இந்திய மண்ணில் அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து முதல் கல்லை எடுத்து வீசிய அலைகடல் அரிமா முஹம்மத் குஞ்ஞாலி மரைக்காயர் அவர்களின் மறைவுக்குப் பிறகும் அவர் தொடங்கி வைத்த அரும் பணி ஓய்ந்து விடவில்லை. போர்த்துக்கீசியர்கள் , அவர்கள் எவ்வளவுதான் குடம் குடமாமாய் குடித்திருந்தாலும் அவர்களின் இரவுத்தூக்கம் பறி போனது. அதைப் பறித்தவர் , வரலாற்றில் இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் என்று குறிப்பிடப் படும் இன்னொரு திருமகன் ஆவார். கடற்படையை வெற்றிகரமாகக் கையாள்வதிலும் வெற்றி பெறுவதிலும் எதிரிகளை மிரண்டோட வைப்பதிலும் வெற்றிக் கொடி நாட்டுவதிலும் தன்னிரகற்ற தலைவராகத் திகழ்ந்தவர் இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் ஆவார்.
வரலாற்றுக் குறிப்புகளின்படி இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயர் முதல் குஞ்ஞாலி மறைக்காயருடைய உறவினராகவோ அல்லது சீடராகவோ அல்லது அவரிடம் பயிற்சிபெற்றவராகவோ இருந்து இருக்கலாம். இவருக்கு சுதந்திர உத்வேகத்தைத் தூண்டிய ஒரு நிகழ்வைத்தான் நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
கேரளத்தின் கண்ணனூர் நகரத்தின் முக்கிய வீதியில் தனது கணவனின் இறந்து போன பிணத்துடன் ஒரு முஸ்லிம் பெண் கதறிக் கொண்டிருந்தார். 1564- ல் மெஸ்கிட்டோ என்ற கொடிய போர்ச்சுக்கீசியனால் கடலில் வைத்துக் கொலை செய்யப்பட்டு கண்ணனூர் கடற்கரையில் ஒதுங்கிய அவளது கணவனின் பிணம்தான் அந்தப் பெண்ணின் கரங்களில் இருந்தது. இப்படி அந்நியரால் முஸ்லிம் ஆண்மக்கள் கொல்லப் படுவதை சகித்துக் கொண்டு கேளாக் காதினராக இருக்கவேண்டுமா என்ற கண்ணீரில் தோய்த்தெடுத்த அந்தப் பெண்ணின் கேள்விதான் இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயரை வேள்விக் களத்தில் இறக்கிவிட்டது. இந்த அநியாயத்துக்குக் காரணமானவர்களை ஒழித்துக் கட்ட வீர சபதம் எடுத்தார். சமர்க்களத்துக்கு சங்க நாதம் ஊதினார்.
1570 ஆம் ஆண்டு போப்பூர் நதிக்கரையில் அமைந்து இருந்த சாலியன் கோட்டைப்யில் நடைப்பெற்ற போரை இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயர் தலைமை தாங்கி நடத்தி போரில் வெற்றிக் கனியைப் பறித்தார். மேலும் கண்ணனூர் துறை முகத்துக்குள் புகுந்து அங்கு நின்று கொண்டிருந்த இருபது போர்த்துக் கீசியக் கப்பல்களைக் கடுமையாகத் தாக்கி, அளவிட முடியாத சேதத்தை அவர்களுக்கு விளைவித்தார். இதனை முன்னிட்டு கோவாவில் இருந்து டீ-லிமா என்கிற பரங்கித்தலையனின் தலைமையில் வந்த போர்த்துக்கீசிய கடற்படையையும் எதிர்த்து முறியடித்து ஓடவைத்தார். அதன் பின்னர், டிமேல்லோ என்பவனின் தலைமையில் வந்த மற்றொரு கப்பற்படையையும் எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்றனர். இந்தப் போரில் டிமேல்லோ படுகாயம் அடைந்தான். படுகாயம் அடைந்தவன் படுக்கக்கவில்லை. மாறாக, தலைமறைவானான். அந்த வெற்றிக் கனியின் ருசி அதன்பின் 65 ஆண்டு காலம் அந்நியரின் கடல் ஆதிக்கத்தை முறியடித்து குஞ்ஞாலி மரிக்காயரின் முன் மண்டியிட வைத்தது. அத்தனை ஆண்டுகளும் போர்த்துகீசியரின் பேச்சு மூச்சையே காணோம். அதன் பின்னர் பொன்னானியில் தனக்காக ஒரு கோட்டையை இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் கட்டினார். ஆனால் தான் கட்டிய கோட்டையில் நீண்ட நாள் வாழ இறைவன் அவருக்கு வாழ்நாளை அளிக்கவில்லை. கோட்டை கட்டி முடிக்கப் பட்ட சில நாட்களிலேயே இறைவன் தன்பால் அவரை அழைத்துக் கொண்டான்.
இந்த இடத்தில் ஒரு செய்தியை குறிப்பிட விரும்புகிறேன். குஞ்ஞாலி மரைக்காயர் கோட்டை கட்டிய பொன்னானி என்கிற இடம் கேரளத்தில் இன்றைய மஞ்சேரி பாராளுமன்றத் தொகுதியில் இருக்கிறது. இந்தத் தொகுதி இந்திய முஸ்லிம் லீகின் கோட்டையாக இன்றுவரைத் திகழ்கிறது. தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் மூன்று முறைகள் தொடர்ந்து கேரளத்தின் இந்தப் பாராளுமன்றத் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். இத்தனைக்கும் தேர்தல் பணிகளுக்காக, அவர் ஒரு முறை கூட அந்தத் தொகுதியின் பக்கம் சென்றவரல்ல என்பது நவீன கால வரலாறு. இந்த வரலாறு இன்று வரைத் தொடரக் காரணம் குஞ்ஞாலி மரைக்காயர் கட்டிய கோட்டையும் அவர் விதைத்து விட்டுச் சென்ற வித்துக்களும்தான் என்பதை மறுக்க இயலாது.
இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயரின் தீரத்தை பாராட்டும் வண்ணம் கொச்சினில் உள்ள கொச்சின் பல்கலைகழகத்தின் அறிவியல் மற்றும் தொழில் கல்விப் பிரிவின் கப்பல் கட்டும் பொறியியல் தொடர்பான பிரிவு இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயர் உடைய பெயரில் தொடங்கப்பட்டு திகழ்ந்து வருகிறது.
Cochin University of Science and Technology in Cochin, Keral has got its new Marine Engneering Department named after Kunjali II as Kunjali Marakkar School of Marine Engineering.
மேலும், முதலாம் குஞ்ஞாலி மரைக்காயருக்கு தரத்தவறிய கவுரவத்தை இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயருக்கு வழங்கிய இந்திய கடற்படை, மும்பை கொலாபாவில் உள்ள கடற்படை சார்ந்த பயிலரங்கத்துக்கு அவர் பெயரை சூட்டி இருக்கிறது.
The India Navy shore- based naval air training centre at Colaba, Mumbai is named Maritime Academy INS Kunjali II in honour of the second Marakkar.
இரண்டாம் குஞ்ஞாலிப் புயலுக்குப் பிறகு கடலில் உருவான மற்றொரு புயல் சின்னமே மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் ஆவார். கோழிக் கோட்டின் சாமுத்திரி மன்னன் அந்நியரின் கைப் பாவையாய் ஆகி தனது ஆளுமைக்கு உட்பட்ட கடல் மற்றும் கடற்கரைப் பிரதேசத்தை போர்த்துகீசியருக்கு தாரைவார்த்ததை இந்த நாட்டுக்கு ஏறபட்ட அவமானம் என்ற சுதந்திர உணர்வுடன் சீறினார் மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர். அதே உணர்வுடன் சாமுத்திரி மன்னன் தனக்கு அளித்திருந்த கடற்படைத் தளபதி என்கிற பதவியை எட்டி உதைத்துத் தள்ளிவிட்டு வெளியேறினார். இந்த மண்ணை க் காக்கும் சக்தியாக அந்நியரை எதிர்த்துப் போராட முஸ்லிம்களின் சக்தி மட்டும் போதாது அத்துடன் இந்துக்களின் சக்தியும் தேவை என்று இருமதத்தவரையும் ஒன்றுதிரட்டி ஒன்றிணைத்து ஒட்டுமொத்த மக்கள் சக்தியாக சாமுத்திரி மன்னனுக்கும் போர்த்துகீசிய ஆக்கிமிப்பாளருக்கும் எதிராக உருவெடுக்கவைத்தார்.
