இலங்கை தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக கடந்த சில வாரங்களாக தமிழக கல்லூரி மாணவர்கள் அறவழியில் உண்ணாவிரதம், பேரணி, ஆங்காங்கே முற்றுகை என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்பதை அன்றாட செய்திகளாக ஊடகங்களில் நாம் கண்டு வருகிறோம். கல்லூரிக்கு படிக்கச் சென்ற மாணவர்கள் இப்படி பொது பிரச்சினைகளுக்காக போராடுவது ஒன்றும் புதிது அல்ல. மாறாக! சேனல் 4 என்ற தொலைக்காட்சி வெளியிட்ட ஒரு ஆவணப்படத்தை கண்ட பின்புதான் இந்த e-தமிழினத்துக்கு சொரனை பீரிட்டு வந்துள்ளது. இது எவ்வளவு நாளைக்கு தாக்குப்பிடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கடந்த 30 வருடங்களாக தமிழக அரசியல் பந்திக்கான ஊறுகாயாகவே இலங்கை தமிழர் பிரச்சினையை தொட்டுக் கொண்டு விரிந்த வெள்ளித் திரையில் போடப்பட்ட கருப்பு வெள்ளை கலைப்படப் படைப்பாகத்தான் தமிழக மக்கள் கண்டு வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையில்லை. அதெல்லாம் சரி, அரசியலில் எதற்கெடுத்தாலும் உண்ணாவிரதமென்று காந்திய வழியில் போராடுகிறோம் என்று வடக்கே துவங்கி தெற்கு வரைக்கும் அன்றாட பொழுது போக்குதான். இந்த கலாச்சாரம் நம் அரசியல் கட்சிகளிடம் மட்டுமே அடைக்கலமாகி இருந்ததைக் கடந்து, இன்று அந்த நோய் மாணவ சமூகத்திடமும் அசுரப் பலம் கொண்ட ‘புலி’வேஷம் போட ஆரம்பித்திருப்பது வருந்ததக்கது.
ஒரு சமூகத்தின் மீது இழைக்கப்படும் இனப்படுகொலைகள் நேற்று துவங்கிய சுவடுகள் அல்ல. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களில் நடைபெற்ற இனப்படுகொலைகள், இந்திய சுதந்திர போராட்டத்தில் வெள்ளையர்கள் நடத்திய இனப்படுகொலைகள், அவர்களுடன் சேர்ந்து எட்டப்பர்களாக வேலை செய்தவர்களில் ஒருவன் மகத்மா காந்தியை கொன்றது. ஆப்ரிக்கா நாடுகளில் குறிப்பாக காங்கோவில் அப்பாவி மக்கள் மீது நடைபெற்ற இனப் படுகொலைகள். அமெரிக்கா ஈராக், ஆப்கானிஸ்தானில் நடத்திய இனப் படுகொலைகள். சிரியாவில் பஸ்ஸார் அல் அசத் நடத்திவரும் இனப் படுகொலைகள். பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் இனப் படுகொலைகள். விடுதலைப்புலிகள் தமிழ்(மட்டுமே)பேசும் முஸ்லிம்கள் மீது நடத்திய குரூர இனப்படுகொலைகள். அதே விடுதலைப்புலிகள் தன்னை ஆதரிக்காத தன் இனத்தைச் சார்ந்த தமிழ் மக்கள் மீது நடத்திய இனப் படுகொலைகள்.
குஜராத்தில் நரேந்திர மோடி முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட இனப் படுகொலைகள். கோவையில் இந்து தீவிரவாதிகள் நடத்திய இனப் படுகொலைகள். இன்று வரை காஷ்மீரில் இந்திய இராணுவம் நடத்தி வரும் இனப் படுகொலைகள். கம்யூனிஸ்ட்களின் கைக்கடிகாரமாக இருக்கும் நக்ஸலைட்டுகள் நடத்தி வரும் இனப் படுகொலைகள். இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் இருவரும் சேர்ந்து அப்பாவி தமிழர்களை கொன்றது கொடூரமான இனப்படுகொலைகள்.
இவ்வாறான இனப் படுகொலைகளுக்காக உண்ணாவிரதம் போன்ற போராட்டங்கள் நடத்த வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு 24 மணிநேரமோ, வருடத்தில் 365 நாட்களோ போதாது. இவ்வுலக வாழ்வை சுகமானதாக நம்புகிறவன் இது போன்ற இனப்படுகொலையை செய்வான். மறுவுலக வாழ்வை மட்டுமே நம்புகிறவன் இது போன்ற இனப்படுகொலைகளை எதிர்த்து நிற்பான். இனத்திற்கான விடுதலை, ஈழம் என்று சொல்லிக் கொண்டு கோழை (விடுதலைப்)புலிகள் போல் சைனைடு குப்பியை தின்று சாகவும் மாட்டான், மனித வெடிகுண்டாக அப்பாவிகளை கொள்ளவும் மாட்டான்.
உண்ணாவிரதமென்பது ஒரு போராட்டமா? இஸ்லாமிய பார்வையில் உண்ணாவிரதம் சரியா?
உண்ணாவிரதம் என்பதெல்லாம் வெறும் நாடகமே! என்பது கடந்த கால வரலாறு. உண்ணாவிரதம் எல்லாம் கபடநாடக செய்தி ஊடகங்களின் கேமராக் கண்களின் வெளிச்சம் விழும் வரை மட்டுமே என்பது மாதக் கணக்கில் உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு தெரியும். இது தொடர்பாக நகைச்சுவைக்கென்றே ஒரு தனிபதிவே எழுதலாம்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில்நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் : 2:183)
நோன்பு சென்று போன சமூகத்தாருக்கும் கடமையாகி ஆரம்ப காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக நோன்பை கடமையாக்கி இருக்கிறேன் என்று வல்ல அல்லாஹ் கூறுகிறான்.
நோன்பு பசியை உணரச் செய்கிறது. நல்ல பழக்கங்களை கற்றுத் தருகிறது. பிறருக்கு உதவும் எண்ணத்தை தாராளமாக வழங்குகிறது. மற்ற நேரங்களில் உதவும் எண்ணம் இல்லாதவர்கள் கூட நோன்பு காலங்களில் பிறருக்கு உதவி செய்யும் நிலைகளை காணமுடிகிறது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்." என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். புகாரி 1905. Volume :2 Book :30
ஒழுக்கநெறிகளை கடைப்பிடிக்கவே நோன்பு ரமழான் அல்லாத நாட்களில் நபி(ஸல்) உபரியான நோன்பு நோற்க வழியுறுத்தியுள்ளர்களே தவிர போராட்டம் நடத்த அல்ல.
நாங்கள் உண்ணாவிரதமெல்லாம் இல்லை, சுன்னத்தான நோன்பு வைத்துதான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம் என்று வெட்டி விளக்கம் சொல்லும் பெயர் தாங்கி முஸ்லிம்களும் நம்மில் பலர் உள்ளார்கள் என்பதற்காகவே மேற்சொன்ன ஹதீஸ்.
எப்படி தொழுகை அல்லாஹ்வுக்காக தொழுகிறோமோ, அது போலவே நோன்பும் (உண்ணாமல் பருகாமல் இருப்பது) அல்லாஹ்வுக்காகவே நோற்கிறோம். இதை தவிர்த்து வேறு எவனுக்காகவும் எதுக்காகவும் நோன்பு (உண்ணாமல் பருகாமல்) இருப்பது படைத்தவனுக்கு படைத்தவனின் கட்டளைக்கு மாறு செய்வதாகும்.
இலங்கை பிரச்சினைக்காக மட்டுமன்று எந்த ஒரு பிரச்சினைக்கும் உண்ணாவிரதம் என்பது இஸ்லாமிய கொள்கைக்கு முரணானது. இது போன்ற உண்ணாவிரத போராட்டங்கள் நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தராதது. ஆகவே முஸ்லிம்கள் உண்ணாவிரதம் இருப்பதும், அதற்கு ஆதரவு அளிப்பதும், வாழ்துவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இலங்கை பிரச்சினையில் மாணவர்களின் உண்ணாவிரத போராட்டங்களின் முஸ்லிம் கட்சிகளும், இயக்கங்களும் அற்ப அரசியல் இலாபத்திற்காக கலந்து கொண்டு தங்களின் அனுதாபங்களை பெற்று வருகிறார்கள். முஸ்லிம் மாணவர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்வது மிகவும் வருத்தமளிக்கிறது. அதுவும் அதிரை மாணவர்கள் கலந்து கொண்டிருப்பது அதற்கு அரசியல்வாதிகளும் அதனை ஊக்கப்படுத்துவதும் மிகவும் வருத்தமளிக்கிறது. படிக்கும் மாணவர்கள் தங்களுடைய எதிர்காலம் பற்றி கவலைப்படாமல் இதுபோன்ற விரும்பத்தகாத போராட்டக் களங்களில் கலந்து கொள்ளுவதும், அதை ஊடகங்கள் ஊக்கப்படுத்துவதும் தவிர்க்கப்பட வேண்டும்.
முஸ்லிம்களுக்கு எதிராக நின்று, அவர்களை கொன்று குவித்த கோழைகளான இந்த விடுதலைபுலிகளின் தலைவன் பிரபாகரனை முன்னிருத்தி நடத்தப்படும் எந்த போராட்டத்தையும் பாதிப்புக்குள்ளான முஸ்லிம் சகோதரனின் நிலையில் நின்று எந்த முஸ்லீமும் அதனை ஆதரிக்கக்கூடாது. பின் வரும் நபிமொழி எடுத்துக்காட்டும் நன்னெறியை அறிந்து கொள்ளுங்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'நமக்கெதிராக எவன் ஆயுதம் ஏந்துகிறானோ அவன் நம்மைச் சார்ந்தவனல்லன்’. என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ மூஸா(ரலி) அவர்களும் இதை அறிவித்தார்கள். புகாரி: 6874, Volume :7 Book :87
முஸ்லிம்களுக்கெதிராக ஆயும் ஏந்தியவர்கள் இந்த விடுதலைப்புலிகள், அவர்கள் நம்மை சார்ந்தவர்கள் அல்ல, விடுதலைப்புலிகளை முன்னிருத்தி நடைபெரும் எந்த போராட்டத்தை எந்த ஒரு முஸ்லிமும் ஆதரிக்க கூடாது.
இலங்கை தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு ராஜபக்சே எந்த அளவுக்கு காரணமோ, அதுபோல் விடுதலைப்புலிகளும் தான் காரணம் என்பதை புரிந்து கொண்டு போராட்டம் நடைபெற்றால் இலங்கை தமிழர்களுக்கு நல்வாழ்வு விரைவில் கிடைக்கும்.
கொள்கையற்றவர்கள் ஒன்று கூடி ஆளுக்கொரு போராட்டங்கள் நடத்துவது வெறும் அரசியல் நாடகமே தவிர வேறொன்றுமில்லை.
பாதிக்கப்பட்டவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட இனம் மேலும் பதிப்புக்குள்ளாகாமல் இருக்கும் வகையில் நம்முடைய போராட்டங்கள் இருக்க வேண்டும் என்பதே மனிதநேயமுள்ள அனைவரின் விருப்பம்.
டாஸ்மார்க் போதையை, ஈழத்து போதை கேடுகெட்ட ஊடக போதையின் பேருதவியால் வென்று விட்டது. படைத்தவனை மறந்து, படைப்பினங்களை நம்பிய இனம், அழிந்து போவது என்பது மட்டும் நிஜம். இதை யாராலும் மாற்ற முடியாது.
தமிழினமே விழித்துக்கொள். இனத்தால், ழொழியால் பிரித்தாளப்படாத ஒரே மார்க்கம் அதுதான் உனக்கான ஒரே விடிவு, இஸ்லாம் என்ற நேர்வழி மட்டுமே..!
இனப் படுகொலைகளால் கொல்லப்பட்ட அனைத்து முஸ்லிம்களும் சொர்க்கத்தின் இனிமையான சுவாசத்தை அனுபவிப்பவர்களாக இருப்பார்கள் இன்ஷா அல்லாஹ்! இதனை தமிழ் ஈழத்து சொந்தங்களுக்கும் நினைவூட்டுகிறோம்.
விழித்திருக்கும்போதே மொழி வெறியூட்டி இனவெறிக்கு பாதைபோடும் கேடுகெட்ட கலாச்சாரத்தை வெறுத்து ஒதுக்குவோம், மனிதநேயம் போற்றுவோம் !
அதிரைநிருபர் பதிப்பகம்