்பிடியை அமைத்துத் திருகினேன். ம்ஹூம்… லேசான குழப்பத்தோடு தொடர்ந்து செய்த முயற்சியின் முடிவில் ஒன்று தெளிவாக விளங்கியது. அது என்னவென்றால், கதவின் பூட்டில் ஏதோ ஒரு போல்ட்டோ ஸ்க்ரூவோ லூசாகி, உள் உபகரணங்கள் கழன்று, பூட்டு தானாகவே உள்ளே பூட்டிக் கொண்டது.
பூட்டிக்கொண்டது என்பது உரைத்ததும் மாட்டிக்கொண்டேன் என்பதும் புரிந்தது. எனக்கு அது ஒன்றும் சட்டென்று பெரிய விபரீதமாகப் படவில்லை. ஏதாவது ஸ்குரூ ட்ரைவரோ ஸ்பானரோ இருக்கிறதா என்று தேடினேன். குளியல் சாமான்களையும் ஷேவிங் ரேசரையும் தவிர வேறு எந்த சாமானும் இல்லாமல் மிகச் சுத்தமாக வைத்திருந்தேன் பாத் ரூமை. கத்தியோ வேறு எந்த இரும்பு உபகரணமோகூட இல்லையென்றதும் எப்படி கதவைத் திறப்பது என்பது கவலையளித்தது.
அன்று வியாழக்கிழமை என்பதால் நான் உள்ளேயே இருந்தாலும் கம்பெனியில் யாரும் என்னைச் சனிக்கிழமைவரைத் தேடமாட்டார்கள். இந்த எண்ணம் உதித்ததும் மனம் பயத்தில் அதிர்ந்தது. வெற்று அறைக்குள் சன் ட்டிவி செய்தி வாசித்துக்கொண்டிருப்பது சன்னமாகக் கேட்டது. கைபேசிகூட அறையில் மேசைமேல் வைத்திருந்தேன். வெளியே போகாமல் அதைக்கொண்டு எந்த உதவியும் நாட முடியாது. என்ன செய்வது?
அந்தக் குளியலறை ஒன்றரைக்கு இரண்டு மீட்டர் சதுர அளவில் மட்டுமே இருக்கும், குறுகலானது. ஒரே ஒரு எக்ஸாஸ்ட் ஃபேனைத்தவிர வேறு எந்த ஜன்னலோ திறப்போ இல்லாதது. சிட்டவுட்டின்மேல் ஏறிநின்று அந்த எக்ஸாஸ்ட் ஃபேனின் வழியாக சப்தம் போட்டேன். அங்கிருந்துதான் இந்தக் கட்டுரையும் தொடங்குகிறது.
நிதானம் இழக்கக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இங்கே மாட்டிக்கொண்டு சாவதைவிட வேறு ஏதாவது முயற்சி செய்தே ஆகவேண்டும் என்று தீர்மாணித்தேன். பாத்ரூமின் உள்ளே வரும்போது வெளிச்சம் இருந்ததால் வெளியில் உள்ள குளியலறை விளக்கிற்கான ஸ்விட்ச்சைப் போடாமல்தான் வந்திருந்தேன். நேரம் ஆக ஆக வெளிச்சம் மங்கி பாத்ரூமிலும் இருள் சூழ்ந்தது. கட்டுரையின் இந்த இடத்தில் “தொடரும்” போடுமளவுக்கு எனக்கு பயமாக இருந்தது.
கதவை எட்டி உதைக்க அது மிக கடினமாக இருந்து அசைந்து கொடுக்கவில்லை. அடி உதைகளை வாங்கிக்கொண்டு அலுங்காமல் குலுங்காமல் அப்படியே இருந்தது.
முதல் முயற்சியாக, கைப்பிடியை பலம் கொண்டமட்டும் பிடித்து இழுத்துப்பார்த்தேன். இழுத்தால் என்னாகும் எதற்காக இழுக்கிறேன் என்றெல்லாம் யோசிக்கவில்லை, இழுத்தேன்…இழுத்தேன். ஆட்டி அசைத்து இழுக்க ஒரு பலம்பொருந்திய இழுப்பில் கைப்பிடி கையோடு வந்தது. நானும் இழுத்த வேகத்திற்கான உந்து விசையோடு பின்னால் இருந்த வாஷ்பேஸனில் இடித்துக்கொண்டு கீழே விழாமல் தப்பித்தேன். கைப்பிடி இருந்த இடத்தை உற்றுநோக்கி ஆராய்ந்ததில் ஒன்றுமே புரியவில்லை. விரலைவிட்டுத் துலாவினேன். ஏதேதோ தட்டுப்பட இழுத்துப்பார்த்தேன். எதுவும் வரவில்லை, பயத்தைத்தவிர. அறைக்குள் “ஆணியே புடுங்க வேணாம்” என்று ஏதோ ஓடிக்கொண்டிருந்தது. முகத்தில் ஈயாடவில்லை; சிரிப்பு எங்கிருந்து வரும்?
