
அவரின் மனைவி திருப்பி கேட்டிருக்கிறார் “நேற்று வரை நன்றாக இருப்பதாக டாக்டர்களும் நர்சுகளும் சொன்னார்கள் ஏன் கம்பெனியில் இருப்பவர்களும் சொன்னார்கள் திடீரெண்டு என்ன ஆச்சு ? ஏன் உங்கள் கம்பெனி முதலாளி எனக்கு இந்த தகவலை சொல்லாமல் வேறு ஒருவரிடம் சொல்லச் சொல்கிறார்” என்று வெடித்தார், கதறினார்.
அந்த களோபரத்தினை தொடர்ந்து நானும் 10 நிமிடம் கழித்து ‘சார்ல்டன்’ மனைவியிடம் பேசினேன், முடிந்தவரை சூழலை எடுத்துச் சொன்னேன் அவரால் இழப்பை பொறுக்க முடியாமல் வார்த்தைகளை கொட்டினார் பொறுமை காத்தேன்.
இதற்கு முன்னர் எங்கள் கம்பெனியில் நிகழ்ந்த ஐந்து இறப்புகளை சந்தித்து இருந்ததால் எவ்வாறான நடைமுறைகளை கையாள வேண்டும் என்பதை ஏற்கனவே தெரிந்து இருந்ததால் அலைச்சல் குறைவே இருந்தாலும் மன உலைச்சல் அதிகம் இந்த விஷயத்தில்.
நானும் கம்பெனி பி.ஆர்.ஓ.வும் பெல்ஹோல் மருத்துவமனைக்கு தேவையான டாகுமெண்ட்களை சேகரித்துக் கொண்டு மதியம் 02:30 மணிக்கு சென்றடைந்தோம், அதற்குள் அவரின் உடலை ஐஸ்பெட்டியில் வைத்து பூட்டி விட்டனர். உடணடியாக பார்க்க வேண்டும் என்றதும் எங்களுக்கு திறந்து காட்டினார்கள்.
போலீசுக்கு மதியமே தகவல் கொடுக்கப்பட்டது அவர்களும் பார்த்து விட்டுச் சென்றிருக்கின்றனர், எங்களின் வருகைக்காக காத்திருந்ததால் மீண்டும் போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் எங்களிடம் அடையாளம் சரியா ? இவர்தானா என்று உறுதி செய்து கொண்டதும் அருகில் இருக்கும் பரஹா அரசு மருத்துமனைக்கு வரச் சொன்னார்கள், பெல்ஹோலில் கொடுத்த இறப்பு அறிவிப்பு சான்றிதழுடன் அங்கே சென்றதும் அவர்கள் வழக்கமாக கொடுக்கும் (அரபி மொழியில்) கிளியரன்ஸ் லெட்டரை தயார் செய்து தந்தார்கள். அதற்கு முன்னர் உடலை எங்கு அனுப்ப இருக்கிறோம் என்றும் கேட்டுக் கொண்டார்கள். (அதில் பெல்ஹோல் மருத்துவமனைக்கு, ஃபிலிப்பைன்ஸ் கான்சுலேட்டுக்கு, இறப்பு / பிறப்பு சான்றிதழ் வழங்கும் அலுவலகத்திற்கு, துபாய் ஹெல்த் அத்தாரிட்டி சோனாப்பூர்க்கு, அடுத்து ஏர்லைன்ஸ்க்கு)
பெல்ஹோல் மருத்துவமனையில் அவர்களுக்கான போலீஸ் லெட்டரைக் கொடுத்ததும், அலுவலகத்திற்கு செல்லுங்கள் என்றனர் அங்கே சென்றதும் ஐ.பி.பில்லிங்க் செக்ஷனுக்கும் செல்லுங்கள் என்றனர் (இன் பேஷண்ட் பில்லிங்). அனைத்து முஸ்தீபுகளையும் தாண்டி அரை மணிநேரம் காக்க வைத்த அவர்கள் 68 பக்கங்கள் அடங்கிய பிரிண்ட் அவுட்டை எடுத்து கடைசிப் பக்கத்தில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். அது என்ன வென்று பார்க்கலாம் என்று ஒவ்வொன்றாக திருப்பிப் பார்த்தால், அவர் அங்கு அட்மிட் ஆனதிலிருந்து ஐஸ் பெட்டிக்குள் அடைக்கும் வரையிலான பில்.
