நீண்ட நாட்கள் கேட்க நினைத்த ஒன்று நமதூர் காலையில் பசியாற என்பதற்கும் பகலில் சாப்பாடு என்பதற்கும் என்ன வித்தியாசம் அவைகள் இரண்டும் வெவ்வேறு தரமான உணவுவகைகள்தானே ஏன் இரண்டையும் சாப்பாடு என்று சொல்லாமல் காலையில் மட்டும் பசியாற என்று சொல்ல வேண்டும் !?அது ஒருபக்கம் இருக்கட்டும் இனி மெயின் மேட்டருக்கு செல்வோம்...
நம்ம ஊரு சாப்பாடுன்னா விருந்து காலங்களில் முதலில் நினைவுக்கு (மந்தி அல்ல) வருவது காலை பசியாறுதல் இதில் இடியப்பம் சிக்கி எடுக்காமல் விக்கல் இல்லாமல் உள்ளே தள்ள வசதியா இருக்கும், பரோட்டா யாசிர் கட்டுரை நினைவுக்கு வந்தாலும் திங்காமல் இருக்க மாட்டோம் யாசிருக்காக வேண்டி எண்ணிக்கையை கொஞ்சம் குறைத்துக் கொள்வோம் ஏதோ நம்மளாலே முடிந்தது. விருந்து அல்லாத மற்ற நாட்களில் பெயரிட்டு பட்டியலிடும் வகைகளில் காலைப் பசியாற இநுதாலும் அதில் சில்வற்றில் ஒன்றான தோலுரித்தல் இது எத்தனை சாப்பிட்டோம் என்பதை கணக்கு பண்ண நல்ல ஆடிட்டர் பக்கத்தில் இருக்கணும் இந்த தோலையே கொஞ்சம் ஓட்டை ஓட்டையா சுட்டு ஜால்ரா என்று சொல்லி வடைக்கு மட்டுமா ஓட்டை இதற்கும் ஓட்டை போடுவோம் என்று சொல்லி வடைக்கும் ஜால்ராவிற்கு ஒரு நிரந்தர பகையை உண்டாக்கி வைத்து விட்டார்கள் நம்ம பொம்புளையளுவோ இதுஎல்லாம் காலை பசியாறவின் நமதூர் மெயின் டிஷ்.
சைடு டிஸ்சாக எறச்சி ஆணம் இது தாளிச்சு போடுறப்பவே நாம வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த செண்டெல்லாம் செயல் இழந்து போய்விடும் நுரை ஈரல் பெரட்டல் இதை கடிக்கிறபோதே பஞ்சை கடிப்பது போல் இருக்கும் ஒரு சில துண்டு கொஞ்சம் கடினமான மாறுபட்ட சுவைடன் வித்தியாசமாக இருக்கும் அது நுரை-ஈரல் கூட ஒண்ணா போட்டு ஆக்கிய செவரொட்டி, (ஆட்டுடைய பார்ட்ஸில் நாங்க எதையும் விட்டு வைக்க மாட்டோம்) ஆட்டுத் தலை இதில் செவுலு பீசுக்குத்தான்அதிக கிராக்கியா இருக்கும் (நோன்பில் தலை கிடைக்காது) ஆட்டு மூளையை யாரும் ஒரு மூலையில் போடுவது கிடையாது. இதில் ஏதாவது ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்டோ நமதூர் காலை பசியாறுதலையில் கண்டிப்பா இருக்கும்.
அடுத்து இனிப்பு வகை கடல் பாசி வண்ணத்தாலே ஒன்னு வகையாலே ஒன்னா இருக்கும் இந்த கடப்பாசியை எடுத்து வாயில் வைத்தால் சூடான சட்டியில் ஒரு துண்டு வெண்ணெயை எடுத்து போட்டால் வழுக்கி கொண்டு போவது போல் வழுக்கிக் கொண்டு போய் குடலில் குதிக்கும். வட்டில் அப்பம் (இதை மறந்தால் இந்தப் பதிவு மதிப்பிழந்து விடும் ஒரு சிலருக்கு இதப் பற்றி பேசினாலோ எழுதினாலோ பிடிக்காது) அடுத்து முந்திரி பருப்பு உலர்ந்த திராட்சை போட்டு வறுத்து ரவ்வா அல்லது ஜவ்வரிசி கஞ்சி இது எல்லாத்தையும் காலை பசியாற என்று சொல்லி ஒண்ணா உட்காந்து கட்டு கட்டு என்று கட்டிபுட்டு தனித்தனியா ஆஸ்பத்திரிக்கு போய் கொழுப்பு குறைக்க மாத்திரை (கொலஸ்ட்ரால் டேப்லெட் ) வாங்கி தின்பது ஒரு தனிக்கதை.
இந்த காலை பசியாறுதலையை செய்வது எல்லாம் பெரும்பாலும் வீட்டுப் பெண்கள்தான்
பகல் சாப்பாடு !
விஷேச காலங்களில் 'அஞ்சு கறி சோற்றில் நெய்ச் சோறு' நல்லா வச்சாங்க பெயரு சோத்துலே எந்த அளவுக்கு நெய் வடியூதோ அந்த அளவுக்கு நாக்குலே உள்ள ருசி பார்க்கும் நரம்புகளுக்கு வேலை அதிகம். எறச்சி ஆணம் இது தாளிக்கும் போதே கோடையில் ம ழைபெய்தால் (மண்) புழுதி வாடை வருவது போல் அரை கிலோ மீட்டருக்கு தாளிப்பு வாடை மூக்கைத் துளைக்கும் ஒரு சில சென்சிட்டிவ் மூக்கு பார்ட்டிகள் வாசத்தை வைத்தே சமையல்காரன் பெயரைச் சொல்லி விடுவார்கள் அடுத்து உருளைக் கிழங்கு பச்சடி இது சஹன் சாப்பாட்டில் ஓபனிங் பேட்ஸ் மேன். இந்த உருளைக் கிழங்கு பச்சடி கூட ஆட்டு ஈரல் மற்றும் கிட்னியும் சேர்ந்து வந்தால் அங்கு சமைத்த சமையல் காரருக்கும் அந்த சகனில் சாப்பிட உட்கார்ந்தவங்களுக்கும் ஒரு லிங்க் இருக்கணும்.
அடுத்து கத்தரிக்கா பச்சடி இதை சகனில் இறக்கி விட்டதும் கத்தரிக்காவில் நான்கு விரலை வைத்து ஒரு கோடு போட்டது போன்ற இழுப்பு கத்தரிக்காவின் தோல் மட்டும் சகனில் இருக்கும் ரா-மெட்டீரியல்ஸ் அனைத்தும் அடுத்த வினாடி வாயில் இருக்கும் இதை வாயில் போட்டு மெல்லும் போது எண்ணெயில் வருபட்ட கடுகும் உளுத்தம் பருப்பும் சுவையும் ஒன்னு சேர்ந்து மறு சோறு கொண்டு வா என்று கேட்கும். இதில் எண்ணெயில் வறுபட்ட சின்ன வெங்காயம் தான் ஹீரோ.
அடுத்து சோற்றில் எறச்சி ஆணத்தை ஊற்றி நாத்து நடும் வயலில் உழவு உழுதது போல் பெரட்டி பெரட்டி எடுத்து மல்லாவில் இருந்த இரண்டு துண்டு கறியில் ஒரு துண்டை காலி செய்து விட்டு மறுசோறு வைத்து இருக்கும். பாக்கி ஆணத்தை ஆளுக்கு கொஞ்சமா ஊத்திக் கொண்டு அது மேலே கொஞ்சம் புளியாணத்தை ஊற்றி பக்கத்துஆளு பக்கம் உள்ளது இந்தப் பக்கம் வராமலும் அதே வேலை நம்ம பக்கம் உள்ளது பக்கத்து ஆளு பக்கம் போகாமலும் சகன் டெக்ணிக்கை இம்மி பிசகாமல் கடைபிடித்து அதன் பிறகு வயற்றில் இருக்கும் கொஞ்சனிஞ்ச எடத்துலயும் கேரட் சுவிட்டை அள்ளி போட்டு அடைத்து விட்டு குடிக்க வைத்திருக்கும் பாக்கெட் தண்ணீரில் கை கழுவி விட்டு சகனுக்கு கிழே விரித்த பேப்பரில் கை துடைத்து விட வேண்டியதுதான்.
இந்த பகல் சாப்பாட்டை சமைத்தது மேஸ்த்திரி யாருன்னு விசாரிக்க மனசு துடிக்கும் !
இப்போ சொல்லுங்கோ உங்களுக்கு பிடித்தது காலை பசியாறவா பகல் சாப்பாடா ? இரண்டும் பிடிக்கும் என்று சொல்லி காலை பசியாறுதலையும் பகல் சாப்பாட்டையும் ஒரே சகன்லே போட்டு ஒழப்பி வச்சிரக் கூடாது.
மந்தியில் மருத்துவ குணங்கள் இருப்பது போன்றும் இவ்வகை சாப்பாட்டில் மயக்கும் குணங்கள் இருப்பது போன்றும் சமையல் குறிப்புகளை சொன்னாலும் இரண்டும் ருசிக்காக ரசித்து சாப்பிட வைக்கும் சாப்பாடுகளே !.
Sஹமீது



