Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள். Show all posts
Showing posts with label இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள். Show all posts

மக்கள்தொகைப் பெருக்கமும் குடும்பக் கட்டுப்பாடும் [Today World Population day] 0

அதிரைநிருபர் பதிப்பகம் | July 11, 2015 | , ,

மக்கள்தொகைப் பெருக்கமும் குடும்பக் கட்டுப்பாடும்.
இன்றைய உலகப் பொருளாதாரத்தை அச்சுறுத்தி வரும் காரணிகளின் பட்டியலில் மக்கள் தொகைப் பெருக்கமும் அதைத் தொடர்ந்த வேலை இல்லாத் திண்டாட்டமும் முதல் வரிசையில் இடம் பிடித்து அமர்ந்து இருக்கின்றன. இன்று உலகில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் உணவு, உடை, உறைவிடம் ஆகியவை போதுமான அளவு வழங்கப் படவேண்டுமென்ற பொறுப்பு எல்லா நாடுகளின் ஆட்சியாளர்களின் தலையிலும் சுமையாக இருக்கிறது.  அத்துடன் வாழ்க்கைத்தரங்களை அதிகப் படுத்துவதும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் கூட அரசுகளின் பொறுப்பாக இருந்து கொண்டு இருக்கிறது.

ஒரு புறத்தில் நவீன மருத்துவ  வசதிகளின் வளர்ச்சி காரணமாக இறப்பு விகிதம் குறைந்து வரும் நிலையில் பிறப்பு விகிதம் உலகெங்கும் கூடிக் கொண்டே  வருகிறது. உலகில் எங்கு பார்த்தாலும் கூட்டம்! கூட்டம்! கூட்டம்!. வீங்காமல் இருக்கும்  இந்த பூமி இந்தக் கூட்டத்தின் எடையை தாங்குமா என்கிற கேள்வி பொருளாதார நிபுணர்கள் பலரின் மத்தியில் எழுந்தது. ஒவ்வொருவரும் தங்கள் தங்களின் பார்வையில்  மக்கள்தொகை பெருக்கம் பற்றிய பொருளாதாரக் கோட்பாடுகளை அளிக்க ஆரம்பித்தனர். இவர்களுள் தாமஸ் ராபர்ட் மால்தஸ் என்பவர் அளித்த கோட்பாடு வல்லுனர்களால் ஓரளவுக்கு சரியான கோட்பாடு மற்றும் எச்சரிக்கை என்ற வகையில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

"சமுதாயத்தின் எதிர்கால வளர்ச்சியை பாதிக்கும் மக்கள் தொகைக் கொள்கை பற்றிய ஆய்வுரை" என்ற  தலைப்பில் ஒரு சிறிய ஆனால் மிகப் பெரிய செல்வாக்குப் பெற்ற நூலை எழுதியவர் தாமஸ் ராபர்ட் மால்தஸ் ஆவார். எங்கோ, ஒரு சிற்றூரில் யாரும் அறியாத ஒரு சமய குருவாக இருந்த இந்த ஆங்கிலேயர், 1798 ஆம் ஆண்டில் இந்த சிறு நூலை வெளியிட்டதும் உலகப் புகழ் பெற்றார்.

"உணவு உற்பத்திப் பெருக்கத்தை விஞ்சும் வகையில் மக்கள் தொகை பெருகி வருகிறது" என்னும் கருத்தே மால்தசின் அடிப்படை ஆய்வுரையாக அமைந்திருந்தது. அவர் தமது மூலக் கட்டுரையில் இந்தக் கருத்தைச் செறிவான வடிவத்தில் விளக்கியிருந்தார். "பெருக்கல் ஏற்றமாக மக்கள் தொகை பெருகிக் கொண்டு வருகிறது. (அதாவது 1,2,4,8,16.....என்ற பெருக்கல் மடங்குகளில் மக்கள் தொகை பெருகுகிறது). அதே சமயம், உணவு உற்பத்தி எண் கணிப்பு முறையில் ஒரே அளவில் (அதாவது 1,2,3,4,5.....என்ற எண் வளர்ச்சி முறையில்) மட்டும் பெருகி வருகிறது". என்று கூறினார்.  

இந்த நூலின்  பிந்திய பதிப்புகளில் மால்தஸ், தமது கொள்கையைச் சற்று தெளிவாக விளக்கியுள்ளார். அதாவது, பிறக்கும் உயிர்களுக்கு உணவு அளிக்க வேண்டுமென்ற அடிப்படையில், "உணவு உற்பத்தியின் வரம்பினை எட்டுகின்ற வரையில், மக்கள் தொகை வரையரையின்றி பெருகிக் கொண்டிருக்கும்". என்றார். மால்தஸ், தமது கொள்கையின் இரு வடிவங்களிலிருந்தும், "மனித குலத்தின் பெரும்பான்மை மக்களுக்கு வறுமையிலும், பட்டினியிலும் வாழ வேண்டிய தலைவிதி ஏற்பட்டிருக்கிறது. நீண்ட காலப்போக்கில், தொழில் நுட்ப முன்னேற்றங்களினால் இதைத் தடுக்க முடியாது போய்விடும். ஏனெனில், உணவு உற்பத்திப் பெருக்கம், ஒரு வரையறைக்குட்பட்ட இன்றியமையாத தேவையாக இருக்கிறது. காரணம் உணவு உற்பத்தியைச்   செய்யும் நிலம், நீர் முதலியவற்றை மனிதனால் புதிதாக உற்பத்தி செய்ய முடியாது. அதற்கு அவனுக்கு ஆற்றல் கிடையாது. ஆனால் வரம்பின்றி மனித உயிர்களை மட்டுமே அவனால்  புதிது புதிதாக  ‘கலகலென  பொலபொலென புதல்வர்களைப் பெறுவீர்’ என்கிற பாடல் வரிகளுக்கு ஒப்ப  உற்பத்தி செய்ய முடியும்.  அதாவது,  மக்கள் தொகையின் ஆற்றல் மற்றும் வளர்ச்சி,  மனிதனின் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவு விளைவிப்பதற்கு இந்தப் பூமிக்கு உள்ள அளவு, ஆற்றல் மற்றும் வளர்ச்சியை விட வரம்பின்றி மிக அதிகமாக உள்ளது என்ற முடிவுக்கு வருகிறார்          மால்தஸ்.  அதாவது மக்கள் தொகை வளர்ச்சியையும் உணவு உற்பத்தியின் ஆற்றலையும் ஒரு ரேஸ்   பந்தயத்தில் ஓடவிட்டால் மக்கள்தொகை வளர்ச்சி,  தனது தலையை நீட்டியாவது ஜெயித்துவிடுமென்று பொருள்.

ஆகவே மக்கள் தொகையை கட்டுப் படுத்த ஏதாவது வழி இருக்கிறதா? வழி அமைந்து இருக்கிறதா?

மால்தசே வழிகளைச் சொல்கிறார்.  போர், கொள்ளை நோய், மற்ற தொற்று நோய்கள் போன்றவை மக்கள் தொகையை அடிக்கடிக் குறைக்கின்றன. ஆனால், இந்தக் கொடிய நிகழ்வுகளின்  விளைவுகள் அளவுக்கு மீறிய மக்கள் தொகைப் பெருக்கத்தின் அச்சுறுத்தலுக்கு எதிராக மனித இனம் தாமே விருப்பமின்றிக் கொடுக்கும் உயிர் பலிகளுக்குப் பின்பு கிடைக்கும் ஒரு தற்காலிகத் துயர் தணிப்பேயாகும். இதற்கு நிரந்தர வழி ஒன்று இருக்கவேண்டும். இருக்கிறதா? மால்தசின் கோட்பாட்டின்படி இருக்கிறது.

மட்டுக்கு அடங்காத  மக்கள்தொகைப் பெருக்கத்தைத் தவிர்ப்பதற்கு "ஒழுக்கஞ்சார்ந்த கட்டுப்பாடு" மட்டுமே சிறந்த வழி என மால்தஸ் வலியுறுத்துகிறார்.

·         காலம் கடந்த திருமணம்  ,
·         திருமணத்திற்கு முந்திய கற்பு நெறி,
·         திருமணத்திற்குப் பின்பு பாலுறவு கொள்வதில் தற்கட்டுப்பாடு

ஆகியவற்றையே "ஒழுக்கஞ்சார்ந்த கட்டுப்பாடு" என்று மால்தஸ் குறிப்பாகத் தருகிறார்.  ஆனால், நடைமுறையில் பெருகிவரும் சமூக நாகரிகங்களின் வரம்பு கடந்த வளர்ச்சியின் காரணமாக,  பெரும்பாலான மக்கள் இத்தகைய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க மாட்டார்கள் என்பதை மால்தஸ் நன்கு உணர்ந்திருந்தார். எனவே, நடைமுறையில், மட்டுக்கடங்காத  மக்கள் பெருக்கம் தவிர்க்க முடியாதது. அதனால், பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடுவதும் அதனால்  சாவதும்  தவிர்க்க இயலாதது என்ற முடிவுக்கு அவர் வருகிறார். இது  மனித இனத்தின் வளர்ச்சி, உற்பத்தி செய்யும் திராணியும் படைத்தது என்பதை ஒதுக்கிவிட்டு தோல்வி மனப்பான்மையை மட்டும்  காட்டும் ஒரு எதிர்மறையான முடிவு ஆகும்.

இதுவரை சொல்லப்பட்டவைகளை சுருக்கமாக தொகுத்து சொல்லிவிட்டால் விளங்குவது இலகுவாக இருக்கும்.
  • மக்கள் தொகை பெருகுகிறது.
  • பெருகும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி பெருகாது.
  • மக்கள்தொகையை மனிதர்கள் தாங்களே முன்னின்று  தடுத்துக் கொள்ளவேண்டும்.
  • அப்படித்தாங்களே தடுத்துக் கொள்ளவில்லை என்றால் மக்கள் தொகைப் பெருக்கமே பஞ்சம், பசி, நோய் காரணமாக பெருகிய மக்கள்தொகையை  அழித்து கட்டுப்படுத்திவிடும். 
கருத்தடை சாதனங்களின் வாயிலாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும்  என மால்தஸ் ஒரு போதும் கூறவில்லை. ஆயினும், அவருடைய அடிப்படைக் கொள்கையிலிருந்து இயல்பாக உருவாகும் தாங்களே தடுத்துக் கொள்ளவேண்டும் என்று கூறப்படும் கருத்து  அதுவாகவே இருக்க முடியும். மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குக் கருத்தடைச் சாதனங்களைப் பெருமளவில்  கையாள வேண்டும் என முதன் முதலில் பகிரங்கமாக வலியுறுத்தியவர், பிரிட்டனில் செல்வாக்கு மிக்க சீர்திருத்தவாதியாக விளங்கிய பிரான்சிஸ் பிளேஸ் (1771-1854) என்பவரே ஆவார். மால்தசின் கட்டுரையைப் படித்த பிளேஸ் அதனால் வெகுவாகக் கவரப்பட்டார். அவர் 1822 ஆம் ஆண்டில் கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துவதை வலியுறுத்தி ஒரு நூலை எழுதினார். அவர் தொழிலாளர்களிடையே கருத்தடைக் கட்டுப்பாடு பற்றிய தகவல்களைப் பரப்பினார். அமெரிக்காவில், டாக்டர் சார்லஸ் நால்ட்டன் என்பவர் கருத்தடை முறை குறித்து 1822 ஆம் ஆண்டில் ஒரு நூலை வெளியிட்டார். 1860 களில் "மால்தசியக் கழகம்" அமைக்கப்பட்டது. குடும்பக் கட்டுப்பாட்டினை வலியுறுத்துபவர்களுக்கு ஆதரவாளர்கள் தொகை பெருகலாயிற்று. கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துவதை அறநெறிக் காரணங்களுக்காக மால்தஸ் தாமே ஏற்கவில்லை என்பதால் கருத்தடைச் சாதனங்கள் மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதை வலியுறுத்தியவர்கள் பொதுவாக, "புதிய மால்தசியக் கோட்பாட்டாளர்கள்" என அழைக்கப்பட்டனர்.

மால்தசின் கோட்பாடு, பொருளாதாரக் கோட்பாட்டின் மீதும் முக்கியமான விளைவை ஏற்படுத்தியது. மால்தசின் செல்வாக்குக்கு ஆட்பட்டிருந்த பொருளாதார அறிஞர் பலர் "வழக்கமான சூழ்நிலைகளில், ஊதியங்கள் பிழைப்பு மட்டத்திற்கு மேலே கணிசமாக  உயர்வதை மக்கள் தொகை பெருக்கம் தடுத்துவிடும்" என்ற முடிவுக்கு வந்தனர். மால்தசின் நெருங்கிய நண்பராக விளங்கிய புகழ்பெற்ற ஆங்கிலேயப் பொருளாதார அறிஞர் டேவிட் ரிக்கார்டோ இவ்வாறு கூறினார்: "உழைப்புக்கான இயல்பான விலை என்பது, தொழிலாளர்கள் நாம் உயிர் வாழவும், பெருக்கமோ குறைவோ இன்றித் தங்கள் வர்க்கத்தை நிலைபெறச் செய்யத்  தேவையான விலையேயாகும்". இந்தக் கோட்பாட்டினை "கூலி நிர்ணய இரும்பு விதி" என்று பொதுவாக அழைப்பர். இக் கோட்பாட்டைக் கார்ல் மார்க்சும் ஏற்றுக் கொண்டார். கார்ல் மார்க்சின் "உபரி மதிப்புக் கோட்பாட்டில்" இந்தக் கோட்பாடு ஓர் இன்றியமையாத அம்சமாக இருந்தது.

இன்றையக் குடும்ப கட்டுப்பாடு இயக்கம் மால்தசின் வாழ்நாளில் தொடங்கப் பெற்ற இயக்கத்தின் நேரடித்  தொடர்ச்சியாகும். அப்படிப் பார்க்கும்போது  மனித இனப் பெருக்கத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவேண்டுமென்ற  கொள்கையை விதைத்தவர் மால்தசே ஆவார்.

ஒரு நாடு நல்லாட்சியைப் பெற்றிருப்பினும், மட்டுக்கு மீறிய மக்கள் தொகைப் பெருக்கத்தினால், அவதியுற வாய்ப்பு உண்டாகும் என்பதை முதலில் உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்தவர்  மால்தஸ்தான் என்று கூற முடியாது. அவருக்கு முன்னரே வேறு பல தத்துவஞானிகள் இக்கருத்தை வலியுறுத்திச் சென்றிருந்தனர். பிளேட்டோவும், அரிஸ்டாட்டிலும் இதைக் கூறியுள்ளதாக மால்தசே குறிப்பிட்டுள்ளார். "ஒவ்வொரு மனிதனுக்கும், தான் விரும்புகிற அளவுக்குக் குழந்தைகளைப் பெறுவதற்குச் சுதந்திரம் அளிக்கப்படுமானால், அதனால் ஏற்படக்கூடிய இன்றியமையாத விளைவு வறுமை தான்" என்று அரிஸ்டாட்டில் எழுதியிருப்பதாக மேற்கோள் காட்டுகின்றனார்.

மால்தசின் அடிப்படைக் கொள்கை முற்றிலும் அவருடைய சொந்தக் கொள்கை இல்லை. ஆயினும், அவருடைய முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடலாகாது. பிளேட்டோவும், அரிஸ்டாட்டிலும் போகிற போக்கில் மேற்போக்காகவே இந்தக் கொள்கையைக் குறிப்பிட்டுச் சென்றிருக்கின்றனர். அவர்களுடைய சுருக்கமான குறிப்புகள் பெரும்பாலும் கண்டு கொள்ளப்படவில்லை. இந்தக் கொள்கையை விரிவாகக் கூறியவர் மால்தசே ஆவார். அவர் தான் இது குறித்து ஏராளமாக எழுதினார். அனைத்திற்கும் மேலாக மக்கள் தொகைப் பெருக்கம் பற்றிய சிக்கலின் அபாயகரமான விளைவை வலியுறுத்தி, அதனை அறிஞர்கள் உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்த முதல் மனிதர் மால்தசே ஆவார் என்பதை மறந்துவிடலாகாது.

“ காதலுக்கு வழிவைத்து
கருப்பாதை சாத்த
கதவொன்று கண்டறிவோம்
அதிலென்ன குற்றம் ? 

என்று கேட்டார் பாரதிதாசனும். நாம்  இருவர்! நமக்கு இருவர்! என்ற முழக்கங்கள் மூலை முடுக்குகளில் உள்ள சுவர்களிலும் தீப்பெட்டிகளும் கூட  எழுதப்பட்டன. ஒன்றே பெருக! அதை நன்றே பெருக!  என்று திருத்தப் பட்ட மற்றும் இரண்டிலிருந்து குறைக்கப் பட்ட கோஷங்களும் முழங்கப் பட்டன. ஆடுமாடுகளுக்கு காயடிப்பது போல் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என்ற முறையில் ஆண்களின் ஆண்மைத் தன்மை நீக்கப் பட்டது., பெண்களின் கர்ப்பமுறும் தன்மைகள் காவு  கொடுக்கப்பட்டன. அதற்காக அரிசிமுதல் பருப்புவரை இலவசப் பரிசாக வழங்கப் பட்டது. இதற்காக ஆள் பிடித்துக் கொண்டுவரும் முகவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப் பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை என்கிற சுகாதாரத் துறையில் குடும்பக் கட்டுப்பாடு தனி அங்கமாயிற்று. அதிகமான அறுவை  சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப் பட்டது. தெருவெங்கும் பாடல், ஆடல் , நாடகங்கள், திரைப்படங்கள் மூலம் பரப்புரைகளும் செய்யப் பட்டன. பேருந்துகள் முதல் விமானங்கள் வரை அடையாளச் சின்னமாகிய சிவப்பு முக்கோணம் பொறிக்கப்பட்டது.     

பொதுவாக சில அரசியல் கட்சிகள் முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப் பாட்டுத் திட்டத்துக்கு ஆதரவு தருவதில்லை. குடும்பத்தைக் கட்டுபடுத்தாமல் வத வத வென்று பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளுகிறார்கள். இதனால் முஸ்லிம்களின் மக்கள் தொகை எண்ணிக்கை கூடிவிடும் என்றெல்லாம் பழிதூற்ற  ஆரம்பித்தனர். இவற்றில் உண்மை இருந்தது. காரணம் முஸ்லிம்கள் ஈமானும் இறையச்சமும் உடையவர்கள். தங்களின் இறைவனும் தங்களின் இரசூல்  (ஸல்) அவர்களும் வகுத்த வழியிலேயே வாழவேண்டுமென்று நினைப்பவர்கள். இஸ்லாம் குடும்பத்தைக் கட்டுப் படுத்துகிறேன் என்ற போர்வையில் இறைவனால் படைக்கப் பட்டு  தாயின் கர்ப்பகருவறையிலேயே தனது சுஜூதை தொடங்கும் கருவைக் கலைக்க அனுமதி வழங்கவில்லை. இவை பற்றி விரிவாக பார்க்கலாம். இப்போது பொதுவான சில உண்மை கருத்துக்களை நோக்கலாம்.

என்னைக் கேட்டால் முஸ்லிம்கள் மட்டுமல்ல யாருமே குடும்பக் கட்டுப் பாடு செய்ய வேண்டியது இல்லை என்றுதான் கூறுவேன்.  குடும்பக்கட்டுப்பாடு செய்யாததால் மக்கள்தொகை பெருகுகிறது. மக்கள் தொகைப் பெருக்கத்தால் உணவுப் பற்றாக் குறை ஏற்படுகிறது . குடும்பக் கட்டுப்பாடு செய்துவிட்டால் எல்லாக் குறைகளும் தீர்ந்துவிடும் என்பது ஒரு  மோசடியான  பரப்புரையாகும்.   

சில  புள்ளி விபரங்களை வைத்து இந்த விவாதத்தை துவங்குவது நன்றாக இருக்கும். அதற்குமுன் இந்தத்தொடரின் அத்தியாயமான படைத்தவன் படைத்தது பற்றாக் குறையா என்ற தலைப்பிட்ட 12 & 13 ஆம் அத்தியாயங்களின் மேல் உங்களின் அறிவுக் கண்களை ஒரு ஓட்டம்  ஓட்டி கொள்வது நல்லது.

இன்றைக்கு உலகத்தில் 500  கோடி மக்கள் வாழ்கிறார்கள். என்றாலும் 1500  கோடி மக்களுக்கான உணவு உலகெங்கும் மொத்தமாக உற்பத்தியாகிக் கொண்டு இருக்கிறது. தவறு எங்கே நடை பெறுகிறது என்றால் எல்லா உற்பத்தியும் உலகின் பொருளாதாரத்தை   தனது கரங்களில் கட்டிப் போட்டு வைத்திருக்கும் பணக்கார நாடுகளில் குவிந்து கிடக்கிறது.100  கோடி மக்கள் வாழக் கூடிய பணக்கார நாடுகளில் மட்டும் 1000  கோடி மக்களுக்குத்தேவையான உணவுப் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. பணக்கார நாடுகள் தனக்குத் தேவையானது போக, மீதி உள்ள கோதுமை, பால், அரிசி போன்றவற்றை  உணவுப் பற்றாக் குறையை ஏற்படுத்தவும் அரசியல் செல்வாக்கின்  மிரட்டல்களை பயன்படுத்தி அடிபணிய வைக்கவும் கடலில் கொண்டு போய் கொட்டி விடுகிறார்கள்.  எனவே மக்கள் தொகைப் பெருக்கத்தால்தான்  உணவுப் பொருள்களில்  பற்றாக் குறை ஏற்படுகிறது என்பது தவறான வாதமாகும்.  

உதாரணமாக, இன்றைக்கு இந்திய மக்கள் தொகை 110  கோடியாகும். சுமார் அறுபது எழுபது வருடங்களுக்கு முன்பு இந்திய மக்கள் தொகை முப்பது            கோடிதான். பாரதியார் அதனால்தான் ‘முப்பது கோடி முகமுடையாள்’ என்று பாடினார். இப்போது உள்ள உணவுப் பற்றாகுறையைப் போல அன்றும் இருக்கத்தான் செய்தது.

இந்திய மக்கள்தொகை நூற்றுபத்து  கோடி இருக்கும்போது எப்படி முப்பது கோடி மக்களுக்கு உணவு கிடைக்கவில்லையோ அதேபோல முப்பது கோடி மக்கள் இருக்கும்போது பத்து கோடி மக்களுக்கும் பத்து கோடி இருந்த போது மூன்று கோடி மக்களுக்கும் உணவுப் பற்றாகுறை  இருந்து வந்தது உண்மை. (இப்போதுதான் உணவுப் பாதுகாப்பு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறி இருக்கிறது.) அப்படியென்றால் உண்மையில் பற்றாக்குறைக்குக் காரணம் மக்கள் பெருக்கமா? நிர்வாகக் குறைபாடா? பங்கிடுதலில் பாகுபாடா? அரசியல் அட்டகாசமா? இரக்கமற்ற நெஞ்சங்களா?

அண்மையில் The Economic Times என்கிற  ஆங்கிலப் பத்திரிகையில் படித்த ஒரு ஆய்வுக் கட்டுரையின் மொழிபெயர்ப்பை இங்கு தர விரும்புகிறேன்.( சற்று நீண்டுவிடும் ஆனால் நமது மக்கள் தொகையின் அளவும் அதிகமாக இருப்பதால் அதிகமாக எழுதவேண்டியாகிவிட்டது- பொறுமையுடன் படிக்க வேண்டுகிறேன். )

 உலகில் தினமும்  87 கோடிப்  பேர் பசியால் வாடும் நிலையில், சர்வதேச அளவில் வீணாகும் உணவுப் பொருள்களால்   75,000 கோடி டாலர்  அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக -அசனா லெபை டீக்கடை அல்ல - ஐக்கியநாடுகள் சபையில் உணவு மற்றும் வேளாண அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியப் பணத்தில் இது  48 லட்சம் கோடியாகும். இது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி ( GDB)  மதிப்பில்  50 சதவீதமாகும். சுவிட்சர்லாந்து நாட்டின் ஜி டி பிக்கு நிகரான தொகையாகும் இது என்பது கூடுதல் ஆக கவனிக்கப்பட வேண்டியதாகும்.

உலக அளவில் உற்பத்தியாகி உண்ணாமல் வீணாக்கும் உணவுப் பொருள்களின் அளவு  33 சதவீதமாக உள்ளது. உலக மக்கள் தொகையில் மட்டுமல்ல உணவுப் பொருள்களை வீணாக்கும் நாடுகளிலும் உலகிலேயே சீனாதான் முதலிடம் வகிக்கிறது என்பது அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவல்.

உலக நாடுகளில் அனைத்து மக்களுக்கும் முழுமையான உணவுப் பாதுகாப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை . சில ஆப்ரிக்க நாடுகளோ வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. இந்த நிலையில் அரிசி, கோதும, சிறு தானியங்கள் மற்றும் காய்கறி பழங்கள் என பல ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள 130 கோடி டன் உணவுப் பொருள்கள் வீணாகிவருவது விடை காணமுடியாத பல சிக்கலான  கேள்விகளை முன் வைத்துள்ளது.   37  ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் , 2050- க்குள், உலக மக்கள் தொகை, மேலும்  200 கோடி அதிகரிக்கப் போகிறது.

சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆகிய நாடுகள் பொருளாதார மையங்களாகத் திகழ்கின்றன. இந்த நாடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ள ஆசியா கண்டத்தில் ஒரு தனிமனிதரால் ஆண்டுக்கு சராசரியாக 100 kilo காய்கறிகளும்   80 kilo உணவு          தானியங்களும் வீணடிக்கப் படுகின்றன என ஐ நாவின் புகார்ப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

அரபு மற்றும் பணக்கார நாடுகள் சுகாதாரம் குறித்து தேவைக்கும் அதிகமான எச்சரிக்கை உணர்வுகளைக் கொண்டுள்ளன. இதனால் காய்கறி, பழங்கள் மீது சிறிய கீறல் இருந்தாலும் அவை தூக்கி எறியப்படுகின்றன. உணவுப் பொருள்களின் காலாவதி தேதிகளில் அளவுக்கு அதிகமாகக் காட்டப்படும் ஆர்வமும் கவனமும் காரணமாக டன் டன்னாக விளைபொருள்கள் குப்பையில் கொட்டப் படும் அவலம் காணப்படுகிறது.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் உற்பத்தி நிலையிலேயே பெருமளவு உணவுப் பொருள்கள் வீணாகிவிடுகின்றன. சாலை ஓரங்களில் இருக்கும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப் படும் நெல் மூட்டைகள் ஒரு தார்ப் பாய் கூட போட்டு மூடப் படாமல் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் பொறுப்பற்ற செயலைக் காணலாம். அறுவடைக்குப் பின் சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதன வசதி இல்லாமலும், சரக்குப் போக்குவரத்தின் போதும் ஏராளமான வேளாண்மைவிளை பொருள்கள்  வீணாகின்றன.

உலக அளவில் சுமார் 140 கோடி ஹெக்டேர் நிலத்தில் சாகுபடியாகும் உணவுப் பொருள்கள் வீணாகின்றன என்று ஐநா கணக்கிட்டுள்ளது. இது மொத்த சாகுபடி பரப்பளவில்  28 சதவீதம் ஆகும். இது ஹராம் இல்லையா?  

உற்பத்தி, அறுவடைக்குப்  பின் பராமரித்தல் , சேமிப்புக் கிடங்கு  போன்றவற்றின் கட்டமைப்பு மற்றும் நிர்வாகக் குறைபாடுகளால் 54 சதவீத உணவுப் பொருள்களும் பதப் படுத்துதல், விநியோகம், நுகர்வு போன்ற இரண்டாம் கட்ட நடவடிக்கைகளில்    46 சதவீத உணவுப் பொருள்களும் வீணாகின்றன.

உணவுப் பொருள்களை வீணாக்குவது இரண்டு பாவங்களைச் செய்கிறது. ஒன்று தண்ணீர் போன்ற இயற்கை வளங்களும் வீணாக்கப் படுகின்றன. பொருளாதார நிலையும் தாழ்வுறுகிறது. இவற்றை மீறி மக்களுக்கு உணவளிப்பது என்கிற கோட்பாடு மழுங்கிப் போய் பட்டினிச்சாவுகளும் அதிகரிக்கின்றன. நிலைமைகள் இப்படி இருக்க இறைவனால் படைக்கப் பட்ட உயிரினங்களின் மேல் பழி போடுவது நியாயமா?

மக்கள் தொகையின் வளர்ச்சியின் காரணமாக, உண்மையில் பசுமைப் புரட்சி போன்ற பல்வேறு திட்டங்களால் உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை எட்டிப் பிடித்தது என்பதும், சில உணவுப் பொருட்கள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டன என்பதும் பொருளாதார வரலாறு சொல்லும் உண்மைகள் . அன்றைக்கு நெல் பயிரிடுதலின் காலம் ஆறு மாதங்கள் . இன்றோ பல பகுதிகளில் மூன்று மாதப் பயிராக விளைந்து வருகிறது. இன்னும் ஒன்றரை மாதப் பயிராகவும் பயிரிடும் நிலைமையை - எந்த இறைவன் இந்தியாவுக்கு அதிக மக்கள் தொகையை அளித்தானோ அதே இறைவன் தேவையை முன்னிட்டு மனிதனின் அறிவை உசுப்பிவிட்டான் என்பதே உண்மையாக  இருக்க  முடியும்.

மக்கள் தொகையின்  பெருக்கமும் நெருக்கமும்  நெருக்கடியும் விவசாயத்தில் மட்டுமல்ல அறிவியலிலும் மனிதனின்  கொடியை பட்டொளி வீசிப்  பறக்க வைத்தது.  புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், விமானச்சேவை முதல் கணினியின் அற்புதங்கள் வரை யும் அன்றாடம்  புதிது புதிதாக மனித மூளையின் அற்புதங்கள் , கண்டுபிடிப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன.

ஒரு பில்கேட்சின் தாயோ, அபுல் கலாமில் தாயோ, தாமஸ் ஆல்வா எடிசனின் தாயோ, ஐன்ஸ்டீனின் தாயோ , மார்க்கோனியின் தாயோ தங்களின் குடும்பத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக இந்த அறிவியலார்களை, கல்வியாளர்களை கருவிலேயே கலைத்து  இருந்தால் இவர்கள் இந்த உலகத்துக்குக் கிடைத்திருப்பார்களா?  குடும்பக் கட்டுப் பாட்டை ஆதரித்துப் பேசுபவர்களின் பெற்றோர் இதைச் செய்து இருந்தால் இப்படி ஆதரிப்போர் உலகை தரிசித்து இருக்க முடியுமா?

இஸ்லாம் நியாயமான காரணங்களுக்காக குடும்பக்  கட்டுப்பாட்டை ஆதரிக்கிறது.

தாயின் உயிருக்கோ அல்லது உடல் நலனுக்கோ ஆபத்து ஏற்படும் என அனுபவத்தின் வாயிலாகவோ அல்லது நம்பத்தகுந்த ஒரு மருத்துவர் மூலமோ அறிந்தால், குடும்பக்கட்டுப்பாட்டுக்கு அனுமதியுண்டு. இக்கருத்துக்கு ஆதாரங்களாகக் கீழ்வரும் திருமறையின் வசனங்களை இஸ்லாமியப் பொருளாதார  அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

''உங்களை நீங்கள் அழிவுக்கு உட்படுத்த வேண்டாம்' (2:195)

“மேலும் உங்களை நீங்கள் கொலை செய்து கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது அதிகம் அன்பு கொண்டவனாய் இருக்கிறான்.” (4:29)

தனது குழந்தைகளுக்காக வேண்டி ஹராத்தையோ அல்லது பாவத்தையோ செய்ய வேண்டிவருமென்று ஒருவர் அஞ்சும் நிலையிலும் குடும்பக்கட்டுப்பாட்டுக்கு அனுமதியுண்டு.

“அல்லாஹ் உங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்த விரும்புவதில்லை.” (5:6)
என்று அல்லாஹ் உறுதியளிக்கிறான்.

தனது குழந்தைகளின் உடல்நலம் பாதிப்புறுமென்றோ அல்லது அவர்களை முறையாக வளர்ப்பதில் பிரச்சினைகள் தோன்றுமென்றோ அஞ்சுவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பினும் குறித்த செயற்பாட்டிற்கு அனுமதியுண்டு.

உஸாமா (ரலி) அறிவிக்கிறார்கள்  'ஒருமுறை ஒருவர் ரஸுல் (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! நான் எனது மனைவியிடத்தில் அஸ்ல் செய்கின்றேன்' என்றார். 'அதற்கு நபிகளார் 'ஏன் அப்படிச் செய்கின்றீர்?' என்று வினவ அதற்கு அம்மனிதர் “ நான் எனது இருக்கும்  குழந்தைகளையிட்டு அஞ்சுகின்றேன்' என்றார். அதற்கு நபிகளார் 'அது (அஸ்ல்) தீங்கிழைப்பதாக இருப்பின் பாரசீகத்தையும், ரோமாபுரியையும் பாதித்திருக்கும்' (அதாவது இத்தகைய தனி மனிதர்களின் நிலைகள் முழுச் சமூகத்தையும் பாதிக்காது. அவ்வாறு இருப்பின் அன்றைய வல்லரசுகளாகத் திகழ்ந்த ரோம, பாரசீகத்தைப் பாதித்திருக்கும் என்பதாகும்.) என்றார்கள்.” ( அஸ்ல் = Pls Ref: Sathyamargam. Com)

பால்குடிக் குழந்தையின் நிலையைக் கருத்திற்கொண்டு, தாய் கருத்தரிப்பதனால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கருதுவதும் குடும்பக் கட்டுப்பாட்டை நியாயப்படுத்துகின்ற ஒரு காரணமாகும்.

பால் குடிக் குழந்தை இருக்கும் நிலையில் தன் மனைவியுடன் (கருத்தரிக்கும் நோக்கோடு) உடலுறவு கொள்வதனை நபியவர்கள் இரகசியக் கொலை என வர்ணித்துள்ளனர். ஆயினும், இதனை ஷரீஅத் ஹராம் என முற்றாகத் தடை செய்யவில்லை என்பதனைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.

