சிறுவர்கள்
ஒருவருக்கொருவர் பட்டப்பெயர் வைத்துக்கொள்வதில் ஒரு தனி இன்பம். நாளடைவில், பட்டப்பெயருக்கு உரியவர், வாலிபத்தையும் வயோதிகத்தையும் அடைந்த
பின்னரும், அந்தப் பட்டப்பெயரே அவருக்குரிய nom de plume ஆகிவிட்டது.
கறுப்புச்
சரக்கு, பூனைக் கண், புலிக் குட்டி, கீறிக் குட்டி, இடுப்புக் கட்டி, கஞ்சன்,
பொட்டியப்பா, சுண்டைக்கா, பிச்சம்மா, என்றெல்லாம் ஆகிவிட்டிருக்கும் பட்டப்பெயர்கள்,
பையன்கள் அவரவருக்குச் சிறு வயதில் சூட்டிக்கொண்டவை. நாளடைவில், அவையே வீட்டுப் பெயர்களாகவும்
ஆகிவிட்டதை நாம் அறிய முடிகின்றது. இப்படி,
விளையாட்டாக அழைத்துக்கொண்ட பட்டப்பெயர்கள், அவரவருக்குரிய அடையாளப் பெயர்களாக (Identity names) மாறிவிட்டிருப்பதை நாம்
அறியலாம்.
“ஒருவரையொருவர்
பட்டப்பெயர் கூறி அழைக்காதீர்” என்பது நபிமொழி. இந்த நபிமொழிக்குக்
கட்டுப்பட்டு, தகவல் பரிமாற்றம் செய்ய முனையும்போது, என்னால் முடிந்த அளவுக்குப்
பட்டப்பெயர் கூறாமல் ஆளைக் குறிப்பிட முயன்ற பலபோது, நான் தோல்வியையே
தழுவியுள்ளேன். இறுதியில், வேறு
வழியின்றி, பட்டப்பெயருடன் கூறியபோதுதான், “அப்பாடா, இதைச் சொல்லவா இந்தச் சுற்றி
வளைப்பு?” என்ற எதிர்த் தரப்புக் கேள்வியுடன் தகவல் முற்றுப் பெறும்.
- நமதூர் ‘காழியார் தெரு’வைச் சேர்ந்தவர் மர்ஹூம் அஷ்ரப் அலி ஆலிம். சில ஆண்டுகளுக்கு முன் இறந்து போனவர். அவருடைய தகப்பனாரும் ‘ஆலிம்சா’தான். அவர் வாழ்ந்த காலத்தில் பாமர மக்களிடத்தில் ஓர் அறியாமைக் கருத்து நிலவிற்று. அதாவது, தொழுகையில் ‘தப்பத் யதா’ சூரத் ஓதக் கூடாதாம்! காரணம், அந்த சூராவில் நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூலஹபைச் சபித்து இறைவசனம் அமைந்துள்ளதாம். அதனால், நபியவர்கள்கூட, அந்த சூராவைத் தொழுகையில் ஓதுவதில்லையாம். இந்தப் பாமரத் தனமான கருத்தைக் கேள்வியுற்ற அந்த ஆலிம்சா, மடத் தனமான கருத்தை உடைத்தெறிவதற்காக, அடிக்கடித் தொழுகையில் அந்த சூராவையே ஓதுவாராம். நாளடைவில் அவருடைய சொந்தப் பெயர் மறைந்து, ‘தப்பத்யதா’ ஆலிம்சா’ என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டதாம்!
- சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து சூரா)வில் “மாலிக்கி யவ்மித் தீன்” என்ற வசனத்தை, “மலிக்கி யவ்மித் தீன்” என்று ஓதுவதும் தவறாகாது; பொருளும் மாறுபடாது. இது கிராஅத்தின் இன்னொரு வகை. இதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக, நம்மூர் ஆலிம்சா ஒருவர், “மாலிக்கி” என்பதை “மலிக்கி” என்றே ஓதுவார். இது பையன்களுக்குப் புதுமையாக இருந்ததால், அந்த ஆலிம்சாவுக்குப் பையன்கள், “மலிக்கி ஆலிம்சா” என்று பெயர் வைத்துவிட்டார்கள்.
- எங்கள் சிறு வயதில் மரைக்கா பள்ளியில் பெரும்பாலும் கோனா வீட்டு ஆலிம்சாவே இமாமாக நின்று தொழவைப்பார். அவர் ஓதுவது, முதல் வரிசையில் நிற்பவர்களுக்குக்கூட விளங்காது! அப்படியான முணுமுணுப்பு ஓதலைக் கேட்டு, அந்த ஆலிம்சாவுக்கு, “முணுமுணு ஆலிம்சா” என்று பையன்கள் பேர் வைத்துவிட்டார்கள்.
- சுமார் ஓர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன், இன்றுள்ள இயக்கங்களின் தெருமுனைப் பிரச்சாரமெல்லாம் வருவதற்கு முன், நமதூருக்கு பயான் செய்வதற்கு வெளியூரிலிருந்து ‘தெரு பயான் ஆலிம்சா’ ஒருவர் அடிக்கடி வருவார். பேச்சாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ‘ஸ்டைல்’ உண்டல்லவா? அதுபோல் இவருக்கும் உண்டு. ஒரு கருத்தை வலியுறுத்துவதற்காக அழுத்தமாகவும் நீட்டியும் பேசுவார். ‘ரொம்ப மோசம்’ என்பதை, ‘ரொம்...ம்...ம்...ம்...ம்...ப மோசம்’ என்று அழுத்திக் கூறுவார். கிணற்றில் வாலியை விட்டுத் தண்ணீர் இறைப்பதை ஓர் இசையாகவே வெளிப்படுத்துவார். ‘பிசுமில்லா... பிசுமில்லா... பிசுமில்லா... வாளியிலே தண்ணீர் அள்ளி...’ எனும்போது, அவர் முகத்தில் ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கு கொப்பளித்து நிற்கும். ‘இன்றைக்கு அதெல்லாம் வரவரக் கொறஞ்சு போச்சு’ என்று சொல்வதை அவர் வாயிலாகக் கேட்பதற்கே கொடுத்துவைக்கணும். வரவர என்பதை நீட்டி, ‘வரவர வரவர வரவர வரவர வரவர வரவர வரவர ரொம்ப மோசமாப் போச்சு’ என்று rhythimical ஆக அவர் வெளிப்படுத்தும் பாங்கே தனி. இறுதியில் சுருதி குறையும். அதனால், இந்த ஆலிம்சாவுக்கு, ‘வரவர ஆலிம்சா’ என்று பெயர் வைத்துவிட்டார்கள் நம் பையன்கள்.
- எமது அண்டை வீட்டுச் சூழலில் குடும்பத் தலைவி ஒருவர் இருந்தார். மிக நல்ல பெண்மணி. அவர் பேசும்போது மெதுவாகவே பேசுவார். பெண்களுக்குள்ளே ‘ஸலாம்’ கூறுவது அருகிப் போயிருந்த அந்தக் காலத்தில், அந்தப் பெண்மணி, ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று முகமன் கூறியே பேச்சைத் தொடங்குவார். அதனால், அந்தப் பெண்மணிக்கு நம் இளசுகள், அப்பெண்மணி கூறிய முகமனையே பட்டப் பெயராக்கி, “அஸ்ஸலாமு அலைக்கும்’ வந்துட்டுப் போனாஹ” என்று கூறித் தகவல் அறிவிப்புச் செய்வார்கள்.
- இலங்கை நண்பர் ஒருவர், ஒரு செய்தியைக் கூறினார். புத்தளம் என்ற ஊரில் ஒரு பள்ளிவாசலுக்கு ஆலிம்சா ஒருவர் வந்தாராம். தொழ வைத்து முடித்த அவருக்கு அந்தப் பள்ளியின் ‘கிப்லா’வைப் பற்றி ஒரு சந்தேகம். மனத்துள் ஒரு விதமான வஸ்வாஸ்! தொழுகை முடிந்து எல்லாரும் போன பின்னர் அந்தப் பள்ளியின் தொழும் திசையான ‘கிப்லா’வைக் கணிப்பின் மூலம் பரிசோதித்துப் பார்த்த வகையில், அது பிழையாக இருந்ததாம். அவர் சரியான ‘கிப்லா’வைக் கணித்து, நூல் கயிற்றை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் கட்டி வைத்துவிட்டுப் போய்விட்டாராம். அடுத்த வக்துக்குப் பள்ளியில் கூடிய மக்களுக்கு வியப்பு! அங்கிருந்த ஒரு பொடியன், “யாரோ ஒரு கோன கிப்லா ஆலிம்சா’ வந்து கயிற்றைக் கட்டிவைத்துப் போனாராம்” என்றார். செய்தியைக் கேட்டவுடன், பொது மக்கள், ‘இத்தனை வருடங்கள் தொழுத தொழுகை எல்லாம் பாழ்! இப்ப நாம தொழுவது எப்படி? இந்தக் கோன கிப்லா பக்கமா? அல்லது பழையபடியா?’ என்று திகைத்து நின்றார்களாம்.
இதனை வாசிக்கும் அன்பர்களிடமும் நிறைய இருக்குமே? பரிமாறிக் கொள்ளுங்கள்.
அதிரை அஹ்மது


