சமீபத்தில் நடந்த திடீர் தீ விபத்து எல்லோரின் கவனத்திற்கும் வெகு விரைவாக எட்டியது. அதற்கு அதிரை வலைப்பூக்களின் மின்னல் வேக செயல்பாடுகளே முக்கிய காரணம். இது ஒரு பக்கம் இருக்க, ஏன் இதற்கு முன்னர் அதிரையில் தீ விபத்துக்களே நடந்ததில்லையா ? அந்த சூழல்களின் நாம் என்ன செய்திருந்தோம் அல்லது செய்யாமல் விட்டோம் என்று ஒரு பக்கம் வாதம் தொடர்ந்தாலும்.
சரி, இன்றையச் சூழலில் இனிமேலும் இதேபோல் ஏதும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருந்திட என்னதான் வழி ?
பெரும்பாலோரின் ஏகோபித்த கருத்தாக அதிரைக்கு என்று தனியாக தீயணைப்பு நிலையம் அவசியம் தேவை. இந்தக் கோரிக்கை கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே வலுப்பெற்றது. அதற்கான உறுதிமொழியையும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அளித்திருந்தார்.
நேற்றைய ஒரு காணொளிப் பேட்டியில் அதிரை பேரூராட்சி மன்றத் தலைவரும் அதற்கான அனைத்து முயற்சிகள் எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார் நாமும் அப்படியே ஆகட்டும் என்று காத்திருப்போமாக.
‘கத்தினால் குத்துவேன்’ ‘குத்தினால் கத்துவேன்’ என்ற போக்கினை தவிர்த்து, ‘கத்தாதே குத்த மாட்டேன்’ ‘குத்தாதே கத்த மாட்டேன்’ என்று மாற்றி சிந்திப்போமே.
“தீ” நாம் கண்டால் சுடாது தொட்டால்தானே சுடும் அப்படியிருக்க ஏன் அதனை அனைக்க வேண்டும் !? ஆனால் தீ நம்மைத் தீண்டினால் தப்பிக்க வழியில்லை என்றால் அழித்திடும்.
தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையின் ஸ்லோகன் "WE SERVE TO SAVE" இதுதான் அவர்களின் குறிக்கோள்.
6698 பணியாளர்களுடன் 302 தீயனைப்பு மற்றும் இடர் மீட்பு சேவை நிலையங்கள், இடர் மீட்பு நிலையம் இரண்டும், 32 மாவட்டங்கள் முழுவதும் செயல்படுகிறார்கள்.
தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியைப் பொறுத்த வரை ஒன்பது தீயணைப்பு மற்றும் இடர் மீட்பு நிலையங்கள் உள்ளன அவைகள் முறையே:
கும்பகோணம் - (அவசர அழைப்பு எண் : 101)
ஒரத்தநாடு - (அவசர அழைப்பு எண் : 04372-33422)
பாப்பநாசம் - (அவசர அழைப்பு எண் : 04374-22101
பட்டுக்கோட்டை - (அவசர அழைப்பு எண் : 04373-52101)
பேராவூரனி - (அவசர அழைப்பு எண் : 04373-32401
தஞ்சாவூர் - (அவசர அழைப்பு எண் : 101)
திருவிடைமருதுர் - (அவசர அழைப்பு எண் : 04375-60101)
திருவையாறு - (அவசர அழைப்பு எண் : 04362-60101)
திருக்காட்டுப்பள்ளி - (அவசர அழைப்பு எண் : 04362-80401)
இவைகளையும் தாண்டி நமக்கு நாமே தற்காப்பு நடவடிக்கைகளையும் முன்னெச்சரிக்கைகளையும் செய்து கொள்வதில் தெளிவு இருக்க வேண்டும்.
சரி ஒருவேலை தீ என்ற இடர் ஏற்பட்டல் என்ன செய்வது ? அதற்கான தற்காப்பு செயல்களை எவ்வகையில் மேற்கொள்வது என்பதை தமிழக தீயணைப்பு படையினர் விளக்கியிருக்கிறார்கள் இதோ:-
மரம், காகிதம் அல்லது துணி இவைகளில் தீ பற்றிக் கொண்டால், தண்ணீரை வீசி அடித்தும், அல்லது கனமான சாக்கு போன்ற துணியினைக் கொண்டு மூடுவதும் சரியான முறையாகும்.
எண்ணெய், பொரியலிலிருந்து கிளம்பும் தீ பற்றிக் கொண்டால் சூடு ஏற்படுத்தும் காரணியை அணைக்க வேண்டும், பொரியல் சட்டியை மூடியையக் கொண்டு உடனணடியாக மூடிவிடவும்.
மின்சார கம்பிகள், மின்சார இணைப்புகள், மின்சாரம் சார்ந்த உபகரணங்களால் தீ பற்றிக் கொண்டால் முதலில் மின்சார இணைப்பின் தொகுப்பை (main) நிறுத்த வேண்டும், அதன் பின்னர் மண் அள்ளி அடர்த்தியாக வீசி அடிக்க வேண்டும்.
இதையெல்லாம் மீறி தீ பெரிதும் பரவி கூரைகள் அல்லது வீடுகள் அல்லது கடைகள் தீ பற்றிக் கொண்டால், அபாய சங்கு அல்லது அதற்கு நிகரான சத்தம் எழுப்ப வேண்டும், வீடுகளை விட்டு அல்லது இருப்பிடத்தை விட்டு உடனடியாக வெளியில் ஓட வேண்டும். சாதனங்களையோ அல்லது விலையுயர்ந்த பொருட்கள் உள்ளிருக்கிறதே என்று எடுத்துச் சென்றிடலாமே என்று தேடிக் கொண்டிருக்கக் கூடாது. கட்டிலுக்கு அடியிலோ அல்லது மறைவான இடத்திலே பதுங்கிடலாம் என்றும் உள்ளேயே இருந்திடலாகாது. உயர் அடுக்குமாடி கட்டிடங்களாக இருந்தால் படிகள் வழியாகத்தான் ஒட வேண்டும். எல்லாவற்றையும் விட அதி முக்கியமாக தீயனைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
வீடுகளில் பாதுகாப்பு முறைகள்:-
- தீப்பெட்டிகளை உடல் மற்றும் ஆடைகளுக்கு அருகில் வைத்து தேய்த்து பற்ற வைக்கக் கூடாது.
- கேஸ் அடுப்பை திருப்புவதற்கு முன்னர் தீயைத் தயாராக வைத்திருக்க வேண்டும் அல்லது லைட்டர் போன்ற சூட்டரை பயன்படுத்த வேண்டும், கேஸை திறந்து வைத்து விட்டு தீப்பெட்டியை தேடக்கூடாது.
- கேஸ் அடுப்பினை உயரமான தட்டையான இடத்தில் வைக்க வேண்டும், தரையில் வைத்து பயன்படுத்தக் கூடாது.
- மின்சார இணைப்பிற்கு பிளக் (plug) போன்ற இணைப்புகளில் தொகுப்பாக (multi-plug) ஒன்றுக்கு மேல் பொருத்தக் கூடாது.
- சமையல் பொருட்கள் எண்ணெய் வகைகள் எளிதில் தீ க்கு பிடித்தமான பொருட்களை அடுப்பை விட்டு தள்ளியே வைத்திருக்க வேண்டும்.
- பிளாஸ்டிக் பொருட்களை அடுப்புக்கு அருகில் வைப்பதை தவிர்க்கவும்.
- குழந்தைகளை அடுக்களையில் விளையாட அனுமதிக்கக் கூடாது.
- கேஸ் சிலிண்டர் அல்லது அடுப்புக்கு அருகில் வேறு மண்ணெண்ணெய் அடுப்போ அல்லது வேறு எரிப்பூட்டானோ (igniters) வைக்க வேண்டாம்.
- அடுப்பு இயங்காத பட்சத்தில் ரெகுலேட்டரை மூடிவைப்பதே நல்லது.
- ரப்பர் குழாயை (hose pipe) அடிக்கடி மாற்ற வேண்டும்
- கேஸ் சிலிண்டரை சாய்த்தோ அல்லது கிடத்தியோ வைக்க கூடாது கண்டிப்பாக நிலையா நிமிர்த்து நிற்க வைக்க வேண்டும்.
* நல்ல வீடு, முறையாக சாதனங்களை அடுக்கி தேர்ந்தெடுத்த பொருட்கள் அந்தந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பதும் பாதுகாப்பே.
- - LPG கேஸ் சிலிண்டரிலிருந்து கேஸ் வாடை ஏதும் வந்தால் அல்லது நீங்கள் உணர்ந்தால்:-
-- அந்த இடத்தில் எந்த எரியூட்டலோ (பற்ற வைத்தல் ) அல்லது தீ ஏற்படுத்தும் சூழலோ நிகழாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
-- மின்சாரத்தை இயக்க வேண்டாம், சுவிட்ச் போடவோ அல்லது பிளக் மாட்டவோ கூடாது.
-- எல்லா கதவுகளையும் திறந்து விட வேண்டும்
-- சிலிண்டரிலிருந்தே கசிவு இருந்தால் உடனடியாக அந்த சிலிண்டரை வெளியில் வெற்றிடத்திற்கு கொண்டு சென்று வைத்து விட்டு ஒதுங்கி விடவும்.
இப்படியாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் நிறைந்து இருந்தாலும், சுருக்கமாகத்தான் எடுத்து வைத்திருக்கிறோம்.
வீட்டின் அழகு அந்த அங்கேயிருப்பவர்களின் செயல்களிலே தெரியும், சுத்தம் என்றுமே உங்களை சுறுசுறுப்பாய் வைத்திடும்.
'தீ' வேண்டும் சமையலுக்கு, அதுவும் தீங்கினை தீண்டாத தீயும் வேண்டும்...!
- அபுஇபுறாஹிம்


