நமதூரில் அண்மைக் காலத்தில் நடந்த இருவேறு நிகழ்வுகள் பற்றிச் சிந்தனையை மனத்துள் ஓடவிட்டேன். அவற்றுள் ஒன்றைப் பற்றிக் கேட்டு உவகையுற்றேன்; மற்றொன்றைப் பற்றி அறிந்து மனம் வருந்தினேன். அவை, இவைதான்:
அதிரை ஈசிஆர் சாலை வழியாக அதிவேகமாக நாகப்பட்டினத்திலிருந்து சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டைக்கு செல்லும் பொழுது நாய் காருக்கு குறுக்கே புகுந்ததால் திடீரென்று பிரேக் பிடிக்கும்பொழுது வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. இதில் ஜோதினி என்ற ஆறு மாத பெண் குழந்தை மற்றும் பொறியியல் கல்லூரி மாணவியான சூர்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் வாகனத்தில் பயணம் செய்த மற்றவர்கள் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் என்று முதல் கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது..
இது குறித்து, தகவலறிந்த அதிரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதிரை அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்து அதிரை காவல் துறை அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்வில், நம் சமுதாய அமைப்புகளின் செயல் வீரர்கள் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், சமூக சேவையில் ஈடுபட்டு, உள்ளூர் காவல்துறையை எதிர்பார்க்காமலும், அவர்கள் வந்த பின்னர் அவர்களுக்குத் துணை நின்றும், காயமுற்றோரை உடனடியாக அரசு மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றும், இறந்துவிட்டவர்களின் உடல்களைக் காவல்துறையினர் வழக்கமான பரிசோதனைக்கு உட்படுத்த உதவிகள் செய்தும், சேவைகள் செய்துள்ளனர் என்ற தகவலும், வாசகர்களை மகிழ வைத்தது.
அதற்குப் பின்னரும், அமைப்புத் தோழர்கள் காயமுற்றவர்களை அரசு மருத்துவ மனையில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி, மருத்துவ மனை ஊழியர்கள் முறையாகச் சிகிச்சை செய்வதற்கு உதவியாக நின்றும், பாதிப்படைந்தவர்களுக்கு மருந்துகளை வாயினுள் செலுத்த உதவிகள் செய்தும், தம் சேவை உணர்வுக்கு இலக்கணமாக நின்று, அவர்களின் தேவைகள் ஒவ்வொன்றையும் பெற்றுக் கொடுத்து உதவிகள் செய்தனர் என்ற செய்தியும் மனத்தைக் குளிர வைத்தது.
காயமுற்றுக் கிடந்தவர்களுள் ஒருவர் தமது ஊரில் தம் குடும்பத்தாருக்கு விபத்தைப் பற்றிக் கூறியபோது, “இந்த ஊர் முஸ்லிம் மக்கள் சேவை உள்ளத்துடன் எங்களுக்கு உதவிகள் செய்கின்றார்கள்! எமக்குக் கிடைத்த மாத்திரைகளையும் மருந்து வகைகளையும் வாயில் ஊட்டிவிடுகின்றனர்! நமது உறவோ, அயலவர்களாகவோ இல்லாத நிலையிலும் எங்களை நல்லபடியாகக் கவனிக்கின்றனர்! நமக்கிடையே எவ்விதப் பிணைப்பும் இல்லாத முஸ்லிம்கள் இவ்வாறு உதவுவதற்கு இவர்களின் மார்க்கமான இஸ்லாம் தடையாக நிற்கவில்லை” எனவும் கூறி, உறவினரையும் ஆறுதல் படுத்தினார் என்னும் செய்தியானது, நம்மை மகிழ்விக்கின்றது.
இரண்டாவது நிகழ்வு:
இதுபற்றி மற்றொரு வலைப்பூவான ‘அதிரை நியூஸ்' வெளியிட்ட செய்தி இதோ:
அதிரை தக்வா பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான மார்கெட் பகுதியில் இன்று [ 02/10/2013 ] இரவு 10.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் உணவகங்கள், பலசரக்குக் கடைகள், தொப்பிக்கடை, சலூன்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. கடைகளில் இருந்த பொருட்கள் பெரும்பாலும் தீயில் எரிந்து சாம்பலாகின.
தகவல் அறிந்த அதிரை இளைஞர்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தீயை அணைக்க உதவினர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிரை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைப்பதற்கு வேண்டிய உதவியை செய்தனர். அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, பேராவூரணி ஆகிய ஊர்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்தின் காரணமாக அதிரை நகரில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தன.
மேலும் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர், தாசில்தார், டிஎஸ்பி, வருவாய்துறை அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தீ விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
‘தக்வாப் பள்ளி’க்குச் சொந்தமான மார்க்கெட் கடைகள் தீக்கிரையான அன்றைய இரவில், நமதூர் இளைஞர்கள் ஓடிப்போய், முதலுதவி என்ற முறையில் தீயை அணைக்கப் பாடுபட்டனர்.
ஆனால், அறிவித்து வெகு நேரம் சென்று வந்ததற்காகத் தீயணைப்புக்காரர்களுடன் சண்டையிட்டு, தீயணைப்பு வண்டி ஓட்டுனரின் மண்டைக்குக் காயம் ஏற்படுத்தி, இளைஞர்கள் சிலர் மனிதத் தன்மையின்றி நடந்துகொண்டனர் என்ற வருந்தத் தக்க செய்தி, நம்மைக் கவலை கொள்ளச் செய்கின்றது. இந்த நிகழ்வில் சம்மந்தப்பட்டோர், முன் நிகழ்வைப் போன்று, முஸ்லிம்களும் மாற்று மதத்தினரும் ஆவர்.
முதல் நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்கள், நமதூர் முஸ்லிம்களைப் பாராட்டினர். இரண்டாவது நிகழ்வில் பாதிக்கப்பட்டவர், மாற்று மதத்தவரான அரசு ஊழியர். இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டோர், நம்மவர்களின் நடத்தையால் முஸ்லிம்களான நம் மீது வெறுப்பைத்தான் அள்ளி வீசுவர். பிழை அவர்களிடம் இல்லை; நம்மவர்கள் மீதுதான் உண்டு என்று உரத்துக் கூற முடியும்.
இரண்டும் எதிரெதிர்த் துருவங்கள்! இனி ஏதேனும் பாதிப்போ, வெறுப்பிற்குரிய நிகழ்வோ நமக்கு ஏற்பட்டால், இந்த அரசு ஊழியர்களிடம் ‘நல்ல பெயர்’ வாங்க முடியாது! முன்னதற்குப் பின்னதும் ஈடாகாது!
“இறைவனின் மனித படைப்பினங்கள் அனைத்தும் ஆதமின் குடும்பத்தவர்களே” எனும் அடிப்படையில்தான் சேவை செய்பவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்றே இஸ்லாம் அறிவுறுத்துகின்றது. அப்போதுதான் அந்தச் சேவைகள் நமக்கு நன்மையை ஈட்டித் தரும். மாறாக, உணர்ச்சி வயப்பட்டும் காழ்ப்புணர்வு கொண்டும் நடந்துகொண்டால், நாம் செய்த சேவைகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகிப் போகும்.
இவ்வாறு ‘மோட்டுத் தனமாக’ நடந்து கொள்பவர்களின் பின்னணியை ஆராய்ந்து பார்ப்போமாயின், அவர்கள் கல்வியில் குறைந்தவர்கள் என்பதையும், பெற்றோரின் வளர்ப்பில் எதோ கோளாறு உடையவர்கள் என்றும் எளிதில் அறிந்துகொள்ளலாம்.
அதிரை அஹ்மது
Pictures : supplied