மேலே குறிப்பிட்ட நியாயமான காரணங்களுக்காகக் குடும்பக் கட்டுப்பாடு செய்வதனை இஸ்லாம் அனுமதித்திருப்பினும், கருச்சிதைவை அது அனுமதிப்பதில்லை.  ஒரு கருவை அதற்கு ரூஹ் ஊதப்பட்டதன் பின்னர் சிதைப்பது ஹராமான மாபெரும் குற்றமாகும் என்று கூறப் படுகிறது. ஆனாலும் குறித்த கருவானது சிதைக்கப்படாது தொடர்ந்து தாயின் வயிற்றில் இருப்பது அவளின் உயிருக்கே ஆபத்தையேற்படுத்தும் என்பது உறுதியாகத் தெரியவந்தால் இரு தீங்குகளில் ஒன்றைத் தேர்வு  செய்ய வேண்டியிருப்பின், அவற்றில் சேதம் குறைந்ததைத் தேர்வு செய்தல் வேண்டும் எனும் சட்டவிதியின் அடிப்படையில் கருவைச் சிதைப்பதைத் தவிர வேறு வழியே இல்லாத போது அதற்கும்  அனுமதியுண்டு. ஏனெனில், கருவிலிருக்கும் சிசுவுக்காக வாழுகின்ற தாயை இழக்க முடியாது. அது பொறுப்புடையதும் புத்திசாலித்தனமுடையதும்  ஆகாது.

இஸ்லாம் நடைமுறைக்கேற்ற பொருளியல் கொள்கைகளை போதித்து வழிகாட்டும் மார்க்கம் என்பதை இவற்றால் அறியலாம்.

"பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்கும் உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது’’ ( 11:6) என்கிற திருமறையின் வசனமும்,

“அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான் அவனே உணவு வழங்குகிறான்” (30:40) என்கிற வசனமும்,  மனித இனத்துக்கு இறைவன் தரும் வாரண்டியும் கியாரண்டியும் ஆகும். அகிலத்தைப் படைத்து ஆண்டுகொண்டிருக்கும் ரப்புல் ஆலமீனின்     வர்த்தைகளுக்குப் பின் வேறென்ன தேவை? படைப்பவனும் அவனே! பரிபாலிப்பவனும் அவனே! காப்பாற்றி உணவளிப்பவனும் அவனே!. உருவான கருவை இறைவன் அனுமதித்த காரணமின்றிக் கலைப்பவர்கள் தங்களின் ஈமானையும் இறையச்சத்தையும்  கலைத்துக் கொள்கிறார்கள் என்றே கூறுவேன். இறைவனின் எல்லைகளில் கை வைக்க எவருக்கும் உரிமை இல்லை என்றும் கூறுவேன்.

“இறைவா! நாங்கள் உன்னையே வணங்குகிறோம்!. உன்னிடத்தே நல்லுதவி தேடுகிறோம் . நீ எங்களுக்கு நேரான பாதையைக் காட்டி அருள்வாயாக!" என்கிற திருமறையின் தோற்றுவாயில் நாம் வைக்கும் கோரிக்கைகளை ஏற்று நமக்கும் நமது பிறந்த மற்றும் பிறக்க இருக்கும் சந்ததிகளுக்கும் நல் அருள் புரிவானாக! ஆமீன்.

இன்ஷா அல்லாஹ் மீண்டும் சிந்திப்போம்; சந்திப்போம்.

இபுராஹீம் அன்சாரி

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் – 34 12

அதிரைநிருபர் பதிப்பகம் | June 28, 2014 | , , ,

பங்குச் சந்தை முதலீடுகள் பங்கமா? வாழ்வின் அங்கமா?

அண்மைக் காலமாக நம்மிடையே அதிக அளவில் பேசப்படும் பொருள்களில் பங்குச் சந்தை என்பதும் ஒன்றாகிவிட்டது. நம்மில் ஒரு சிலர் இந்த பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபடவும் ஆரம்பித்து விட்டார்கள்; ஈடுபட்டால் என்ன என்று யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்; ஈடுபடும் முன்பு இதைப் பற்றி தெரிந்து கொள்ளாலாம் என்று முயலத்தொடங்கி இருக்கிறார்கள். எளிமையான முறையில் பங்கு சந்தைகளைப் பற்றி ஒரு சிறு அறிமுகமும் இது பற்றி இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் எந்த திசை நோக்கி வழிகாட்டுகின்றன என்பது பற்றியும் விவாதிக்கலாம். இதைப் பற்றி விரிவாகவே பேசவேண்டி இருப்பதால் ஒரு சில அத்தியாயங்கள் தேவைப்படும். 

ஆட்டுச்சந்தை, மாட்டுச் சந்தை, காய்கறி சந்தை என்பது போல் பங்குச் சந்தையும் வணிக நிறுவனங்களின் பங்குகளை வாங்க அல்லது விற்க உதவும் சந்தைதான். ஆனால் மற்ற சந்தைகளுக்கு ஒரு வேலி அடைத்த அல்லது காம்பவுண்டு சுவர் எடுத்த குறிப்பிட்ட இடம் இருக்கும். ஆனால் பங்கு சந்தைக்கு குறிப்பிட்ட இடமெல்லாம் கிடையாது. இது உலகளாவியது; ஊடகங்களைச் சார்ந்து நிற்பது; வலைதள இணையங்களோடு இணைந்திருப்பது.

குறிப்பாக இன்றைய தகவல் தொழில்துறை நுட்ப வளர்ச்சியில் கண் இமைக்கும் நேரத்தில் பங்குகளை வாங்கவும் விற்கவும் முடியும். பம்பாய் பங்கு சந்தை , சென்னை பங்கு சந்தை என்றெல்லாம் இடங்கள் காட்டப்படுகின்றனவே என்று நம்மில் சிலர் கேட்கலாம். அந்த கட்டிடங்கள் மற்றும் இடங்கள் எல்லாம் பங்குகளின் பரிவர்த்தனைகளை பதிவு செய்து கொள்ளும் அலுவலகங்கள்தானே தவிர அந்த இடங்களுக்கு நேரடியாகச் சென்றுதான் வாங்க விற்க வேண்டுமென்று கட்டாயமான அவசியம் இல்லை. அந்த இடங்களில் கூடும் கூட்டம் முக்கியமாக பங்குகளின் நிலவரங்களையும் ஏற்ற இறக்கங்களையும் அறிந்து கொள்ளக் கூடுகின்ற கூட்டமே தவிர பங்குகள் வாங்க வேண்டுமானால் கூடுவாஞ்சேரியிலிருந்தும் வாங்கலாம் விற்க வேண்டுமென்றால் கோதண்டாபுரத்திலிருந்தும் விற்கலாம். 

இன்னும் பங்கு சந்தை பற்றியும் முதலீடுகளைப் பற்றியும் நம் அறிந்து கொள்ளும் முன் சில கருத்துக்களை முன்னெடுத்து வைப்பது அவசியமாகிறது. முக்கியமாக சேமிப்பு (SAVINGS) என்பதற்கும் முதலீடு (INVESTMENT) என்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டும் ஒன்றல்ல; சேமிப்பாக இருப்பதெல்லாம் முதலீடாகாது. அதே நேரம் , சேமிப்பு இல்லாவிட்டால் முதலீடு செய்ய இயலாது. ஒரு காலத்தில் நமது பெண்கள் அடுக்குப் பானைகளில் அரிசிக்குள் அல்லது மிளகாய்க்குள் l “சிறுவாடு” சேர்த்து வைப்பார்கள். “சல்லி முட்டியில்” சில்லறைக் காசுகளைப் போட்டு வைப்பவர்களும் உண்டு. நமது செலவு போக மிகுதியை பிற்காலத் தேவைக்கு வேண்டுமென்று தனது கைகளில் மறைத்து வைத்திருப்பது சேமிப்பு. அப்படி சேமித்ததை வீணாக கையில் வைத்துக் கொள்ள வேண்டாமே என்று ஏதாவது செல்வத்தை வளர்க்கும் துறைகளில் அதை போடுவது முதலீடு. இப்படி செய்யும் முதலீடு தங்கத்தின் மீதாக இருக்கலாம்; நிலத்தின் மீதாக இருக்கலாம்; வீட்டின் மீதாக இருக்கலாம்; பரஸ்பர நிதிகளின் மீதாக இருக்கலாம்; பங்குச் சந்தையில் விற்கப்படும் பங்குகளின் மீதாகவும் இருக்கலாம். சேமிப்பு, எப்போது ஒரு வருமானத்தைப் பெறும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட ஆரம்பிக்கிறேதோ அப்போதுதான் அது முதலீடாகிறது.

பொதுவாக “மண்ணில் போட்டதும் பொன்னில் போட்டதும் வீணாகி விடாது” என்கிற கருத்து மக்களிடையே நிலவுகிறது. நிலம், வீடு போன்ற அசையாச் சொத்துக்களின் (Immovable Properties) மீது நாம் செய்யும் முதலீடு, காலக்கெடுவில் பலமடங்கு வளரக் கூடியது. பல நேரங்களில் இப்போதுள்ள வளரும் பொருளாதாரத்தில் நமது பொருளாதார நிலமைகளை எட்டாத உயரத்துக்குத் தூக்கிவிட்டு விடக் கூடியது. வானம் பார்த்த பூமிகளை வைத்துக் கொண்டு வறுமையில் வாடிய பலர் வீட்டில் இன்று இரண்டு மூன்று இன்னோவா கார்கள் நிற்கின்றன. மானாவாரி தென்னந்தோப்புகள் இன்று சராமாரியாக வீடுமனைகளாக்கப்பட்டு பல புதிய கோடீஸ்வரர்கள் உருவாகி இருக்கிறார்கள். என்றோ தனது பாட்டன் காலத்தில் வாங்கிப் போடப்பட்ட நிலங்கள் இன்று பலருக்கு பணம் காய்க்கும் மரமாகிவிட்டது. 

 இஸ்லாமிய பொருளாதார கண்ணோட்டத்தின்படி பிறருடைய நிலம் அல்லது வீட்டை தவறான முறையில் அபகரிக்காமல் இருந்தால்- அனாதைகளின் சொத்துக்களுக்கு அநீதி செய்து சுருட்டாமல் இருந்தால் – பொய் பித்தலாட்டம் புரட்டுக்களைக் கூறி சொத்துக்களை விற்காமல் இருந்தால் சுவையான குடிநீர் உள்ள இடம் என்று கூறி சுண்ணாம்புக் கல் விளையும் நிலங்களை தலையில் கட்டாமல் இருந்தால்- அவைகள் ஹலால் ஆனவையே. இத்தகைய அசையாச் சொத்துக்களின் மீது நாம் முதலீடு செய்யும் போது நமது கண் முன்னே நமது கைகளாலேயே இவற்றை செய்து கொள்கிறோம்; நமக்குத் தெரிந்தே இதற்கான பரிவர்த்தனைகள் யாவும் நடைபெறுகின்றன என்ற அளவிலும் இத்தகைய முதலீடுகள் அனுமதிக்கப்பட்டவையே. 

 ஆனாலும் இவைகளை வாங்குவதற்கு பெரிய அளவு பணம் தேவைப்படும்; நமக்குத் தேவையான நேரத்தில் இலகுவாக விற்க இயலாத தன்மைகள் கொண்டவை; சிறிய வருமானம் உள்ளவர்களால் இவற்றில் முதலீடு செய்வது இயலாததாக இருக்கும் என்கிற காரணங்கள் இத்தகைய முதலீடுகளின் மீது முனைவோர்களின் சட்டையைப் பிடித்து பின்னோக்கி இழுத்து, அசையாச் சொத்துக்களின் மீதான முதலீடுகளைப் பற்றி சாதாரண மக்களை தலையைச் சொரிந்து யோசிக்க வைக்கிறது.

அடுத்து, அசையும் சொத்துக்கள் என்று (Movable Properties) என்று அழைக்கப்படுகிற தங்கம், வெள்ளி, நகைகள், வங்கி நிரந்தர வைப்புக்கள், கடன் பத்திரங்கள், பங்குகள் ஆகியவை அசையும் சொத்துக்களாகும். இவற்றுள் வங்கி வைப்புக்கள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றின் மீது வட்டியின் வாசம் வீசுவதால் அவற்றை இஸ்லாமியப் பொருளாதாரம் ஒதுக்கி வைக்கிறது. 

தங்கத்தின் மீதான முதலீடு ஒரு நல்ல முதலீடாகக் கருதப் படுகிறது. ஆனாலும் “ஆளைப் பார்த்தியா! அப்படியே சரம் சரமாத் தொங்குது” என்று புரளி பேசும் பலருடைய கண்களுக்கு முன்னாலும் இரு சக்கர வாகனங்களில் வந்து கழுத்தறுப்பதுடன் இருட்டில் உள் நுழையும் கள்வர்களுக்கு முன்னாலும் தங்கத்தை பாதுகாத்து வைப்பது கடினமாக இருக்கிறது. தங்கத்தின் இன்றைய கடுமையான விலை மதிப்பால் திருடுபவர்கள் தங்கத்தையே குறிவைத்துத் திருடுகிறார்கள். காரணம் Less Luggage ! More Comfort ! கொள்கைதான். பூட்டியிருக்கும் வீடுகளில் வைத்துவிட்டுப் போகும் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது. பயணங்களில் மயக்க பிஸ்கட் கொடுத்து அகப்பட்டதை அபகரிப்பதும் விபத்துக்களில் காப்பாற்ற வருபவர்கள் போல் கழுத்தில் காதில் கிடப்பதை அறுத்துக் கொண்டு ஓடும் மனித மிருகங்களும் அதிகரித்து விட்டார்கள். ஆகவே தங்கத்தின் மீதான முதலீடு, ஆசையும் அநாகரிகமும் அரசாளும் சமூகத்தில் ஒரு முழுப் பாதுகாப்பான முதலீடாகாது.

அடுத்தபடியாக, தங்கத்தை பெண்கள் மட்டுமே அணிய முடியும். ஏதாவது தேவைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் – அதைப் பெண்களிடம் கேட்டால் உடனே கழற்றிக் கொடுப்பதற்கு எல்லோரும் கால் சிலம்பைக் கழற்றிக் கொடுத்த கண்ணகிகளல்ல. நகையை நாம் கேட்டால் நவீன கண்ணகிகள் முதலில் “ நஹி “ என்றுதான் சொல்வார்கள். அப்படி நகைகளை அணிந்து கொண்டிருக்கும் பெண்கள் அவற்றைக் கழற்றும்போது விடும் கண்ணீரின் அளவு சிரபுஞ்சி மழையையும் மிஞ்சிவிடும். “கேட்கும் போதெல்லாம் அதை கழற்றித் தந்தேனே! இதைக் கழற்றித் தந்தேனே !" என்று கூறும் பெண்கள் தங்கத்தை வாங்கும்போது மனமகிழ்வும் விற்கும்போது மனச் சோர்வும் அடைகிறார்கள். இதனால் குடும்ப வாழ்வில் தொய்வு விழ சாத்தியக்கூறுகள் உள்ளன. 

பல நல்ல மகிழ்வான குடும்பங்கள் தங்கத்தை விற்க நேரிடும்போது இழக்கக் கூடாததை இழந்து விட்டதாக உணர்கிறார்கள். "எங்க வாப்புச்சா தந்தது – எங்க வாப்பா பினாங்கிலேயிருந்து கொண்டு வந்தது" என்றெல்லாம் தங்க நகைகளின் மீது பெண்களுக்கு செண்டிமெண்டல் அட்டாச்மென்ட் உள்ளதைப் பார்க்கிறோம். அத்துடன் கல்யாணம் முடிக்க வேண்டிய குமர்களை வைத்துக் கொண்டு நகைகள் மீது கை வைப்பதா என்றும் – இப்போது விற்றால் பிறகு தேவைக்கு வாங்க முடியுமா என்றும் பெண்கள் கேள்விக் கணை தொடுப்பார்கள் என்பது சமுதாயம் தழுவிய பொருளாதாரத்தின் உண்மையின் வடிவம்.

ஆகவே தங்க முதலீடு என்பது கூடியவரை ஒரு வழிப்பாதைதான். ஒரு நகையை தட்டாரப்பிள்ளையிடம் கொடுத்து அழித்துவிட்டு, "ஆமா உறுத்துது- புடவையைக் கொழுவிக் கொழுவி இழுக்குது" என்று கூறி மாற்றி வேறு நகைகள் செய்ய வேண்டுமானால் அவைகளை மனக் கஷ்டம் இல்லாமல் பிரிய நமது பெண்கள் உட்படுவார்களேயன்றி நமது பொருளாதார நடவடிக்கைகளுக்காக தங்கத்தை விற்க பெரும்பானமையான பெண்கள் மனதார உடன்படவே மாட்டார்கள். 

ஆகவே தங்கத்தின் மீதான முதலீடு என்பது கை நழுவிப் போன சேமிப்பு. ஆகையால் தங்கத்தின் மீதான முதலீட்டை பெரும்பாலும் செலவுக் கணக்கில்தான் எழுதிவைக்க வேண்டும். வேண்டுமானால் ஆறுதலுக்காக, சேமிப்பு ரூபத்தில் ஏற்படும் செலவு என்று சொல்லிக் கொள்ளலாம். இன்னொரு வார்த்தையில் சொல்லப்போனால் தங்கத்தின் மீதான முதலீடு ஒரு தூங்கும் முதலீடு. தங்கத்தின் மீதான முதலீடு, நம்முடனே தங்கும் முதலீடு. நம்மைவிட்டுப் பிரியா முதலீடு. இந்த முதலீட்டால் வருமானம் வர வாய்ப்பில்லை. ஆனாலும் உடனடித் தேவைகள் ஏற்படும் காலத்தில் கை கொடுத்துக் காப்பாற்றும் கைகண்ட மருந்துதான் தங்கத்தின் மீதான தனித்தன்மையான தன்னிகரற்ற முதலீட்டு முறை என்பது மறுக்க இயலாது.

