சமீபத்தில் உலுக்கிய ஓர் சம்பவம் மாணவ சமுதாயத்திற்கும் ஆசிரியர்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளிதான் காரணம் என்று ஒருசாரார், இல்லை பெற்றோரின் வளர்ப்புதான் என்று மற்றொரு சாரார், அப்படியெல்லாம் இல்லை சுற்றுப்புற சூழல், சமுதாயத்தில் புரையோடியிருக்கும் அத்துமீறிய சினிமாக் கலாச்சாரம், தொலைக்காட்சித் தொடர்கள், அலைபேசிகளின் ஆளுமை, இணையம் என்று வேறொரு சாராரும் மாறி மாறி அலசுவதில்தான் தீவிரம் காட்டுகின்றனர்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக அதற்கான தீர்வாக தீர்க்கமாக சிலரும் யோசிக்கத்தான் செய்கின்றனர் அவ்வகையில், நல்ல அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் நாம் பழக்கப்பட்டவர்களாக இருப்பதனால் இந்தப் பதிவை வாசிக்கும் ஒவ்வொருவரும் கடந்த காலங்களில் மாணவப் பருவத்தை கடந்து வந்தவர்கள் அல்லது இன்றைய மாணவமணிகளாக இருக்கலாம்.
பெற்றோர் ஆசிரியர், ஆசிரியர் மாணவர்கள் உறவுகள், மாணவர்களுக்குள்ளேயே நட்பு பாராட்டுவது, மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கான உறவு முறைகள் அன்று எப்படி இருந்தது, இன்று எப்படி இருக்கனும் என்று விவாதிக்கலாம்.
கவனிக்க! இது எந்த தரப்பையும் குற்றம் கண்டெடுத்து குத்திக் காட்டுவதற்கு அல்ல, நம்மை விட நல்ல கருத்துடைய அறிவுடைய சான்றோர் நம்மைச் சுற்றியிருப்பதனால் அவர்களின் கருத்துக்கள் இளம் பெற்றோர்களுக்கும், மாணவாமணிகளுக்கும் பயனளிக்கும் என்ற நன்னோக்கில்தான் இவ்விவாதம்.
தயைகூர்ந்து நடந்துவிட்ட அசம்பாவிதத்தை மீண்டும் இங்கே நினைவு படுத்தி விமர்சிக்காமல், ஆசிரியர் மற்றும் மாணவ சமுதாயத்தின் உறவுமுறைகள் எப்படி இருக்கிறது, அதனை எவ்வாறு பேணுவது, மார்க்கம் காட்டும் வழியில் நம் நடத்தைகள் எவ்வாறு இருக்கனும் என்று நளினமாக எடுத்து வையுங்கள்.
தனிமனித அல்லது பள்ளி நிர்வாகத்தினை குறைகூறும் களமாக இதனைக் கருதாமல், எம்மக்கள் என்றும் சிறந்த மக்களாக இருந்திட முயல்வோமே இன்ஷா அல்லாஹ்...
-அதிரைநிருபர் குழு