நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இயற்கை இன்பம் – 9 0

அதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், மே 31, 2016 | , , ,

விலங்கினம்ஐயறிவு  விலங்கினங்கள்  அனைத்தும்  வல்ல
                          ஆண்டவனின்  படைப்புகளின்  நினைவைக்  கூட்டும்.
மெய்யறிவாம்  பகுத்தறிவின்  மனிதன்  மட்டும்
                          மேனிலையை  மறந்துவிட்டால்  விலங்கை  விட்டுப்
பொய்யுலகில்  தரந்தாழ்ந்து  பொருளைச்  சேர்த்துப்
                          போதுமெனும்  பொன்செய்யும்  மருந்தை  விட்டு
மெய்யுலகாம்  மறுமையதை  இழந்து  நிற்பான்!
                          மிருகங்கள்  உண்மையிதைக்  கூறா  நிற்கும்.

அதிரை அஹ்மத்

தண்ணீர்... ! 25

Unknown | திங்கள், மே 30, 2016 | , ,

நீ அதிசயம் மட்டுமல்ல ...
ஆச்சரியமான ஆசான் ....
                                                                                                   
உன் நேர்மையான பாதை வழி எங்கும் இன்பமே ....
உன் பாகுபாடில்லாத அனுகுமுறை யால்
நீ போகும், நிற்கும் ,நடக்கும்,ஓடும் இடமெல்லாம் சுகமே ....

நீ பார்க்காத பள்ளம் எங்குமில்லை
அதனால் நீ தளர்வதுமில்லை
பள்ளத்தை நிறைத்து பொங்கி எழும்
உன் வேகம் உணர்த்தும் உத்வேகம், பாய்ச்சிடுமே புத்துணர்ச்சி ....


சுத்தத் தங்கமாக வலம் வந்து
மற்றவர்களின் மாசுக்களை சுமந்து செல்லும்
நீ உண்மையில் ஒரு சீர்திருத்தவாதி .....
அழுத்தமாக நீ செய்யும் தியாகம் ....நன்மையின் உச்சம் ..

நீ பயணித்த பாதையில்தான்
உயிரினம் வாழுமிடம் அமைத்தது ...
உன் வருகையால் அடைந்த தைரியம்...அளவிடற்கரியது ...

உன் சலசலப்பில் நாங்கள்
உன்னை பருகினோம் ,
உன்னில் நீந்தினோம் ,
உன்னில் பயணித்தோம் ,
உன் வரவால் பயிரிட்டோம் ...
உன்னால் நாங்கள் அடையும் சுகம் ...விவரிக்கமுடியதது ...


உன் பருவ காலங்களில் நீ
வரும் வழியெல்லாம் உன்னுடன் நீ
அழைத்து வரும் துள்ளல் தரும் இதம்.... எப்படிச் சொல்வேன் ?...

நீ பாய்ந்த பிரதேசங்களில் எல்லாம்
தரை நிலமாக இருந்தவை எல்லாம்
பூஞ்சோலை யாய் மாறியது ....
உயிரினம் சுவாசிக்க ....புசிக்க .....
மட்டுமல்ல ..ரசிக்க வும் !!!!

ஆனால்..........?

நீ பயணித்த வழியில் வாழுமிடம்
அமைத்த உயிரினம் .....

உன் வழியை ,
உன் பாதையை ,
சில மாதங்கள் நீ தங்குமிடத்தை எல்லாவற்றையும்
உயிரினங்கள் அடைத்து கூடு கட்டிகொண்டன .....

உன் வரவை அவர்களே (உயிரினங்கள் ) தடுத்து கொண்டார்கள் ..
இழப்பு ....யாருக்கு ?...
நீரின்றி அமையாது உலகம் .......

சிந்திப்போமா?.....நாளை விடியலுக்கு .....

-அப்துல் ரஹ்மான்
--harmys--

கன்னத்தில் முத்தமிட்டால்! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, மே 29, 2016 | ,

நபிமணியும் நகைச்சுவையும் - தொடர் : 16
அன்பின்   வெளிப்பாடு முத்தம்! 

அன்பு, பாசம், நேசம், எனப் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் எளிமையான, இனிமையான வழிமுறை 'முத்தம்!' முத்தம் நமக்கு மனமகிழ்வளிக்கிறது. மகிழ்ச்சி என்பது சிரிப்புடன் சேர்ந்து வருகின்றது!

எப்போதும் மலர்ச்சியான முகத்துடன் இருப்பதுதான் மகத்துவம் நிறைந்த மங்காத ஞானச்சுடர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது. ஒருவரின் வீட்டுக்கு நாம் செல்லும்போது, அந்த வீட்டுக்கு உரியவர், நம்மை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டுமானால், நாம் முதலில் சிரித்த முகத்துடன் செல்ல வேண்டுமல்லவா!

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு பகல் நேரத்தில் புறப்பட்டார்கள். அவர்கள் அமைதியாக  வந்தார்கள். நானும் அவர்களுடன் பேசவில்லை. 'பனூ கைனுகா' கடைவீதிக்கு அருகில் அவர்கள் வந்ததும், மாதர் திலகம் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார்கள். "இங்கே அந்த சின்னப்பையன் இருக்கிறானா?" என்று கேட்டார்கள். 

அண்ணலாரின் அருமை மகளார் ஃபாத்திமா (ரலி) தம் மகனைச்  சற்று நேரம் தாமதப்படுத்தினார். 'அவர் தம் மகனுக்கு நறுமண மாலையை அணிவித்துக் கொண்டிருக்கிறார்' என்றோ அல்லது 'மகனைக் குளிக்கவைத்துக் கொண்டிருக்கிறார்' என்றோ நான் நினைத்தேன். சற்று நேரத்தில்  ஃபாத்திமா (ரலி) அவர்களின் மகன் ஹஸன் இரு கைவிரித்து ஓடிவந்தார். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைக் கட்டியணைத்து முத்தமிட்டார்கள்.

'இறைவா! இவனை நீ நேசிப்பாயாக! இவனை நேசிப்பவர்களையும் நீ நேசிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள் (1)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பேரன் ஹஸன் இப்னு அலீய் (ரலி)யை முத்தமிட்டதைப்  பார்த்த, அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமி (ரலி), "எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை" என்றார்.

அவரை ஏறெடுத்துப் பார்த்த கருணையும் கனிவும் நிறைந்த கண்ணியத்தூதர் (ஸல்) அவர்கள் "அன்பு காட்டாதவர் அன்பு காட்டப் படமாட்டார்" என்று கூறினார்கள். (2)

துன்பங்களைத் தூக்கி எறிவதற்கு இறைவன், மனிதனுக்கு வழங்கியுள்ள மிகப்பெரிய அருட்கொடை சிரிப்பு!

ஆம்! சிரிப்பு அற்புதமான ஒரு செரிமான மாத்திரை!  பசியெடுக்க வைக்கும் பண்பு கொண்டது! மனதையும் உடலையும் தெம்பாக வைத்திருக்க உதவும் அருமையான ஒரு புத்துணர்வு  மிக்க டானிக்! சிரிக்கும்போது இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. சுவாசம் சீராகி வேகம் பெறுகிறது. மனம் முழுதும் இளகி நெகிழ்கின்றது. இதனால், இயல்பாகவே உடல் ஆரோக்கியம் அடைகின்றது. 

நிச்சயமாக, எத்தனைப் பிரச்சினைகளில் நாம் இருந்தாலும் எவ்வளவு கவலைகள் நம்மை ஆட்கொண்டிருந்தாலும் ஒரு சின்னக் குழந்தை புன்முறுவலுடன் நம் அருகில் வந்து விளையாடத் தொடங்கினால், நம்மை அறியாமலேயே நம் உள்ளம் மகிழ்ச்சியால் மலர்கிறது! அதுவே, நம் முகத்தில் புன்னகையாய்ப் பூக்கின்றது!

அபுபக்ரு சித்தீக்  (ரலி) ஒருநாள் அஸர் தொழுகையைத் தொழுதார்கள். பிறகு மஸ்ஜித் நபவீ யிலிருந்து   நடந்தார்கள். அப்போது அழகின் அரசன் ஹஸன் அவர்களைக் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கக் கண்டார்கள். உடனே, ஹஸன் அவர்களைத் தம் தோளின் மீது ஏற்றிக் கொண்டு, "என் தந்தை உனக்கு அர்ப்பணமாகட்டும்! நீ தோற்றத்தில் உன் பாட்டனார் பெருமானார் (ஸல்) அவர்களைப் போலவே  இருக்கிறாய்; உன் தந்தை அலீய் அவர்களை நீ தோற்றத்தில் ஒத்திருக்கவில்லை " என்று கூறினார்கள். அப்போது  அபுபக்ரு  சித்தீக் ( ரலி) அவர்களின் இந்தக் கூற்றைக் கேட்டு அலீய் இப்னு அபீதாலிப் (ரலி)  அவர்கள்  சிரித்துக் கொண்டிருந்தார்கள். (3)

‘'அகிலத்தின் அருட்கொடை' யான  அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எத்தகைய தோற்றத்தில் இருந்தார்கள் என்பதைச்  சுருக்கமாய்க் காண்போம்:

'இயல்பாகவே ஒளி  வீசும் முகம்; ஒருமுறை பார்த்தால், மீண்டும் மறுமுறையும்  பார்க்கத் தூண்டி எவரையும் ஈர்க்கும் வசீகரம்! உடல் பெருத்தவரோ அல்லது ஒல்லிக் குச்சியோ அல்லர்; சீரான   உடல்வாகு; கருகருவென கருத்து நீண்ட வில்லைப் போன்ற புருவம்; களங்கமற்ற கருவிழிகள்; சுருண்டு தொங்கும் தலைமுடி; அடர்த்தியான தாடி; உயர்ந்த கழுத்து; அவர் பேசாமல் இருந்தால் கம்பீரமான அமைதி; பேசினால் அளந்து தெளிவாகப் பேசினார்; அவரது பேச்சில் நாவன்மை மிளிர்ந்தது; உயரத்தில் நெடியவருமல்லர்; குட்டையானவருமல்லர்; எட்டத்தில் பார்க்கும்போது வசீகரமானவராகவும் அருகில் சென்று பழகினால் இனிமையானவராகவும் திகழ்ந்தார்; இருவருடன் சேர்ந்து இருக்கும்போது, பழுத்த ஈச்சந் தோகைகள்  இரண்டின் நடுவே புதிதாகத் தோன்றிய இலந்தளிர் தோகைபோல் தெரிந்தார்; அவர் பேசினால் அவருடைய தோழர்கள் மரியாதையுடன் செவி தாழ்த்தினர்; அவர் கட்டளையிட்டால் உடன் கட்டுண்டு சடுதியில் நிறைவேற்றினர். அவர்தம் தோழர்களிடையே கண்ணியம் மிக்கவராகத் திகழ்ந்தார்!'

வகை வகையாய்ப் பூத்திருக்கும் வண்ண வண்ண மலர்களையெல்லாம் ஒன்று சேர்த்து ஒருங்கிணைத்துக் கட்டிய ஒரு பூச்செண்டைப் போல அழகிய நறுமணம் கமழும் ஓர்  அரிய விளக்கமாக அமைந்து, சிறப்பாய் நிலைபெற்று விட்டது உம்மு மஅபத் (ரலி) அவர்களின் இந்த இனிய வர்ணனை! 

அருள்   வடிவான அண்ணல் நபி அவர்கள், தம் சொந்தப் பேரனுக்கும் வளர்ப்புப் பேரனுக்கும் இடையே அன்பு செலுத்துவதில்கூடக்  கடுகளவு  ஏற்றத் தாழ்வு காட்டியதே இல்லை.

இதோ அந்த மனிதருள் புனிதரைப் பற்றிய,  அவர் வளர்ப்புப் பேரன் உஸாமா பின் ஸைத் (ரலி) யின் வாக்குமூலம் வாசிப்போம்: 

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (சிறுவனாக இருந்த) என்னைப் பிடித்துத் தம் ஒரு தொடையின் மீதும் தம் சொந்தப் பேரரான ஹஸன் இப்னு அலீய் (ரலி) அவர்களைப் பிடித்துத் தம் இன்னொரு தொடையின் மீதும் அமர்த்திக்கொண்டு, பிறகு எங்கள் இருவரையும் கட்டியணைத்தவாறு, "இறைவா! இவர்கள் இருவர் மீதும் நான் அன்பு செலுத்துகிறேன். நீயும் இவர்களின் மீது அன்பு செலுத்துவாயாக!" என்று  கூறினார்கள் . (4)

அன்பு என்ற வளமான பெருவெளியிலிருந்தே சிரிப்பு என்ற செழுமையான நீரூற்று மலர்ந்து வேகமாக வெளியாகின்றது. சிரிப்பு வேகமாகத் தொற்றிக் கொள்ளக்கூடியது. அதை யாரும் விலை கொடுத்து வாங்கிவிட முடியாது! யாசித்துப் பெறவும்  முடியாது. திருடவும் முடியாது. அதே நேரத்தில், சிரிப்பை நாம் பிறருக்கு வழங்குவது மூலம், நாம் எதையும் இழக்கப்போவதில்லை! நம்மால் அதிகம் கொடுக்க முடிந்தது சிரிப்பு ஒன்றுதான்!  அதுவும், எதையும் இழக்காமல் பிறருக்கு நம்மால் அளிக்க முடிந்ததும்  சிரிப்பு ஒன்றுதான்!

“ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது” என்று இரக்கமும் ஈகைக் குணமும் கொண்ட ஏந்தல்  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (5)

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்து அதை அணிந்தேன். 'உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?' என்று பரிவும் கருணையும் கொண்ட நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'ஆம்' என்றேன். ஆயினும், அவர்கள் என்னை (த் தம்மருகில்) அழைத்தார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்" என்றும், 

"ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னை முத்தமிடுவார்கள். நானும் என் கணவர் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து கடமையான குளிப்பை நிறைவேற்றுவோம்" என்றும் அறிவித்தார்கள் முஃமின்களின் அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்கள். (6)

சாந்தி நபி (ஸல்) அவர்கள் சகிப்புத் தன்மை மிகுந்தவராக, சமாதானத்தை நேசிப்பவராக, சகோதரத்துவத்தை நிலைநாட்டியவராக, எதிர்வந்த அனைத்து சோதனைகளையும் இழப்புகளையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொண்ட பொறுமையாளராக, பொறுப்பாளராக எங்ஙனம் திகழ்ந்தார்கள் என்பதைப் பார்ப்போம்: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அவர்களின் மகன் இப்ராஹீம் வளர்ந்து வந்த) அபூ ஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவராவார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். 

மற்றொரு முறை நாங்கள் அந்த வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி(ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக் கண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் வியப்புற்று 'இறைத்தூதர் அவர்களே! தாங்களா (அழுகிறீர்கள்)?' எனக் கேட்டதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள், 'அவ்ஃபின் மகனே! நிச்சயமாக இது கருணையாகும்" என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்து அழுதார்கள். பிறகு, 'கண்கள் நீரைச் சொரிகின்றன.  உள்ளம் வாடிக் கொண்டிருக்கிறது; எனினும், இறைவன் விரும்பாத எந்த வார்த்தையையும் நாங்கள் கூற மாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உன்னுடைய பிரிவால் அதிகக் கவலைப்படுகிறோம்" என்றார்கள். (7)

அண்ணலாரின் அணுக்கத் தோழர் அபுபக்ரு சித்தீக் (ரலி) அவர்கள் தம் அருமை மகள் மீது எத்தகைய பிரியம் வைத்திருந்தார்கள் என்றால்; நான் அபுபக்ரு சித்தீக்  (ரலி) அவர்களுடன் அவர்களின் வீட்டாரிடம் சென்றேன். அப்போது அவர்களின் மகளான மங்கையர்க்கரசி ஆயிஷா (ரலி), காய்ச்சல் கண்டு படுக்கையில் படுத்திருந்தார்கள். அவரின் தந்தையான அபுபக்ரு சித்தீக்  (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி)யின்  கன்னத்தில் பாசத்தோடு முத்தமிட்டு, 'எப்படியிருக்கிறாய்  என்  அருமை மகளே?" என்று கேட்டதை நான்  கண்டேன்.  (8)

உண்மையைத் தேடும்  ஒவ்வொருவருக்கும் வள்ளல் நபியின் வாழ்க்கை ஒளி விட்டுப் பிரகாசிக்கும் மங்காத ஒரு மணி விளக்காகும். தம் உம்மத்தில் ஒவ்வொரு தனி மனிதரிடமும் அதிக அக்கறை கொண்டவர்களாகவே அண்ணலார் அனுதினமும் காணப்பட்டார்கள். அருள்மழை பொழியும் அல்லாஹ் (ஜல்)வின் மன்னிக்கும் மாண்பை நினைத்து அவர்கள் நன்றி செலுத்தவும், அவனின் மட்டற்ற கருணையை நினைத்து அவர்கள் மகிழ்ச்சி அடையவும் மறந்ததேயில்லை! 

ஒருமுறை, தனிமைச் சூழலில் வாழும் ஓர் அந்நியப் பெண்மணி சில பொருட்கள் வாங்குவதற்காக ஓர் அங்காடிக்குத் தனிமையில் சென்றபோது… கடைக்காரன் கண்ணில் அவள் கவர்ச்சியாய்த் தோன்றினாள்! அவள் கேட்ட பொருள் உள்ளே சேமிப்பறையில் இருப்பதாய் அவன்  சொன்னதும் அவள் அங்கு செல்லவே, பின் தொடர்ந்த கடைக்காரன், எதிர்பாராமல் அவள் மேனியை ஸ்பரிசித்தான்! அது மட்டுமின்றி, அவளை முத்தமிட்டான்!

அவளோ அதிர்ச்சியில்  'அட, உன் கை நாசமாகட்டும்! உனக்கு என்ன நேர்ந்தது? நான் தனித்து வாழும் ஓர் அந்நியப் பெண் என்பதை நீ அறியமாட்டாயா?" என்றாள். 

கடைக்காரருக்கு அப்போதுதான், தான் செய்தது பெரிய குற்றம் என்று உரைத்தது! மனம் வருந்தியவர், நேராக உமர் ஃபாரூக் (ரலி) அவர்களிடம் சென்று விபரம் கூறி விடை கேட்டு நின்றார். 'அட உனக்கு நேர்ந்த சோகமே! நீ அபுபக்ரு சித்தீக் (ரலி) அவர்களிடம் செல். ஒருவேளை, உனக்கு அவர்களிடம் உதவி கிடைக்கலாம் என்றார். கடைக்காரர் அபுபக்ரு (ரலி) அவர்களிடம் சென்று விபரம்  சொல்லவே, அவர்களும் 'அவள் தனிமையில் வசிக்கும் பெண்ணா?' என்றார்கள்.

'ஆம்' என்றதும் 'நீ அல்லாஹ்வின் தூதரிடம் செல்' என்று அவரை அனுப்பிவிட்டு, அபுபக்ரு சித்தீக் (ரலி) அவர்களும் உமர் ஃபாரூக் (ரலி) அவர்களும் அண்ணல் நபியைக் காணச் சென்றார்கள். 

இரக்கக் குணம் நிறைந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்த  விவரத்தை இவ்வாறு  கூறினார்:

'எங்கள் நபியே; திங்கள் நிலவே!
கண்கள் இருந்தும் நான்  குருடானேன் 
நல் நெஞ்சமிருந்தும் ஒரு விலங்கானேன் 
அந்நியப் பெண்ணை நான் முத்தமிட்டேன் 
என் கண்ணியத்தையே காற்றில் விட்டேன் 
பரிகாரம் தேடி விரைந்து வந்தேன் - என் 
பாவங்கள் நீங்க உயர் வகை உரைப்பீர்!’

என்று கெஞ்சியே அவர் வருந்தி நின்றார் வள்ளல் நபியின் நல் வார்த்தைக்காக.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமானார்கள்.  இது விஷயத்தில், அல்லாஹ்வின் கட்டளையை அவர்கள் எதிர்பார்த்திருந்தது போல் தோன்றியது. அப்போது அண்ணலாருக்கு வழக்கம் போல் ‘வஹீ’ என்ற அல்லாஹ்வின் அருள் பொழியத் துவங்கியது.
بسم الله الرحمن الرحيم

 وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ ۚ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ۚ ذَٰلِكَ ذِكْرَىٰ لِلذَّاكِرِينَ

பகலின் (காலை, மாலை ஆகிய) இருமுனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக. நிச்சயமாக நற்செயல்கள், தீச்செயல்களைப் போக்கிவிடும். (அல்லாஹ்வை) நினைவு கூறுவோருக்கு இது நல்லுபதேசமாக இருக்கும் எனும்  இறைவசனம் அருளப்பட்டது. (9)

அதைப் பெற்றுப் புளகாங்கிதம் கொண்ட கடைக்காரர்  'இந்தத் தீர்ப்பு  எனக்கு மட்டுமா? அல்லது அனைவருக்குமா?' என்று கேட்டதற்கு, அருகே இருந்த உமர் ஃபாரூக் (ரலி) அவர்கள் 'இந்த வசனம்  உனக்கு மட்டுமே பிரத்தியேகமானதாக இருக்கும்படி நீ விரும்பினால், உனக்கு அது செல்லுபடி ஆகாது!   இந்த அருட்கொடை ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும்தான்! என்று பதிலளித்தார்கள்.  அருகில் இருந்த அண்ணல்   நபி(ஸல்) அவர்கள், 'உமர் உண்மையே உரைத்தார் ' என்று சொல்லிச் சிரித்தார்கள். (10)

சிரிப்பு ஓர் ஆரோக்கியமான தொற்று ஆகும்! மன உளைச்சல்களுக்கு நிரந்தர நிவாரணியும்  சிரிப்புதான்.

ஒரு மோசமான செய்தியோ, அதிர்ச்சியான சம்பவமோ நம் மன நலத்தைப் பாதித்தாலும் மனம் நிறைந்த சிரிப்பு இழந்த நலத்தை மீட்டுத் தந்துவிடுகின்றது!

அனைத்திற்கும் மேலாக அண்ணலுக்கு அருளப்பட்ட அழகிய வஹீ, கடைக்காரரின் கவலையை களைந்தெறிந்து அல்லாஹ்வின் அருள் வசனம் நிம்மதியாய் அவர் நெஞ்சில் நிறைந்தது. அவர் இன்னல் மறைந்தது.
o o o 0 o o o 
ஆதாரங்கள்:
(01) புஹாரி 2122: அபூ ஹுரைரா (ரலி)
(02) புஹாரி 5997: அபூ ஹுரைரா (ரலி)
(03) புஹாரி 3542: உக்பா இப்னு ஹாரிஸ் (ரலி) 
(04) புஹாரி 6003: சுலைமான் பின் தர்கான் அத்தைமீ (ரஹ்)
(05) புஹாரி 6011:  நுஃமான் இப்னு பஷீர்(ரலி)
(06) புஹாரி 322:  உம்மு ஸலமா (ரலி)
(07) புஹாரி 1303: அனஸ் பின் மாலிக் (ரலி) 
(08) புஹாரி 3918: பராஉ (ரலி)
(09) அல் குர்ஆன்: அத்தியாயம் 11:114 
(10) முஸ்னத் அஹ்மத்: 2426 இப்னு அப்பாஸ்
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M. ஸாலிஹ்

மதீனாவில் நோன்பும் பெருநாளும்... 20

அதிரைநிருபர் பதிப்பகம் | சனி, மே 28, 2016 | ,


இஸ்லாமிய ஆண்டின் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் சஊதி அரேபியாவின் பல இடங்களில் பணியாற்றிவிட்டுத் திரும்பி வந்த  எனக்கு, மதீனாவின் நான்காண்டுப் பணியின்போது கிடைத்த ரமளான் நோன்பும் பெருநாளும் என் வாழ்வில் மறக்க முடியா நினைவுகளைப் பதித்துள்ளன.  அந்த நினைவலைகளின் ஒரு சிறிய பிரதிபலிப்பே இக்கட்டுரை.

“மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹரமைத் தவிர, மற்றப் பள்ளிகளில் தொழுவதைவிட எனது இந்த மஸ்ஜிதில் தொழுதால், ஆயிரம் மடங்கு கூடுதலாக நன்மை கிடைக்கும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: சஹீஹுல் புகாரீ)

இம்மை-மறுமைக்கான பொன்னான வாய்ப்பு, எனக்கு மதீனாவில் பணியாற்றக் கிடைத்ததாகும்.  அதிலும் குறிப்பாக, புனித ரமளானில் கழித்த நாட்கள் - குறிப்பாக மஸ்ஜிதுன் நபவீயில் கழித்தவை - அவற்றின் மேன்மையைச் சொல்லால் வடிக்க முடியாது!   ‘ரவ்ளத்துல் முஷர்ரஃபா’வும் ‘ஜன்னத்துல் பகீஉ’ எனும் பொது மண்ணறையும் அவற்றின் புனிதத்துவத்தால் கண்களைப் பனிக்கச் செய்யும்!   ‘உஹ்து’ மலை, ‘கந்தக்’ பகுதி, ‘மஸ்ஜிது குபா’, ‘மஸ்ஜிது கிப்லத்தைன்’ முதலான இடங்கள் நபி வரலாற்றைப் பசுமையாக மனத்தில் பதிய வைக்கும். 


மதீனத்து மக்களுள் பெரும்பாலாரின் நளினத் தன்மை குறிப்பிடத் தக்க ஒன்றாகும்.  ஹரமை கண்ணியப் படுத்துவதும், அதில் இபாதத்துகளில் ஈடுபடுவதும், அதில் நோன்பு துறப்பதும், ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதும் ஆகியவற்றில் மதீனாவாசிகளுக்கு நிகர் அவர்களேதாம் என்பது மிகைக் கூற்றன்று!

ரமளானின் ‘அஸ்ர்’ தொழுகை முடிந்தவுடன் ‘மஸ்ஜிதுன் நபவீ’ கலைகட்டத் துவங்கிவிடும்!  எதற்காக?  நோன்பு துறக்கும் ஏற்பாட்டிற்காக!  ஒவ்வொரு குடும்பமும் செல்வந்தர்களும் வணிகர்களும் போட்டியிட்டுக்கொண்டு மஸ்ஜிதுக்குள் இடத்தைப் பிடித்து, ‘சுஃப்ரா’ விரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.  அவை அவர்களுக்காகவா?  இல்லை.  நோன்பாளி விருந்தினர்களுக்காக! 

அண்மையில் விரிவு படுத்திக் கட்டப்பெற்ற உள் பள்ளி, வெளிப் பள்ளி முழுவதும் உணவு விரிப்பால் நிறைந்து, வெள்ளைக் கோடு போட்டது போல் இருக்கும்.  நோன்பு துறப்பதற்கான பண்டங்களுள் ஒன்றுகூட ‘ஹரம்’ நிர்வாகத்திலிருந்து இருக்காது!  எல்லாம் பொதுமக்கள் அவரவர் வீடுகளிலிருந்து கொண்டுவந்த பண்டங்களேயாகும்!  பெரும்பாலும் மதீனத்தில் விளைந்த பேரீத்தம் பழங்களும் ரொட்டிகளும் தயிரும் அதனோடு சேர்த்துண்ணத் தக்க ஒரு விதமான ருசிப் பொடியும், ஜம்ஜம் தண்ணீரும்தான் நோன்பு துறக்கும் உணவுகள்.  நாம் உளூச் செய்துவிட்டுப் பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பே - வெளியில் நடந்து வந்துகொண்டிருக்கும்போதே - நம்மை அன்புடன் எதிர்கொண்டு அழைப்பதற்காக இளைஞர்களும் இல்லப் பணியாளர்களும் வெளியில் நிறுத்தப்பட்டிருப்பார்கள்.  அவர்களுள் யாராவது நம் கையைப் பிடித்துவிட்டால், அவர்களிடமிருந்து தப்புவது கடினம்.  நம்மை அன்புடன் அழைத்துக்கொண்டு, பள்ளிவாசலுக்குள் நீண்ட தூரம் கூட்டிச் செல்வார்கள்.  அவர்களுக்குரிய இடத்தில் கொண்டுபோய் அமர்த்திவிட்டு மீண்டும் ‘ஆள் பிடிக்க’ விரைந்துவிடுவார்கள்!  சில வேளைகளில், இரண்டுபேர் நம் கையைப் பிடித்துவிடுவார்கள்.  அப்போது அங்கே நடப்பது அன்பு இழுபறிதான்!

மதீனத்துச் செல்வந்தர்கள் சிலர் பிரியாணி, ‘கப்ஸா’ சோறு முதலியவற்றைப் பள்ளிவாசலுக்கு வெளியில் வைத்து, ‘சபீல்.. சபீல்’ என்று கூப்பிட்டு வினியோகம் செய்வார்கள்.  அவற்றைப் பெற்று நோன்பு துறந்து மகிழக் கூட்டம் ஒரு பக்கம் அலைமோதும்.  தயிர், ஜூஸ் முதலியவையும் பங்கிடப்படும்.  இவற்றையெல்லாம் பள்ளிக்கு வெளியில்தான் வைத்துச் சாப்பிட முடியும்.

இனி, நாம் உள்ளே என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம்.  வெள்ளைப் ‘ப்லாஸ்ட்டிக்’ விரிப்பில் எதிரெதிராக ஒழுங்கான வரிசையில் நோன்பாளிகள் அமர்ந்திருப்பர். அவர்களுக்கு முன் ரொட்டி (bread), தயிர், பேரீத்தம்பழம், தண்ணீர் எல்லாம் தாராளமாக வைக்கப்பட்டிருக்கும்.  ‘அதான்’ சொல்லும் நேரம் நெருங்க நெருங்க துஆவும் இஸ்திகுஃபாரும் மஸ்ஜிதை ஆட்கொள்ளும்.  ‘அதான்’(பாங்கு) தொடங்கியவுடன் நோன்பு துறப்பதும் தொடங்கிவிடும்.

“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள். ஒன்று, அவர் நோன்பு துறக்கும்போது.  மற்றொன்று, அவர் தன் இரட்சகனை (மறுமையில்) சந்திக்கும்போது” என்ற நபிமொழியின் முழுப் பொருளையும் அங்குதான் நாம் பார்க்கலாம்.  அத்துணை மகிழ்ச்சி!  பரக்கத்தான மதீனத்துப் பேரீத்தம் பழமும் மக்கத்து ‘ஜம்ஜம்’ தண்ணீரும் கொண்டு நோன்பு துறப்பது பேரருளல்லவா?  பெருமகிழ்ச்சிக்கு உரியதல்லவா?

ஐந்தாறு நிமிடங்களில் நோன்பு துறப்பு முடிந்து, அனைவரும் தொழுகைக்கு ஆயத்தமாகிவிடுவார்கள்.  எஞ்சிய உணவுப் பொருள்களையும் ‘சுஃப்ரா’வையும் ஓரிரு நிமிடங்களில் அகற்றிவிடுவார்கள் மதீனாவாசிகளின் பணியாட்கள்!  உணவுப் பொருட்கள் சிந்துமா?  ஊஹூம்.  அந்தப் பேச்சுக்கே இடமில்லை!  அதுதான் அங்கே காணப்படும் ‘பியூட்டி’ என்று கூறலாம்.

நோன்பாளிகளின் தாகத்தை தீர்க்க, ரமளான் மாதத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 150 டேங்கர் லாரிகளில் மக்காவிலிருந்து ‘ஜம்ஜம்’ தண்ணீர் 400 கிலோ மீட்டர் தொலைவுள்ள மதீனாவுக்குக் கொண்டு வரப்படுகின்றன எனக் கேள்விப்படுகிறோம்!  நம் கண்கள் வியப்பால் விரிகின்றன.

 மதீனாவில் உள்ள மற்ற பள்ளிகளில் தொழுவதைவிட மக்கள், குறிப்பாக வெளி நாட்டுக்காரர்கள், ‘மஸ்ஜிதுன் நபவீ’யில்தான் ‘தராவீஹ்’ தொழ விரும்பித் தொலைவிலிருந்தெல்லாம் வந்து கூடுவார்கள்.  நம் நாட்டுப் பள்ளிகளில் ‘ஹாஃபிளு’கள் தராவீஹில் குர்ஆன் ஓதுகிறோம் என்று, ‘ஓடுகிறார்கள்’. மதீனாவில் மற்ற ‘வக்து’களைவிடத் துரிதமாக ஓதத்தான் செய்கிறார்கள்; ஆனால், ஓதும் அழகும் அமைதியான ஓசை நயமும், கேட்போர் மனங்களைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளன.

‘தராவீஹ்’ அல்லாமல், ரமளானின் பிந்திய பத்து நாட்களில் ‘கியாமுல் லைல்’ எனும் இரவுத் தொழுகையும் நடைபெறும்.  நடு இரவு ஒன்றரை மணிக்குத் துவங்கும் இத்தொழுகைக்காகவும் மக்கள் கூட்டம் கூட்டமாக ‘மஸ்ஜிதுன் நபவீ’க்கு வந்து தொழுவார்கள். 

புனித ரமளான் முடிந்து, ‘ஷவ்வால்’ முதல் நாளாகிய நோன்புப் பெருநாள் அறிவிப்பாகி, மதீனா முழுவதும் பேரொளியும் பெருமகிழ்வும் பொங்கும்.  நாங்கள் பெருநாள் ‘சுப்ஹு’க்கு முன் குளித்துவிட்டு, ஹரமுக்குச் செல்வோம்.  ‘சுப்ஹு’த் தொழுகை முடிந்த பின்னர் இருந்த இடத்தை விட்டு நகர்ந்தால், மீண்டும் அந்த இடம் கிடைக்காது!  அதனால், அந்த இடத்திலேயே அம்ர்ந்துவிடுவோம், அடுத்த ஓரிரு மணி நேரத்தில் நடக்க இருக்கும் பெருநாள் தொழுகையை எதிர்பார்த்து!  மதீனாவாசிகளும் தம் வெள்ளுடை அணிந்த ‘வில்தான்’களோடு (சிறுவர்களோடு) வந்து குழுமிவிடுவார்கள்.

ஒரு பெருநாளன்று என்னருகில் தொழுது அமர்ந்திருந்த அரபித் தந்தையர் தம் பிள்ளைகளை முடுக்கிவிட்டார்கள்.  அப்பிஞ்சுகளும் ஆர்வத்துடன் எழுந்து, அருகில் இருந்தோர் அனைவருக்கும் பேரீத்தம் பழத்தையும் ‘கஹ்வா’வையும் பகிர்ந்தளிப்பதில் பம்பரமாகச் சுழன்றார்கள்.  அதனைக் கண்டபோது, எனக்குக் கீழ்க்காணும் இறைவசனங்கள் நினைவுக்கு வந்தன:

و يطوف عليهم غلمان لهم كانهم لولو مكنون (الطور – ٥٢
يطوف عليهم ولدان مخلدون  بأكواب واباريق وكأس من معين (الواقعة -  ٥٦

எனது நாவு இந்த இறைவசனங்களை அசை போட்டது.  அந்த மகிழ்ச்சிக்குரிய இளங்காலைப் பொழுதில், ஆனந்தத்தால் என் கண்கள் பனித்தன!  

சுமார் ஆறரை மணிக்கெல்லாம் அறிவிப்புச் செய்யப்பட்டது.  அதன் பின் பெருநாள் தொழுகை தொடங்கிற்று.  அதனைத் தொடர்ந்து அருமையான, உருக்கமான ‘குத்பா’ தொடங்கிற்று.  இமாம் அவர்களின் கணீரென்ற கம்பீரமான குரலில் அமைந்த அந்த ‘குத்பா’, இஸ்லாமியக் கொள்கைகள் மற்றும் கடமைகளின் சாரமாக அமைந்தது.  ‘குத்பா’ முடிந்த பின், அறிமுகமானவர்களும் அறிமுகமில்லாதவர்களும் ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி அன்பையும் பாசத்தையும் பகிர்ந்துகொண்டனர்.  

பள்ளியை விட்டு வெளியில் வந்தவர்களை, “ஜியாரா..! ஜியாரா..!” என்று அரபி ‘டாக்ஸி’ ஓட்டுநர்கள் அழைத்தார்கள்.  அவர்களுடன் சென்றால், குறுகிய நேரத்தில் ஒருசில இடங்களை மட்டுமே காட்டுவர்.  மதீனாவில் அனுபவமுள்ள நம்மவர்களோடு, செலவைப் பாராமல், ‘உஹ்து’ மலை, அகழ்ப்போர் நடந்த இடம், மஸ்ஜிது ‘கிப்லத்தைன்’, ‘குபா’ மஸ்ஜிது, மஸ்ஜிது ‘ஜும்ஆ’ ஆகிய மதீனாவின் புனித இடங்கள் தவிர, அதிலிருந்து 200 மைல் தொலைவிலுள்ள ‘பத்ர்’ போர் நடந்த இடத்துக்கும் சென்று வரலாம்.                              
   
இப்புனித மாதத்தின் அருட்பேறுகளை முழுமையாக அடையவேண்டுமாயின், ஒரு முறையேனும் ரமளானில் ‘உம்ரா’வுக்காகச் சென்று, அதனை நிறைவு செய்தவுடன், மதீனாவில் தங்கிப் பாருங்களேன்; அப்போது தெரியும், என் எழுத்தில் பொதிந்துள்ள உண்மை!  

அதிரை அஹ்மது

நிஜாம்... 10

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, மே 27, 2016 | , , , ,


நிஜாம்,

டேய்,

முத்திரைத் தோழனே
நித்திரை நிலை
நின்றன்
நிரந்தரமானதா

இத்தரைமீதினில்
இனியுன்
இன்முகம் காணாத
இதயங்களோடு
எத்துணை நாட்கள்தான்
நாங்களும்
இழுத்தடிப்பதடா

ஏனிந்த அவசரம்?

நட்பை
கற்பெனக் கண்டவனே
இன்னும் கொஞ்ச நாள்
எங்களோடு
இருந்துவிட்டுப் போனால் என்ன

வேதனையை உட்சுமந்து
எமக்கெல்லாம் பகிராமல்
புன்னகைப் போர்த்தியவனே

வலிகளோடு கணநாள்
வாழப்பழகியவனே

சக மனிதரின்
முகம் வாடினால்
அகம் கலங்கும் நண்பா
நீ
ஐந்து நிமிட உரையாடலில்
ஆறாத புண் ஆற்றுவாய்
தேனை யொத்த வார்த்தைகளால்
தீராத வலி நீக்குவாய்

வலியோடு உன்னை நாடியோருக்கு
வழி காட்டி மகிழ்வாய்

ஆண்டவன்
அருள் பெற்ற நீ...
நீட்டிய கைகளில்லாம்
பொருள் இட்டவன்
வாட்டிய வறுமையை
விலக்கிய தர்மஸ்தன்

உன்னை இழந்தது
எம்மில் எதையோ
இழந்தது போலவே இருக்கிறதேடா

இருமிக்கொண்டோ
செருமிக்கொண்டே
நீ இருந்திருந்தாலாவது
ஏக்கம் மீறுகையில்
நின்றன்
எழில்வதனம் கண்டேனும்
ஆறுதல் உய்வோம்

இனி
எங்கேடா
எப்போடா
எப்படியடா என் தோழா

என்
விழித்திரையில் இன்னும்
உயிர்த்திருக்கிறாய்
செவிகளுககுள் இன்னும்
ஒலித்திருக்கிறாய்

கண்டதும்
கைகுலுக்கும்
தற்கால நட்புலகில்
கண்டதும் கட்டியணைத்துத்
தோளில் முத்தமிடும்
கற்கால நட்பன்றோ நமது

மலேசிய மண்ணறை
மஹ்சர் வரை உனக்கு
மாளிகையென துலங்கட்டும்

உன்
இறுதி மூச்செனும்
ஈட்டி எய்து
எங்கள்
இதயம் குத்திய நண்பா
உன் பிரிவை ஏற்க
வலிமை தரட்டும்

வல்ல இறைவன்..

அவனிடமிருந்தே வந்தாய்
அவனிடமே மீண்டாய்
அவனிடமிருந்தே வந்தோம்
அவனிடமே மீள்வோம்

யா அல்லாஹ்
எங்கள் நிஜாமுக்கு
உயர்ந்த சொர்க்கத்தை
உரித்தாக்கு!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 040 11

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, மே 27, 2016 | , ,


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

பெருமை கொள்வது கூடாது:

அல்லாஹ் கூறுகிறான்:

பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே. (அல்குர்ஆன்:28:83)

பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! நீர் பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்! (அல்குர்ஆன்: 17:37)

மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன்: 31: 18)

காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு  அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமை  மிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும். “மமதை கொள்ளாதே! மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்என்று அவனிடம் அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன்:28:76)

அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதேஅல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்). (அல்குர்ஆன்:28:77)

என்னிடம் உள்ள அறிவின் காரணமாகவே இது எனக்குத் தரப்பட்டுள்ளதுஎன்று அவன் கூறினான். “இவனை விட அதிக வலிமையும், ஆள் பலமும் கொண்ட பல தலைமுறையினரை இவனுக்கு முன்பு அல்லாஹ் அழித்திருக்கிறான் என்பதை இவன் அறியவில்லையா? அவர்களின் பாவங்கள் பற்றி இக்குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்:28:78)

தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். “காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான் என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர். (அல்குர்ஆன்:28:79)

உங்களுக்குக் கேடு தான். நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவருக்கு அல்லாஹ்வின் கூலி தான் சிறந்தது. பொறுமையாளர்கள் தவிர மற்றவர்களுக்கு அது வழங்கப்படாது என்று கல்வி வழங்கப்பட்டோர் கூறினார். (அல்குர்ஆன்:28:80)

அவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன் உதவி பெறுபவனாகவும் இல்லை. (அல்குர்ஆன்:28:81)

அந்தோ தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாரளமாகவும் வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அல்லாஹ்  நம்மீது அருள் புரிந்திருக்கா விட்டால் நம்மையும் பூமியில் புதையச் செய்திருப்பான். “அந்தோ! (ஏக இறைவனை) மறுப்போர் வெற்றி பெறமாட்டார்கள் என்று முதல் நாள் அவனது நிலைமைக்கு ஆசைப்பட்டோர் அன்று காலையில் கூறலானார்கள். (அல்குர்ஆன்:28:82)

'சிறிய அளவேனும் தன் உள்ளத்தில் பெருமை கொண்ட ஒருவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்' என்று நபி(ஸல்) கூறினார்கள். அப்போது ஒருவர், ''ஒரு மனிதர் தன் ஆடை அழகாகவும், தன் செருப்பு அழகாகவும் இருந்திட விரும்புகிறார். இது (பெருமையாகுமா?)'' என்று கேட்டார். ''நிச்சயமாக அல்லாஹ், அழகானவன், அழகை விரும்புகிறான். ''பெருமை கொள்வது, சத்தியத்தை நிராகரிப்பதும், மக்களை கேவலமாக எண்ணுவதுமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 612)

''நரக வாசிகள் பற்றி உங்களுக்கு கூறட்டுமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டுவிட்டு, கடின இதயமுடையவரும், கஞ்சத்தனம் செய்பவரும், பெருமை கொள்வோர் ஆகிய அனைவருமாவர் என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹ்பு (ரலி)   அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 614)
                                        
'தன் வேட்டியை பெருமையாக, (கீழிறக்கிக்கட்டி) இழுத்துச் செல்பவனை மறுமை நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 616)

'மூன்று நபர்களுடன் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களை தூய்மைப்படுத்தவும் மாட்டான் அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களுக்கு  கடும் வேதனை உண்டு. 1) விபச்சாரம் செய்யும் வயோதிகன் 2) பொய் கூறும் அரசன் 3) பெருமை கொள்ளும் ஏழை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 617)

'கண்ணியம் என் வேட்டியாகும். பெருமை என் மேலாடையாகும். இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றில் என்னிடம் ஒருவன் தர்க்கம் செய்தால், அவனை நான் தண்டிப்பேன்'' என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 618)

'ஒரு மனிதன் கண்கவர் ஆடையை அணிந்து கொண்டு, தன் தலையை சீவி, பெருமையான நடையுடன் நடந்து சென்றான். அவனை அல்லாஹ் பூமிக்குள் இழுக்கும்படி செய்துவிட்டான். அவன் மறுமை நாள்வரை  பூமிக்குள் அழுந்தி சென்று கொண்டே இருக்கிறான்''  என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 619)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

வருக ரமலானே ! 38

அதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், மே 26, 2016 | , , , , ,

வருக வருகவே வாரித் தருகவே
வான் மறை ஈந்து வாழ்வழி வகுத்த
வளமான மாதமே வருக வருகவே

வான்பிறை ஒன்றில் துவங்கி
வளர்பிறை பாதி தேய்பிறை மீதி
மாதம் முழுவதும்
வேதம் ஒலித்திட வருக வருகவே

பதினோரு மாதங்கள்
புதிரோடு கடக்க
புதிதாக உதிக்கும் ரமலானே
புதிர்களை அவிழ்க்க
விடைகளும் விளங்க வருக வருகவே

பசிப்பிணி உணர பட்டினி அறிய
புசித்திட உணவு பக்கத்தில் இருக்க
படைத்தவன் அருள் வேண்டி
பொறுமையைத் தர வருக வருகவே

தீய சக்திகளைக் கட்டிப்போடவும்
தீனின் கீர்த்திகளை உலகம் போற்றவும்
இரவுகள் யாவும் பிரகாசமாக
இலங்க வைக்கவே வருக வருகவே

தொழுது வணங்கவும் அழுது கேட்கவும்
கேட்டவை யாவும் கூடுதலாய்க் கிடைக்கவும்
அளவற்ற அருளாளனின்
அன்பைப் பொழிந்திட வருக வருகவே

மறுமையில் வரவு வைக்க
இம்மையின் செலவே ஏழைக்கு ஈவது
தர்மத்தை எமக்குக் கடமையாக்கிய
தூய மாதமே வருக வருகவே

பாவக் கறைகளைத் தூரமாக்கிட
மாதம் முழுவதும் நோன்பு நோற்றிட
வாழும் வாழ்க்கையில் அர்த்தம் சேர்த்திட
வான்புகழ் ரமலானே வருக வருகவே!


-v-v-v-v-v-v-v- ரமலான் ஸ்பெஷல் போனஸ் கவிதை -v-v-v-v-v-v-v-

நினைவிருக்கா?

வெட்டிக்குளம் நினைவிருக்கா
வேட்டிகட்டு நினைவிருக்கா
மேற்குத் திசை வானத்தின்
மேகமூட்டம் நினைவிருக்கா

மின்னல் கீற்றைப் போல
வெட்கப் புன்னகை போல
மறைவாகவும் தெளிவாகவும்
முதற்பிறை நினைவிருக்கா

உறைமோர் நினைவிருக்கா
உணவுவகை நினைவிருக்கா
ஊர்முழுக்க ஒலிக்கும்
உபரி வணக்கம் நினைவிருக்கா

இஞ்சித் தேநீர் நினைவிருக்கா
இறைவேதம் நினைவிருக்கா
கொஞ்சம்கொஞ்சம் வாய்ப்பளித்த
ஓதும் சபை நினைவிருக்கா

நள்ளிரவு நினைவிருக்கா
நண்பர்கள் நினைவிருக்கா
பள்ளிவாசல் மைதான
கிளித்தட்டு நினைவிருக்கா

கடந்த காலம் நினைவிருக்கா
செய்த பாவம் நினைவிருக்கா
சென்ற வருட ரமலானில்
செய்த சபதம் நினைவிருக்கா

நல்ல செயல் செய்திடவும்
நல்ல எண்ணம் கொண்டிடவும்
சென்ற வருட ரமலானின்
துவக்க சிந்தனை நினைவிருக்கா

அடுத்தடுத்த மாதங்களில்
அத்தனையும் குறைந்துபோய்
அற்ப உலக ஆசைகளில்
அலைகழிந்தது நினைவிருக்கா

பேரருளாளன் பரிசாக
மேலுமொரு வாய்ப்பாக
இந்த வருட ரமலானை
இன்முகமாய் வரவேற்று

நினைவில் வைத்துக்கொள்ள
நற் செயல்கள் தேர்ந்தெடுப்போம்
எக் கணமும் மறக்காமல்
இறைமார்க்கம் பேணிடுவோம்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

இறைவனிடம் கையேந்துவோம்.. அவன் இல்லையென்று சொல்லுவதில்லை.. 0

அதிரைநிருபர் பதிப்பகம் | புதன், மே 25, 2016 | , , , , , , ,

ஆம்... உண்மை சம்பவம்..

மனது மிகவும் இறுக்கமாக இருந்தது யாருக்காவது இன்று உதவ வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்..

நேற்று லுஹர் தொழுகை ஜமாத்துடன் தொழ இயலவில்லை. தனியாக தொழ நான் வசிக்கும் பள்ளிவாசலுக்கு சென்றேன். பொருளாதார தேவையுடைய நபர் ஒருவரை தொழும் முன் கண்டேன். தொழுதபின் அவருக்கு ஏதாவது பண உதவி செய்ய வேண்டும் என்று ஒரு தொகையும் மனதில் எண்ணினேன்.

தொழுத பின் பார்த்தேன், அந்த தேவையுடைய நபர் இல்லை.  அவரை அடிக்கடி நான் வசிக்கும் பகுதியில் கண்டிருக்கிறேன், ஆனால் அவரின் அலைபேசி எண் எனக்கு தெரியாது. எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. நம்முடைய எண்ணம் நிறைவேறவில்லை என்று..

இருப்பினும் உடனே.. அல்லாஹ்விடம் கையேந்தினேன், "நான் நிய்யத் செய்த உதவி தொகையை தேவையுடைய யாரையாவது எனக்கு அடையாளம் காட்டு யா.. ரப்பே.. " என்று பிரார்த்தனை செய்து மீண்டும் பள்ளிவாசல் உள்ளே சென்றேன்..


அங்கு.. 

நான் ஒரு வருடத்திற்கு மேல் கண்டு வரும் முதியவர். ஒரே ஒரு ஆடையில் மட்டுமே அவரை கண்டிருக்கிறேன்.. பார்க்கும்போதெல்லாம் அல்குர்ஆன் ஓதியவராக இருப்பார். 5 வேலை தொழுபவர், யாரிடமும் யாசகம் கேட்க மாட்டார், வீண் பேச்சு பேசமாட்டார், புன்னகை தழும்பும் முகம், இரு சக்கர மிதி வண்டி ஓட்டுவார், தொழில் 
ஏதும் செய்யாதவர், அவர் சிரியா நாட்டை சேர்ந்த அகதி. இவரை கானும்போது சிரியாவின் நம் மக்கள் கஷ்டங்கள் வந்து கண்கலங்க செய்யும்.

உதவும் முன் நிய்யத் செய்யவேண்டும், இந்த உதவி தேவையுடையவருக்கு சென்றடைய வேண்டும் என்ற படிப்பினையை உணர்த்திய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்..

குறிப்பு: நான் பெற்ற படிப்பினையை உங்களுக்கு பகிர்வதற்காக மட்டுமே இந்த பதிவு.

Thajudeen

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் !!! 1

அதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், மே 24, 2016 | ,


ஆள் வளந்த அளவுக்கு இன்னும் அறிவு வளரவில்லை என்று இந்த சொல்லை நாம் நமது ஊர்களில் வசிப்பிடங்களில் பெரியோர்கள் பிறருக்கு புத்திமதி சொல்லும்போது காதில் கேட்டிருப்போம். அதாவது சாதாரணமாக சிலகாரியங்களை செய்யும்போது யோசிக்காமல் தவறுதலாக செய்து விடுவது அல்லது ஒரு செயலின் பின்விளைவுகளை நினைத்துப் பார்க்காமல் செய்துவிட்டு பிறகு வருத்தப்படுவது இதுபோன்ற அறிவைப் பயன்படுத்தாமல் செய்யும் தவறுகளை செய்பவர்களிடத்தில் தான் பெரும்பாலும் இந்த வார்த்தையை உபயோகிப்பார்கள். 

இவ்வுலக வாழ்க்கைக்கு பலவிதத்திலும் அறிவை வளர்த்துக் கொள்வது மிகமிக அவசியமாக இருக்கிறது. அறிவை வளர்த்துக் கொள்வதால் எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அல்லது ஒரு திட்டத்தை நடைமுறை படுத்தவேண்டுமென்றாலும் அறிவு அவசியப்படுகிறது அறிவோடு யோசித்து செய்யும் காரியங்கள் யாவும் திறம்பட உறுதியாகவும் நிலையானதாகவும் இருக்கும்.

இதற்க்கு உதாரணமாக சொல்லப் போனால் சில இளைஞர்கள் படிப்பில் முதல் மாணவனாக திகழ்ந்து பெரிய படிப்பெல்லாம் படித்து பட்டம் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் படிக்காத ஒருவர் அவருக்கு அறிவுரை வழங்குவார். இப்படி நடக்கணும் இப்படிச் செய்யணும் என்ன தம்பி நீங்க பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கீங்க ஆளும் நல்லா வாட்ட சாட்டமா வளர்ந்திருக்கீங்க. ஆனால் ஆளு வளர்ந்த அளவுக்கு அறிவு வளரலையே தம்பி என்று சொல்வார்கள். இந்த இடத்தில் அறிவுதான் முதலிடம் பெறுகிறது. 

அது மட்டுமல்ல சில பிரச்சனைகளும் சில காரியங்களும் அறிவைச் சார்ந்து யோசித்துதான் சுமூகத் தீர்வு காணப்படுகிறது. நாம் நமது வாழ்விலும் அறிவோடு செயல்படாத எத்தனையோ பல விஷயங்களில் தோல்வியை சந்தித்து அனுபவப்பட்டு  இருப்போம். பிறகு உணர்ந்து அறிவோடு செயல்பட்டு வெற்றி கண்டிருப்போம்.

எந்த ஒரு காரியமும் அறிவோடு சிந்தித்து செய்வதால் அதில் பாதிப்போ தோல்வியோ பின்விளைவுகளோ ஏற்பட பெரும்பாலும் வாய்ப்பில்லை.அறிவோடு சேர்ந்து செயல்படும்போது எது நல்லது எது கேட்டது என்று தீர்க்கமாக தெரியமுடிகிறது. பிறகு நல்லமுடிவை நாம் தேர்ந்தெடுத்து பிரச்சனையில்லாமல் மகிழ்வுடன் வாழ வழிவகுக்கிறது.

அறிவோடு சிந்தித்து செயல்படும்போது எல்லாகாரியங்களுக்கும் சுமூகதீர்வு கிடைப்பதுடன்  நமது வாழ்க்கையை முன்னேற்றப் பாதையின்பக்கம் கொண்டு செல்ல பயனுள்ள ஒரு ஆயுதமாக பெரிதும் உதவியாக இருக்கிறது.  
இப்படி பலவகையிலும் அறிவை பயன்படுத்தித் தான் இவ்வுலக வாழ்க்கையை வாழவேண்டி உள்ளது. எனவே ஒவ்வொரு விஷயங்களையும் அறிந்து கொள்ள அதில் தனது திறமையை வெளிப்படுத்த அறிவை தெளிவு படுத்திக் கொள்ளவேண்டும். அப்படி அறிவு தெளிவாகாமல் நாம் இருந்தோமேயானால் நாம் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு இல்லாதவனென்றும் மூளை வளர்ச்சி இல்லாதவனென்றும் சமூகமக்கள் மூளைக்கு மூளை பேசிக் கொண்டிருப்பார்கள்.