தொகை மிகப் பெரியதாக இருந்தது, ஏன் எதற்கு எப்படி என்று கேள்விகள் கேட்டுக் கொண்டே அந்த பில்லிங்க் ஸ்டாஃப்போடு பேசிக் கொண்டிருக்கும்போதே நர்ஸ் வந்தார் "சீக்கிரம் பணத்தை செலுத்தி விட்டு கிளியரன்ஸ்ஸை எடுத்துக் கொண்டு எம்.ஐ.சி.யூ.வுக்கு வாருங்கள்” சென்று சொல்லிவிட்டுச் சென்றார்.
கூட்டிக் கழித்து இன்சூரன்ஸ் அப்ரூவல் செய்தது போக மீதம் இன்னும் திர்ஹம் 9,400 செலுத்தி விட்டால் கிளியரன்ஸ் தருவோம் என்றார், சரி இதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்று அந்த தொகையை கட்டிவிட்டு மாளிகைக் கடை சிட்டு போல் ஒரு பேப்பரில் எழுதி கொடுத்தார் ‘ஒகே’ என்று அதில் அவரின் கையெழுத்தும் அந்த மருத்தவமனையின் தலையெழுத்தையும் அச்சடிக்கப்பட்டிருந்தது.
அந்த துண்டுச் சீட்டை எடுத்துக் கொண்டு எம்.ஐ.சி.யூ.க்கு சென்றதும் 'ஜஸ்ட் வெயிட்” என்றார்கள் காத்திருந்தோம். 'சார்ல்டனின்' உடமைகளை ஒவ்வொன்றாக பிரித்து பிரித்து எழுதிக் கொண்டு தனித் தனி பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொடுத்தார்கள். எங்கே கிளியரன்ஸ் என்றதும், காத்திருங்கள் போலீஸ் ஆம்புலன்ஸை அழைத்திருகிறோம் என்றனர். எனக்கோ அதற்குமேல் பொறுமை காக்க முடியவில்லை "இறப்புக்கான காரணம் - என்ன வென்று சர்டிபிகெட் தருவதற்கு ஏன் இந்த இழுத்தடிப்பு என்று சத்தம் போட்ட சிறிது நேரத்திலேயே எல்லாமே ரெடி என்றனர்.
மீண்டும் போலிஸுக்கு தகவல் கொடுத்து அவர்களும் வந்தனர் ஆம்புலன்ஸோடு (ஏன் தகவல் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை) அவர்கள் வந்ததும் நேரடியாக போஸ்ட்மார்ட்டம் செய்யும் கிஸ்ஸஸ் மருத்துவமனைக்குத்தான் எடுத்து செல்வார்கள் என்று எனக்கு தெரியும், இருந்தாலும் இது மருத்துவமணையில் இயற்கை(!?) மரணம் ஏன் போஸ்ட்மார்ட்டம் என்று ஆட்சேபனை தெரிவித்தேன் அப்போதுதான் போலீஸ் மீண்டும் முதல் மரண அறிவிப்பு சான்றிதழை மீண்டும் வாசித்து பார்த்தார் அவரும் நான் சொல்வதையே சொல்லிவிட்டு போலீஸ் ஆம்புலன்ஸில் எடுத்து செல்ல மாட்டோம் முனிசிபாலிட்டி ஆம்புலன்ஸில்தான் எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டு அவர்கள் திரும்பிச் சென்றனர்.
பெல்ஹோல் மருத்துவமனை அலுவலர்களோ எங்களிடம் ஒரே ஒரு ஐஸ் பெட்டிதான் இருக்கிறது இடமில்லை எப்படியாயினும் இன்றே பாடியை எடுத்துச் செல்லுங்கள் என்று வற்புறுத்தினர். நாளை வரை இங்கேயே இருக்கட்டும் என்று சொன்னேன் காலையில் Death Certificate இறப்பு சான்றிதழ் பெற்றதும், கான்சுலேட் என்.ஓ.சி.யும் பெற்று அதன் பின்னர் பாடியை சோனாப்பூருக்கு எடுத்துச் செல்கிறோம் என்றேன். பாடி இங்கு இருக்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் நீங்கள் சார்ஜ் கட்டணும் என்றானர். நாங்களும் சரியென்று சொல்லிவிட்டு வந்துவிட்டோம் அன்று இரவு 10:30 இருக்கும்.
அடுத்த நாள் பிப்ரவரி 24ம் தேதி, காலை 07:30 மணிக்கு துவங்கியது அன்றைய அலைச்சலின் அடுத்தக்கட்டும், நானும் என்னுடைய கம்பெனி பி.ஆர்.ஓ.வும் முதலில் இறப்புச் சான்றிதழ் வாங்குவதற்கு அல்பர்ஹா கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்குச் சென்றோம் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அங்கே ஒரு மணி நேரத்தில் வேலைகள் முடிந்தது. அதற்கிடையில் சார்ல்டன் மனைவிக்கும் குழந்தைக்கும் விஷா அப்ளை செய்ய நண்பரின் டிரவால்ஸில் ஏற்பாடு செய்துவிட்டு நகர்ந்தோம்.
கிடைத்த இறப்புச் சான்றிதழ் அரபியில் இருப்பதால் அதனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய மற்றொரு இடத்திற்கு சென்று அதனையும் பெற்றுக் கொண்டோம். பிலிப்பைன்ஸ் கான்சுலேட்டுக்கு சென்றோம் திர்ஹம் 100 கட்டி அவர்களிடம் ஒரு NOCஐ பெற்றுக் கொண்டதும், பாஸ்போர்ட்டையும் உடணடியாக கேன்ஷல் செய்து (பாஸ்போர்ட்டின் அட்டை முதல் இரண்டு பக்கங்களில் ஓட்டை போட்டு) கொடுத்தார் அந்த ஃபிலிப்பினோ ஆபிசர்... !
அங்கிருந்து நேராக அல்முசினா / சோனாப்பூர் என்ற இடத்தில் இருக்கும் துபாய் ஹெல்த் அத்தாரிட்டி மருத்துவமனைக்குச் சென்று அங்கே பாடி ஸ்டோரேஜுக்கு இடம் இருக்கிறதா என்று விசாரிக்கச் சென்றோம் (அங்கு இடம் இல்லை என்றால், கிஸ்ஸஸில் இருக்கும் போலீஸ் மார்சுவரியில்தான் இடம் பார்க்கனும்). நல்ல வேலை இடமிருந்தது, அங்கிருந்து அனுமதி வாங்கிக் கொண்டு முனிசிபாலிட்டி ஆம்புலன்ஸுக்குரிய தொகையை அங்கேயே கட்டிவிட்டு மீண்டும் பெல்ஹோல் மருத்துவமனைக்கு வந்தோம்.
நேரம் மதியம் 03:30 மணி, நாங்கள் மருத்துவமனையை அடைந்த அரை மணிநேரத்தில் ஆம்புலன்ஸும் வந்தது அடுத்து என்ன பாடியை ஆம்புலன்ஸில் ஏற்றி அல்-முஹ்சினா / சோனாப்பூர் மார்சுவரிக்கு அனுப்ப வேண்டும். ஆனால், மருத்துவமனை பெண் அலுவலர் மீண்டும் ஓடி வந்தார் பாடியை ரிலீஸ் செய்ய ஸ்டோரேஜுக்கு பணம் கட்ட வேண்டும் அதன் பின்னர்தான் ரிலீஸ் செய்வார்கள் என்றார் (என்னடா கொடுமையிது !) வேறு வழி !?