1572 ல் போர்த்துக்கீசியரின் கொலைவெறி வன்முறைப் படை, முஸ்லிம்களின் பள்ளிவாசல்களையும் இந்துக்களின் கோயில்களையும் கொள்ளையிட்டு கோழிக் கோடு, திருக்கோடி, கப்பக்காடு, பொன்னானி ஆகிய துறைமுகங்களுக்குப் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியது. அந்நியரின் இந்த அழித்தொழிப்பு ஏற்படுத்திய அந்நிய எதிர்ப்புணர்வால் தூண்டப்பட்ட மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் முதன்முதலாக 1586 - ல் அன்னியர் படையை வெற்றி கொண்டார். அதனைத் தொடர்ந்து 1592 –ல் பொன்னானி முதல் கோவாவரை இருந்த கடல் பிரதேசத்தை தனது கைக்குள் அடக்கி அந்தப் பகுதி என்றாலே மூன்றாம் குஞ்ஞாலி என்று சொல்லும் அளவுக்கு தனது விரல்நுனியின் ஆதிக்கத்தில் வைத்து இருந்தார். அப் பகுதிகளில் அன்னியர் புகவே அஞ்சினர். மீறிப் புகுந்தோர் கதிகலங்க அடிக்கப் பட்டனர்.
1597- ல் போக்கிடம் இல்லாத போர்த்துக் கீசியருடன் பொல்லாங்கு கொண்ட சாமுத்திரி மன்னனின் மண்ணாங்கட்டிப் படையும் கைகோர்த்துக் கொண்டு மூன்றாம் குஞ்ஞாலி அவர்களின் கோட்டையை முற்றுகை இட்டன. மூன்று மாதங்கள் இந்த முற்றுகை நீடித்தது. அதுவரை பொறுமையாக இருந்த மூன்றாம் குஞ்ஞாலியின் எதிர்பாராத திடீர் தாக்குதலால் நில குலைந்து போன எதிர்ப் படையினர் தோற்றுப் போய் கொச்சியை நோக்கி ஓடி அங்கு தஞ்சம் புகுந்தனர். சாமுத்திரியின் படையோ கோழிக் கோட்டை நோக்கி போட்டது போட்டாற்போல் புறமுதுகிட்டு ஓடியது. போர்த்துக்கீசியனின் இந்தத் தோல்வி கோவாவில் கொடிபோட்டு ஆண்டுகொண்டிருந்த அவர்களின் கவர்னருக்கு கவுரவப் பிரச்னை ஆகிவிட்டது. ஒரு சிற்றரசுக்குக் கூட சொந்தக்காராக இல்லாத மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் தங்களை ஓட ஓட விரட்டுவதைக் கண்டு ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்களின் கவர்னர் பெரும் தாக்குதலுக்குத் திட்டமிட்டு தனது ஒட்டு மொத்தப் படையின் பெரும்பகுதியை அனுப்பி வைத்தான்.
மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர், தனக்கும் உதவ ஒத்த கருத்துடைய சில குறுநில மன்னர்களின் உதவிகளை நாடியபோது உல்லல் ராணியும் மாதுரையை ஆண்டுகொண்டிருந்த நாயக்கரும் முன் வந்தனர். உல்லல் ராணி உணவுப் பொருட்களையும் படைக் கலங்களையும் மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயருக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அவை போர்த்துக்கீசியரால் வழிமறிக்கப் பட்டு வழிப்பறி செய்யப் பட்டன. மதுரை நாயக்கரின் உதவி வந்து சேருவதில் காலதாமதம் ஏற்பட்டது.
மீண்டும் ஒரு உக்கிரமான போர் மூண்டது. இருதரப்பிலும் பல உயிர்கள் வெட்டி சாய்க்கப் பட்டன. மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயரின் கோட்டைக்குள் அன்னியப் படைகள் புகுந்தன. கோட்டைக்குள் இருந்த பெண்களையும் குழந்தைகளையும் பணயப் பொருளாக அன்னியர் பிடித்துக் கொண்டதால் வேறு வழி இன்றி போர்த்துக்கீசியனின் அடிவருடியாக மாறிவிட்ட சாமுத்திரி மன்னனுடன் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் சம்மதிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப் பட்டார். அப்படி ஒரு சமாதானத்துக்கு வந்த மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயரை போர் தர்மத்தை மீறி , போர்த்துக் கீசியப் படை சுற்றி வளைத்து கைது செய்து கடற்கரைப் பிரதேசத்தை தனது கைகளுக்குள் வைத்திருந்த அவருடைய வீரத்தின் விளை நிலமான அவரது கைகளில் விலங்கிட்டது. மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் உடைய கோட்டை கொத்தளங்கள் இடித்துத் தரை மட்டமாக்கப் பட்டன. பள்ளிவாசல்கள் தீக்கிரையாக்கப் பட்டன. அதற்குப் பின் நடந்த சம்பவங்கள் கண்ணீரால் எழுதப் பட வேண்டியவை.
மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் மற்றும் அவரது முக்கிய சீடர்கள் ஆகியோர் கைகளில் விலங்கு மற்றும் கால்களில் சங்கிலி பூட்டப் பட்டு யாருக்கும் தெரியாமல் கோவாவுக்கு கொண்டு செல்லப் பட்டனர். தங்களை ஓட ஓட அடித்த மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் மற்றும் அவரது தோழர்கள் பிடிக்கப் பட்டு கோவாவுக்கு கொண்டுவரப் படுவதை அறிந்த வெறி கொண்ட போர்த்துக்கீசியர்கள் பழிவாங்கும் உணர்வோடு கோவா கடற்கரையில் திரண்டனர். கப்பலில் இருந்து கைகளில் விலங்கு பூட்டப்பட்டு இறக்கப் பட்ட மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் உடைய தோழர்கள் நான்கு பேர்களை இரக்கமற்ற பாவிகள் சாகும்வரை கல்லாலேயே அடித்துக் கொன்றனர். முன்பு வாஸ் கோடகாமாகாமாவால் நடுக் கடலில் சிந்தவைக்கப் பட்ட முஸ்லிம்களின் ரத்தம் கோவாவின் கடற்கரையில் மீண்டும் அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்த குற்றத்துக்காக சிந்தப் பட்டது. அப்போது மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் மட்டும் கொல்லப் படவில்லை. அதற்குக் காரணம் இருந்தது.
மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் உடைய தலையை மக்கள் மன்றத்தின் நடுவில் கொலைக் களத்தில் வைத்து துண்டிக்க வேண்டுமென்பதே போர்த்துக் கீசியரின் விருப்பமாக இருந்தது. அதன்படி மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் தனிமைச் சிறைக் கொட்டடிக்கு கொண்டு செல்லப் பட்டார். வாஸ்கோடகாமா வந்து இறங்கிய காலம் தொட்டு ஒரு நூற்றாண்டு காலம் அந்நிய சக்தியை தாய்மண்ணில் கால்பதிக்கவிடாமல் எதிர்த்துப் போராடிய வம்சத்தின் வாரிசு மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை. நாட்டுக் காக ஷஹீத் ஆவதில் மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயருக்கு வருத்தம் ஒன்றுமில்லை. ஆனால் அந்நியரை எதிர்க்க வேண்டிய சாமுத்திரி மன்னன் அவர்களின் அட்டூழியத்துக்குத் துணை நின்றதே மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயருக்கு வருத்தம் தந்த விஷயமாக இருந்தது. தன் சாவால் கூட அந்நிய ஆதிக்கம் என்கிற அநியாயத்தை தடுத்து நிறுத்த முடியாத கையறு நிலையே அவரது கவலைக்குக் காரணம்.
தனிமைச்சிறையில் இருந்த மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயரைத் தேடி ஒரு பாதிரியார் வந்ததாக சிறைக் காவலன் செய்தி சொன்னான். யார் என்று எட்டிப் பார்த்தபோது ஒரு வெள்ளை உடை அணிந்த பாதிரியார் நின்று இருந்தார். மூளைச்சலவை செய்ய இவர்கள் உபயோகிக்கும் முதல் வார்த்தை மகனே! என்பதுதான். வீரனும் – வித்தகனும் ஆன மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயரை மகனே என்று புன்சிரிப்புடன் அழைத்த பாதிரியார் மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயரும் அவரது கூட்டத்தினரும் கிருத்துவ மதத்தை தழுவிக் கொண்டால் , உயிர்ப் பிச்சை வாங்கித் தருவதாக ஆசைகாட்டினார். மீண்டும் கடற்படைத்தளபதியாக பதவி வாங்கித்தருவதாகவும் ஆசை காட்டினார். ஒரு வீரத்தாயால் இரத்தத்தின் நாடி நரம்புகளில் இஸ்லாமிய ரத்தம் செலுத்தப் பட்ட மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் அப்படி ஒரு நிலைக்கு நான் ஆளாகி வாழ்வதை விட போர்த்துக் கீசியரின் கொலைவாள் எனது கழுத்தை முத்தமிடுவதையே நான் விரும்புகிறேன். உடனே அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று பாதிரியாரை முகத்தில் அடித்து திருப்பி அனுப்பினார். வீரன் வீரனாகவே மடிய விரும்புவான் . மாற்றாருக்கு முன் மண்டியிடுவதைக் காட்டிலும் மரணமே மேல் என்று அந்த வீரர் முடிவுசெய்தார்.
அதன்பின் அன்று ஒருநாள் கோவா நகரமே விழாக் கோலம் கொண்டது. இசையும் நாட்டியமும் எங்கும் ஒலித்தன. கவர்னரின் கண் முன்னே கூடி இருந்த கூட்டத்தின் நடுவே மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் கொண்டுவரப் பட்டு நிறுத்தப் பட்டார். தீட்டிய அரிவாலும் கொலை மேடையும் தயாராக இருந்தன. கைகால்களில் விலங்கிடப் பட்டு மரண தண்டனை மேடையின் மேல் ஒரு பஞ்சு மெத்தையின் மேல் ஏறுவது போல் வீரமாக நிமிர்ந்து நின்றார் மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர். அவரது வாய்மட்டும் கலிமாவை உச்சரித்துக் கொண்டு இருந்தது.. தனது தலையை கொலை மேடையின் மீது வைத்தார். அந்நிய ஆதிக்க சக்தியின் அரிவாள் அவரது கழுத்தில் இறங்கியது. அந்நிய ஆட்சியின் கீழ் அடிமைப் பட்ட பாவத்தால் நிரப்பப்பட்ட அந்த கோவாவின் மண்ணில் ஒரு வீரப் பரம்பரையின் உண்மை வீரனின் இரத்தம் சிந்தப் பட்டு இந்திய மண்ணோடு கலந்தது.
இன்றைக்கும் சிதிலமடைந்த கண்ணனூர் கோட்டை மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயருடைய வீரத்துக்கு சான்று பகர்ந்துகொண்டு இருக்கிறது. அந்தக் கோட்டையை கடல் அலைகள் அமைதியாக முத்தமிட்டுச் செல்கின்றன. அவர் அங்கேயே அடக்கம் செய்யப் பட்டார். அவரது மண்ணறையின் அருகிலேயே அவரது வீரத்தாயின் மண்ணறை இன்றும், இந்திய சுதந்திரத்துக்கு முஸ்லிம்கள் செய்த தியாகத்துக்கு சான்றாகத்திகழ்ந்துகொண்டு இருக்கிறது. கண்ணுள்ளோர் கண்ணனூர் சென்றால் இன்றும் காணலாம். ஆனால் இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை எழுதியவர்களுக்கு மட்டும்தான் கண் அவிந்து போய்விட்டது.
இன்னும் பல சரித்திரங்கள் வர இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்...!
குறிப்பு: குஞ்ஞாலி மரைக்காயர்களுடைய இந்த வரலாற்றுப் பதிவை இங்கு வடித்துத் தர உதவியோர்கள் : சத்திய மார்க்கம் வலைத் தளம் - மஹதி எழுதிய குஞ்ஞாலி மரைக்காயர் வரலாறு- பேராசிரியர் மு. அப்துல் சமது அவர்கள் எழுதிய தியாகத்தின் நிறம் பச்சை என்கிற நூல் – இன்னும் சில வரலாற்றுக் குறிப்புகள் . எழுதும்போது விழுந்தவை பல சொட்டுக் கண்ணீர்த் துளிகள்.
இப்ராஹீம் அன்சாரி





