நேற்று (5-செப்டம்பர்-2013) அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்தது.

கிராத் ஓதியதற்குப் பிறகு தமிழ்த்துறைத் தலைவர் அஜ்முதீன் அவர்கள் சிறப்பான வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சிகளை தமிழ்த்துறையின் உதவி ஆசிரியர் உமர் பாரூக் அவர்கள் இனிய கவிதையில் தொகுத்து வழங்கினார்.
வரவேற்ரபுரையைத் தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹாஜி மஹ்பூப் அலி அவர்கள் தலைமை உரை ஆற்றினார். அவர் தமது உரையில் அதிரை நிருபர் இணைய தளத்தின் நன்றி பாராட்டும் செயல்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கும் அன்புக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். அத்துடன் பள்ளியின் முன்னேற்றத்துக்காக உதவ நினைக்கும் அனைத்து தரப்பினரின் உதவிகளையும் நாடுவதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதைத்தொடர்ந்து பள்ளியின் உதவித்தலைமை ஆசிரியர் ஜனாப். ஹாஜி முகமது அவர்கள் பள்ளியின் சாதனைப் பட்டியலை வாசித்தார். மாணவர்களின் வெற்றி விகிதம் மற்றும் தனிப்பட்ட ஆசிரியர்களின் சாதனைகளை அவர் குறிப்பிட்ட போது மாணவர்களின் கரவொலி விண்ணைப் பிளந்ததது.
தொடர்ந்து வாழ்த்துரை ஆரம்பமானது. பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஹாஜி ஹாஜா முகைதீன் அவர்கள் தனது வாழ்த்துரையில் இனிய தமிழில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இருக்க வேண்டிய நல்ல உறவின் முக்கியத்துவம் பற்றியும் டாக்டர் ராதா கிருஷ்ணன் அவர்களின் வாழ்வின் சாதனைச் சம்பவங்களையும் குறிப்பிட்டார்.
அதனைத்தொடர்ந்து இணைய தள எழுத்தாளரும் அதிரைநிருபர் வலைத்தளத்தின் மூத்த பங்களிப்பாளருமான அ.இப்ராஹீம் அன்சாரி அவர்கள் சிறப்புரையை ஆற்றினார். அவர் தமது உரையில் தனது பள்ளி வாழ்வின் சில ஆசிரியர்களையும் குறிப்பாக விழாவுக்கு வருகை தந்த திரு. ரங்கராஜன் சார் அவர்களைப் பற்றியும் பாராட்டிப் பேசி தனக்கு வழங்கப் பட்ட நினைவுப் பரிசை திரு ரங்கராஜன் சார் அவர்களுக்கு அணிவித்து அனைவரையும் மகிழச்செய்தார். நெகிழ்ச்செய்தார். மாணவர்களிடம் கல்வி, முயற்சி, இறைவனின் அருள் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமைந்தால் வெற்றி பெறலாம் என்பதை குறிப்பிட்டார்.
பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட பட்டி மன்றப் பேச்சாளர் சகோதரர் அண்ணா சிங்கார வேலு அவர்கள் தனக்கே உரித்த்தான நகைச்சுவை மற்றும் சிந்திக்கவைத்த செய்திகளால் மாணவர்களின் உற்சாக கரகோஷத்தை பெற்றார்.
அதிரைநிருபர் வலைதளத்தால் கவுரவித்து வழங்கப் பட்ட “நபிகள் நாயகம்” என்கிற வரலாற்று நூலையும் நினை வுப் பரிசையும் ஆசிரிய ஆசிரியைகளுக்கு முத்த பங்களிப்பாளர் அ.இப்ராகிம் அன்சாரி வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் அதிரை அறிஞர் பன்னூலாசிரியர் அதிரை அகமது, பேராசிரியர் அப்துல் காதர், கணிணி தமிழ் அறிஞர் ஜமீல் M.ஸாலிஹ், மூத்த சகோதரர் S.முகமது பாரூக். நாவலர் நூர் முகமது, பெற்றோர் சங்க தலைவர் செய்யது, எல்.எம்.எஸ். அபூபக்கர், ஷேக்கனா நிஜாம், ஆகியோரும் முன்னாள் ஆசிரியர்கள் ரங்கராஜன் மற்றும் ஹனிபா சார் அவர்களும் கலந்துகொண்டார்கள். காதிர் முகைதீன் கல்லூரியின் துணை முதல்வர் ஜனாப். உதுமான் முகைதீன் அவர்களின் வருகையும் குறிப்பிடத்தக்கது. ஏராளமான பொது மக்களும் வருகை தந்திருந்தனர்.
நிகழ்ச்சிகளை மீடியா மேஜிக் சகோதரர் நிஜாம் அவர்கள் அதிரைநிருபர் சார்பாக பதிவு செய்தார்கள்.
ஆசிரியர் தினம் பற்றிய கவிஞர் சபீர் அவர்களின் கவிதை படி எடுத்து அனைவருக்கும் வழங்கப் பட்டது.
நன்றியுரை மற்றும் நாட்டுப்பண்ணுக்குப் பின் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
மிகவும் உணர்ச்சிகரமான இந்த நிகழ்ச்சி ஒரு பெரும் ஊக்கமாக அமைந்தது என்று அனைவரும் போற்றினர்.
நிகழ்வுகளின் காணொளி விரைவில் பதிக்கப்படும் இன்ஷா அல்லாஹ் !
அதிரைநிருபர் பதிப்பகம்