இன்ன கட்டுக்குள் அடங்கிவிடும் என்று சொல்லவிட இயலாத சில விஷயங்களை இப்படியொரு தலைப்பின்கீழ் பார்த்துவிடலாம் என்று எண்ணி இறங்கியாயிற்று, பார்க்கலாம்.
முதலில் ஒரு பழைய நினைவு:
தலைப்பு: “ஙே !!! “
கைகால் வலிக்குக் ‘கோடாலி’த் தைலம் மற்றும் பச்சைத் தைலம் ஆகியவற்றைப்போல, கொஞ்சம் கூடுதல் உபாதைகளுக்கு நிவாரணமாக நான் என் நண்பர் முகமதலியை உபயோகிப்பதுண்டு. அப்படித்தான் ஒரு முறை பட்டுக்கோட்டையின் பாழாய்ப்போன தூசு மண்டலச் சுற்றுச் சூழலில், ஊரிலேயே சுலபமாகக் கிடைக்குக்கூடிய ஒரு பொருளைத் தேடி அலைந்ததில் ஜலதோஷம் இருமல் என்று தொண்டையையும் தொண்டை சார்ந்த பகுதிகளையும் தொற்றுநோய் தாக்கி கஷ்ட்டப்பட்டேன்.

நம்ம அலிதான் தஞ்சாவூருக்கு அழைத்துப் போய் அந்தச் சிறப்பு மருத்துவரிடம் காட்ட வைத்தார். அந்த சி.மருத்துவர் மேலோட்டமாகப் பரிசோதித்துவிட்டு, "சிகரெட் பிடிப்பீர்களா?" என்று கேட்டுவிட்டு "ஆம்" என்றதால், "இது வேறொண்ணுமில்லே, 'ஸ்மோக்கர்ஸ் ப்ரொங்க்கைட்டிஸ்தான்' என்று சொன்னார். சொன்னவர் மருந்து எழுதித்தராமல் அவர்தம் பங்காளி லேபுக்குப் போய் சில மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துவரச் சொல்லி எழுதிக் கொடுத்தார். அப்படி எழுதும்போது அவர் கண்களில் பளிச்சிட்ட இலச்சிணையை வரைந்து அனுப்பியிருந்தால் இப்போதுள்ள ரூபாய்க்கான இலச்சிணைக்குப் பதிலாக நம்முடையதுத் தேர்வாகியிருக்கும், அந்த அளவுக்கு கரன்ஸி பளிச்சிட்டது அவர் கண்களில். நாங்களும் எல்லாச் சோதனைகளும் செய்துகொண்டு முடிவுகளோடு வந்தோம்.
இந்த இடத்தில் அந்த மருத்துவரின் பரிசோதனை அறையின் வடிவமைப்பு எப்படி இருந்தது என்று சொல்வது மிகமிக அவசியம். அவர் நோயாளிகளைப் பரிசோதிக்கும் அறையில் ஒரு தடுப்புத்திரை அமைந்திருக்கும். அதற்கு இந்தப் பக்கமாக அடுத்த நோயாளி காத்திருக்க அந்தப் பக்கம் புது நோயாளியைப் பரிசோதிப்பார்.
நாங்களிருவரும் காத்திருக்கும்போது அப்படித்தான் ஒரு புது நோயாளியை டாக்டர் பரிசோதித்துக் கொண்டிருக்க, டாக்டருக்கும் அந்த நோயாளிக்கும் இடையே நடந்த சம்பாஷனை எங்களுக்குத் தெளிவாகக் கேட்டது.
"சொல்லுங்க, என்ன செய்யுது?"
"நெஞ்சு சளி, இருமல், காய்ச்சல். ஒரு வாரமா அவதிப்படுறேன் டாக்டர்"
"டெஸ்ட் எழுதித்தாரேன். பார்த்திட்டு வந்துடுங்க, மருந்து சாப்பிட்டாச் சரியாயிடும்"
"ஒன்னும் பயப்படற மாதிரி இல்லையே டாக்டர்?"
"அதெல்லாம் ஒன்னுமில்லே. இது ஸ்மோக்கர்ஸ் ப்ரொங்க்கைட்டிஸ். சிகரெட்டை குறைச்சிடுங்க"
"......”
"என்ன? சொல்றது புரியுதா? சிகரெட்டைக் குறைச்சாத்தான என்னால் குணப்படுத்த முடியும்"
"ஆனா டாக்டர்..."
