ஒரு காலத்தில் நம் ஊரில் ஒரே குத்பா தான் இருந்தது. வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் தெருப்பாகுபாடு இல்லாமல் எவ்வளவு தூரமாக இருந்தாலும் ஜும்மா தொழுகைக்காக ஓரிடத்தில் ஒன்று கூடினோம். பல தெரு மக்களையும், பள்ளி நண்பர்கள், தெரு நண்பர்கள், குடும்ப உறவினர்கள் மற்றும் அறிமுகமானவர்கள் எல்லோரையும் ஓரிடத்தில் ஒரே சமயத்தில் பார்க்க, பேச வாய்ப்புகள் கிடைத்தன. ஊர்த்தகவல்களும் அங்கே பரிமாறப்பட்டன. ஆனால் இன்று நம்ம ஊர் மக்களின் குடியிறுப்புகள் நம் ஊர் எல்லையைத்தாண்டி சென்று கொண்டிருப்பதால் நாம் தற்சமயம் ஒன்றுக்கும் மேல் ஜும்மாப்பள்ளிகளைப் பெற்றிருக்கின்றோம் குறைகள் இல்லை அல்ஹம்துலில்லாஹ்.
ஒரு நேரத்தில் உடல் உழைப்பிற்கு அதிக வாய்ப்புகள் நம் அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றியிருந்தது. கொஞ்சம் தூரமான இடங்களுக்கு செல்வதாக இருந்தால் சைக்கிள் பயன்படுத்தப்பட்டது.
நம் துணிமணிகளை நாமே துவைத்துக்கொண்டோம். (அழுக்குத்துணிமணிகளை வண்டி நிறைய கொண்டு வந்து வெட்டிய பார் சோப்பு மூலம் குளக்கரையில் நஹரா அடித்து நுரை வெள்ளத்தில் மிதக்கச்செய்தோம்.)
வீட்டில் பெண்கள் வீட்டை சுத்தம் செய்வது, குடகல்லில் மாவு அரைப்பது, அம்மியில் மசாலா அரைப்பது (பெருநாளைக்கு மருவண்டி அரைப்பது), வீட்டின் கிணற்றில் தண்ணீர் எடுத்து வீட்டு உபயோகத்திற்கு நிறப்பி வைப்பது, துணி கழுவுவது, வீடு கழுவுவது, ஒட்டடை அடிப்பது, தேங்காய் உரிப்பது இறுதியில் தன் வியர்வையை அன்றாடம் உடலிலிருந்து வெளிக்கொண்டு வர எதையாவது செய்து கொண்டிருந்தார்கள். அதனால் கொடிய நோய் நெடிகளிலிருந்தும், கொலஸ்ட்ரால் தொல்லைகளிருந்தும் ஓரளவு பாதுகாப்பை பெற்று வந்தார்கள். ஆனால் இன்றோ எல்லாம் இயந்திரமயமாகி விட்டது. அவர்களுக்கு நிரந்தர ஓய்வு கொடுக்கப்பட்டும் விட்டது. இதனால் பல உடல் உபாதைகளுக்கு ஆளாகி சிறு வயதிலிருந்தே அவஸ்தைபட்டு வருகிறார்கள்.
எங்கிருந்தோ விருந்துகள் வந்து விடுகின்றன ஆனால் அதற்கேற்ற உடல் உழைப்பு வருவதில்லை. வெறுமனே சோம்பலும், சோர்வும் மட்டும் வந்து விடுகிறது. கடப்பாசியும், வட்லப்பமும் கண்முன்னே வந்து நிற்கிறது.
ஒரு நேரத்தில் நம் ஊரில் ஆட்டோக்கள் இல்லாது ஆரோக்கியமாய் ஊரைச்சுற்றி வந்தோம். இன்று ஆட்டோக்கள் அதிகமாகி ஆஸ்பத்திரியைச்சுற்றி வருகிறோம்.
