வாழ்வில் வசந்தம் வீசும் காலங்கள் என்று ஒன்று எல்லோர் வாழ்விலும் வந்து போவதுண்டு. வாழும் வாழ்க்கையின் குறிக்கோள் என்றால் என்ன என்று ஆழ் மனதில் அர்த்தம் புரியாத காலம் அது. நம் செலவினங்களுக்காக நம் சட்டைப்பையை நிரப்பும் காசு பணம் எங்கிருந்து வருகின்றது, அதன் மூல காரணி யார் என்று அறியாத; செலவழிக்க மட்டுமே தெரிந்த வயது அது.
அதுதான் பள்ளிப்பருவம். நம் பெற்றோர்களை உணவு தரும் தாயாக , காசு தரும் தந்தையாக , பள்ளிக்கூடப் புத்தகங்களைக் கடையில் வாங்க காசு தரும் ஒரு காரணியாக மட்டுமே நினைத்து வந்த காலம் அது. இந்தக் காலகட்டங்கள் எல்லோர் வாழ்விலும் உள்ள ஒரு பொதுவான நிலை. ஆனால் ஒன்றிரண்டு நபர்கள் வாழ்வில் இதற்கு நேர்மாறாக வாழும் வாழ்க்கைக்கு தள்ளப்பட்டு, குருவித்தலையில் பனங்காய் என்னும் தன் சக்திக்கு மீறிய பொறுப்புகள், பள்ளியில் பயிலும் காலங்களிலேயே சீரான வாழ்க்கையை இடை மறிப்பதுண்டு.
அப்படி இடை மறித்த, வாழ்வை ஒரு சவாலக ஏற்று வாழ்ந்து, அந்த சவாலுக்கு சாவு மணி அடித்து தன் உன்னத முயற்சியாலும், நண்பர்களின் கலப்படமற்ற தூண்டுகோலாலும் இயற்கையிலேயே தன்னிடம் அமைந்த தன் பண்பாலும், ஏழ்மையிலும் விடா முயற்சியாலும், எல்லாவற்றிற்கும் மேலாக இறைவன் மீது கொண்ட அதீத நம்பிக்கையாலும் வாழ்க்கையில், தன்னை முன்னெடுத்துச்சென்ற; என் வாழ்க்கையில் நட்பு எனும் தோணியில் இன்றளவும் பயணம் செய்கின்ற ஒரு கலப்படமற்ற நட்புக்கு சொந்தக்கார நண்பனின் வாழ்க்கையில் அவன் கடந்து வந்த பாதையின் கசப்பும் இனிப்பும் கலந்த சுவடுகளே இதை நான் எழுதத் தூண்டியது.
அந்த நட்புக்கு ஒரு நன்றி சொல்லி நாம் 30 வருடங்கள் பின்னோக்கிப் பார்ப்போம்.
ஆம், நாங்களெல்லாம் சுதந்திரப் பறவைகளாய் எதிர்காலக் குறிக்கோள் என்ன என்ற கேள்விக்கு இடமில்லாமல், அன்றைய பொழுது நட்பு வட்டாரத்தோடு சந்தோசமாக கழிந்தால் அன்றைய பொழுதின் அர்த்தம் அதுதான் என்ற உணர்வோடு, நாள் கழிந்து விட்டால் இனி அடுத்து சூரியன் உதிக்கும்போது அடுத்த நாள் பற்றிய சிந்தனை. இப்படியாக நட்பு வட்டாரத்தோடு கழிந்து வீடு வந்து சேர்ந்து என்னும் வழக்கத்தில் பொழுது கழிந்து கொண்டிருந்த காலகட்டத்தில்,எங்கள் நட்புகளுக்கிடையில் ஒருவன் மட்டும், அனைத்திலும் அவன் பங்கு இருந்தாலும், மற்றவர்களை விட ஒரு படி மேலே, முன்னேற வேணும், முன்னேற வேணும் என்னும் துடிப்பு அவனிடத்தில் மட்டும் கொஞ்சம் ஓங்கி இருந்தது.
அவனிடம் இருந்த அந்த துடிப்பில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஏனெனில் அவன் வளர்ந்த சூழ்நிலை அப்படி. அவனிடம் மற்ற நண்பர்களைவிட கூடுதல் உந்தித்தள்ளும் உணர்வு இயற்கையிலே இரத்தத்தோடு அவனிடம் ஊறி இருந்தது.இதன் வெளிப்பாடுதான்,.....................
தன் தாயின் அரவணைப்பில் மட்டும், இருந்து கொண்டு, தந்தை இருந்தும் இல்லாமல், தன் உற்றார் உறவினர் தனக்கு ஏணியாக நின்று உதவ, வெறியோடு இச்சமுதாயத்தில், நாமும் பேசப்படுகின்ற ஒரு ஆளாக நின்று, பிறந்தோம், வாழ்ந்தோம், வளர்ந்தோம், வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்னும் மனப்போக்குக்கு முற்றுப்புள்ளி வைத்து , கொஞ்சம் கொஞ்சமாக கடின உழைப்பென்னும் ஆயுதத்தை கையில் எடுத்து, பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி என்னும் சாலையில் கால் பதித்தான். ஏழ்மை என்னும் ஆடை அன்றுவரை அவனை விட்டு அகலவில்ல.
கல்லூரி படிப்பு எப்படியும் பள்ளிப்படிப்பைவிட விட பல மடங்கு செலவு என்னும் சுனாமி தாக்கும் ஒரு கல்லூரிச்சாலை.இதில் ஏழ்மை என்னும் ஆடை அணிந்தவன் எப்படி கரை சேர்வான். ஆம் செலவு என்னும் சுனாமியிலிருந்து கரை சேர தோணியாகவும், துடுப்பாகவும் உறவின் முறை என்று சொல்லும் ஒரு பாசமிக்க பந்தம் அவனுக்கு கை கொடுத்தது.
நன்றி கலந்த மனதோடு அதை ஏற்ற அவனோ ஒரு சின்ன தியாகம் ஒன்றை அதன் விலையாக கொடுக்க நேர்ந்தது. அதுதான் அந்த உறவிலேயே தனக்கு முற்றிலும் பொறுத்த மில்லாத துணையை. தன் வாழ்க்கையோடு இணைத்துக் கொள்ளவேனும் எனும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதை முழுமனதோடு ஏற்காவிட்டாலும், நன்றி என்னும் சொல்லுக்கு எதிராக செயல்பட அவன் மனது இடம் தராததால் கரம் பிடித்தான் வாழ்கைத் துணையாக.
அதிரையின் எழுதப்படாத விதியான,
பெண் பிறந்தால் மனைக்கட்டு
ஆண் பிறந்தால் பாஸ்போர்ட்
என்னும் விதிக்கு அவன் மட்டும் விதி விளக்கா என்ன!?. குடும்ப சூழ்நிலை நீ பிறந்த தாயகத்தை விட்டு வெளியேறு என்றது. குடும்பத்தில் பெற்றோருக்கு ஒரே பிள்ளை என்ற செல்லம் இருந்த போதிலும் குடும்பப்பின்னணி அவனை செல்லப்பிள்ளை அல்ல, சுமை தாங்க வேண்டிய பிள்ளை என்று சொல்லி தாயகத்தை விட்டு துரத்தியது. ஒதுங்கினான், ஓடினான், ஓய்வின்றி அலைந்தான் அன்றைய பம்பாய் மாநகரின் எல்லைக்கே ஓடினான். அவன் ஓட்டத்தை தடுத்து நிறுத்த அவன் குடும்பப்பின்னணி இடம் கொடுக்கவில்லை. தஞ்சமடைந்தான் மும்பை நகரில்.
சொல்லவொண்ணா சோதனைகளுக்கிடையில் தன்னை ஈன்ற தாயின் முகம் தன கண் முன்னே நிழலாட, உழைக்க வேணும் என்னும் ஒரு வெறியோடு, இருந்தவனுக்கு இறைவன் விதித்த விதியில் வெளிஉலகில் காலெடுத்து வைக்க இறைவன் தந்த வாய்ப்பு என்னும் கதவு திறக்க , அதை அவன் நன் முறையில் பயன படுத்த தவறவில்லை. சென்றான் சவுதி அரேபியா வென்னும் புனித இல்லங்கள் இருக்கும் தேசம் அங்கு அவன் காட்டிய உழைப்பு அதில் இருந்த வேகம், தேனீ, எறும்பு அனைத்தும் அவனிடம் பாடம் கற்கவேணும் அவன் உழைப்புக்கு முன்னால் என்று சொல்லும் அளவுக்கு தன் உழைப்பில் , சாதுரியமாக, தெளிவாக, அதே சமயம் தீவிரமாக தன் ஊக்கத்தை அதில் செயல் படுத்தினான்.
இது நான் சொல்வது அனைத்தும் மிகை அல்ல நான் கண்ணால் கண்டது. அவன் பணிபுரியும் அலுவலகம் போகும் வாய்ப்பு வாரம் ஒருமுறை எனக்கு ஏற்படும்போது, நான் வார விடுமுறையில் செல்லும்போது, அவன் விடுமுறைக்கு விடுமுறை கொடுத்து உழைத்துக் கொண்டிருப்பான்.
நான் வந்திருப்பதால் எனக்காக கொஞ்சம் பணியிலிருந்து சீக்கிரம் கூட சில சமயங்களில் வந்து நாங்கள் சந்தோசமாக பொழுதைக் கழிப்போம். இப்படி உழைப்பின் உயர்வை உணர்ந்த அவன் அல்ஹம்துலில்லாஹ், அன்று ஆலமரக்கிளையாக இருந்தவன், இன்று பல கிளைகளாக விரிந்து தன குடும்பமெனும் பூமிக்கு நிழல் கொடுக்கும் ஒரு ஆலமரமாக மாறிப்போய் , இன்று சமுதாயத்தில் பேர் சொல்லும் பிள்ளைகளில் அவனும் ஒருவன் என்று சொல்வதிலும், அவன் நண்பன் என்பதிலும் பெருமை அடைபவர்களில் நானும் ஒருவன்.
அப்பொழுதுதான் இடியாக ஒரு செய்தி அவனுக்கு சொல்லப்பட்டது, சில காலமே சென்றிருந்தாலும் விருப்பமுடனோ அல்லது விருப்பமில்லாமலோ இருவரின் கட்டில் போட்ட இடத்தினிலே தொட்டில் போடும் நிலை என்பிள்ளைக்கு உருவாகி இருக்கின்றது என்று பெற்ற தாய் பூரிப்பு அடையும் நேரம் அது சொற்ப நேரமே நீடித்த வகையில்.
தன் மனைவி தன் வாரிசை ஈன்றெடுக்குங்கால் மலடி என்ற அவச்சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஒன்றுக்கு இரண்டாக ஈன்றெடுத்து, ஒன்று பிறந்து இறந்தும், ஒன்று இறந்து பிறந்தும், தாய் சேய்கள் மூவருமே இவ்வுலகுக்கு விடை கொடுத்தனர் இறைவன் நாட்டப்படி என்ற செய்தி இடியென இறங்கியது அவன் மேல்.
அவன் மனைவி அவன் வாரிசை சுமந்தவலல்லவா.! ஆம் அவன் உடைந்தே போனான். அவன் கலங்கி நின்ற கணம் என் கண் முன்னே இன்றும் நிழலாடுகின்றது.
வாழ்க்கையில் வகை வகையான சோதனைக்கு ஆட்பட்ட அவனுக்கு வாழ்க்கையில் முன்னேறி சாதிக்க வேணும் என்ற வெறியின் முன்னே அச்சோதனைகள் தடையாக இருக்கவில்லை.சோதனைகளை சாதனைகளாக்கிக்காட்ட அவன் மனம் சீரான பாதையில் சாதிக்க வேணும் என்று சிந்தித்து வீறு நடையில் குறைவின்றி பயணித்தது.
ஒவ்வொரு சோதனையிலும், இறை நம்பிக்கையில் தொய்வு விழாமல் ஒவ்வொன்றும் இறைவன் ஏற்பாடே என்னும் ஈமான் சுடர்விட்டு பிரகாசிக்க ,தன் அலுவலக பனியின் ஒவ்வொரு அசைவிலும் தன் திறமையை அல்லாஹ்வின் உதவியோடு நிரூபித்து காட்ட, இவனுக்கு முன்பிருந்த மேலாளரின் இருக்கை , இவனை தேடி வந்ததில் ஆச்சரியம் ஒன்று மில்லை.
இதற்குத்தானே இவ்வளவு காலம் காத்திருந்தான். ஆம் அவன் கட்டுப்பாட்டில்முழு அலுவலகமும் வந்தது.அவன் இல்லையெனில், அங்கு இயக்கமே இல்லை என்னும் நிலையை உருவாக்கிஇவனுக்கு முன்பே அங்கு மேலாளர் பதவியில் இருந்த ஒரு இந்தியர் எல்லா வகையான தடங்களையும் அவனுக்கு கொடுத்து பார்த்து அவன் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருக்க முற்பட்ட போதெல்லாம் தன் திறமையினாலும், தன் தூய கலப்படமற்ற மனதினாலும் அந்த அலுவலக முதலாளியின் நெஞ்சில் நிலைத்தான். அதனால் இவனுக்கு முன்பிருந்த அந்த மேலாளரின் இருக்கை இவன் வசமானது.
உழைப்பு, உழைப்பு, உழைப்பு , இது இவனின் தாரக மந்திரமாக இருந்ததால் , எல்லா தடைக்கற்களையும் , படிக்கற்களாகவே பாவித்தான். எதிர் நீச்சல் என்னும் சவால் இவனுக்கு வெல்லம் தின்பது போல். அந்த மேலாளர் விரித்த வலையில் இவன் விழ வாய்ப்பில்லாமலேயே போனது. அந்த மேலாளர் விரித்த வலையில் அவரே வீழ்ந்தார்.
இப்பொழுது , முழு நம்பிக்கையைப்பெற்ற ஒரு தூய தொழிலாளியாகிப் போனான் இவன். இவன் முதலாளியோ இவனை விட்டால் , இங்குள்ள இயக்கம் அனைத்தும் நின்றுவிடும் என்று எண்ணியவன்,, முழுதுமாகவே இவனிடமே ஒப்படைத்து விட்டு, இந்த அலுவலகத்தில் லாபமோ, நஷ்ட்டமோ , மாதம் எனக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி விடு ,மற்ற அனைத்தும் உன்னைச்சார்ந்தது என்னும் நிபந்தனையின் பேரில் இவன் வசம் பரிபூரண காட்டுப்பாட்டுக்குள் வந்தது அலுவலகம்.அந்த அலுவலகத்தில் எல்லமாகிப்போனான் இவன்.
ஆம் தன் தாயை ஏழ்மை நிலையிலே பார்த்தவன் இந்த ஊர் மெச்ச , தன் உதிரத்தை தனக்கு தந்த அந்த தாயை ஊர் கண்ணு படும்படி இன்று வாழ வைத்துக்கொண்டு இருக்கின்றான். தன் தாயின் விருப்பத்தின் பேரில் இரண்டாவதாகக் கை பிடித்த மங்கையுடன் வாழ்வை தொடர்ந்தவன்,, அங்கேயும் கட்டில் போட்ட இடங்களில் தொட்டிலும் போடப்பட்டது. இந்த சந்தோஷ தருணம் ஒரு பக்கம் அவன் வாழ்க்கையை அலங்கரித்தாலும், நன்றி மறவாமல் , தனக்கு பொருளாதார உயிர் கொடுத்த தன் உறவின் முறையையும் இன்றும் நன்றி கலந்த பாசத்தோடு அரவணைத்து செல்லும் அவன் பாங்கு ,மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது மிகை இல்லை என்று சொல்வேன்.
சோதனைகளில் துவண்டு விடாமல்,உழைப்பு என்னும் ஆயுதம் ஏந்தும் எவனும் எவரிடமும் கையேந்த வேண்டிய அவசியமே இல்லை என்னும் ஒரு நெஞ்சுறுதி வேணும். , எக்காரணம் கொண்டும் , இறைவனுக்கு மாறாகவோ, அல்லது ,குறுகிய காலங்களில் நிறைய திரட்டிவிடவேனும் என்னும் பேராசையால் உந்தப்பட்டு,தூய்மையற்ற வழியில் செல்வம் திரட்ட முற்பட்டாலோ அது வரும்போல் தெரியும், நம்மை அறியாமலேயே , நம்மை விட்டு பாவக்கறைகளை நம்மிடம் தந்து விட்டு, சொல்லாமல் செல்வோம் என்று வந்த செல்வம் சென்றுவிடும்.
ஆதலால் இளமையில் உழைப்பவன், முதுமையில் சிரிப்பான்,இளமையில் முடங்கியவன் முதுமையில் தவிப்பான்
என்னும் மந்திரம்தான் மேலே நான் பதியும் இந்தப்பதிவு சொல்லும் நீதி போதனை.
இதை ஏற்பவர் வாழ்வோ புரியும் சாதனை !
அதிரைநிருபரில் என் கன்னிப் பதிவின் கதாநாயகனைப்போல்.
(என் முதல் பதிவான என்னோடு நெருங்கிய வாழ்வியல் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையிலானது)
அபு ஆசிப்