"என்ன? சொல்லுங்க"
"நான் என் ஆயுளுக்கும் இதுவரை சிகரெட்டோ பீடியோ பிடிச்சதே இல்லையே!!!"
நானும் அலியும் ஒரே ஒரு எழுத்தின் பக்கத்தில் மூன்று ஆச்சரியக் குறிகள் போட்டுப் பார்வையைப் பரிமாறிக்கொண்டு பேந்தப்பேந்த விழித்தோம்.
" ஙே !!! "
*******************************
தலைப்பு: ‘சீ!’
ஓர் இழுப்பு இழுத்துக் கொண்டே லொக்கு லொக்கு என்று இருமி, "இந்தச் சனியனை விடவே முடியலையே" என்று அலுத்துக் கொள்பவர்களைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருக்கும். ஏனெனில், நானும் அப்படியொரு அவஸ்த்தையைப் பலகாலம் அனுபவித்திருக்கிறேன்.
ஒரு நாளைக்கு 20க்கு மேல் மால்பரோ ஒயிட்ஸ் பிடித்து வந்த காலங்களில் அந்தப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று நான் செய்யாத முயற்சிகள் இல்லை, எல்லாம் ஜெயிப்பதுபோல் தோன்றி, வெற்றியைக் கண்ணில் காட்டி படாரென மீண்டும் தலைகுப்புற கவிழ்த்துவிட்டுவிடும் சக்தி வாய்ந்த கெட்ட பழக்கம் ஸ்மோக்கிங்.
இப்போது நினைத்துப் பார்த்தாலும் சிரிப்புத்தான் வருகிறது. புகை பிடிக்கும் பழக்கத்தால் நிறைய அவதிப்பட்டு விட்டதால் அதை விடுவதற்காக என்னென்னவெல்லாமோ செய்து பார்த்துவிட்டேன். ஒரேயடியாக விட முடியவில்லை. அந்த ‘அர்ஜ்’ ஏற்பட்டவுடன் நாக்கின் உணர்வு மொட்டுகள் அவற்றின் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு நிக்கோட்டினுக்காக ஏங்கி நிற்கும்.
ஆதலால், கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்தால் நிக்கோட்டினின் தீவிரம் குறைந்து விட்டுவிட சுலபமாகும் என்று எண்ணி திட்டம்போட்டு கட்டம்போட்டு குறைத்தேன். 7 மணிக்கு ஒன்று 8 மணிக்கு ஒன்று என்று துவங்கி மெல்ல மெல்ல 7க்கு ஒன்று என்றால் 7:30க்கு அடுத்தது என்று இடைவெளியைக் கூட்டிக்கூட்டி வந்தேன். இரண்டு குழந்தைகளுக்கு இடையே நல்ல இடைவெளி விடச்சொல்வார்கள்; நானோ இரண்டு சிகரெட்களுக்கு இடையே நல்ல இடைவெளி விட்டு அடுத்தடுத்த வெண்சுருட்டுகளைத் தாமதித்தேன். இப்படியாக ஒரு சமயத்தில் ஒரு நாளைக்கு 4 அல்லது 5 என்று குறைந்ததும், ‘இதோ இப்ப விட்டுவிடப் போகிறோம் என்கிற நேரத்தில்’ வாரக் கடைசி நாளாகிய ஏதாவது ஒரு வியாழக்கிழமை இரவில், ரெட்டுக்கு ஃபாலோ போடமுடியாத கேரம் போர்டோ; ரம்மி செட்டாகாத சீட்டுக்கட்டோ மீண்டும் ஒரு பாக்கெட்டில் கொண்டுபோய் நிறுத்திவிடும். ப்ரோஜக்ட் படுதோல்வி அடைந்து நிக்கோட்டினின் அராஜக ஆக்ரமிப்பு கோலோச்சும். நேரம் குறைத்துக் குறைத்து பிடித்துவந்த சிகரெட் கணக்குகளின் குறிப்புச் சீட்டு என் சட்டைப்பையில் எஞ்சியிருக்க, மீண்டும் துவங்கும் திட்ட அமலாக்கம்.
