மண்ணில் என்ன தோன்றக்கூடும்
“பாலினை நினைந்தூட்டும் தாயினை” என்று தொடங்கும் ஒரு தமிழ்ப் பாடல் உண்டு. பெற்ற பிள்ளைக்கு எப்போது பசிக்கும் என்று வாயில்லாத குழந்தை சொல்ல முடியாத தருணத்தை தானே உணர்ந்து பாலூட்ட ஓடிவருபவள் தாய் என்று சுட்டிக்காட்டுவதற்காகவே அந்த வார்த்தைகள்.
மழை இல்லாதபோது
மனிதனோ மிருகமோ
தாயில்லாமல் ஏது?
“பாலினை நினைந்தூட்டும் தாயினை” என்று தொடங்கும் ஒரு தமிழ்ப் பாடல் உண்டு. பெற்ற பிள்ளைக்கு எப்போது பசிக்கும் என்று வாயில்லாத குழந்தை சொல்ல முடியாத தருணத்தை தானே உணர்ந்து பாலூட்ட ஓடிவருபவள் தாய் என்று சுட்டிக்காட்டுவதற்காகவே அந்த வார்த்தைகள்.
பசியால் துடித்த தனது குழந்தைகளின் வறுமையைக் காணச் சகிக்காத தாய் ஒருத்தி தான் பெற்ற ஏழு குழந்தைகளையும் கிணற்றில் வீசி எரிந்து கொன்றுவிட்டு தானும் தன் வாழ்வை முடித்துக் கொண்டதாக நல்ல தங்காள் கதை சொல்கிறது. பெண் பிள்ளை பிறந்தால் கள்ளிப் பாலை ஊற்றி சாகடித்ததாக சில கரிசல்காட்டுக் கருத்தம்மா காவியங்கள் சில காலத்துக்கு முன்பு ஊடகங்களில் ஒளிபரப்பாயின.
உடலின் பசிக்காய் உறவில் திளைத்துக்
குடலிற் கருவைக் குவித்து வளர்த்துப்
பத்துத் திங்கள் பாரம் தாங்கிப்
பெற்றபின் பெற்றது பெண்மக வெனிலோ
அள்ளிப் பாலை அளிக்காது
கள்ளிப் பாலைக் கருதிக் கொடுப்பரே!
இப்படி சில இயல்பான தாய்மைக்கு எதிர்மறையான தாய்களை இக்காலம் சொல்லிக் காட்டுகிறது. குப்பைத் தொட்டிகளில் குழந்தைகள் என்கிற தலைப்புச் செய்திகள் வறுமைக்கு, தாய்மையையும் வெல்லும் சக்தி உண்டென பறைசாற்றுகின்றன.
அதே போல் ஒரு எதிர்மறையான தாயின் வரலாறு இதோ ஒரு வகை கெட்ட தாயானாலும் அவள் வார்த்தையின் வலிமையை சுட்டிக் காட்டுவதற்காகவும் நல்லவையே வாழும் அல்லவைகள் அழியும் என்று நிலைநிறுத்தவும் புகாரியிலே ஒரு வரலாறு சொல்லப் படுகிறது.
பனூ இஸ்ராயில் சமுதாயத்தைச் சேர்ந்த ஜூரைஜ் என்ற ஒரு மனிதர் எந்நேரமும் இறைவனையே தொழுது கொண்டிருந்தார். அதிலேயே ஆனந்தம் கண்டார். அப்படித் தொழுவதர்காகவே ஒரு ஆசிரமும் அமைத்து இருந்தார். ஒருநாள் தன் மகன் தொழுது கொண்டிருந்ததைப் பாரதத் அவரது தாயார் ஜூரைஜை பெயர் சொல்லி அழைத்தார். ஆனால் தொழுகையில் இருந்த ஜூரைஜ் தன் தாய்க்கு பதில் கூற மறுத்துவிட்டார். “ நான் ஏன் தாய்க்கு பதில் அளிப்பதா அல்லது தொழுவதா?” என்று மனதிற்குள் கேள்வி எழுப்பிக் கொண்டார். பெற்ற தாயாகிய தான் அழைத்தும் பதில் அளிக்காத மகன் மீது தாய்க்குக் கோபம வந்தது. அந்தக் கோபத்தில் “ இறைவா! விபச்சாரி ஒருவளின் முகத்தில் இவன் விழிக்கிற வரை என் மகனுக்கு நீ மரணத்தைத் தாராதே !” என்று வேண்டினாள்; சாபமிட்டாள்.
ஒருநாள் ஜூரைஜ் தனது ஆசிரமத்தில் இருந்தார். அப்போது ஒரு பெண், நான் இவரை நிச்சயம் சோதனைக்குள்ளாக்குவேன்என்று கூறி உள்ளே நுழைந்து அவருடன் தகாத உறவு கொள்ள அழைத்துப் பேச முயன்றாள் ; முனைந்தாள் .அவர் இணங்க மறுத்துவிட்டார். ஆகவே, அவள் ஊர் ஆடுமேய்ப்பவனிடம் சென்று அவனிடம் தன்னை ஒப்படைத்தாள். அதன் காரணமாக் ஓர் ஆண்குழந்தையை பெற்றெடுத்தாள்.
இவ்விதம் பிறந்த குழந்தையை ஊரார் மத்தியில் கொண்டுவந்து பொய்யாக இந்தக் குழந்தை ஜூரைஜூக்குப் பிறந்தது என்று கூறினாள். இவளது இந்த பொய்யை உண்மை என்று நம்பிய மக்கள் வெகுண்டெழுந்து அவரது ஆசிரமத்தை தகர்த்து உடைத்து அவரை இழிவாகப் பேசினார்கள்.
இதன்பின் ஜூரைஜ் இதனை இறைவனிடம் முறையிடவேண்டுமென்று உளூச் செய்து தொழுதார். தொழுத கையோடு தனக்கு பிறந்ததாக பழி சொல்லப்பட்ட பச்சிளங் குழந்தையிடம் வந்தார். குழந்தையை நோக்கி “ உண்மையில் நீ யாருடைய குழந்தை ? என்று கேட்டார். அந்தக் குழந்தை வாய் திறந்து பேசியது “ நான் ஒரு ஆடுமேய்ப்பவனுக்குப் பிறந்த குழந்தை. நீங்கள் என் தகப்பன் என்பது தவறு ” என்று கூறியது. மக்கள் மனம் திருந்தினர்.
ஒரு இயல்புக்கு மாறான எதிர்மறையான தாய் இடும் சாபம் பலிக்காது என்பதற்கு இது உதாரணம். தாய்மை ஒரு மென்மையாக இருக்கும்வரைதான் அதற்கு மேன்மை என்பதற்கு இந்நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு. .( புகாரி பாகம் 3 / 2482 )
சுலைமான் நபி அவர்களின் அரசவையிலே வந்த ஒரு வழக்கும் அதற்கான தீர்ப்பும் வரலாற்றின் ஏடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை.
இரண்டு பெண்கள் ஒரு பெரிய பிரச்சினையைத் தீர்க்க சுலைமான் நபி அவர்களிடம் வருகிறார்கள். அவர்களில் ஒருத்தி சொல்கிறாள்: ‘இவளும் நானும் ஒரே வீட்டில் வசிக்கிறோம், எனக்கு ஒரு மகன் பிறந்தான், இரண்டு நாட்களுக்குப் பிறகு அவளுக்கும் ஒரு மகன் பிறந்தான். ஆனால் ஒரு ராத்திரி அவளுடைய குழந்தை இறந்துவிட்டது. அதனால், நான் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் செத்த குழந்தையை என் பக்கத்தில் வைத்து விட்டு என்னுடைய குழந்தையை அவள் எடுத்துக்கொண்டு போய்விட்டாள். நான் தூங்கியெழுந்தபோது என் பக்கத்தில் செத்த குழந்தையைப் பார்த்தேன், பார்த்ததுமே அது என் குழந்தை அல்ல என்பது எனக்குத் தெரிந்தது’ என்கிறாள்.
உடனே இன்னொருத்தி: ‘இல்லை! இல்லை! உயிரோடுள்ள குழந்தை என்னுடையது, செத்த குழந்தைதான் அவளுடையது!’ என்று சொல்கிறாள். ஆனால் அந்த முதல் பெண்: ‘இல்லவே இல்லை! செத்த குழந்தை உன்னுடையது, உயிரோடுள்ள குழந்தை என்னுடையது!’ என்று சொல்கிறாள். இப்படியே அந்த இரு பெண்களும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். நபி சுலைமான் என்ன செய்யப் போகிறார்? இரு தாய்களுக்குள் உரிமைப் போராட்டம்.
ஒரு கூர் வாளை கொண்டுவரச் சொல்கிறார். அதைக் கொண்டு வந்ததும் ‘உயிரோடுள்ள குழந்தையை இரண்டாக வெட்டி ஆளுக்குப் பாதியாக இந்தப் பெண்களிடம் கொடுத்துவிடு’ என்று சொல்கிறார்.
உடனடியாக அந்த உண்மையான தாய், ‘ஐயோ, வேண்டாம்! தயவுசெய்து குழந்தையைக் கொல்ல வேண்டாம். அவளுக்கே கொடுத்துவிடுங்கள்’ என்று சொல்லி அழுகிறாள். ஆனால் இன்னொருத்தியோ , ‘எங்கள் இரண்டு பேருக்குமே அந்தக் குழந்தையைக் கொடுக்க வேண்டாம்; அதை இரண்டு துண்டாக வெட்டிப் போடுங்கள்’ என்று தீர்ப்புக்கு சம்மதிக்கிறாள்.
அவர்கள் பேசி முடித்ததும் சுலைமான் நபி அவர்கள் பேசுகிறார்: ‘குழந்தையைக் கொல்லாதே! . அந்த முதல் பெண்ணிடம் கொடுத்துவிடு! . அவள்தான் அந்தக் குழந்தையின் உண்மையான தாய்’ என்று சொல்கிறார். உண்மையான தாய் குழந்தையின் மீது உயிரையே வைத்திருக்கிறாள், எங்கே யாரிடம் இருந்தாலும் தன் குழந்தை உயிருடன் நலமுடன் இருந்தால் போதுமென்று நினைக்கிறாள் உண்மையான தாய். அதனால் குழந்தையைக் கொன்றுவிடக் கூடாது என்பதற்காக மற்றவளிடமே கொடுத்துவிடும்படி சொல்கிறாள்; இதை வைத்துத்தான் சுலைமான் நபி அவர்கள் உண்மையான தாய் யார் என்பதைத் தெரிந்துகொள்கிறார்.
ஒரு உருவகக் கதை இருக்கிறது..
ஒரு தாயின் திருவயிற்றில் குடியிருந்த ஒரு குழந்தையிடம் நீ நாளை பூமியை தரிசிக்கப் போகிறாய் என்று இறைவன் சொன்னான். .
குழந்தை அழுதுகொண்டே கேட்டது. நான் எப்படி அவர்களோடு பேசுவேன்?
உனக்கு பேச்சைக் கற்பிப்பதற்காக ஒரு தேவதையை நான் ஏற்கனவே அனுப்பி வைத்திருக்கிறேன் என்றான் இறைவன்.
நான் எப்படி உங்களை வணங்குவேன்?
அந்த தேவதை உனக்குச் சொல்லித் தருவாள்.
நான் நல்லனவற்றை எப்படிக் கற்றுக் கொள்வேன் ?
அதையும் அந்த தேவதையே உனக்குக் கற்றுத் தருவாள்.
நான் துன்பப்படும்போது என்ன செய்வேன்?
அந்த தேவதை உன் அருகிருப்பாள். துன்பம் தீர்ப்பாள்.
நான் எப்படி அந்த தேவதையைக் கண்டு கொள்வேன்?
பூமியில் அந்த தேவதையின் பெயர் உம்மா /அம்மா.
ஒரு நல்ல வெயில் காலம். ஒருவன் வேலை தேடி நேர்காணலுக்குப் போய் களைத்துப்போய் வீட்டுக்கு வருகிறான்.
அப்பா கேட்கிறார் “வேலை கிடைத்ததா?”
தம்பி கேட்கிறான் “எவ்வளவு சம்பளம்?”
தங்கை கேட்கிறாள் “ட்ரான்ஸ்போர்ட் உண்டா?”
அக்கா கேட்கிறாள் “போனஸ் உண்டா?”
வியர்வை வழியும் அவன் முகத்தை தனது புடவைத்தலைப்பால் துடைத்துவிட்டு அவனுக்கு குடிக்க குளிர்ந்த தண்ணீர் தந்து தாய் கேட்கிறாள் “சாப்பிட்டியா?”
சுகமான சுமையை
இடம் மாற்றினாள்
தாய்...
பிரசவத்துக்குப் பின்
வயிற்றில் இருந்து
இதயத்துக்கு.
கட்டுரை நிறைவடைகிறது. தாய்மை நிறைவடையாது. மீண்டும் சிந்திப்போம்.; சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்.
முத்துப் பேட்டை P. பகுருதீன்.B.Sc.,


