தொடர் - 6
கனவும் நனவும்
கி.பி. 610ன் ஆரம்பத்தில் அண்ணலாருக்கு உறக்கத்தில் கனவு ஒளிப்படலங்கள் தோன்றத்துவங்கின! அரபியில் இதனை ருஃயா சாதிக்கா என்பர். எதை இரவு கனவாய்க் கண்டார்களோ அது அப்படியே அன்று விடிந்ததும் நனவாய் நிகழும். நபித்துவத்தின் நற்செய்தி ஆறு மாதங்களுக்கு முன்பே இப்படி கனவுகள் மூலம் கனியத் துவங்கியது. அல்லாஹ்வின் அருள் ஒளி அகிலமெங்கும் தொடர்ந்து 23 ஆண்டுகள் பரிணமித்து அறியாமை இருளை அடித்துத் துரத்தியது! இன்ஷா அல்லாஹ், இறுதி நாள் வரை தொடர்ந்து நிற்கும் அந்த மனங்கவர் மாமனிதர் கொண்டு வந்த குர்ஆன் எனும் இந்தக் கலங்கரை விளக்கம்!
இப்போது, நாம் காண்போம் சற்று கனவின் விளக்கம்:
கனவு காணாத மனிதரே கிடையாது! வாய் பேச இயலாதவர், கண் காண முடியாதவர், காது கேட்க வகை இல்லாதவர், சித்தப்பிரமை கொண்டவர், குழந்தைகள், வயோதிகர், ஏன்? விலங்குகளும் பறவைகளும் கூட கனாக் காணுகின்றன என்கின்றனர் மனக்கூறு வல்லுனர்கள்.
நாம் காணும் கனவுகள் மூன்று வகை:
(1) நற்செய்தி : அல்லாஹ் ரப்புல் ஆலமீன், நம்பிக்கையாளனுக்கு அனுப்பும் புஷ்ரா எனும் நன் மாராயம்! இது கண்டால் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று அல்லாஹ்வைப் புகழுங்கள். நல்ல கனவு கண்டவருக்கு அன்று முழுதும் அலாதியான மகிழ்ச்சியும் மன அமைதியும் மனமெங்கும் வியாபித்து இருக்கும். தனக்கு நெருக்கமான, தோழமை கொண்ட நலம் விரும்பிகளிடம் கண்ட கனவைப் பகிர்ந்து கொள்ளலாம்.
(2) தீய கனவுகள் : இது முற்றிலும் ஷைத்தானின் தீண்டுதலால் தோன்றுவது! பயங்கரமான, மடத்தனமான, அருவருப்பான, ஆபாசமான, மிருகத்தனமான, இயற்கைக்கும் இயல்புக்கும் மாற்றமான, மொத்தத்தில் பேய்த்தனமாகத் தோற்றம் தரும் அனைத்தும் முஃமின் உடைய ஈமானை சற்று அசைத்துப் பார்ப்போமே என்று இப்லீஸ் ஏற்ப்படுத்திக் கொள்ளும் ஓர் இருட்டு வாய்ப்பு!
ஒருவர் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வந்தது (என அறிந்து), அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும். அதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம். ஏனெனில், அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். (புஹாரி 6985 )
அப்போதும் மனம் அமைதி பெறவில்லை எனில், எழுந்து இரண்டு ரக் அத் தொழுதுவிட்டு அந்தத் தீய கனவின் தீமைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடவேண்டும் (ஸஹீஹ் முஸ்லிம் 4200)
(3) மனப்பிரமை: அஜீரணத் தொல்லை அதிகமானாலும் மனப்பிரமையான கனவுகள் அடிக்கடி தோன்ற வாய்ப்புள்ளதென்பது உடற்கூறு வல்லுனர்கள் கூற்று. இவை பெரும்பாலும் அர்த்தமில்லாத கனவுகளாகும். கற்பனையான, தன் மனோ இச்சையின் தாக்கத்தின் பிரதிபலிப்பு கனவில் அதுபோல ஒரு பிரேமை ஆகவே வரலாம். (உதாரணம்: நாகூர் தர்காவிற்குச் சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றப் பேரவா கொண்ட ஒரு பித்துக்குளிப் பெண்மணியின் பிரேமை!)
குறிப்பாக, கனவில் அவுலியா வந்து அழைத்தார்! (ஆகவே, நான் தர்காவிற்குச் செல்ல தயாராகி விட்டேன்) என்று பொய்யுரைப்பது மிகப்பெரும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
'பொய்களிலேயே மிகப் பெரும் பொய், ஒரு மனிதன் தன்னைத் தன் தந்தையல்லாதவருடன் இணைத்து (நான் அவரின் மகன் என்று) கூறுவதும், தன் கண்கள் பார்க்காத ஒன்றை (ஒரு கனவை) அவை பார்த்ததாகக் கூறுவதும், இறைத்தூதர் சொல்லாத ஒன்றை அவர்கள் சொன்னதாகச் சொல்வதும் ஆகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என வாஸிலா இப்னு அல் அஸ்கவு(ரலி) அறிவித்தார் (புஹாரி எண் 3509)
இப்போது நாம் அந்த சஹாபியை சந்திக்கும் நேரம் வந்துவிட்டது!
அரக்கப் பறக்க ஓடி வந்து, அல்லாஹ்வின் தூதரே! என அழைத்தபடி இயல்புக்கு மாற்றமாக நின்று கொண்டிருக்கும் அவரைப் பார்த்ததுமே அண்ணலார் யூகித்து விட்டார்கள். இவர் எதையோ பார்த்து பயங்கரமாக அதிர்ச்சி அடைந்திருக்கின்றார்! கசங்கிய உடை, கழுவாத முகம், வாரப்படாத பரட்டைத் தலை என்பதெல்லாம் அப்போதுதான் படுக்கையிலிருந்து எழுந்து நேராக நபி (ஸல்) அவர்களைக் காண வந்துள்ளார் என்பதைப் பறை சாற்றின!
"சொல்லுங்கள் தோழரே! என்ன நிகழ்ந்தது?"
"அல்லாஹ்வின் தூதரே! எனது தலை. எனது தலை துண்டிக்கப் படுவது போன்று நான் கனவு கண்டேன் என்றார் பதட்டமாக! தொடர்ந்து, அந்தக் கனவில் என் தலை வெட்டப்பட்டது. அதுமட்டுமல்ல! வெட்டப்பட்ட என் தலையைப் பாய்ந்து பிடிப்பதற்காக நானே துரத்திக்கொண்டு ஓடினேன் என் கனவில் " என்று கூறி நின்றார் பரிதாபமான தொனியில்!
செய்தி கேட்ட நபிகளார் சிரித்து விட்டார்கள்!
வெண்ணிலவும் வியப்படையும் வேந்தர் நபியின் முகம், சிரிப்பால் மேலும் சிவந்து போனதைக் கனவு சொல்லி நின்ற அவர் கண்டு களித்தார். அண்ணல் நபியின் அழகிய சிரிப்பால் தோழரின் கவலை தொலைந்து போனது! எங்கிருந்தோ ஒரு நிம்மதி வந்து அமைதியுடன் அவர் மனதில் அமர்ந்து கொண்டது!
அறிவுரை: உறக்கத்தில் ஷைத்தானின் விளையாட்டால் உங்களில் எவரும் கெட்ட கனவு கண்டால், மற்ற எந்த மனிதரிடமும் சொல்லித்திரிய வேண்டாம் என, அவரை ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்தார்கள் அன்பே வடிவாம் அண்ணல் நபியவர்கள்.
(அறிவிப்பு : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல் ஸஹீஹ் முஸ்லிம் 4665. 4212)
இக்பால் M.ஸாலிஹ்