அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும்...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சென்ற வருடம் 30 ஆகஸ்ட் 2011 நோன்பு பெருநாள் தினத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய் தேரா ஈத்கா மைதானத்தில் அதிரை நல்லுள்ளங்களின் அற்புதமான முயற்சியால் அமீரக வாழ் அதிரை சகோதரர்களின் சகோதரத்துவ சங்கமம் நடைபெற்றது.
இந்நிகழ்வு அமீரக அதிரைவாசிகளுக்கு மட்டுமான சந்தோசமாக அல்லாமல் உலகெங்கும் வாழும் அதிரை சொந்தங்களுக்கும் சந்தோஷத்தை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து உலகின் பிறபகுதிகளில் உள்ள அதிரை சகோதரர்களின் பெருநாள் சந்திப்பு நிகழ்ந்தது. தொடர்ச்சியாக அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு அமீரகத்தில் உருவாகி, பிறகு அதிரையிலும் அனைத்து முஹல்லா கூட்டமைப்பு உருவானது. சென்ற வருடம் ஹஜ்ஜுப்பெருநாள் சந்திப்பும் வெளிநாடு வாழ் சொந்தங்களை மேலும் ஒன்றிணைக்க மிகப்பெரும் உதவி செய்தது. அல்ஹம்துலில்லாஹ்.
முக்கியத்துவம் வாய்ந்த சென்ற வருட ஈத் பெருநாள் சந்திப்பின் காணொளியை மீண்டும் நினைவலைகளாக உங்கள் பார்வைக்கு தருகிறோம்.
அமீரக அதிரை சொந்தங்களின் முதல் கூட்டுச் சந்திப்பில் அவர்கள் பரிமாற்றி கொண்ட எல்லையற்ற மகிழ்ச்சியை மேற்கண்ட காணொளியே கண் கண்களால் காணும் சாட்சி அல்ஹம்துலில்லாஹ்!
அதிரை சொந்தங்களின் சந்திப்பினால் நட்பு பாராட்டி ஒற்றுமையை வழியுறுத்தி உருவானதுதான் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு. இது போன்று அதிரைவாசிகளின் பெருநாள் சத்திப்புகள் அமீரகம் மற்றும் உலகின் பிற நாடுகளில் சாத்தியப்படுகிறது! ஆனால் அதிரையில் மட்டும் ஏன் இன்னும் சாத்தியமில்லை? என்ற கவலையுடனான கேள்வி நம் எல்லோரின் மனத்தில் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அனைத்து அதிரை சொந்தங்களின் பெருநாள் சந்திப்பு சாத்தியப்படுமா? ஏன் முடியாது இதனை ஊரில் உள்ள அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு உளத்தூய்மையுடன் நினைத்தால் நிச்சயம் இந்த அற்புதம் சாத்தியப்பட வாய்ப்புகள் உள்ளன.
அதெப்படி !?
நிற்க…
திறந்தவெளி திடலில் பெருநாள் தொழுகை பற்றி நபி வழியில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை பற்றி பின் அவரும் ஹதீஸ்களின் மூலம் அறியலாம். ஆனால் இந்த நபிவழியை அதிரையில் இதுநாள் வரை பின்பற்றாமல் போனதே நம்மூர்வாசிகளின் பெருநாள் சந்திப்புகளுக்கு சாத்தியமில்லாமல் போகிறது.
திறந்தவெளி திடலில் பெருநாள் தொழுகை:
பெரும்பாலும் நபி(ஸல்)அவர்கள் பெருநாள் தொழுகைகளை திறந்த பொது மைதானத்தில் தொழுதுள்ளார்கள். மழை காலத்தில் பெருநாள் தொழுகையை பள்ளியில் நடத்தினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) அபூதாவூத், இப்னுமாஜா
நபி(ஸல்)அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள்; (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். அபூ ஸயீத்(ரலி), புகாரி
பரஸ்பரம் அதிரை சொந்தங்கள் மனம் திறந்த சந்தோசத்துடனான ஓரிட்த்தில் சந்திப்பது மட்டுமே ஊர் ஒற்றுமையை நிலைநாட்ட ஏதுவாக அமையும். இதற்கு சாத்தியமான பொருநாள் சந்திப்புகள் அவசியம் தேவை. நம்முடைய ஊர் பெரிய ஊர் இது உடனே சாத்தியப்படுமா என்பது சந்தேகமே, இருப்பினும் குறைந்த பட்சம் ஊரில் முன்று நல்லது நான்கு இடங்களிலாவது தனி ஈத்கா மைதானமோ அல்லது ஈத் முஸல்லா அவசியம் உருவாக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு அனைத்து முஹல்லா கூட்டமைப்பு கூட்டம் எப்படி அதிரையின் ஓவ்வொரு முஹல்லா சங்கங்களின் வைத்து நடத்துகிறார்களோ அது போன்று, குறிப்பிட்ட முஹல்லாக்களுக்கு உட்பட்ட அந்த ஈத் முஸல்லா பகுதியில் ஒவ்வொரு பெருநாளையும் சுழற்சி முறையில் வாகன வசதிகள் ஏற்பாடு செய்து மிகச் சிறப்பாக நடத்தலாம். இதற்கு நல்ல முடிவு எடுக்க தகுதியான ஒரே அமைப்பு ஊரில் உள்ள அனைத்து சங்கங்களை கொண்டுள்ள அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு, வரும் காலங்களில் முன் வருமா? ஈத் பெருநாளில் இயலாவிட்டாலும் ஹஜ் பெருநாளில் செய்யலாமே. இதற்கு அமீரகம் மற்றும் பிற நாடுகளில் உள்ள அதிரை அனைத்து முஹல்லா சகோதரர்கள் அதிரையில் உள்ள அனைத்து முஹல்லா கூட்டமைப்பை வழியுறுத்தி கேட்டுக்கொள்ளவார்களா?
தெரு, குலம், முஹல்லா, பணக்காரன், ஏழை, படித்தவன், உள்ளூர்காரன், வெளியூர்காரன், இயக்கம், கட்சி போன்றவைகளால் உருவாகும் பாகுபாடுகள் இன்றி, நாம் அனைவரும் அல்லாஹ்வின் அடியார்கள், முஸ்லீம் என்ற எண்ணம் மட்டுமே தலைத்தோங்கி, நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழியில் நடந்தால் மட்டுமே அனைத்து அதிரை மக்களின் பெருநாள் சந்திப்பு சாத்தியம். இன்ஷா அல்லாஹ்.
கடந்த சில வருடங்களாக அதிரை ஈத்-கமிட்டி சார்பில் பெருநாள் தொழுகைகள் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். இஹ்லாஸுடன் ஊர் ஒற்றுமை, சமுதாய ஒற்றுமையை விரும்பும் அதிரை சகோதரர்களே இந்த வருடம் உங்கள் அனைவரின் பெருநாள் தொழுகையை திறந்தவெளி திடலில் அதாவது மேலத்தெரு சானவயல் மைதானத்தில் ஈத்-கமிட்டியால் நடத்த இருக்கும் பெருநாள் தொழுகையில் ஒற்றுமையுடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த சுன்னத்தை ஹயாத்தாக்க முயற்சி செய்யலாமே இன்ஷா அல்லாஹ்!
அதிரைநிருபர் குழு




