தொலைகாட்சிப் பெட்டி வாங்க போறீங்களா?
அதன் தொழில் நுட்ப சமாச்சாரங்கள்
தொலைகாட்சி பெட்டிகள் எப்போதுமே ஒரு தொல்லை காட்சி பெட்டிதான். இருந்தாலும் அந்த சனியனை பார்க்காவிட்டால் நிறையபேருக்கு தூக்கம் வருவதில்லை. இப்போதைக்கு எல்லோர் வீட்டிலும் டிவி உள்ளது. ஆனால், அது பற்றிய தொழில் நுட்பமான விஷயங்கள் எந்த அளவுக்கு நமக்கு தெரியும். கடைக்கு போனோமா டிவி வாங்கினோமா என்று ஒன்றை பிடித்து வீட்டில் வைத்து விடுகிறோம். அப்புறம் பக்கத்துக்கு வீட்டுக்காரன் உங்களிடம் வந்து உங்க டிவி LCDயா, LEDயா HD readyயா Full HDயா அல்லது PLASMAவா, என்னுடையது SMARTV என்ற வார்த்தைகளை கேட்ட பிறகுதான், ஓ! அந்த மாதிரி வாங்க வில்லையே என நம்மில் நிறைய பேர் முனுமுனுப்பதுண்டு. நான் இந்த கட்டுரை மூலம் டிவி பற்றிய சில தொழில் நுட்ப விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அடுத்த முறை நீங்கள் டிவி வாங்கும்போது கண்டிப்பாக ஒரு சரியான டிவியை தேர்வு செய்து இருப்பீர்கள்
1980 மற்றும் 90களில் டிவிக்கள்:
1980 மற்றும் 90களில் டிவி என்பது CRT (Cathode Ray Tube) என்று சொல்லக்கூடிய எதிர் மின் கதிர் குழாய் கொண்ட சதுர வடிவ பெட்டியாக இருந்தது அல்லது இன்றளவும் சில வீடுகளில் இருக்கிறது என்று சொல்லலாம். வீட்டு ஹாலில் கால்வாசி இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கும். அது ஒரு போர்வையால் போர்த்தபட்டு (தூசு படாமல் இருக்க) ஓடிக்கொண்டு இருக்கும். இதில் வேடிக்கை என்ன வென்றால் டிவி ஓடும்போது போர்வை அகற்ற படாமல் இருக்க, உள் வெப்பம் வெளியில் வராமல் கொஞ்ச நாளில் டிவி படுத்துவிடும்.
புதிய வரவுகள்:
கடந்த 2000ம் ஆண்டு துவக்கத்திலிருந்து சுவரில் மாட்ட கூடிய LCD, LED மற்றும் Plasma டிவிக்கள் வரதொடங்கிவிட்டன. கடந்த ஒரு சில வருடங்களாக HDTV, SMARTV டிவி மற்றும் 3D டிவிக்கள் வந்து குவிவதால் நமக்கு எதை வாங்குவது என்று ஒரே குழப்பம். நாம் ஒவ்வொரு டிவி பற்றியும் கீழே விரிவாக பார்க்கலாம். கடைசியில் எந்த சைத்தானை வாங்குவது என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய போகிறீர்கள்.
STANDARD CRT TV (சாதாரண டிவி)
PLASMA, LCD, LED Flat Panel TV
HD Ready TV (அதிக நெருக்கமுள்ள டிவி)
Full HD TV (முழு நெருக்கமுள்ள டிவி)
SMART TV (கணினிமயமாக்கப்பட்ட டிவி)
3D TV (முப்பரிமாண டிவி)
STANDARD TV (சாதாரண டிவி)
சாதாரண டிவிக்கள் வரி விட்டு வரி தேடுதல் (interlaced scanning) என்ற படங்களை கையாளுகிறது. (மற்றொன்று progressive scan தொடர்ச்சியான தேடல் முறை.) ஒரு வினாடிக்கான படம் 25 பிரேம்களாக(Frame) பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ப்ரேமும் 625 வரிகளை (lines) கொண்டது. ஒவ்வொரு வரியும் 352 புள்ளிகளை (pixel) உள்ளடக்கியது. ஒவ்வொரு ப்ரேம்களும் இருமுறை காட்டப்படுகிறது. முதல் பிரேமில் உள்ள வரிகள் ,1,3,5,7 என்ற ஒற்றை படை கோடுகளாக ஸ்கேன் செய்யபட்டும் முதல் பிரேமின் மீதமுள்ள வரிகள் 2,4,6,8 என்ற இரட்டை படை கோடுகளாக இரண்டாம்முறை ஸ்கேன் செய்யப்பட்டு முழு படமாக நமக்கு திரையில் தெரிகிறது. சாதாரண டிவியின் காட்சி தெளிவு (resolution) 625x352x25=5.5Meg.Hz. அல்லது இதை picture bandwidth என்று சொல்லலாம். மேற்கண்ட முறை கருப்பு வெள்ளை படங்களுக்கானது. வண்ண படங்கள், மூன்று முதல்நிலை (Primary colors) வண்ணங்களான RED, GREEN, BLUE நிற படங்களாக மாற்றப்பட்டு வெள்ளை நிற படத்துடன் (modulation) ஏற்றப்படுகிறது. இவை PAL (Europe and Asia region), NTSC (USA), SECAM (France) என்ற நிறமாற்று முறைகளில் வண்ண படங்களாக மாற்றப்பட்டு இதன் பிறகு sound மற்றும் synchronization Signalகள் சேர்க்கப்பட்டு நமக்கு காட்டபடுகிறது. இது டிவியில் ஒரு அடிப்படையான விஷயம் என்று சொல்லலாம்.
மேற்சொன்ன விசயங்கள் புரிந்துகொள்ள சிரமப்பட்டு என்னை மனசுக்குள் திட்டுவது தெரிகிறது. ரொம்ப முடியை பிய்த்து கொள்ளாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு அடுத்த பகுதிக்கு சென்று விடுங்கள்.
வரி விட்டு வரி தேடும் முறை.
ஒற்றை இலக்க வரியை scan செய்தல் இரட்டை இலக்க வரிகளை Scan செய்தல்
எல்லா வரிகளும் முழுமையாக Scan செய்தபின் முழு படம்:-
சாதாரண டிவிக்கள் Interlace scanning முறையையும் low resolutionஐ கொண்டிருப்பதால் அதில் அசவுகரியங்கள் அதிகம். வேறு வழி இல்லாததால் இன்னும் அதைத்தான் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். சாதாரண டிவியில் flickering என்ற மினுமினுப்பு அதிகம். கண்கள் அதிகம் சோர்வடையும். படங்களை உன்னிப்பாய் கவனித்தால் வரிகளாக தெரியும். அதனால் தூரத்தில் இருந்து பார்க்க வேண்டும். தூரத்தில் இருந்தால் நிறைய பேருக்கு அதில் ஓடும எழுத்துக்கள் தெரியாது.
தொடர்ச்சியாக தேடும் முறையில் (progressive scan) படங்கள் காட்டபட்டால் அதன் காட்சி தெளிவு சிறப்பாக இருக்கும். அப்படி ஒரு வசதி உங்கள் டிவியில் இருக்க வேண்டும். அத்தோடு படங்கள் progressive scan முறையிலும் ஒளிபரப்ப படவேண்டும். உங்கள் கம்ப்யூட்டரில் காட்டப்பட்டு படங்கள் progressive scan முறையிலேயே காட்டபடுகிறது என்பதை நினைவில் கொள்க.. இப்போது வரக்கூடிய HDTVக்கள் progressive scan முறையிலும் படங்களை காட்டக்கூடிய வகையில் கிடைக்கிறது.
Flat Panel TV (தட்டையான டிவி)
இவ்வகை டிவிக்களில் CRTக்கு பதிலாக LCD அல்லது Plasma குமிழ்கள் வரிசையாகக் அடுக்கப்பட்டு சுவரில் மட்டக்கூடிய வடிவில் கிடைக்கின்றன. இவை 19அங்குலத்தில் இருந்து 103 அங்குலம் வரை கிடைகிறது.
பிளாஸ்மா டிவி.
பிளாஸ்மா டிவிக்கள் inert gases என்று சொல்லப்படும் மந்த வாயுக்கள் நிரப்பப்பட்ட சிறு சிறு குமிழ் போன்ற குழல் விளக்குகள் (florescent Lamp) பலவரிசையாக அடுக்கப்பட்டு ஒரு தட்டையான வடிவில் (flat panel) தயரிக்கபடுகிறது. இதில் உள்ள குமிழ்களுக்கு மின்னூட்டம் கொடுக்கப்பட்ட உடன் அதில் நிரப்பப்பட்ட வாயுவினை பொருத்து RED, BLUE or GREEN வண்ணமாக ஒளிருகிறது. பிளாஸ்மா டிவிக்கள் குறைந்த பட்சம் 40” அங்குலம் அளவில் இருந்து கிடைக்கிறது.
பிளாஸ்மா டிவிக்களின் நன்மைகளும் குறைபாடுகளும்.