முந்தைய நாள் (அதாவது அனைத்து தொகையும் செட்டில் செய்த பின்னர்) இரவு 07:30 மணியிலிருந்து அடுத்த நாள் மாலை 04:00 மணிவரை ஒரு மணிநேரத்திற்கு திர்ஹம் 100 என்று நன்றாகவே கணக்கு செய்து கட்டச் சொன்னார்கள், அங்கே திர்ஹம் ஐம்பது குறைவாக இருந்தது அந்த ரிசிப்டில் டிஸ்கவுண்ட் திர்ஹம் 50/= (ஸ்பெஷல்) கையில் எழுதிக் கொடுத்தார்.
அங்கிருந்து பாடியை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் கிளம்பியது மாலை 5:00 மணியாகிவிட்டது. மீண்டும் ஜெபல் அலி அலுவலகம் வந்து அடுத்த நாட்கள் செய்ய வேண்டிய பணிகளை நெறிப்படுத்தி விட்டு வீட்டுக்கு வந்தேன் இரவு 10:30 மணி.
அடுத்த நாள் ஃபிப்ரவரி 25ம் தேதி, விசா கேன்சலேஷன் 09:00 மணிக்கே செய்து கொண்டு அவரின் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு, நேராக பிலிப்பைன்ஸ் கான்சுலேட்டுக்கு சென்று அங்கே அவர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் கொடுத்து விட்டு அவரது மனைவிக்கும் மகனுக்கும் ஏற்பாடு செய்திருந்த விஷாவுக்கும் NOC வாங்கி விசாவை பிலிப்பைன்ஸுக்கு அனுப்பிவிட்டு காத்திருன்தோம் ஃபேமிலி வருகைக்காக.
பிலிப்பைன்ஸில் இருக்கும் பயணச் சடங்குகளை முடித்துக் கொண்டு 27ம் தேதிதான் சார்ல்டன் மனைவி மட்டும் வந்தார். அன்று மதியம் 2:00 மணிக்கு அவரை அழைத்துக் கொண்டு மார்சுவரிக்கு சென்று இறந்தவரின் உடலை பார்க்கச் சென்றோம். அவர் இறந்தவரின் (சார்ல்டன்) உடலை கட்டிப் பிடித்து நிறைய ஃபோட்டோ எடுத்துக் கொண்டார் (விளக்கம் மிக நீண்டதாக கொடுத்தார் ஃபோட்டோக்களை ஏன் எடுத்தேன் என்று). அன்று மாலையே அவரை ஜெபல் அலிக்கு அழைத்து வந்து அவரின் கணவருடைய உடமைகளை அவரை வைத்தே பேக் செய்து மொத்த 7 பாக்ஸ் மொத்தம் 382 கிலோ அவரே அனைத்து பெட்டிகளிலும் அவரது முகவரியை எழுதினார்.
அடுத்த நாள் 09:00 மணிக்கு அவரை எங்களது தலைமை அலுவலகத்திற்கு அழைத்து வந்து, அவரது கணவருக்கு சேர வேண்டிய அனைத்து வகையான செட்டில்மெண்டை பணமாகவே கொடுத்து விட்டு கையெழுத்தும் வாங்கிக் கொண்டோம். அன்றே அவர் மீண்டும் மருத்துவம் செய்த டாக்டரை சந்திக்க வேண்டும் என்று அடம் பிடித்தார் அவரை பெல்ஹோல் மருத்துவமனைக்கு அழைத்து சென்று டாக்டரை பார்க்க வைத்து (அது ஒரு பெரிய கதை) அவரை அங்கிருந்து டாக்ஸியில் அனுப்பி விட்டு நான் வீடு திரும்பும் போது மணி இரவு 8:00.
சனிக்கிழமை மார்ச் 2 2013, சார்ல்டன் மனைவி திரும்பிச் செல்வதற்கான டிக்கெட்டை ரீகன்பாஃர்ம் செய்து விட்டு (மார்ச் 3ம் தேதி காலை 10:00மணிக்கு) அந்த டிக்கெட் நகலை எடுத்துக் கொண்டு மீண்டும் சோனாப்பூர்.
அங்கே பாடி பேக்கிங்கிற்கும் அவர்களின் சேவைக்கான கட்டணம் திர்ஹம் 1010/- (மூன்று நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும் ஊசி, மருந்து தெளிப்பு) மற்றும் பெட்டிக்கு (மரப்பெட்டி) திர்ஹம் 1,500/- என்று கட்டணங்களை செலுத்திவிட்டு எல்லாம் ரெடியாக பகல் 01:30 மணியாகிவிட்டது. அடுத்து ஆம்புலன்ஸ் (மீடும் திர்ஹம் 210/- மார்சுவரியிலிருன்து எமிரேட்ஸ் ஸ்கை கார்கோ (துபாய் கார்ஜோ வில்லேஜுக்கு) எடுத்துச் செல்ல கட்டணத்தையும் செலுத்தியாகிவிட்டது.
ஆம்புலன்ஸ் அரைமணி நேரத்திற்குள் பாடியை எமிரேட்ஸ் கார்கோவில் இறக்கி வைத்து விட்டு சென்றது. அடுத்து என்ன நேரடியாக அங்கே இருக்கும் போலிஸ் அலுவலகத்தில் அவர்களுக்கு தேவையான ஆவணங்களை கொடுத்து விட்டு, NOC (ஸ்டாம்புதான்) அடித்துக் கொண்டு, மீண்டும் பாடி வைக்கப்படிருந்த அந்த மேற்கூறையுடன் இருந்த பக்கவாட்டில் திறந்த வெளித் திண்ணைக்கு வந்து அங்கிருந்த எமிரேட்ஸ் ஸ்டாஃபிடம் அனைத்து ஆவணங்களை காட்டியதும் அவர் பாடிக்கு எடை போட்டார். அப்புறம் அதனை ஸ்கேனிங்க் உள்ளே அனுப்பிவிட்டு எடையை எழுதி சீல் அடித்து தந்தார்.
ஸ்கேனிங் உள்ளே சென்றதும் அங்கே உள்ளே இருந்த போலீஸ் அந்தப் பெட்டியை சரிபார்த்து உள்ளே இருப்பது அவர்தானா என்று என்னிடம் கேட்டுவிட்டு மற்றொரு கையொப்பம், மொபல் நம்பர் வாங்கிக் கொண்டார்.
கட்டணங்கள் செலுத்த எமிரேட்ஸ் அலுவலகம், அங்கே அனைத்து ஆவணங்களையும் கொடுத்ததும் எடைக்கு எவ்வளவு என்று சொன்னதும் அந்த தொகையை கட்டிவிட்டு அவர்கள் கொடுத்த ஏர்வே பில்லை வாங்கிக் கொண்டு, பாடியுடன் செல்லும் அவரது மனைவியின் டிக்கட்டோடு கார்கோவை புக்கிங்க் செய்துவிட்டு அங்கிருந்து நகரும்போது மாலை 6:00 மணி.
அடுத்த நாள் அதிகாலை 06:30 மணிக்கு டெர்மினல் - 3 சார்ல்டன் மனைவியிடம் அவருக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் கொடுத்து அனுப்பிவைக்க அங்கே சென்றதும் மீண்டும் ஒரு குண்டை தூக்கிப் போட்டார்....
ஊருக்கு சென்றதும் அவரது கணவரைப் புதைக்க இடம் வாங்க வேண்டும் அதற்கு யார் பணம் தருவார்கள் என்று !
இத்தோடு போதும் தானே.... (இதனை வம்பு செய்து வாசிக்க வைத்த வசை என்னோடு போகட்டும்)
அபூஇப்ராஹீம்