அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பிற்கினிய வாசக நேசங்களே:
இளமை துள்ளும் எக்காரியமும் ரசிக்கத்தூண்டும் அதன் வேகம் மற்றும் விவேகமும் அதே நேரத்தில் அசர வைக்கும். அவ்வகையில் தனித்திறன் வாய்ந்த இளமையின் புதுமையை அறிமுகப்படுத்துவதில் என்றுமே முன்னோடியாக இருக்கும் அதிரைநிருபர் வலைத்தளம் கண்டெடுத்த மற்றுமொரு நிழற்பட கலைஞன்தான் அசத்தல் காக்கா ஜாகிர்ஹுசைன் அவர்களின் இளைய மகன் அஃப்ஸல் ஹுசைன்.
மலேசியாவில் தந்தையின் தனிப்பட்ட கனிவான கவனிப்பில் வளர்ந்து படித்து வரும் இவர் தமது மூன்றாம் கண்கொண்டு (அதாங்க கேமராவாமே) இறைவனின் படைப்புகளை உற்றுப் பார்ப்பதில் உவகை கொண்டவர் மட்டுமல்ல அப்படியே காட்சிப் படுத்தி ஆவணப்படுத்துவதில் கில்லாடி.
இவரை(யும்) ஊடகத்துறைக்கு அழைத்துவரும் முயற்சியாக இங்கு இவரின் கிளிக்ஸ் பதிவாக மட்டுமல்ல இளயவர் அஃப்ஸலை வரவேற்பதில் மகிழ்கிறோம்...!
அல்ஹம்துலில்லாஹ்.
அதிரைநிருபர் பதிப்பகம்
எழிலுறக்கம்:
ஆழிப் பேரலை யென
எழாத நீர்நிலை
அக்கினிக் குழம்போ வென
சுடாத வாநிலை
பச்சை உறை யிட்ட
பெருமலையே தலையணை
பாதத்தில் புல்லுரசும்
பூமியே பஞ்சணை
ஆரும் சீண்டாத
அமைதியே அதன் துணை
அதனைப் படம் பிடித்தது
அஃப்ஸலின் நல் ரசனை
பால் வழியும் பாறை:
ஈரம் இருக்கும் கல்
நீரை நிறுத்தாது
அருவி கொட்டும் பாறையோ
அருகி லிழுக்கும் யாரையும்
கால் நனைத்துக் கடந்திருப்பர்
கண்விழித்துக் களித்திருப்பர்
அஃப்ஸல் கண்டதால்தான்
அழகாகப் பதிவு செய்தான்
பசுமைக்கொடி:
கொடிகொண்ட வர்ணங்களாய்
பிடித்திருக்குப் படம்
பசுமைக்கு நடுவே
பாலென சிற்றருவி
புற்குண்டு பிரித்து
புறப்பட்டதா அருவி
அருவியைக் குழந்தையென
பிரசவிக்கிறதா மலை
அருகிருந்து
அவதானித்த
அஃப்ஸலுக்கே வெளிச்சம்
வெளிச்ச மழை:
வெளிச்ச மழை
வீதியில் விழுகிறது
சிலிர்த்த இலை
சிந்தையில் உழுகிறது
மூடு பனி மயங்கி
மரங்களில் ஒளிகிறது
வானவில் லொன்றை
காணவில்லை மறைக்கிறது
பச்சைக் கானகத்தில்
வெள்ளை யடிக்கிறது
பசுமை புரட்சி செய்து
வெயிலையே எதிர்க்கிறது
அஃப்சல் அழகியலில்
அசல் இந்த ஆதாரம்
கரும் பச்சையும்
கிளிப்பச்சையும் இரட்டையர்
இங்கு
வசிக்க வொரு இடம்
வாய்த்துவிட்டால்
கதவில்லா வாயிலும்
கம்பியில்லா சாளரமும்
கூரையில்லா குடிசையுமாய்
வீடு ஒன்று வைக்க வேண்டும்
விடுமுறையைக் கழிக்க வேண்டும்
படம்பிடித்த அஃஸல்
இடம்பிடித்துத் தருவானா?
மந்தகாச மந்தாரம்:
மேகம் மிதக்கிறதே அது
வானமா தடாகமா
மெல்ல விடிகிறதே அது
கிழக்கா விளக்கா
எத்தனை ஓவியங்கள் அது
வானமா வண்ணத்திரையா
அருமையாய் கைப்பற்றியது
அஃப்சலா அம்சமா
பூக்களின் உடை உடுத்தி
புது வர்ணத்தில்
இலைகள்
பச்சையம் இல்லாது
பயனென்ன
பார்க்கவும் ரசிக்கவும்
பயமென்ன
அணிவகுப்பைத் தொடர
அஃசலுக்குத் தயக்கமென்ன
- Z. அஃப்சல் ஹுசைன்
- சபீர்