ஆண்கள் தன் வீட்டின் கொல்லைப்புறத்தில் கடைத்தெரு இருந்தாலும் அதற்கு கூட இரு சக்கர வாகனத்தில் தான் சென்று வரக்கூடிய மனோபாவத்தில் இருக்கின்றோம்.
மாலை நேரங்களில் பள்ளி சென்று வந்ததும் விளையாடுவதற்கு கா.மு. கல்லூரி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,ஐ.டி.ஐ., ஷிஃபா மருத்துவமனை பின்புறம் போன்ற பரந்த திடல்கள் இருந்தன. பெரியவர், சிறியவர் வயது வித்தியாசமின்றி விளையாடி வந்தோம். அதில் ஆரோக்கியம் கண்டோம். ஆனால் இன்றோ விளையாட சிறு இடம் இருந்தால் கூட நில உரிமையாளருக்கு சர்பதிவாளர் அலுவலகமும், பத்திரச்செலவுகளும் தான் அடிக்கடி ஞாபகத்துக்கு வரும். (அதுவும் பெண் பிள்ளைகளைப்பெற்றவராக இருந்தால் அதே சிந்தனையில் இருப்பார். காரணம் நம்ம ஊர் சூழ்நிலை அப்படித்தான் உள்ளது).
அந்த காலத்தில் பெரிய,பெரிய வீடுகளை கட்டி பரந்த நிலங்களை எப்படித்தான் வாங்கினார்களோ? இன்றைய சூழ்நிலையுடன் ஒப்பிட்டு ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. காரணம் போட்டியும், விலைவாசி உயர்வும், பொருளாதார நெருக்கடிகளும் உள்ள இக்காலச்சூழ்நிலையில் வாங்கும் ஒரு மாத சம்பளத்தில் ஒரு ஜன்னல் கூட வைக்க முடியாத நிலை தான் பரவலாக உள்ளது.
பொருளாதார தேவைகளுக்காக உலகில் எங்கெங்கோ சென்று விட்டோம். ஆனால் சொந்த ஊரில் குடும்பத்துடன் வாழ்வதை தொலைத்து விட்டோம். ஊரில் பம்பரம், பட்டம், பளிங்கு (பேந்தா, வட்டக்கோடு, பேக்கடி), கிட்டிக்கம்பு, கயிறு ரயில் வண்டி, நுங்கு கோம்பையில் செய்த வண்டி, டயரு வண்டி, தொட்டு விளையாட்டு, கண்டு விளையாட்டு, கண்ணாமூச்சி, பேபே, சில்கோடு, கலிச்சிக்கா(பெண்களுக்கான சிறப்பு விளையாட்டுக்கள்) தொலைந்தது போல் வாலிபத்தையும் எங்கோ தொலைத்து விட்டோம்.
'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்ற பழமொழியை 'போதாதென்ற மனமே பணக்காரனாய் ஆக மருந்து' என்று புதுமொழியாக்கினோம்.
சென்ற வருட ரமளானைப்பார்த்தவர்கள் இன்றில்லை நம்முடன். இந்த ரமளானைப்பார்க்கும் நாம் இன்ஷா அல்லாஹ் அடுத்த ரமளானில் எங்கிருப்போம் என்பது தெரியவில்லை. எனவே காலஞ்சென்றவர்களுக்காகவும், மீதமிருப்பவர்களுக்காகவும் எம்மால் இயன்றளவு ஈருலக நன்மைகள் கருதி து'ஆச்செய்வோம்...
தலைப்புக்கும் அதன் கீழே சொல்ல வந்த விசயத்திற்கும் சம்மந்தமில்லாமல் இருக்கலாம். மேலே கூறப்பட்ட கருத்துக்களில் தவறேதும் இருக்காது என நம்புகிறேன். ஒரு மாறுதலுக்காக அத்தலைப்பிட்டேன். உங்கள் அன்பான மற்றும் மேலான கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்...
மு.செ.மு. நெய்னா முஹம்மது.