அதிரை மெய்சா

நோம்பு வருது.... 2

அதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், மே 23, 2016 | , ,

இஸ்லாமிய மாத வரிசையில்
ஒன்பதாம் மாதமாம் உன்னதமாய்
சங்கைமிகு ரமளானும் நம்மை
சீராட்டி இறைப்புகழ் பாராட்ட வருது

தெளிவாக வானம் தென்பட்டாலும்
தெரியாமல் போன அப்பிறையை
இலங்கை ரேடியோ கண்டெடுக்கும்

அதனால் நோன்பும் ஊரில் ஆரம்பமாகும்
முதற்பிறையை கண்டதுமே
எம் முகமலர்ச்சி பெற்றிடுமே
பெரியவர் சிறியவருக்கெல்லாம்

பெரும் மகிழ்ச்சி வந்திடுமே
பிறையைக்காணும் முன்னே
நம் வீட்டு பெண்டிரும்
ஒரு மாத தேவைகளை

அது வருமுன்னே செய்திடுவர்
வீட்டை கழுவி ஒட்டடை அடித்து
மாவிடித்து பூபோல் வறுத்தெடுத்து
வீட்டு ஆண்களின் அகம்புறம் குளிர

அனைத்தையும் செய்து வைப்பர்.
பள்ளிகளெல்லாம் வெள்ளையடித்து
தன்னழகை மெரு கூட்டி நிற்கும்
காற்றில் கரைந்து வரும் பாங்கின்ஒலி

தொழுகைக்கு நம்மை தயார் படுத்தும்
கஞ்சி கீற்று கொட்டகையிடம்
பிஞ்சு உள்ளம் கெஞ்சிக்கேட்டிடும்
இன்னும் பதினொறு மாதங்களும்

நீ பள்ளியிலேயே தங்கிடுவாயாவென.
நோன்பு கால தண்ணீர் தாகம்
வீம்பின்றி பொறுமை கொள்ளும்
பசிகளெல்லாம் பறந்து போகும்

நோன்பு திறக்கும் சமயத்தை எண்ணி.
கண்சிவக்க குளித்து வந்த குளக்கரையும்
உள்ளம் குளிர உம்மா தந்த சர்பத்தும்
பார்வையால் உண்டுமகிழும் பதார்த்தங்கள்

பசித்தலால் உருவாகும் பல ருசித்தல்கள்
பள்ளிவாசல் நஹராவோ
பகல்நேர சூரியக்குளியல் எடுக்கும்
பகலவன் மறையும் மக்ரிபில்

இடிமுழக்கமென ஊருக்கு பறைசாற்றும்
ஆங்காங்கே வாடா,சம்சா கடைகள்
திடீர் காளானாய் முளைத்து நிற்கும்
வாடாவில் புதையுண்ட இறாலை

கண் பார்வை பெயர்த்தெடுக்கும்
இராக்கால வீண் விளையாட்டு
போர்க்களம் போல் நடந்தேறும்
தேவையற்ற தெரு சண்டைகளும்

தேடாமல் தெருவுக்கு வந்து சேரும்
தலை நோன்பில் கொடுத்த சீனி சோறு
நினைக்கும்பொழுதெல்லாம் தித்திக்கும்
சில்லரையில் நிறையும் சட்டைப்பை

நிறைமாத கர்ப்பிணியாய் வழிந்திருக்கும்
முதல் நாள் ஆசையாய் தொழுத தராவீஹும்
இரண்டாம் நாள் ஆசையே மோசம் செய்யும்
மூன்றாம் நாள் இடுப்பொடிந்த கிழவன் போல்

அமர்ந்து கொண்டே நார்சாவுக்கு நேரம் கடத்தும்
அட்டூழியம் புரியும் சைத்தான்கள் கட்டப்பட்டு
கபடியும்,கிளித்தட்டும் கட்டவிழ்த்துவிடப்படும்
இராக்கால வணக்க வழிபாடாய் உள்ளம்

தவறாக வீண்விளையாட்டை புரிந்துகொள்ளும்
பவுடர் போட்ட கேரம் போர்டில்
கருப்புவெள்ளையை சிகப்பு விரட்டும்
குழிக்குள் விழும் காய்களோ

குழந்தையாய் தொட்டில் உறங்கும்
அதிகாலையிலிருந்து அமைதியுற்ற இதயம்
அஸருக்குப்பின் அங்குமிங்கும் அலைபாயும்
வாடா,சம்சா வேண்டியதை சேமித்து வைக்கும்

வாங்கி வரும் வரை கஞ்சியும் காத்திருக்கும்
பேரீத்தம்பழம் கிடைத்து உள்ளம் பேரானந்தமடையும்
அதன் கொட்டை எடுக்க கைகள் பட்டை தீட்டும்
பசியின் உச்சத்தில் நோன்புதிறக்க ஓதும் து'ஆவும்

ஏனோ மறந்து போகும் பாதியில் மறைந்து போகும்
கஞ்சி குடிக்கும் முன் உள்ளம்
பசியில் கோட்டை கட்டும்
குடித்ததுமே ஆசையில் சேமித்தவை எல்லாம்

அடுத்த நாள் வேலைக்காரிக்கு போய் சேரும்
திருக்குர்'ஆனும் சிறப்புடன் ஓதி முடித்து
பள்ளிகளை வண்ண விளக்குகளால் அலங்கரித்து
வருவோருக்கு நல்ல நாக்கு ருசியாய் நார்சாவும்

நிரப்பமாய் வந்து சேரும் வயிறுண்டு வாழ்த்தும்
முதல் பத்தில் உள்ளம் சிறு மூச்சு விடும்
இரண்டாம் பத்தில் அரை கடலை தாண்டும்
மூன்றாம் பத்தில் பெருநாளுக்கு தயாராகும்

முடிவில் வேதனையுடன் ஆனந்தமடையும்
ஏழைகளின் ஏக்கம் தீர்ந்து காசும் சேரும்
பயனடைந்தவர்களின் உள்ளமோ இன்னும்
பன்னிரண்டு மாதமும் ரமளானை வேண்டும்

இராப்பகலாய் ரஹ்மத்தும் ரஹ்மானிடமிருந்து வந்துசேரும் காலஞ்சென்ற ரமளான் நினைவுகளை கண்முன்னே கொண்டு வந்தேன்.

இன்னும் இரு மாதங்களில் புதுக்குழந்தையாய் பிறக்க இருக்கும் புனித ரமளானே! நீ எங்களுக்கு வாழ்வில் பரக்கத்தும், ரஹ்மத்தும் தந்து எஞ்சி இருக்கும் எம் வாழ்நாட்களை இனிமையாக்கி இறுதியில் இன்முகத்துடன் இறைவனடி வந்து சேர உன்னையும், என்னையும் படைத்த அந்த வல்லோனிடம் இறைஞ்சிடுவாயா!

என புதுக்குழந்தையாய் பிறக்க இருக்கும் ரமளானை பாசத்துடன் கேட்டுக்கொண்டவனாக..

இனிய நினைவுகள் தொடரும் இன்ஷா அல்லாஹ் இறைவன் அதற்கு வாய்ப்புகள் கொடுக்கும் வரை.....

மு.செ.மு. நெய்னா முஹம்மது

படிக்கட்டுகள் - 22 7

அதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, மே 22, 2016 | , , ,

தலைமைத்துவம் [Leadership]  என்பது ஏதோ கட்சிக்கும், நிறுவனங்களுக்கும் , ஏதோ ஒரு குழுவுக்கும் என்றோடு இல்லாமல் தலைமைத்துவம் என்பது நம் வாழ்வில் நிழல்போல் வரக்கூடிய ஒர் தன்மை.

ஒரு மனிதனின் தலைமைத்துவத்தின் தொடக்கம் அவனது மனைவியின் அங்கீகாரத்தில் ஆரம்பிக்கிறது. கல்யாணமான புதிதில் தான் ஒரு ஹீரோ என சொல்கிறமாதிரி நடப்பதை [அல்லது நடிப்பதை]நம்ப ஆரம்பிக்கும் மனைவியிடம் அங்கீகாரத்திற்கு மனிதன் தன்னை சில கஷ்டங்களுக்கும் உட்படுத்தி தன் சாதனையை நிலை நாட்ட ஆரம்பிக்கிறான். சிலர் முயற்சிகள் அற்றுப்போய் 'காமெடி பீஸ்" மாதிரி  நடக்க ஆரம்பித்தவுடன்  'என்ன நீங்க சொன்ன மாதிரி நடந்துக்க தெரியலையே' என்று என்று சொல்லும்போதே தலைமைத்துவத்தின் ஆணிவேரில் ஹைட்ரோகுலோரிக் ஆசிட் ஊற்றப்படுகிறது என்று அர்த்தம். 

சில சமயங்களில் குடும்பத்தில் நீங்கள் பெரிதாக நம்பியிருக்கும் சிலர் பேசுவதை எதிர் கொள்ளும்போது அந்த வார சீரியல் 'தொடரும்" போடும் போது உறைந்து நிற்கும் கேரக்டர் மாதிரி பல சமயங்கள் உங்களுக்கு கிடைக்கும். இதெற்கெல்லாம் கலங்கி நிற்பது ஒரு நல்ல லீடர்ஷிப் குவாலிட்டி அல்ல.இது தெரியாமல் அல்லது புரிந்து கொள்ளாமல் 'ஙே" என்று விழிக்க ஆரம்பித்தால்  கால ஒட்டத்தில் "ஒப்புக்கு" அழைக்கப்படும் பெரியவர்கள் லிஸ்ட்டில் மட்டும்தான் நம் பெயர் இருக்கும். குடும்பத்தில் எடுக்கப்படும் பல முடிவுகளை நீங்கள் கேள்விப்படும் நேரத்தில் அந்த முடிவுகள். முடிவுக்கே வந்திருக்கும்.

இது உங்களை பயங்காட்டும் ட்ரைலர் அல்ல. "தூங்காத நிலை" என்று ஒரு நிலை வாழ்க்கையில் இருக்கிறது. மனிதன் படுத்து தூங்கும் செயலுக்கும் இதற்கும் புலிமார்க் சீயக்காய்தூளுக்கும் புலிக்கும் உள்ள சம்பந்தம்தான் அது. இதை சிலர் மதத்தோடு சேர்த்து கோடி கோடியாக பணம் பன்றாங்க. இதைப்பற்றி வேறு சமயத்தில் விவாதிக்கலாம்.

Qualities of Good Leaders. 

வாழ்க்கையில் எப்போதும் உற்சாகம் குறையாமல் இருப்பார்கள். சரி இவர்களுக்கு சோகமே வராதா என நீங்கள் நினைக்களாம் , வரும்..ஆனால் ஒரு சராசரி மனிதனுக்கு எப்போது பார்த்தாலும் எதிலும் சோகமாய் வந்து கொட்டும் சோகம் அவர்களிடம் இருக்காது. சோகமான நிகழ்வுகளிலும் 'இதிலும் நான் ஏதோ கற்றுக்கொள்ள தான் இறைவன் இந்த சோதனையை எனக்கு தந்து இருக்கிறான்' என்று ஏற்றுக்கொள்வார்கள். 
 
      Leadership by ACTION, not by Position:  

எங்கும், எதிலும் இப்போது உள்ள சமுதாயம் தனக்கு செய்தி தெரிவிக்கப்படுகிறதா என்பதில் கவனமாக இருக்கிறது. இதை விட்டு 'பெரியவங்க செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும்" என்ற கி.மு வில் உள்ள விசயங்களை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. எப்படி சரியாக இருக்கும் என்ற விளக்கமும் இப்போது உள்ள சமுதாயத்துக்கு கிடைக்க வேண்டும். அப்படியானால் தலைமைத்துவம் என்பது "எனக்கு தெரியாததா...எத்தனை வருசங்களை கடந்து வந்திருப்பேன்" என்ற ஸ்டேட்மென்ட் அவ்வளவு எடுபடாமல் இன்றைவரை அதற்காக உங்கள் செயல்பாடு என்பது என்ன என்பதில்தான் இருக்கிறது. அதனால்தான் தொடர்ந்து செயலிழந்து போன தலைவர்கள் குடும்பமாக இருந்தாலும் சரி, நிறுவனமாக இருந்தாலும் சரி இயற்கையாகவே ஓரங்கட்டப்படுகிறார்கள்.

கற்றுக்கொள்ளும் அறிவுத்தாகம் என்பது ஒரு நல்ல தலைவனின் தரம் சார்ந்தது. உங்கள் நிறுவனத்தில் நீங்கள் தலைவரா...சாதாரண ஊழியரிடம் கூட ஒரு நல்ல விசயத்தை கற்றுக்கொள்ள தயங்கவேண்டாம். அப்படியே கற்றுக்கொண்டாலும்  உங்கள் இமேஜ் உயரும், அதைவிட டாப் மேனேஜ்மென்ட்டுக்கும் ,கடை நிலை ஊழியருக்கும் உள்ள உறவு இன்னும் பலப்படும். இதனால் எதிர்காலத்தில் வரும் விரிசல்கள் சரி செய்ய இந்த உறவுப்பாலம் உதவியாக இருக்கும். இதற்குத்தான் ஒரு மிகப்பெரிய மந்திரச்சொல் என்று ஒன்று உண்டு அது. I need your help?.... எவ்வளவு பெரிய கோபக்காரனையும் உங்களுக்கு சாதகமாக்க இந்த ஆரம்ப வார்த்தைகள் உதவியாக இருக்கும். குடும்பங்களிலும் அப்படித்தான், வெகுநாட்களாக ஒத்துவராத அண்ணன் , தம்பி பிரிவில் கூட  மனசங்கடங்கள் வரும் சூழ்நிலையில்' எனக்கு ஏன் நீ உதவி செய்யக்கூடாது ? ' என்று கேட்டு விட்டால் இன்னும் உறவு கெடாமல் காப்பாற்றப்படலாம்.  

ஒரு சிறந்த தலைமத்துவத்தில் இருக்கும் ஒரு மனிதன் எப்போதும் நிஜத்தோடு ஒன்றியிருப்பான் [Being relevant] எப்போது பார்த்தாலும் பழையபுராணம், டெலிஃபோன் எக்ஸேஞ்சில் ஒயரை கழட்டி மாட்டி கனெக்சன் கொடுத்த டெலிபோன் காலத்தில் சாதித்தையெல்லாம் இப்போது உள்ள கேலக்ஸி நோட் சமுதாயத்துடன் கதைத்துகொண்டு [ அதையும் அவர்கள் காது கொடுத்துதான் கேட்கிறார்கள் என்று நம்பி] தன்னை ஒரு தலைவராகவே கற்பனையில் வளம் வருவது அரசியல் கட்சிகள் ஊழலை ஒழிக்கப்போகிறேன் என்று சொல்வதுமாதிரி 'ஒட்டாத உண்மை".

ஒரு சிறந்த தலைவருக்கான தரங்களில் ஒன்று எப்போதும் பொறுப்பு எடுத்துக்கொள்வது. 'நான் உண்டு என்வேலை உண்டுனு இருப்பேன் பேர்வழிகள்' இந்த லிஸ்டில் வராது. காரணம் இப்படி தன்வேலையை மட்டும் பார்த்து, தன் குடும்பம் என்று  மட்டும் வாழ்ந்தவர்களால் மற்றவர்களின் கஷ்டங்களை ஆழமாக புரிந்து கொள்ள முடியாது.

ஒரு நிறுவனத்தில் ஒரு சேல்ஸ்மேனின் கஷ்டம் எது என்று தெரிந்தால்தான் அந்த தலைவர் விற்பனையை எப்படி அதிகரிக்க முடியும் என யோசிக்க முடியும். இல்லாவிட்டால் பண்டிகை நேரங்களில் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டில் பொருள்களை அனுப்ப அட்டு ஐடியா கொடுக்க நேரிடலாம்.

ஒரு தலைவனாக இருக்க முதலில் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று காது கொடுத்து கேட்கும் தன்மை முதலில் இருக்க வேண்டும். அதனால்தான் இரண்டு காது , ஒரு நாக்கு கொடுத்திருக்கிறான் இறைவன் என்ற சொல்லே இருக்கிறது. சிலர் ஒரு நாக்கை வைத்து , அதற்குள் பிளேடு, அரிவாள் எல்லாம் எக்ஸ்ட்ரா பிட்டிங்க் செய்து பல குடும்பத்தில் குழப்பத்தையும், பல ஆட்களின் சோற்றில் மண் அள்ளிப்போடும் வேலையை செவ்வனே செய்து வருகிறார்கள். பின் காலத்தில் கஷ்டம் என்று வந்தவுடன்.."எனக்கு ஏன் இப்படி?" என்று யோசிக்கும் இவர்கள். 'நான் எப்படி?" என்று யோசிப்பதே இல்லை.  சரியாக காது கொடுத்து கேட்காமல் தான் வைத்ததுதான் சட்டம், அறிந்தது அறியாதது அனைத்தும் அறிவோம் என்று நடந்தால் சீக்கிரம் படமாக தொங்கிவிடுவோம்.

உங்களிடம் சரியான தலைமைத்துவம் இருக்கிறதா என்பதின் முதல் படிகளில் ஒன்று . "கெளரவம்" இது அகந்தை அல்ல. 'இந்த மாதிரி கேவலமான வேலையெல்லாம் இந்த ஆள் செய்ய மாட்டான்" என்று சமூகம் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு உங்கள் நடத்தை இருந்தால் அதற்கு கிடைப்பதுதான் கெளரவம்.

தலைமத்துவத்தில் உங்களுக்கென்று தனிவழி வைத்துக்கொள்ளலாம். ஆனால் அது தேவைப்பட்ட ரிசல்ட்டை கொடுக்கவில்லை என்றால் அந்த தனிவழியை காரணம் காட்டியே நிறைய 'துப்பு" வாங்களாம். பெரிசா கிழிக்கிறதா சொன்னே" யிலிருந்து நீங்கள் கஷ்டப்பட்டு படித்த டிகிரியை முதற்கொண்டு உங்களின் ஃபைலை திறக்காமல் எடுத்து வந்து துப்புவார்கள். இதன் அளவு ரிசல்ட்டை பொறுத்து...நீங்கள் சொன்ன தனிவழி குறைவாக ரிசல்ட் தந்தால் திட்டோடு அட்வைசும், எதிர்மறையான ரிசல்ட்டுக்கு எக்கச்சக்கமான துப்பும் கிடைப்பது கியாரன்டி.

தலைமத்துவ குணங்களில் முக்கியமானவை: தனிப்பட்ட விறுப்பு வெறுப்பு இல்லாமல் எந்த மனிதரையும் எந்த பிரச்சினையும் அனுகுகுவது. எப்போது தனிப்பட்ட விறுப்பு / வெறுப்பு இருக்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் தீர்ப்பும் இருக்கும். பிரச்சினைகளின் தீவிரத்தை கண்டுபிடித்து அதற்கு தகுந்தாற்போல் சிந்திப்பதுதான் நல்லது.

இன்னும் மிகச்சிறந்த தலைமைத்துவங்களில் ஒன்று, தனக்கு பின்னும் இன்னொருவர் இருக்கிறார் என்று சொல்லுமளவுக்கு மற்றவருக்கு பயிற்சிதருவது.

மேற்ச்சொன்ன அனைத்தையும் ஏதோ பிஸினஸ் சம்பந்தப்பட்டது என மட்டும் நினைக்காமல் ஓவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பயன்படுத்த முடியும்.   தெரிந்து கொள்வதை விட நாம் எப்படி என்று  Self Analysis  செய்து கொள்வது நல்லது. தொழிலிலும் / குடும்பத்திலும்.

ZAKIR HUSSAIN


உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு