அலசல் தொடர் பதினொன்று
கடந்த சில வாரங்களாக தோலுரித்துக்காட்டப்ப்பட்ட இந்த மனு நீதியின் அலசல் தொடர் அல்ல அவலத்தின் தொடர் முடிவுறும் நிலைக்கு வந்துவிட்டது. பலமுறை கடலில் மூழ்கி முத்தெடுக்கும் மனநிலையில் இருக்கும் எங்களைப்போல எழுதுபவர்களுக்கு - இப்படிப் பட்ட இடர்தரும் தொடர்களை எழுதும்போது சாக்கடையில் இறங்கிய அவல அனுவபம்தான் இருக்கும். அந்த மனநிலைதான் எனக்கும் இருக்கிறது. ஆனாலும் ஒரு தீயை தீ என்று சுட்டிக்காட்டிய – பாம்பை பாம்பு என்று கவனப்படுத்திய மனதிருப்தியும் இருக்கிறது.
இதுவரை எழுதப்பட்ட பத்து அத்தியாயங்களின் தொகுப்புரையை தரும் முன்பு, தொடர்பான சில செய்திகளை இன்னும் இங்கு பகிர விரும்புகிறேன்.
கிருத்துவம் , இஸ்லாம், புத்தம் என எல்லா மதங்களும் மதவெறி பிடித்தவை. அதனால் தான் அந்த மதத்தினர் மத மாற்றத்தில் ஈடுபடுகின்றனர் என்று ஆரிய சமாஜத்தை சேர்ந்த இருவர் அண்ணல்.அம்பேத்கரிடம் வாதம் புரிந்தனர்.
சிரித்துக் கொண்டே அம்பேத்கர் சொன்னார், நண்பர்களே, உங்கள் ஹிந்து மதத்திற்கு மதம் மாறி வருபவனை எந்த ஜாதியில் சேர்ப்பது என்ற பிரச்சனையால் தான் உங்களால் மதமாற்றத்தில் ஈடுபட முடிவது இல்லை என்று கூறினாராம். இதுவே உண்மை.
வரலாற்றுப் பின்னணியில் பார்ப்போமானால் இந்தியா முதலிய இதர நாடுகளில் அந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த மதங்கள் – அத்தகைய மதங்களின் சொந்த குறைபாடுகளால் –அவற்றைப் பின்பற்றிய மக்களுக்கே மனமாற்றம் ஏற்பட்டு – தூக்கி எறிந்துவிட்டு – நல் வழி காட்டும் என்று அவர்கள் நம்பிய பிற மதங்களை தழுவினர். இப்படி வெறுக்கப்பட்ட மதங்களில் தலையாய மதம் இந்து மதம்- தழுவப்பட்ட மதங்களில் தலையாய மதம் இஸ்லாம் மதம். இது வரலாறு. இப்படி மதமாற்றங்கள் ஏற்பட பெரும்பணி ஆற்றியுள்ள காரணங்களில் – கருத்துக்களில் – கொள்கைகளில் மனு நீதி தன் மதத்துக்கு தானே மண்ணை அள்ளிப்போட்டவை மிகப்பல. அத்துடன் அந்த மனுநீதி மற்றும் சாஸ்திர, சம்பிரதாயங்கள் இந்து மதத்துக்கு வைத்த கொள்ளியும் அதிகம். விட்டால் போதுமடா சாமி என்று விலகி ஓடியவர்கள் ஏராளம்.
- 160 மில்லியன் மக்கள் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கிவைக்கபட்டார்கள்.
- தலித் என்ற முத்திரையும் – அரிஜன் என்ற அடையாளமும் வழங்கப்பட்டவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள்.
- கல்வி, கருத்து சுதந்திரம் தடை செய்யப்பட்டது
- ஊரை விட்டு ஊருக்கு வெளியே ஒதுக்கிவைக்கப்பட்டர்கள்
- கோயிலுக்குள்ளே நுழைவது தடுக்கப்பட்டது
- செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளின் தலைப்புச் செய்திகளின் தலைப்புகளை ஒரு மேலோட்டமான ஆய்வு செய்தாலே என்ன நடந்தது நாட்டில் என்பது தெரியவரும்.
- பூப்பறித்த காரணத்தால் ஒரு தலித் சிறுவன் சுட்டுக் கொலைசெய்யப்பட்டான்
- மூன்று நாட்களாக விசாரணை என்ற பெயரில் தலித் இளைஞர்கள் காவல்துறையால் சித்திரவதை.
- பீகாரில் தலித்துகள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலம்
- கர்நூலில் காவல்துறை லாக்-அப்பில் தலித் மரணம்
- அரியானாவில் ஏழு தலித்துகள் உயிருடன் கொளுத்தப்பட்டனர்
- தலித் பெண்கள் கூட்டாக கற்பழிக்கப்பட்டனர்,
- திண்ணியம் என்ற ஊரில் தலித்துகளின் வாயில் மலம் திணிக்கப்பட்டது
என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன - இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் கனடாவின் வான்கோவர் நகரத்திலே நடைபெற்ற உலக தலித்துகள் மாநாட்டில் ( INTERNATIONAL CONFERENCE FOR DALITS) படிக்கப்பட்ட ஆய்வறிக்கையின் பிரகாரம் இந்தியாவின் 90 சதவீதம் இருக்கும் தலித்துகளில் 95 சதவீதம் படிப்பறிவு அற்றவர்கள்; அத்துடன் இந்திய தேசிய குற்றப் பதிவுகள் துறையின் ( INDIA’S NATIONAL CRIME RECORDS BUREAU ) புள்ளி விபரக் கணக்குப்படி கடந்த வருடம் 25,455 குற்றங்கள் தலித்துகளுக்கு எதிராக இழைக்கப்பட்டன. ஒரு மணிக்கு இரண்டு தலித்துகள் கை கால ஓடிக்கப்படுகின்றனர்; ஒரு நாளைக்கு மூன்று தலித் பெண்கள் வீதம் உயர் சாதியினரால் கற்பழிக்கப்படுகின்றனர்; இரண்டு தலித்துகள் கொல்லப்படுகின்றனர், இரண்டு தலித்துகளின் வீடுகள் நொறுக்கப்படுகின்றன; அல்லது எரிக்கப்படுகின்றன. இந்த புள்ளி விபரங்கள் பாதி கதையைத்தான் சொல்கின்றன. சொல்ல மறந்த கதைகள் ஏராளம். காரணம் உயர்சாதிக்கு பயந்துகொண்டு குற்றங்களை பதிவு செய்ய விரும்பாத மக்கள், மிரட்டும் காவல்துறை, கிராம பஞ்சாயத்து அமைப்புகள் பாதி கதையை விழுங்கி விடுகின்றன.
காவல் துறையின் மீது அநியாயமாக அடித்ததாகவும், கொடுமைப்படுத்தியதாகவும், உயர்சாதியினரின் பக்கம் நின்று பாரபட்சம் காட்டியதாகவும், அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய மறுத்ததாகவும் பதிவு செய்யப்பட மொத்த வழக்குகள் 68,160 ஆகும். இவற்றுள் அறுபது சதவீத வழக்குகள் ஆதாரமில்லை என்று தள்ளப்பட்டன. இருபத்தாறு காவல்துறை உயர் அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.
இந்த அளவுக்கு தலித்துகளின் நிலை மோசமாகப்போக காரணம் என்ன என்பதை தலித்துகள்தான் சிந்திக்க வேண்டும். இந்த நாட்டுக்கே சொந்தமான பூர்வகுடிகள் அவர்களே. எங்கிருந்தோ ஆடுமாடு மேய்த்துவந்த ஆரியர்களுக்கு கொடுத்த இடம் இன்று தலித்துகளின் மடம் பிடுங்கப்பட்டு அடிமை வாழ்வு வாழும் கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. நாமெல்லாம் இந்துக்கள் என்று தலித்துக்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் உயர்சாதியினர் அவர்களை ஏன் பந்தியிலே சேர்ப்பதில்லை என்பதை தலித்துகள் சிந்திக்கவேண்டும். மீனாட்சி புறத்தில் தலித்துகள் கூட்டமாக இஸ்லாத்தை தழுவியபோது ஓடிவந்து பல்லக்கு ஊர்வலம் நடத்தி பாலிஷ் போட்ட மடாதிபதிகள் அதே மீனாட்சி புறத்தில் தீண்டாமை கொடுமை நடந்தபோது- தனிக்குவளை வைக்கப்பட்டபோது ஏன் கண்டிக்கவில்லை என்று தலித்துகள் சிந்திக்க வேண்டும். தாங்கள் கல்லெடுத்து மண்ணெடுத்து கட்டிய கோயிலுக்குள் தங்களின் கால் படக்கூடாது அப்படிப் பட்டால் பரிகார பூஜை செய்யவேண்டும் என்கிற நிலையை தங்களுக்கு தந்தவர் யார் என்பதை எல்லாம் அவர்கள்தான் சிந்திக்க வேண்டும்.
- பிறக்கும்போதே தங்களை கடவுள் சூத்திரனாக காலில் இருந்து படைத்தார் என்பதாகவும் – உலகம் புகழும் வள்ளுவர் போன்ற அறிஞர்களைக்கூட சாதியில் இழிவுபடுத்தியது என்றும் ,
- தங்கள் குலப்பெண்கள் தேவதாசிகளாகவும் பின்னர் தாசிகளாகவும் ஆக்கப்பட்டனர் என்பதாகவும்
- பெயர் சூட்டுவதில் கூட இழிந்தபெயர் சூடப்பட்டன என்பதாகவும்
- அரசுப்பதவிகளில் அமர அருகதையற்றவர்களாக சித்தரிக்கப்பட்டார்கள் என்பதாகவும் சொல்லியது மனு நீதி என்றும் அத்துடன்
- பெண்ணுரிமைகள் மறுக்கப்பட்டன என்பதையும்,
- அரசாலும் உரிமைகள் மறுக்கப்பட்டன என்பதையும்,
- அரசவைகளில், நீதிமன்றங்களில் தலித்துகளுக்கு இடம் தரக் கூடாது என்று தடுக்கப்பட்டதையும்
- தலித்களின் இனத்தாருக்கு தனிப்பட்ட கொடுமையான பாரபட்சமான நீதி வழங்கப்பட்டதையும்
- ஒரே குற்றத்துக்கு இனம் பார்த்து நீதிவழங்கப் பட்டதையும் ,
- மனு நீதியின் நோக்கமே நீ தாழ்ந்தவன் நான் உயர்ந்தவன் என்று பாரபட்சம் கற்பிக்கவும், நான் கட்டளை இடுவதை சொல்வதை நீ கேட்கவேண்டுமென்ற அடிமைத்தனம் கற்பிப்பதுமே ஆகுமெனவும்,
- அசிங்கத்தை தொட்டால் சோப்பு போட்டால் போதும் ஆனால் ஆட்கள் தொட்டால் குளிக்கவேண்டும் என்று கற்பிக்கிறது என்பதையும்,
- மனுநீதி மனுஷனைப்பற்றி கவலைப்படவில்லை மாட்டைப்பற்றி கவலைப்படுகிறது என்பதையும்.
கடந்த பல அத்தியாயங்களில் ஆதாரங்களுடன் எடுத்துவைத்தோம். இவ்வளவையும் படித்த பிறகு தலித்துகளின் நிலை என்ன? மதியாதார் வாசல் மிதியாதே என்பதற்கொப்ப தங்களை- தங்கள் இனத்தை மதிக்காத சாஸ்திரங்கள் அடங்கிய சாக்கடையில் இன்னும் மூழ்கி இருந்து அவமானப்படப்போகிறார்களா அல்லது சமத்துவமும்- சகோரத்துவமும் - மனிதாபிமானமும் தழைத்து வளர்ந்துள்ள மற்றொரு வாழ்வு முறையை தேடி தங்களின் மேல் சந்தனத்தை தடவப்போகிறார்களா?
- புனை சுருட்டு குப்பை அன்றோ –பழம்
- புராண வழக்கங்கள் யாவும் ?
- இனிமேலும் விட்டுவைக்காதே
- எடு துடைப்பத்தை இப்போதே
- தனி உலகை ஆண்டனை முன்னாள்
- தன் மானம் இழந்திடாதே இந்நாள .- என்றார் பாரதிதாசன் . அப்படி பழங்குப்பை களைந்து புதுவாழ்வை நோக்கி தலித்துகள் வரவேண்டிய காலம் இனியாவது வரவேண்டும்.
