"நான் கண்ட சரித்திரக்குறியீடு"
உத்வேகமும், உற்சாகமும் தரும் அருமையான ஒரு அப்பட்டமான உண்மை நிறைந்த அனுபவ கட்டுரையை வழங்கிய கட்டுரையாளர் இப்ராகிம் அன்சாரி காக்கா அவர்களுக்கு முதற்கண் நன்றிகளும், வாழ்த்துக்களும்.
என் பத்து வருடங்கள் தாண்டிய சவுதி அரேபிய அனுபவத்தில் என் கண் முன்னே நான் கண்ட ஒரு அதிசயத்தை இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
நான் முன்பு சவுதியின் முக்கிய எண்ணெய் வள தொழில்நகரமான யான்பு நகரில் ஒரு ஸ்டீல் கம்பெனியில் என்னுடைய மேலாளர் திரு. காமராஜ் (மன்னார்குடி சொந்த ஊர், படிப்படியாக முன்னேறியவர் ஆரம்பத்தில் ப்ராஜெக்ட் இன்ஜினியராக நிறுவனத்தில் சேர்ந்து, பிறகு சீனியர் ப்ராஜெக்ட் இன்ஜினியர், பிறகு ப்ராஜெக்ட் மேனேஜர், பிறகு ப்ளேனின் மேனேஜர் தற்சமயம் ப்ராஜெக்ட்ஸ் மேனேஜர்) அவர்களின் கீழ் பெர்சனல் செக்ரட்டரியாக ப்ராஜெக்ட்ஸ்/திட்டமிடல் துறையில் (ப்ளேனிங்) பணியாற்றிக்கொண்டிருக்கும் பொழுது நான் வேறொரு
வாய்ப்பிற்காக இன்னொரு கம்பெனி செல்ல நேரிட்டது. அங்கு செல்ல வேண்டிய பணிகள் நடந்து கொண்டிருக்கும் சமயம் எனக்கு மாற்றாக ஒரு ஆள் என் துறைக்கு தேவைப்பட்டது.
அச்சமயம் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்திருந்தும் வெல்டராக பணிபுரிந்து கொண்டிருந்த பீகாரைச்சேர்ந்த ஒரு இளைஞன் (பெயர் அஸ்லம் அன்சாரி) ப்ராஜெக்ட் முடிந்து பணியில்லாமல் இருந்த அவனை சில மாதங்களுக்கு முன் ஆவணக்கட்டுப்பாட்டு துறையில் ஆவணங்களை கோப்பிலிட ஒரு ஆள் தேவைப்பட்டு நான் அவனை அடையாளம் கண்டு என் மேலாளரிடம் சொல்லி அங்கு அவன் அமர்த்தப்பட்டு பணி செய்து வந்தான். நான் நிறுவனத்தை விட்டு வெளியேற இருக்கும் தகவலறிந்து நான் வேலை செய்த ப்ராஜெக்ட்/திட்டமிடல் துறைக்கு வரவழைக்கப்பட்டான். என் மேலாளரும் அவனுடைய சுறுசுறுப்பு கண்டு எனக்கு மாற்றாக அவனை ஏற்றுக்கொண்டார். நான் அங்கிருந்து வெளியேறியதும் நாளடைவில் கொஞ்சம், கொஞ்சமாக திட்டமிடல் துறையின் முக்கிய மென்பொருளான "ப்ரைமவேரா" வை அக்கம்பக்கத்தினரிடம் மெல்ல,மெல்ல கற்றுக்கொண்டான்.
நான் மற்றொரு கம்பெனியில் பணியில் சேர்ந்து என் பழைய நண்பர்களுக்கு வேலைவாய்ப்பு சம்மந்தமான மின்னஞ்சல்கள் அவ்வப்பொழுது அனுப்பி வருவேன். அதில் கத்தாரில் ஹுன்டாய் நிறுவனத்திற்கு ஒரு ப்ராஜெக்ட் கிடைத்து அதில் ப்ராஜெக்ட் ப்ளேனர் வேலையும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
அதை கண்ட அவன் அதே துறையில் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த ஒரு மூத்த ப்ளேனரின் சி.வி.யை வாங்கி அப்படியே இவன் பெயருக்கு சில மாற்றங்களுடன் மாற்றி கத்தார் ஹுன்டாய் விலாசத்து மின்னஞ்சல் அனுப்பி விட்டான்.
உடனே அங்கிருந்தும் இன்டர்வியூவிற்கு அழைப்பு தொலைபேசியில் வந்து ப்ராஜெக்ட் ப்ளேனராக 2000 சவுதி ரியால் சம்பளத்தில் என் பழைய நிறுவனத்தில் வேலை பார்த்த அவன் இன்று கிட்டத்தட்ட 4000 அமெரிக்க டாலர் சம்பளத்தில் சவுதி விசாவை முடித்துக்கொண்டு போய் அந்த நிறுவனத்தில் சேர்ந்து கார் மற்றும் குடும்ப சகல வசதிகளுடன் கத்தாரில் நலமுடம் செளக்கியமாக இருந்து வருகிறான். மாஷா அல்லாஹ்..
சென்ற வாரம் சில பழைய கம்பெனி நண்பர்களுடன் இணைந்து அவன் நிறுவன வேலைகளுடன் தோஹாவின் மையப்பகுதியில் ஒரு பெரிய சவுத் இண்டியன் ரெஸ்ட்டாரெண்ட் ஆரம்பிக்க இருப்பதாகவும் அதில் வந்து என்னை அவசியம் கலந்து கொள்ளும்படியும் பத்திரிக்கை அனுப்பி இருந்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதில் பொறாமைப்படுவதை விட தொடர் முயற்சியால் தனக்குள் ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்து அதை நிரூபித்துக்காட்டி வல்ல அல்லாஹ்வின் நாட்டத்தில் இன்று கத்தாரில் சந்தோசமாக குடும்பத்துடன் அவன் வாழ்ந்து வருவது என் வாழ்வில் நான் கண்ட சரித்திரக்குறியீடு....
எப்பொழுதோ, எங்கோ, தனக்கோ அல்லது யாருக்கோ நடந்த சில அசெளகரியமான சம்பவங்களையே காரணம் காட்டி அதையே நினைத்து கொண்டு பயந்து நமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளையும் அதனால் வர இருந்த நல்ல பல வளர்ச்சிகளையும், வாழ்க்கை முன்னேற்றங்களையும் நாம் நமக்கு தெரியாமலேயே அவிழ்க்க முடிந்தும் முடியாமல் இறுகக்கட்டிப்போட்டு வைத்துள்ளது வேதனையான மற்றும் நிதர்சனமான உண்மையே.
ஒருவன் வெளிநாட்டில் குடும்பம், கார், சகல வசதிகளுடன் சந்தோசமாக இருந்து வரும்பொழுது அவன் இந்த நிலைக்கு வருவதற்கு எவ்வளவு சிரமம் எடுத்து படித்திருப்பான் இல்லை சிரத்தை எடுத்து முயன்றிருப்பான் என்பதை நாம் பெரும்பாலும் சிந்திக்க மறந்து விடுகிறோம். மாறாக, பொறாமையே முன்வந்து நின்று கொண்டு நம் முயற்சிகளை கொன்றுவிடுகிறது. கர்வம் வந்து தானே சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டு நம் வாழ்வில் கொடுங்கோல் ஆட்சி செய்து வேதனைப்பட வைத்து விடுகிறது.
இது போன்ற கட்டுரைகள் எழுதுபவருக்கும், அதை கவனத்துடன் படிப்பவருக்கும் பல்கலைக்கழகம் செல்லா ஒரு நல்ல பாடம். நமக்கு ஏற்பட்ட இது போன்ற அனுபவங்களை அடிக்கடி பகிர்ந்து கொள்வதுடன் நம் வீட்டு பிள்ளைகளின் காரியத்தில் இதை கடைபிடித்து அவர்களின் ஒவ்வொரு அசைவையும் திட்டமிட்டு மார்க்க வரம்பிற்குட்பட்டு கொண்டு செல்வோமேயானால் வரும் காலம் அவர்களால் நமக்கு ஆனந்தமாக இருக்குமேயன்றி ஒருபோதும் அல்லல்பட வைத்து விடாது.
அதிரை நிருபர் குழுமத்திற்கு, இயன்றால் மேற்கண்ட என் கருத்துக்களை "நான் கண்ட சரித்திரக்குறியீடு" என்ற தலைப்பில் தனிக்கட்டுரையாக வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அனுபவங்கள் பேசட்டும் அதுவே நம் வாழ்க்கைக்கு ஓர் ஏணிப்படியாக ஆகட்டும் எனக்கும் உங்கள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ்வின் நாட்டத்தில்.
அனுபவம் பேசுகிறது தொடரும்...
- மு.செ.மு. நெய்னா முஹம்மது.