நன்மைகள் | குறைபாடுகள் |
அதிக கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தை உற்பத்தி செய்வதால் கருப்பு வெள்ளை விகிதாசாரம் (Contrast Ratio) மிக மிக அதிகம் | முன்பு வெளிவந்த பல பிளாஸ்மா டிவிக்களில் அங்கங்கு நிரந்தர கரும்புள்ளிகள் விழ வாய்ப்புகள் அதிகம் |
படம் பார்க்கும் கோணம் (viewing Angle) மிக அதிகம். ஒரு மூலையில் இருந்து பார்த்தாலும் படம் தெளிவாக தெரியும். | மற்ற எல்லா டிவிக்களை விட ஆற்றல் நுகர்வு (Power Consumption) அதிகம். (மின் ஆற்றலை சேமிக்கவேண்டிய இந்த காலகட்டத்தில் யோசிக்க வேண்டிய விசயம்.) |
குமிழ்கள் உயர் புதிபிப்பு விகிதம் (high refresh rate) பெறுவதால் இயக்க தெளிவின்மை (motion Blur) பிரச்சினை இருக்காது. | 37 அங்குலத்திற்கு குறைவான அளவில் கிடைக்காது. பிளாஸ்மா டிவி வைக்கப்பட்டுள்ள அறையில் MW, SW, Amateur Radio வானொலி அலைவரிசைகளை கேட்க முடியாது. ரேடியோ குறுக்கீடு செய்யக்ககூடியது. |
LCD டிவி
LCD டிவிக்கள் Liquid Crystal Display என்ற Chemical பொருளால் சிறு சிறு குமிழ்களாக வடிவமைக்கப்பட்டு தட்டியான கண்ணாடி panelகளுக்கு இடையில் மோல்டிங் செய்யபடுகிறது.. LCD panelகளுக்கு CCFL (Cold Cathode Florescent Lamp) என்று சொல்லக்கூடிய florescent விளக்குகளால் (backlight)பின்னொளி கொடுக்கப்படுகிறது. Liquid crystalகளுக்கு கொடுக்கப்பட்ட மின்னுட்டத்தை பொருத்து liquid crystalன் பாதை மாறும்போது backlight வெளிச்சத்தை அனுமதிக்கவோ அல்லது தடுக்கவோ செய்யும் இந்த LCD பேனல்கள் CCFL விளக்குகளால் பின்னொளி கொடுக்கபடுவதால் LED டிவிக்களை விடLCD டிவிக்கள் கொஞ்சம் தடிமனாக இருக்கும்.
LED டிவி
LED டிவிக்கள் உண்மையில் LEDயால்(Light Emitting Diode) செய்யப்பட்ட டிவிக்கள் அல்ல. அவைகளும் LCD TVக்கள் தான். இந்த டிவிக்கள் LED விளக்குகளால் பின்னொளி (Backlight) செய்ய படுவதால் LED டிவி என்கிறார்கள். LEDயால் பின்னொளி செய்யபடுவதால் அதிக வெளிச்சம் கிடைக்கிறது. CCFL விளக்குகளை விட மிக சிறந்த முறையில் Backlight வெளிச்சத்தை கொடுத்து குறைந்த மின்சாரத்தில் இயங்குவதால் பலராலும் இவ்வகை டிவிக்கள் அதிகம் விரும்பபடுகிறது. LED விளக்குகள் மிக சிறிய அளவில் இருப்பதால் இவ்வகை டிவிக்கள் மற்ற எல்லா டிவிக்களை விட குறைந்த தடிமனை (Thickness) கொண்டிருக்கின்றன.
LED TVயிலும் மூன்று வகை உள்ளது. 1. LEDTV, 2.LEDPLUS, 3.FULL LED. முதல் வகையில் நான்கு ஓரங்களிலும் LED backlight செய்யபடுகிறது. இரண்டம் வகையில் ஒவ்வரு செங்குத்து வரிசையில் LED backlight செய்யபடுகிறது. மூன்றாம் வகையில் டிவி முழுவதும் backlight செய்யபடுவதால் இந்த வகை டிவியில் தான் அதிகம் Contrast கிடைக்கும். அனைவரும் மூன்றாம் வகை டிவியை தான் விரும்புவார்கள். நீங்கள் டிவி வாங்கும் போது FULL LEDயா என்று கேளுங்கள்.
அடுத்த வாரங்களில் நாம் HD TV, SMARTV, 3DTV, 3D glasses பற்றியும் மற்றும் அவற்றை தேர்வு செய்யும் விதம், பொருத்தும் விதம், TV பார்வை கோணம் ஆகியவற்றை பற்றியும், LCD, LED, 3D, Plasma TVகளுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள் பற்றியும் மிக விரிவாக காண்போம்.
- ஹாஜா ஷரீஃப்
- நன்றி : Sஹமீத்