முயூசுவல் பண்ட் என்று அழைக்கப்படும் பரஸ்பர நிதிகளையும் முதலீட்டில் ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளலாம். அண்மைக் காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த முதலீட்டு முறை மக்களை மடையர்களாக்குவதில் முன்னிலை வகிக்கிறது. பெரும் விளம்பர உக்திகளாலும் வீடு தேடி வரும் விற்பனைப்பிரதிநிதிகளாலும் தூக்கிப் பிடிக்கப்படும் இந்த முதலீட்டுமுறை அடிப்படையிலேயே ஒரு மாயையை தோற்றுவிக்கிறது. இதன் முறையென்ன வென்றால் வர்த்தக வங்கிகளும் , முதலீட்டு நிறுவனங்களும் பல கார்பரேட் கம்பெனிகளும் முயூசுவல் பண்ட் என்கிற முறையில் பொது மக்களின் சேமிப்புகளைப் பெற்றுத் திரட்டி அவ்விதம் திரட்டப்பட்ட முதலீட்டுப் பணத்தைக் கொண்டு பங்கு சந்தையில் தங்களது இஷ்டத்துக்கு பங்குகளை வாங்கி விற்று, கடன் பத்திரங்களை வாங்கி வைத்து , நிறுவனங்களுக்கு வட்டிக்குக் கொடுத்து அதனால் இலாபம் திரட்டி அதை முதலீட்டாளர்களுக்கு ஈவு வைத்துக் கொடுக்கும் முறையே ஆகும். இந்த முறையில் ஏற்றம் பெற்றவர்களைவிட ஏமாந்தவர்களே அதிகமென்று இந்த முறையில் முதலீடு செய்து அனுபவப்பட்டவர்கள் சொல்கிறார்கள். இந்த முறையின் அடிப்படை என்னவென்று நமது மொழியில் சொல்லப்போனால் 'ஊரார் வீட்டு கோழியை அறுத்து உம்மா பெயரில் பாத்திஹா ஓதுவதுதான்' என்று கூறலாம். எப்படியும் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று அலைபவர்கள் பலி கொடுக்கப்படும் இடம்தான் இந்த மியூசுவல் பண்ட் முறையாகும். வாசமுள்ள வடை வைத்திருக்கிறார்கள் என்று இதில் வாயை வைத்து மாட்டிக் கொண்ட எலிகள் ஏராளம். வட்டியின் இழை இந்த முறையில் ஊடுருவி இருப்பதால் முஸ்லிம்கள் கவனமாகக் கையாளவேண்டிய முதலீடு இந்த முறையாகும். 

அடுத்து எஞ்சி இருப்பது பங்கு வர்த்தகம் மற்றும் பங்குச் சந்தை முதலீடுகள்தான். பங்குகளை ஒரு ஊகம் நிறைந்த துணிகரமான முதலீடுகள் (Risky investments) என துணிந்து சொல்லலாம்; வகைப்படுத்தலாம். இவ்வகை முதலீடுகளில், இலாபம் வர வாய்ப்பு உள்ள அதே அளவு நஷ்டம் ஏற்பட்டு, போட்ட முதல் ( capital) ஸ்வாஹா ஆகவும் வாய்ப்பு உள்ளது. முன்பெல்லாம், நடுத்தர மக்கள் பங்கு வர்த்தகத்தில் அதிக ஈடுபாடு காட்டியதில்லை. ஆனால் ஊதிப் பெருக்கும் ஊடகங்களால் நிலைமைகள் மாறி வருகின்றன. மக்கள் இன்று விரைவாக பணத்தைப் பெருக்க விரும்புகிறார்கள். எனவே, பங்குச்சந்தை முதலியவற்றில் துணிந்து ஆழம் தெரியாமலேயே காலை விடுகின்றனர் . எனவே, பங்குச் சந்தை பற்றிய அறிவு இன்று அவசியமாகிறது. பங்கு சந்தை பற்றிய இஸ்லாமியப் பொருளாதாரப் பார்வையும் அவசியமாகிறது. 

இவற்றை விவாதிக்கும் முன் பங்கு என்றால் என்ன? பங்கு சந்தை என்றால் என்ன? அவை எப்படி இயங்குகின்றன? ஆகிய கேள்விகளுக்கு விடை ? 

இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம்.

இபுராஹீம் அன்சாரி

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் – 33 15

அதிரைநிருபர் பதிப்பகம் | June 21, 2014 | , , , ,

ன் ட்டைனும் ருநாம்

உலகப் பொருளாதாரம்,  இன்றைய நவீன  உலகில் வட்டியை அடிப்படையாகக்கொண்டே இருக்கிறது என்பது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும்.  வட்டி பல அரிதாரங்களைப் பூசி ஆலவட்டம் போட்டு வருகிறது. வட்டிக்கு கடன் வழங்கும் முறை காலப்போக்கில்  பல வடிவங்களைப் பெற்றுள்ளது அவற்றுள் Mortgage, Finance, Leasing, Hire  Purchase , Hypothecation,  போன்றன அவற்றில் சில வடிவங்களாகும். அவற்றுள் ஒரு வடிவமே Credit Card என வழங்கப்படுகின்ற கடன் அட்டை என்கிற நடைமுறையாகும் . 

இப்படி வட்டி போடும் நவரச வேடங்களில் கடன் அட்டை என்கிற வேடம் ஒரு கவர்ச்சிகரமான வேடமாகும் ; இடுப்பில் இரண்டு இன்ச் கச்சையும் மார்பில் மாராப்பும் இல்லாமல் மறைக்க வேண்டியதை மறைக்காமல் குலுக்கு ஆட்டமும் குத்தாட்டமும் ஆடி வல்லவர்களைக் கூட வளைத்துப் போடும் வன்மை நிறைந்த வட்டியின் வனப்பான  அவதாரமே கடன் அட்டை. இன்றைய தனிமனித பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது இந்தக் கவர்ச்சி உடை அணிந்த கடன் அட்டை கலாச்சாரம்தான். 

கடன் பற்றிய கடந்த அத்தியாயத்தில் ஒரு மனிதருக்கு அத்தியாவசியமான தேவை ஏற்படுகிற போது கடன் வாங்குவதில் தப்பில்லை என்கிற கருத்தை குறிப்பிட்டோம். ஆனால் தேவை ஏற்படாமலேயே கடன் வாங்கும் அளவுக்கு மனதை தயார்ப் படுத்துவதே கடன் அட்டையின் தனிப்பட்ட தன்மையாகும். அரை வயிறுக் கஞ்சியாவது குடிக்க வேண்டுமென்று அரிசியை கடன் வாங்கும் நிலைமையில் இருக்கும் ஒருவனிடம் கடன் அட்டை இருந்தால் அவன் ஐ பேடு வாங்கி மச்சினிக்குப் பரிசாக அனுப்பத துணிவான்.    

உலகத்தின் வரலாறுகளைப் பார்த்தால் ஒழுக்கத்தின் அழிவுகள் அனைத்துமே உருவாகும் பகுதி மேற்கத்திய நாடுகளே என்பதில் சற்றும் சந்தேகம் இருக்க இயலாது. நாகரிக வளர்ச்சி என்கிற பெயரில் மேற்கத்திய நாடுகளில் தோன்றத் தொடங்கிய   பழக்கங்களே மெல்ல மெல்ல  உலகெங்கும் பரவி குவலயத்தை ஆண்ட பல நாடுகளை குப்புறத் தள்ளிய வரலாறுகள் பல இருக்கின்றன. அவ்வகையில் மேற்கில் தோன்றிய ஒரு பழக்கமே கடன் அட்டை பயன் படுத்தும் கலாச்சாரமாகும்.  அத்துடன் அமெரிக்க மற்றும் யூத மூளைகள் ஒன்று சேர்ந்து ஈன்ற குழந்தையே இந்த கடன் அட்டை எனும் இந்த  ஈனக் குழந்தை.  

பொருளாதார நடவடிக்கைகளின் தொடக்கம் எது என்று பார்ப்போமானால் அது மனிதர்களுக்கு ஏற்படும் தேவையும் ஆசையும்தான்.  இந்தத் தேவைகளை அத்தியாவசியத் தேவை (Necessities)  என்றும் ஆடம்பரத்தேவை (Luxuries) என்றும்  பொருளாதார இயல் பகுத்து இருக்கிறது. கையில் உள்ள காசுக்குத் தகுந்தபடி தனது செலவினங்களைத் திட்டமிடும் மனிதன் முதலில் தனது அத்தியாவசியத்தேவைகளுக்கே அந்தக் காசை பயன் படுத்துவான். ஆடமபரத் தேவைகளையும் , ஆசைப்படும் தேவைகளையும் கையில் காசில்லாமலேயே நிறைவேற்றிக் கொள்ளும் நிலைமைகளை உருவாக்குவது கடன் அட்டை கலாச்சாரமாகும். 

இந்த கடன் அட்டையின் ஆபத்தை அறிந்தவர்கள் அவற்றைக் கண்டு ஒதுங்கிப் போனாலும் நிதி நிறுவனங்களும் வர்த்தக வங்கிகளும் வீட்டுக் கதவுகளைத் தட்டுவது மட்டுமல்லாமல் நேரில் சந்தைப்படுத்தும் விற்பனைப் பிரதிநிதிகளை நாம் வேலைபார்க்கும் அலுவலகத்துக்கும் அனுப்புவதுடன்  அலை பேசி மற்றும் இணைய தளங்களின் முகவரி  மூலமாகவும் கவர்ச்சியான விளம்பர  உக்திகளைக் கையாண்டு இவர்கள் விரிக்கும் வலையில் பல மான்களும் மீன்களும்  வீழ்ந்துவிடுகின்றன.  கடன் அட்டைகளை வைத்திருப்பதை ஒரு பெருமையாகக் கருதும் மனப்பான்மையிலும்  பலர் இந்த வலையில் வீழ்ந்துவிடுகின்றனர். 

உலகிலேயே  மிகவும் கொடியது என்ன வென்று கேட்டால் நல்லது போலத்தோன்றும் கெட்டதுதான். நல்லவர்கள் போலத் தோன்றும் கெட்டவர்களே உலகில் ஆபத்தானவர்கள். வெறும் பனை ஓலைதானே  என்று கை வைக்கப்போனால் அது பச்சைப் பாம்பாகி கண்களைக் கொத்திவிடும்  உதாரணம் இந்தக் கடன் அட்டைக்குக் கச்சிதமாகப்  பொருந்தும். 

உண்மையில் கடன் அட்டை என்பது நுகர்வோரை கடன்காரராக மாற்றும் ஒருவகையான சமூகக் கொடுமையாகும். சம்பாதிப்பதை உறிஞ்சும் அட்டைப் பூச்சியே இந்த கடன் அட்டை. பணம் இல்லாத நிலையில் மனோதத்துவரீதியாக ஒரு தைரியத்தைக் கொடுத்து செலவு செய்யத் தூண்டும் ஒரு இழைதான் இந்த கடன் அட்டை. தங்களின் பர்சுகளில் இருக்கும் கடன் அட்டைகளின் மதிப்பு ஏதோ ஒரு தனிமனிதன் தான் தேடி சேமித்து வைத்திருக்கும் செல்வத்தின் மதிப்பு அல்ல என்பதை உணராமல்  செலவழித்துவிட்டு அதிலிருந்து விடுபட முடியாமல் பல மில்லியன் மக்கள் இன்று உலகெங்கும்  பொருளாதார சிக்கலில் ஆழ்ந்து மூழ்கிவிட்டதாக ஒரு ஆய்வு சொல்கிறது.  ஒரு வகையில் இது ஒரு நாகரிகமான  அடிமை சாசனம். 

கடன் அட்டை கலாச்சாரத்தை ஆதரித்துப் பேசுவோர் கூறும் முதல் வாதம் பெரும் தொகைகளை ரொக்கமாக கைகளில் வைத்திருப்பது ஆபத்தானது. அதற்கு பதிலாக பெருந்தொகை மதிப்புக்கு ஒரு கடன் அட்டையை வைத்திருப்பது பாதுகாப்பானது என்பதாகும்.  ஆனால் உலகெங்கும் கடன் அட்டையின் இரகசிய சங்கேத வார்த்தைகள் திருடப்பட்டு பலரின் பணம் பதைக்கப்பதைக்க களவாடப்படும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றனவே! கூட்டம் கூட்டமாக இப்படிப்பட்ட கொள்ளைக் கும்பல் பிடிபடுகின்றனவே!  போலியாக கார்டுகள் தயாரிக்கப்பட்டு பல இலட்சங்கள் சுருட்டப்படுகின்றனவே ! ஆகவே திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.   

பணத்தைப் பாதுகாப்பதற்காக கடன் அட்டையைப் பயன்படுத்துவோர் காசோலைகளைப் (Cheques) பயன்படுத்தலாம் அல்லது (Traveller’s Cheques)  சுற்றுலா காசோலைகளைக்  கூட பயன்படுத்தலாம். மேலும் கிரெடிட் கார்டு என்கிற ஷைத்தானுக்கு ஒரு குணமுள்ள  சக்களத்தி உண்டு. அதன் பெயர் டெபிட் கார்டு (Debit Card). இந்த டெபிட் கார்ட் என்பது நமது கணக்கில் எவ்வளவு பணம் இருப்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு மட்டும் நம்மால் நுகர் பொருட்களையோ அல்லது சேவைகளையோ வாங்கிக் கொள்ள உதவும். பணத்தை ரொக்கமாக தூக்கி சுமக்க அஞ்சுவோர் இந்த டெபிட் கார்டுகளை பயன்படுத்தலாம். இப்படி டெபிட் கார்டுகளைப் பயன்படுத்திக் கொள்வதில் எவ்வித குற்றமோ தடையோ நாம் காண இயலாது. வெளியூர்களுக்குச் செல்பவர்கள் தங்களுடைய வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி அதை தங்களது டெபிட் கார்டுகளில் வரவு வைத்துக் கொண்டு செல்லமுடியும். பாதுகாப்பாகவும் இருக்கும் ; தேவைக்கும் பயன் படுத்தலாம். 

கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாமென்று வாதிடுவோர் வைக்கின்ற இன்னொன்று வாதம் கடன் அட்டைகள் இருந்தால் அவைகளைப் பயன்படுத்துவதன்  மூலம் இணைய தளங்கள்  மூலம் பணம் செலுத்தி நாம் செல்ல முடியாத இடங்களில் இருந்து கூட நுகர் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதாகும்.  உதாரணமாக விமான டிக்கெட்டுகள் முதல் இரயில் மற்றும் பேருந்து  டிக்கெட்டுகள் வரை இவ்விதம் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. மேலும் இணைய தளங்கள் அல்லது தொலைக் காட்சிகள் மூலமாக  விளம்பரம் செய்யப்படும்  டெலி மார்கெடிங் மூலமாகவும் பொருட்களை வாங்க கடன் அட்டைகள்   பயன்படுத்துவது வசதியாக இருக்கிறது என்றும்  நகராட்சி வரிகள்,  தொலைபேசி,   மின்வாரியப்  பட்டியல் தொகைகளைக் கூட  செலுத்திவிட வசதியாக இருப்பதாகவும் வாதிடுகிறார்கள். ஆனால் மேற்கண்ட அனைத்து வசதிகளையும் நம்மிடம் நமது கணக்கில் இருக்கும் பணத்தின் அளவுக்கு டெபிட் கார்டுகள் மூலமும் நாம் பெற்றுக் கொள்ள இயலும்.இதன்மூலம் கடன் வாங்க வேண்டிய நிலைமையும் தவிர்க்கப்படும் ;  வட்டி எனும் வஞ்சகனின் ஆட்சியும் இம்முறையில் இல்லை. 

இஸ்லாமியப் பொருளாதாரத்தின் பார்வையில் கடன் அட்டைகளை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டிய காரணங்கள் யாவை?  

பொதுவாக வட்டியுடன் தொடர்புடைய எவ்வித கொடுக்கல்வாங்களாக இருந்தாலும் அது இஸ்லாமியப் பொருளாதாரப் பார்வையில் அது தடுக்கப்பட வேண்டும்; தவிர்க்கப்பட வேண்டும் என்பதே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதை தடுத்துக் கொள்ள வேண்டுமென்பதன் அடிப்படைக் காரணம். 

கடன் அட்டைகளை தேவைகளுக்காகப்  பயன்படுத்திக் கொண்டு பின் அவ்விதம் பயன்படுத்திய தொகைக்கான வட்டி கணக்கிடப்படும் தேதிக்கு  முன்பே  பணத்தை கடன் அட்டைகளை வழங்கும் நிறுவனத்திடம் செலுத்திவிட்டால் வட்டி இல்லாமல் தவிர்த்துக் கொள்ளலாமே! என்று சிலர் வாதிடுகிறார்கள். இந்த வாதம் இரு விதங்களில் தவறு என்று இஸ்லாமியப் பொருளாதார அறிஞர்கள் கூறுகிறார்கள். 

