
இஸ்லாமிய திருமணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நம்மில் பெரும்பாலனவர்களுக்கு ஒரு காலத்தில் தெரியாமல் இருந்தது. கடந்த 30 வருட கால ஏகத்துவ எழுச்சியின் காரணத்தினாலும், ஒரு சில உள்ளூர் உலமாக்களின் கடின பிரச்சாரத்தினாலும். எளிமையான திருமணமே நபிவழி திருமணம் என்பதை கேட்டு மட்டும் வைத்துள்ளோம். ஆனால் நபிவழி திருமண முறைகளை நடைமுறைப்படுத்துவதை பெரும்பாலான நம்மவர்கள் தவற விடுகிறோம் என்பது எதார்த்தம்.
வரதட்சனை வாங்கக்கூடாது, வீண் விரையம் கூடாது, அல்லிப் பைனஹுமா துஆ கூடாது, ஆடல் பாடல் கூடாது என்று என்னதான் நபிவழி திருமணம், எளிமையான திருமணம் என்று மேடைகள் போட்டு பிரச்சாரம் செய்தாலும், இன்னும் திருமண என்ற பெயரில் பின் வரும் சில நிகழ்வுகள் பல குடும்பங்களில் கடைபிடிக்கப்பட்டே வருகிறது.
பெண் நிச்சயம் செய்யப்பட்ட பின்பு, மாப்பிள்ளை வீட்டார் கேட்காவிட்டாலும் மணப்பெண் வீட்டார் சீர் என்ற பெயரில் ஹல்வா, முர்தபா கோழிக்கறி என்று சீர் அனுப்புவது.
ஆடம்பர திருமண அழைப்பிதழ்.
திருமணத்திற்கு முன்பே அலைபேசியில் பேசி முடிவான ஆணையும் பெண்ணியும் பேசிக்கொள்ள்ள வைக்கும் பழக்கம்.
வரதட்சனை வாங்காத மாப்பிள்ளையாக இருந்தாலும், சீர் பணம் ரூபாய் ஒரு லட்சம், திருமணத்திற்கு முன்பு மணமகனை பெற்றவளிடம் வழங்குதல். (இதற்கு எப்படித்தான் இன்னும் சில ஏஜெண்டுகள் வயதான கலத்திலும் கலப்பணியாற்றுகிறார்கள் என்பது வேதனையான செய்தி)
மணப்பெண்ணுக்கு முகம் துடைப்பு மற்றும் கொட்ட பாக்கு, வெற்றிலையுடன் ஆடம்பர அழகு சாதணப் பொருட்களைக் கொண்டு சொப்பு அனுப்புதல்.
மணமகன் மற்றும் மணமகளுக்கு மலர் மாலை சுட்டுவது. ( இந்த லட்சணத்தில் மல்லிகைப் பூமாலை தான் ஹராம், பிளாஸ்டிக் பூமாலை ஹலால் என்று வியாக்கியானம் வேற)
மாப்பிள்ளை ஊர்வலம், பைத், தப்ஸ். (அன்மையில் தலை எடுத்துள்ளது)
இன்னும் அல்லிப்ஃ பைனஹுமா என்று தொடங்கும் ஆதாரம் இல்லாத துஆவை நிக்காஹ் முடிந்தவுடன் ஓதுவது. (வருடக்கணக்கில் அர்த்தம் மற்றும் அதில் குறிப்பிடப்படுபவர்களின் வரலாறு தெரியாமல் ஓதப்படும் ஒரே துஆ இது மட்டுமாகத்தான் இருக்கும்)
திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளையைக் கட்டியணைத்து வாழ்த்துதல்.
ஆண்களும் பெண்களுமாக மணமக்களைக் கேலி செய்தல்
மணமகன் பெண் வீட்டிற்கு அழைத்து வந்த பின்பு நபி (ஸல்) காட்டித்தராத துஆக்கள், பாத்தியாக்கள் ஓதுதல்!
மணப்பெண்ணை மணமகன் கைப்பிடித்த பின்பு, மணமக்களுக்கு பாக்கு வெற்றிலை கொடுப்பது.
தாலி கட்டுதல் - கருகமணி கட்டுதல்
திருமணம் முடிந்தவுடன், பெண்வீட்டில் குலவையிடுதல்.
திருமணம் முடிந்தவுடன் வெடி வெடித்தல் (தற்போது தலையெடுத்துள்ளது)
பெண் விட்டு பசியார சீர் என்று மணமகன் வீட்டார் கேட்டு வாங்கும் குறைந்த்து 50 சஹன் காலை அல்லது இரவு உணவு.
பெண் அழைப்பு என்ற பெயரில் தொடரும் குடும்பத்தவர்களின் தடாப்புடால் விருந்துகள்.
இருவீட்டாரும் மணமக்களை புகைப்படம் எடுத்து, whatsup groupகளின் வெட்கமில்லாமல் பகிர்வது.
பெண் வீட்டாரிடம் திருமணத்திற்குப் பின் பல சந்தர்ப்பங்களில் சீர் வரிசை என்ற பெயரில் கேட்டு வாங்குவது.
திருமணத்தில் கலந்துக்கொள்ளாத சொந்தக்காரன் யாராவது வெளிநாட்டிலிருந்து பல மாதம் கழித்து வந்தாலும், அவர்களுக்கு ஒரு சடங்கிற்காக திருமண விருந்து என்று கொடுப்பது.
பல்வேறு காரணங்களை காட்டி பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண் வீட்டாரிடம் விருந்துகளைக் கேட்பது.
பெண் வீட்டார், சம்மந்திவீட்டிற்கு, ரமழான் மாதத்தில் 200 வாடா, 200 சமூசா, ஆட்டுத்தலை நோன்புக்கஞ்சி கொடுப்பது.
தலைப்பிரசவச் செலவை பெண் வீட்டார் தலையில் சுமத்துவது.
முதல் குழந்தைக்கு நகை செய்து போடுமாறு பெண் வீட்டாரைக் கட்டாயப்படுத்துதல்.
என்று திருமண நிச்சயத்தில் ஆரம்பித்த்து கபுருக்குள் போய் வைக்கும் வரை தொடருகிறது அனாச்சாரம் என்ற பிற மத கலாச்சாரம்.
மேல் சொன்னவைகள் எதற்காவது நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்ததன் அடிப்படையில் ஏதாவது ஆதாரம் இருக்கா? நபிவழி திருமணம் என்று சொல்லும் பலர் வீட்டில் மேலே சொன்னவைகளில் குறைந்தபட்சம் ஒரு 5 நிகழ்வாவது நடக்கும் என்பது உண்மை. வியாக்கியானம் சொல்லி யாரும் மறுக்க இயலாது. நாம் அனைவரும் அல்லாஹ்விற்கு அஞ்சிக் கொள்வோம்.
யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (ஆதாரம்: அபூதாவூத் 3512)
"உண்ணுங்கள் பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்" (அல் குர்ஆன் 7:31)
"அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காக தமது செல்வத்தை செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்) யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகிவிட்டானோ அவனே கெட்ட நண்பன். (அல் குர்ஆன் 4:38)
“குறைந்த செலவில் நடத்தப் படும் திருமணமே அதிகம் பரக்கத் நிறைந்ததாகும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : அஹ்மத் : 23388
இன்று நம் மத்தியில் நடக்கும் திருமணங்கள் நம் சமுதாயம் மீண்டும் அறியாமை காலத்திற்கு செல்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. பிற மத கலாச்சாரம் கலந்துள்ள நம்முடைய சமுதாய திருமண நிகழ்வுகளுக்கு யார் காரணம்? சிந்தித்துப் பார்த்த்துண்டா?
‘குறைந்த செலவில் குறைந்த சிரமத்துடன் செய்யப்படும் திருமண நிகழ்ச்சியே சிறந்ததாகும்.’ என்ற நபிமொழியைக் காலத்துக்கு ஒவ்வாதது என்று ஒதுக்கி விட்டோமா?
நபிகள் நாயகம் (ஸல்) பரக்கத் என்று சொல்லுகிறார்களே! அதிக செலவில் செய்யப்படும் திருமணத்தில் பரக்கத்து இருக்கிறது என்று மனசாட்சியுள்ள எந்த ஓரு முஸ்லீமாலும் சொல்ல இயலாது. சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?.
எத்தனை திருமணங்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்த்தோடு ஆரம்பிக்கப்படுகின்றன? அழகை மட்டும் குறிகோளாக வைத்து நடந்த திருமணங்கள் திருப்தியோடு நீண்ட காலம் நிலைத்திருக்கின்றனவா?
ஊரையே அழைத்து விருந்து படைத்த எத்தனை குடும்பங்கள் கடன் நீங்கி நிமிர்ந்துள்ளன?
நம் மத்தியில் எத்தனை திருமணங்கள் இஸ்லாமிய குடும்பத்தை உருவாக்கி பூரணப்படுத்தப் போகின்றன ?
நாம் நம்மை மாற்றிகொள்ள வேண்டும். மகத்துவமிக்க இஸ்லாமிய கொள்கைகள் நம்மிடம் இருந்தும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு ஆசைப்படும் ஒரு மரத்துப் போன சமுதாயமாக நாம் இருக்கக் கூடாது .
அந்நிய கலாச்சாரத்தின் தாக்கங்கள் நம் ஒவ்வொருவரின் வீட்டு கதவுகளையும் நிமிடம் தவறாமல் தட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. வேண்டாத விருந்தாளியை தவிர்த்துக்கொள்வது என்பதில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். எதிர்வரும் சமுதாயத்திற்கு முன்மாதிரியாக நமது வாழ்க்கையை அமைத்து, இஸ்லாம் வளர நாமும் ஒரு காரணமாக இருக்கவேண்டும்.
எளிமையான திருமணம் தான் பரக்கத் (அபிவிருத்தி) நிறைந்ததாகும். மேலும் திருமணம் என்பது எளிமையானது, ஆடம்பரம் இல்லாதது அது எல்லோருக்கும் இலகுவாக அடையும் விதத்தில் இருப்பதை தான் இஸ்லாம் விரும்புகின்றது. ஆனால் இன்றைய முஸ்லிம்கள் நாங்கள் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று திருமணத்தில் போட்டி போட்டு ஆடம்பரமாக நடத்துபவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்.
மற்றொரு பதிவில் சந்திக்கலாம்.
தாஜுதீன்
இந்த பதிவை தொகுக்க உதவிய சுட்டிகள்.
http://www.readislam.net/portal/archives/6440
http://imamhabeeb.blogspot.ae/2012/04/blog-post_7854.html
http://nazeerudeen.blogspot.ae/2009/12/731.html
http://annajaath.com/archives/7079
http://www.islamiyapenmani.com/2013/01/blog-post.html