நேரம் இருந்தால் நெஞ்சை உருக்கும் இந்த இணைப்புகளை பாருங்கள்.
அப்படி கோடையிலே இளைப்பாறிக்கொள்ளும்வகை கிடைத்த குளிர்தருவாக- நிழலாக இஸலாம் அவர்களை அரவணைக்கக் காத்திருக்கிறது. இதை சரித்திரம் மெய்ப்பித்து இருக்கிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இன்று இஸ்லாத்தை நோக்கித்த் திரும்பி வருகிறது என்பது அண்மைக்கால சரித்திரமும் , புள்ளி விபரங்களும் தரும் சான்றுகளாகும்.
அண்மையில் அமெரிக்காவிலிருந்து ஒரு ஆராய்ச்சிக்குழு ஆப்ரிக்க நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. குழு அனுப்பப்பட்டதன் நோக்கம் ஆப்ரிக்க மக்களுக்கிடையே கம்யூனிச கருத்துகள் பரவுகிறதா அல்லது முதலாளித்துவ கருத்துக்கள் பரவுகிறதா என்பதை ஆராய்ந்து அறிக்கை தருவதே. குழுவும் அறிக்கை தந்தது. அதில் சொல்லப்பட்டிருந்தது- ஆப்ரிக்க நாடுகளில் கம்யூனிசமும் பரவவில்லை; முதலாளித்துவமும் பரவவில்லை. மாறாக மிக வேகமாக இஸ்லாம்தான் பரவி வருகிறது என்பதே. அது உண்மையே.
கடந்த ஜூலை நான் ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான அங்கோலாவுக்கு அலுவலக வேலையாக சென்று இருந்தபோது கண்ணால் கண்டது அந்த ஜும்மா தினத்தன்று இருபத்தியோர் ஆண்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். அங்கு ஜமாஅத்துடைய வேலைகள் – கூட்டமாகவோ – தனிப்பட்ட முறையிலோ சந்திப்பு ஆகிய பணிகள் நிறைவாக வும் நிறையவும் நடைபெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்ததும் அந்த பள்ளியின் இமாமுடன் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது அடுத்தட வாரம் இஸ்லாத்தில் இணைய இருக்கும் இன்னும் இருபது பேர்களின் பட்டியலையும் காட்டினார். அந்தப் பட்டியலில் இணைய இருக்கும் சகோதரர்களின் பழைய பெயர்- சூட்டப்பட்டுள்ள புதிய பெயர் எல்லாம் இடம் பெற்று இருந்தன. அங்கு –அன்று இணைந்தவர்களுடன் நான் நடத்திய உரையாடல் – அவர்களின் கதைகள் இன்னொரு ஆக்கத்தில் தனியாக தர இருக்கிறேன். இன்ஷா அல்லாஹ். அங்கோலா தலை நகரம் லுவான்டாவில் இருக்கும் ஒரே பள்ளி வசதிகள் குறைவாகவும்- பழைய பள்ளியாகவும் இருக்கிறது என்பதால் அரபு நாடுகளின் உதவியுடன் ஒரு நவீன வசதிகள் கொண்ட பள்ளி தலதொனா என்ற இடத்தில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது.
பிரான்சு நாட்டின் தலை நகரமாம் பாரிஸ் நகரம் கேளிக்கைகளுக்கு உலகப்புகழ்பெற்றது . இன்று அங்கே தாவா பணிகள் சிறப்புற நடைபெற்று பலர் குறிப்பாக பெண்கள் இஸ்லாம் மார்க்கம் தழுவி வருகின்றனர். பள்ளிகளில் இடப்பற்றாக்குறை காரணமாக சாலைகளில் மக்கள் தொழுகை நடத்துவதைக்கண்ட பிரான்சு அரசு புதிய பள்ளிகளை நிர்மாணிக்க உத்தரவிட்டு இருக்கிறது.
அரபு நாடுகளின் அனைத்துப் பகுதிகளிலும் வேலை செய்யும் பல்வேறு வெளிநாட்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து இஸ்லாத்தை தழுவுவது அன்றாட செய்தியாக இருக்கிறது. அவற்றுள் ஒன்று இதோ பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த இருநூறு பெண்கள் இஸ்லாத்தை தழுவிய செய்தி.
அமெரிக்காவில் புதிய பள்ளிகள் நிர்மாணிக்கப்படுகின்றன. அங்கிருக்கும் சர்சுகள் பள்ளிவாசல்களாக பரிணாமம் பெற்று வருகின்றன என்ற செய்தியும் நமக்கு கிடைக்கிறது. இதேபோல் உலகம் எங்கும் நடைபெறும் மாற்றங்களை தெரிந்துகொள்ள
ஆகிய வலைதளங்களில் சென்று பார்த்தால் பல வரலாறுகள் தெரியவருகின்றன. மேலும் RELIGIOUS TOLERANCE ORGANIZATION .COM என்கிற ஒரு பொதுவான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்படி கூறுகிறது.
Estimates of the total number of Muslims range from 0.7 to 1.8 billion worldwide and 1.1 to 7 million in the U.S. 3 We accept the best estimate as 1.57 billion, concluded by the Pew Forums. About 23% of all people on Earth follow Islam. The religion is currently in a period of rapid growth.
Christianity is currently the largest religion in the world. It is followed by about 33% of all people -- a percentage that has remained stable for decades. If current trends continue, Islam will become the most popular world religion sometime in the mid-21st century.
இதன் சாராம்சம் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மத்தியில் இஸ்லாம்தான் உலகின் பெரிய மதமாக புகழோச்சும்- கோலோச்சும் என்பதுதான்.
இவ்வளவையும் குறிப்பிடக்காரணம் மனுநீதியால் வதைக்கப்பட்ட தலித்துகள் தங்களின் நிலை உணர்ந்து சமத்துவம் தரும் இஸ்லாத்தின் பக்கம் திரளாக வரவேண்டுமேன்பதற்காகவே. ஏதோ நாங்கள் சார்ந்துள்ள மார்க்கத்தை உயர்த்திப் பிடிப்பதற்காக அல்ல. உலகம் திரளும் திசை நோக்கி அனைவரும் திரள வேண்டுமென்றே. இந்தியாவைத் தவிர உலகின் வேறு எந்த நாட்டிலும் பிராமணீயம் போன்ற ஈயங்கள் காய்ச்சி ஊற்றப்படுவதில்லை. நாகரிகமும் , பொருளாதாரமும் வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களே மனம் மாறி இஸ்லாத்தை தழுவ வரும்போது ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டு, ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டுக் கிடக்கும் தலித் சமுதாயம் இஸ்லாத்துடன் கை கோர்ப்பதில் என்ன தடை இருக்க முடியும்? குறைந்த பட்சம் பிராமணர்கள் மற்றும் உயர்ந்த சாதியினரின் எடுப்பார் கைப்பிள்ளையாக , அவர்கள் எறியும் அம்பாக இல்லாமல் இஸ்லாமியர்களுடன் சரிநிகர் சமத்துவ வாழ்வில் கைகோர்த்து வாழ தலித்துகளை அழைக்கிறோம்.
எந்த இஸ்லாமியர், தலித்துகளுடைய உரிமைகளை சுட்டிக்காட்டி சமஉரிமை உணர்வை தலித்துகளுக்கு ஊட்டி வருகிறார்களோ அவர்களை நோக்கி கல் ஏறிய உயர் சாதியினரால் ஏவிவிடப்பட்ட கைகள் தலித்துகள் உடைய கைகள் என்பதை குஜராத் முதலிய கலவரங்களின் வரலாறு எடுத்துக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் இஸ்லாமிய மார்க்கம் இறைவனுடைய மார்க்கம். நன்மையை ஏவி தீமையை விலக்கச் சொல்லி தூண்டிக் கொண்டே இருக்கும் மார்க்கம். அந்த அடிப்படையில் இஸ்லாமியர்களை நோக்கி கல் எறியும் கைகளைக் கொண்ட தலித்துகளையும் – அரிவாள் எடுத்த அவர்களையும் தங்களின் மார்க்கத்தில் சகோதரர்களாக இணைத்துக் கொள்ளும் முயற்சியில் - இஸ்லாத்தை எத்தி வைக்கும் முயற்சியில் தொடர்ந்து பணியாற்றுவோம். இறைவன் படைத்த மனிதனை மனிதனாகப் பார்க்கும் மாண்பு இஸ்லாத்துக்குத் தவிர வேறு எவர்க்கும் இல்லை.
இந்தியாவில் மற்றும் தமிழகத்தில் இஸ்லாம் பரவிய வரலாறு படித்தோமானால் காரணங்களாக புலப்படுபவை
- பல மகான்கள் செய்த தாவாப்பணி ,
- அன்றைய சமுதாயத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும்
- இஸ்லாமியர்களாக வாழ்ந்தவர்களின் நெறிமுறை தவறாத உதாரண வாழ்வு.
ஆகியவைகள்தான் பெரும் காரணங்களாக இருந்து இருக்கின்றன. இவற்றால் ஈர்க்கப்பட்ட ஏனையோர் கூட்டம் கூட்டமாக – ஊர் ஊராக திரண்டு இஸ்லாத்தில் இணைந்தார்கள். முஸ்லிம்கள் பெருமளவில் வாழும் அதிரையோ, காயலோ, கீழக்கரையோ, கூத்தா நல்லூரோ , நாகூரோ, பாண்டி, காரைக்காலோ, பரங்கிப்பேட்டையோ, கடைய நல்லூரோ அரபு தேசத்திலிருந்து வந்தவர்களால் நிரப்பபட்டதல்ல. அன்றைய நாட்களில் திரளாக இஸ்லாத்தில் இணைந்தவர்களின் வம்சா வழிகளே. இதில் என் தொய்வு ஏற்பட்டது? ஏன் அந்த போக்கு தொடரவில்லை? காரணம் மேலே நான் குறிப்பிட்டுள்ள மூன்று காரணங்களில் இன்றைக்கு சமுதாயத்தில் நிகழும் ஏற்றத்தாழ்வுகள் என்கிற காரணம் மட்டுமே அப்படியே இருக்கிறது. தாவாப்பணி செய்த மகான்கள் மறைந்துவிட்டனர். பின்பற்றத்தக்க உதாரண புருஷர்களை வலைபோட்டு தேடவேண்டி இருக்கிறது. அவர்கள் இயக்க சேற்றில் சிக்கி நம்மையும் சீரழித்துக்கொண்டு இருககிறார்கள்.
மாற்று மதத்தினர் நம்முடைய சகோதரத்துவம் சார்ந்த சமூக வாழ்வையும் நமது அன்பு, அறம், நாணயம், நம்பிக்கை, ஈகை மற்றும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் பண்புகளையும் கண்டு வியந்து நம்மை நோக்கி வந்து நம்மவரில் ஒருவராகி நமது மார்க்கம் தழுவினார்கள். இன்று இயக்கங்களின் தோற்றத்தால் நமக்குள்ளேயே பிளவுகள் வந்துவிட்டன. முதலில் இந்த பிளவுகளை களைய வேண்டும். அதன்பின் ஒரு உத்வேகத்துடன் தத்தளித்துக்கொண்டிருக்கும் தலித்துகளின் கிராம குடிசைகளை நோக்கி நாம் இணைந்து சென்று அழைப்புப்பணியில் ஈடுபடவேண்டும். அதற்குமுன் அவர்களை அழைப்பதற்கு தகுதி உடையவர்களாக நம்மை ஒற்றுமைப் படுத்தி, நமக்குள்ளே சகோதரத்துவம் தழைத்துக் கொள்ளச்செய்யவேண்டும். இதுவே இன்றைக்கு இஸ்லாத்தில் இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்பவர்களின் தலையாய கடமையாக இருக்கும்; இருக்க வேண்டும். இது இல்லாவிட்டால் இறைவன் நமக்கு சூட்டிய நன்மையான சமுதாயம் என்கிற பெயருக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
இதுபற்றி இன்னும் கொஞ்சம் இன்ஷா அல்லாஹ். அடுத்த அத்தியாயத்தோடு நிறைவுறலாம்.
அடுத்து வர இருப்பது மகாபாரதமா? மகாபாதகமா?
இபுராஹீம் அன்சாரி