ஒன்று,  கிரெடிட் கார்டுகளை பெற்றுக் கொள்ளும் முன்பு அவற்றை வழங்கும் நிறுவனத்துடன் நாம் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்கிறோம். அந்த ஒப்பந்தத்தின் ஷரத்துக்களின்படி தாமதமாகும் நாட்களுக்கு குறிப்பிட்ட  சதவீதத்தில்  வட்டி செலுத்த நாம் ஒப்புக் கொண்டு கை எழுத்திட வேண்டும். இத்தகைய கையெழுத்திடும் ஒப்பந்தம் இஸ்லாமிய பொருளாதார விதிகளின்படி ஹராமானது/ விலக்கப்பட வேண்டியது. 

இரண்டாவதாக, நாம் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி வாங்கும் பொருள்கள் மற்றும் சேவைகளுக்குரிய பணத்தை வட்டி கணக்கிடபப்டும் தேதிக்கு முன்பே செலுத்திவிடுவோம் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் கிடையாது. சில நேரங்களில் நமது பணக் கையிருப்பு எதிர்பாராதகாரனங்க்களால்  குறைவாக இருந்துவிட்டாலோ  அல்லது நமது கவனக் குறைவாலோ குறிப்பிட்ட தேதிக்குள் பணம் செலுத்தாவிட்டால் வட்டியின் வலையில் விழும் வாய்ப்புக்கள் அதிகம். ஒருமுறை வட்டி,  நமது வாழ்வில் அரங்கேற்றம் ஆகிவிட்டால் பலமுறை அது பாலச்சந்தர்  படம் போல நமது கதவுகளைத் தட்டும்.   ஆகவே நெருப்போடு  விளையாடுவதை தவிர்த்துக் கொள்வதே நல்லது. 

வட்டியைப் பற்றி இறைவன் தனது திருமறையிலும் பெருமானார் ( ஸல்) அவர்கள் தனது நபி மொழிகளிலும் தந்திருக்கும் எச்சரிக்கைகளை ஏற்கனவே தனி அத்தியாயத்தில் கண்டு இருக்கிறோம் . மீண்டும் கீழ்க்கண்டவற்றை நினவு படுத்திக் கொள்வோம். வட்டியோடு தொடர்புடைய கடன் அட்டையை வாங்குவதையும் பயன்படுத்துவதையும் தவிர்த்துக் கொள்வோம். 

“யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய்) எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், ‘நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான் ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்” (அல்குர்ஆன் 2:275)

“வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியோரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” என்பதை அறிவிப்பவர்  ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த அத்தியாயத்தில் பங்கு சந்தைகள்    பற்றிப் பார்க்கலாம்.
தொடரும்
இபுராஹீம் அன்சாரி

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்- 32 [அவசியம் கருதி தொடர்கிறது...] 19

அதிரைநிருபர் பதிப்பகம் | June 14, 2014 | , , ,

கடனில்லா வாழ்வு !

அன்பானவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும். 

இந்த அத்தியாயத்தை எழுதத் தொடங்குமுன் உங்களுடன் ஒரு வார்த்தை! ஏற்கனவே வெளியான இந்தத் தலைப்பிட்ட தொடர் இன்ஷா அல்லாஹ் விரைவில் நூல் வடிவம் பெற இருக்கிறது. அதற்குமுன் நூலில் சேர்க்கப்பட வேண்டிய சில விடுபட்ட உட்தலைப்புகளின் அத்தியாயங்களையும் எழுதி சேர்த்துவிட வேண்டுமென்று சில அறிஞர்களும் பேராசிரியர்களும் தந்த ஆலோசனையின் அடிப்படையில் சில விடுபட்ட தலைப்புக்கள் இந்தத் தொடரில் இன்னும் சில வாரங்கள் தொடரும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
==================================================================

இன்றைய உலகப் பொருளாதாரம் கடன் முறைகளை அடிப்படையாகச் சார்ந்தே இருக்கிறது. நாட்டுக்கு நாடு கடன் – தனி மனிதருக்கு மனிதர் கடன் – அசையும் அசையாச்சொத்துக்களின் மீது பிணைக் கடன்- சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து தேவைகளுக்குப் “புரட்டும்” தற்காலிகக் கடன்- என்றெல்லாம் கடன் என்பது அன்றாட வாழ்வின் ஒரு அம்சமாகவே  மாறிவிட்டது.  கல்யாணத்திலிருந்து பிரசவம் வரை – சாவு முதல் சமயச் சடங்குகள் வரையும் - கார் வாங்குவது முதல் கையேந்தி பவனில் சாப்பிடுவது வரை  கடன் வாங்காமல் காரியம் நடத்த முடியாது என்கிற மனப்பான்மை மக்களிடம் வளர்ந்து விட்டது.   

கடன் ஏன் ஏற்படுகிறது ?  

தனது வருமானத்துக்குள் வாழ்க்கைச் செலவுகள் அடங்காத போது அல்லது தனது வருமானத்துக்குள் தனது வாழ்க்கைச் செலவுகளை அடக்கிக் கொள்ள இயலாத போது வரவுக்கும் செலவுக்கு இடையே ஏற்படும் இடைவெளியை இட்டு நிரப்ப கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. அளவறிந்து வாழாத சிலரின் வாழ்க்கை கடன் வாங்கியே நகர்த்தப் படுகிறது. அளவோடு செலவு செய்து சிக்கனத்துடன் வாழ்வோரின் வாழ்க்கை கடன் வாங்க தேவை இல்லாதததுடன் வருமானத்தில் மிச்சம் பிடித்து அது சேமிப்பாகவும் உருவெடுக்கிறது. ஒருவருக்கு கடன் ஏற்படுவதற்கும் எற்படாததற்கும் அவரவருடைய தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் , ஆடம்பரம் அல்லது எளிமை போன்ற குணநலன்களே காரணங்களாக அமைந்து விடுகின்றன.

இன்றைய நவீன உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் ஆகிய ஷைத்தானின் பொருளாதாரப் பிரதிநிதிகளால் ஆட்டிப்படைக்கப்பட்டு  கடன் வாங்குவதை ஊக்கப்படுத்தும் பொருளாதார அமைப்பில் கடன் இல்லாமல் வாழ்வது கஷ்டம் என்று ஆகிவிட்டது. கதவைத்தட்டி கடன் வேண்டுமா என்று கேட்கும் இன்றைய நிலையில் கடன் வாங்குவதும் ஒன்றும் சஞ்சீவி மலையை தலையில் தூக்கிவைத்துக் கொண்டு வருவது போல் அப்படி ஒன்றும் கஷ்டமாக இல்லை. காலண்டரில் தேதிகளின் தாள்களைக் கிழிப்பது போல் நவீன உலகில்  இலகுவாகப் போய்விட்ட  சமாச்சாரமே கடன் வாங்குதும் என்று ஆகிவிட்டது. அரை மணி நேரத்தில் கடன் என்று அழைக்கும் விளம்பரங்கள் அங்கங்கே தொங்குகின்றன. கடன் தருவதற்காகவே “கடன் திருவிழா” என்று பொருள் படும் “லோன்  மேளா” என்றும் வருடாவருடம் வண்ணமயமாக நடத்தபபடுகின்றன. இதற்குக் காரணம் பொது மக்களின் மீது கடன் தரும் அமைப்புகளுக்கு ஏற்படும் இரக்கமல்ல . கறக்க கறக்க சுரக்கும் வட்டி என்கிற அமுத சுரபிதான் காரணம். வட்டியின் அடிப்படையிலான பொருளாதாரத்தில் அது ஒரு அச்சுறுத்தலாக இருந்தாலும் வானத்தில் போகிற வட்டிச் சனியனை வாவென்று வரவேற்று ஏணி வைத்து  தங்களின் இல்லங்களுக்குள் இறக்குவதற்கு எல்லோரும் தயாராக இருக்கிறார்கள். கடன் தரும் நிறுவனங்களை சிலர் ஏதோ காமதேனுக்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் “ இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே! இதுதான் உலகம்!  வீண் அனுதாபம் கண்டு நீ ஒருநாளும் நம்பிடாதே! “ என்று பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாஷையில்தான்  பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. 

உலகநாடுகள் ஒன்றை ஒன்று அடிமைப்படுத்தவும் தான் இட்ட  கட்டளைக்கு அடிபணியும் அடிமை நாடாக ஆக்கிக் கொள்ளவும் கடனே அவர்களது கையில் உள்ள கருவியாக இருக்கிறது. கடன் மூலமான வட்டி என்பது ஒருவகையில் கத்தியின்றி இரத்தமின்றி கைப்பற்றப்படும்  காலனித்துவமாகும். இத்தகைய கடன் அமைப்பில் மூன்றாம் உலக நாடுகள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. பணக்கார நாடுகளிடம் கை நீட்டிக் கடன் வாங்கிய ஏழை  நாடுகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போதே கடன்காரர்களாகவே பிறக்கின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. நோட்டுக்களை கடனாக வாங்கிய காரணத்தால் நீட்டுகிற இடத்தில் கையெழுத்து இடுகிற நாடுகள் தங்களது பொருளாதார வளங்கள் சுரண்டப்படுவதை கண்டும் காணாமல் இருப்பதே நவீன காலனியாதிக்கமாகிவிட்டது. 

தனிமனித வாழ்வும் கிட்டத்தட்ட வட்டியின் அடிப்படையிலான கடன்களால் வளங்கள் சுரண்டப்பட்டே நிற்கின்றன. வட்டிக்கு மேல் வட்டி கட்டி வளங்களை கொட்டிக் கொடுத்து, வாழ்விழந்த பல குடும்பங்கள் நம் கண் முன்னே சாட்சியாக நிற்கின்றன. வட்டியைப் பற்றி இஸ்லாம் கூறும் எச்சரிக்கை மிகுந்த   பொருளாதாரக் கருத்துக்களை இதற்கு முன்னரே வேறு ஒரு அத்தியாயத்தில் நாம் கண்டு இருக்கிறோம். 

கடன் பற்றி இஸ்லாமியப் பொருளாதார சிந்தனை ஓட்டங்கள் எவ்வாறு அமைந்து இருக்கின்றன என்பதை நாம் காணலாம். 

கடன் வாங்கிக் காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதை இஸ்லாமியப் பொருளாதாரம் தடை ஒன்றும் செய்துவிடவில்லை. வட்டியை அடிப்படை யாகக் கொண்ட கடன் நடவடிக்கைகளையே இஸ்லாம் தடை செய்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் ஒருவருக்கொருவர் தருவதையும் பெறுவதையும் தடை செய்யவில்லை. கடன் கொடுக்கல் வாங்கலின் போது முறையாக எழுதி வைத்துக் கொள்ளும்படியும் அதற்காக சாட்சிகளை நியமித்துக் கொள்ளும்படியும் இஸ்லாமியப் பொருளாதாரம் வரையறுத்து இருக்கிறது.  இறைவனின் திருமறையின் 2:282 (அல்பகரா)வின் வசனங்கள் இதுபற்றி மிக நீண்ட விளக்கம் தருகிறது. இதே அத்தியாயத்தின் 2:283 ஆம் வசனம் கடனுக்காக அடமானமாக ஒரு பொருளைப் பெற்றுக் கொண்டும் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொள்ளலாமென்றும் அனுமதியளிக்கிறது. அதே போல் அடமானப் பொருளை  அச்சுப் பிசகாமல் அப்படியே திருப்பிக் கொடுத்து விட வேண்டுமென்றும் வரையறுக்கிறது.  

பெருமானார்  (ஸல்) அவர்களின் வண்ணமிகு வரலாற்றை- வாழ்க்கைச் சரித்திரத்தைப் படிக்கும் போது அவர்கள் ஒரு யூதரிடம்  தமது கேடயத்தை அடமானம் வைத்து கோதுமையை கடனாகப் பெற்றதாக அறிகிறோம்.  

கடன் வழங்குவது ஒருவகையில் மனிதாபிமான நேசத்தின் அடிப்படையில் மனிதருக்கு மனிதர்  உதவியும் ஒத்துழைப்புக்குமே அல்லாமல்  அப்படிக் கடன் கொடுப்பது பிழைப்புக்கான ஒரு வழியல்ல என்பதே இஸ்லாத்தின் கடன் பற்றிய பொருளாதார நிலைப்பாடு . கடன் கொடுத்து உதவுவது ஒரு சமூக நலப் பணி என்பதே இஸ்லாத்தின் மனித நேயத்தின் அடிப்படையிலான பொருளாதாரக் கோட்பாடு.  ஒருவர் கண் முன்னால் கஷ்டப்படும்போது கையில் தனது தேவைக்கு அதிகமான  பொருளை வைத்திருக்கும் மற்றொருவர் சகோதர மனப்பான்மையோடும் நட்போடும் தேவைப்படுபவருக்கு பிரதிபலன் கருதாமல் கொடுத்து உதவ வேண்டுமென்பதே கடன் பற்றிய இஸ்லாமியப் பொருளாதாரத்தின் புரட்சிகரமான சிறப்பம்சம்.  ஒருவருக்கொருவர் நண்மையான காரியங்களில் உதவிக் கொள்வது சமுதாயத்தில் அன்பை அதிகப் படுத்தும். இத்தகைய பண்புகளை வெளிப்படுத்தும் பல நபி மொழிகளை இங்கு சுட்டிக் காட்டலாம். 

யாரேனும் சிரமப்படுபவருக்கு அவகாசம் வழங்கினால் அல்லது அவரது கடனைத் தள்ளுபடி செய்தால் எந்த நிழலும் இல்லாத இறுதி நாளில் அர்ஷின் நிழலின் கீழ் அவருக்கு அல்லாஹ் நிழல் தருவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.  நூல்:திர்மிதி

மற்றொரு ஹதீஸில்

ஒருவர் மரணித்து விட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), 'நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும் போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்" என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி

பெருமானார்  (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். “எவர் ஒரு முஸ்லிமுடைய உலகக் கஷ்டங்களில் ஒன்றை நீக்க உதவுகிறாரோ அவரின் மறுமை நாள் கஷ்டங்களில் ஒன்றை அல்லாஹ் நீக்கிவிடுவான் . மேலும் எவர்  கஷ்டத்தில் அவருக்கு (உதவி செய்து)  வசதி ஏற்படுத்திக் கொடுக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இவ்வுலகிலும் மறுமையிலும் அவருடைய (கஷ்டங்களை) இலகுவாக்கிக் கொடுப்பான்." (முஸ்லிம்) 

மேலும்,

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதாக, இப்னு மசூத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு இரு தடவைகள் கடன் வழங்கினால் அவற்றுள் ஒரு தடவை அவர் சதகா என்கிற  தர்மம் செய்தவரைப் போன்றவராவார்" (இப்னு மாஜா, இப்னு ஹிப்பான்)

திருமறை குர்-ஆன் இதுபற்றி இவ்வாறு குறிப்பிடுகிறது .

“அல்லாஹ்வுக்கு நீங்கள் அழகிய கடன் கொடுத்தால் அதனை அவன் உங்களுக்கு பன்மடங்கு அதிகமாக்கித் தருவான். மேலும் உங்கள் பாவங்களைப் புறக்கணித்து விடுவான். (அத்தகாபுன்  64: 17)

அதே நேரம் தவிர்க்க முடியாத சந்தப்பங்களில் அத்தியாவசியத் தேவைகளுக்காக தனது கைகளில் ஒன்றுமில்லா விட்டால் தான் கடன் வாங்க வேண்டுமென்பதும் இஸ்லாத்தின் பொருளாதார நிலைப்பாடு. பட்டினி இருக்கும் நிலையில் கடன் வாங்கி பிரியாணி வாங்கி சாப்பிட வேண்டுமென்று  எண்ணுதல் கூடாது; மாறாக கஞ்சி காய்ச்சிக் குடித்து பசியை நீக்கிக் கொள்ளலாம் என்பதே  இஸ்லாம் அனுமதித்து இருக்கும் கடன் வாங்குவது பற்றிய கோட்பாடு. 

அதே நேரம் கடன் கிடைக்கிறதே என்பதற்காக யானையைக் கடனாகக் கொடுத்தாலும் சிலர் வாங்கத் தயாராக இருப்பார்கள். கடன்  கிடைக்கிறதே என்று வாங்கக் கூடாது தேவைப்பட்டால் மட்டுமே வாங்க வேண்டுமென்பது ஒரு பொதுவான நியதி. ஒருவருக்கு அதிகமானவர்கள் கடன் தரத் தயாராக இருக்கிறார்கள் என்றால் அவருக்கு சமூகத்தில் நற்பெயர் இருக்கிறது என்று பொருள். அந்த நல்ல பெயரை தொடர்ந்து கட்டிக் காப்பாற்ற வேண்டும். பலருக்குக் கொடுக்கப்பட்ட  கடன் , கிணற்றில் போட்டது என்றும் அதை காந்திக் கணக்கில் எழுதவேண்டுமென்றும் சிலர் சமூகத்தில் பெயர் சம்பாதித்து வைத்திருப்பார்கள். கடனை வாங்கும் போதே அதை  திருப்பித்தரும் நிய்யத்துடனும் (Intention) திட்டத்துடனும் (Re-Payment Plan) வாங்க வேண்டும். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதில் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென்று இஸ்லாம் வற்புறுத்துகிறது. 

அபு ராபி ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் 

“ஒருமுறை ரசூல் ( ஸல்) அவர்கள் ஒருவரிடம் ஒரு இளம் ஒட்டகத்தை கடனாகப் பெற்றார்கள். அவர்களுக்கு சதகாவாக சில ஒட்டகங்கள் கிடைத்த போது, என்னை அழைத்து ,  தான் கடன் வாங்கிய அந்த மனிதருக்கு ஓர் இளம் ஒட்டகத்தை திருப்பிக் கொடுத்து கடனை அடைக்குமாறு வேண்டினார்கள். அதற்கு நான் ஆறு வயதுள்ள ஒரு தரமான ஒட்டகம் இருக்கிறது என்று கூறினேன். அதையே அந்த மனிதருக்குக்குக் கொடுத்துவிடுங்கள்; உண்மையில் உங்களில் சிறந்தவர்  தான் பெற்ற கடனை சிறந்த முறையில் திருப்பி செலுத்தியவரே ஆவார்” என்றார்கள். (அஹ்மத்). இதுவே இஸ்லாமியப் பொருளாதார முறைகளின் உயரிய வழிமுறையாகும்.

கடனை வாங்கிவிட்டு அதனை திருப்பித் தராத பழக்கம் உடையவர்களுடைய சமூக அந்தஸ்து பாதிக்கப்படும். அத்தகையோரைக் கண்டாலே பலர் விலகி ஓடுவார்கள். சில சந்தர்ப்ப  சூழ்நிலைகளால் வாங்கிய கடனை சொன்னபடி திருப்பித் தர இயலாத சந்தப்பங்கள் சிலருக்கு ஏற்படுவது இயல்பு. அப்படிப்பட்டவர்கள் கடன் கொடுத்தவர்களை அணுகி,  தங்களுடைய நிலைமைகளைச் சொல்லி  இன்னும் தவணை வாங்கிக் கொள்ளலாம். “ஒருவரை நல்லவர் என்று சொல்ல வேண்டுமானால் அவர் அண்டை வீட்டுக்காரராக இருந்திருக்க  வேண்டும்; அல்லது நீண்ட தூரம் அவருடன் பயணம் செய்திருக்க வேண்டும்; அல்லது அவருடன் கடன் கொடுக்கல் வாங்கல் செய்திருக்க வேண்டும்”  என்று ஒரு அறிஞர் கூறி இருந்தார். இந்த மூன்று நிலைகளை அவர் குறிப்பிட்டு இருப்பதற்குக் காரணம்,  இந்த மூன்று சூழ்நிலைகளிலும் ஒருவருடைய உண்மையான இயல்புகளை இலகுவாகப்  புரிந்து கொள்ள இயலும் என்பதால்தான்.

வசதியுள்ளவர் (கடனை) இழுத்தடிப்பது அநியாயமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள்  அறிவித்தார்கள் . நூல்: திர்மிதி

வசதி இருந்தும் கடனை அடைப்பதில் அக்கரை காட்டாதவர்களை வேண்டுமென்றே தாமதம் செய்பவர்களை கடுமையான வார்த்தையைக் கொண்டு கடனை வசூலிப்பதற்கு உரிமையுண்டு. என்று பெருமானார் ( ஸல் ) அவர்கள் கூறியதாக  அபூ ஹுரைரா (ரலி) அவர்கள்  அறிவித்தார்கள். நூல்: புகாரி

எப்போது கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் கடன் வாங்கியாவது அந்த செலவை செய்யத்தான் வேண்டுமா அல்லது நமது கைகளில் பணம் வரும் வரை அந்தத் தேவையைத் தள்ளிப் போடலாமா என்று தனது மூலவளங்களின் அடிப்படையில் நன்றாக சிந்திக்க வேண்டும். கடன் வாங்குவதை எப்போதும் கடைசி  ஆயுதமாகவே கையாள வேண்டும். சிக்கனமாக செலவு செய்பவர்களுக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை பெரும்பாலும் ஏற்படுவதில்லை என்பது வாழ்க்கையின் அனுபவ பாடம். தேவையற்ற செலவுகளை ஊதாரித்தனமாக செய்பவர்கள் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைகளுக்குத் தள்ளப்படுகிறார்கள். 

இன்றைய சமூகத்தில் ஆடம்பரமான வீடுகளைக் கட்டுபவர்கள், திருமணச் செலவுகளை திணறடிக்கும் வகையில்  செய்பவர்கள், தேவையற்ற நுகர்வோர் பொருள்களை வாங்குபவர்கள், ஊரார் முன் தன்னைப் பெரிய ஆள் என்று காட்டிக் கொள்ளும் பெருமைக்காக ஆடம்பர ஆடை அணிகலன்களை தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் வாங்குபவர்கள்தான் கடன் சுமையில் மாட்டிக் கொள்கிறார்கள்.  இஸ்லாம் அனுமதிக்காத பல சடங்குகளை செய்பவர்களும் கடன்களில் மாட்டிக் கொள்கிறார்கள். கடன் வாங்கியாவது கந்தூரிக்குச் செல்லும் குடும்பங்கள், கடன் வாங்கியாவது பெரிய மனுஷியானதற்கு சடங்கு சுத்தும் குடும்பங்கள், கடன் வாங்கியாவது ஊரைக் கூட்டி ஒன்பது முறை கல்யாண விருந்து வைக்கும் குடும்பங்கள், கடன் வாங்கியாவது பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்களைக் கொண்டாடும் குடும்பங்கள்  கடனாலேயே அழிந்து போன கதைகள் நாம் வாழும் சமுதாயத்தில் நமது  கண்களால்  காணும் கதைகளாகும். 

கடனில் மூழ்கியவர்களை சமுதாயம் மட்டுமல்ல வீட்டில் பெற்ற பிள்ளைகள் கூட மதிப்பது இல்லை. என்னை பெற்றவர், ஊரெங்கும் கடனைத்தவிர எனக்கு என்ன தேடிவைத்துவிட்டுப் போனார்    என்று கடன்காரர்கள் மறைந்த பிறகும் இழி சொல்லை வாங்குவார்கள். கடனில்லாமல் வாழ்ந்து பிள்ளைகளுக்கும் வாரிசுகளுக்கும் சொத்து சுகம் தேடிவைத்து விட்டு மரணிப்பவர்களுக்கு மரணித்த பின்னும் கிடைக்கும் மரியாதை,     கடன்களைத் தேடிவைத்துவிட்டு மரணிப்பவர்களுக்குக் கிடைக்கிறதா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.  

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜை நிறைவேற்றும்போது கூட கடனில்லாமல் இருந்தால்தான் ஹஜ்ஜுகூட கடமையாகிறது என்று அல்லாஹ் விதித்து இருக்கிறான்.  

எவர்  மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறாரோ அவரின்   சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவர்  திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை பாழாக்கும் நோக்கத்துடன் கடன் வாங்குகிறாரோ அல்லாஹ்வும் அவரை  பாழாக்கி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள்  அறிவித்தார்கள்.  நூல்:புகாரி

“கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் “ என்று கம்ப ராமாயணம்,  கடன் பட்டோரின் நிலைய இலக்கிய ரீதியாகக் காட்டுகிறது. ஆனால் கீழ்க் கண்ட இரு சம்பவங்களை நாம்  நபி ( ஸல் ) அவர்களின் வாழ்விலிருந்தும் வாக்கிலிருந்து அறியும் போது அல்லாஹ் நம்மை , நமது கடன்களில் இருந்து காப்பானாக!  என்றே  இறைஞ்சுகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவுக்கு தொழுகை நடத்துவதற்கு முன் அவன் நயவஞ்சகனா? அல்லது தனக்குத் தெரியாமல் இஸ்லாத்திற்கு மாறு செய்பவனா என்று கேட்காமல் , அவர் மீது கடன் இருக்கிறதா? என்றுதான் தனது ஏனைய தோழர்களைப் பார்த்து முதலில்  கேட்பார்கள். கடன் எதுவும் அவர் மீது இல்லை என்றால் மட்டும்தான்  தொழுகை நடத்துவார்கள். இல்லையெனில் நீங்களே  தொழுதுகொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு சென்றுவிடுவார்கள் என்று படிக்கும்போது தான் உயிருடன் இருந்தபோது வாங்கிய கடனை அடைக்காமல் வைத்துவிட்டு மரணிப்பவர்களில் ஒருவராக நம்மை ஆக்கிவிட வேண்டாமென்று இறைவனை நோக்கி ,  நமது நெஞ்சங்கள்  கடன் இல்லாமல் நாம் கண்ணை மூட வைக்க  வேண்டுமென்று இறைஞ்சுகிறது. 

இதன் பிறகு காலத்தின் வளர்ச்சியில்,  இஸ்லாம் வலுப் பெற்ற பிறகு இஸ்லாத்தின் பொது உபகார  நிதியின் அளவு  உயரத் தொடங்கிய பின்-நாட்டுக்கென்று சொத்துக்கள் வந்த பின், இறந்தவர்களுடைய  கடனை அடைப்பது அரசின் தலையாய பொறுப்பு என்று ஆக்கப்பட்டுவிட்டதால் அவரது கடனுக்குப் பொறுப்பு ஏற்பட்டுவிடுகிறது என்கிற திருப்தியில், இறந்தது யாராக இருந்தாலும் தொழுகை நடத்துவார்கள் என்றும் அறிகிறோம். 

இவ்விரண்டு செய்திகளும் மரணிப்பவர்கள் கடனில்லாமல் அல்லது அவரது கடனை திருப்பி செலுத்த பொறுப்பேற்றுக் கொள்பவரின் பொறுப்பில் மரணிக்க வேண்டுமென்ற இஸ்லாத்தின் பொருளாதார கொள்கையை வலியுறுத்துகின்றன. நவீன சட்டங்களில் பல கோடி ரூபாய்களை திட்டமிட்டு கடன் வாங்கி விட்டு அனைத்தும் நஷ்டமாகி விட்டது என்று ஜோடனைகள் ஜோடித்து ஐ..பி. என்கிற இன்சால்வென்சி கொடுக்கிற காட்சிகளைக் காண்கிறோம் . இந்தப் பருப்பு,  இஸ்லாத்தில் இறைவனின் சன்னிதானத்தின் முன் வேகாது.  அல்லாஹ் பாதுகாப்பானாக! 

ஆகவே இஸ்லாமியப் பொருளாதார சிந்தனைகளின் படி  முடிந்த வரை கடன் வாங்குவதை தவிர்த்து கொள்வது நல்லது. கடன் வாங்கிய பிறகு அதனை திருப்பிச் செலுத்த முடியாமல் கடன் கொடுத்தவரிடம் கொடுத்த வாக்கை மீறுவதும் பொய்யும் கூறுவது கடன் வாங்கியவருக்கு  ஏற்படுகிறது. இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் தானே கடனை விட்டும் பாதுகாப்பு தேடியிருக்கிறார்கள்.இதனைத்ட்ட்ட்தான் , 

ஆயிஷா(ரலி) அவர்கள் இவ்வாறு அறிவித்தார்கள். "இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்தார்கள்.

'தாங்கள் கடனை விட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?' என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது 'ஒரு மனிதன் கடன் வாங்கும்போது  பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்" என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள். நூல்: புகாரி

பெருமானார் ( ஸல்) அவர்கள் வாழ்வில் நடந்த இந்த கீழ்க்கண்ட சம்பவத்தை ஹஜரத் முகமது இப்னு அப்துல்லாஹ் இப்னு ஜஷாஷ் சுட்டிக்காட்டிக் கூறுகிறார்கள் . “ ஒரு நாள் நாங்கள் ஜனாசாக்கள் வந்தால் அவைகளை வைக்கும் இடத்தில் கூடி இருந்தோம். எங்களுக்கு மத்தியில் பெருமானார் ( ஸல் ) அவர்கள் அமர்ந்து இருந்தார்கள். திடீரென்று அவர்கள் வானத்தைப் பார்த்துவிட்டு பின் பார்வையைத் தாழ்த்தினார்கள். அதன் பின் தனது கைகளை நெற்றிப் பொட்டுக்களின் மீது வைத்து சுபஹானல்லாஹ்! சுபஹானல்லாஹ் ! என்று கூறியபடியே , “ எவ்வளவு கடுமையான எச்சரிக்கை வந்திருக்கிறது “ என்று கூறினார்கள். அன்று பகலும் அந்த இரவிலும் மறுநாள் காலையும் கூட நாங்க எதுவும் அவர்களிடம் கேட்கவில்லை. மெளனமாகவே இருந்தோம். பிறகு நான் பெருமானார் ( ஸல் ) அவர்களிடம் என்ன கடுமையான எச்சரிக்கை இறங்கியுள்ளது என்று ஆவலுடன் கேட்டேன். அதற்குப் பெருமானார் ( ஸல்) அவர்கள்,   “ கடனைப் பற்றித்தான் கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது.  இந்த முகமதின் உயிர் யார் கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக யாரேனும் ஒரு மனிதர் அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்து ஷஹீதாகினாலும் அவர் மீது கடன் இருந்து அது நிறைவேறும் வரை அவர் சுவர்க்கத்தில் நுழைய முடியாது“ என்று கூறினார்கள். (அஹ்மது). 

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் நாம் வாழ்வில் எவ்வளவுதான்  நன்மைகள் செய்து இருந்தாலும் நாம் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடன் தீர்க்கப்படாமல் இருந்தால் இறைவனின் முன்னாள் நாம் குற்றவாளியே என்பதும் சுவர்க்கத்தில் நுழையும் அருகதையை நாம் இழந்து விடுவோம் என்பதும் தான்.

கடனால் ஏற்படும் இன்னல்களை விட்டும் நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவோமாக! கடனில்லாத நிலையில் மரணத்தைத் தரும்படி இறைவனிடம் இறைஞ்சுவோமாக! 

இன்ஷா அல்லாஹ் அடுத்து நம்மில் பலரின் பர்சுக்குள்ளேயே இடம் பிடித்து இருக்கும்   நவீன கால ஷைத்தான் ஆகிய கடன் அட்டைகளைப் பற்றிப் பேசலாம். 

இபுராஹீம் அன்சாரி

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் – தொடர் - 30 24

அதிரைநிருபர் பதிப்பகம் | September 14, 2013 | , , ,

மக்கள்தொகைப் பெருக்கமும் குடும்பக் கட்டுப்பாடும்.
இன்றைய உலகப் பொருளாதாரத்தை அச்சுறுத்தி வரும் காரணிகளின் பட்டியலில் மக்கள் தொகைப் பெருக்கமும் அதைத் தொடர்ந்த வேலை இல்லாத் திண்டாட்டமும் முதல் வரிசையில் இடம் பிடித்து அமர்ந்து இருக்கின்றன. இன்று உலகில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் உணவு, உடை, உறைவிடம் ஆகியவை போதுமான அளவு வழங்கப் படவேண்டுமென்ற பொறுப்பு எல்லா நாடுகளின் ஆட்சியாளர்களின் தலையிலும் சுமையாக இருக்கிறது.  அத்துடன் வாழ்க்கைத்தரங்களை அதிகப் படுத்துவதும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் கூட அரசுகளின் பொறுப்பாக இருந்து கொண்டு இருக்கிறது.

ஒரு புறத்தில் நவீன மருத்துவ  வசதிகளின் வளர்ச்சி காரணமாக இறப்பு விகிதம் குறைந்து வரும் நிலையில் பிறப்பு விகிதம் உலகெங்கும் கூடிக் கொண்டே  வருகிறது. உலகில் எங்கு பார்த்தாலும் கூட்டம்! கூட்டம்! கூட்டம்!. வீங்காமல் இருக்கும்  இந்த பூமி இந்தக் கூட்டத்தின் எடையை தாங்குமா என்கிற கேள்வி பொருளாதார நிபுணர்கள் பலரின் மத்தியில் எழுந்தது. ஒவ்வொருவரும் தங்கள் தங்களின் பார்வையில்  மக்கள்தொகை பெருக்கம் பற்றிய பொருளாதாரக் கோட்பாடுகளை அளிக்க ஆரம்பித்தனர். இவர்களுள் தாமஸ் ராபர்ட் மால்தஸ் என்பவர் அளித்த கோட்பாடு வல்லுனர்களால் ஓரளவுக்கு சரியான கோட்பாடு மற்றும் எச்சரிக்கை என்ற வகையில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

"சமுதாயத்தின் எதிர்கால வளர்ச்சியை பாதிக்கும் மக்கள் தொகைக் கொள்கை பற்றிய ஆய்வுரை" என்ற  தலைப்பில் ஒரு சிறிய ஆனால் மிகப் பெரிய செல்வாக்குப் பெற்ற நூலை எழுதியவர் தாமஸ் ராபர்ட் மால்தஸ் ஆவார். எங்கோ, ஒரு சிற்றூரில் யாரும் அறியாத ஒரு சமய குருவாக இருந்த இந்த ஆங்கிலேயர், 1798 ஆம் ஆண்டில் இந்த சிறு நூலை வெளியிட்டதும் உலகப் புகழ் பெற்றார்.

"உணவு உற்பத்திப் பெருக்கத்தை விஞ்சும் வகையில் மக்கள் தொகை பெருகி வருகிறது" என்னும் கருத்தே மால்தசின் அடிப்படை ஆய்வுரையாக அமைந்திருந்தது. அவர் தமது மூலக் கட்டுரையில் இந்தக் கருத்தைச் செறிவான வடிவத்தில் விளக்கியிருந்தார். "பெருக்கல் ஏற்றமாக மக்கள் தொகை பெருகிக் கொண்டு வருகிறது. (அதாவது 1,2,4,8,16.....என்ற பெருக்கல் மடங்குகளில் மக்கள் தொகை பெருகுகிறது). அதே சமயம், உணவு உற்பத்தி எண் கணிப்பு முறையில் ஒரே அளவில் (அதாவது 1,2,3,4,5.....என்ற எண் வளர்ச்சி முறையில்) மட்டும் பெருகி வருகிறது". என்று கூறினார்.  

இந்த நூலின்  பிந்திய பதிப்புகளில் மால்தஸ், தமது கொள்கையைச் சற்று தெளிவாக விளக்கியுள்ளார். அதாவது, பிறக்கும் உயிர்களுக்கு உணவு அளிக்க வேண்டுமென்ற அடிப்படையில், "உணவு உற்பத்தியின் வரம்பினை எட்டுகின்ற வரையில், மக்கள் தொகை வரையரையின்றி பெருகிக் கொண்டிருக்கும்". என்றார். மால்தஸ், தமது கொள்கையின் இரு வடிவங்களிலிருந்தும், "மனித குலத்தின் பெரும்பான்மை மக்களுக்கு வறுமையிலும், பட்டினியிலும் வாழ வேண்டிய தலைவிதி ஏற்பட்டிருக்கிறது. நீண்ட காலப்போக்கில், தொழில் நுட்ப முன்னேற்றங்களினால் இதைத் தடுக்க முடியாது போய்விடும். ஏனெனில், உணவு உற்பத்திப் பெருக்கம், ஒரு வரையறைக்குட்பட்ட இன்றியமையாத தேவையாக இருக்கிறது. காரணம் உணவு உற்பத்தியைச்   செய்யும் நிலம், நீர் முதலியவற்றை மனிதனால் புதிதாக உற்பத்தி செய்ய முடியாது. அதற்கு அவனுக்கு ஆற்றல் கிடையாது. ஆனால் வரம்பின்றி மனித உயிர்களை மட்டுமே அவனால்  புதிது புதிதாக  ‘கலகலென  பொலபொலென புதல்வர்களைப் பெறுவீர்’ என்கிற பாடல் வரிகளுக்கு ஒப்ப  உற்பத்தி செய்ய முடியும்.  அதாவது,  மக்கள் தொகையின் ஆற்றல் மற்றும் வளர்ச்சி,  மனிதனின் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவு விளைவிப்பதற்கு இந்தப் பூமிக்கு உள்ள அளவு, ஆற்றல் மற்றும் வளர்ச்சியை விட வரம்பின்றி மிக அதிகமாக உள்ளது என்ற முடிவுக்கு வருகிறார்          மால்தஸ்.  அதாவது மக்கள் தொகை வளர்ச்சியையும் உணவு உற்பத்தியின் ஆற்றலையும் ஒரு ரேஸ்   பந்தயத்தில் ஓடவிட்டால் மக்கள்தொகை வளர்ச்சி,  தனது தலையை நீட்டியாவது ஜெயித்துவிடுமென்று பொருள்.

ஆகவே மக்கள் தொகையை கட்டுப் படுத்த ஏதாவது வழி இருக்கிறதா? வழி அமைந்து இருக்கிறதா?

மால்தசே வழிகளைச் சொல்கிறார்.  போர், கொள்ளை நோய், மற்ற தொற்று நோய்கள் போன்றவை மக்கள் தொகையை அடிக்கடிக் குறைக்கின்றன. ஆனால், இந்தக் கொடிய நிகழ்வுகளின்  விளைவுகள் அளவுக்கு மீறிய மக்கள் தொகைப் பெருக்கத்தின் அச்சுறுத்தலுக்கு எதிராக மனித இனம் தாமே விருப்பமின்றிக் கொடுக்கும் உயிர் பலிகளுக்குப் பின்பு கிடைக்கும் ஒரு தற்காலிகத் துயர் தணிப்பேயாகும். இதற்கு நிரந்தர வழி ஒன்று இருக்கவேண்டும். இருக்கிறதா? மால்தசின் கோட்பாட்டின்படி இருக்கிறது.

மட்டுக்கு அடங்காத  மக்கள்தொகைப் பெருக்கத்தைத் தவிர்ப்பதற்கு "ஒழுக்கஞ்சார்ந்த கட்டுப்பாடு" மட்டுமே சிறந்த வழி என மால்தஸ் வலியுறுத்துகிறார்.

·         காலம் கடந்த திருமணம்  ,
·         திருமணத்திற்கு முந்திய கற்பு நெறி,
·         திருமணத்திற்குப் பின்பு பாலுறவு கொள்வதில் தற்கட்டுப்பாடு

ஆகியவற்றையே "ஒழுக்கஞ்சார்ந்த கட்டுப்பாடு" என்று மால்தஸ் குறிப்பாகத் தருகிறார்.  ஆனால், நடைமுறையில் பெருகிவரும் சமூக நாகரிகங்களின் வரம்பு கடந்த வளர்ச்சியின் காரணமாக,  பெரும்பாலான மக்கள் இத்தகைய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க மாட்டார்கள் என்பதை மால்தஸ் நன்கு உணர்ந்திருந்தார். எனவே, நடைமுறையில், மட்டுக்கடங்காத  மக்கள் பெருக்கம் தவிர்க்க முடியாதது. அதனால், பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடுவதும் அதனால்  சாவதும்  தவிர்க்க இயலாதது என்ற முடிவுக்கு அவர் வருகிறார். இது  மனித இனத்தின் வளர்ச்சி, உற்பத்தி செய்யும் திராணியும் படைத்தது என்பதை ஒதுக்கிவிட்டு தோல்வி மனப்பான்மையை மட்டும்  காட்டும் ஒரு எதிர்மறையான முடிவு ஆகும்.

இதுவரை சொல்லப்பட்டவைகளை சுருக்கமாக தொகுத்து சொல்லிவிட்டால் விளங்குவது இலகுவாக இருக்கும்.
  • மக்கள் தொகை பெருகுகிறது.
  • பெருகும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி பெருகாது.
  • மக்கள்தொகையை மனிதர்கள் தாங்களே முன்னின்று  தடுத்துக் கொள்ளவேண்டும்.
  • அப்படித்தாங்களே தடுத்துக் கொள்ளவில்லை என்றால் மக்கள் தொகைப் பெருக்கமே பஞ்சம், பசி, நோய் காரணமாக பெருகிய மக்கள்தொகையை  அழித்து கட்டுப்படுத்திவிடும். 
கருத்தடை சாதனங்களின் வாயிலாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும்  என மால்தஸ் ஒரு போதும் கூறவில்லை. ஆயினும், அவருடைய அடிப்படைக் கொள்கையிலிருந்து இயல்பாக உருவாகும் தாங்களே தடுத்துக் கொள்ளவேண்டும் என்று கூறப்படும் கருத்து  அதுவாகவே இருக்க முடியும். மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குக் கருத்தடைச் சாதனங்களைப் பெருமளவில்  கையாள வேண்டும் என முதன் முதலில் பகிரங்கமாக வலியுறுத்தியவர், பிரிட்டனில் செல்வாக்கு மிக்க சீர்திருத்தவாதியாக விளங்கிய பிரான்சிஸ் பிளேஸ் (1771-1854) என்பவரே ஆவார். மால்தசின் கட்டுரையைப் படித்த பிளேஸ் அதனால் வெகுவாகக் கவரப்பட்டார். அவர் 1822 ஆம் ஆண்டில் கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துவதை வலியுறுத்தி ஒரு நூலை எழுதினார். அவர் தொழிலாளர்களிடையே கருத்தடைக் கட்டுப்பாடு பற்றிய தகவல்களைப் பரப்பினார். அமெரிக்காவில், டாக்டர் சார்லஸ் நால்ட்டன் என்பவர் கருத்தடை முறை குறித்து 1822 ஆம் ஆண்டில் ஒரு நூலை வெளியிட்டார். 1860 களில் "மால்தசியக் கழகம்" அமைக்கப்பட்டது. குடும்பக் கட்டுப்பாட்டினை வலியுறுத்துபவர்களுக்கு ஆதரவாளர்கள் தொகை பெருகலாயிற்று. கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துவதை அறநெறிக் காரணங்களுக்காக மால்தஸ் தாமே ஏற்கவில்லை என்பதால் கருத்தடைச் சாதனங்கள் மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதை வலியுறுத்தியவர்கள் பொதுவாக, "புதிய மால்தசியக் கோட்பாட்டாளர்கள்" என அழைக்கப்பட்டனர்.

மால்தசின் கோட்பாடு, பொருளாதாரக் கோட்பாட்டின் மீதும் முக்கியமான விளைவை ஏற்படுத்தியது. மால்தசின் செல்வாக்குக்கு ஆட்பட்டிருந்த பொருளாதார அறிஞர் பலர் "வழக்கமான சூழ்நிலைகளில், ஊதியங்கள் பிழைப்பு மட்டத்திற்கு மேலே கணிசமாக  உயர்வதை மக்கள் தொகை பெருக்கம் தடுத்துவிடும்" என்ற முடிவுக்கு வந்தனர். மால்தசின் நெருங்கிய நண்பராக விளங்கிய புகழ்பெற்ற ஆங்கிலேயப் பொருளாதார அறிஞர் டேவிட் ரிக்கார்டோ இவ்வாறு கூறினார்: "உழைப்புக்கான இயல்பான விலை என்பது, தொழிலாளர்கள் நாம் உயிர் வாழவும், பெருக்கமோ குறைவோ இன்றித் தங்கள் வர்க்கத்தை நிலைபெறச் செய்யத்  தேவையான விலையேயாகும்". இந்தக் கோட்பாட்டினை "கூலி நிர்ணய இரும்பு விதி" என்று பொதுவாக அழைப்பர். இக் கோட்பாட்டைக் கார்ல் மார்க்சும் ஏற்றுக் கொண்டார். கார்ல் மார்க்சின் "உபரி மதிப்புக் கோட்பாட்டில்" இந்தக் கோட்பாடு ஓர் இன்றியமையாத அம்சமாக இருந்தது.

இன்றையக் குடும்ப கட்டுப்பாடு இயக்கம் மால்தசின் வாழ்நாளில் தொடங்கப் பெற்ற இயக்கத்தின் நேரடித்  தொடர்ச்சியாகும். அப்படிப் பார்க்கும்போது  மனித இனப் பெருக்கத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவேண்டுமென்ற  கொள்கையை விதைத்தவர் மால்தசே ஆவார்.

ஒரு நாடு நல்லாட்சியைப் பெற்றிருப்பினும், மட்டுக்கு மீறிய மக்கள் தொகைப் பெருக்கத்தினால், அவதியுற வாய்ப்பு உண்டாகும் என்பதை முதலில் உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்தவர்  மால்தஸ்தான் என்று கூற முடியாது. அவருக்கு முன்னரே வேறு பல தத்துவஞானிகள் இக்கருத்தை வலியுறுத்திச் சென்றிருந்தனர். பிளேட்டோவும், அரிஸ்டாட்டிலும் இதைக் கூறியுள்ளதாக மால்தசே குறிப்பிட்டுள்ளார். "ஒவ்வொரு மனிதனுக்கும், தான் விரும்புகிற அளவுக்குக் குழந்தைகளைப் பெறுவதற்குச் சுதந்திரம் அளிக்கப்படுமானால், அதனால் ஏற்படக்கூடிய இன்றியமையாத விளைவு வறுமை தான்" என்று அரிஸ்டாட்டில் எழுதியிருப்பதாக மேற்கோள் காட்டுகின்றனார்.

மால்தசின் அடிப்படைக் கொள்கை முற்றிலும் அவருடைய சொந்தக் கொள்கை இல்லை. ஆயினும், அவருடைய முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடலாகாது. பிளேட்டோவும், அரிஸ்டாட்டிலும் போகிற போக்கில் மேற்போக்காகவே இந்தக் கொள்கையைக் குறிப்பிட்டுச் சென்றிருக்கின்றனர். அவர்களுடைய சுருக்கமான குறிப்புகள் பெரும்பாலும் கண்டு கொள்ளப்படவில்லை. இந்தக் கொள்கையை விரிவாகக் கூறியவர் மால்தசே ஆவார். அவர் தான் இது குறித்து ஏராளமாக எழுதினார். அனைத்திற்கும் மேலாக மக்கள் தொகைப் பெருக்கம் பற்றிய சிக்கலின் அபாயகரமான விளைவை வலியுறுத்தி, அதனை அறிஞர்கள் உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்த முதல் மனிதர் மால்தசே ஆவார் என்பதை மறந்துவிடலாகாது.

“ காதலுக்கு வழிவைத்து
கருப்பாதை சாத்த
கதவொன்று கண்டறிவோம்
அதிலென்ன குற்றம் ? 

என்று கேட்டார் பாரதிதாசனும். நாம்  இருவர்! நமக்கு இருவர்! என்ற முழக்கங்கள் மூலை முடுக்குகளில் உள்ள சுவர்களிலும் தீப்பெட்டிகளும் கூட  எழுதப்பட்டன. ஒன்றே பெருக! அதை நன்றே பெருக!  என்று திருத்தப் பட்ட மற்றும் இரண்டிலிருந்து குறைக்கப் பட்ட கோஷங்களும் முழங்கப் பட்டன. ஆடுமாடுகளுக்கு காயடிப்பது போல் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என்ற முறையில் ஆண்களின் ஆண்மைத் தன்மை நீக்கப் பட்டது., பெண்களின் கர்ப்பமுறும் தன்மைகள் காவு  கொடுக்கப்பட்டன. அதற்காக அரிசிமுதல் பருப்புவரை இலவசப் பரிசாக வழங்கப் பட்டது. இதற்காக ஆள் பிடித்துக் கொண்டுவரும் முகவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப் பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை என்கிற சுகாதாரத் துறையில் குடும்பக் கட்டுப்பாடு தனி அங்கமாயிற்று. அதிகமான அறுவை  சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப் பட்டது. தெருவெங்கும் பாடல், ஆடல் , நாடகங்கள், திரைப்படங்கள் மூலம் பரப்புரைகளும் செய்யப் பட்டன. பேருந்துகள் முதல் விமானங்கள் வரை அடையாளச் சின்னமாகிய சிவப்பு முக்கோணம் பொறிக்கப்பட்டது.     

பொதுவாக சில அரசியல் கட்சிகள் முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப் பாட்டுத் திட்டத்துக்கு ஆதரவு தருவதில்லை. குடும்பத்தைக் கட்டுபடுத்தாமல் வத வத வென்று பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளுகிறார்கள். இதனால் முஸ்லிம்களின் மக்கள் தொகை எண்ணிக்கை கூடிவிடும் என்றெல்லாம் பழிதூற்ற  ஆரம்பித்தனர். இவற்றில் உண்மை இருந்தது. காரணம் முஸ்லிம்கள் ஈமானும் இறையச்சமும் உடையவர்கள். தங்களின் இறைவனும் தங்களின் இரசூல்  (ஸல்) அவர்களும் வகுத்த வழியிலேயே வாழவேண்டுமென்று நினைப்பவர்கள். இஸ்லாம் குடும்பத்தைக் கட்டுப் படுத்துகிறேன் என்ற போர்வையில் இறைவனால் படைக்கப் பட்டு  தாயின் கர்ப்பகருவறையிலேயே தனது சுஜூதை தொடங்கும் கருவைக் கலைக்க அனுமதி வழங்கவில்லை. இவை பற்றி விரிவாக பார்க்கலாம். இப்போது பொதுவான சில உண்மை கருத்துக்களை நோக்கலாம்.

என்னைக் கேட்டால் முஸ்லிம்கள் மட்டுமல்ல யாருமே குடும்பக் கட்டுப் பாடு செய்ய வேண்டியது இல்லை என்றுதான் கூறுவேன்.  குடும்பக்கட்டுப்பாடு செய்யாததால் மக்கள்தொகை பெருகுகிறது. மக்கள் தொகைப் பெருக்கத்தால் உணவுப் பற்றாக் குறை ஏற்படுகிறது . குடும்பக் கட்டுப்பாடு செய்துவிட்டால் எல்லாக் குறைகளும் தீர்ந்துவிடும் என்பது ஒரு  மோசடியான  பரப்புரையாகும்.   

சில  புள்ளி விபரங்களை வைத்து இந்த விவாதத்தை துவங்குவது நன்றாக இருக்கும். அதற்குமுன் இந்தத்தொடரின் அத்தியாயமான படைத்தவன் படைத்தது பற்றாக் குறையா என்ற தலைப்பிட்ட 12 & 13 ஆம் அத்தியாயங்களின் மேல் உங்களின் அறிவுக் கண்களை ஒரு ஓட்டம்  ஓட்டி கொள்வது நல்லது.

இன்றைக்கு உலகத்தில் 500  கோடி மக்கள் வாழ்கிறார்கள். என்றாலும் 1500  கோடி மக்களுக்கான உணவு உலகெங்கும் மொத்தமாக உற்பத்தியாகிக் கொண்டு இருக்கிறது. தவறு எங்கே நடை பெறுகிறது என்றால் எல்லா உற்பத்தியும் உலகின் பொருளாதாரத்தை   தனது கரங்களில் கட்டிப் போட்டு வைத்திருக்கும் பணக்கார நாடுகளில் குவிந்து கிடக்கிறது.100  கோடி மக்கள் வாழக் கூடிய பணக்கார நாடுகளில் மட்டும் 1000  கோடி மக்களுக்குத்தேவையான உணவுப் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. பணக்கார நாடுகள் தனக்குத் தேவையானது போக, மீதி உள்ள கோதுமை, பால், அரிசி போன்றவற்றை  உணவுப் பற்றாக் குறையை ஏற்படுத்தவும் அரசியல் செல்வாக்கின்  மிரட்டல்களை பயன்படுத்தி அடிபணிய வைக்கவும் கடலில் கொண்டு போய் கொட்டி விடுகிறார்கள்.  எனவே மக்கள் தொகைப் பெருக்கத்தால்தான்  உணவுப் பொருள்களில்  பற்றாக் குறை ஏற்படுகிறது என்பது தவறான வாதமாகும்.  

உதாரணமாக, இன்றைக்கு இந்திய மக்கள் தொகை 110  கோடியாகும். சுமார் அறுபது எழுபது வருடங்களுக்கு முன்பு இந்திய மக்கள் தொகை முப்பது            கோடிதான். பாரதியார் அதனால்தான் ‘முப்பது கோடி முகமுடையாள்’ என்று பாடினார். இப்போது உள்ள உணவுப் பற்றாகுறையைப் போல அன்றும் இருக்கத்தான் செய்தது.

இந்திய மக்கள்தொகை நூற்றுபத்து  கோடி இருக்கும்போது எப்படி முப்பது கோடி மக்களுக்கு உணவு கிடைக்கவில்லையோ அதேபோல முப்பது கோடி மக்கள் இருக்கும்போது பத்து கோடி மக்களுக்கும் பத்து கோடி இருந்த போது மூன்று கோடி மக்களுக்கும் உணவுப் பற்றாகுறை  இருந்து வந்தது உண்மை. (இப்போதுதான் உணவுப் பாதுகாப்பு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறி இருக்கிறது.) அப்படியென்றால் உண்மையில் பற்றாக்குறைக்குக் காரணம் மக்கள் பெருக்கமா? நிர்வாகக் குறைபாடா? பங்கிடுதலில் பாகுபாடா? அரசியல் அட்டகாசமா? இரக்கமற்ற நெஞ்சங்களா?

அண்மையில் The Economic Times என்கிற  ஆங்கிலப் பத்திரிகையில் படித்த ஒரு ஆய்வுக் கட்டுரையின் மொழிபெயர்ப்பை இங்கு தர விரும்புகிறேன்.( சற்று நீண்டுவிடும் ஆனால் நமது மக்கள் தொகையின் அளவும் அதிகமாக இருப்பதால் அதிகமாக எழுதவேண்டியாகிவிட்டது- பொறுமையுடன் படிக்க வேண்டுகிறேன். )

 உலகில் தினமும்  87 கோடிப்  பேர் பசியால் வாடும் நிலையில், சர்வதேச அளவில் வீணாகும் உணவுப் பொருள்களால்   75,000 கோடி டாலர்  அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக -அசனா லெபை டீக்கடை அல்ல - ஐக்கியநாடுகள் சபையில் உணவு மற்றும் வேளாண அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியப் பணத்தில் இது  48 லட்சம் கோடியாகும். இது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி ( GDB)  மதிப்பில்  50 சதவீதமாகும். சுவிட்சர்லாந்து நாட்டின் ஜி டி பிக்கு நிகரான தொகையாகும் இது என்பது கூடுதல் ஆக கவனிக்கப்பட வேண்டியதாகும்.

உலக அளவில் உற்பத்தியாகி உண்ணாமல் வீணாக்கும் உணவுப் பொருள்களின் அளவு  33 சதவீதமாக உள்ளது. உலக மக்கள் தொகையில் மட்டுமல்ல உணவுப் பொருள்களை வீணாக்கும் நாடுகளிலும் உலகிலேயே சீனாதான் முதலிடம் வகிக்கிறது என்பது அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவல்.

உலக நாடுகளில் அனைத்து மக்களுக்கும் முழுமையான உணவுப் பாதுகாப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை . சில ஆப்ரிக்க நாடுகளோ வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. இந்த நிலையில் அரிசி, கோதும, சிறு தானியங்கள் மற்றும் காய்கறி பழங்கள் என பல ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள 130 கோடி டன் உணவுப் பொருள்கள் வீணாகிவருவது விடை காணமுடியாத பல சிக்கலான  கேள்விகளை முன் வைத்துள்ளது.   37  ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் , 2050- க்குள், உலக மக்கள் தொகை, மேலும்  200 கோடி அதிகரிக்கப் போகிறது.

சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆகிய நாடுகள் பொருளாதார மையங்களாகத் திகழ்கின்றன. இந்த நாடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ள ஆசியா கண்டத்தில் ஒரு தனிமனிதரால் ஆண்டுக்கு சராசரியாக 100 kilo காய்கறிகளும்   80 kilo உணவு          தானியங்களும் வீணடிக்கப் படுகின்றன என ஐ நாவின் புகார்ப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

அரபு மற்றும் பணக்கார நாடுகள் சுகாதாரம் குறித்து தேவைக்கும் அதிகமான எச்சரிக்கை உணர்வுகளைக் கொண்டுள்ளன. இதனால் காய்கறி, பழங்கள் மீது சிறிய கீறல் இருந்தாலும் அவை தூக்கி எறியப்படுகின்றன. உணவுப் பொருள்களின் காலாவதி தேதிகளில் அளவுக்கு அதிகமாகக் காட்டப்படும் ஆர்வமும் கவனமும் காரணமாக டன் டன்னாக விளைபொருள்கள் குப்பையில் கொட்டப் படும் அவலம் காணப்படுகிறது.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் உற்பத்தி நிலையிலேயே பெருமளவு உணவுப் பொருள்கள் வீணாகிவிடுகின்றன. சாலை ஓரங்களில் இருக்கும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப் படும் நெல் மூட்டைகள் ஒரு தார்ப் பாய் கூட போட்டு மூடப் படாமல் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் பொறுப்பற்ற செயலைக் காணலாம். அறுவடைக்குப் பின் சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதன வசதி இல்லாமலும், சரக்குப் போக்குவரத்தின் போதும் ஏராளமான வேளாண்மைவிளை பொருள்கள்  வீணாகின்றன.

உலக அளவில் சுமார் 140 கோடி ஹெக்டேர் நிலத்தில் சாகுபடியாகும் உணவுப் பொருள்கள் வீணாகின்றன என்று ஐநா கணக்கிட்டுள்ளது. இது மொத்த சாகுபடி பரப்பளவில்  28 சதவீதம் ஆகும். இது ஹராம் இல்லையா?  

உற்பத்தி, அறுவடைக்குப்  பின் பராமரித்தல் , சேமிப்புக் கிடங்கு  போன்றவற்றின் கட்டமைப்பு மற்றும் நிர்வாகக் குறைபாடுகளால் 54 சதவீத உணவுப் பொருள்களும் பதப் படுத்துதல், விநியோகம், நுகர்வு போன்ற இரண்டாம் கட்ட நடவடிக்கைகளில்    46 சதவீத உணவுப் பொருள்களும் வீணாகின்றன.

உணவுப் பொருள்களை வீணாக்குவது இரண்டு பாவங்களைச் செய்கிறது. ஒன்று தண்ணீர் போன்ற இயற்கை வளங்களும் வீணாக்கப் படுகின்றன. பொருளாதார நிலையும் தாழ்வுறுகிறது. இவற்றை மீறி மக்களுக்கு உணவளிப்பது என்கிற கோட்பாடு மழுங்கிப் போய் பட்டினிச்சாவுகளும் அதிகரிக்கின்றன. நிலைமைகள் இப்படி இருக்க இறைவனால் படைக்கப் பட்ட உயிரினங்களின் மேல் பழி போடுவது நியாயமா?

மக்கள் தொகையின் வளர்ச்சியின் காரணமாக, உண்மையில் பசுமைப் புரட்சி போன்ற பல்வேறு திட்டங்களால் உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை எட்டிப் பிடித்தது என்பதும், சில உணவுப் பொருட்கள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டன என்பதும் பொருளாதார வரலாறு சொல்லும் உண்மைகள் . அன்றைக்கு நெல் பயிரிடுதலின் காலம் ஆறு மாதங்கள் . இன்றோ பல பகுதிகளில் மூன்று மாதப் பயிராக விளைந்து வருகிறது. இன்னும் ஒன்றரை மாதப் பயிராகவும் பயிரிடும் நிலைமையை - எந்த இறைவன் இந்தியாவுக்கு அதிக மக்கள் தொகையை அளித்தானோ அதே இறைவன் தேவையை முன்னிட்டு மனிதனின் அறிவை உசுப்பிவிட்டான் என்பதே உண்மையாக  இருக்க  முடியும்.

மக்கள் தொகையின்  பெருக்கமும் நெருக்கமும்  நெருக்கடியும் விவசாயத்தில் மட்டுமல்ல அறிவியலிலும் மனிதனின்  கொடியை பட்டொளி வீசிப்  பறக்க வைத்தது.  புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், விமானச்சேவை முதல் கணினியின் அற்புதங்கள் வரை யும் அன்றாடம்  புதிது புதிதாக மனித மூளையின் அற்புதங்கள் , கண்டுபிடிப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன.

ஒரு பில்கேட்சின் தாயோ, அபுல் கலாமில் தாயோ, தாமஸ் ஆல்வா எடிசனின் தாயோ, ஐன்ஸ்டீனின் தாயோ , மார்க்கோனியின் தாயோ தங்களின் குடும்பத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக இந்த அறிவியலார்களை, கல்வியாளர்களை கருவிலேயே கலைத்து  இருந்தால் இவர்கள் இந்த உலகத்துக்குக் கிடைத்திருப்பார்களா?  குடும்பக் கட்டுப் பாட்டை ஆதரித்துப் பேசுபவர்களின் பெற்றோர் இதைச் செய்து இருந்தால் இப்படி ஆதரிப்போர் உலகை தரிசித்து இருக்க முடியுமா?

இஸ்லாம் நியாயமான காரணங்களுக்காக குடும்பக்  கட்டுப்பாட்டை ஆதரிக்கிறது.

தாயின் உயிருக்கோ அல்லது உடல் நலனுக்கோ ஆபத்து ஏற்படும் என அனுபவத்தின் வாயிலாகவோ அல்லது நம்பத்தகுந்த ஒரு மருத்துவர் மூலமோ அறிந்தால், குடும்பக்கட்டுப்பாட்டுக்கு அனுமதியுண்டு. இக்கருத்துக்கு ஆதாரங்களாகக் கீழ்வரும் திருமறையின் வசனங்களை இஸ்லாமியப் பொருளாதார  அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

''உங்களை நீங்கள் அழிவுக்கு உட்படுத்த வேண்டாம்' (2:195)

“மேலும் உங்களை நீங்கள் கொலை செய்து கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது அதிகம் அன்பு கொண்டவனாய் இருக்கிறான்.” (4:29)

தனது குழந்தைகளுக்காக வேண்டி ஹராத்தையோ அல்லது பாவத்தையோ செய்ய வேண்டிவருமென்று ஒருவர் அஞ்சும் நிலையிலும் குடும்பக்கட்டுப்பாட்டுக்கு அனுமதியுண்டு.

“அல்லாஹ் உங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்த விரும்புவதில்லை.” (5:6)
என்று அல்லாஹ் உறுதியளிக்கிறான்.

தனது குழந்தைகளின் உடல்நலம் பாதிப்புறுமென்றோ அல்லது அவர்களை முறையாக வளர்ப்பதில் பிரச்சினைகள் தோன்றுமென்றோ அஞ்சுவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பினும் குறித்த செயற்பாட்டிற்கு அனுமதியுண்டு.

உஸாமா (ரலி) அறிவிக்கிறார்கள்  'ஒருமுறை ஒருவர் ரஸுல் (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! நான் எனது மனைவியிடத்தில் அஸ்ல் செய்கின்றேன்' என்றார். 'அதற்கு நபிகளார் 'ஏன் அப்படிச் செய்கின்றீர்?' என்று வினவ அதற்கு அம்மனிதர் “ நான் எனது இருக்கும்  குழந்தைகளையிட்டு அஞ்சுகின்றேன்' என்றார். அதற்கு நபிகளார் 'அது (அஸ்ல்) தீங்கிழைப்பதாக இருப்பின் பாரசீகத்தையும், ரோமாபுரியையும் பாதித்திருக்கும்' (அதாவது இத்தகைய தனி மனிதர்களின் நிலைகள் முழுச் சமூகத்தையும் பாதிக்காது. அவ்வாறு இருப்பின் அன்றைய வல்லரசுகளாகத் திகழ்ந்த ரோம, பாரசீகத்தைப் பாதித்திருக்கும் என்பதாகும்.) என்றார்கள்.” ( அஸ்ல் = Pls Ref: Sathyamargam. Com)

பால்குடிக் குழந்தையின் நிலையைக் கருத்திற்கொண்டு, தாய் கருத்தரிப்பதனால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கருதுவதும் குடும்பக் கட்டுப்பாட்டை நியாயப்படுத்துகின்ற ஒரு காரணமாகும்.

பால் குடிக் குழந்தை இருக்கும் நிலையில் தன் மனைவியுடன் (கருத்தரிக்கும் நோக்கோடு) உடலுறவு கொள்வதனை நபியவர்கள் இரகசியக் கொலை என வர்ணித்துள்ளனர். ஆயினும், இதனை ஷரீஅத் ஹராம் என முற்றாகத் தடை செய்யவில்லை என்பதனைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.

மேலே குறிப்பிட்ட நியாயமான காரணங்களுக்காகக் குடும்பக் கட்டுப்பாடு செய்வதனை இஸ்லாம் அனுமதித்திருப்பினும், கருச்சிதைவை அது அனுமதிப்பதில்லை.  ஒரு கருவை அதற்கு ரூஹ் ஊதப்பட்டதன் பின்னர் சிதைப்பது ஹராமான மாபெரும் குற்றமாகும் என்று கூறப் படுகிறது. ஆனாலும் குறித்த கருவானது சிதைக்கப்படாது தொடர்ந்து தாயின் வயிற்றில் இருப்பது அவளின் உயிருக்கே ஆபத்தையேற்படுத்தும் என்பது உறுதியாகத் தெரியவந்தால் இரு தீங்குகளில் ஒன்றைத் தேர்வு  செய்ய வேண்டியிருப்பின், அவற்றில் சேதம் குறைந்ததைத் தேர்வு செய்தல் வேண்டும் எனும் சட்டவிதியின் அடிப்படையில் கருவைச் சிதைப்பதைத் தவிர வேறு வழியே இல்லாத போது அதற்கும்  அனுமதியுண்டு. ஏனெனில், கருவிலிருக்கும் சிசுவுக்காக வாழுகின்ற தாயை இழக்க முடியாது. அது பொறுப்புடையதும் புத்திசாலித்தனமுடையதும்  ஆகாது.

இஸ்லாம் நடைமுறைக்கேற்ற பொருளியல் கொள்கைகளை போதித்து வழிகாட்டும் மார்க்கம் என்பதை இவற்றால் அறியலாம்.

"பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்கும் உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது’’ ( 11:6) என்கிற திருமறையின் வசனமும்,

“அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான் அவனே உணவு வழங்குகிறான்” (30:40) என்கிற வசனமும்,  மனித இனத்துக்கு இறைவன் தரும் வாரண்டியும் கியாரண்டியும் ஆகும். அகிலத்தைப் படைத்து ஆண்டுகொண்டிருக்கும் ரப்புல் ஆலமீனின்     வர்த்தைகளுக்குப் பின் வேறென்ன தேவை? படைப்பவனும் அவனே! பரிபாலிப்பவனும் அவனே! காப்பாற்றி உணவளிப்பவனும் அவனே!. உருவான கருவை இறைவன் அனுமதித்த காரணமின்றிக் கலைப்பவர்கள் தங்களின் ஈமானையும் இறையச்சத்தையும்  கலைத்துக் கொள்கிறார்கள் என்றே கூறுவேன். இறைவனின் எல்லைகளில் கை வைக்க எவருக்கும் உரிமை இல்லை என்றும் கூறுவேன்.

“இறைவா! நாங்கள் உன்னையே வணங்குகிறோம்!. உன்னிடத்தே நல்லுதவி தேடுகிறோம் . நீ எங்களுக்கு நேரான பாதையைக் காட்டி அருள்வாயாக!" என்கிற திருமறையின் தோற்றுவாயில் நாம் வைக்கும் கோரிக்கைகளை ஏற்று நமக்கும் நமது பிறந்த மற்றும் பிறக்க இருக்கும் சந்ததிகளுக்கும் நல் அருள் புரிவானாக! ஆமீன்.

இன்ஷா அல்லாஹ் மீண்டும் சிந்திப்போம்; சந்திப்போம்.

இபுராஹீம் அன்சாரி

முக்கிய அறிவிப்பு : இந்த தொடரை விரைவில் நிறைவுக்கு கொண்டுவர இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு