Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label கொசு. Show all posts
Showing posts with label கொசு. Show all posts

கொசு(றுச்) செய்தியானாலும் இது உசுரு மேட்டரு ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | June 05, 2012 | , , , , ,

“விடாமல் துரத்திக்கடிக்கும் கொசுக்களை, ஒரு வாய்ப்பு கிடைத்து போட்டுத்தள்ளும்போது இருக்கும் சுகமே அலாதிதான்“

ஆம்....தண்ணீருக்கு அடுத்தபடியாக நோய்களை பரப்புவது கொசுவே. டெங்கு காய்ச்சல் மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற பயங்கர வியாதிகளை கொசுக்கள் பரப்புகின்றன. இது தவிர பலவித வைரஸ்களை பரப்புவதன் முலம் வேறு சில வியாதிகள் தொற்றவும் காரணமாக இருக்கின்றன.

1. கொசு(க்) கடித்தவுடன் அந்த இடத்தில் அரிப்பு ஏற்படுவது ஏன் ? 
2. மேலும் அந்த இடம் வீங்குவது ஏன் ?
3. கொசு ஒரு நேரத்தில் எவ்வளவு ரத்தம் உறிஞ்சும் ?

இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலாக...............

மனிதர்களை கடிப்பதற்கு கொசுவிடம் பற்கள் கிடையாது. உண்மையில் கொசு கடிப்பதில்லை. அதன் தலைப்பகுதியில் ஊசி போன்ற கூர்மையான குழல் பகுதி உள்ளது. அந்த ஊசி மூலம் ரத்தத்தை உறிஞ்சும் போது அது உறைந்துவிடக்கூடாது என்பதற்காக தனது எச்சில் போன்ற திரவத்தை வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள ரசாயனம் தோலில் பட்டதும் எரிச்சலையும் அரிப்பையும் ஏற்படுத்துகிறது.

ரத்தம் உறிஞ்சும் அளவு ஒவ்வொரு கொசுவுக்கு கொசு மாறுபடும். இருப்பினும் ஒரு கொசு தனது உடல் எடையில் ஒன்றரை மடங்கு அளவு ரத்தத்தை உறிஞ்சும். சராசரியாக ஒரு கொசு 2.5 மில்லி கிராம் எடை கொண்டதாக இருக்கும்.

இந்த கொசுக்களால் மனித இனம் அனுபவிக்கும் துன்பங்கள் கொஞ்சமல்ல. உலகில் 40 சதவீதம் பேருக்கு டெங்கு காய்ச்சல் கொசுக்கள் முலம் பரவுகிறது. ஆண்டு தோறும் 10 கோடி பேர் பாதிப்புக்குள்ளாவதில் ஏறக்குறைய 22 ஆயிரம் பேர் பாதிப்பு அதிகமாகி இறந்துவிடுகிறார்கள். குறிப்பாக “ஏடிஸ்” இன கொசுக்களே இதற்கு காரணமாகும்.

மனிதர்களின் உயிரையே பறிக்கும் மிகவும் அபாயகரமான நோய்களை வேகமாக உண்டாக்குவதில் கொசுக்களுக்கே முதலிடம். கொசுக்களிடமிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வது நமது நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது. குறிப்பாக குழந்தைகள் இதனால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். 

ஒரு கொசுவின் இனப்பெருக்க காலத்தில் அது ஆயிரக்கணக்கான கொசுக்களை உற்பத்தி செய்து விடுகிறது. எனவே கொசுக்களை முற்றிலும் ஒழிப்பது என்பது சாத்தியமில்லாதது. ஆனால் அவற்றின் உற்பத்தியைக் குறைக்க முடியும். கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாவதற்கு நாமே காரணமாக இருக்கிறோம். 

இயற்கையாக கொசுக்களின் உற்பத்தியை ஓரளவு தடுப்பது எப்படி ?

1. வீட்டின் பின்பகுதியில் தண்ணீரைத் தேங்க விடுவது கூடாது. நீர் தேங்கும் இடங்களில் பிளிச்சிங் பவுடரை இடலாம் மற்றும் பினாயிலையும் ஆங்காங்கே தெளிக்கலாம்
.
2. சுத்தம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாதது சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருத்தல் கூடாது.

3. தெருக்களில், குளம் குட்டைகளில் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுவது உள்ளிட்ட சில காரணங்களால் கொசுக்களின் உற்பத்தி பல மடங்காகி விடுகிறது. இதை முதலில் நிறுத்த வேண்டும். 

எனவே இயற்கையாக கொசுக்களின் உற்பத்தியைத் முழுவதுமாக தடுக்க முடியாவிட்டாலும், கொசுவின் உற்பத்தியைத் ஓரளவு தடுக்கும் விதத்தில் நாம் செயல்பட முயற்சி செய்யவேண்டும். 

செயற்கையாக கொசுக்களின் “கடி” யை தடுப்பது எப்படி ?

1. சீன தேசத்தில் உள்ள Ningbo, Foshan, Shunde போன்ற மகாணங்களில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிற Electronic Insect Killer Machine, Insect Killer Bat மற்றும் இன்றைய காலக்கட்டங்களில் வந்துள்ள பல நவீன எலக்ட்ரானிக் சாதனங்கள் போன்றவைகளையும் பயன்படுத்தலாம்.

2. மேலும் Electronic Spray, Insect Killer Liqued, Coil போன்றவைகளையும் பயன்படுத்தலாம். ஆனால் இவைகள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியது என்ற ஒரு கருத்தும் மருத்துவத்துறையில் நிலவுகிறது.

மேலும் கொசுத்தொல்லையை ஒழித்திட, நமது பேருராட்சியை அணுகி அவர்களை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் / மாவட்ட மலேரியா ஒழிப்பு அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க அன்புடன் கேட்டுக்கொள்ளலாம்.

-சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்....

அதிரை கொசுக்களிடம் ஓர் பிரத்யேக பேட்டி...! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | November 03, 2011 | , , ,


உலகளவில் தேடப்படும் அதிபயங்கர குற்றவாளியைக்கூட இன்றைய ஊடகங்கள் அவர்கள் பதுங்கி பாதுகாப்பாக இருக்கும் பதுங்கு குழிக்குள் கூட சென்று பல சிரத்தை எடுத்து அவர்களை பிரத்யேக பேட்டி கண்டு அவர்கள் பற்றிய தகவல்களை வெளியுலகிற்கு கொண்டு வந்து தன் ஊடகத்தின் தனித்திறமையை பரபரப்புடன் அவ்வப்பொழுது வெளிக்காட்டிக் கொள்வது நாம் அறிந்ததே. அவர்களின் துணிச்சல்கள் நிச்சயம் நம்மால் பாராட்டப்பட வேண்டியவைகளே.

அது போல் ஒரு சிறு முயற்சியாக இன்று நமது சிறப்பு செய்தியாளர் உள்ளாட்சி தேர்தல் களத்தில் நமதூரில் எல்லாத்தரப்பு வேட்பாளர்களையும் பேட்டி கண்டு அவ்வப்பொழுது நமதூர் இணையதளங்களில் வழங்கி நம் அனைவரின் கண்களுக்கும் விருந்து வைத்தனர். மனிதர்களை மட்டும் பேட்டி கண்ட அவர் வித்தியாசமாக மற்ற உயிரினங்களையும் பேட்டி காண வேண்டும் என்ற ஆவலில் இம்முயற்சியில் இறங்கியுள்ளார். தற்சமயம் பருவ மழைகாலமாதலால் நமதூரில் ஒட்டு மொத்தமாக எல்லோராலும் படுபயங்கரவாதியாக கருதப்படும் இரத்த பந்தமான 'கொசுக்களை' பேட்டி கண்டு இங்கு நமக்காக வழங்கியுள்ளார். இதோ உங்களின் பார்வைக்கு..

செய்தியாளர் : "மனிதர்களை மட்டும் பேட்டி எடுத்துப்பழகிப்போன நமக்கு மக்களோடு மக்களாக உறவாடும் இரத்த பந்தங்களாகிய உங்களையும் (கொசுக்களையும்) பேட்டி காணும் ஆவலில் நான் இங்கு வந்துள்ளேன். உங்களின் ஒத்துழைப்புடன் கூட இந்த பேட்டிக்கு முதற்கண் நன்றி கூறிக்கொள்கிறேன்... ஆரம்பிக்கலாமா கொசுக்களே???"

வெளியூர் கொசு : "வாங்க சார், எங்களை எல்லாம் பேட்டி எடுக்கும் அளவுக்கு உலகம் மாறி விட்டதா? ஆச்சரியமாக இருக்கிறதே?"

செய்தியாளர் : "உள்ளூர்க்காரனான என்னை சார் என்று அழைக்கிறீர்? நீர் வெளியூர் கொசுவா?"

உள்ளூர் கொசு : "ஆமாம் காக்கா, வெளியூர்களில்ளெல்லாம் சுத்தம், சுகாதாரம் என்று சொல்லி எங்கள் பொழப்புல மண்ணை அள்ளி போட்டு வருகிறார்கள். அதனால் அந்த கொசு பொழப்பு தேடி நம்மூர் பக்கம் வந்ததை நாங்கள் தான் வரவேற்று எங்களுடன் சேர்த்துக்கொண்டோம்."

செய்தியாளர் : "நீங்கள் மனிதர்களுக்கு எதிரியாக இருந்தாலும் உங்களுக்குள் இருக்கும் இந்த ஒற்றுமை அவர்களிடம் இல்லை."

உள்ளூர் கொசு : "செய்தியா(ளரா)க்கா, நீங்கள் எங்களை தேடி வந்து பேட்டி எடுத்துள்ளதால் நாங்கள் இங்கு மனம் திறந்து உங்களிடம் எல்லா உண்மைகளையும் சொல்லி விடுகிறோம். கேளுங்கள் உங்களது கேள்விகளை..."

செய்தியாளர் : "நீங்கள் உங்களின் பிறப்பு அதன் வளர்ச்சிகள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?"

உள்ளூர் கொசு : "எங்கெல்லாம் அசுத்தங்களும், நீண்ட நாட்கள் அகற்றப்படாத கழிவுகளும், மக்கி நாறிப்போன குப்பைகளும், கழிவு நீர்த்தேக்கங்களும், இருண்ட இடங்களிலெல்லாம் எங்களின் பிறப்பிடம். அது தான் எங்களுக்கு ஒரு சொர்க்கபுரியும் கூட. அங்கு தான் எங்கள் இனம் கூட்டம் கூட்டமாக உற்பத்தியாகும்."

செய்தியாளர் : "ஆஸ்பத்திரியில் ஊசி போடும்பொழுதே வலிக்கிறது. ஆனால் நீங்கள் மனிதர்களை கடித்து சென்ற பிறகல்லவா அரிக்கிறது. அது எப்படி? ஏதேனும் மாயமந்திரம் உங்களிடம் உண்டா?"

உள்ளூர் கொசு : "நல்ல கேள்வி கேட்டிருக்கிறீர்கள் காக்கா? நாங்கள் மனிதர்களின் தோள் மேல் அமர்ந்து எங்கள் ஊசி மூக்கில் க்ளோரஃபார்ம் போல் வரும் உணர்ச்சி இழக்கச்செய்யும் ஒரு திரவத்தை தடவி பின்னர் நாங்கள் ஊசியை அதன்மேல் பாய்ச்சி எங்களுக்கு வேண்டிய இரத்தத்தை உறிஞ்சி எடுத்தபின் பிறகு பறந்து விடுவோம்." நாங்கள் பறந்த பின் அந்த மயக்க திரவம் சக்தி இழந்து பின் மனிதர்கள் உணர்ச்சி வந்து சொரிந்து கொள்கிறார்கள்.

செய்தியாளர் : "ஓஹ்..! உங்கள் கடியில் அவ்வளவு நுணுக்கம் இருக்கிறதா? பரவாயில்லையே? அது சரி உங்கள் கடியால் மனிதர்களுக்கு வரும் நோய்கள் பற்றி தயக்கம் இன்றி கொஞ்சம் இங்கு விளக்க முடியுமா?"

உள்ளூர் கொசு : "காக்கா நீங்கள் விலாவாரியாக கேட்பதால் இதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். எங்கள் கடியின் மூலம் மனிதர்களுக்கு மலேரியா, டைஃபாயிட், மூளைக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா, யானைக்கால் மற்றும் அதன் காரணமாக இன்னும் பல நோய்கள் வர காரணமாக இருக்கிறோம், இதனால் மருத்துவர்களின் வாழ்வாதாரம் சிறக்க உதவுகிறோம்"

செய்தியாளர் : "உங்களுக்கு வரக்கூடிய தொந்தரவுகள் என்ன, என்ன?"

உள்ளூர் கொசு : "சில வீடுகளில் ஆல் அவுட், குட் நைட், டார்ட்டாய்ஸ் போன்ற மஸ்கிட்டோ மேட் இவைகளை பயன் படுத்தி எங்களுக்கு சில நேரங்களில் சில தொல்லைகள் தரப்படுகின்றன. அது நிரந்தர தொல்லைகளல்ல. காரணம் அது ஒரு சந்தைப்பொருள், வெளிநாட்டு சதி, எங்களை நிரந்தரமாக அவர்களின் பொருட்கள் அழித்து விட்டால் பிறகு அவர்கள் எப்படி சந்தையில் அவர்கள் பொருட்களை விற்று சந்தையை விரிவாக்க முடியும்? அதனால் அவர்கள் வீரியம் குறைந்த பொருட்களைத்தான் விற்று வருகிறார்கள். அது ஒரு வகையில் எங்கள் இனம் அழிக்கப்படாமல் பாதுகாக்கிறது."

செய்தியாளர் : "இப்படியெல்லாம் இதில் விசயங்கள் உள்ளனவா?" 

உள்ளூர் கொசு : "இன்னொன்றையும் சொல்ல மறந்து விட்டேன். மின்சார வாரியம் அடிக்கடி மின் தடையை ஏற்படுத்தி மேற்கண்ட கருவிகள் தொடர்ந்து இயங்காமல் தடுத்து எங்களுக்கு பேருதவி புரிந்து வருகின்றன. அவர்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்."

செய்தியாளர் : "உங்களுக்கு உகந்த காலம் எது?"

உள்ளூர் கொசு : "எங்களுக்கு மழைக்காலம் மற்றும் அதன் பின் வரும் குளிர் காலம் தான் மிகவும் ஏற்ற காலம். அப்பொழுது தான் எங்கள் இன உற்பத்தி அதிகரிக்கும். வெளிச்சமான, சுத்தமான இடங்கள் எங்கள் இனம் அழிய காரணமான இடங்கள்." 

செய்தியாளர் : "கடைசியாக ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?"

உள்ளூர் கொசு : "நமதூரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேரூராட்சி மன்ற தலைவர் அஸ்லம் அவர்கள் தான் பதவி ஏற்கும் முதல் நாளில் நமதூரில் சுகாதாரத்திற்கு முக்கியத்தும் கொடுக்கப்படும் என்று மேடையில் அறிவித்திருப்பது எங்களுக்கெல்லாம் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது. இப்படி மனிதர்கள் எல்லாம் சுத்தம், சுகாதாரம் என்று விழித்துக்கொண்டால் எங்கள் இனம் வெகுவிரைவில் அழிக்கப்பட்டுவிடுமோ? என்ற அச்சத்தில் நாங்களெல்லாம் உறைந்து போயுள்ளோம். ஆனால் அசுத்தம் செய்யும் மக்கள் இருக்கும் வரை எங்களுக்கு என்றும் அச்சம் இல்லை. அவர்கள் தான் எங்களின் நிரந்தர நண்பர்கள். யார், யாரெல்லாம் எங்கள் இனம் பெருக, வளர, வாழ வழிவகை செய்கிறார்களோ அவர்களுக்குத்தான்  நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். சரி காக்கா, மனிதர்கள் புழங்கும் சாக்கடையும், சகதியும் உள்ள இடத்திலிருந்து விருந்திற்கு அழைப்பு வந்துள்ளது அங்கு எங்கள் படையுடன் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன்.


 நீதி  :  "பாத்தியளா? மக்களே சுத்தம், சுகாதாரம் எப்படி எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கு மிக, மிக முக்கியம் என்று. அசுத்தம், ஆரோக்கியமற்ற சூழலை நம் மார்க்கம் எப்பொழுதும் வன்மையாக கண்டிக்கிறது. கொசுக்களின் பேட்டி மூலம் நாம் விழுப்புணர்வு அடைந்து கொடிய, கொடிய நோய்நொடிகளிலிருந்து நம்மையும், நம் வீட்டினர்களையும் பாதுகாத்துக்கொள்வோமாக.

கற்பனைக்கு கரு கொடுத்து கொசுக்களின் பேட்டியை தொகுத்தவர்...

- மு.செ.மு. நெய்னா முஹம்மது.
- அதிரைப்பட்டினத்திலிருந்து....


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு