மர்ம முடிச்சுகளைக் கொண்டுகட்டுப்போட்டு
மந்திர வார்த்தைகளால்
உடன்பாடு எட்டப்பட்டுள்ளது
சவாரி செய்ய வாய்ப்பில்லாமல்
திராவிடக் கட்சிகள்
சண்டிக்குதிரைகளாகிவிட...
ஆளும் பாரம்பர்யக் கட்சி
உட்கட்சி கோஷ்டிகளுடன்கூட
கூட்டணி அமைக்க இயலவில்லை
மசூதி இடிப்பிற்கும்
மாற்று மத அழிப்பிற்கும்
பேர்போனக் கட்சியுடன்
போதைக் கதாநாயகன் சேர
சரக்கிற்கு ஊறுகாயாய்
சாட்டையில்லா பம்பரமும்
மரத்தை வெட்டிப் பறித்த மாம்பழமும்
தேசிய நெடுஞ்சாலையின்
மரங்களைப் பார்த்து
மருத்துவருக்குக் கை பரபரக்க;
இனி 'இவரின்' நடைப்பயணம்
டெல்லி நோக்கி நீளும்
ஓரிடத்தில் ஒடுங்கிக்கொண்ட
உடன்பிறப்பும்
ஒதுக்கிய இடத்தில் ஒட்டிக் கொண்ட
அண்ணன்மாரும் - இனி
தொழக்கூட
தோளோடு தோள் நிற்பதரிது
கூட்டணி கூத்தில்
குருடாய்ப் போனது
குருஜியின் நேர்-பார்வை !
எம்மக்களோ
அரசியலே வேண்டாமென்று
அரசியலோடு அரசியலும்
செய்கின்றனர்
பொதுவுடைமை பேசியோரும்
பெட்டிக்கடை கட்சிகளும்
சொற்ப வருமாணத்திற்கே
கடையைச் சாத்துவர்
தொகுதிப் பங்கீட்டுப்
பேச்சுவார்த்தைகளில்தான்
எத்தனைச் சுற்றுகள்!
பங்குச் சந்தையின்
இலாபக் கணக்கைப்போல
கூட்டணி தர்மப்படி
பெற்றோரைத் தவிற
யாவற்றிலும் சமரசம் என்றாகி
கொள்கைக்காரர்கள்
கொள்ளைக்காரர்களாகின்றனர்
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
எழுத்துகளைக் கொண்டல்ல
எண்களைக் கொண்டே
நிரப்பப் படுகின்றன
ஆட்சியில் பங்கு -நுட்ப
அரசியல் பாங்கு;
வெளியிலிருந்து ஆதரவு - சுயம்
செழிப்பதற்கானக் காப்பீடு
குதிரைப் பேரங்களில்
லகான்களாகப் பணப்பெட்டிகளும்
ஆதரவுக் கடிதம் என்னும்
கள்ளச் சாவியும் கலைகட்டும்
கூட்டு யாரோடு யார் வைத்தாலும்
வேட்டு அவருக்கு அவரே வைப்பார்
ஓட்டு எண்ணிக்கை போட்டுடைக்கும்
நாட்டு மக்கள் குட்டு வைத்ததை
ஊர்க்கோடி சாமான்யனும்
நூருகோடியில் உரையாட - இந்தத்
திருவிழாக்காலம் விட்டுச்செல்வதோ
தீர்விலா கோலம்!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

