(ஒரு யதார்த்தமான உரையாடல்)
நமதூரில் நன்கு படித்த, அனுபவமிக்க பணி ஓய்வு பெற்ற இரண்டு வயதான பெரியவர்கள் (அப்பாமார்கள்) நமதூர் வழக்கு மொழியில் ஒருவருக்கொருவர் உரையாடிக்கொண்டதாக இருக்கும் இந்த உரையாடல். நமதூரில் முழுமையான பெயரை சுருக்கி இப்படி முஹம்மது முகைதீனை மோம்மியாக்கா என்றும், அஹமது முகைதீனை ஆவ்மியாக்கா என்றும் அழைத்துக்கொள்வது நமதூர் வழக்கம். இது தனிப்பட்ட யாரையும் குறிப்பிட்டு அழைக்கப்பட்டதல்ல.
மோம்மியாக்கா: அஸ்ஸலாமு அலைக்கும். என்னா ஆவ்மி ஒரு வாரமா இந்தப்பக்கம் ஆளையேக்காணோமே? என்னா ஏலலைய்யா?
ஆவ்மியாக்கா: வலைக்கு முஸ்ஸலாம். அல்ஹம்துலில்லாஹ் இப்பொ நல்லா இருக்கிறேன். ஒரு வாரமா ராத்திரியிலே சரியான தூக்கம் இல்லை. கடுமையான கரண்டு கட்னாலெ பேட்டரியும் சரியா வேலை செய்வதில்லை. கொசுக்கடி வேறு பிடுங்கி எடுக்குது. வேர்வையிலெ அப்படியே படுத்து சாஞ்சி கெடக்குறதுனாலெ தடுமல் புடிச்சிக்கிட்டு அதோடெ சளியும் சேர்ந்து வந்து நம்மளெ போட்டு படாத பாடு படுத்திடுச்சுப்பா. விசிறி வீசி, வீசியே கைகடுப்பு வந்து டாக்டரு பிசியோ தெரபி போகச்சொல்லிட்டாரு.
மோம்மியாக்கா: அது சரி. இவ்ளோவ் மேட்டரு நடந்துடுச்சா? யாம்ப்பா நா மட்டும் என்னா சிங்கப்பூர்லேர்ந்தா விசாரிச்சிக்கிட்டு இருக்கிறேன்? நானும் இங்கே தானப்பா இருக்கிறேன். எல்லார்க்கும் அதே நெலமை தான்.
ஆவ்மியாக்கா: ஆம்மாம்ப்பா...கரக்ட்டா சொன்னா...கல்லு, மண்ணு, தண்ணி, நிலக்கரி, சவப்பெட்டிண்டு ஒன்னையும் உட்டு வக்காமெ எல்லாத்துலெயும் ஊழல் பண்ணிட்டானுங்க இந்த அரசியல்வாதிகள். காற்றை மட்டும் தான் உட்டு வச்சிருப்பானுவோ போல ஈக்கிது?
மோம்மியாக்கா: நம்ம மக்கள் தான் பாவம் இன்னும் ஒரு மகாத்மா, நேரு, காமராஜர், காயிதேமில்லத், அண்ணா, பெரியார்லாம் பொறந்து வருவாங்கண்டு காத்துக்கிட்டு இருக்கிறாங்க.
ஆவ்மியாக்கா: பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்து மண் வளத்தைக்காத்து நம் வருங்கால சந்ததிகளை காக்கத்துடிக்கும் இன்றைய சமுதாயம் மின்தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு போன்ற அத்தியாவசிய இன்றைய தேவைகளால் படும் அல்லல்களுக்கு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்று ஒன்றும் தெரியல்லையப்பா.
மோம்மியாக்கா: ஆமாம்ப்பா நீ சொல்றது நெசந்தான். ஒரு பத்து நாளா நம்ம ஊர்லெ பாத்தியா? ஒரு ஒஹமான வெயிலு மே மாசம் அடிக்கிற மாதிரி சுள்ளுண்டு அடிக்கிது? உலக விஞ்ஞானிகள் வர்க்கம் சொல்வது என்னாண்டாக்கா உலகில் மாசுகள் பெருகி வெப்பம் அதிகமாகி பனிப்பாறைகள் உருகியதே இந்த பருவ நிலை மாற்றத்திற்கு காரணம்ண்டு சொல்றாங்க. நாம என்னா சொல்றோம்ண்டா உலகில், ஊரில் அநியாய, அக்கிரமங்கள் பெருகி விட்டதே இதற்கெல்லாம் தலையாய காரணம்டு சொல்றோம். என்னா நாஞ்சொல்றது சரியா?
ஆவ்மியாக்கா: என்னப்பா உன் தங்கச்சி அந்தோலெ வருது அது என்னா சொல்லுதுண்டு பார்ப்போம். என்னா தங்கச்சி இங்கிட்டு போய்க்கிட்டு இருக்கிறா?
தங்கச்சி : ஆமாங்காக்கா, இந்த பொட்டக்கரையா போன கரண்ட்டு அடிக்கடி அமர்ரதுனாலெ ராத்திரி வேர்வையிலெ புள்ளையல்வொலுக்கு கொசுக்கடிச்சி காய்ச்ச வந்திருச்சி. அது சாதா காய்ச்சலா? என்னம்மோ சொல்றாஹலே டெங்கு காய்ச்சாலாண்டு பார்க்க ஆஸ்பத்திரிக்கு போறேங்காக்கா. இந்த மாக்குண்டு சாஞ்சிருவானுவோ யாந்தான் இப்புடி 15 மணி நேரத்துக்கு மேலே கரண்டை கட் பண்ணுறானுவொலோ? தெரியலெ....
ஆவ்மியாக்கா: ம்மாடீ, வெரசன போயி புள்ளையல்வொலே காமிச்சிரும்மா....
மோம்மியாக்கா: நம்ம நாட்லெ இலவசங்கள்லாம் ஈஸியா கெடெச்சிடுது. பணங்கொடுத்து வாங்குற கரண்டு, கேஸ்ஸூ, பெட்ரோலு, டீசலு, மண்ணெண்ணெய்க்கு மக்கள் மாக்கு குடுத்துக்கிட்டு நிக்கணுமா ஈக்கிது. கரண்டுப்பிரச்சினையை பத்தி அரசு அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் மாநில அரசையும், மாநில அரசு மத்திய அரசையும், மத்திய அரசு கூடங்குளம் உதயக்குமாரையும் இப்படி மாறி, மாறி குறை சொல்லியே வாக்களித்த மக்களாகிய நமக்கு நல்லா ஆப்படிச்சிக்குட்டு இருக்கிறாங்க.
ஆவ்மியாக்கா: கரக்ட்டா சொன்னா... அவன்களுக்கு கிரானைட் கல்லு, மண்ணு, நிலக்கரி, ராணுவ வீரர்களுக்கு வீடுகட்டுவது, சவப்பெட்டி வாங்குவது, அயல்நாட்டு பெரு வியாபாரிகளை நம் நாட்டுக்குள் அனுமதிப்பது, தகவல் தொடர்புண்டு இப்புடி ஏகப்பட்ட துறைகளில் ஊழல் செய்து அதில் வரும் காசு, பணங்களை கணக்குப்பார்க்கவே நேரமில்லை. நீ வேற....மக்கள் நலமாவது? மண்ணாங்கட்டியாவது?
மோம்மியாக்கா: என்னா ஆவ்மி, இப்புடி வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டா பேசிப்புட்டா....நம்ம பிரதமர் வேற நேற்று வரும் 2017க்குள் நாட்டு மக்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம்ண்டு அறிவிச்சிருக்காரு பாத்தியா?
ஆவ்மியாக்கா: என்னா மோம்மி, நாமெ என்னா பச்சப்புள்ளையா? இது மாதிரி எத்தனை அறிவிப்புகளையும், அறிக்கைகளையும் நம்ம வாழ்க்கையிலெ பார்த்து, பார்த்து மண்டையை சொரிந்து மொட்டைத்தலையா போனது தான் மிச்சமப்பா....நீ வேற.....
மோம்மியாக்கா: அக்டோபர் மாசம் கொட்டு, கொட்டுண்டு கொட்ட வேண்டிய பருவ மழை இந்த வருசம் ஆப்பு அடிச்சிடுமோண்டு பயமா ஈக்கிதுப்பா...அதிரையிலிருந்து மதுரை வரை எல்லா குளம், கண்மாய்களும் வரண்டு கெடக்குது. மீன்கள் நீந்தித்திரிய வேண்டிய குளங்களில் ஆடுகளும், மாடுகளும் மேய்ந்து திரியுது. ஓடங்களில் கடக்க வேண்டிய நதிகளெல்லாம் இன்று ஒட்டகங்களின் மேலிருந்து தான் கடக்க வேண்டிய நிலையுள்ளது. கொக்குகளும், குருவிகளும் பறந்து செல்ல வேண்டிய நீர்நிலைகளில் இன்று மயில்களும், குயில்களும் ஆடிப்பாடி செல்கின்றன. யா அல்லாஹ், மனுசனுவொல்க்காக இல்லாட்டியும் இந்த வாயில்லா ஜீவன்களான காக்கை, குருவி, ஆடு, மாடுகளுக்காவது வானத்லேர்ந்து மழையை எறக்குவாயாக....
ஆவ்மியாக்கா: ஆமாம்ப்பா இவ்வளவு துள்ளியமா சொல்லிட்டியே நம் ஊரின் நடப்புகளை. "மின்சாரம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்று ஒரு புது மொழி உள்ளத்தில் உருவாகி அதை மைய்யமாக வைத்து நம் ஊரின் மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக சென்னை மற்றும் இதர பெரு நகரங்களின் பக்கம் பல செளகரியங்களை மனசுலெ வச்சிக்குட்டு நம் ஊரை காலி செய்து விட்டு இடம் பெயர துவங்கி விட்டனர்.
மோம்மியாக்கா: அப்பண்டா நம்ம ஊர்லெ மனைக்கட்டு விலை குறையுண்டு சொல்ல வர்றியா?
ஆவ்மியாக்கா: நீ வேற....சரியான சவுகரியங்கள் இல்லாத நம்ம ஊர்லெ செல பேரு சும்மா மனைக்கட்டு விலையை ஏத்தி உட்டுக்கிட்டு விலை ஏறும், ஏறும் என்று உக்காந்துக்கிட்டு இருக்கிறது வாஸ்த்தவம் தான். காலப்போக்குலெ மக்கள் எல்லா விசயங்களையும் ஆராய்ந்து தான் நம் ஊரில் மனை வாங்குவதை பத்தியோ, பல லட்சங்கள் செலவு பண்ணி ஊடு கட்டுவதை பத்தியோ யோசிப்பாங்க.
மோம்மியாக்கா: ஆம்மாம்ப்பா...நம் ஊரின் நிலை எதோ ஹஜ்ஜுப்பெருநாள் லீவு, நோன்புப்பெருநாள் லீவு, வெளிநாடுகளிலிருந்து லீவுலெ என்று வந்து சும்ம கொஞ்ச நாட்கள் தங்கிவிட்டு திரும்பி போயிற அளவுக்குத்தான் வசதி வாய்ப்புகள் இங்கே இருக்கு. வெறும் வாய்க்கு ருசியான களரி சாப்பாட்டை மட்டும் நம்பிக்கிட்டு காலெத்தெ ஓட்ட முடியாதுலெ? ராத்திரி நேரத்துலெ ஊட்லெ யாருக்காச்சும் புள்ளையல்வொலுக்கோ அல்லது பெரியவங்களுக்கோ ஒடம்பு சரியில்லாம போன கூட அவசரத்துக்கு ஒரு ஆட்டோ புடிச்சி ஆஸ்பத்திரிக்கு போயி ட்ரீட்மெண்ட் எடுக்க எந்த ஆஸ்பத்திரியிலும் இரவு நேர அவசர சிகிச்சைப்பிரிவு இல்லை. எல்லாம் கடை,கண்ணி மாதி பூட்டிக்கிடக்குது. பக்கத்து பட்டுக்கோட்டை அல்லது தஞ்சாவூரு தூக்கிக்கிட்டு போறத்துக்குள்ளே ரூஹு போயி சேர வேண்டிய இடம் போயி சேந்திடுது செல நேரத்துலெ. நம் மக்களின் இரவு நேர அவந்தரைக்கு ஒரு அவசர முதலுதவி சிகிச்சைப்பிரிவு ஆரம்பிக்க யாராச்சும் முயற்சி செஞ்சா நல்லா ஈக்கிம்.
ஆவ்மியாக்கா: செல பேரு கரக்ட்டா அஞ்சு வேளெ தொழுவுறாங்க, எடக்கெட மவுத்து, ஹயாத்து பத்தி பேசுராங்க, ஹராம், ஹலால் சொல்றாங்க. ஆனா அவுங்க ஊட்டு, குடும்ப பிரச்சினை ஏதாவது வந்தா அவங்களின் தனிப்பட்ட செயல்பாடுகளும், நடவடிக்கைகளும், மனோபாவங்களும் பாஸிச மத துவேச கொடூரமானவர்களை கூட தூக்கி சாப்பிட்டு விடும் அளவுக்கு மோசமா இருக்குது. அல்லாஹ் தான் நம் எல்லோருக்கும் பரிசுத்த ஈமானையும், கடைசி வரை அவனை உண்மையில் பயந்து வாழும் தக்வாவையும் தந்தருள போதுமானவன்.
மோம்மியாக்கா: இப்பொ உலகத்துலெ என்னா ட்ரண்டு தெரியுமா ஆவ்மி? ஒன்னுமே இல்லாத பத்திரிக்கைகள், விரைவில் ஊத்திக்கிடப்போற ஊடகங்கள், மக்கள் திரும்பி பார்க்காத நஷ்டத்தில் தள்ளாடும் நாளிதழ்கள் எல்லாம் சேர்ந்து தன் வியாபாரத்தை உலகில் தூக்கிப்புடிக்க ஒரு யோசனை பண்ணுனானுவோ. அது என்னா தெரியுமா? நம் எம்பெருமானார் கண்மணி நாயகம் ரசூல் (ஸல்) அவர்களை ஏதாவது வகையில், வழியில் இழிவு படுத்தி வெளியிட்டு அதனால் வரும் உலக முஸ்லிம்களின் கொந்தளிப்பில் தன் வியாபார யுக்தியை பயன்படுத்தி கோடிகள் பார்த்து பரபரப்பை ஏற்படுத்தி அதில் பரவசம் அடைவது தான். நாசமாப்போனவன்ங்களின் ஈனப்புத்தியை பாத்தியா?
ஆவ்மியாக்கா: சரி மோம்மி, ரொம்ப நேரம் நெறையா விசயத்தை பத்தி பேசியாச்சு இங்கே. கடத்தெருவுக்கு போகனும். ஏதாவது தேசப்பொடியாவது இன்னெக்கி மிஞ்சுதாண்டு பாப்போம். இன்ஷா அல்லாஹ் அப்பொறம் பேசிக்கிடுவோம் வரட்டா.
மோம்மியாக்கா: சரிப்பா, வெள்ளனமே போயிட்டு வா. எனக்கும் ஒரு கால் கிலோ நெஞ்செலும்பு வாங்கிட்டு வர்ரியா. டாக்டரு காலு வலிக்கு வெட, வெடண்டு சூப்பு வச்சி குடிக்க சொல்லிட்டாரு...
ஆவ்மியாக்கா: சரிப்பா வாங்கிட்டு வந்துர்ரேன்....அஸ்ஸலாமு அலைக்கும்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.