ஒரு வெள்ளிக்கிழமை மதியம் சாப்பிட்டுவிட்டு கோடி ருபாயை கொட்டிக் கொடுத்தாலும் வளைகுடா விடுமுறை பகல் பொழுதில் எழுந்து செல்ல மனது இடம் கொடுக்காத அந்த நேரத்தில் "தம்பி அ.த.ம.ஆண்டு விழாவுக்கு வர்ரீங்களா நமக்கு ஃப்ரீ டிக்கெட் இருக்குன்னு" கவிக் காக்கா உசுப்பேத்த 'சரி அதுல என்னமோ நம்மூரு காரவெலெல்லாம் பேசி வாதாடப்போறாங்கன்னு' ஒரு பில்டப் கொடுத்து, அந்தப் பேச்சாளரை தேராவிலிருந்து நீ(ங்கதான்) கூப்பிட்டுக்கிட்டு வரனும்னு வேற சொல்லிட்டாங்க....

இதற்கு முன்னர் நடந்த எத்தனையோ விழாக்களுக்கெல்லாம் இலவசமாகவும், சிறப்பு அழைப்பின் பேரிலும் செல்ல வாய்ப்பு கிடைத்திருந்தாலும் இந்த மாதிரியான ஒரு வாய்ப்பு நிரம்பவே வித்தியாசமாக இருந்தது என்று சொல்லாவிட்டாலும் மிகையாயிருக்காது.
இன்முக வரவேற்பு, சேர்த்து வைத்தால் ஒரு புத்தகம் போடும் அளவுக்குத் துண்டு விளம்பரப் பிரசுரங்கள், இலவச மருத்துவ முகாமுக்கான படிவம், அதற்கிடையில் வழியிலேயே மறித்த புடவை கட்டிய பெண்களில் இருவர் "சார் (தமிழில் ஐயா என்பதை மாத்திட்டாங்களாம்) இதில் உங்க பெயரையும் மொபைல் நம்பரையும் எழுதிக் கொடுங்க" என்று மிக அருகில் நெருங்கி நின்று கொண்டார் அதனை வீட்டுக்காரவொல்லாம் பார்த்தங்கன்னா எவ அவன்னு கோபப்பட்டால் வருத்தப் பட வாய்பே இல்லை.
அமீரகத்தில் தமிழ் வளர்த்த, அமீரகத்தில் தமிழ் போற்றும், அமீரகத்தில் தமிழர்களின் நலனை(!?) போற்றும் மன்றம் இப்படியாக அடைமொழிக்கெல்லாம் சொந்தமானதாக இருக்குமோ என்றுதாங்க நாங்களும் ஆவலாய் சென்றோம்.
அங்கே ஆல்-இன்-ஆல் அழகராஜாவாக ஒருவரே எல்லாம் என்று மைக்கையும் பிடித்தார்... தமிழ் தாய் வாழ்த்து என்று அ.த.ம.பொறுப்பாளர்கள் பார்வையாளர்கள் அனைவரையும் எழுந்து நிற்க வைத்து பாடினார்கள்.... அப்போதுதான் பள்ளிக் காலங்களில் படித்த பாட்டு அப்படியே மனதிற்குள் ஓடியது ! பக்கத்திலிருந்த கவிக் காக்கா இதில் வணக்க வழிபாடுகள் வருகிறதே... என்று முனுமுனுத்தார்கள்... யோசிக்க நேரம் கொடுக்கவில்லை வாழ்த்துப்பா படிய அமைப்பாளர்கள்.
ஸ்பான்சர்ஸ் லிஸ்ட்டை ரொம்பவே கஷ்டப்பட்டு வாசித்துக் காட்டினார்கள்
தமிழுக்கான சேவை ஆரம்பமானது....!!? வேற என்னங்க ! இரண்டு இளம் பெண்கள் புதுமையாக வடிவமைத்த நடனம், புதுமையான பெயர் வேறு அதுக்கு வைத்து இருட்டிலும், வெளிச்சத்திலும் ஆடிவிட்டு கைத்தட்டு பத்தாதுன்னு மைக்கைப் பிடித்த ஒரு பெண் சொல்ல பார்வையாளர்களும் போனாப் போகட்டும் என்று கையில் இருந்த தூசியை தட்டினார்கள்.
வரவேற்புரை, வாழ்த்துரை இப்படியாக வழமையான விழாவாக துவங்கியது, அந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஆண்டுவிழா மலர் வெளியீடும் இருந்தது. சிறப்பு விருந்தினராக வந்தவர்களும், சிரிப்பு விருந்தினராக வந்தவரும், சினிமாவைத்தான் பேசினார்கள் (தமிழுக்கான சேவை).
இன்றைய காலகட்டத்தில் கருவிலிருந்து வெளிவரும் சிசுவுக்கும் ஒரு சிம் கார்டு என்ற எழுதப்படாத பாலிஸி இருப்பதால் தாய் மொழியை செல்லிடையில் தட்டி தட்டி தாலாட்டு பாடுவது எப்படின்னு சொல்லிக் காட்டினார்கள், நான்காம் தமிழ் என்றார்கள்… ஏனோ தமிழ் யுனிகோடுக்கு கோடு போட்டவங்களை ஞாபகமே படுத்தலை ஒருவேளை அது போன தலை முறைக்குத்தான் ஞாபகம் இருக்கும்னு விட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன். இருந்தாலும் அங்கே சொன்ன விஷயம் ஆண்ட்ரய்டு பயனாளிகளுக்கு பயன்பட்டிருக்கும் நிச்சயம்.
சிறப்பு விருந்தினர் அவர் பட்டிமன்ற சிறப்பு பேச்சாளார், எடுத்த எடுப்பில் சொன்னது ஆண்டுவிழா மலரில் அவரின் பெயரில் தமிழ் நிமிர்ந்து நின்றதாகச் சொன்னார் அவரின் பெயருக்கு முன்னாள் இட்டுக் கொள்ளும் 'அவனி' என்ற பெயரை 'ஆவனி' என்று அச்சடித்தது மட்டுமல்ல திரு என்பதற்கு பதிலாக திருமதி என்று அச்சடித்த அ.த.ம.ஐ பாராட்டினார்.... அந்த திருமணமாகாத ஆண் சிறப்பு விருந்தினர்.
ஆண்டுவிழா மலர் வெளியிடப்பட்டது, வெளியிட்டவர்களும் அதனைப் பெற்றவர்களும், மைனா, கும்கி என்ற இரண்டு சினிவைப் பற்றி சிலாகித்தார்கள், எல்லா நல்ல(!!?) படங்களையும் பார்ப்பதாகச் சொன்ன நன்கறியப்பட்ட சிறப்பு விருந்தனர் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்ற சினிமா பார்த்ததாகவும் அதனைப் பாராட்டியும் தகவல்கள் சொன்னார்கள்.
கும்கி என்ற சினிமாவை எடுத்த சாலமன் என்ற சினிமா இயக்குனர், அவரும் எப்படி படம் எடுத்தேன் எப்படி தோற்றேன், எப்படி ஜெயித்தேன் என்று சினிமா காட்டினார் பூரித்துப் போனது பார்வையாளர் பக்கம் அதன் தாக்கம் யார் வேனும்னாலும் கேள்வி கேட்லாம்னு அறிவித்ததும் போ(ட்)டா போ(ட்)டி அங்கே முகஸ்துதிக்குதான் !
சிரிப்பு விருந்தினர் ஆரம்பத்தில் கிச்சு கிச்சு மூட்டினர், கைதட்டனும் என்ற கட்டாயம் இருந்ததுபோல் பார்வையாளர்களும் தூசியை தட்டிக் கொண்டிருந்தனர் ஆரம்பத்தில் அவரும் சினிமாவுக்குள் புகுந்தார் அரங்கம் பரபரப்பானது, நிறைவில் அம்மாவையும் தாத்தாவையும் இழுத்தார் அரங்கம் அதிர்வில் ஆடியது!
வயர்லெஸ் மைக்கை கூகிலிலும், யாஹுவிலும் தேடச் சொல்லியிருந்தால் பட்டென்று படமாவது கிடைத்திருக்கும், ஆனால் இரண்டு குழுவுக்கும் கொடுக்க மைக் போதவில்லை எங்கே மைக் என்று கேட்டது மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது மைக்கில்.
இதெல்லா வற்றையும் விட முத்தாய்ப்பாக "அவர்களா இவர்களா" என்று கருத்தாடல் இரண்டு குழுக்களுக்கிடையே "விஜய் டிவி நீயா நானா கோபிநாத்" நடத்தினார், அவரின் மடைதிறந்த பேச்சும், தெளிவான காட்டுகளும், நிதர்சனம் சொல்லும் நேர்மையும் என்று அசத்தினார் இடையிடையே பசி வயிற்றை கிள்ளுது என்று தோசைப் பிளாசாவை நினைத்தே புலம்பியும் கொண்டிருந்தார்.... (இங்கே தாங்க தமிழ் எழுதிருச்சு உட்கார்ந்தது)
மூவரைத் தவிர மற்றவர்கள் பேசியதில் எதுவுமே சரியாக பிடிபடவில்லை, அந்த மூவரில் நம்ம ஊருக்கரவொலும் நச்சென்று பேசியது அது அவருக்கே உரிய பாணியில் பேசியது ரசிக்கும் படி மட்டுமல்ல அந்த நிகழ்வின் சுவராஸ்யத்தை கூட்டியது... அங்கே தாங்க தமிழ் எழுந்து நின்றது...
நிறைவாக கோபிநாத் அவரின் வழக்கமான உரையை நிகழ்த்தி விட்டு சிறந்த பேச்சாளரை (!!?) தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவரிடம் கொடுக்க அவரோ இரண்டு குழுக்களில் இருந்தவர்களிடமே கேட்டு தேர்ந்தெடுத்து விட்டார்... இங்கே தாங்க தமிழ் எழுந்ததும் நடையைக் கட்டியது !
இன்பத் தமிழ் எனும் போதினிலே தேன் வந்து பாயுது காதுனிலேன்னு பாடவெல்லாம் தோனலைங்க விட்டாப் போதும் என்று வெளியில் விறு விறுவென்று வந்துட்டேன், திரும்பிப் பார்த்தா கவிக் காக்காவைக் காணோம் ஆஹா ! தமிழ் சங்கமத்தில் தொலைத்து விட்டோமா என்று ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தேன்... அந்த தமிழ் சங்கமத்தில் நீச்சல் அடித்து ஒரு மீனைப் பிடித்த சந்தோஷத்தில் வெளியில் வந்தார்கள் அதுதாங்க ஆண்டு விழா மலர்.
ஆளுக்கு ஒரு திசையில் காரை ஓட்டிக் கொண்டு வந்துட்டோம்.... இதுக்குமேலே கவிக் காக்கா தொடர்வார்கள்....
தொடர் ஓட்டப் பந்தயத்தில் பள்ளிப்பிராயத்தில் அஸ்லத்திடம் வாங்கிய பட்டனுக்குப் பிறகு அதே தோரணையில் எழுதிய இந்தப் பதிவின் பட்டனை முந்தி வந்து தந்த அபு இபு(வின் தொந்தி) நிறைய வாழ்த்தி…
ஆளுக்கு ஒரு திசையில் காரை ஓட்ட நினைத்ததென்னவோ சரிதான். ஆனால், அபு இபு துபை போவதற்குப் பதில் ஷார்ஜா ரோட்டைப் பிடிக்க, பின்னால் வந்த நான் அலைபேசி “எங்கே போறீங்க?” என்று கேட்டேன். “துபை” என்றவரிடம் “அப்டீன்னா ஒரு யு டர்ன் அடிச்சு மம்ஸார் சாலையைப் பிடிங்க” என்றேன். பேச்சாளரைக் கடத்திச் செல்லும் எண்ணம் அவரிடம் இல்லையென்றாலும் ‘அந்த நெருங்கி நின்ற புடவை’ வழியை மாற்றக்கூடாதல்லவா?
இதிலே வேடிக்கை என்னவென்றால், என்னுது காம்ரி கார் என்றாலும் அதைக் கார்ஷா குதிரைவண்டி ரேஞ்சுக்குத்தான் பழக்கி வச்சிருக்கேன். ஸ்டார்ட் பண்ணினால் வீடு, வீட்டிலிருந்து அலுவலகம், அங்கிருந்து ஸ்கூல் என்று தானாகவேப் போய்ட்டு வந்துடும். நான் வளைச்சி நெளிச்செல்லாம் ஓட்ட வேண்டியதில்லை. அத்தோடு, என் கார் பூகோளத்தில் கொஞ்சம் வீக், நானோ எங்கே எத்தனை முறை போய் வந்தாலும் அந்த இடத்திற்கு மீண்டும் போக சரித்திரத்தில் கொஞ்சம் வீக். அப்பேர்பட்ட நானே சாலை வழிகளில் தேர்ந்த அபு இபுவுக்கு வழி சொன்னேன் என்றால் கிரகத்தை என்னவென்பது. இதுல இன்னொரு மேட்டர் என்னென்னா, பேச்சாளன் என் நண்பன் செய்யது அஹமது கபீர் வேறு அந்தக் காரில் இருந்தான். அவனுக்கு துபையின் எல்லா ரூட்டும் அத்துபடி. எனக்குத் தெரிந்து துபையில் கார் லைசென்ஸ் வாங்கிய 20 ஆண்டுகளில் ஒரு விபத்துகூட செய்யாத ஒரே ஆள் இவன் தான். அதெப்படி என்கிறீர்களா? கடைசியில் சொல்றேன்.
அடுத்த இரண்டு நாட்கள் அமீரகத்தனமாகக் கடக்க, மூன்றாவது நாள் ஆஸ்ஃபால்ட் பேவரின் (asphalt paver) லெவெலிங் சென்ஸார் (leveling sensors) செயல்திறன் குறைபாடு பற்றிய பரிசோதனையில் இருந்தபோது அந்த ஃபோன் வந்தது. அதில் ஒரு பெண் என்னை வாழ்த்தி எனக்குப் பரிசு விழுந்திருப்பதாகச் சொன்னது. பிறந்த நாள் முதல் எந்த ரூபத்திலும் எனக்கு எந்தப் பரிசும் விழுந்திருக்கவில்லையாதலால் குழம்பினேன். “மலையாளியானோ?” என்ற கேள்விக்கு, “மலையாளம் மனசுலாக்காம்” என்று சொல்ல, அந்தப் பெண் ஏற்கனவே பதிவு செய்து வைக்கப்பட்ட தோரணையில் மலையாளத்தில், “அமீரகத் தமிழ் மன்ற” நிகழ்ச்சியின்போது நான் எழுதிய கூப்பனுக்குப் பரிசு விழுந்திருப்பதாகவும், அதன்படி இந்தியாவில் எந்த நட்சத்திர ஹோட்டலிலும் ஒரு வாரம் குடும்பத்தோடு இலவசமாகத் தங்கலாம்” என்றும் “ஓஃபிஸில் வந்து வாங்கிக்கொள் ச்சேட்டா” என்றும் பரைஞ்ஞது.
எனக்கு எதிர்வரும் ஜூலை ஆகஸ்ட் விடுமுறையில் என்ன செய்யலாம் என்கிற குழப்பம் சட்டெனத் தீர்ந்தது. சர்தான், வடநாட்டுப்பக்கம் குடும்பத்தோடு போய் தங்கிட்டு வரலாம் என்று திட்டமிட்டுக்கொண்டே அபு இபுவை அழைத்தேன். அந்தப் பெண் எவ்வளவுதான் விளக்கமாக அட்ரெஸ் சொல்லியும் விளங்காத நான் (என் காரின் பூகோள அறிவைப்பற்றி ஏற்கனவே சொல்லியாயிற்று) அபு இபுவிடம் சொன்னதும் “ஓ அந்த ஹோட்டலா, வாங்க போலாம்” என்றார்.
Country club ஹோட்டலின் ஒரு ஹால். சிங் என்னும் பெயரைத் தவிர வேறு சர்தார்ஜிக்கான எந்த அடையாளமும் இல்லாத இளைஞனும் அவன் மேலாளரும் வரவேற்று வார்த்தைகளால் உபசரித்தார்கள். கட்டாயப்படுத்தியதால் நான் ட்டீ சொல்ல, அபு இபு ஒன்றுமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
கூப்பனைத் தரப்போவதாக, இதோ தந்துவிடப் போகிறோம், இன்னும் சிறிது நேரத்தில் தந்து விடுவோம், தந்தே விட்டோம் என்றெல்லாம் உஷார் காட்டிவிட்டுக் கொண்டே திருநெல்வேலிப் பக்கம் வீட்டு மனை வாங்கச் சொல்லியும் ஏதோ ஒரு விடுமுறைகால ரிஸார்ட்ஸில் ‘தங்க அட்டை’ உறுப்பினராகச் சேரச் சொல்லியும் பேசிக்கொண்டே இருந்தான் அந்த ட்டை கட்டிய ஆசாமி. (எனக்கு ட்டை கட்டிய ஆட்களுடன் பேசுவதென்றாலே சற்று அலர்ஜி. ஏனென்று பிரிதொரு பதிவில்). கடமையே கண்ணாயிய அபு இபுவோ யாவற்றையும் வழக்கம்போல் உண்ணிப்பாகக் கவனித்து நெறிப்படுத்திக்கொண்டிருந்தார். காரியதரிசியைப் பேசவிட்டுவிட்டு பதவிசாக அருகில் அமர்ந்திருக்கும் வெளிநாட்டுத் தூதுவர் போல இருந்தார் என்று சொன்னால் சரியாக விளங்கும்.
“ நேரமாகுது, ஆத்தா வையும், கூப்பனைக் கொடு” என்று அழாத குறையாகக் கேட்கவில்லையே தவிர, எல்லா அஸ்திரத்தையும் பிரயோகித்தும் விடாக்கண்டனாக அந்த ‘பல்லேபல்லே’ பேசிக்கொண்டேயிருந்தான். நான் விவரமாக, “உங்கள் ப்ரொஜெக்ட் சம்பந்தமான ப்ரோச்சர்ஸ் இருந்தால் கொடுங்கள். பார்த்துவிட்டு முடிவெடுக்கிறேன்” என்று கொடாக்கண்டனாக இருப்பதை உணர்ந்துகொண்ட அவன், எங்கள் விதிகளின்படி கூப்பன்களை உங்கள் ஈ மெயிலுக்கு அனுப்புகிறோம் சார்” என்றான். அப்பதான் இவிங்க எதுக்குக் கூப்பிட்டான்கள் என்று விளங்கியது.
3 நாட்களுக்குப் பிறகு மெயிலில் வந்த கூப்பனில் ஆயிரெத்தெட்டு நிபந்தனைகளோடு கூப்பனை பிரின்ட் அவுட் எடுக்கச் சொல்லி யிருந்தது. ஆனால், கூப்பனைப் பார்க்க அதை திறக்கவே முடியவில்லை. எங்கள் கம்பெனியில் ஐ ட்டி மேனேஜர் வரை முயற்சி செய்தாயிற்ரு. ம்ஹூம். எல்லாம் உட்டாலக்கடி வேலை என்பது தெளிவாகத் தெரிகிறது.
20 வருடங்களாக ஒரு ஆக்ஸிடென்ட் கூட செய்யாமல் லைசென்ஸ் வைத்திருக்கும் என் நண்பன் செய்யது அஹமது கபீரின் ட்ரைவிங் திறமைக்கு ஒரு “ஓ” போடுவதற்கு முன், கொஞ்சம் காதைக் கொடுங்க, “ஏய்யா, கார் ஓட்டினாத்தானேயய்யா ஆக்ஸெடென்ட்லாம். லைசென்ஸ் வச்சிக்கிட்டு அவன் பஸ்லேல்ல போறான்.”
நிறைவாக, நிகழ்ச்சியில் நான் கவனித்தவற்றில் குறிப்பிடத்தகுந்தவை:
- சகோ. ஆஸிஃப் மீரானின் கடின உழைப்பின் பிரதிபலிப்பு நிகழ்ச்சியின் ஒவ்வொரு பொழுதிலும்.
- சகோ. ஜெஸிலா அவர்களின் நேர்த்தியான நிகழ்ச்சி தொகுப்பு
- நிகழ்ச்சியின் முதல் பாடலாக “ஐய்யய்யோ” என்று துவங்கும் கும்கி பாடல் கொண்டு துவங்கியதில் நெருடல்
- பலகுரல் மன்னன் சேதுவின் மிமிக்ரியில், மன்மோகன் சிங் குரலில் பேசச்சொன்னதும், கைகள் கட்டி தலை தாழ்த்தி மெளனித்து நின்ற டைமிங் கண்டு அரங்கமே அதிர்ந்தது.
- 'அவனி மாடசாமியின்' பேச்சில் அழகாய்த் தெரிந்த தமிழ்.
- இயக்குனர் பிரபு சாலமனின் நேர்மையான பேச்சு. “மதங்களை புண்படுத்தி படம் எடுக்கவே மாட்டேன்”
- கோபிநாத்தின் பிரமிக்க வைக்கும் அறிவார்ந்த பேச்சும் நிகழ்ச்சியை நடத்திய பாங்கும்.
- என் நண்பன் கபீரின் நறுக்கென்று பேச்சு. குறிப்பாக, அன்பா பணமா என்னும் தலைப்பில் பணமே என்று பேசிய கபீரை மட்டும்தான் “சூப்பர்” என்று சொன்னார் கோபிநாத். அன்பு பார்ட்டிகளைப் பார்த்து கபீர், “அன்பானவர்களுக்கிடையே கடன் கொடுத்துப் பாருங்கள். அன்பு படும் பாட்டை. கடன் அன்பை முறிக்கும்” என்று சொன்னபோது அவன் வாதத்திறமை கண்டு வியந்தேன்
ஆனா, பரிசு? கடைசிவரை…வடையும் போச்சு…ட்டீ இன்னும் வரல.
அபூஇப்ராஹீம் - அபூசாஹ்ரூக்