முதல் முயற்சியில் தோற்று இரண்டாவதாக கதவின் அடிப்பாகத்திலிருந்து வந்த வெளிச்சம் எனக்கு களங்கரை விளக்காகத் தெரிய அதன்கீழ் விரல்களை விட்டு மேல்நோக்கி நெம்பிப்பார்க்கலாம் என்று முயன்றேன். அந்த இடுக்கு என் விரல் புகும் அளவுக்கு திறந்தில்லாமல் சிறியதாக இருந்ததால் விரலும் வலிக்க தலையும் மெல்ல வலிக்கத் துவங்கியது. அப்படியே சிட்டவுட்டின் மூடியில் உட்கார்ந்து தலையைப் பிடித்துக் கொள்ளவும் எங்கோ போடப்பட்ட விளக்கின் வெளிச்சம் எக்ஸாஸ்ட் வழி சற்றே என் பாத்ரூமுக்குள் வரவும் சரியாக இருந்தது. அந்த வெளிச்சத்தில் அப்பத்தான் பார்ப்பதுபோல் கதவைப்பார்த்தேன். பலகை தண்ணீர்பட்டு வீணாகாமல் இருக்க அலுமினிய தகடு பொறுத்தி கதவின் கீழ்பாதியில் பொடி ஆணி வைத்து அடித்திருந்தார்கள். பொடி ஆணி! கழட்டுவது சுலபமாயிற்றே என்று பொறி தட்ட, மூன்றாவது முயற்சிக்கான துவக்கம் கிடைக்க, ஆரம்பித்தேன்.
ஆணி அடிக்கப்படாத விளிம்புகளில் கதவின் மரப்பலகைக்கும் அலுமினியத் தகட்டுக்கும் இடையே இருந்த வெடிப்புப்போன்ற பகுதியை மெல்லமெல்ல நெம்பினேன். விட்டுவிட்டு வேகமாக நெம்ப முதல் ஆணி தெரித்து விழுந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆணிகளும் தெரித்து விழுமளவுக்கு விட்டுவிட்டு இழுக்க அலுமினியத் தகடு கையோடு வந்துவிட்டது. சுதாரித்து மேற்கொண்டு என்ன என்று பார்க்க, கதவின் ப்ளைவுட் என்னைப்பார்த்து ‘பெப்பே’ என்பதுபோல் இருந்தது. முழுக்கதவும் மதில்சுவர்போல் என் முல் நின்றது. மறுபடியும் இனி ஒன்றும் செய்யமுடியாது என்று ஆனவுடன் ஆண்டவன் கொடுத்த பற்கள் மட்டுமே ஆயுதம் எனக் கொண்டு நான்காவது முயற்சியைத் தொடங்கினேன்.
ப்ளைவுட்டை பலம்கொண்ட மட்டும் பற்களும் உதடுகளும் வலிக்க வலிக்க கடித்தேன். தேங்காய் துருவுவதுபோல் பிராண்டினேன். 20 நிமிட முயற்சியில் ப்ளைவுட்டின் நான்கைந்து இழைகளைக் கடித்துத் துப்பிவிட்டு, அலுமினிய தகட்டை கூறாகச் சுற்றிக்கொண்டு அதை அந்த ப்ளைவுட்டின் ஓட்டை வழியாக உள்ளே விட்டு நெம்பி... நெம்பி... ரெண்டடிக்கு ரெண்டடி அளவிலான பலகையை பெயர்த்து எடுத்துவிட்டேன். அன்றுதான் கதவின் உட்கட்டமைப்பு எனக்கு முழுக்கத் தெரிந்தது. மரச்சட்டங்களைக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக பொறுத்தி இப்புறமும் அப்புறமும் ப்ளைவுட் கொண்டு மூடி வடிவமைத்திருந்தார்கள். இப்போது கதவு பலகீனப்பட்டுப் போயிருந்ததால் மனதிற்கும் கொஞ்சம் தெம்பு வந்துவிட்டிருந்தது. கீழே அமர்ந்து இரண்டு கைகளையும் பின்னால் ஊண்றிக் கொண்டு இரண்டு கால்களாலும் சட்டத்தை எட்டி உதைய சட்டமும் அப்புறத்து ப்ளைவுட்டும் தடார் புடார் என்று உடைந்தன. நான் வெளியேறும் அளவிற்கு ஓட்டைக் கிடைத்ததும் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லிக்கொண்டே வெளியேறி, கம்பெனியின் கார்ப்பென்டருக்கும் ஃபோன் செய்தபோது மணி 10:40 ஆகிவிட்டிருந்தது.
இந்தப் பொறியில் சிக்கிய நாள் என் வாழ்நாளில் மறக்கமுடியாத திக்…திக்…!
******
“பட்டானும் பஞ்சாபியும்”

“நாங்கள் மறுக்கவில்லை சபீர் பாய். இவர்களுக்கு உடல் வலிமை கூடுதல் ஆனால், மூளை குறைவு” என்றான்.
“எதை வைத்து அப்படி சொல்கிறாய்?”
“எங்கள் ஊரில் பஞ்சாபி, பட்டான் ஆகிய இரண்டு வம்சாவழியினரும் வசிக்கிறோம். ஒரு முறை…” என்று அவர் சொன்ன சம்பவம் உண்மையா பொய்யா என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் சொல்லிவிடுகிறேன்.
