Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அன்றைய நோன்பும், இன்றைய வீம்பும்... 34

அதிரைநிருபர் பதிப்பகம் | June 30, 2016 | , , , ,


ஒரு காலத்தில் புனித ரமளான் மாதத்தில் நோன்பு திறப்பதற்காக நோன்பு கஞ்சி காய்ச்ச தேவையான மளிகைக்கடை சாமான்கள் மற்றும் காய்கறி, இறைச்சி, அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் மிகவும் குறைவாகவே இருந்து வந்த போதிலும் (அப்பொழுது மாத சம்பளமும் குறைவாகவே இருந்து வந்தது. ஊரில் 1000 ரூபாயும், சவுதியில் 300 ரியால்கள் அல்லது 400 ரியால்கள் தான் மாத சம்பளம். இன்றைக்கு மாத டெலிபோன் செலவே இதையும் தாண்டி விடுகிறது சிலருக்கு) நமதூரில் எல்லோர் வீட்டிலும் ஒவ்வொரு நாளும் நோன்பு கஞ்சி காய்ச்ச போதிய பொருளாதார வசதி வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. அதனால் முஹல்லாப்பள்ளிகளில் ஒவ்வொரு நாளும் வசதிபடைத்தோரின் பங்களிப்பில் காய்ச்சப்படும் கஞ்சிகளையே ஒவ்வொரு வீட்டின் சிறுவர்களும் அதற்குரிய பாத்திரங்களை கையில் எடுத்துக்கொண்டு அஸர் தொழுகைக்குப்பின் பள்ளியில் வரிசையில் ஊற்றப்படும் கஞ்சிகளை வாங்கி வந்து அதன் மூலம் வீட்டினர் நோன்பை திறந்து கொண்டனர். குளக்கரையில் கொண்டு வந்த பாத்திரங்களை வைத்துக்கொண்டு சிறுவர்கள் போடும் சப்தம் எதோ அங்கு பெரும் கச்சேரியே நடப்பது போல் இருக்கும். பிறகு பெரியவர்களின் அடிகளும் விழும். கடைசியில் கஞ்சியுடன் கலந்த குளத்தின் மண்ணும் வீடு வந்து சேரும்.

நோன்பு திறக்க வீட்டில் சர்பத் கலக்க வேண்டுமென்றாலும் ஐஸ் பெட்டி வசதிகள் எல்லோர் வீட்டிலும் இல்லாமல் இருந்தது. தெருவில் ஏதேனும் கொஞ்சம் வசதி படைத்தவர்களின் வீடுகளில் மட்டும் குளிர்சாதனப்பெட்டி வைத்து தனக்கு வேண்டியவர்களுக்கு தங்கள் தேவை போக ஐஸ் கொடுத்துதவினர்.

ஊரில் நோன்பு கால மாலை நேரக்கடைகள் ஆங்காங்கே திறக்கப்படும். வாடா, சம்சா வியாபாரம் கொடி கட்டிப்பறக்கும் (அது என்னா கலர் கொடி என்று கேட்டு விடாதீர்கள்). நம் சொந்த பந்தங்கள் கூட கொஞ்சம் லாபம் சம்பாதிப்பதற்காக இரவு நேரங்களில் ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா, கடல்பாசி, கல்கண்டு பால், வாழைப்பழம் போன்றவற்றை தெருவில் தற்காலிக கடையமைத்து விற்று வந்தனர். இரவு நேர சேட்டைகள் அரங்கேறும். அது கேரம் போர்ட் விளையாட்டு மூலம் ஆரம்பமாகும். 

நோன்பு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே நமதூர் பள்ளிகளும், வீடுகளும் ஒட்டடை அடித்து, கழுவி சுத்தம் செய்யப்படும். சில பள்ளிகளில் சாந்தடித்து வர்ணம் பூசப்படும். (வீட்டுப்பெண்கள் அதற்கென ஒரு பிரத்யேக மாதங்கள் வைத்துள்ளனர். விராத்து, இடையத்து.......)

வீட்டினர் தன் சொந்த பந்தங்களின் உறவுகளை பலப்படுத்தவும், சம்மந்தி வீடுகளை மகிழ்விக்கவும் வாடா, சம்சா, முட்டை ரொட்டி, கடல்பாசி போன்றவற்றுடன் சில சிறப்புச்சாமான்கள் சேர்க்கப்பட்ட (ஆட்டுக்கறி, ஆட்டுத்தலை, நெஞ்செலும்பு) சுவை கூடிய நோன்பு கஞ்சி வீட்டில் சிரத்தை எடுத்து செலவுகள் பார்க்காது பெண்கள் காய்ச்சி அதை முறையே பங்கிட்டு ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்ந்தனர். விவாகரத்து, மவுத்துக்கும் ஹயாத்துக்கும் ஒன்னும் கிடையாது போன்ற பெரும் பிரச்சினைகள் குடும்பத்தில் தலைதூக்காது பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து உறவு முறை பேணி நல்லபடி பராமரித்து வந்தனர். எடுத்தேனா, கவிழ்த்தேனா என்பதெல்லாம் பெரும்பாலும் இல்லாமல் இருந்த நேரம் அது. 

தொன்று தொட்ட சில மூட நம்பிக்கைகள் தொற்றி இருந்த போதிலும் மார்க்க விசயங்களில் பரவலாக எல்லோரும் பெருங்குற்றங்கள் செய்யாது பேணுதலாகவே இருந்து வந்தனர். சுற்றுவட்டார மாற்றுமதத்தினர்களால் பெரிதும் மதிக்கப்பட்டனர். 

பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆளும் பொழுது கூட பாராளுமன்றத்தில் இயற்றப்படாத ஒரு சட்டத்தை பட்டுக்கோட்டையிலிருந்து ஒரு கட்சி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருந்து மாற்றுமதத்தினர்களுடன் அமைதியாக வாழ்ந்து வரும் அதிரையில் மாடு இறைச்சிக்காக அறுக்கப்படக்கூடாது என ஒரு புது சட்டம் இயற்ற நினைப்பது சங்கடப்படுத்துவதற்காகவேயன்றி யாரையும் சகோதரத்துவத்துடன் வாழ வழிவகை செய்வதற்காக அல்ல.

ஓட்டு வீட்டில் இருந்து வந்தாலும் குடும்ப கண்ணியங்களும், மார்க்க வரைமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டன. எதுவும் எளிதில் எல்லை மீறி கண்டம் தாண்டி சென்று விடுவதில்லை. 

சிறுவர்கள் பெரியவர்களை மதித்து மரியாதை செலுத்தினர். பள்ளிக்கூட படிப்பிற்குப்பின் தெருதோறும் திருக்குர்'ஆன் பயிலும் பள்ளிகளுக்கு/வீடுகளுக்கு காலை, மாலை சென்று வந்தனர். 

உண்மையில் வருத்தப்பட்டு வேதனை பட வேண்டிய விசயமான வீட்டு ஆண்களின் வருடங்கள் பல ஆகும் வெளிநாட்டு பயண பெரும் பிரிவை அறியாது ஐந்து ரூபாய், பத்து ரூபாய் பயணக்காசிற்கு ஆசைப்பட்டு குதிரை வண்டியில் குதூகலமாய் ரயிலடி சென்று தன் பிரியமானவர்களை கையசைத்து கம்பனில் ஏற்றி தனிமையாய் வீடு திரும்புவர். கை பேசிகளும், இன்டர்நெட் தொடர்புகளும் இல்லாத அக்காலம் தராத வேதனைகளை எல்லா வசதி வாய்ப்புகள் இருக்கும் இக்காலம் ஏதேனும் வழியில் நமக்கு தந்து விடுகிறது. 

ஊரில் எப்பொழுதாவது யாரும் எதிர்பாராமல் எங்கேனும் சில விசமிகளால் சிறு சலசலப்பு/கலவரம் ஏற்பட்டால் அது உடனே சம்மந்தப்பட்டவர்களால் அமைதிக்குழு (பீஸ் கமிட்டி) ஏற்படுத்தப்பட்டு பரஸ்பரம் பேசி சுமூகமாக தீர்க்கப்பட்டு விடும். ஆனால் இன்றோ சின்னஞ்சிறு விசயங்களை கூட ஊதிப்பெரிதாக்கி உலகிற்கே ஊடகத்தின் மூலம் விருந்து வைக்க துடிக்கிறது சில துரு பிடித்த இதயங்கள். 

ஐங்கால தொழுகைக்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஒலிக்கப்படும் பாங்கின் ஒலியோ அல்லது மார்கழி மாதம் ஊரின் எல்லைக்கோவிலில் ஒலிக்கப்படும் அவர்களின் பக்திப்பாடல்களோ யாருக்கும் இடைஞ்சல் தருவதாக இருந்ததில்லை. அவரவர் மார்க்கம் அவரவருக்கு என வரம்புக்குள் இருந்து வந்தனர். இன்று உள்ளங்கள் குறிகிவிட்டதால் ஊரில் எங்கேனும் சைக்கிள் டயர் வெடித்து விட்டால் கூட ஏதேனும் வெடிகுண்டாக இருக்குமோ என பதறிப்போகும் சூழ்நிலை உள்ளது. 

இன்று போட்டி போடும் கணக்கிலடங்கா மொபைல் போன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போல் சமுதாயத்தில் பல இயக்கங்களும் ஊரில் ஆங்காங்கே உருவாகி ஒருவருக்கொருவர் பல தயக்கங்களையும், தள்ளுமுள்ளுகளையும் ஏற்படுத்தி விட்டன. 

ஊரில் நோன்பு வெயில் காலத்தில் வந்தாலும் குளங்கள் கொஞ்சம் நீரை தன் மடியில் ஏந்தியே நின்றன. ஆனால் இன்றோ மழைக்காலங்களில் கூட கடும் தாகம் கொண்ட ஒரு வழிப்போக்கனைப்போல் ஊர்க்குளங்கள் மழை நீரை தானே குடித்து தீர்த்து விடுகின்றன ஆழ்துளை குழாய் கிணறுகளின் அத்துமீறல்களால். 

என்றோ வர இருக்கும் சமுதாயத்திற்காக பிளாஸ்டிக் பொருட்களின் தீங்கறிந்து அவர்களுக்காக இன்றே தடை விதித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு விட்டன. ஆனால் இன்றிருக்கும் மக்களின் ஒற்றுமைக்கும், அமைதியான வாழ்விற்கும் இன்னும் விழிப்புணர்வுகள் அந்தளவுக்கு ஏற்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. 

அன்றோ அழுக்கு சட்டைப்பைக்குள் ஐந்து ரூபாய் இருந்தாலே போதும். இன்றோ அழகிய வெள்ளைச்சட்டையில் ஆயிரம் ரூபாய் நோட்டு இருந்தாலும் அந்தளவுக்கு மதிப்பும், மரியாதையும் கிடைப்பதில்லை. எதுக்குமே பத்தமாட்டிக்கிது..... 

அன்று ஒரே ஊசியில் ஓடிப்போன ஓராயிரம் நோய்கள் இன்றோ ஓராயிரம் ரூபாய்க்கு மருந்து வாங்கி வந்து உண்டாலும் போகாமல் மல்லுக்கட்டி உடலுக்குள் பாய் விரித்து மல்லாக்கப்படுத்து கிடக்கிறது. 

சவுரு பக்கிர்சா அடித்து வந்த தப்ஸின் சப்தம், அவருடன் கையில் அரிக்களாம்பு கொண்டு வந்த சிறுவனுடன் அக்கால இன்பமும் சேர்ந்தே சென்று விட்டனவோ? என்னவ்வோ தெரியவில்லை. 

புது வேட்டி எடுத்து அதை தையல்காரர் ஒன்று சேர்த்து கூட்டி தைக்கப்படும் பொழுது அதில் எம் உற்சாகமும் இணைத்து வைத்தே தைக்கப்படும். ஆனால் இன்றோ என்ன தான் பணங்காசுகள் பெருகி இருந்த போதிலும் அன்று கிடைத்த இன்பம் இன்று வர மறுக்கிறது. மறைந்த நம் அப்பாக்களின் கைத்தடிகளை பிடித்துக்கொண்டு அதுவும் அவர்களுடன் கப்ருக்குழிக்குள் சென்று விட்டதோ? என்னவ்வோ? 

ஒரு காலத்தில் நம் ஊர் பள்ளி வாசல் தோறும் பெரியவர்களின் ஆட்சியும், கம்பீர நிர்வாகமும் எம்மை அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும். இன்றோ நாமும் மெல்ல, மெல்ல பெரியவர்களாகி விட்டதால் அந்த அப்பாக்கள் போல் இன்று வயதானவர்களின் ஆளுமையை காணுவது அரிதாகிவிட்டது. சின்னஞ்சிறு வயதிலேயே உலகை விட்டு மறையக்கூடிய சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம்.  

நம் இளமைக்கால நோன்பு நினைவுகளை பல கட்டுரைகளாக ஏற்கனவே எழுதி இருந்த போதிலும் அவற்றில் சிலவற்றை நினைவூட்டலுக்காகவும், கூடுதல் தகவலாகவும் மேற்கண்டவற்றை உங்களின் பார்வைக்கும் மேலான கருத்துரையாடலுக்காகவும் இங்கு சமர்ப்பிக்கின்றேன். 

இன்ஷா அல்லாஹ் இன்னுமிருப்பின் தொடருவோம்...... 

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

நோன்பாளிகளே - 4 - நிறைவு பகுதி ! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | June 29, 2016 | , , , , , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...


அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!).  இந்த தொடரில் நோன்பு பெருநாள் தர்மம் - ஸதக்கத்துல் ஃபித்ர் கொடுப்பதின் மற்றும் பெருநாள் தினத்தன்று கடைபிடிக்க வேண்டிவைகளின் அவசியத்தைப் பற்றி பார்ப்போம்.


பித்ரு ஸகாத்:


பித்ரு ஸகாத் என்பது நோன்பு வைத்திருக்கும்போது நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளின் (அன்றைய) உணவுக்கு வழியாக இருப்பதற்காகவும் நபி(ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), அபூதாவூத்).


பித்ராவின் நோக்கம்:


ரமலானை தொடர்ந்து வரும் நோன்பு பெருநாளில் ஏழைகள் பயன் அடைந்து மகிழ்ச்சியுடன் அவர்களும் பெருநாளை கொண்டாடவும், நோன்பாளிக்கு தருமமாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளதை ஹதீஸ் மூலம் விளங்க முடிகிறது.

நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி ‘‘இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்கள்’’ ஆக்குங்கள் என்றும் கூறினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) பைஹகீ, தாரகுத்னீ)

ஃபித்ரா யார்? கொடுக்க வேண்டும்:


நோன்பு நோற்றவர்கள், நோற்காதவர்கள், வசதியானவர்கள், வசதியற்றவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும். ஒருவர் தன் குடும்பத்தின் பெருநாள் தினத்தின் செலவு போக கொடுக்கும் சக்தி உள்ள அனைத்து முஸ்லிம்கள் மீதும் இந்தப்பெருநாள் தருமம் கட்டாய கடமையாக இருக்கிறது.


ஃபித்ரா பெருநாள் தர்மத்தின் அளவு எவ்வளவு:


முஸ்லிமான ஆண்கள் பெண்கள், பெரியவர், சிறியவர், அடிமை, சுதந்திரமானவர் ஆகிய அனைவருக்கும் பேரீத்தம்பழம் அல்லது கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தர்மம் தலா ஒரு 'ஸாவு' என்று நபி(ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தனர். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) புகாரி).


நாங்கள் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு அளவு ஏதேனும் உணவையோ ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையையோ அல்லது ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு அளவு பாலாடைக் கட்டியையோ அல்லது ஒரு ஸாவு அளவு உலர்ந்த திரட்சையையோ கொடுப்போம். (அறிவிப்பவர்: அபூ ஸயீதில் குத்ரீ(ரலி) புகாரி:1506).

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பெருநாள் அன்று ஒரு ஸாவு உணவை தர்மமாகக் கொடுத்து வந்தோம். அக்காலத்தில் தீட்டாத கோதுமையையும் உலர்ந்த திராட்சையும் பாலாடைக் கட்டியும் பேரீச்சம் பழமும்தான் எங்களின் உணவாக இருந்தன. (அறிவிப்பவர்: அபூ ஸயீதில் குத்ரீ(ரலி) புகாரி:1510).


ஃபித்ரா  பெருநாள் தருமம் எப்பொழுது கொடுக்க வேண்டும்:


பித்ரு ஸகாத்தை பெருநாள் தொழுகைக்கு மக்கள் புறப்படுமுன்பே வழங்கிவிட வேண்டுமென நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி), புகாரி).


நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஒருநாள் முன்பாக அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாக இத்தர்மத்தை வழங்குபவர்களாக இருந்தனர். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி), புகாரி).


நமது உணவு அரிசியாக இருப்பதால் அரிசியைத்தான் தர்மமாக வழங்கி வருகிறோம். ஊரில் ‘‘ஒரு ஸாவு அரிசிக்கு’’ எவ்வளவு பணம் வருகிறது என்று நிர்ணயம் செய்து அதன்படி கூட்டாக வசூலித்து ஏழைகளுக்கு வழங்கி வருகிறார்கள்.


அரிசியை மட்டும் கொடுத்தால் ஏழைக்கு அரிசி மட்டும்தான் சேரும். குழம்பு மற்ற உணவுகள் தேவைப்படும். அதனால் பணமாக வசூலித்து பெருநாள் அன்று செய்யப்படும் உணவுகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வசூல் செய்பவர்கள் கொடுத்து வருவதை பார்த்து வருகிறோம்.


வளைகுடா நாடுகளான துபாயில் திர்ஹம் 15/=  என்றும் அபுதாபியில் திர்ஹம் 20/=  என்றும் அரசாங்கம் நிர்ணயித்த தொகை. இதன்படி தங்களின் ஃபித்ரா தருமத்தை கொடுக்கவும்.


அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! தாமதப்படுத்தாமல் பெருநாளைக்கு முன்பாக இந்த ஃபித்ராவை (பெருநாள் தர்மத்தை)  கொடுத்து நன்மையை பெற்றுக்கொள்ளுங்கள்.

உலகத்தில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பலவாறான  பண்டிகை தினங்கள் உள்ளது. அவர்களின் பண்டிகை தினங்களில் தங்கள் மன விருப்பப்படி எந்த வரைமுறையும் இல்லாமல் பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளாத கேளிக்கை விளையாட்டுக்களில் ஈடுபடுவதை தாங்கள் கேட்டும், பார்த்தும் இருப்பீர்கள். பல நேரங்களில் மூட நம்பிக்கையின்படியே அவர்களின் விழாக்களும், பண்டிகைகளும் அமைந்து இருக்கும்.

வல்ல அல்லாஹ் வழங்கிய மார்க்கத்தில் எந்த வித மூட நம்பிக்கையும் இல்லாமல் மிக அழகாக மனித நேயத்துடன் நமது பெருநாளை நாம் கொண்டாடி வருகிறோம். இப்படிப்பட்ட அழகிய பெருநாள் தினத்தைப்பற்றி பார்ப்போம்.

தொழப்போகும் முன் சாப்பிடுதல்:

நோன்பு பெருநாள் தொழுகைக்கு முன் நபி(ஸல்) அவர்கள் சாப்பிட்டு விட்டு தொழச் செல்வார்கள். கீழ்கண்ட ஹதீஸ் விளக்கம் தருகிறது.

சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி(ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள். மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. (அறிவிப்பவர்:  அனஸ்(ரலி) புகாரி:953)

தொழும் நேரம்:

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். (அறிவிப்பவர்:  அபூ ஸயீத்(ரலி) புகாரி:956)

பெருநாளன்று நபி(ஸல்)அவர்கள் முதல் காரியமாக தொழுகையைத்தான் முடித்திருக்கிறார்கள். ஆனால் நமது மக்களோ முதல் காரியமாக கறிக்கடைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். வளைகுடா நாடுகளில் உள்ளவர்களுக்கு முதல் காரியமாக தொழுகை கிடைத்து விடுகிறது.

வளைகுடா நாடுகளில் யார் வந்தாலும் வராவிட்டாலும் 6:45 மணிக்கு தொழுகை நேரம்  என்று அறிவித்து விட்டால் சரியான நேரத்தில் தொழுகை தொடங்கி விடும். ஒரு ஜமாஅத் தொழுகைதான் இரண்டாவது ஜமாஅத் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் பரவலாக தமிழ்நாட்டில் சில இடங்களில் இரண்டு தடவை தொழுகையெல்லாம் நடக்கிறது. பெண்கள் தொழுகையும் இரண்டு ஜமாஅத்தாகத்தான் நடைபெற்று வருகிறது.

இப்படி செய்வதற்கு காரணம் சரியான நேரத்தில் காலையில் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்தபடி தொழ வைக்கப்படுவதில்லை. பெண்களும் வந்து தொழுவதற்கு வசதிகள் செய்யப்படுவதில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்னால் என் சிறு வயதில் வெளியூர் பள்ளி ஒன்றில் பெருநாள் தொழுகை நேரம் காலை 9:30 மணிக்கு என்று அறிவித்தார்கள். மக்கள் எல்லோரும் தொழ வந்து விட்டோம். மைக்கில் தக்பீர் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். 9 மணியாகிவிட்டது முக்கியானவர் வரவில்லையாம். யார் அவர்? ஊர் நாட்டாண்மையாம் (ஜமாஅத் தலைவர் மார்க்கம் அறியாதவர்) மைக்கில் அறிவிப்பு தொழுகை நேரம் நெருங்கிவிட்டது நாட்டாண்மை எங்கிருந்தாலும் (ஆங்காங்கே வெளியில் நின்று கொண்டு இருப்பவர்களும்) பள்ளிக்கு வரவும் நிறைய தடைவை அறிவிப்பு செய்த பிறகு ஒரு வழியாக அவர் வந்த பிறகுதான் தொழுகையை ஆரம்பித்தார் இமாம்.

சிறுபிள்ளையாக  நான் இருக்கும்பொழுது மார்க்கம் அறியாதவர்கள் ஜமாஅத் தலைவர்களாக இருந்ததை பார்த்தேன்.  நான் 2013ஆம்  வருடத்தில் இருக்கிறேன், இணையத்தள கடலில் மார்க்கம் நம்மை வீடு தேடி வந்த பிறகும் இன்று கூட அன்று பார்த்த மார்க்கம் அறியா தலைவர்களையே இன்றும் அதிகமான இடங்களில் பார்த்து வருகிறேன். வல்ல அல்லாஹ் நேர்வழி காட்டப் போதுமானவன்.

நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து வழிகாட்டிய தூய மார்க்கத்தை அறிந்த இளைஞர் சமுதாயம் எல்லா ஊர் ஜமாஅத்திலும் அங்கம் வகிக்கும் நேரம் விரைவில் வருவதற்கு வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும். என்னருமை சகோதரர்களே! இளைஞர்களே! மார்க்கத்தை அறிந்து கொள்ள நிறைய நேரத்தை ஒதுக்குங்கள். மார்க்கம் அறியா தலைவர்களை ஓரம் கட்டி, மார்க்கத்தை அறிந்த தொழக்கூடிய இறையச்சம் உடையவர்களை ஜமாஅத் தலைவர்களாக தேர்ந்தெடுங்கள்.

முன் பின் தொழுகை இல்லை:

பெருநாள் தொழுகைக்கு முன்பாகவும் பின்பாகவும் தொழுகை எதுவும் கிடையாது என்பதற்கு  இந்த ஹதீஸ் விளக்கம் தருகிறது:

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. (அறிவிப்பவர்:  இப்னு அப்பாஸ்(ரலி),  புகாரி:964)

திடலில் பெருநாள் தொழுகை:

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். (அறிவிப்பவர்:  அபூ ஸயீத்(ரலி), புகாரி:956)

நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் ஓர் ஈட்டி நாட்டப்படும். நபி(ஸல்) அவர்கள் (அதை நோக்கித்) தொழுவார்கள். (அறிவிப்பவர்:  இப்னு உமர்(ரலி), புகாரி:972)

திடலில் தொழுவது காலம் காலமாக பின்பற்றப்படாமல் தொடர்ந்து இருந்து வருகிறது. ஊர்களில் சொந்தமாக தொழுகைக்காக திடல் ஏற்படுத்தாத காரணத்தினாலா? மார்க்கத்தின் தெளிவின்மையா?
  
பெருநாள் தொழுகையில் பெண்கள், கன்னிப்பெண்கள்,  மாதவிடாய் பெண்கள் கலந்து கொள்வது:

இரண்டு பெருநாள்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கிற கன்னிப் பெண்களையும் வெளியேற்றி (தொழும் திடலுக்கு) அழைத்துவருமாறும் அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகிற இடத்திற்குச் சென்று அவர்களின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தொழும் இடத்தைவிட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும்' என்றும் கட்டளையிடப்பட்டோம்.

நபி(ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லையெனில் என்ன செய்வது?' எனக் கேட்டதற்கு 'அவளுடைய தோழி தன்னுடைய (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்' (அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி) புகாரி:982)

மேற்கண்ட ஹதீஸ் பெருநாள் தொழுகை திடலில் தொழ வைக்கப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. திடலில் தொழ வைத்தால்தான் மாதவிடாய் பெண்கள் வரமுடியும். மாதவிடாய் பெண்களுக்கு தொழுகை கடமையில்லை என்றாலும் தொழாவிட்டாலும் பயானை கேட்க முடியும், பிரார்த்தனை செய்யமுடியும். பெருநாளின் நன்மையை பெற்றுக்கொள்ள முடியும்.

பெருநாள் தொழுகை தொழும் முறை:

நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 7 தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 5 தக்பீர்களும் கூறுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), அபூதாவூத்)

நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தத் துவங்கினால் அவர்களின் இரு கண்களும் சிவந்து விடும். குரல் உயர்ந்து ஆக்ரோஷமாக வார்த்தைகள் வெளிப்படும். ராணுவத்தை எச்சரித்து வழி நடத்துபவர் போலாகி விடுவார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) , முஸ்லிம்)

இது போன்ற உரை நிகழ்த்தப்பட்டால் தொழுகைக்குப் பிறகு மக்கள் கட்டாயம் இருப்பார்கள். தொழுகை நடத்துவோர் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் தொழுகையை நடத்தி அதன் பின் ஆழமான உரையையும் நிகழ்த்த தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

துஆ(பிரார்த்தனை):

பெருநாளில் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். (அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி) புகாரி:971)

பெருநாள் தினத்தில் தொழுகை முடிந்த பிறகு பயான் நடக்கும். இந்த பயானை கேட்காமல் உடன் எழுந்து செல்பவர்களும் இருக்கிறார்கள். அல்லது பயான் முடிந்தவுடன் எழுந்து செல்பவர்களும் இருக்கிறார்கள். இங்கே பேணப்படாதது துஆ நானும் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே துஆச் செய்கிறார்கள். எல்லோரும் உடனடியாக செல்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். இந்த புனிதமான பெருநாளின் துஆவை தவற விட்டு விடுகிறோம். சகோதர, சகோதரிகளே! இத்தனை நாள் நோன்பிருந்து பொறுமை காத்த நமக்கு பெருநாள் தொழுகை முடிந்த பிறகு ஒரு 10 அல்லது 20 நிமிடம் துஆ கேட்டுச் செல்வதால் என்ன குறைந்து விடப்போகிறது. இந்த பெருநாளின் துஆவை விட வேறு என்ன நமக்கு முக்கியமான காரியம் இருக்கும். சாப்பிடுவது, தூங்குவது, விருந்தினரை கவனிப்பது இதை தவிர வேறு என்ன இருக்கப்போகிறது. இவைகள் அனைத்தையும் விட துஆ மிக மிக முக்கியமானது என்பதை மறந்து விடாதீர்கள். தங்களுக்கு வேண்டியதை அனைத்தையும் கேளுங்கள் வல்ல அல்லாஹ்விடம் (கூட்டு துஆவில் அவர் அவருக்கு தேவைப்படுவதை கேட்க முடியாது. துஆ என்பது உள்ளார்ந்த ஆர்வமுடனும், அச்சத்துடனும் அவரவர் அடிமனதிலிருந்து வெளியாகி கேட்க வேண்டும். கூட்டு துஆவில் ஆர்வமும் இல்லை, அச்சமும் இல்லை என்பதை உணர்பூர்வமாக உணரக்கூடியவர்களுக்கு தெரியும்).

தொழுகை முடிந்த பிறகு துஆ கேட்காமல் உடனடியாக புறப்பட பிள்ளைகளை காரணம் காட்டுவார்கள். வீட்டிலிருந்து புறப்படும்பொழுதே அவர்களுக்கான தண்ணீர், திண்பண்டங்கள் தாங்கள் வரும்பொழுதே எடுத்து வந்திருந்தால் பிள்ளைகளும் தங்களை தொந்தரவு செய்யமாட்டார்கள். பெருநாள் துஆ மிக அவசியமானது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். நமக்கு வேண்டிய அனைத்தையும் இன்றயை தினம் கேட்க வேண்டும்.

பெருநாள் தினத்தில் செல்லும் பாதை:

பெருநாள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி)  புகாரி:986)

நபி(ஸல்) பெருநாள் தொழுகைக்கு போகும்பொழுது ஒரு வழியாகவும், திரும்பி வரும்பொழுது வேறு வழியாகவும் வந்திருக்கிறார்கள்.

தொழுத பிறகு:

தொழுது விட்டு வீடு வந்து விட்டோம் பிறகு காலை உணவு தூக்கம், மதிய உணவு என்றும் சிலர் இருப்பார்கள், சிலர் சீட்டு விளையாடுவது, சினிமா பார்ப்பது, வீண் அரட்டை போன்ற பயன் இல்லாத காரியங்களை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். வல்ல அல்லாஹ் அளித்த புனிதமான பெருநாள் தினத்தில் அவனின் நினைப்போடு நாள் கழிய வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இன்றைய தினம் நல்ல வழியில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு சில காரியங்கள் செய்யலாம். ஒரு குடும்பம் அவர்களாக சமைத்து அவர்கள் மட்டும் சாப்பிடுவதை விட்டு உறவினர்கள் அருகருகே இருப்பவர்கள் இரண்டு மூன்று அதற்கு மேலும் குடும்பங்கள் இருந்தால் ஒரே இடத்தில் அனைவரும் ஒன்று கூடி சமைத்து சாப்பிடலாம். (செலவுகளில் அனைவரும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்) உறவினர்கள் இல்லை என்றால் அருகில் நட்பில் உள்ள குடும்பத்துடன் சேர்ந்து சமைத்து சாப்பிடலாம். மாலை அவரவர் ஊரில் இருக்கும் பொழுது போக்கு இடமான கடற்கரை, பூங்காக்கள் என்று சென்று வரலாம். நல்ல விளையாட்டுக்கள் போன்ற  நல்ல காரியங்களில் இந்த நாளை கழிக்கலாம். எல்லா நேரங்களிலும், தொழுகை இறை நினைவு இரண்டையும் மறந்த நிலையில் இல்லாமல் கவனமாக இருக்க வேண்டும்.

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே புனிதமான பெருநாள் நம்மை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. அன்றைய தினத்தில் முதல் வேலையாக தொழுகை ஆரம்பிக்கும் முன்பாக தொழும் இடத்திற்கு சென்று விட வேண்டும். கடைசி நேரத்தில் சென்று தொழுகை கிடைக்காமல் போய் விடுமோ என்ற பதற்றம் ஏற்படாது. தொழுகையை முடித்த பிறகு பொறுமையாக இருந்து உரையை கேட்ட பிறகு அதை விட பொறுமையாக இருந்து துஆச் செய்ய வேண்டும். உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் இந்த தினத்தில் வல்ல அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். (நேரத்தை பார்க்காமல் நிதானமாக அவசரப்படாமல் தங்களின் துஆவை கேளுங்கள்).

வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நோன்பு பெருநாள் தினத்தின் நன்மை அனைத்தையும் வழங்கி அவனின் மன்னிப்பையும், கருணையையும் பரக்கத்தையும்  நமக்கு தாராளமாக வழங்கி நல்லருள் புரியட்டும்.

S. அலாவுதீன்
இது ஒரு ரமளான் மீள்பதிவு

ஹுதைபிய்யா உடன்படிக்கை 0

அதிரைநிருபர் பதிப்பகம் | June 28, 2016 | ,

::::: தொடர் - 22 :::::
‘வளர்ச்சிக்கான வாயில்’ என்று நபி வரலாற்றில் ஒரு நிகழ்வைக் குறிப்பிட வேண்டுமாயின், அது ‘ஹுதைபிய்யா உடன்படிக்கை’தான் என்றால், அது மிகையாகாது. மக்கத்துக் குறைஷியருக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் இடையில் நடந்த இந்த ஒப்பந்தத்தை மேலோட்டமாகப் பார்த்தால், முஸ்லிம்களுக்கு அது ஒரு பின்னடைவுதான் என்று நினைக்கத் தோன்றும்.

நபிவரலாற்றில் மிகமுக்கியமான இடத்தைப் பெற்ற இந்த உடன்படிக்கை பற்றிச் சற்று விரிவாகவே எழுத வேண்டியதாக இருக்கின்றது. மேலோட்டமாக இந்த ஒப்பந்தத்தைப் பற்றிப் படிப்போர், ‘இந்த ஒப்பந்தம், ஒருபக்கச் சார்பானது’ என்றே கருத்துக் கூறுவார்கள். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த உடன்படிக்கை நிகழ்வானது, எந்தச் சூழலில் நடந்தது? நிகழ்வதற்கான காரணங்கள் யாவை? என்பவற்றைப் பற்றி ஓரளவுக்கு விரிவாகவே எழுத வேண்டியுள்ளது. ஹுதைபிய்யா நிகழ்வானது, மாணவர்கள் தமது பட்டப் படிப்பின் இறுதித் தேர்வு எழுதுவது போன்றே இருந்தது. பெருமானார் (ஸல்) அவர்களும் அன்னாரின் தோழர்களும் ஏறத்தாழ அத்தகைய நிலையில்தான் இருந்தனர். அதில் அவர்கள் மிக உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்று, வெற்றியும் அடைந்தனர்! அவர்கள் இறைவனுக்குக் கட்டுப்படுபவர்கள் என்பதன் சான்றாகவும் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளதை நாம் காணமுடியும்.

ஒரு நாளன்று நபியவர்கள் ஒரு கனவு கண்டார்கள். அதில், அவர்களும் தோழர்களும் கஅபாவில் ‘தவாஃப்’ எனும் வணக்கத்தை முடித்து, தலைமுடி களைவதாகக் காட்டப்பட்டது. அவர்களுள் பெரும்பாலோர் மக்காவைத் துறந்து மதீனாவுக்குப் போய் ஆறு ஆண்டுகளாகிவிட்டது. ‘என்று திரும்புவோம்’ என்று அந்த ‘முஹாஜிர்’களின் இதயத்துள் ஏக்கமாக இருந்தது. ஒருமுறை அந்தப் புனிதப் பதிக்குச் சென்றுவந்தால், ‘இனி எப்போது இந்த மக்காவுக்குத் திரும்பி வருவோம்?’ எனும் ஏக்கத்திலேயே அவர்களின் எஞ்சிய வாழ்நாள் கழியும். இந்த உணர்வு, அந்த மண்ணின் மைந்தர்களான ‘முஹாஜிர்’களுக்கு ஏற்படாதா என்ன?

நபிமார்களின் கனவுகள் இறைச் செய்திக்குச் சமமானவைதாமே? தாம் கண்ட கனவை அடுத்து, அண்ணலார் (ஸல்) அவர்கள் தம்முடன் 1400 தோழர்களை அழைத்துக் கொண்டு, ‘உம்ரா’ வணக்கத்தை நிறைவேற்றப் புறப்பட்டுச் சென்றார்கள். மதீனா-மக்கா நெடுஞ்சாலையில், மதீனாவுக்கு அருகில் இருக்கும் ‘துல்ஹுலைஃபா’ எனும் இடத்தில் தங்கி, உம்ராவுக்கான ‘இஹ்ராம்’ என்னும் நிலைக்கு மாறிக்கொண்டு, அதற்கான ‘தல்பியா’வைக் கூறிக்கொண்டார்கள். தோழர்களும் நபியைப் பின்பற்றி, அந்நிலைக்கு மாறிக்கொண்டார்கள். தாம் கொண்டுவந்த பலிப் பிராணிகள் மீது அடையாளம் இட்டுக்கொண்டார்கள். அடிக்கடித் ‘தல்பியா’வும் சொல்லிக்கொண்டார்கள். அதைத் தொடர்ந்து மக்காவை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அவர்களிடம், வழக்கமாக அரபுகள் வைத்துக்கொள்ளும் சிறிய கத்தியைத் தவிர வேறொரு போராயுதமும் இல்லை.

இந்தக் கூட்டம் போர் புரியச் செல்லும் கூட்டமன்று; சமாதானத்தை நோக்கமாகக் கொண்டது என்பதை, எவரும் எளிதில் அறிந்துகொள்ளும் தன்மையில் இருந்தது. எனினும், முன்னெச்சரிக்கையாக, அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) என்ற தோழரின் தலைமையில், இருபது குதிரை வீரர்களைக் கொண்ட பாதுகாப்புப் படையை எல்லாருக்கும் முன்னதாகச் செல்லும் விதத்தில் அமைத்திருந்தார்கள் அண்ணலார்.

எதிரிகளை இனங்காணும் தன்மையில், பெருமானார் (ஸல்) அவர்கள் தேர்ந்தவர்கள். ஆனதால், பிஷ்ர் இப்னு சுஃப்யான் என்ற தோழரை முன்னதாக மக்காவுக்கு அனுப்பி, அங்குள்ள நிலவரங்களைத் திரட்டிக்கொண்டு வருவதற்காக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மக்காவை நோக்கி இக்கூட்டம் சென்றுகொண்டிருந்தபோது, அண்ணல் நபிக்கு ஆலோசனை கூறுவதில் பக்குவப்பட்ட முன்னணித் தோழரான உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள், “யா ரசூலில்லாஹ்!  எவ்விதப் பாதுகாப்பும் இல்லாமல், நம்முடன் மோதல் நிலையில் இருக்கும் மக்களுக்கு நடுவிலா மக்காவுக்குள் நுழையப் போகின்றீர்கள்?  நாம் சமாதானமாக இருக்கும் நிலையில், அவர்கள் நம் மீது தாக்குதலைத் தொடுத்தால், அந்த நேரத்தில் நமக்குப் பாதுகாப்புக் கருவிகள் வேண்டாமா?” என்று கேட்டார்கள். இதை அறிவார்ந்த பரிந்துரையாக ஏற்றுக்கொண்டு, பெருமானார் அவர்கள், அந்த நேரத்தில் மதீனாவை விட்டு வெகு தொலைவில் தமது கூட்டம் சென்றிருக்காத நிலையில், மதீனாவுக்குச் சிலரை அனுப்பி, சில போர்க்கருவிகளைத் திரட்டிக்கொண்டு வரும்படிக் கூறினார்கள்.  எனினும், அவ்வாறு கொணர்ந்த போர்க் கருவிகளை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாமல், மறைத்தே வைத்திருக்க வேண்டும் என்றும் தம் தோழர்களுக்கு அறவுரை பகர்ந்தார்கள் அண்ணலார் (ஸல்) அவர்கள்.

மக்காவுக்கு வேவு பார்க்கச் சென்ற பிஷ்ர் பின் சுஃப்யான் (ரலி), முக்கியமான செய்தியொன்றைக் கொண்டுவந்திருந்தார். ‘மக்கத்துக் குறைஷிகள், ‘அஹாபீஷ்’ என்ற பாலைவன நாடோடிக் கூட்டத்துடன் உடன்படிக்கை செய்து, முஸ்லிம்களை எதிர்ப்பதற்குத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள்’ என்பதே அவர் கொண்டுவந்த முக்கியத் தகவல்!   

அரபுகளின் பண்டைய வழக்கத்தின்படி, மக்காவுக்கு ஹஜ் அல்லது உம்ராவுக்காக வரும் யாரையும் தடுப்பது மாபெரும் குற்றம் என்பதால், இந்த மோதல் நிலை எந்த அளவு மோசமானது என்பதை உய்த்துணர்ந்தார்கள் அண்ணலார் (ஸல்). இப்போதுதான் இந்த மோதலைத் தவிர்க்கவோ, குறைஷிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்வதற்கோ வியூகம் வகுத்தாக வேண்டும் என்ற பொறுப்பு, தானைத் தலைவரான நபிக்கு முன்னால் இருந்தது!  

நபியவர்கள் தம் நல்லறத் தோழர்களிடம் பொருத்தமான பரிந்துரையை வேண்டி நின்றார்கள்.  “அந்த நாடோடிக் கூட்டம் அவரவர் வீடுகளில் இருக்கும் நிலையில், அவர்களின் பெண்களும் பிள்ளைகளும் சேர்ந்திருக்கும் நிலையில், அவர்களைத் தாக்கட்டுமா?  அப்போதுதான் மக்கத்துக் குறைஷிகள் வலிமையிழந்து போவார்கள்.  அதன் பின்னர் குரைஷிகளைத் தனியாகச் சந்திக்கலாமே?”  என்று தம் தோழர்களிடம் கேட்டார்கள் அண்ணலார் (ஸல்).

அப்போது எழுந்தார் அருமைத் தோழர் அபூபக்ர் (ரலி).  “அல்லாஹ்வின் தூதர் அவர்களே!  நாம் யாருடனும் சண்டையிடுவதற்காக வரவில்லை.  ஆகவே எவரையும் தாக்க வேண்டாம். நாம் நமது நோக்கமான ‘உம்ரா’வை முன்வைத்து மக்காவுக்குச் செல்வோம். யாராவது நம்மைத் தடுத்தால், அல்லது நம்முடன் போர் புரிய வந்தால், அப்போது பார்த்துக் கொள்ளலாம். அந்த நிலை ஏற்படும்வரை, முதலில் தாக்குவது நாமாக இருக்கக் கூடாது.” பேசி முடித்தார் தோழர் அபூபக்ர்.

அதுவே சரியெனப் பட்டது அண்ணலாருக்கு.  “அல்லாஹ்வின் பெயர் கூறி, அனைவரும் முன்னேறிச் செல்லுங்கள்!” என்று தம் திருக்கூட்டத்தினருக்குக்   கட்டளையிட்டார்கள்.

முஸ்லிம்கள் மதீனாவிலிருந்து புறப்பட்டு, மக்காவின் புறநகர்ப் பகுதியான ‘ஹுதைபிய்யா’வை நோக்கி வருகின்றார்கள் என்ற தகவலை அறிந்தவுடன், குறைஷிகள் தம் இளம் தளபதிகளான காலித் பின் வலீத், இக்ரிமா பின் அபீஜஹ்ல் ஆகியோரின் தலைமையில் படை திரட்டி, ஹுதைபிய்யாவை நோக்கி வந்துகொண்டிருந்த தகவல் முஸ்லிம்களுக்குக் கிடைத்தது!

‘வரட்டும், பார்த்துக்கொள்ளலாம்’ என்றில்லாமல், முஸ்லிம்கள் போரைத் தடுப்பதிலேயே எச்சரிக்கையாக இருந்தனர்! "மக்காவுக்குச் செல்லும் வழக்கமான வழியை விட்டு, வேறு ஏதேனும் சுருக்கமான வழியுண்டா?” என்று தம் ஆலோசகர்களிடம் அண்ணலார் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். காரணம், மோதலைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கமே.

அப்போது, ‘அஸ்லம்’ கிளையைச் சேர்ந்த ஒருவர், முஸ்லிம்களுக்கு மாற்று வழி ஒன்றைக் காட்ட முன்வந்தார். அவர் காட்டிய வழி சுருக்கமானதாக இருந்தாலும், நெடிதுயர்ந்த மலைகளையும், பார்த்தால் அச்சமூட்டும் பள்ளத்தாக்குகளையும் கொண்ட கரடுமுரடான வழியாக இருந்தது! வீணான போரைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில் இருந்ததால், முஸ்லிம்கள் இப்பயணத்தில் பொறுமை காத்துப் போய்க்கொண்டிருந்தனர். அத்தகைய பொறுமையின் பயனாய், விரைவில் அவர்கள் ஒரு சமவெளிப் பகுதியை வந்தடைந்தனர். அவ்விடமே, ‘ஹுதைபிய்யா’.

முஸ்லிம்கள் வழக்கமான வழியைத் தவிர்த்து, வேற்று வழியில் தம்மைத் தாண்டி, மக்காவை நெருங்கிவிட்டனர் என்ற தகவலை அறிந்த காலித் பின் வலீத், தன் படையுடன் விரைந்து, மக்காவை நோக்கித் திரும்பிச் சென்றார். காரணம், முஸ்லிம்கள் மக்காவுக்கு ஒரு நாள் தொலைவில் வந்துவிட்டனர் என்ற குறைஷிகளின் எச்சரிக்கை உணர்வேயாகும்.

‘ஹுதைபிய்யா’வின் சமவெளிப் பகுதியைச் சென்றடைந்தவுடன், நபியவர்களின் ‘கஸ்வா’ என்று பெயரிடப்பட்ட ஒட்டகம் அவ்விடத்திலேயே படுத்துவிட்டது! ஒட்டக ஓட்டிகள் வழக்கமாக தம் ஒட்டகங்களை விரைந்து ஓட்டுவதற்காகக் கூறும், ‘ஹல்ல்ல்! ஹல்ல்ல்!’ எனும் சங்கேத மொழிகள் சற்றேனும் பயனளிக்கவில்லை.

“கஸ்வா அடம் பிடிக்கிறது” என்று மக்கள் பேசிக்கொண்டனர்.  “இல்லை! அடம் பிடிப்பது அதன் வழக்கமில்லை!  முன்பு யானைப் படையை மக்காவுக்குள் வர விடாமல் தடுத்த இறைவனே, இதையும் தடுத்துவிட்டான்” என்று கூறினார்கள் நபியவர்கள்.

அரபு வரலாற்று ஆய்வாளரும் நபிமொழி வல்லுனருமான இப்னுஹஜர் அல்-அஸ்கலானி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:  “அல்லாஹ்வுக்கு அப்போதும் இப்போதும் நன்றாகத் தெரியும், மக்காவாசிகள் முஸ்லிம்களாக மாறிவிடுவார்கள் என்று. அதனால்தான், ‘அப்ரஹா’வின் யானைப் படையையும் இந்த ‘கஸ்வா’வையும் தடுத்து வைத்து, இரத்தக் களறி ஏற்படாமல் தடுத்தான் அல்லாஹ். அப்ரஹாவைப் பொறுத்தவரை, அவனையும் அவனது படையையும் அல்லாஹ் அழித்துவிட்டான்.  ஆனால், பெருமானாரைப் பொறுத்தவரை, அல்லாஹ்வின் தடையானது, தேவையில்லாத இரத்தக் களறியைத் தவிர்ப்பதற்கே என்பது இறைவனின் நாட்டமாகும்.”  

மக்கத்துக் குறைஷிகளை எதிர்த்துப் போர் செய்வதில் அண்ணலார் (ஸல்) அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.  மக்காவில் அவர்களின் உறவினர்களும் நண்பர்களும் இருந்தனர்.  பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பியதெல்லாம், தமக்குக் கனவின் மூலம் அறிவிக்கப்பட்ட ‘உம்ரா’ வணக்கத்தை அமைதியாக நிறைவேற்றிவிட்டு, மதீனாவுக்குத் திரும்பிவிடுவதுதான். அதனால்தான், “எவனின்   கையில் எனது உயிர் இருக்கின்றதோ, அந்த அல்லாஹ்வின்மீது ஆணையாக! இந்த மக்காவின் புனிதத்தைப் பாதுகாத்து, தேவையில்லாமல் இரத்தம் சிந்தாமல் இருக்க, குறைஷிகள் எந்தப் பரிந்துரை வைத்தாலும், நான் அதைக் கட்டாயம் ஏற்றுக்கொள்வேன்” என்று உறுதியாகக் கூறினார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்.  இவ்வாறு கூறியதன் மூலம், தமது நோக்கம், போர் செய்வதோ, இரத்தம் சிந்தச் செய்வதோ அன்று என்பதைத் தெளிவாகக் கூறிவிட்டார்கள்.

ஹுதைபிய்யாவில் ஒரு கிணறு இருந்தது.  ஆனால், முஸ்லிம்கள் அங்கு இருந்தபோது அக்கிணற்றில் தண்ணீரில்லை.  தோழர்கள் இது பற்றிப் பெருமானாரிடம் முறைப்பாடு செய்தபோது, தமது தூளியிலிருந்து ஓர் அம்பை உருவி, அதை அந்தக் கிணற்றுக்குள் இறக்குமாறு தோழர்களிடம் கூறினார்கள் பெருமானார் (ஸல்).  அவ்வாறே அவர்கள் செய்தபோது, கிணற்றில் தண்ணீர் ஊற்றெடுத்துப் பொங்கியது! அவர்கள் அங்கு இருந்தவரை, அத்தண்ணீரைக் கொண்டு பயன் பெற்றார்கள்; அவர்களின் கால்நடைகளுக்கும் புகட்டினார்கள். 

அப்போதிருந்த சூழ்நிலையோ, பதட்டமானது. தமது நோக்கம், ‘உம்ரா’வை நிறைவேற்றுவதேயன்றி, மக்காவாசிகளோடு போர் புரிவதற்கில்லை என்பதை மக்காவாசிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்;  அதை அவர்களுக்கு உணர்த்தத்  தமது குழுவிலிருந்து ஒருவரை அனுப்பவும் விழைந்தார்கள்.   இப்பொறுப்பை நிறைவேற்ற, ‘குழாஆ’ கோத்திரத்தைச் சேர்ந்த கர்ராஸ் பின் உமையா என்பவரைத் தேர்ந்தெடுத்தார்கள்.  மக்காவில் அவர் தனக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றத் தொடங்கும் முன்பே, மக்காவாசிகள் அவர் பயணித்து வந்த ஒட்டகத்தைக் காயப்படுத்திக் கொன்றுவிட்டனர்!  அவரையும் கொல்ல முயன்றபோது, குறைஷிகளின் உடன்படிக்கையாளர்களான ‘அஹாபீஷ்’களின் இடைமறிப்பால், அவர் தப்பித்து, ஹுதைபிய்யாவுக்கு வந்து சேர்ந்தார்!

தூதுவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்ற உலக நியதியையும் மதிக்காமல், அவருடைய உயிருக்கு உலைவைக்கும் விதத்தில் கடுமையாக நடந்துகொண்ட மக்காவாசிகளைப் பற்றி மனக்கவலை கொண்டார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்.  இந்த நிகழ்வுக்குப் பின், மக்காவாசிகளை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பினார்களா?  இல்லை!  மீண்டும் ஒரு வாய்ப்புக் கொடுக்கலாம் என்று விரும்பி, மற்றொருவரை அனுப்பும் திட்டத்தைத் தோழர்களிடம் வைத்தார்கள்.  முதலில், உமர் (ரலி) அவர்களை அழைத்து, அவர்கள் முஸ்லிம்களின் தூதுவராக மக்காவுக்குச் செல்வது பற்றிக் கேட்டார்கள். 

“நீங்கள் என்னைப் போகச் சொன்னால், போகிறேன்.  ஆனால், என் குலமான ‘பனூ அதிய்’யைச் சேர்ந்த ஒருவர்கூட இப்போது மக்காவில் இல்லை.  இந்த நேரத்தில் எனக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், எனக்குப் பாதுகாப்பு அளிப்பவர் யாருமில்லை, நாயகமே!” என்றார் உமர்.  அவர் எந்த நிலையிலிருந்து மாறி, எந்த நிலைக்கு வந்தார் என்பது பற்றி, நன்றாகவே அறிந்து வைத்திருந்தனர் மக்காவாசிகள்.  அதனால், உமரின் மீது பாய்ந்து, பழிக்குப் பழி தீர்ப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்பது, நபியவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

அருமைத் தோழரின் பேச்சை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பெருமானார் (ஸல்) அவர்கள், சற்று நேர மவுனத்துக்குப் பின், உமரைப் பார்த்தார்கள்.  அப்போது உமர் தனது பரிந்துரை ஒன்றை முன்வைத்தார்கள்.  குறைஷிப் பெருங்குடியின் கிளையான ‘பனூ உமையா’வைச் சேர்ந்த உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்களை அனுப்பலாம் என்பதே அவரின் பரிந்துரை.

தமது பெயர் முன்மொழியப்பட்டவுடன், உஸ்மான் (ரலி) தமது ஆர்வத்தையும் ஆசையையும் வெளிப்படுத்தி, அப்பணிக்கு ஆயத்தமானார்கள்.  அடுத்து, அத்தோழரின் தூதுப் பணி தொடங்கிற்று.  மக்காவைச் சென்றடைந்த உடனேயே, உஸ்மானுக்கு அபான் இப்னு சஈத் இப்னுல் ஆஸ் என்ற உறவினர் அடைக்கலம் அளித்தார்.  அடுத்து, அவர் உஸ்மானைத் தனது ஒட்டகத்தின் மீது ஏற்றிக்கொண்டு, தான் அவருக்குப் பாதுகாப்புக் கொடுத்ததைப் பொதுமக்களுக்கு அறிவிப்புச் செய்தார்.  

இதையடுத்து, உஸ்மான் குறைஷித் தலைவர்களைச் சந்தித்தார். “குறைஷிகளே!  என்னை அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் பிரதிநிதியாக உங்களிடம் அனுப்பிவைத்துள்ளார்கள்.  உங்களை அல்லாஹ்வின் பக்கமும் இஸ்லாத்தின் பக்கமும் அழைக்க என்னை அனுப்பியுள்ளார்கள்.  தனது மார்க்கமான இஸ்லாத்திற்கு வெற்றியைக் கொடுத்து, தன் இறுதித் தூதரான முஹம்மதை கண்ணியப்படுத்துவதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான்.  உங்களுக்கும் இந்த இறுதித் தூதரான முஹம்மதுக்கும் இடையில் உள்ள வெறுப்பையும் எதிர்ப்பையும் இடைநிறுத்தம் செய்யுங்கள்.  அப்பணியை வேறு யாராவது செய்யட்டும். அல்லாஹ்வின் தூதரை அவர்கள் தோற்கடித்தால், நீங்கள் அவருடன் சண்டையிடாமல், உங்களுக்குரியதைப் பெற்றுக்கொள்வீர்கள்.  அதற்கு மாறாக நிகழ்ந்தால், என்ன செய்வது என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.  இந்தத் தூதருடனான போர்களில் தொடர்ந்து ஈடுபட்டதால், நீங்கள் களைத்துப் போயுள்ளீர்கள்.  உங்களுள் மிகச் சிறந்த தலைவர்களும் வீரர்களும் செத்துப் போய்விட்டார்கள்.  

“என்னை உங்களிடம் தூதுவராக அனுப்பிய அல்லாஹ்வின் தூதர் அவர்கள், இன்னொரு முக்கியமான செய்தியைக் கூறும்படியும் என்னை அனுப்பியுள்ளார்கள்.  அதாவது, நாங்கள் இப்போது வந்திருப்பது, உங்களுடன் சண்டையிடுவதற்காகவன்று.  இந்த இறையில்லமான கஅபாவைத் தரிசித்து, ‘உம்ரா’க் கடமையை நிறைவேற்றி, பலிப் பிராணிகளை அறுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாகத் திரும்பிச் செல்வதற்காகவே நாங்கள் வந்துள்ளோம்.”    

இப்படிச் சிறந்த தொகுப்பாகவும், துணிச்சலோடும் தூதுச் செய்தியை எடுத்துரைத்த உஸ்மானிடம், அவருக்குப் பாதுகாப்புக் கொடுத்த அபான் இப்னு சஈத் கூறினார்:  “உஸ்மான்!  நீ இந்தக் கஅபாவைத் ‘தவாஃப்’ செய்ய விரும்பினால், உனக்குத் தடையில்லை.  நான் உனக்குப் பாதுகாப்புத் தந்துள்ளேன்.”

அதற்கு உஸ்மான் மறுமொழி கூறினார்:  “மிக்க நன்றி!  அல்லாஹ்வின் தூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்யாமல், அவர்களுக்கு முன் நான் ‘தவாஃப்’ செய்ய விரும்பவில்லை.”   
    
இதே நேரத்தில், ஹுதைபிய்யாவில் உஸ்மானின் பொறுப்பைப் பற்றிப் பேசிக்கொண்ட நபித்தோழர்களுள் சிலர்,  “உஸ்மானுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.  தமது பொறுப்பை நிறைவேற்றிவிட்டு, இப்போது நிம்மதியாகக் கஅபாவைத் தவாஃப் செய்துகொண்து இருப்பார்” என்று பேசிக்கொண்டார்கள். இவ்வுரையாடல் நபியவர்களின் காதில் விழுந்தபோது, “நான் உஸ்மானிடம் எதிர்பார்ப்பதெல்லாம், அவர் மக்காவில் பத்தாண்டுகள் தங்கியிருந்தாலும், நான் தவாஃப் செய்வதற்கு முன்பாக அவர் செய்ய மாட்டார் என்பதே” என்று நபியவர்கள் கூறினார்கள்.

அதுதானே நடந்தது?  அற்புதம் அல்லவா?  அல்லாஹ்வின் ஏற்பாடல்லவா இது?

இதையடுத்து, மக்கத்து இணைவைப்பாளர்கள் ‘குழாஆ’ கோத்திரத்து புதைர் இப்னு வரகா என்பவரைத் தம் சார்பிலுள்ள தூதுவராக ஹுதைபிய்யாவுக்கு அனுப்பினார்கள்.  அவரும் தன்னுடன் சிலரை அழைத்துக்கொண்டு கிளம்பினார்.  இந்தக் கிளையினர் நபியவர்கள் மீது அனுதாபிகளாயிருந்தனர்.  அது மட்டுமன்றி, இக்குலத்தார் நபியின் குலமான ‘பனூஹாஷிம்’களின் நட்பு ஒப்பந்தக்காரர்களும் ஆவர்.  

ஹுதைபிய்யாவைச் சென்றடைந்த புதைர், மக்கத்துக் குறைஷிகள் நபியவர்களுடன் போர் புரிய ஆயத்தமாக உள்ளனர் என்ற தகவலைத் தெரிவித்தார்.  அதன் அடையாளமாக, புலித்தோல்களைப் போர்த்தியும்,  பால் கறக்கும் ஒட்டகங்களை ஆயத்த நிலையில் வைத்தும், நெடுநாள் சண்டைக்காகவும் காத்து நிற்கின்றார்கள் என்று அறிவித்தார்.  

“நான் யாருக்கு எதிராகவும் போர் செய்ய வரவில்லையே” என்று கூறிய பெருமானார் (ஸல்) அவர்கள், தமது நிலையினை இன்னும் தெளிவாக விளக்கத் தொடங்கினார்கள்:  “எல்லாருக்கும் தெரிந்த உண்மை ஒன்று உண்டு. அதாவது, அடுத்தடுத்துப் போர்களில் ஈடுபட்டுக் குறைஷிகள் களைத்துப் போயுள்ளனர்.  அவர்களுக்கு ஒய்வு வேண்டாமா?  அவர்கள் எனக்குத் தடையாக இருக்காமல், என்னைத் தனியாக விடட்டும்.  பொது மக்களுடன் நான் தொடர்புடன் இருக்க எனக்கு வழி விடட்டும்.  எனது போதனையால் அவர்கள் உண்மையை விளங்கிக் கொண்டால், மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பது பற்றி அவர்களுக்குத் தெரியும்.  நான் எனது முயற்சியில் பின்னடைவைப் பெற்றால், அந்த இடைவெளி நாட்களில் அவர்களுக்கு ஓய்வாவது கிடைக்குமல்லவா?  இதற்கெல்லாம் இசையாமல், என்னுடன் போர் செய்வது ஒன்றுதான் சிறந்ததாக அவர்கள் தேர்வு செய்தால், நான் அதற்கும் உடன்படுவேன்.  இது சத்தியம்!  கடைசி மூச்சு உள்ளவரை, எனக்கும் அவர்களுக்கும் இடையில் நல்ல தீர்ப்பை அல்லாஹ் வழங்கும்வரை நான் அவர்களை விடமாட்டேன்.”

புதைர் பின் வரகா அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, மக்காவுக்கு விரைந்தார்.  அனைத்தையும் ஒன்று விடாமல் குறைஷித் தலைவர்களிடம் விளக்கிச் சொன்னார்.  அவர் சொன்னது மிகையானது என்று கருதிய அந்தத்  தலைவர்கள், அவரைப் புறக்கணித்தனர்.

இன்னும் குறைஷிகள் அடங்கியதாகத் தெரியவில்லை.  மீண்டும் மிக்ரஸ் பின் ஹப்ஸ் என்ற ஒருவரை ஹுதைபிய்யாவுக்கு அனுப்பினர்.  “இந்த ஆள் நம்பகத் தன்மை அற்றவன்” என்று நபியவர்கள் கூறினார்கள்.  தன்னுடன் ஐம்பது பேரை அழைத்துக்கொண்டு வந்து, முஸ்லிம்களுள் சிலரைச் சிறைப் பிடித்துச் செல்ல விரும்பி, ஹுதைபிய்யாவில் சுற்றிச் சுற்றி வந்தான். முஸ்லிம்கள் எச்சரிக்கையானார்கள்.  அந்த எதிரிகள் ஐம்பது பேரையும் சிறைப்பிடித்தார்கள்.  மிக்ரஸ் மக்காவை நோக்கித் தப்பியோடிவிட்டான். மிக்ரசின் வரவு, போர் செய்வதன்று என்பதால், முஸ்லிம்கள் சிறைப்பிடித்த ஐம்பது பேரையும் எந்த நிபந்தனையும் இன்றி நபியவர்கள் விடுவித்தார்கள்.  

குறைஷிகள் தமது அடுத்த முயற்சியாக, ‘அஹாபிஷ்’களின் தலைவரான அல்ஹுலைஸ் பின் அல்கமா என்பவரை முஸ்லிம்களிடம் அனுப்பினர். அவர் வருவதை அறிந்த பெருமானார் (ஸல்), “இவர் இறையச்சமுள்ள மனிதர். நாம் கொண்டுவந்திருக்கும் பலிப்பிராணிகளை அவருக்கு முன்னால் ஒட்டிவிடுங்கள்.  அதனால், நாம் உம்ராவுக்காகவே வந்துள்ளோம் என்பதை உணர்ந்து கொள்வார்” என்றார்கள்.  அதன்படியே தோழர்கள் செய்தனர்.

இதைக் கண்டவுடன், அல்ஹுலைஸ் நெகிழ்ந்து போனார்.  முஸ்லிம்களின் உண்மை நிலையைப் புரிந்துகொண்டவராக, நபியவர்களைக்கூடச் சந்திக்காமல் மக்காவுக்கு விரைந்தார்.  குறைஷித் தலைவர்களைப் பார்த்துச் சொன்னார்:  “இந்த மக்களைக் கஅபாவைத் தரிசிப்பதை விட்டுத் தடுப்பது அநியாயம்.  இது நமது நடைமுறைக்கு ஒவ்வாதது.  அல்லாஹ்வின் மீது ஆணையாக, ஜுதாம், கிந்தா, ஹிம்யர், லஹாம் போன்ற யமன் தேசத்து மக்களைக் கஅபாவுக்கு வர அனுமதிக்கிறோம்;  கஅபாவின் காவலரான அப்துல் முத்தலிபின் பேரனாகிய முஹம்மதை இங்கு வரத் தடை செய்கிறோம்!  என்ன அநீதி இது!”
    
இந்த நியாயமான வாதத்திற்கு மக்கத்துக் குறைஷிகளிடம் பொருத்தமான பதிலில்லை.  எனவே, அவர்கள்தாம் கஅபாவின் காவலர்கள் என்ற திமிரைக் காட்டினர்.  “பாலைவனத்து நாடோடியே உட்கார்!” என்று உறுமினார்கள்.  இதை அந்தத் தன்மானமுள்ள ஹுலைஸால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

“அல்லாஹ்வின் இல்லமான கஅபாவுக்கு வணங்க வருவோரைத் தடுப்பதற்கு உங்களுக்கு உரிமையில்லை.  இந்த அடங்காத் திமிரை நிறுத்தாவிட்டால், உங்களுக்கு எதிராக ‘அஹாபிஸ்’கள் அனைவரையும் திரட்டுவேன்.  ஜாக்கிரதை!” அல்ஹுலைசின்  எச்சரிக்கை மிகச் சூடாகவே வந்தது.  

ஒப்பந்தக்கரரின் மோதல் தப்பாமல் தன் வேலையைச் செய்தது.  தலைக்கனம் கொண்டவர்கள் தணிந்து போயினர்.  ஆத்திரம் அடங்கிய ‘அஹாபிஸ்’ தலைவர் அமர்ந்தார்.

அடுத்த கட்ட முயற்சி தொடங்கிற்று.  மற்றவர்களையே தூதனுப்புவதைவிட, குறைஷித் தலைவர்களுள் ஒருவரே சென்றால்.........?  அதுதான் அவர்களுக்குச் சரியாகப் பட்டது.

உர்வத்துப்னு மஸ்ஊத் அல்-தகஃபி!  யார் இவர்?  இவரின் தந்தை தாயிஃப் நகரத்தின் ‘தகீஃப்’ இனத்தவர்.  தாய் மக்கத்துக் குறைஷி.  முரடர்களுக்கிடையே ஒரு முன் யோசனைக்காரர்.  “நான் உங்களுள் ஒருவனல்லவா? நான் அந்த மனிதரிடத்தில் போய்ப் பேசட்டுமா?”என்றார் உர்வா.  அரபுக் கோத்திரத்தின் செல்வாக்குப் பெற்ற ஒருவர் முன்வந்தால் மறுப்பார்களா?

அவர்களின் ஒப்புதல் கிடைத்தவுடன் உர்வா கூறினார்:  “குறைஷிகளே! நீங்கள் தூதுவர்களை அனுப்பி, நீங்கள் எதிர்பார்க்கும் மறுமொழி கிடைக்கப் பெறாவிட்டால், உணர்ச்சி வசப்படுகிறீர்கள்.  அந்தத் தூதுவர் மீது வசைப் பாட்டுப் பாடுகின்றீர்கள்.  அது போன்ற நிலை எனக்கு ஏற்படுவதை நான் விரும்பவில்லை.  அவ்வாறு நடந்துகொள்ளமாட்டீர்கள் என்பதை உறுதி மொழியாகத் தாருங்கள்.  அப்போதுதான் நான் அந்த மனிதரிடம் உங்கள் பிரதிநிதியாகப் போவேன்.” 

உர்வாவின் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டனர் மக்கத்துத் தலைவர்கள். இயல்பாகவே, உர்வா தற்பெருமையும் தலைக்கனமும் கொண்டவர். தலைவர்களுக்கு நடுவில் தனது உயர்வைத் தக்கவைத்துக் கொள்வதில் கவனமானவர். ஹுதைபிய்யாவுக்கு வந்து சேர்ந்தவர், இடையில் வேறு யாரிடமும் பேச்சுக் கொடுக்காமல், அல்லாஹ்வின் தூதரிடம் ஆணவத்தோடு வந்து நின்று, முகத்தில் கடுமையைத் தேக்கி வைத்துக் கேட்டார்:  “ஏய் முஹம்மதே!  உன் இனத்தைச் சேர்ந்த மக்களை நீயே கெடுத்துக் கொண்டிருக்கிறாய் என்பதை நீ பார்க்கவில்லையா?  உனது அரபுக் குலத்தில் உனக்கு முன் இப்படி யாரும் தம் மக்களுக்குத் தீங்கு விளைத்தது பற்றிக் கேட்டிருக்கிறாயா?  உன்னைச் சூழ்ந்து அமர்ந்திருக்கும் மக்களில், முகங்கொடுத்துப் பேசத் துணிந்தவர்கள் யாரையும் காணோமே!  இவர்களுள் யாரும் செல்வாக்கும் உயர்வும் உள்ளவர்களாக நான் காணவில்லையே! எங்களுடன் மோதிச் சண்டையிட்டு நீர் தோற்றுவிட்டால், உம்மை அந்தரத்தில் விட்டுவிட்டு ஓடிப்போகும் கோழைகளையல்லவா நான் பார்க்கிறேன்!”  துடுக்காகவும் மிடுக்காகவும் பேசினார் உர்வா.

குறைஷி, தகஃபி, அஸத், கத்ஃபான் போன்ற உயர் குலத்தவர்களுக்கு முன்னால், இறைத்தூதருடன் அப்போது அமர்ந்திருந்த அஸ்லம், கிஃபார், ஜுஹைனா போன்ற இரண்டாந்தரக் குலத்தவர்களைக் கருத்தில் கொண்டு இவ்வாறு கூறினார் உர்வா.   

இந்த ஆணவப் பேச்சைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இப்படிக் கூறினார்கள்:  “குலப்பெருமை பேசித் திரியும் குறைஷிகளைவிட, இன்று கண்ணியப்படுத்தப்படும் மற்ற இனத்தவர்களைவிட, இந்த ஏழை மக்களின் நன்மைத் துலாக்கோல் கனத்து நிற்பதை மறுமையில் காண்பீர்.”

உர்வாவின் ஆணவப் பேச்சைக் கேட்டுச் சும்மா இருப்பது சரியில்லை என்று நினைத்த அபூபக்ர் (ரலி) போன்ற தோழர்கள், அவரைக் கடுஞ்சொற்களால் சபித்தார்கள்.  அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத உர்வா, “என்னை கண்ணியப் படுத்தி அமரச் செய்துள்ளீர்கள் என்ற ஒரே காரணத்தால்தான் நான் உங்களைச் சபிக்காமல் இருக்கிறேன்.  இல்லாவிட்டால், இதைவிட மோசமான சாபத்தால் உங்களைத் திட்டியிருப்பேன்.  நான் மறு பேச்சுக் கொடுக்காமல் மவுனமாக இருப்பதே உங்களுக்கு நான் செய்யும் நற்பேறாகும். இது, நான் பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தியதாகும்” என்றார்.

‘பட்ட கடன்’ என்பது, மக்காவிலிருந்து ‘ஹிஜ்ரத்’ செய்வதற்கு முன்னால், உர்வா செய்த ஒரு கொலைக்குப் பலித்தொகையாகப் பத்து ஒட்டகங்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் கொடுத்திருந்தார்கள்.  அதைத் திருப்பிச் செலுத்தாமல், அதுவரைத் தாமதித்துவந்தார் உர்வா.  தன் மீது அபூபக்ரின்  வசை மொழியை, அதற்குப் பரிகாரமாக்கினார் இந்த தகஃபி!  

அபூபக்ரும் மற்றவர்களும் நபியவர்களை எத்துணை உவப்புடன் மதித்தார்கள் என்பதற்கு, உர்வாவுக்குப் பேச்சால் அவர் பதிலடி கொடுத்தது சான்றாகும். நபித்தோழர்கள் தம் தலைவரை மற்றவர்கள் அவமதிப்பதோ, திட்டுவதோ, மரியாதைக் குறைவாக நடத்துவதோ, தம்மால் சகித்துக்கொள்ள முடியாதது என்று எப்போதும் உண்மைப் படுத்தியவர்களாவர்.  அவர்கள் நபியுடன் பேசும்போது, “எம் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று கூறுவது, வெற்றுச் சொற்கள் அல்ல என்பதை அவர்களின் செயல்பாடு ஒவ்வொன்றும் நிரூபித்துக் காட்ட வல்லதாகும்.  
    
நபிமொழிக் கலை வல்லுநர் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி கூறுகின்றார்: உர்வாவைப் பொறுத்தவரை, ஒருவர் தன் இனத்தவரோடு போரிட்டுத் தோல்வியடைவது பெரிய இழுக்காகும்.  ஆனால், இஸ்லாத்திற்காக ஒருவர் தன் இனத்தவருடன் போர் புரிவது போற்றத் தக்கதாகும்.  அதில் தோல்வியைத் தழுவி, ‘ஷஹீத்’ எனும் பேற்றை அடைவது, அதைவிடச் சிறந்ததாகும்.  எது வெற்றி, எது தோல்வி என்பதை இஸ்லாம் தீர்மானிப்பதுவே உண்மையாகும். 

பேச்சுக்கிடையே, உர்வா உணர்ச்சி வயப்படும்போது, தன் கையை நீட்டிப் பெருமானாரின் தாடியைப் பிடிக்க முயல்வார்.  அப்போதெல்லாம், அண்ணலாரின் அருகில் அவர்களுக்குப் பாதுகாவலராக  நின்றுகொண்டிருந்த அல்முகீரத்துப்னு உக்பா என்ற நபித்தோழர், உர்வாவின் கையைத் தனது வாளின் அடிப்பகுதியால் தட்டிவிடுவார்.  அத்துடன், “உன் கையை உன்னோடு வைத்துக்கொள்!  அது எல்லை தாண்டி இறைத்தூதரின் தாடிக்கு வந்தால், உன் கை உன்னிடம் திரும்பி வராது!” என்று கண்டித்தார்.  இம்மாதிரி, இதற்குமுன் தன்னை அவமரியாதையாக  யாரும் நடத்தியதில்லை என்பதால், அதுவன்றியும், அவர் சாதாரண ஆள் என்பதால், உர்வா அதிர்ச்சியால் குழம்பிப் போனார்!  

“யார் இந்த ஆள்?” என்று கோபம் கொப்பளிக்கக் கேட்டார் உர்வா.  காரணம், பிறர் அறியாத விதத்தில் அவர் முகக் கவசம் அணிந்திருந்தார்.

“தெரியாதா?  இவர் உம்முடைய மருமகன் அல்முகீராதான்” என்றார்கள் பெருமானார் (ஸல்).

அதிர்ச்சியுற்றார் உர்வா!  மாமனாகிய தன்னிடம் மருமகன் இப்படி மரியாதைக் குறைவாக நடந்துகொள்வதா?  (அரபுகளின் வழக்கப்படி, மாமன் தந்தைக்குச் சமமாக மரியாதையுடன் மதிக்கப்பட்டார்.)  ஆனால், இஸ்லாம் எப்படி மனிதர்களை மதிப்பதில் உயரிய மாற்றத்தைச் செய்துள்ளது என்பதை உர்வா அப்போதுதான் கண்டார்!  எல்லாரையும்விட, இறைத்தூதருக்கல்லவா மதிப்பும் மரியாதையும் நபித்தோழர்கள் கொடுக்கிறார்கள் என்பதைக் கண்முன் கண்டு வியந்து நின்றார் உர்வா!

தாங்க முடியாத தலைகுனிவுடனும், அடக்க முடியாத அதிர்ச்சியுடனும், உர்வா மக்காவுக்குத் திரும்பினார்.  அவர் கூறிய செய்தி, குறைஷித் தலைவர்களுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.  உர்வா கூறினார்:  “குறைஷிகளே!  நான் இதற்கு முன் மன்னர்கள் பலரைச் சந்தித்திருக்கிறேன்.  ரோமப் பேரரசர் சீசரையும், பாரசீக மாமன்னர் குஸ்ரூவையும், அபிசீனியாவின் வேந்தர் நஜ்ஜாஷியையும் சந்தித்து வந்துள்ளேன்.  ஆனால், முஹம்மதை அவருடைய தோழர்கள் நேசிப்பது போன்றும், அவருக்கு மரியாதை செலுத்துவது போன்றும், ஒருபோதும் ஒருவரையும் நான் கண்டதில்லை!  அவர் எச்சில் துப்பினால், அது கீழே விழுமுன் அவருடைய தோழர்கள் அதைத் தம் கைகளில் தாங்கி, தம் முகத்திலோ உடலிலோ தடவிக்கொள்கிறார்கள்!  அவர் பேசத் தொடங்கினால், விரைந்தோடி வந்து கேட்கிறார்கள்!  அவரோடு பேசினால், தங்கள் குரலைத் தாழ்த்திக் கொள்கின்றார்கள்!  மரியாதையின் நிமித்தம், அவர்கள் அவரை அன்னாந்துகூடப் பார்ப்பதில்லை!  அவரை ஒருபோதும் அவர்கள் தனித்து விட்டதில்லை!  இத்தகைய தலைவர் உங்களுக்கு ஒரு நல்வாய்ப்பைத் தந்துள்ளார்; எனவே அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.” 

அப்போது உண்மையை மறைக்காமல் வெளிப்படுத்தியதன் விளைவாகத்தான், உர்வா இப்னு மஸ்ஊத் அல்-தகஃபி தன் பிந்திய வாழ்க்கையில் இஸ்லாத்தைத் தழுவி, ஈருலக வெற்றியைப் பெற்றுக்கொண்டார்.  

‘பைஅத்துர் ரிழ்வான்’:

உஸ்மான் (ரலி) அவர்கள் இன்னும் மக்காவில்தான் இருந்து, குறைஷிகளோடு இழுபறியில்தான் ஈடுபட்டிருந்தார்கள்.  ஆனால், அவர்களைப் பற்றி ஒரு வதந்தி ஹுதைபிய்யாவில் பரவத் தொடங்கிற்று.  அதாவது, அவருக்கு முந்தைய தூதுவரைக் கொலை செய்ய முயன்றது போல், உஸ்மானையும் கொலை செய்துவிட்டதாக ஒரு வதந்தி பரவிற்று. குறைஷிகள் கொலை செய்யவும் அஞ்சாத கொடும்பாவிகள் ஆனதால், முஸ்லிம்கள் அதை உண்மையென்று நம்பிவிட்டார்கள்.
    
உடனே, அவர்களுள் பெரும்பாலோர் பெருமானாருடன் எங்கு நிழலுக்காக ஒதுங்கியிருந்தார்களோ, அந்த ‘பனூ நஜ்ஜார்’களின் மரத்தடி நிழலிலேயே அனைவரும் ஒன்றுகூடினார்கள்.  ‘பழிக்குப் பழி!’ என்ற பேச்சே அவர்கள் அனைவரின் பேச்சாக இருந்தது!

அப்போது அண்ணலார் (ஸல்) அவர்கள் பேசத் தொடங்கினார்கள்:  “உங்கள் அனைவரிடமும் ஓர் உறுதிமொழியை வாங்கும்படி அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்” என்று கூறித் தம் பாதுகாவலர்களான ‘பனூ நஜ்ஜார்’களைப் பார்த்தார்கள்.  மதீனாவின் பெருங்குடியினரான ‘கஸ்ரஜி’களின் கிளையினர் அல்லவா அவர்கள்?  மேலும், பெருமானாரின் தாய்வழிச் சொந்தக்காரர்கள் அல்லவா?  அதனால், முதலாவதாக அவர்களிடம் உறுதிமொழி வாங்கத் தொடங்கினார்கள்.

“அல்லாஹ்வுக்காகவும் அல்லாஹ்வின் தூதருக்காகவும் நாங்கள் எங்கள் உயிர்களை இழக்கத் தயாராக இருக்கிறோம்!  மக்கத்துக் குறைஷியருக்கு எதிரான எங்கள் சண்டையை விட்டு நாங்கள் வெருண்டோட மாட்டோம்!  அல்லாஹ்வின் தூதரே!  உங்கள் இதயத்தில் என்ன இருக்கின்றதோ, அதற்காக உடன்பட்டு, நாங்கள் உங்களிடம் உறுதிமொழி அளிக்கிறோம்!”

இதுதான் ‘பைஅத்துர் ரிழ்வான்’ எனும் உயிர்ப்பணய உடன்படிக்கை!

அப்போது அங்கிருந்த வீரப் பெண்மணி உம்மு அம்மாரா கூறுகின்றார்:  “இந்த உடன்படிக்கையைக் கேட்டவுடன், நாங்கள் இருந்த கூடாரத்தின் ஊன்றுகம்பைப் பிடுங்கி எடுத்தேன்.  வீச்சுக் கத்தியை எடுத்து என் இடுப்பு வாரில்  செருகிக் கொண்டேன்.  இந்தத் தயாரிப்பு, அந்த நிமிடத்தில் யாராவது இறைத்தூதரைத் தாக்க வந்தால், தடுத்து நிறுத்துவதற்காக!  என் கணவரோ, தன் கையில் வாளைப் பிடித்த நிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்!”

நபித்தோழர்கள் தனித்துவம் பெற்றவர்கள்.  அவர்களுள்ளும், ‘அன்சார்’கள் சிறப்பு வாய்ந்தவர்களாவர்.  அவர்கள் ஒவ்வொருவரின் தனித் திறமைகளை அறிந்திருந்த பெருமானார் (ஸல்) அவர்கள் அவரவருடைய தன்மைக்குத் தக்கபடி, உடன்படிக்கை செய்துவைத்தார்கள்.

இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பாகச் சொல்லித்தான் ஆகவேண்டும்.  அதாவது, இந்த மரத்தடி ஒப்பந்தத்தை உஸ்மான் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை ‘ஷியா’க்கள் ஒரு பெரிய வாதமாக எடுத்து வைக்கின்றார்கள்!  அது போன்றே, ‘பத்ரு’ப் போரிலும் அவர் கலந்துகொள்ளவில்லை என்று உஸ்மானைக் குற்றப்படுத்துகின்றனர்.  இவை தவறான குற்றச்சாட்டுகளாகும்.
    
முதலில், மக்காவில் உஸ்மான் கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தி கிடைத்ததால்தான், இந்த மரத்தடி ஒப்பந்தமே நடந்தது.  மேலும், உஸ்மானுக்காக நபியவர்கள் தமது ஒரு கையைக் காட்டி, “இது உஸ்மானுடைய கை” என்று கூறி, அதன்மீது தமது இன்னொரு கையை வைத்து, “நான் உஸ்மானுக்காக உறுதிமொழி எடுக்கிறேன்” என்று கூறினார்கள்.  

இரண்டாவதாக, ‘பத்ரு’ப் போருக்குப் போனபோது, தன் மகள் ருகையாவின் கணவரான உஸ்மானை, ருகையா மரணப் படுக்கையில் இருந்ததால், அவரைக் கவனித்துக்கொள்ளுமாறு நபியவர்கள் கூறியிருந்தார்கள்.  அதனால், அவர் அப்போரில் கலந்துகொள்ளவில்லை.  

அல்லாஹ்வின் அருள்மறை கூறுகின்றது:  “(நபியே!) திண்ணமாக நாம் உம்மைச் சாட்சியாளராகவும் நற்செய்தி கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் அனுப்பியுள்ளோம்.  (ஏனெனில்,) அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நீங்கள் நம்பிக்கை கொள்வதற்காகவும், அவனுக்கு நீங்கள் உதவி செய்வதற்காகவும், அவனை நீங்கள் கண்ணியப் படுத்துவதற்காகவும், காலையிலும் மாலையிலும் அவனை நீங்கள் துதிப்பதற்காகவும்தான் உம்மை நாம் அனுப்பியுள்ளோம்.  திண்ணமாக, எவர்கள் உம்மிடம் உடன்படிக்கை செய்கிறார்களோ, அவர்கள் உடன்படிக்கை செய்வதெல்லாம், அல்லாஹ்விடம்தான்.  அல்லாஹ்வுடைய கை அவர்களின் கைகளுக்கு மேல் உள்ளது.  எனவே, எவர் அதனை முறித்துவிடுகின்றாரோ, அவர் முறிப்பதெல்லாம் அவர் மீதே கேடாகும்.  எதன் மீது அல்லாஹ்விடம் உறுதிமொழி அளித்தாரோ, அதனை எவர் நிறைவேற்றுகின்றாரோ, அவருக்கு மாபெரும் கூலியை அல்லாஹ் வழங்குவான்.” (48:8-10)

இந்த மரத்தடி ஒப்பந்தத்தைப் பற்றி அல்லாஹ் மேலும் கூறுகின்றான்:  “(நபியே!) அந்த மரத்தடியில் உம்மிடம் அவர்கள் உடன்படிக்கை செய்தபோது, முஃமின்களைப் பற்றி அல்லாஹ் திட்டமாகப் பொருந்திக்கொண்டான்.  மேலும் அவர்களுடைய உள்ளங்களில் இருப்பதையும் அறிந்து, அவர்கள் மீது அமைதியை இறக்கிவைத்து, அண்மையிலான வெற்றியையும் அவர்களுக்கு வெகுமதியாக அளித்தான்.” (48:18)

இந்த ஒப்பந்தத்தில் பங்குபற்றிய நபித்தோழர்களைப் புகழ்ந்துரைத்தான் அல்லாஹ்.  அவனின் நேரடிப் பார்வை இதன் மீது இருந்ததால், அவர்கள் தமக்குள் உடன்படிக்கை செய்தபோது, அல்லாஹ்வாகிய தன் கை இறைத்தூதரின் கை மீது இருந்தது என்று சிறப்பித்துக் கூறினான்.  நபியவர்கள், அந்த உடன்படிக்கை நிறைவேறியபோது, தம் தோழர்களைப் பார்த்து, “இந்தப் புவியில் உள்ள மனிதர்களுள் நீங்கள்தாம் சிறந்தவர்கள்” எனக் கூறினார்கள்.  

இந்த உடன்படிக்கை முடிந்த பின்னர், மக்காவிலிருந்து உண்மைச் செய்தி வந்தது.  அதன்படி, உஸ்மான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டதாக வந்த செய்தி வதந்தி என்று தெரிவிக்கப்பட்டது. உண்மையில், இந்த மரத்தடி உடன்படிக்கையானது, போரில் முடிவடையாவிட்டாலும், உண்மை விசுவாசிகளுக்கு அது ஒரு பரிசோதனை என்பதையும், அதற்காக அவர்கள் நற்கூலி வழங்கப்படுவார்கள் என்பதையும் உறுதிப் படுத்துகின்றது.

பின்னர் குறைஷிகள் சுஹைல் பின் அம்ர் என்ற குறைஷித் தலைவரை நபியிடம் பேச்சுவார்த்தை நடத்தும்படி அனுப்பிவைத்தார்கள். 

இந்தக் குறைஷிப் பிரதிநிதி, தன் மக்கத்துத் தோழர்களின் நிபந்தனைகளில் மிகவும் உறுதியாக நின்றார்.  எவ்வாறேனும் முஹம்மதை மக்காவிற்குள் இப்பயணத்தில் நுழையவிடாமல் தடுத்துவிட வேண்டும் என்பது, அவற்றுள் ஒன்றாகும்.  இந்தப் பிடிவாத நிலைபாடு, கஅபாவுக்கு வருவோரைத் தடை செய்யலாகாது என்ற அறியாமைக் காலத்துக் குறைஷிகளின் நிலைபாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும்.     

குறைஷிப் பிரதிநிதியிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, நபியவர்கள் கஅபாவுக்குச் சென்று தமது வணக்கத்தை நிறைவேற்றவேண்டும் என்பதில் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் உறுதியாக நின்றார்கள். ஆனால், குறைஷிகள் ‘விடாக்கண்டர்களாகவும் கொடாக்கண்டர்களாகவும்’ நின்றனர்.  இறுதியில், அந்தக் குறைஷிகளின் இந்த நிபந்தனையை ஆவணப் படுத்தவேண்டும் என்று அண்ணலார் விரும்பினார்கள்.  காரணம், அன்னார் விட்டுக் கொடுத்த நிகழ்வு எழுத்தில் பதிவு செய்யப்பட்டால், ஒரு வகையில் அது வெற்றிப் பாதையில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதே அவர்களின் எண்ணமாகும்.  

இறைத்தூதரின் இந்த விட்டுக்கொடுத்தல், இறைவனின் ஏற்பாடாகும்;  அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் அல்லாஹ்வால் வழிகாட்டப்பட்ட ஒன்றாகும்;  நபியின் முடிவன்று என்பது, தம் அன்புத் தோழர்களுக்கும் விளங்கும் என்று கருதினார்கள்.  தமது அழைப்பின் பேரில் ‘உம்ரா’ வணக்கத்தை நிறைவேற்ற வந்த தோழர்களுக்கு, நபியவர்கள் தம் கொள்கையில் உறுதிப்பாடு உடையவர்கள் என்பதையும், தாம் குறைஷிகளால் நீதிக்குப் புறம்பாக நடத்தப்படுகிறார்கள் என்பதை, தோழர்களை அறியச் செய்யும் என்று அவர்கள் நம்பினார்கள்.

அந்தப் பேச்சுவார்த்தையில் என்னவெல்லாம் நடந்துகொண்டிருக்கின்றது என்பதைத் தம் கண்முன்னால் கண்டுகொண்டிருந்த உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். அன்னாரின் அதரங்கள் துடித்தன!  சூழ அமர்ந்திருந்த தோழர்களை விலக்கிக்கொண்டு நபியவர்களின் முன் சென்ற உமர் அவர்கள் தம் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு கேட்டார்கள்:

“தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என்பது உண்மையல்லவா?”   

“ஆம்;  உண்மைதான்.”  அமைதியாகக் கூறினார்கள் அண்ணலார் (ஸல்).  

“நாயகமே!  நாம் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்ட ‘முஸ்லிம்கள்’ அல்லவா?” எனக் கேட்டார் உமர்.

அதற்கும், “ஆம்” என்றே மறுமொழி கூறினார்கள் மாநபி (ஸல்) அவர்கள்.

உமரின் உணர்ச்சி அடங்கவில்லை.  “இவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாத இணை வைப்பாளர்கள்தாமே?” என்றார்கள்.

“ஆம், என் அன்புத் தோழரே!” என்று அதற்கும் மறுமொழி அளித்தார்கள் மாநபி.

“அவ்வாறாயின், நமது உண்மை மார்க்கத்தைப் பொய்யாக்கி, இவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டுமா?”  உமரின் உணர்ச்சிக் கொந்தளிப்பால் வெளிவந்த சொற்கள் இவை!

அண்ணலார் அதற்கும் மறுமொழியளித்தார்கள்:  “நான் அல்லாஹ்வின் அடிமையாவேன்.  அதனால், அவனுக்குக் கீழ்ப்படிவேன்.  அவன் என்னைக் கைவிட மாட்டான்.”

உமரின் உணர்ச்சி  அடங்கவில்லை!  அண்ணலாரின் முன் இதற்கு மேல் பேசவும் வலிமையற்றவராக ஆனார் உமர் (ரலி).

தமது அடுத்த முயற்சியாக, அல்லாஹ்வின் தூதருடைய அணுக்கத் தோழரான அபூபக்ர் (ரலி) அவர்களிடம் போனார்.  நபியவர்களிடம் தாம் கேட்ட அதே வினாக்களை அபூபக்ரிடமும் கேட்டார்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் அடக்கத்துடன் சொன்னார்கள்:  “நபியவர்கள் சொல்வதைக் கேளும்.  அவர்கள் அல்லாஹ்வின் தூதர்.  அதனால், அவர்களை அல்லாஹ் கைவிட மாட்டான்.”

உமர் அடங்கிப் போனார்.  சில ஆண்டுகளுக்குப் பின், இந்த ஒப்பந்தத்தின்போது தாம் நடந்துகொண்ட கடுமைத் தன்மை பற்றி வருந்தினார்கள் உமர்(ரலி).  அல்லாஹ்விட மிருந்து வந்த ‘வஹி’யின் அடிப்படையில்தான் நபியவர்கள் செயல்பட்டார்கள்;  அல்லாஹ்வினால் கட்டளையிடப்பட்ட ஒன்றுக்குக் கட்டுப்பட்டு, அவனின் பொருத்தத்தை அடைந்துகொள்ளும் விதத்தில்தான் அன்னார் செயல்பட்டு, அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டார்கள் என்பதைப் புரிந்துகொண்டார்கள்.

உமர் (ரலி) அவர்களின் வாதத்திலும் உண்மை இருந்தது.  அவர்களின் தூய உள்ளத்தால், இஸ்லாம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாதாடினார்கள் என்பதையும் அல்லாஹ் அறிவான்.  உமர் அவர்கள் தமது பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டபோது சொன்னார்கள்:  “அப்போது நான் நடந்துகொண்ட தவறான வாதத்தால் கடுமையாக நடந்துகொண்டதற்குப் பகரமாக, அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெறுவதற்காக, தொழுதேன்;  நோன்பு வைத்தேன்; தர்மம் கொடுத்தேன்;  அடிமைகளை அடிமைத் தளையிலிருந்து விடுவித்தேன்.  அன்று நான் இறைத்தூதரின் செயலுக்கு மாறாக நடந்துகொண்ட முறைக்காக அல்லாஹ் என்னை மன்னித்தருள வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில்தான் செய்தேன்.”

முஸ்லிம்களுக்கும் மக்காக் காஃபிர்களுக்கும் இடையிலான உடன்படிக்கையை எழுத்தில் வடிக்க ஆயத்தமானார்கள் அண்ணலார் (ஸல்) அவர்கள்.  நிபந்தனைகளை ஒவ்வொன்றாக எழுதத் தொடங்கும் முன்பு,  அலி (ரலி) அவர்களிடம், “முதலில் ‘பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்’ என்று எழுதி, நிபந்தனைகளை ஒவ்வொன்றாகத்  தொடங்குங்கள்” என்று கூறினார்கள் அண்ணலார். 

அப்போது சுஹைல் இடைமறித்தார்!  “எங்களுக்கு அல்லாஹ்வைத் தெரியும்.  ஆனால், ரஹ்மான் ரஹீம்களைத் தெரியாது.  ஆகவே, ‘பிஸ்மிக்கல்லாஹும்ம’ என்று எழுதுங்கள்” என்றார்.  தாம் முன்பு கூறியதை மாற்றிவிட்டு, சுஹைல் கூறியபடி அலியை எழுதச் சொன்னார்கள் நபியவர்கள்.  அலி மாற்ற மறுத்தார்.  எனவே, நபியவர்களே தம் கையால் அந்த வாசகத்தை அழித்தார்கள்.

முதலில், அந்த உடன்படிக்கையின் தலைப்பாக, ‘அல்லாஹ்வின் தூதரான முஹம்மதுக்கும் மக்கத்துக் குரைஷிகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம்’ என்று எழுதச் சொன்னார்கள்.  அதை அலியவர்கள் எழுதத் தொடங்குவதற்கு முன்னால், சுஹைல் குறுக்கிட்டார்.  “உம்மை அப்துல்லாஹ்வின் மகன் என்றுதான் எங்களுக்குத் தெரியும்; அல்லாஹ்வின் தூதர் நீர் என்பது எங்களுக்குத் தெரியாது.  அல்லாஹ்வின் தூதர் என உம்மை நாங்கள் ஏற்றுக்கொண்டால், இத்தகைய ஒப்பந்தத்தின் தேவையே ஏற்பட்டிருக்காதே.  ஆகவே, ‘அப்துல்லாஹ்வின் மகனான முஹம்மது’ என்றே எழுதக் கூறுங்கள்” என்றார் சுஹைல். 

நபியவர்கள் அலியிடம், சுஹைல் கூறியவாறே மாற்றி எழுதச் சொன்னார்கள்.  அலி மீண்டும் மாற்றி எழுத மறுத்தார்.  நபியவர்கள், அந்த வாசகம் எழுதப்பட்ட இடத்தைத் தமக்குக் காட்டும்படிக் கூறி, அதைத் தம் கையாலேயே அழித்தார்கள்.  அல்லாஹ் என்பதையும், அல்லாஹ்வின் தூதர் என்பதையும் தம் கையால் அழிக்க மறுத்த அலி அவர்களின் மனப்பாங்கு, முஸ்லிம்கள் அனைவராலும் அறியத் தக்கதே.  உண்மை முஸ்லிம் எப்படி இதைச் செய்வார்?

சூழ இருந்த தோழர்கள், அதுவரை தாம் கண்டுகொண்டிருந்த உண்மைக்கு மாறான கட்டாயச் சட்டத்தை, மக்காவுக்குத் தாம் ‘உம்ரா’வை நிறைவேற்ற அதன் அருகில் வந்துவிட்ட நிலையில், ‘வரக்கூடாது என்று தடுக்க, இவர்கள் யார்?’ என்று தமக்குள் பேசிக்கொண்டார்கள்.

இந்த இடைத் தடைக்குப் பின், ஒப்பந்தம் இவ்வாறு எழுத்துருப் பெற்றது:

இரு தரப்பினரும் எதிர்வரும் பத்தாண்டுகளுக்குப் போர் நிறுத்தம் செய்துகொள்வது என்றும், மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சமாதானத்தின் உயர்வை மதித்து, சண்டையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மக்காவிலிருந்து யாராவது தன் பொறுப்பாளரின் அனுமதியின்றி, முஸ்லிமாகி, முஹம்மதின் பக்கம் சென்றுவிட்டால், அவரை மக்கத்துக் குறைஷிகளிடம் ஒப்படைக்கவேண்டும்.

மதீனாவிலிருந்து யாராவது மக்கத்துக் குறைஷிகளிடம் வந்துவிட்டால், அவர் முஹம்மதிடம் திருப்பி ஒப்படைக்கப்பட மாட்டார்.

இரு தரப்பினரும் தமக்குள் உரிய புரிந்துணர்வுடனும்  நல்லெண்ணத் துடனும்  நடந்துகொள்ள வேண்டும்.

கள்ளத்தமும் கடுமைத்தனமும் களையப்பட வேண்டும்.

முஹம்மதுடன் எந்த இனத்தவரும் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்பினால், அவ்வாறே செய்துகொள்ளலாம்; எவரேனும் குறைஷிக ளுடன் சமாதான ஒப்பந்தம் செய்ய நாடினால், அவர்களும் அவ்வாறே செய்துகொள்ளலாம்.

இந்த ஆண்டு முஸ்லிம்கள் உம்ராச் செய்ய முடியாது.  மதீனாவுக்குத் திரும்பிச் சென்றுவிட வேண்டும்.  அடுத்த ஆண்டில், உம்ராவின் நாட்டத்துடன் முஹம்மதும் தோழர்களும் மக்காவுக்கு வருவதற்கு முன்னால், மக்காவாசிகளான நாங்கள் மக்காவைக் காலி செய்துவிட்டு வெளியில் சென்றுவிடுவோம்.  அப்போது முஸ்லிம்கள் கஅபாவில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவற்றை மூன்றே நாள்களில் செய்துவிட்டு, மக்காவை விட்டுக் கிளம்பிப் போய்விட வேண்டும். 

முஸ்லிம்கள் எந்தப் போராயுதத்தையும் சுமந்துவரக் கூடாது.  அரபுகள் வழக்கமாகத் தங்கள் உறையிலிட்டு வைத்திருக்கும் கத்தி மட்டும் அனுமதிக்கப்படும். 

முஸ்லிம்களுக்குச் சாதமில்லாத, ஒரு பக்கச் சார்புடைய இந்த உடன்படிக்கைக்குச் சம்மதித்ததன் மூலம், எதிர்காலத்தில் நபியவர்கள் அமைதியுடன் இஸ்லாத்தைப் பரப்பும் சாதகமான சூழலை ஏற்படுத்திவிட்டார்கள்.  வெறுப்பான சூழல் விலகி, சாதகமான சூழலை உண்டாக்கிவிட்ட பின்னர், முஸ்லிம்கள் மக்கச் சமுதாயத்தில் அச்சமின்றிப் பரவி, தமக்குக் கிடைத்த பேரின்ப வாழ்க்கையைப் பிறருக்கும் எடுத்துரைத்து, அழைப்புப் பணி செய்யத் தக்க வாய்ப்பும் வசதியும் கிடைக்கப் பெற்றார்கள்.  இதனால்தான், அரபுத் தீபகற்பம் முழுதும் இஸ்லாம் கோளோச்ச முடிந்தது.  எதிர்காலத்தில் வரவிருக்கும் நிலையான அமைதிக்காக, தற்காலிகமாகக் கிடைக்கும் சாதகமானதை விட்டுக் கொடுப்பது அறிவுடைமை ஆகும்.  ஒப்பந்தம் உண்டாக்கும்போது, இது போன்ற இழப்புகளைத் தாங்கித்தான் ஆகவேண்டும்; இதில் நமது சுய கவுரவத்திற்கு இழப்புண்டானாலும் சரியே என்பதுதான் நீதித் தூதர் (ஸல்) அவர்களின் நிலைபாடு.  

இந்த ‘ஹுதைபிய்யா’ நிகழ்வு ஒரு மாபெரும் சோதனையாகும்.  அதனால்தான், மக்கத்து முஹாஜிர் ‘மாணவர்’களான நபித்தோழர்கள், ‘ஹிஜ்ரா’ எனும் பயணச் சோதனை மற்றும் அவர்கள் மதீனாவில் எதிர்கொண்ட போர்கள் ஆகியவற்றால் துவண்டு போயிருந்தார்கள். இந்த உடன்படிக்கையின் பின்னர், இனிப் பத்தாண்டுகளுக்கு மக்காவாசிகள் முஸ்லிம்களை நோக்கிப் படையெடுத்து வரமாட்டார்கள் என்ற நம்பிக்கையால், ஓரளவு ஆறுதல் பெற்றார்கள் முஸ்லிம்கள்.  அவர்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டவர்கள் என்பதற்கான தேர்வில் பொறுமையை மேற்கொண்டு வெற்றி பெற்றார்கள் எனக் கூறலாம்.  இந்த ஒப்பந்தத்தினால், உமர் இப்னுல் கத்தாப் (ரலி) போன்ற தோழர்களுக்கு இலகுவில் ஜீரணம் ஆக்கிக்கொள்ள முடியாத ஒன்றாகப்  பொறுமை எனும்  சோதனையை மேற்கொண்டு இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இத்தகைய சோதனை, ஒப்பந்தத்துடன் முடிந்துவிடப் போவதில்லை.  நிபந்தனைகள் எழுதப்பட்ட பின்னர், அதில் இரு பக்கத்தாரும் கையொப்பம் இடாத  நிலையில், முஸ்லிம்களுக்கு ஒரு பெருஞ்சோதனை ஏற்பட்டது!  

எங்கிருந்தோ வந்து சேர்ந்தார் அபூஜந்தல்!  இவர் மக்கத்துக் குறைஷியருக்குத் தெரியாமல் தப்பித்து, மதீனாவுக்குச் செல்வதற்காகப் பயணப்பட்டவர். தமது பயணத்தை இலகு படுத்திவிடும் என்ற எதிர்பார்ப்பில் அங்கு வந்து சேர்ந்தார்.

அவரின் தந்தை சுஹைல் இப்னு அம்ர்தான் நபியின் எதிர்த் தரப்பில் அமர்ந்து, மக்கத்துக் குறைஷியரின் பிரதிநிதியாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போகின்றவர்.  மக்காவில் இருந்தபோது அபூஜந்தல் முஸ்லிமானார்.  அதனால், மக்கத்துக் குறைஷியர் அவரைப் பிடித்துவந்து சிறைப் படுத்தினார்கள்.  அதை உடைத்துக்கொண்டுதான் அபூஜந்தல் மக்காவை விட்டுத் தப்பித்து, மதீனாவுக்குத் தனது பயணத்தை மேற்கொண்டார்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவில் தங்கியிருக்கிறார்கள் என்பது மட்டும் அவருக்கு எப்படியோ தெரிந்தது.  எதற்காக அங்கே தங்கியிருக்கின்றார்கள் என்பது அவருக்குத் தெரியாது.  தாயைப் பிரிந்து சென்றுவிட்ட கன்று, தாய்ப் பசுவைக் கண்டுவிட்டால் ஓடிவரும் அல்லவா?  அதைப் போன்று விரைந்து வந்து, நபித் தோழர்களுடன் இணைந்துகொண்டார் அபூஜந்தல்.   தனது தப்பித்தலைப் பற்றிக் கூறி, நபித்தோழர்களை வியப்பில் ஆழ்த்திக் குதூகலம் கொண்டிருந்தார்.

நபித்தோழர்களின் கூட்டத்தில் தன் மகன் இருப்பதைக் கண்டுவிட்டார் சுஹைல்!  “இவன்தான் இப்போது எனது நடவடிக்கையில் முதலானவன்;  இவனுடைய விஷயத்தையே எனது முதல் நடவடிக்கையாக எடுக்கப்போகிறேன். முஹம்மதே! இவனை என்னிடம் ஒப்படைக்கவேண்டும்; அப்போதுதான் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவேன்” என்று கூறினார் சுஹைல். 

நபியவர்கள் சுஹைலின் பிடிவாதத்தை அறிந்தவர்.  எந்த விதத்திலும் அவரைச் சமாதானப் படுத்த முடியாது என்பதை அறிந்திருந்த நபியவர்கள், அபூஜந்தலைப் பார்த்து, “நீர் உம் தந்தையுடன் போய்த்தான் ஆகவேண்டும்” எனக் கூறினார்கள். 

அபூஜந்தல் அதிர்ந்து போனார்!  “அல்லாஹ்வின் தூதரவர்களே!  என்னை மீண்டும் வேதனையை அனுபவிக்க, குறைஷியரிடம் ஒப்படைக்கப் போகின்றீர்களா?  எனது ஈமானைச் சோதிக்கவா இவர்களிடம் ஒப்படைக்கப் போகின்றீர்கள், யா ரசூலில்லாஹ்?” என்று கேட்டார் அபூஜந்தல்.  “பொறுமை செய்வீர்! அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்.  உமது தியாகத்தால், அதில் நீர் காட்டும் பொறுமை மூலம்,  உம்மைப் போன்ற மற்றவர்களுக்கும் விடுதலை எனும் விடியல் பிறக்கும்” என்றார்கள் நபி (ஸல்). 

நபித்தோழர்களுக்கு இந்த நிகழ்வானது, மிகப்பெரும்  சோதனையாகிவிட்டது!  அவர்களின் நியாய உணர்வில் விழுந்த பேரிடி போன்றும் ஆகிவிட்டது!  தம் சார்பில் நின்று, சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திடப் போகும் பெருமானாருக்குக் கீழ்ப்படியும் அந்தத் தோழர்களுக்கு, அவர்களின் ஈமானுக்கு, மிகப் பெரிய சோதனையாகிவிட்டது!  தமக்கு உடன்பாடில்லாத எத்தனையோ விஷயங்களுக்குக் கட்டுப்பட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்கள் அருமைத் தோழர்கள்.  

கண்ணியமும் கீழ்ப்படிதலும், அல்லாஹ்வின் மீது நம்பிக்கையும்  கொண்டிருந்த தோழர்களுக்கு, மக்கத்துத் தலைவர்களுக்குச் சாதகமாகவும், முஸ்லிம்களான தமக்குப் பாதகமாகவும் இருந்த எத்தனையோ நிபந்தனைகள் மீது அவர்களுக்கு உடன்பாடு இல்லாத நிலையில், விட்டுக் கொடுத்து நிற்கும் நபித்தோழர்களின் கண் முன்னால், தம் சகோதரர் அபூஜந்தல் விலங்கிடப்பட்ட நிலையில் இறைமறுப்பாளர்களால் இழுத்துச் செல்லப்படுவதைப் பார்க்கச் சகிக்காத காட்சியில், அவர் அவ்வாறு இழுத்துச் செல்லப்படுவதை விரும்பாத அந்த நபித்தோழர்கள், இதற்கு மேல் தம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில், உமர் போன்ற தோழர்கள், விக்கித்து நின்றார்கள்!  

இத்தகைய ஒப்பந்தங்களால் எல்லாம் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்பட்டுவிடுமா? ஏற்படாது! காரணம், நபியவர்கள் முஸ்லிம்களின் சார்பிலும், சுஹைல் மக்கத்துக் குறைஷிகள் சார்பிலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் காத்திருந்த வேளையில், அபூஜந்தல் எவரும் எதிர்பார்த்திராத நிலையில், காட்சியின் கதாநாயகனாக, ஹுதைபிய்யாவுக்கு வந்து சேர்ந்தார்!

ஒப்பந்தம் அதுவரைக் கையெழுத்தாகவில்லை என்ற காரணத்தைக் கூறி, அவரைத் தம்முடன் மதீனாவிற்கு அழைத்துச் செல்வதே அறிவுடைமை என்று நபி (ஸல்) அவர்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், சுஹைல் இணங்க மறுத்துவிட்டார்.

“இவனின் பிரச்சினையைத்தான் நான் முதலாவதாக எடுத்துக்கொள்ளப் போகின்றேன். இவன் என் மகன் என்ற உண்மையும் எனக்கு முழு உரிமையைத் தந்துள்ளது. நீங்கள் இவனை இப்போதே எங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால், நமக்கிடையில் வகுக்கப்பட்ட ஒப்பந்தம் புறக்கணிக்கப்படும்” என ஆவேசத்துடன் பேசினார் சுஹைல்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்கத்துக் குறைஷிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தமக்குப் பாதகமாக இருந்தும்கூட, அல்லாஹ் தன் அடியார்களுக்கு உதவி செய்யப் போவதாக வாக்களித்திருப்பதால், அந்த ஒருதலைப் பட்சமான ஒப்பந்தத்தில் கையொப்பமிடச் சம்மதித்தார்கள். 

இதன்பின், உமரவர்கள் மெதுவாக எழுந்து, அபூஜந்தலிடம் சென்றார்கள்.  “இந்தாரும், இதோ என் வாளை எடுத்துக்கொள்ளும். ஒரு நல்ல வாய்ப்பை நீர் அடைந்தால், உம்மைப் பிடித்துச் செல்லும் இறைமறுப்பாளனை வெட்டிச் சாய்த்துவிடும்.  அதன்பின் நீர் தப்பித்துக் கொள்ளலாம்” என்று கூறித் தன் வாளை அவரிடம் கொடுத்தார். ஆனால், அபூஜந்தல் அதனைப் பெற்றுக்கொள்ளவில்லை.  அதற்கு உமர், “இவர் தன் தந்தையைக் காப்பாற்ற நினைக்கிறார்;  அவரை எதிர்த்துக் கொல்ல விரும்பவில்லை” என்று கூறினார்.

ஒப்பந்தம் கையெழுத்தாகிற்று. தன் பணி முடிந்ததென்று வாரிச் சுருட்டிகொண்டு எழுந்தார் சுஹைல். அவரின் பரிவாரங்கள் புடைசூழ, அபூஜந்தலைக் கைது செய்து, கயிற்றால் பிணைத்துக்கொண்டு, மக்காவை நோக்கிப் புறப்பட்டார்.

இங்கு, ஹுதைபிய்யாவில், அண்ணலார் (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களைப் பார்த்து, தலைமுடியை மழிக்குமாறும் பலிப் பிராணிகளை அறுக்குமாறும் கட்டளையிட்டார்கள். எப்பொழுதும் நபியவர்களின் கட்டளையைச் செயல்படுத்துவதில் போட்டி போட்டுக்கொள்ளும் தோழர்கள், இப்போது அதில் தயக்கம் காட்டினார்கள்! காரணம் என்னவென்றே புரியாமல் நபியவர்கள் தோழர்களைப் பார்த்தார்கள். ஆனால், தமது கட்டளையை இரண்டாவது முறை திருப்பிக் கூறவில்லை. சற்றே எதிர்பார்த்துவிட்டுத் தமது கூடாரத்தினுள் சென்றுவிட்டார்கள்.

ஆனால் அதுவரை, நபி வரலாற்றிலேயே நடந்திராத ஒன்று நிகழ்ந்தது! நபித்தோழர்கள் தம் தலைவராகிய நபியவர்களின் ஏவலுக்குக் கட்டுப்படாமல், என்ன செய்வதென்றே புரியாமல், அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டிருந்தனர்!

தோழர்கள் தமது ஏவலுக்குக் கட்டுப்படவில்லை என்ற நிலையைக் கண்டு, வியந்து நின்றார்கள் வேதத் திருத்தூதர் (ஸல்) அவர்கள். சற்று நேரத்தில், தோழர்களின் அந்தக் கட்டுப்படாமை, நபியின் சினத்துக்குக் காரணமாக மாறிற்று.

நபியவர்கள் தமது ஆணையை இரண்டாவது முறை கூறவில்லை. காரணம், அப்படி அவர்கள் செய்து, அது நடைமுறைப் படுத்தப்படாவிட்டால், அது அந்தத் தோழர்களை இறைமறுப்பின் பக்கம் இழுத்துச் சென்றிருக்கும்! கோபத்தோடு கூடாரத்தினுள் நுழைந்த நபியவர்களைப் பார்த்து, அவர்களின் மனைவிகளுள் ஒருவரான உம்மு சலமா (ரலி) அவர்கள், அதற்கான காரணத்தைக் கேட்க, நபியவர்கள் பதில் கூறினார்கள்:

“முஸ்லிம்கள் தம்மைத் தாமே இறைமறுப்பின் பக்கம் இழுத்துச் செல்கின்றார்கள்! நான் அவர்களைத் தலைமுடி கலைந்து, பலிப்பிராணிகளை அறுக்கும்படிக் கட்டளையிட்டேன்; ஆனால், அவர்களுள் ஒருவர்கூட, அதைச் செய்ய முன்வரவில்லை!” 

“அவ்வளவுதானே? யா ரசூலில்லாஹ்! இங்கே நிறைவேற்றப்பட்ட உடன்படிக்கையில், நீதிக்கு மாறான குறைஷிகளின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு, முஸ்லிம்களின் பல உரிமைகளை விட்டுக் கொடுத்து, இந்த ஒப்பந்தத்தைச் செய்துள்ளீர்கள். அதனால், உங்கள் தோழர்கள் அதிர்ந்துபோய் நிற்கின்றார்கள் போலும். தாங்கள் வெளியில் போய், முதலில் உங்கள் பிராணிகளைப் பலி கொடுத்து, உங்கள் தலையை மழித்து, முன்னுதாரணமாக நில்லுங்கள். பிறகு பாருங்கள், அடுத்து என்ன நடக்கின்றது என்று” என உம்மு சலமா (ரலி) கூற, அண்ணலார் (ஸல்) அதன்படியே செய்தார்கள். அடுத்து நடந்தது அற்புதம்! தோழர்கள் நபி செய்ததைப் பார்த்தார்கள். உடனே அவர்களும் அது போல் செய்து, நபியவர்களின் கட்டளையைச் செயல்படுத்தினார்கள்!

அவ்வாறு தோழர்கள் செய்தபோது, தாம் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையை நிறைவேற்றினோம் என்ற ஆறுதல் அவர்களுக்கு இருந்தபோதும், செய்யக் கூடாததை - நபிக்குக் கீழ்ப்படியாமையை - சிறிது நேரமாவது செய்து மாறு புரிந்துவிட்டோமே என்ற வருத்தத்தினால், கண்ணீர் சிந்தி அழுதுகொண்டிருந்தார்கள்.

அதே நேரத்தில், அவர்கள் அவசர அவசரமாக முடி களைவதில் ஈடுபட்டதால், தம்மை அறியாமலேயே தலையில் வெட்டுக் காயம் ஏற்படும் அளவுக்குத் துரிதம் காட்டியதால், காயத்திலிருந்து இரத்தம் வழிந்தது! அந்த இரத்தத்தை அவர்களின் கண்ணீர் கழுவித் துடைத்தது!

எத்தகைய அற்புதமான காட்சி! உமரைப் போன்ற மிகப்பெரும் வீரர்கள் அழுது கண்ணீர் வடிக்க, தம் தூதருக்கு இப்போதாவது கட்டுப்பட்டோமே என்ற ஆறுதலால், இரு வேறு உணர்வுகளில் திளைத்திருந்தார்கள் நபித்தோழர்கள்!

இந்தக் காட்சியை அல்லாஹ் பார்த்து மகிழ்ந்தான். அதன் பிரதிபலிப்பால், அருள்மறை வசனங்களை இறக்கியருளினான்.

உமர் (ரலி) போன்ற உண்மை வீரர்களுக்கு இந்த ஒப்பந்தமானது, வெட்கித் தலை குணியத் தக்கதுதான். ஆனால், அதே வேளை, அவர்கள் இறைத்தூதருக்குக் கட்டுப்படுவதற்கான ஒரு சோதனையாகவும் வாய்ப்பாகவும் இருந்தது. எதிர்காலத்தில் அல்லாஹ் என்னென்ன வெகுமதிகளை நபித்தோழர்களுக்கு வைத்துள்ளான் என்பதற்கான அறிகுறியாகவும் அமைந்தது. தம்மால் அந்த ஆண்டில் ‘உம்ரா’ செய்ய முடியவில்லையே என்ற மனவருத்தம் அத்தோழர்களுக்கு இருந்தபோதும், நபியவர்களுக்குக் கட்டுப்பட்ட நற்குணத்தினால், ஹுதைபிய்யா உடன்படிக்கையை, ‘மகத்தான வெற்றி’ (48:01) என்று தன் அருள்மறையில் அறிவித்தான் அல்லாஹ்.

இந்த ஹுதைபிய்யா அமைதி ஒப்பந்தத்தினால் நமக்குக் கிடைக்கும் தலைமைத்துவப் படிப்பினைகள் இரண்டாகும்.

தலைவரானவர் எப்போதும் தான் கொண்ட குறிக்கோளில் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். தலைவர் தனக்கென்றே ஒருசில நோக்குகளைத் தனது விருப்பமாகக் கொண்டிருப்பார். ஆனால், சிலபோது பொது நன்மையைக் கருத்தில் கொண்டு, அவற்றை விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும். தலைமை ஏற்றிருக்கும் ஒருவர், தனது தொலைநோக்கின் மூலம் எதிர்காலத்தின் நன்மையைக் கருத்தில் கொண்டு, தனக்குக் கீழுள்ளவர்களிடம் உடன்பாட்டை எதிர்பார்க்கும்போது, அவர்களுள் சிலர் மாற்றமான கருத்தைக்கூடக் கொண்டிருப்பர். அந்த நேரத்தில், பொறுமையை அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமது தலைமையின் கீழ் இஸ்லாத்தின் வெற்றியையே நோக்காகக் கொண்டிருந்தார்கள். அன்னாரின் தலைமைத் தகுதி, இதை மெய்ப்பித்துக்கொண்டே இருக்கும். தோழர்களுள் சிலர் மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்தால்கூட, அந்தத் தோழர்களும் விரைவில் தம் கருத்தை மாற்றிக்கொள்வார்கள். ஏனெனில், அண்ணலார் (ஸல்) அவர்கள் இயக்கப்பட்டது, அல்லாஹ்விடமிருந்து ‘வஹி’யினால் அல்லவா?அண்ணலாரின் அத்தோழர்கள் மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்து, அதற்கு முரணான கருத்தை அண்ணலார் (ஸல்) கொண்டிருந்தால், அத்தோழர்கள் தலைவருக்குக் கட்டுப்பட்டுத் தம் 
கருத்துகளை மாற்றிக்கொள்வர். இது, அந்தத் தோழமையின் சிறப்புத் தன்மையாகும். ஒரு கூட்டத்திற்கு வெற்றி கிட்டுவதற்குக் காரணம், சிறந்த தலைமை மட்டுமன்று; அக்குழுவில் இணைந்து உடன்பட்டுச் செயல்படும் கொள்கை வீரர்களாலும்தான்.

தலைவரைப் பின்பற்றும் வீரத் தோழர்களுக்குத் தலைவருடன் கருத்து மோதல் இருக்குமாயின், அல்லது, தலைவரின் கருத்தைப் புரிந்துகொள்வதில் இயலாமை ஏற்பட்டால், விரைவில் அத்தலைவரைப் பின்பற்றுவதில் தமது கட்டுப்பாட்டை வெளிப்படையாகக் காட்டவேண்டும். படைத் தளபதி, அல்லது குழுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், அவருக்குக் கட்டுப்படுவதுதான் சிறந்த கட்டுக் கோப்பாகும். இறைத் தூதர் (ஸல்) அவர்களைப் பொறுத்தவரை, இத்தகைய கட்டுப்பாடு இறைநம்பிக்கை எனும் ஈமானின் கடமைகளுள் ஒன்றாகும். காரணம், அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும், ‘வஹி’ எனும் வேத வசனங்களைப் பெற்றுத் தரும் ஆன்மிகத் தலைவர் என்றும் தோழர்கள் நம்பியிருந்தார்கள். தோழர்களுக்குப் புரியாத, நம்ப முடியாத ஒன்றை நபியவர்கள் செய்ததைக் கண்டபோதும், அத்தோழர்கள் தம் அறிவுக்கு வேலை கொடுக்காமல், அப்படியே நம்பினார்கள்! ஏனெனில், அவர்கள் இறைவனால் வழி நடத்தப்பட்டார்கள். தோழர்களால் புரிந்துகொள்ள முடியாத ஒன்றை நபியவர்கள் செய்து, அதற்கு மாறான கருத்தை அந்த நபித்தோழர்கள் கொண்டிருந்தாலும், அதற்குக் கட்டுப்பட்டார்கள். அத்தகைய கருத்து அல்லது நிகழ்வு, பிந்திய நாட்களில் உண்மையானது என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கும்.

நபி அல்லாதவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றாலும், இறைச் செய்தியைப் பெறும் தகுதியில் அவர்கள் இல்லாவிட்டாலும், ஏன் எதற்கு என்று கேட்காமல், அத்தலைவர்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற பொதுக் கருத்தும் அச்சமூகத்தில் நிலவிற்று. இதுவே இஸ்லாம் கற்பிக்கும் ‘தலைவருக்குக் கட்டுப்படல்’ ஆகும். நபியல்லாத வேறொருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு, அவருடைய கருத்து பொருத்தமற்றதாக இருப்பின், அவர் தலைமைக்குத் தகுதியற்றவர் என்றோ, தலைமையில் மாற்றம் தேவை என்றோ கருத்துக் கொள்ளவேண்டிய கட்டாயச் சூழல் உண்டாகும்.

தம் தோழர்கள் இலகுவாகத் தம்முடன் கருத்தாடல் செய்ய முடியும் நிலையில் அத்தலைவர் இருக்க வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு அத்தலைவர் தன் தோழர்களால் நெருங்கி நேசிக்கப்படுகின்றாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு தலைவர்-தோழர் தொடர்பு வலுப்பெற்றதாக அமையும். அப்போதுதான், தலைவரின் சொல்லையும் செயலையும் நன்கு புரிந்துகொள்ள முடியும். எதிர்காலத்தில் தலைவராகப் பணி புரியப் போகும் ஒருவர், இத்தகைய பண்புகளைத் தம்மிடம் உருவாக்கிக் கொள்வது, அந்த எதிர்காலத் தலைவருக்கு மிகவும் இன்றியமையாததாகும். 

அதிரை அஹ்மது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு