மக்காவிலிருந்து மதீனாவுக்கு நபியவர்களும் முஸ்லிம்களும் வந்து சேர்ந்தவுடன் செய்த முதற்பணி, ஆங்கோர் இறையில்லத்தை நிறுவியதாகும். அப்பணியில் கற்களையும் மணலையும் சுமந்து ஆர்வத்துடன் உழைத்த தம் தோழர்களைக் கண்டு உவகையுற்று, நான்கடிக் கவியொன்றை நபியவர்கள் பாடி ஊக்கப் படுத்தினார்கள்:
هذا الحمال لا حمال خيبر، هذا أبر ربنا و أطهر
اللهم إن الأجر أجر الاخره ، فارحم الأنصار و المهاجرة
இதன் தமிழ்க் கவியாக்கம்:
கற்கள் சுமக்கும் இச்சுமையோ
கைபர்ச் சந்தைச் சுமையன்று
பொற்புள தூய நன்மையினைப்
பொழியும் இறையின் சுமையாகும்.
இறைவா! எமது கூலியதோ
இறவா மறுமைக் கூலியதே
நிறைவாய் மக்கா மதீனாவின்
நேசர்க் குதவி புரிந்திடுவாய்!
(சஹீஹுல் புகாரீ – 3906)
இக்கவிதையடிகளைக் கேட்டு ஊக்கமுற்ற ஆங்கு பணி புரிந்துகொண்டிருந்த நபித்தோழர் ஒருவர்,
இறைவா! சிறந்த நன்மையெலாம்
இறவா மறுமை நன்மைகளே
நிறைவாய் மக்கா மதீனாவின்
நேசர்க் குதவி செய்திடுவாய்!
என்று திருப்பிப் பாடி, மற்றவர்களுக்கும் ஊக்கப் படுத்தினார்.
(ஃபத்ஹுல் பாரீ)
இதைக் கேட்ட இன்னொருவர், கருணை நபியின் கடும் உழைப்பைக் கண்டு,
உன்றன் தூதர் பணிசெய்ய
உற்றுப் பார்த்து நாங்களெலாம்
நின்றோ மாயின் எம்மைவிட
நீசர் யாரும் இலரன்றோ!
என்று பாடினார்.
(ஃபத்ஹுல் பாரீ)
அவரையடுத்து, அறிவுச் செல்வர் அலியவர்கள் பாடினார்:
தொழுகைப் பள்ளிப் பொறுப்பேற்றுத்
தொழுது வணங்கும் நற்செயல்போல்
முழுமை யாம்நற் செயலுண்டோ
மொழிவீர் நற்பணி செய்வோரே?
(ஃபத்ஹுல் பாரீ)
இவ்வாறு, நபி (ஸல்) அவர்கள் கடும் உழைப்பின்போது கவி பாடி ஊக்கமூட்ட, தோழர்களும் தம் பங்குக்குக் கவி பாடியதை நபியவர்கள் ஏற்றுக்கொள்ள, அவ்விடத்தில் ஒரு சிறு கவியரங்கமே கொலு வீற்றது!
அண்ணலெம் பெருமான் (ஸல்) அவர்கள் தமது நபித்துவத்தின் தொடக்கத்தில் எதிர்கொண்ட போரின்போது ஒரு மலை மீது ஏறிச் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது கற்பாறையொன்றில் தடுக்கி விழப் போனார்கள்! கல் தடுக்கிய காலை நோக்கினார்கள்; முன் விரலிலிருந்து குருதி வடிந்துகொண்டிருந்தது! அந்த வேதனை அவர்களை வருத்தியபோதும், தமது கால் விரலைப் பார்த்துக் கீழ்க்கண்டவாறு கவியடியொன்றைக் கூறி, வேதனையை மாற்றிக்கொண்டார்கள்:
إصبع دميت هل أنت
إلا
و في سبيل الله ما لقيت
இதன் தமிழ்க் கவியாக்கம்:
செங்குருதி சிந்துகின்ற விரலே உன்கால்
செல்லுகின்ற பாதையிறைப் பாதை யன்றோ?
(சஹீஹுல் புகாரி – 2802 / 6146, சஹீஹ் முஸ்லிம் - 3675)
‘தாரகுத்னி’ எனும் நபிமொழித் தொகுப்பில் பதிவாகியுள்ள நபிமொழி ஒன்று நமது ஆய்வுக்கு உரம் சேர்க்கின்றது:
كلام فحسنه حسن و قبيحه قبيح
“நற்கருத்துடைய சொற்கள் கவிதைகளாகும். தீய கருத்துள்ளவை தீயவையாகும்.”

