
அடிக்கடி ஆட்டிவைத்தது
அம்மாவைப் பிடித்திருந்த
பேய்
அதிவேகமாகத்
தலையைச் சுழற்றி
பிரிந்துகிடக்கும் நீள்கேசத்தை
சாட்டையென
இடமும் வலமுமாய்ச்
சொடுக்கும்
அத்தனைக் கொடூரமான
அலறல்களும்
ஆக்ரோஷமானக் கூச்சலும்
அம்மாவின் குரலாய்
இருந்ததில்லை
நான்கு ஆட்கள்
பிடித் தழுத்தியும்
முண்டியடிக்கும்
அம்மாவிடம்
அப்படியொரு சக்தியை
கண்டதில்லை நான்
'மொத்தி மீன் மண்டை'யும்
'காளிமார்க் கல'ரும்
கொடுத்தாலோ
வாங்கித்தருவதாய் வாக்களித்தாலோ
மலையேறிப் போகும்
அம்மாவைப் பிடித்திருந்த
முச்சந்தி வீட்டு
'மோமுதாமா' பாட்டி
ஆத்திரத்தில்
'கல'ருக்குப் பதிலாக
'படிக்கன் தண்ணி'யைக்
குடிக்கத் தந்த
தாய்மான் சொன்னது
'குடித்தது அம்மா அல்ல' என்று
என்
அக்காளையும் தம்பியையும்
குழந்தைகளாகவே கொன்றது
அம்மாவின் பேய்தான்
என்ற மிரட்சி
என்னை அண்டவிடாமலேயே
வைத்திருந்தது
அதன் பிறகு
கிழிந்த நாராய்
பாயில் கிடக்கும்
அம்மா
என்னை
அருகில் அழைத்து
மெல்ல அனைத்துக் கொள்ளும்
தலையணையைக்
கண்ணீர் நனைத்துச் செல்லும்
பிற்காலத்தில்...
பிழைப்பு வேண்டி
பல வருடங்கள் முன்பு
பரதேசம் பயணப்பட்ட
அப்பாவை
அழைத்து வந்து
கடவு அட்டையக் கைப்பற்றி
காடு கழனி கவனிக்கச் சொல்லி
வீட்டோடு வைத்த பிறகு...
அப்பாவின் மீதான
கோபதாபங்களின்போது
ஓர்
அதட்டலான
முறைப்புக்காக மட்டுமே
அம்மா
பேயைப் பயன்படுத்திக் கொண்டது !
சபீர் அஹ்மது அபுஷாரூக்