என்னதான் செய்ய? விட முடியவில்லையே என்கிற ஆதங்கம் பாடாய்ப் படுத்தியது. இந்நிலையில்தான் கதையில் ஒரு ட்விஸ்ட் வந்தது. என்னவென்றால், தேரா துபையில் ஒரு வருட காலம் பிரம்மச்சாரிய வாழ்க்கை வாழ்ந்து வந்தபோது உடல்நிலை சரியில்லாமல் ஸ்மோக்கர்ஸ் ப்ராங்கைட்டிஸ் வந்து முதல் இத்தியாதியில் பட்ட அவதிகள் எல்லாம் பட்டேன். வேலைக்குச் செல்லாமல் விடுப்பெடுத்து தலை கிளப்ப முடியாமல் கிடந்தபோது கீழே போய் சிகரெட் வாங்கக்கூட முடியாமல் போனது. சற்றே குணம் கிடைத்து சிகரெட் நினைப்பு வந்தபோது மூன்று நாட்களாகிவிட்டிருந்தது. ‘அட! மூன்று நாட்களாக நான் ஸ்மோக் பண்ணலையா?’ ஆச்சரியமாகவும் இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது. ‘இன்னொரு நாள் இருந்து பார்ப்போமே’ என்று நான்காவது நாளையும் கடந்தபோது வெற்றி என்னைத் தழுவிக்கொண்டது. சிகரெட்டை விட்டுவிட்டேன். ஹுர்ரே!
சிக்ரெட்டை விட்ட பிறகு எப்போதுமே சுவாசித்துக் கொண்டிருந்த கார்ப்பரேஷன் குப்பைலாரி வாடை மறைந்து போனது, நன்றாகப் பசித்தது, உணவு ருசித்தது, சுறுசுறுப்பு கூடிப்போயிற்று. காரிலும் அலுவலகத்திலும் காற்றில் நறுமணம் இருந்தது. வாழ்க்கை சலவைசெய்ததுபோல் தூய்மையாகவும் சுத்தமாகவும் இருந்தது. உதடு மெல்லமெல்ல கருமை இழந்து ப்பிங்க்கானது. கையோடு, பல் ஆஸ்பத்திரிக்குப் போய் பற்களை தூர்வாரி தார் நிக்கோட்டின் ஆகியவற்றை சுரண்டியெடுத்து புதைந்துபோயிருந்த பல்லின் ஒரிஜினல் நிறத்தைப் மீட்டெடுத்தேன். அதற்குப் பிறகு சிரிக்கும்போது தன்னம்பிக்கை கூடிப்போய்விட்டிருந்தது.
புகையே பிடிக்காதவர்களால் அனுமானமாக புத்திதான் சொல்ல முடியும். புகைபிடித்து அவதியுற்றுப் பின்னர் விட்டவர்களால்தான் அதன் சாதக(?) பாதகங்களை அனுபவரீதியாக விளக்கிச் சொல்லி , தற்போது இந்தப் பழக்கத்தில் இருப்பவர்களை மீட்க முடியும். சிகரெட்டை விட்டப் பிறகு மேற்சொன்ன சாதகங்கள் மட்டுமல்ல, இன்னும் வெளியே சொல்ல கூச்சப்படுமளவுக்கு நன்மையான மேட்டர்ஸும் உண்டு. காதைக் கொடுங்கள் சொல்கிறேன்.
“வாணாம்பா. விட்டுடுங்கப்பா...சீ!"
*******************************
தலைப்பு: “தீ”
சிகரெட்
நசுக்கப்படுவது உறுதி!
உதடுகளில் வாழும் உயிர்
உமிழப்படுவது உறுதி!
புகைப்பவருக்குள் புழங்கும் பூதம்
புண்ணாக்கப் போவது உறுதி!
ஆக்ஸிஜனை அசிங்கப்படுத்தும் அருவருப்பு
அணுஅணுவாய் அரிக்கப்போவது உறுதி!
சிகரெட்
சில்லரையாகச் செலவு வைத்து
மொத்தமக மூழ்கடிக்கும் கடன்.
சிகரெட்
சுவாச உருப்புகளில் போடப்பட்டத்
தார்ச்சாலை
பூக்களின்மேல் போர்த்தப்பட்டக்
கேன்வாஷ்
சிகரெட்....
தொடர்கதைபோல நீளும் வாழ்க்கையை
சிறுகதையாக்கும் அவசரம்...
சிலசமயம்
துணுக்காக முடித்துவிடும் அபாயம்!
உணர்க:
வாயில் புகைகிறதெனில்
உள்ளே
உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது
தீ!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்