அதிரைக் கடலின் அலையைக் காண
ஆட்டோ ஏறிச் சென்றோமே
குதிரைப் பாய்ச்சல் போலக் கிளம்பிக்
குதித்துச் சென்ற(து) ஆட்டோவும்.
மாலை மதியக் குளிரைப் பெற்று
மனத்துக் கினிய உணர்வோடு
சாலை கடந்து, சோலை புகுந்து
சரியாய்க் கடலின் கரைவந்தோம்.
கரையை மோதும் அலையைக் கண்டு
காலைக் கழுவ ஆமினம்மா
தரையில் நின்று தாவிச் சென்று
தண்ணீ ருக்குள் கால்விட்டாள்.
வங்கக் கடலின் சீற்றத் தாலே
வந்த சுனாமிப் பேரலையின்
பங்கம் மனத்தில் வரவே வாப்பா,
“பார்த்துப் போம்மா!” என்றார்கள்.
சின்னக் குட்டி பாத்திம் மாவின்
சிரித்த முகமோ மாறிற்று
கன்னத் தில்கை வைத்துக் கொண்டு
கடலைப் பார்த்து வியப்புற்றாள்!
சுண்டல் பொதியைக் கண்டான் ஹாமிது
சூடாய்த் தின்ன விரும்பியவன்
சண்டை பிடித்து வாங்கித் தின்று
சாந்திக் கடலில் இறங்கினனே.
இருட்டு வருமுன் வீடு திரும்ப
எண்ணங் கொண்டார் எல்லாரும்
திருட்டு நரிகள் நண்டு பிடிக்கத்
தேடி வருமுன் திரும்பினரே!
அதிரை அஹ்மது


