அஸ்ஸலாமுஅலைக்கும்.
இணையத்தில் அன்றாட நிகழ்வுகளை தட்டிப் பார்ப்பது என்னுடைய தினசரி வழக்கம். தேசிய மற்றும் பன்னாட்டு ஊடகங்களில் ஊர்ந்து வரும்பொழுது சிந்தையில் பட்டதையும் என் மனதைப் பாதித்த ஒரு சில விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இப்பகிர்வு ஒரு விழிப்புணர்வாகவோ, எச்சரிக்கை மணியாகவோ, அல்லது நேரத்தை போக்கிய வெட்டிக் கதையாகவோ கூட தோன்றலாம். அது படிப்பவர்களின் கண்ணோட்டத்தையும் எண்ண ஓட்டத்தையும் சார்ந்தது.
இன்றைய ஊடகங்கள் முழுக்க முழுக்க பொருளீட்ட உதவும் நோக்கத்திலும் சில சமூகம் மற்றும் அமைப்புகளின் கருத்துக்களை திணிக்கும் அல்லது பரப்பும் ஒலி, ஒளி பெருக்கியாகவும் தாங்கள் சார்ந்த அமைப்புகளின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டே செயல்பட்டு வருகின்றது. இவர்கள் தானும் தான் சார்ந்தவர்களும் நன்றாக செல்வ செழிப்புடன் வாழ வேண்டுமெனில் கருப்பு நிறத்தினை வெள்ளை நிறமாகவும், அரசனை ஆண்டியாகவும், பாலினை விஷமாகவும், தாங்கள் விரும்பும் பரிணாமங்களில் மக்களுக்கு காட்டி தங்களின் விருப்பம் மற்றும் இலட்சியங்களை நிறைவேற்றி கொள்வார்கள்.
இதில் பலிகடாவாவது சாமனியர்களாகிய நீங்களும் நானும். அவர்களின் ஆட்காட்டி விரல் நம்மை நோக்கியே உள்ளது. எனவே இவ்வகை ஊடகங்களின் செயல்பாட்டினை கண்டறிந்து கணக்கில் கொள்வதன் மூலம், நீங்கள் அவர்கள் விரிக்கும் மாய வலைக்குள் உங்களை ஆட்படுதிடாமல் பாதுகாத்து கொள்ளலாம்.
இந்த சமூகத்தின் அங்கம் என்ற நிலையில், நம்முடைய குழந்தைகளின் எதிர்காலமும் இவர்கள் அடிக்கும் கூத்து கும்மாலங்களினால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது. மேலும் நம்முடைய மனம் நம்மை அறியாமலேயே ஏமாற்றபடுகின்றன.
இன்று வெளியாகும் சினிமாக்களின் கதையினையும், காட்சியமைக்கப்பட்ட விதத்தினையும், பிறகு அதை வியாபாரம் செய்ய அவர்கள் செய்யும் யுக்திகளையும் கவனியுங்கள். அங்கே பாடலின் வரிகளில் காமம், தொடர் சீரியல்கலான நாடகங்களில் பாலுணர்வைத் தூண்டும் வகையில் அங்க அசைவுகள். ஊருக்கு வெளியே அஞ்சி ஒஞ்சி வாழ்ந்து வந்த கூத்தாடிகள் இன்று நம் நடு வீட்டில். இவர்களை நடுவீட்டிற்கு அழையாத விருந்தாளியாக உள்ளே வரவைத்ததில் பெரும் பங்கு இந்த ஊடகங்களுக்கு உண்டு. இந்த மானங்கெட்டவர்களை பொது மேடையில் பொன்னாடை போர்த்தி அழகு பார்க்கின்றது பெரும்பாலான சமுதாயம். ஊடக விபச்சாரிகளை நம் வீட்டுப் படுக்கை அறைக்கு அழைத்து வருகின்றது.
ஊடகங்கள் நம்மை கைது செய்து அடிமைபடுத்தி வைத்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. இவர்கள் மூலம் நமக்கு ஊட்டப்பட்ட போதையை பயன்படுத்தி அதன் உரிமையாளர்களும், ஆட்சியாளர்களும், தலைவர்களும் தங்களின் எண்ணங்களை நிறைவேற்றி கொள்கின்றனர். பாழாக்கும் இந்த கூட்டத்திற்கு அரசும் துணை நிற்பது வேதனையே.
இன்றய சமுதாயத்தின் வாழ்க்கை முறையினை இந்த சினிமாவும், தொலைகாட்சி நிகழ்ச்சிகளுமே முடிவு செய்கின்றன. இதற்கு ஏரளமான உதாரணங்களைக் காட்டலாம். காலை எழுந்ததிலிருந்து மக்கள் தலைவாரும் முறையில் துவங்கி, அணியும் ஆடை, பயன்படுத்தும் வாகனம், எல்லாவற்றிற்கும் மேலாக, பேச்சு நடை உடை கூட அவர்கள் சொல்லித்தரும் வழியில் தான் அமைந்துள்ளது. அதுமட்டுமா? வரப்போகும் கணவன்/மனைவி எப்படி இருக்க வேண்டும் என்ற அளவுகோலை இச்சைக்கேற்றவாறு நிர்ணயம் செய்வதே இந்த ஊடகங்கள் தான். ஒல்லியா/குண்டா?, வெள்ளையா/கருப்பா?, மீசை வேண்டுமா வேண்டாமா?, தாடி வேண்டுமா வேண்டாமா? இதுபோல அழகு எது என்று இவர்கள் நிர்ணயம் செய்வதை தான் இன்று கண்மூடித்தனமாக உலகின் பெரும்பாலான மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
மக்களின் மனதில் அவர்கள் அறியாமலேயே இந்த ஊடகங்களின் போலித்தனங்களை விதைத்து வளர்க்கப்பட்டு வருகின்றது. அந்த போலித்தனமான வாழ்வியல் முறை மக்களின் பாரம்பர்யத்தை, அவர்களின் கலாச்சாரத்தை மறக்கடிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் எண்ணத் தூய்மையை சிதறடித்து சின்னாபின்னமாக்கி விடுவதில் முன்னெனியில் இருக்கிறது. சிந்திக்கத் துணிய வேண்டிய மக்களை சில்மிஷங்களை காட்டி அவர்களை மடையர்களாக்கிக் கொண்டிருக்கும் வஞ்சகர்களின் சூழ்ச்சியில் சிக்காமல் நம்மை பாதுகாத்துக் கொள்வோமாக!
ஷஃபி அஹமது