ஒரு முறை நம்ம பட்டான் வீட்டில் ஒரு திருடன் புகுந்து விட்டான். நம்ம பட்டான் அவனை சாதுர்யமாகப் பிடித்து கட்டிப் போட்டுவிட்டான். கட்டும்போதே, “ நீயும் பட்டான் நானும் பட்டான். தெரியாமல் திருட வந்து விட்டேன். என்னை விட்டு விடு” என்று சொன்ன திருட்டு பட்டானை விட மறுத்து விட்டார் நம்ம பட்டான். திருட்டுப் பட்டானின் கைகால்களைக் கட்டிப்போட்ட கையோடு போலீஸில் சொல்ல வெளியே கிளம்பினார் நம்ம பட்டான்.
உடனே திருட்டு பட்டான், “ அதுதான் கால்களைக் கட்டிப் போட்டு விட்டாயே. நான் தப்பித்து ஓடி விடமுடியாதே. பிறகு ஏன் கைகளையும் கட்டிப் போட்டாய். கைக்கட்டையாவது அவிழ்த்து விடு” என்று கெஞ்சினார். திருட்டுப்பட்டான் சொன்னதில், கால்கள் கட்டப்பட்டால்தான் ஓட முடியாது என்கிற நியதி இருந்ததால், நம்ம பட்டான் கைக்கட்டை அவிழ்த்து விட்டுவிட்டு போலீஸூக்குப் போனார்.
போலீஸில் எல்லா விவரத்தையும் சொன்னவர் கைக்கட்டை அவிழ்த்து விட்டதையும் சொல்ல, பஞ்சாபி போலீஸோ, “அட மடையா, கைக்கட்டை ஏன் அவிழ்த்து விட்டாய். தன் கைகளைக்கொண்டு கால் கட்டையும் அவிழ்த்துக்கொண்டு ஓடிப்போயியிருப்பானே?” என்று அலுத்துக்கொண்டார். ஒரு கணம் தடுமாறிய நம்ம பட்டானோ சுதாரித்துக் கொண்டு, “இல்லை இல்லை, நீங்க வாங்க, அவன் அங்கேதான் இருப்பான். வந்து கைது செய்யுங்கள்” என்று கட்டாயப்படுத்த போலீஸோ மறுத்தார், “வர முடியாது. அவன் போயிருப்பான். போடா முட்டாளே” என்றார். நம்ம பட்டானோ, “ அவன் போயிருக்க மாட்டான். வாருங்கள்” என்று மீண்டும் மீண்டும் சொன்னதால், “ நீ எதை வைத்து அவன் தப்பியிருக்க மாட்டான் என்று சொல்கிறாய்?” என்று கேட்க, “ தன் கட்டப்படாத கைகளால் கால்கட்டை அவிழ்ப்பான் என்று எனக்குத் தோன்றாதது அவனுக்கும் தோன்ற வாய்ப்பில்லை. ஏன்னா, நானும் பட்டான் அவனும் பட்டான்.” என்றார்.
சரி போய்த்தான் பார்ப்போமே என்று கிளம்பி பட்டான் வீட்டுக்குப் போனார் போலீஸ். அங்கே….
திருட்டுப் பட்டான் கால்கள் கட்டப்பட்ட நிலையில் முழங்கால்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு பரிதாபமாக அதே இடத்திலேயே உட்கார்ந்திருந்தார்.
*-*-*-*-*-*-*
வெயில் தெளித்து
நிழற் கோலமிட்ட
முதிர்க்காலை நேரத்து முற்றம்
மழை ஓய்ந்து
மணல் காய்ந்தும்
உதிராமல் சிதறாமல்
உலர்ந்திருந்த
சக்கரங்கள் பதித்த
முப்பரிமாணத் தடங்கள்
வானவில் உடைந்து
வாசலிற் சிதறியதுபோல்
வர்ணங்களோடு
தானியம் கொத்தும் கோழிக்குஞ்சுகள்
செங்குத்தாக விழுந்து
உணவு கொத்தும்
மீன்கொத்திகள் பறந்துதிரியும்
குளங்கள்
ஒழுகும்
கூரை வழியே
மழை நிரப்பியப் பாத்திரங்களைப்போல்
தூய எண்ணங்களால்
மனம் நிரம்பி வழியும்
என் ஊர்க்காரர்கள்
அன்றாட வாழ்க்கையில்
அடிக்கடி கடக்க நேரும்
மைய வாடிகள்
வாழ்க்கையின் இலக்கை
நினைவுருத்திக் கொண்டிருக்க
குரல்வளம் செழிக்கக்
கூட்டுப் பிரார்த்தனையையொத்த
பாங்குகளினோசையிலும்
எம்
குலத்தின் சோற்றிலும்
குளத்தின் சேற்றிலும்
களத்தின் காற்றிலும்
நிலத்தின் ஆற்றிலும்
உளத்தை உருக்கும்
உணர்வுகள் ஊறிக்கிடக்க
எனதூர் எனக்குயிர்!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்